இணையமும் வாழ்க்கையில் வெற்றியும்

அன்புள்ள ஜெமோ

நான் சீண்டுவதற்காகக் கேட்கவில்லை. இது உண்மையாகவே என்னுடைய சந்தேகம். நீங்கள் சமூக வலைத்தளங்களிலே இல்லை. செல்போனை பயன்படுத்துவது கம்மி. ஆனால் இதெல்லாம் நவீன டெக்னாலஜியை உதாசீனம் செய்வது தானே? இதனால் எப்படி வாழ்க்கையிலே முன்னேற முடியும்? வாழ்க்கையிலே ஒதுங்கிப்போவதுதானே இதெல்லாம்?

ராமச்சந்திரன்

அன்புள்ள ராமச்சந்திரன்,

நான் தொடர்ந்து ஒரு பிரிவினையைச் செய்துகொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். எத்தனையோ முறை இதை எழுதியும் விட்டேன். இப்படி ஒரு பார்வையே இல்லாத தமிழ்ச்சூழலில் இதை எளிதில் புரியவைக்கவோ நிறுவிக்காட்டவோ முடியாதுதான். ஆகவே மீண்டும்

ஒருசமூகத்திற்குள் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்களில் அச்சமூகத்தின் அப்போதைய சூழலுக்குள் வாழ்பவர்கள் ஒருவகை. அதற்கான திறன்களை அவர்கள் வளர்த்துக்கொண்டிருப்பார்கள். அதில் சிலர் வெற்றிபெறுவார்கள். சமகாலத்தில் முக்கியத்துவத்துடன் இருப்பார்கள். மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

ஏதோ ஒருவகையில் அச்சமூகத்தின் ஒட்டுமொத்தத்துக்காக, எதிர்காலத்துக்காகச் சிந்திப்பவர்கள் இன்னொரு வகை. அவர்களின் படைப்பூக்கமும் அறிவுத்திறனும் முற்றிலும் வேறுபட்டது. அவர்கள் சமகாலத்தில் பொருளியல் ரீதியாக தோல்வியடையலாம். அவர்கள் யாரென்றே எவருக்கும் தெரியாமல் போகலாம். அவர்கள் அடையும் ‘வெற்றி’ என்பது அவர்கள் அச்சமூகத்தின் ஒட்டுமொத்த படைப்பியக்கத்துக்கு சிந்தனைக்கு அறவுணர்ச்சியின் வளர்ச்சிக்கு அவர்கள் அளிக்கும் பங்களிப்பில்தான் உள்ளது

இன்னொரு வகையில் இவர்களைப் பிரிக்கலாம். திறன், சாமர்த்தியம், புத்திசாலித்தனம் கொண்டவர்கள் முதல்வகை. [ ஆங்கிலத்தில் Talent, cleverness, brilliance] இரண்டாம்வகையினர் படைப்பூக்கம் கொண்டவர்கள்.[creativity] இரண்டாம் வகையினரே உலகை ஆக்குகிறார்கள். விதிசமைக்கிறார்கள். சிந்தனையாளர்கள், கலையிலக்கியவாதிகள், அறிவியலாளர்கள் என அவர்கள் இயங்கும் தளங்கள் வேறு.

நான் எப்போதும் பேசுவது இரண்டாம் வகையினரிடம்தான். முதல்வகையினரிடம் பேச எனக்கு ஏதும் இல்லை. முதல்வகையினர் ஒரு சமூகத்தின் வெற்றிகரமான இயக்கத்துக்கு காரணமானவர்கள். ஆனால் இரண்டாம் வகையினர்தான் அதன் வளர்ச்சிமுனை.

எழுத்தாளர்களும் அவர்களின் வாசகர்களும் அந்த இரண்டாம்வகைக்குள் மட்டுமே அடங்குவார்கள். ஒரு வரிகூட எழுதாத வாசகன் கூட ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்தமான சிந்தனையின் பேரொழுக்குக்குப் பங்களிப்பாற்றுகிறான். அவனுடைய படைப்பூக்கம் வாசிப்பில் உள்ளது, அவ்வளவுதான். ஓர் உரையடலின் மாற்றுத்தரப்பு அவன். அவனின்றி சிந்தனையும் கலையும் மெய்யியலும் இல்லை.

முதல்வகையினரில் வெற்றிகரமானவர்கள் அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்பத்தை அவர்களே கண்டுகொள்வார்கள். அதில் அடிமையாகிக் கிடப்பவர்கள் தோற்பார்கள். அவர்கள் விரும்புவதை அவர்கள் செய்யட்டும்.

நான் நவீனத் தொழில்நுட்பத்துக்கும் படைப்பூக்கமனநிலைக்குமான உறவைப்பற்றித்தான் பேசுகிறேன். அது ஒருவரின் அகத்தனிமையை அழிக்கிறது. அவரை ஒன்றில் தொடர்ந்து முழுமனத்துடன் ஈடுபடமுடியாமலாக்குகிறது. அதைவெல்லும் வழியையே நான் சொல்கிறேன். உலகியல் வாழ்க்கையில் வெற்றிபெறும் வழியை அல்ல.

சிந்தனை, அறிவியல், கலை போன்றவற்றுக்கு ஒரு குறிப்பிட்ட மனநிலை தேவை. அதை முழுமையாக அர்ப்பணித்தல் எனலாம். வேறெதையும் மறந்து தான் எடுத்த ஒன்றிலேயே இருத்தல். அது ஒரு மனநோய்க்கூறு அளவுக்குக் கூட இருக்கும். அப்ஸெஷனல் கம்பல்சிவ் நியூரோசிஸின் விளிம்பு. அங்கே சென்றாலொழிய எதையும் ஆக்கமுடியாது. ஒரு ஆய்வை திரும்பத்திரும்பச் செய்பவன், ஒரு நூலை திரும்பத்திரும்ப எழுதுபவன், ஒரு ராகத்தில் மூழ்கியிருப்பவன் அப்படிப்பட்டவன்.

அதற்குத் தடை என்பது வெளியுலகம் நோக்கி விரிந்துகொண்டே இருப்பது. வெளியுலகால் ஆட்டிவைக்கப்படுவது. அரட்டை அதன் வழி. இணையம் மாபெரும் அரட்டைவெளி.

மீண்டும், இந்த ‘வாழ்க்கையில் வெற்றி’ பற்றி. நான் பலமுறை சொன்னதுதான் இது. பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பஞ்சத்தால் அடிபட்ட ஒருதலைமுறையை முன்னோராக அடைந்தவர்கள் நாம். அவர்களுக்கு சோறுதான் வாழ்க்கை. உப்பு புளிதான் உலகம். பிழைப்பதுதான் இருப்பது. அதைத்தான் நமக்குக் கற்பிக்கிறார்கள்.

நாம் இளமையில் அதை அறிந்து பாமரத்தனமாக அதைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறோம். உள்ளூரிலும் சொந்தத்திலும் உள்ள பணக்காரர்களை, செல்வாக்கானவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு வாழ நினைக்கிறோம். அவர்களை உயர்ந்தவர்களாக எண்ணி வியக்கிறோம். சராசரி இந்தியன் ஒருவரைச் சந்தித்ததுமே தன் சொந்தத்திலும் பழக்கத்திலும் உள்ள பணக்காரர்களை, பதவி உடையவர்களைப்பற்றிப் பேச ஆரம்பிப்பதை எங்கும் காணலாம்.

இந்தப்பாமர மனநிலையைத்தான் நான் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறேன். படைப்பூக்கம் கொண்ட வாழ்க்கையைப்பற்றிய அறியாமை, எள்ளல் நம்மிடையே உள்ளது. ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் மாதவருமானம் உடைய எந்த முட்டாளும் எந்தச் சிந்தனையாளனையும் எள்ளலாமென்றும் அறிவுரை சொல்லலாம் என்றும் இங்கிருப்பது அதனால்தான்.

இந்த மனநிலையை வெல்லாமல் நம்மால் படைப்பூக்கத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளமுடியாது. அப்படி ஒரு சமூகம் புரிந்துகொள்ளாமல் அதில் படைப்பூக்கம் மேலெழாது.

உலகியல் வாழ்க்கை வாழ்பவர்கள் வாழட்டும்.ஆனால் படைப்பூக்கம் கொண்டவர்கள் தங்களுக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்காவிட்டால் அது சமூக இழப்பு. அவர்களுக்குப் பேரிழப்பு. அவர்கள் தங்களுக்கான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தாகவேண்டும். நான் சொல்லிக்கொண்டிருப்பது அதையே

இந்த இருவகை வாழ்க்கை, இருவகை மனிதத்திறன் பற்றிய புரிதலே நம் சமூகத்தில் இல்லை. இந்தப்பாமரத்தனம் காரணமாகத்தான் புத்தகம் வாசிக்கிறவர்களிடம் ‘இதனால் உனக்கு பத்துபைசா லாபம் உண்டா?’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்

ஆகவே படைப்பூக்கத்தையும் செயலூக்கத்தையும் ஒன்றென நினைக்காதீர்கள். ஒன்றை உருவாக்குபவனையும் வெறுமே உழைப்பவனையும் நிகராக எண்ணாதீர்கள். சம்பாதிப்பவனை படைப்பவனுடன் ஒப்பிடாதீர்கள். அந்த பாமரத்தனத்தை தாண்டுவதே ஒருவன் அறிலகில் வைக்கும் முதல் காலடி. அந்த போதமே ஒரு சமூகம் நாகரீகம் அடைவதன் முதல் அடையாளம்.

தன் மாபெரும்நூலான சம்ஸ்கிருத அகராதி அச்சேறும் முன்னே மறைந்த மோனியர் விலியம்ஸும், தன் ஆய்வுகளுக்கு எந்த காப்புரிமையும் பெறாது மறைந்த நிக்கோலா டெஸ்லாவும் வாழ்க்கையில் முழுவெற்றிபெற்றவர்கள்.. அந்தவெற்றியே வேறு.

நீங்கள் யாரென்று முடிவெடுங்கள். நீங்கள் நாடுவது உலகியல் வெற்றியை என்றால் அதற்குரிய வழி வேறு.படைப்பியக்கத்தை என்றால் நாம் பேசுவோம்.

நான் சுந்தர ராமசாமியை 1986ல் முதலில் சந்தித்தபோது அவர் எனக்குச் சொன்னவை இவை. முப்பதாண்டுக்காலமாக நானும் அதையே திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு தலைமுறைக்காலம் சொல்லிக்கொண்டிருக்கவேண்டியதுதான்.

ஜெ

முந்தைய கட்டுரைமலைச்சாரல்,கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 17