தேடுபவர்கள்

என்னுடைய இணையதளத்தில் நுழைபவர்கள் எதை தேடுவதன் மூலமாக நுழைகிறார்கள் என்று கூகிள் காட்டுகிறது. நான் அடிக்கடி பார்க்கும் விஷயம் இது. பொதுவாக என்னுடைய பெயரை தேடுபவர்கள் அதிகம். என்னுடைய நூல்களை தேடி வந்தடைபவர்கள் கொஞ்சம் குறைவுதான். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், சுஜாதா பெயர்களை தேடி என்னிடம் வருபவர்கள் உண்டு.

ஆனால் என்னை ஆச்சரியப்படுத்தும் தேடல்கள் பல. கூகிள் பற்பலர் ஒரே சொற்களை தேடினால் மட்டுமே முதன்மையாக எடுத்துக்காட்டும். அச்சொற்கள் மீளமீள தேடப்பட்டால்தான் முதலில் இருக்கும். ஆகவே இச்சொற்கள் தனிப்பட்ட முறையில் யாரோ எதற்காகவோ தேடியவையல்ல. இது பலருடைய பொதுத்தேடல்.

கவிதை , புதுக்கவிதை சரி. இயற்கை உணவு என்று ஒருவர் தேடியதும் சரி. ஆனால் மிகப்பெரும்பாலான தேடல்கள் பாலியல்சார்ந்தவையே. கூகிளில் தமிழில் எதை போட்டாலும் முதலில் வருவது பாலியல் சொற்களே. இணையநிலையங்களில் முன்னால் என்னென்ன இணையதளங்கள் மேயப்பட்டன என்று பார்த்தால் பெரும்பாலும் பாலியல்தளங்கள்தான். பாலியலின் அந்தரங்கமான தேடலுக்கு இணையம் ஒரு ரகசியப்புல்வெளி.

‘அவன் அவளை..’ ‘வருடினாள்’ ‘முலை’ ‘காமம்’ ‘ஆண்குறி’ போன்ற சொற்களை தேடி என் இணையதளத்திற்குள் வந்து விழும் வாசகருக்கு ஏற்படும் துணுக்குறலை என்னால் கற்பனைசெய்யவே முடியவில்லை. என்னடா உலகம் இது என்று பதைத்துப் போய்விடுவாரே. அவரது எளிய உலகத்துக்குள் இனம்புரியாத ஒரு கொந்தளிப்பு ஏற்படுமே. இந்த இணையதளத்தில் இருந்து கோபத்துடன் வெளியே போகும்போது என்ன சொல்வார்?

ஆனால் இன்னும் சில விபரீதமான சொற்றொடர்களுக்காக தேடியிருக்கிறார்கள். ‘கால்களை விரித்து’ தேடியவரின் கற்பனையை ஊகிக்க முடிகிறது. ‘ஆடைகளை களைந்தாள்’ சரிதான். ஆனால் சில தேடல்கள் விபரீதமானவை. ‘அக்கா உறவு’  அடிக்கடி தேடப்படுகிறது. அது வழக்கமான பாலியலெழுத்தின் ஒரு நிரந்தரக் கதை. ‘பெண்களின் சுய இன்பம்’ அதை பெண்கள் தேடுகிறார்களா ஆண்களா? ஆனால்  ‘அம்மா மகன் உறவு’ கொஞ்சம் அதிகப்படி.

திரும்பத்திரும்ப தொந்தரவு செய்யும் தேடல் ‘அப்பா என்னை..’ என்ற வரி. ஆச்சரியமாக இருக்கிறது. அனேகமாக தினமும் பலர் அந்த வரியை தேடி என் இணையதளத்திற்குள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அந்த வரியை தேடுபவர்களில் மிகச்சிலரே என் இணையதளத்திற்குள் வர முடியும். கூகிள் என் இணைத்தளத்தை கொஞ்சம் தயங்கித்தான் சிபாரிசு செய்யும். அதிகளவு வருகைகள், அதிகளவு அச்சொல் புழங்குதல் ஆகியவையே அதன் அளவுகோல். உள்ளே வருபவர்கள் சம்பந்தப்பட்ட கட்டுரையின் தலைப்பையும் வாசித்தபின்னரே தேர்வுசெய்கிறார்கள்.

அப்படியானால் தினமும் பலநூறுபேர் தமிழில் இச்சொற்களை அந்தரங்கமாக கூகிளில் அடித்து தேடுகிறார்கள். எதை? தேடுபவர்கள் யார் ஆண்களா பெண்களா?

முந்தைய கட்டுரைமுதற்கடிதம்
அடுத்த கட்டுரைஒரு புகைப்படம்