வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 16

பகுதி ஐந்து: 4. ஏழுலகு

மண்மேவும் மழை இனியது. மென்சாரல் ஒளிகொள்ள விலகி விடியும் மழை மேலும் இனியது. மழைமேவிய மணல்முற்றம் என் நெஞ்சம்போல் தூயது. அதில் என் காலடியும் விழலாகாது. கண்ணா, இங்கு உன் இளம்பாத மலர் உதிர்ந்த தடமல்லவா விரிய வேண்டும்? செல்லும்தடம் காண ஆற்றேன். என் இல்லம் நோக்கி வரும்தடம் கண்டு அகம் உவப்பேன்.

எங்கே உன் வருகைச் சுவடு? மென்பாத முத்தம்? மலர்மாலை விழுந்ததுபோல் என் மணல்முற்றம் அதைச் சூடிக்கிடப்பதை கனவில் கண்டேனே. எங்கே உன் சிறுவிரல் தடவரிசை கொள்ளும் சிறுசிரிப்பு? செந்தாமரை மலரிதழ்கள் எனச் சிவந்தனவா அவை? செண்பக மலரிதழ்களின் நீலம் கொண்டவையா? இளங்காலை ஒளி அறியாத மலர்க்கோலம் உண்டா? கருவண்ணா, உன் பாதத்தடம்தேடி இம்மணல்வெளியில் அதுவும் ஏன் அலைகிறது?

அப்போதுதான் ராதை அதைக் கண்டாள். சின்னஞ்சிறு பாதத் தடமொன்று அவள் முற்றத்தை நோக்கி மென்மணல் கதுப்பில் பதிந்திருந்தது. நெஞ்சுலைந்து ஒரு கணம் நின்று பின் ஓடிச்சென்றமர்ந்து குனிந்து அதைப் பார்த்தாள். நடுங்கும் நுனிவிரலால் அதைத் தொட்டு “நீயா? கரியவனே, கார்முகிலே, காலடியாய் வந்தது யார்? நீலமலர் பூத்ததுபோல் நீயே எழுந்தாயா?” என்றாள். நீயென்றால் எங்கே இன்னொரு பாதத் தடம்? ஒற்றைக்காலூன்றி மறுகாலை எங்குவைத்தாய்? அவள் தன் இளநெஞ்சில் கைவைத்து ஏங்கி நின்றாள். மூச்செறிந்து மெய்ப்புகொண்டு கண்பனித்து குரலுடைய “ஆம், நீதான்” என்றாள்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

பின்னர் ஒருகணமும் அவள் பாதம் தரிக்கவில்லை. யமுனைக்கரைமீது இளம்பாதச் சிலம்பொலிக்க ஆடை அலையடிக்க கருங்கூந்தல் கலைந்தாட ஓடி கோகுலத்தை அடைந்தாள். “யாரது பிச்சியை துரத்தியது?” என்றாள் அரையில் பால்குடம் அமைத்துச்சென்ற ஆய்ச்சி ஒருத்தி. “அவளைத் துரத்துவது அவளேதான். கருநாகத்தை விழுங்கிய பொன்நாகம். இரண்டும் இணைந்து ஒன்றாகும் வரை வலிகொண்டு நெளியத்தான் வேண்டும்” என்றாள் வழித்தெடுத்த வெண்ணையுடன் வழிநோக்கிய மூதாய்ச்சி.

நந்தனின் இல்லத்து முற்றத்தில் ஆயர்ச்சிறுவர் கூடி ஆர்ப்பரித்து களியாடினர். நீரடியில் நெளியும் தாமரைக்கொடி அடர்வாய் சிறுதளிர்க்கால்கள். நடுவே நீலமலர் மூழ்கியதுபோல் நின்றிருந்தான் கண்ணன். சிறுகைகளைத் தூக்கி “நானும் நானும்” என்று கூவி துள்ளிக்கொண்டிருந்தான். மரக்கிளைமேல் ஒரு சிறுவன் ஆட்டி மலர்பெய்ய மண்ணில் உதிர்ந்த மலர்பொறுக்கி கூவினர் இளமைந்தர். இத்தனை பேர் நடுவே ஒரு முகமே தெரிவது ஏன்? இத்தனை குரல்களிலே ஒருகுரலே கேட்பது ஏன்? பிச்சி மனம் பேதைவிழி ஒன்றையே உலகாக்கி அவ்வுலகில் தனித்துறையும் விந்தைதான் என்ன!

ஆடலில் ஆழ்ந்திருந்தான் கண்ணன். மலர்முகம் கைத்தண்டில் விரிந்திருக்க திண்ணைமேல் அமர்ந்து விழிமின்ன பல் ஒளி மின்ன கண்ணனின் களியாட்டில் தானும் ஆழ்ந்தாள் ராதை. மலர்பொறுக்கி தன் தலைமேல் போட்டு கூவினான். இன்னொருவன் கையின் மலர்க்குவையை தட்டி உதிர்ந்த மலர்மேல் கால் வைத்து சிரித்தோடினான். கைதூக்கி மலர்கொள்ள தாவும் கோபனின் இடைசுற்றிய ஆடையை இழுத்துவிட்டான். அவன் கையோங்கி அடிக்கவர மூத்தோன் பின் ஒளிந்துகொண்டான்.

தெளிநீரில் துள்ளும் ஒளிமீன்கள். சிறுகாற்றில் சிறகடிக்கும் சிட்டுகள். விரல்தளிர்கள். கை இலைகள். கொடித்தண்டுகள். விழிநீல மலர்கள். பால்வெண் மலர்கள். செவ்விதழ் மலர்கள். கூவி ஆர்ப்பரிக்கும் குறுங்காடு. மிதிபட்டு மிதிபட்டு நெஞ்சு நெகிழ்கிறாள்.  மெல்ல மெல்ல என்று பதைக்கிறாள். விழுபவனை நோக்கி எழுந்து வருகிறாள். அள்ளி ஏந்தி முலைகனிகிறாள். அன்னையறியும் பாதங்கள். அவள் கருவறைச் சுவரில் உதைத்து நீந்தி விலகியவை. தரிப்பவள். ஊட்டுபவள். அணைப்பவள். புதைத்துக்கொள்பவள். சூழ்பவள். நிறமும் மணமும் நிழலும் சுவையும் இசையும் என்றானவள்.

அகன்று அகன்று சென்றுகொண்டிருந்தாள் ராதை. நான்கு திசைதொட்டு அங்கே இறங்கிவந்த வான் தொட்டு விரிந்தாள். மலைகளை ஏந்தி நதிகளை தோளிலிட்டு கடல்களை உடுத்தி நிலவும் கதிரும் சூடி தானன்றி பிறிதிலாத வெளியொன்றில் கிடந்தாள். அவள் தோள் தொட்டு யசோதை அமர்ந்ததும் திகைத்து அதிர்ந்து விழிதூக்கினாள். “எப்போது வந்தாய்? ஆயர்மகளே, உன் குரல் கேட்கவில்லையே” என்றாள். ராதை புன்னகைத்து “மண்மகளானேன்” என்றாள். “அவன் மார்பமரும் மணமகளும் ஆகிவிடு, வேறென்ன?” என்றாள் முகமெங்கும் நகை எழுந்த யசோதை.

கையிலிருந்த இளம்பாலை அவளுக்கு அளித்து “பர்சானபுரியில் இருந்து ஓடியே வந்திருப்பாய்? உண்பதில்லை உடுப்பதில்லை. உறக்கமும் இல்லை. ஊரெல்லாம் உன்னை பிச்சி என்கிறார்கள்” என்றாள் யசோதை. பாலை வாங்கி அதை நோக்கி புன்னகைத்தாள் ராதை. “என்ன சிரிப்பு?” என்றாள் யசோதை. “பாற்கடல் அலையில் பள்ளி கொண்டிருக்கிறது ஒரு கட்டெறும்பு” என்றாள். “பிச்சியேதான் நீ. உன் அன்னை செய்த பெரும்பாவம்” என்று யசோதை தலையில் அறைந்தாள். “நீராட்டி விடும்நேரம். வானரப் படையிதிலே ஒரு வாலை எப்படி பிரித்தெடுப்பேன்” என்று வியந்தாள்.

ஆயரிளமைந்தர் சிறுகைகள் கோர்த்து சுழிவடிவம் கொண்டு நிற்க நடுவே ஒருவன் நின்று கூவிச்சிரித்தான். வெளியே நின்றவன் கைகள் தோறும் முட்டி கைநீட்டி தொடமுயன்றான். வேட்டையே விளையாட்டாக அவர்கள் கன்றும் புலியும் ஆநிரையும் கோல்களுமாக உருமாறினர். நடுவே அவர்களின் ஓடும் கால்நடுவே ஊடுருவிச் சென்று முற்றத்து மூலையில் குவிந்த மழைமணலை சிறுகை கோட்டி அள்ளிவந்து “மண்! மண்! மண்!” என்று கூவி இறைத்து நகைத்தான் கண்ணன். அவன் தலையெங்கும் பரவி சிறுதோளில் கொட்டியது செம்மணல் புழுதி. அவன் விளையாடும் களத்தில் அவர்களெவரும் ஆடவில்லை.

“என்னடி ஆடல் இது? இவர்களெல்லாம் மூத்தோர். இவனோ கால் திருந்தா சிறுமைந்தன். அவர்கள் ஆடும் நெறியேதும் அறியான். அவர்கள் மொழியிலும் அமையான். எதைக்கண்டு மகிழ்கின்றான், எதற்காகக் கூவுகின்றான்?” என்று யசோதை சிரித்தபடி கேட்டாள். “அவன் வழியே அதுதானே? கன்றில் எழுந்து துள்ளுவதும் சிறுகுஞ்சில் எழுந்து சிறகசைப்பதும் மீனில் வந்து ஒளிகொள்வதும் நாமறியா ஒன்றின் இளமை அல்லவா? என்றும் நிலைக்காத ஆடல் நிறைந்தது அவன் நெஞ்சம். நீருக்கு அலையையும், ஒளிக்கதிருக்கு பறத்தலையும், காற்றுக்கு சுழல்தலையும், நெருப்புக்குக் குழைதலையும் யார் கற்றுத்தரவேண்டும்?” என்றாள் ராதை.

“மாயக்கணம் ஒன்றில் இங்கே ஆடும் முகமெல்லாம் அவனாகும் விந்தையை அறிவாயா?” என்றாள் யசோதை. “இங்கு வேறு முகமொன்று உள்ளதா என்ன?” என்றாள் ராதை. யசோதை ஒருகணம் அவளை நோக்கி “பெற்றெடுக்காமல் முலையேந்தி ஊட்டாமல் எப்படியடி அன்னையர் போற்றும் அன்னையானாய்?” என்றாள். ராதை நாணி முகம் சிவந்து “நானறியேன் மாமி. கருநிறைந்தால்தான் ஆயிற்றா? கனவுநிறையலாகாதா?” என்றாள். நெடுமூச்செறிந்து “ஆம், அந்தத் தாய்மை மேலும் தூயதோ என்னவோ?” என்றாள் யசோதை.

இருவரும் சொல்லாத சொற்களின் இருகரையிலும் நின்று நினைப்பொழிந்து நெடுநேரம் அங்கிருந்தனர். ராதை கைநீட்டி “அங்கே ஆடல் மாறியிருப்பதைப் பாருங்கள் மாமி!” என நகைத்தாள். ஆயர்ச்சிறுவரெல்லாம் மண்ணை அள்ளி காற்றில் தூற்றி “மண்! மழை கொண்டுவந்த மண்! யாருக்கு வேண்டும்? பணத்துக்கு பத்து படி!” என்று கூவி விளையாடிக்கொண்டிருந்தனர். கண்ணன் நடுவே நின்று “மண்… ஏய் மண் அங்கே போ” என்று ஆணையிட்டுக்கொண்டிருந்தான். யசோதை வியந்து வாய்பொத்தி “அவன் என்றுமே இப்படித்தானடி. அவன் எண்ணுவதை நம் சித்தமாக்கும் கலை பயின்று வந்தவன்” என்றாள்.

ஒன்றில் தொட்டு பிறிதொன்றுக்குச் சென்றது விளையாட்டு. மண் அள்ளி எறிந்தவர்கள் மண்குவித்து கோட்டை என்றனர். அக்கோட்டைக்குள் இலை கொண்டு கொடி கட்டினர். அக்கொடியை கைப்பற்ற படைகொண்டு வந்தனர். படை வந்து நின்று ஆநிரையென்றாயிற்று. அதன் பால் கொண்டு விற்க படகு வந்து நின்றது. படகருகே வந்து மீன்கள் துள்ளின. மீன்களை நோக்கி வலைகள் எழுந்தன. மீன்கள் மூழ்கிய ஆழத்தில் நாகங்கள் நெளிந்தோடின. நாகங்களின் நாவில் ஒளிவிட்டது நீலமணி. நீலமணி ஏந்தி ஓடிய கண்ணனைத் துரத்திச்சென்றது நாகக்கூட்டம்.

“என்னடி நிகழ்கிறது இங்கே?” என்று திகைத்தாள் யசோதை. “ஆடல்” என நகைத்து “அதை அவனே வழிநடத்திச்செல்கிறான்” என்றாள் ராதை. “அதற்கொரு பொருளில்லையா என்ன?” என்றாள் யசோதை. “பொருளை அவனே அறிவான். அவன் ஆடலுக்கு ஆட்படுவதே பிறர் ஆடல்” என்றாள் ராதை. “எத்தனை உலகங்கள். எத்தனை விண்ணகங்கள். நான் சொன்ன கதையெல்லாம் இப்படி ஒன்றாகிக் கலந்து ஒருலீலை ஆனதென்ன!” என்று யசோதையும் நகைத்தாள்.

“ஆடிச்சலிப்பதில்லை அவன் அகம். ஊரெங்கும் ஓடிச்சலிப்பதில்லை அவன் பாதங்கள். அவனுடன் ஊடிச்சலிப்பதுமில்லை என் உள்ளம்” என்றாள் யசோதை. நெடுமூச்செறிந்து தன் கையில் தலைதாங்கி அமர்ந்தாள். “உன்னிடமின்றி எவரிடம் சொல்வேனடி? என் உள்ளம் கொள்ளும் மாயத்தை எவர் அறிந்தாலும் என்னையும் பிச்சி என்பார்.” ராதை புன்னகைத்து “பிச்சியாகா அன்னையென புவியில் எவருமில்லை மாமி” என்றாள். “ஆம்” என்று சொல்லி பெருமூச்செறிந்து கைகளில் முகம் புதைத்தாள் ஆயர்குலத்து அன்னை.

ஆவி பதைக்க, ஆகம் துடிக்க, கண்கள் கரைந்தழிய, கால்கள் தளர அவனருகே ஓடிவருவதையே பேரின்பமெனக் கொள்கிறதடி என் உள்ளம். அருகே இருந்தால் தொலைவை அறிவதெப்படி? அகன்றுசெல்ல ஆயிரம் காரணம் தேடுவேன். என்னை ஆட்டிவைக்கும் மாயன். எனக்கென்றொரு எண்ணமில்லாதாக்கிய பேயன். என் அகம் கொத்தி நீலம் நிறைத்த நாகம். என் உளம் நிறைந்து பிறிதிலாதாகிய பெருநஞ்சு. எத்தனை பாவனைகள். எத்தனை அகச்சொற்கள். எத்தனை பாதைகளில் இவனை விட்டு விலகிச்சென்றிருக்கிறேன். எங்கெங்கோ நின்று இவனை நோக்கியிருக்கிறேன். இப்புவியில் இவனை வெறுக்க என்னைவிடக் காரணம் அறிந்தோர் எவருமில்லையடி. இவனை நோக்கி கோடிமுறை ஓடிவந்தவரும் பிறரிருக்க மாட்டார்.

ஆயிரம் வழிப்பின்னல்களில் ஒன்றில் இமையா விழியொளியும் செந்நிறத் தழல்நாக்கும் கொண்டு படமெடுத்து நின்ற கருநாகம் ஒன்றைக் கண்டேன். அது என் காலைத் தீண்டி நஞ்சழுத்திச் சென்றதை உணர்ந்தேன். அந்நஞ்சு இறுகி ஒரு நீலச்சிறுமணியாக என் நெஞ்சில் உறைகிறதடி. அவ்வழியை அஞ்சி அன்று ஓடி வந்தேன். மீண்டும் ஒருமுறையும் அத்திசையை நாடேன் என்று மீளமீளச் சொல்லிக்கொண்டேன். ஆனால் பின்னிரவில் துயில் விழித்து இவன் சிறுகாலை நெஞ்சிலிட்டு கண்விழித்துக் கிடக்கையில் அதை எண்ணாமலிருக்க என் அகத்தால் இயலாது. அதன் இருள்விரிந்த புதர்வழியில் சிலிர்த்துகூசும் சிற்றடிவைத்துச் செல்வேன். அங்கே அந்த விஷமணியை எடுத்து அதன் குளிரொளியை அறிவேன்.

அங்கிருந்து ஓடிவந்து இவன் அடியிணையில் விழுவேன். எழுநரகும் கடந்து வந்த இழிவெல்லாம் என்னில் திரண்டிருக்கும். சிறுகாலை அள்ளி சிரம்வைத்து கண்ணீர்விடுவேன். மலர்மொக்குக் கைகளை மாறி மாறி கண்களில் வைப்பேன். என் அகமறிந்த சொல்லெல்லாம் அணிதிரட்டி அவன் முன் பொழிவேன். கரியோனே, விண்ணளந்த கழலோனே, என் நெஞ்சளப்பது உனக்கொன்றும் அரிதல்ல. நீயறியா இருளில்லை. நீ தொடாத ஆழமில்லை. உன் ஒரு சொல்லால் என் இருள்வானை ஒளியாக்கு. கண்ணா, உன் கழல்தொட்டு உதிரும் கண்ணீரே என் பூசைமலர் என்பேன்.

விரலிடுக்கில் விழிநீர் ஊறிப்பெருக விம்மியழும் யசோதையை நோக்கி ராதை அமர்ந்திருந்தாள். “அன்னை நெஞ்சில் ஆலகாலம் முளைப்பதுண்டோ? இது என்ன பழி என்று எங்குநான் போய்ச்சொல்வேன்?” என்றாள் யசோதை. ராதை அவள் தோள் தொட்டு தன்னுடன் சேர்த்துக்கொண்டாள். யசோதை “ஆயர்குடிகளிலே யாரும் அறியாச் சேதி இது பெண்ணே. இவன் என் கருநிறைத்து பிறக்கவில்லை. என் கண்ணீரில் எழுந்து வந்தான்” என்றாள். ”நான் பெற்றெடுத்தவள் உன்னைப்போல் ஒரு செல்வி. குருதிமூடியச் சிறுமுகமாக அவளை ஒருகணம்தான் கண்டேன். அவளைக் கொண்டுசென்று இவனை என் முலைசேர்த்து படுக்கவைத்தார் என் கொழுநர்” என்றாள்.

“ஆயர்குடிவாழ வந்தவன் இவன் என்றார். இவனை மடிகொள்ள நான் ஏழ்பிறவி நலம் செய்தேன் என்றார். நான் ஒருசொல்லும் கேட்கவில்லை. இவன் நீலமணி ஒளியை சேவடி எழிலை மட்டுமே கண்டேன். குனிந்து இவன் குமிழுதட்டை நோக்கினேன். என் முலையவிழ்ந்து ஊறக்கண்டேன். என் மகன், என் உயிர், எவ்வுயிர்க்கும் இறைவன் இவன் என்று அள்ளி அணைத்துக்கொண்டேன்.” கண்ணீர் பெருகி முட்டில் முகம் சேர்த்து தோள்குலுங்க தேம்பி அழுதாள். “என் முலையுண்டு நிற்கின்றான். அதன் முன் என் மகவுண்டு பசி தீர்த்தவன் அல்லவா?” என்றாள் யசோதை. ”பழிகாரன்! எத்தனை பசுங்குருதி நீராடி வந்துதித்தான். இத்தனை குருதிக்கும் இவன் என்ன பதில் சொல்வான்?”

நீள்மூச்சு விட்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் ராதை. “சொல்லடி, இவனை இடையமர்த்தி செல்கையில் நீ உணர்வதில்லையா இவன் எடையென்ன என்று? உடலற்ற ஆயிரம் மைந்தர் இவனுடன் அமர்ந்திருக்கவில்லையா? இவன் முற்றத்தில் தனித்து விளையாடுகையில் ஒருநாள் கண்டேன். விழிதுடிக்க ஆயிரம் வண்ணத்துப்பூச்சிகள் சுற்றிச்சுற்றி சிறகடிப்பதை. எளிய மாதர் இடையமர்ந்து சிரிப்பவன் தன்னுள் கரந்துள்ளது என்ன? இந்த நீலச்சிறு சிமிழில் நிறைந்துள்ளது அமுதா நஞ்சா? ஒருநாளும் எண்ணியதில்லையா நீ?” என்றாள் யசோதை.

“மாமி, நான் எண்ணுவதே இல்லை. கண்ணனென்ற பேரில் கருத்தழிந்து சொல்லிழந்து வெட்டவெளியில் விரிந்தழியும் ஒளிபோலாகிறேன். நான் என்ன சொல்வேன்?” என்று சொன்ன ராதை “வினாவாக அவன் நின்றால் விடையெனவும் அவனே ஆவான். உங்கள் இடையமர்ந்து முலையருந்த அவன் கொண்ட எண்ணம் ஏதென்று ஒருநாள் அறிவீர்கள்” என்றாள்.

தானுமொரு நெடுமூச்சு விட்டு “ஆம், அவ்வண்ணமே ஆகுக. இப்பேரன்பின் அமுதத்தால் அந்நஞ்சு ஊறியதா? இல்லை அந்நஞ்சை உட்கொள்ள நான் கண்ட அமுதா இது? அதை அவனே மொழிகொண்டு அறிவுறுத்தும் ஒருநாள் வருவதாகுக” என்றவள் வெந்நீர் ஊறிய விழியிமை ஒற்றி “எங்கோ பலிபீடமொன்றில் பசுங்குருதி கொட்டி மடிந்தாள் என் மகள். அக்கணம் அவள் உதடு குவித்து ஒரு சொல் உரைத்திருப்பாள். அன்னை என்றா? அறியேன்” என்றாள்.

மூச்சிரைக்க ஓடிவந்த இளமைந்தன் பிருஷதன் “அன்னையே, கண்ணன் மண்ணைத் தின்கிறான்” என்றான். யசோதை மறந்தெழுந்து “எங்கே அவன்? எத்தனை முறை சொல்வது அவனிடம்?” என்று திரும்பி மண்ணில் கிடந்த மலர்க்கொம்பை எடுத்து நடந்தாள். திண்ணை விட்டெழாமல் ராதை அதை நோக்கி அமர்ந்திருந்தாள். மண்ணில் கையூன்றி கனத்த தொடை மடித்து அமர்ந்திருந்த கண்ணன் அவனை நோக்கி போ என்று தலையசைத்தான்.

“என் கையின் பழத்தைப் பிடுங்கினான். நான் அதைப்பிடுங்குகையில் மண்ணிலிட்டு மிதித்தான்” என்று சொல்லி பிருஷதன் பின்னால் வந்தான். “மண் தின்றால் நோயுண்டு என்றேன். என்னை நோக்கி போ என்று தலையசைத்தான்” என்றான். ரிஷபன் ஓடிவந்து “இல்லை, நீ சொல்லவில்லை” என்று அவன் தோளைப் பிடித்தான். ”போடா… நான் சொன்னேன். அவன் கேட்கவில்லை” என்று பிருஷதன் சொல்ல இருவரும் இளங்கன்றுபோல் தலைசேர்த்து கொம்பு கோர்த்து மல்லிட்டு சுற்றிவந்தனர்.

கைக்கோலை ஓங்கி யசோதை கண்ணனருகே குனிந்தாள். “மண்ணை உண்ணாதே என்று எத்தனை முறை சொன்னேன்? நீயென்ன மதியற்ற மூடனா, மதம் கொண்ட மூர்க்கனா?” என்றாள். பிருஷதன் பிடியுதறி வந்த ரிஷபன் “அன்னையே, அது மண்ணல்ல. கோவைச் சிறுகனி” என்றான். “இல்லை மண், நானே கண்டேன். வாயில் மண்ணள்ளிப்போடுவதை” என்றான் புழுதி துடைத்தபடி பின்னால் ஓடிவந்த பிருஷதன்.

“மண்ணைத் தின்றாயா?” என்றாள் அன்னை. கண்ணன் விழியுருட்டி தலையசைத்து இல்லை என்றான். “பொய் சொல்கிறான். அவன் தின்றது மண்!” என்றான் பிருஷதன். “நீ வீட்டுக்குப் போவாய் அல்லவா?” என்றான் ரிஷபன். பிருஷதன் திகைத்து “அன்னையே, அவன் என்னை அடிப்பான்” என்றான். திரும்பி “போடா! அவன் மட்டும் என் கனியை பிடுங்கலாமா?” என்றான். யசோதை குனிந்து கோலை ஆட்டி “வாயைத் திற… திறக்காவிட்டால் அழுவதற்காகத் திறப்பாய்” என்றாள். கண்களை உருட்டி தலையை ஆட்டிய மைந்தனைத் தூக்கி நிறுத்தி “வாயைத் திறந்து காட்டு. வாயிலிருக்கும் மண்ணைக் காட்டு” என்றாள்.

அவள் கோலை ஓங்குகையில் அவன் வாயைத் திறந்தான். யசோதை வாய்க்குள் ஒருகணம் நோக்கி அயர்வொலி எழுப்பி கால்தளர்ந்து பின் சரிந்து கையூன்றி அமர்ந்துகொண்டாள். ராதை எழுந்தோடி அவளைப் பற்றி “மாமி, என்ன ஆயிற்று?” என்றாள். “இவன் வாய்க்குள் நான் கண்டதென்ன? தெய்வங்களே, இங்கு நான் கண்டதென்ன?” என்றாள் யசோதை. ராதை “எழுந்து வாருங்கள்” என்று அவளைத் தூக்கி கைசேர்த்து திண்ணையில் அமரச்செய்து நீர்கொண்டுவந்து கொடுத்தாள். சிறுகுடத்து குளிர்நீரை உடல்நனைய உண்டு மூச்சு விட்டு கண்களை மூடி கையூன்றி அமர்ந்தாள். “நான் கண்டதென்ன? எந்தையரே, நான் கண்டதென்ன?”

“நானும் கண்டேன்” என்றாள் ராதை மெல்ல. கண்களைத் திறந்து “நீயா?” என்றாள். “உங்கள் விழிகாண்பதெல்லாம் நானும் காண்பேன்” என்றாள் ராதை. முகம் வியர்த்து கண்மூடி “இனி நான் காண்பதற்கேதும் இல்லையடி” என்றாள் யசோதை.

முந்தைய கட்டுரைஎழுத்தாளனுக்கு பேஸ்புக் தேவையா?
அடுத்த கட்டுரைமலைச்சாரல்,கடிதங்கள்