‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 18

பகுதி ஆறு: 2. நெருப்பரவம் அணைதல்

ஆயர்குல மங்கையரே, கேளுங்கள். அன்றொருநாள் அனலெழுந்த கோடையில் கருக்கொண்ட காராம்பசுவொன்றை கருநாகமொன்று தீண்டியது. அன்று நான் உங்களைப்போல் கன்னியிளநங்கை. நாகத்தின் நஞ்சேற்று நீலம் படர்ந்து சினை வயிறெழுந்து செங்குருதி வழிந்து கிடந்த பசுவையும் நஞ்சுப்பாலருந்தி நெற்றியில் விழிசெருகி நாக்கு நெளியக் கிடந்த கன்றையும் கண்டு ஆயர்க்குலமே சூழ்ந்து நின்று கூவி அழுதது. கன்றையும் பசுவையும் குழியமர்த்தி நீரூற்றி நெறிசொல்லும் முறையாவும் செய்தபின் எந்தை சொன்னார் “ஆயர்களே, இனியொருகணமும் இங்கிருக்கலாகாது. கருநாகம் தனித்துறையும் ஒருநிலமும் இங்கில்லை என்றறிக. இங்கே நம் காலுக்கடியில் நாகப்புழைகள் ஓடுகின்றன. நஞ்சூறும் காற்றில் நம் மூச்செழுகிறது. கன்றுடன் பசு கூட்டி குடிபெருகி நாம் வாழ பிறிதொரு இடம்தேர்வோம்.”

அன்று பின்மதியம் கன்றும் பசுவும் அவிழ்த்தெடுத்து கலமும் பொருளும் கட்டிச்சுமந்து குடியனைத்தும் கூடி அங்கே வாழ்ந்த கதை பேசி விட்ட நினைவுகளை எண்ணி விலகிச்சென்றனர். எந்தை மூதாயர் ஒரு கனல்சுள்ளி கையிலெடுத்து காற்றூதும் திசைதேர்ந்து “கெடுக எங்கள் தீங்கனைத்தும். பொலிக எங்கள் பசுக்குலங்கள். எழுக எரிமலர்! மூள்க முப்புரப்பெருங்கனல்!” என்று கூவி அதை ஒரு புற்கூரைமேல் வைத்தார். செந்நெருப்பின் ஒளியிதழ் மலர்வதைக் கண்டேன். பறக்கும் கொடிபோல அனல் நாவொலிக்க எங்கள் குடில் மீதெழுந்தது எரிமரம். கருங்கிளை விரித்து கைவிரித்து நின்றாடியது. மலைச்சரிவேறி நின்று நோக்கியபோது வெந்து வெண்சாம்பலாகி விரிந்த என் குடியைக் கண்டேன்.

நான்குசோலை கடந்து நடந்து வந்து நின்ற இடம் கோகுலம். இங்கே மண்ணில் விழுந்துகிடந்த மரமொன்று தளிர்விட்டெழுந்ததைக் கண்டோம். அதன் அடிமரத்துச் சிறுபொந்தில் கூடுகட்டி குஞ்சு பொரித்த அன்னைக்காகம் ஒன்றைக் கண்டோம். கூட்டுக்குள் மணிவிழி விரித்து மலர்சிறை பிரித்து காகக்குஞ்சொன்று எங்கள் காலடி கேட்டு எம்பி நோக்கியது. அருகே கருங்குயில் கரந்திட்ட சிறுமுட்டை விரிந்து எழுந்துவந்த சிறுமணிக்குஞ்சொன்று செவ்வுதடு பிளந்து மெல்லியகுரலெழுப்பக் கேட்டோம். “மதியறிந்த காகம் மண்ணுயரத்தில் கூடுகட்டும் இவ்விடம் நாகம் குடியேறா நலமுடையது. இங்கு அமைக நம் குலம். இங்கு பெருகட்டும் நம் குடி” என்றார் எந்தை மூதாயர். “பொலிக! பொலியே பொலிக!” என்று குரவையிட்டனர் பெண்கள்.

“கோகிலம் விரிந்த இவ்விடம் கோகுலமென்றே அழைக்கப்படுக. இங்கே அன்னை மடிநிறைத்து ஆயர் குடி நிறைத்து ஆன்றோர் சொல்நிறைத்து அகிலம் புகழ்நிறைக்கும் மைந்தன் ஒருவன் நிகழ்க. காகக்கூட்டின் குறிகள் சொல்லும் குறிப்பு அதுவே” என்றார் எந்தை. “ஆம். பொலிக! பொலியே பொலிக!” என்றனர் ஆய்ச்சியர். கோகுலத்தில் குடியமர்ந்தோம். எங்கள் குலம்செழிக்கலானோம். மந்தைப்பசு பெருக மனைதோறும் பெருகியது மாமங்கலம். கோகுலத்தில் ஒருபோதும் பசியென்றும் பிணியென்றும் பகையென்றும் போரென்றும் எதையும் நான் கண்டதில்லை. அன்று சொன்ன அச்சொல் பலிக்க இன்றுவந்தான் என் கைநிறைக்கும் இனியமகன். இளநீலம் மலர்ந்த ஒளிவிழியன். முத்தை ஈன்று மூழ்கி மறையும் சிப்பியென ஆனது கோகுலம். அதோ நாம் விட்டுச்செல்லும் அன்னைமடியென அது தனித்து நிற்கிறது.

அன்னை வரியாசி சொன்னசொல் கேட்டு ஆய்ச்சியர் கோகுலத்தை நோக்கி கண்பொங்கி திரும்பினர். “கோகுலம் இனிமேல் கன்றுசூழும் மன்றாகி இங்கிருக்கும். கண்ணன் கழல் பட்ட மண்ணென்று நம் குலந்தோறும் அதன் பெயர் வாழ்ந்திருக்கும்” என்று சொல்லி வரியாசி கைகூப்பினாள். யக்‌ஷவனம் பிலக்‌ஷவனம் இந்திரவனம் என்னும் மூன்று சோலைகளைக் கடந்து அவர்கள் விருந்தாவனத்தை அடைந்தனர். தொலைவிலேயே குயில்குலம் கூவும் குரல்கேட்டு வியந்து கைகொண்டு வாய்பொத்தி முகம் மலர்ந்து நின்றுவிட்டனர். “கோடைக்குயில் கீதம் இத்தனை நாதம் கொண்டு எங்கும் கேட்டதில்லையடி” என்றாள் வரியாசி. ஒன்று கேட்க ஒன்று உரைக்க இன்னொன்று ஐயப்பட பிறிதொன்று விளக்க அருகே ஒன்று வியக்க அங்கே ஒன்று நகைக்க அப்பால் ஒன்று பாட அங்கே நிறைந்திருந்தது ஒற்றைச்சொல் என்று வரியாசி உணர்ந்தாள். ஒன்றை அறிவதில் இத்தனை உணர்வுகளா என்று எண்ணினாள். ஒன்றானது தன்னை பலவாக்குவது அவ்வாறல்லவா என்று அமைந்தாள்.

விருந்தாவனத்தில் மலர்பூத்த மரங்களின் நடுவே பசுமை ஒளிர்ந்த புல்விரிவில் பிறைவடிவில் அமைந்திருந்தது ஆயர் பாடி. நடுவே மூன்றடுக்குக் கூரையுடன் நான்குபுறமும் சாளரங்களுடன் இரண்டு திண்ணையும் இருமருங்கும் தொழுவங்களுமாக எழுந்திருந்தது நந்தகோபனின் இல்லம். அன்னை இடையமர்ந்து அகல் விழி திறந்து நோக்கி அசைவிழந்திருந்த கண்ணனை நோக்கிக் குனிந்து “என்ன விழி இது? ஏனிந்த மோனம்? கண்ணன் நெஞ்சில் ஓடும் எண்ணங்கள் ஏது?” என்றாள் வரியாசி. “கரியவனே, இது உன் இல்லம். இது நீ விளையாடும் எழில்மலர்ச் சோலை. இதன் பெயர் விருந்தாவனம்.” வலக்கையை வளைத்து புறங்கை மூட்டை வாய்சேர்த்து எச்சில் வழிய சுவைத்துக்கொண்டிருந்த மைந்தன் கைவிலக்காமலேயே கண்களால் புன்னகைத்தான்.

அவன் கைகளை விலக்கி சிறுவாய் கனிச்சாற்றை சுட்டுவிரலால் துடைத்து “அதோ உன் இல்லம்” என்றாள் மூதன்னை. “இல்லம்” என்று ஈரச்சிறுவிரல் சுட்டி அவன் சொன்னான். பின்னர் கால்களை உதைத்து குதிரைவீரன் போல எம்பி “ராதை! ராதை!” என்றான். “அதையே சொல்லிக்கொண்டிரு. உனக்கென்ன அன்னையரும் மாமியரும் அயலாரும் உற்றாரும் பெண்கள் அல்லவா?” என்றாள் வரியாசி. “அவள் இடையமர்ந்து வளர்ந்தவன். அவள் மொழிகேட்டு மலர்ந்தவன். அவளையன்றி எவள்பெயர் சொல்வான்?” என்றாள் யசோதை. வரியாசி உதட்டைச் சுழித்து “உன்னைச்சொல்லவேண்டும் பெண்ணே. உன்மைந்தன் உன்னிடையில் இருக்கையிலும் அவள் நெஞ்சில் தவழ்கிறான்” என்றாள். “அவன் நெஞ்சில் அழியாது குடிகொண்ட அழகல்லவா அவள்?” என்றாள் யசோதை.

கண்ணன் கீழிறங்கி இல்லம் நோக்கி இளம்காலடி வைத்து ஓடத்தொடங்கினான். திண்ணையருகே நின்று தொற்றி மேலேறி உள்ளறைக்குள் ஓடி பின்கட்டில் வெளிவந்து இடம் வந்து தொழுவத்தில் நுழைந்து “இல்லம்!” என்றான். மீண்டும் முன்முற்றம் வந்து பின்முற்றம் சென்று வலம் வந்து தொழுவம் கண்டு முற்றத்து வந்து “இல்லம்!” என்றான். “ஒரு வீட்டை எத்தனை முறைதான் சுற்றுவாய்?” என்று சொல்லி யசோதை நகைத்தாள். இல்லத்துக்குள் நுழைந்து இருண்ட வைப்பறைக்குள் சென்று கூரைமுளை நோக்கி கைசுட்டி “இங்கே உறி!” என்றான். “அங்கே வெண்ணைப்பானையை வை என்கிறானடி உன் மகன். அவன் கவர்ந்தெடுக்க ஏற்ற இடம் ஏதென்று அவனே சொல்லிவிட்டான்” என்றாள் யசோதையின் தோழி அனகை. “சிரிக்காதே, உன் வீட்டிலும் உறியமையும் இடமேதென்று அவன் இப்போதே அறிந்திருப்பான்” என்றாள் அவள் தோழி கனிகை.

“பர்சானபுரியின் இளமகள் வருவதற்கு இன்னமும் அருகுள்ளது இந்த இடம்” என்றாள் அனகை. “அவள் வந்து தொட்டால் இவன் நீர் பட்ட பால்பொங்கல் அல்லவா?” என்றாள் கனிகை. கையில் பொரிமலரும் மலர்க்குவையும் கொண்டு யசோதை இல்லம் புகுந்தாள். அடுமனையில் நெருப்பேற்றி பால்கலம் நிறைத்து பொங்கி எடுத்துவைத்தாள். “பொலிக! பொலி பொலிக!” என விருந்தாவனமெங்கும் ஆய்ச்சியர் குரலெழுந்தது. “கண்ணா, பாலுண்ண வாராய்!” என ஆயர்மகளிர் இல்லம் தோறும் நின்று அழைத்தனர். மயில்பீலி மணிக்குழலும் கையில் வேய்ங்குழலும் கொண்டு இல்லம் தோறும் சென்று பாலுண்டு மீண்டான். வாய்நிறைக்கும் பால்மணம் கொண்டு வீடுவந்த மைந்தனை அள்ளி முகர்ந்து “எத்தனை இல்லத்தில் உண்பான் இவன்? இனி நாம் என்ன ஊட்டுவது இவனுக்கு?” என்று வரியாசி கேட்டாள். “பாற்கடலையே குடித்தாலும் பசியாறமாட்டான். நள்ளிரவில் முலைதேடி பாலெங்கே என்பான் பழிகாரன்” என்றாள் யசோதை.

காலையில் எழுந்து கண்விழித்ததுமே கண்ணனெங்கே என்றுதான் பார்ப்பாள் வரியாசி. கதவு விரிந்திருக்க முற்றத்து மென்மணலில் காலடித்தடம் கிடந்தால் கண்ணன் சென்ற திசை தெரியும். “அன்னையே, சற்றுமுன் எங்கள் வீட்டில் பால்குடித்தான்” என்று ஒருத்தி கூவிச்சொல்வாள். “என் வீட்டு மைந்தனும் அவனுடன் சென்றுவிட்டான். யமுனையில் கோடைநீர்ப்பெருக்கெடுக்கும் காலம். என்னென்று சொல்வேன்? உங்கள் புதல்வன் கால்களுக்கொரு பூட்டுபோட வழியில்லையா?” என்பாள் இன்னொருத்தி. “மலர்கொழுத்த மாமரத்தை உலுக்காதே. மா நிறைந்தால் கனியெல்லாம் உனக்குத்தானே என்றேன். பன்னிரு வானரங்களை படைதிரட்டி கூட்டிவந்து ஏறி உலுக்கி என் முற்றத்தில் பரப்பிச்சென்றான். இன்று காலை புதுமலர் பூத்து சினைப்பசு போல சிரம் தாழ்த்தி நிற்கிறது என் முற்றத்து மாமரம்” என்பாள் ஒருத்தி. “கண்ணனெங்கே அன்னையே? புதுநெய் உருக்குகிறேன். அதிலிட்ட கருவேப்பிலைக் கொழுந்தை உண்ண நேற்றே அவன் சொல்லிவைத்திருந்தானே?” என்று அவளிடமே கேட்பாள் இன்னொருத்தி.

ஒருமைந்தன் உலகெல்லாம் நிறைய முடியுமா என்று நான் வியப்பேன். கண்ணனென்று கண்டதெல்லாம் புற்றெழுந்து சிறகுகொள்ளும் புதுமழையின் ஈசல்பெருக்குதானா? ஆயிரம் கண்ணன்கள். பல்லாயிரம் சிறகுகள். எங்கு சென்று எந்த மைந்தனைத் தேடுவேன்? ஆயர்குடியில் அத்தனை மைந்தர்களும் மாயன் போலிருந்தால் முதுமகள் என்ன செய்வேன்? இடையில் கைவைத்து சோலைநடுவே நின்று கூவி அழைப்பேன். “கண்ணா, கரியோனே, எங்குள்ளாய்? மூதன்னை கால்வருந்தலாமா? கூவி அழைத்து குரலழியலாமா? வந்து அமுதுகொள். உன் அன்னைக்கு பொழுது கொடு!” சோலை நிறைக்கும் நீலமலரெல்லாம் கண்ணன் உடல் போல கண்ணுக்குத்தெரிந்தால் எத்தனை வழிசெல்வேன்? எங்கு சென்று தேடுவேன்?

கண்ணனைக் கண்டுவிட்டால் சோலையெல்லாம் சிரிக்குமொலி கேட்பேன். கண்ணா, அன்னைமனத்தை அறியாதவனா நீ என்று அயர்ந்து நிழல்தேர்ந்து அமர்ந்தால் அருகே மரக்கிளையில் இருந்து குதித்து என் கால்களை பற்றிக்கொள்வான். “அன்னையே, அழுத்திவிடவா?” என்பான். கையை விலக்கு கரியவனே, உன் மலர்க்கரங்கள் தொட்டபின்னர் இக்கால்கள் மண் தொட்டு நடக்குமா என்ன? விண்ணளாவும் கால்களுடன் என் உதிரம் வாழும் இம்மண்ணிலெப்படி நிற்பேன்?

மங்கையரே கேளுங்கள். அன்னை நெஞ்சில் கனிவுக்கு மேலே கடுமை எழும். அகம் கொள்ளும் அச்சம் எழுந்து ஆட்டுவிக்கும். மூவுலகும் நிகர்கொள்ளும் முழுமணியை தன் முந்தானை முடிச்சில் கரந்தவளுக்கு விழிதுஞ்ச வழியுண்டா என்ன? இரவில் துயில்கையிலும் சிற்றகலை ஏற்றிவைப்பேன். அதில் ஆடும் சுடர்போல அசைவே என் அகமாகி இரவிருப்பேன். பூவுதிரும் ஒலிகேட்டும் பதறி அகம் விதிர்ப்பேன். கைநீட்டி அருகே கண் துஞ்சும் கரியோனை தொட்டறிவேன். சிறுகாலைத் தொட்டு மணிக்கழலை உருட்டி விரல்தளிர்களை எண்ணி துயிலாழ்வேன்.

விரஜகுலத்தீர் கேளுங்கள்! விழிக்கு அப்பாலும் என் அகம் நோக்கியிருக்கும். அதனால்தான் நள்ளிரவில் விழித்தெழுந்து நாகத்தின் பேருருவைக் கண்டேன். அகல்விளக்கின் சுடர்மேல் விழுந்த மலரிதழின் நிழலென எழுந்து கூரைவளைவில் குனிந்து என் மைந்தனை நோக்கி விழியொளிர்ந்துகொண்டிருந்தான். குரலிழந்து கையசைத்து நான் கூவிக்கொண்டிருக்க மலர்பற்றி எரியும் தழலசைவில் அவன் படமாடி பின் அனலாகி எழுந்தாடி அணைந்து மறைந்தான். அன்றுமுதல் நான் அஞ்சிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் அவன் காலடியைத் தொடர்ந்து காடெங்கும் சோலையெங்கும் சென்றுகொண்டிருந்தேன். நீலச்சிறுபாதம் நடந்துசென்ற தடமருகே நீர்வழிந்த வரிபோல பாம்பு இழைந்துசென்ற பாதையொன்று போகக் கண்டேன். அவன் கண்துயிலும் மரநிழலில் குறும்புதர் செறிவுக்குள் நஞ்சின் மணம் எழ உணர்ந்தேன்.

யாரிடம் சொல்வேன்? எப்படி சொல்லாக்குவேன்? அச்சம் கனத்து அகத்தே நஞ்சாகி நானுமொரு நாகமானேன். அவன் செல்லும் வழி தேர்ந்து சென்ற இடத்தில் யமுனை விழிகொண்ட பெருஞ்சுழி ஒன்றைக் கண்டேன். குளிர்நீர் காளிந்தி அங்கே கொப்பளித்து குமிழிகொண்டாள். செல்லும் வழியெங்கும் சோலையெழும் நீர்ப்பெருக்கு அங்கு மட்டும் பசுமை ஏதுமின்றி பாழ்பட்ட கரை கொண்டிருந்தது. ஒருபறவைச் சிறகுகூட அசையாத வெறும் வானம் அங்கே கவிந்திருக்க கண்டேன். தனிநீலக் கடம்பொன்று தாழ்ந்து நின்ற சுழிக்கரையில் கனலருகே என்பதுபோல் உடல் வேர்த்து நின்றிருந்தேன். நீரில் நெருப்புறையக் கண்டேன். நீலவானம் சுழித்தழியக் கண்டேன். அச்சுழிக்குள் எழுந்தமைந்த கன்னங்கரிய பெருந்தழலொன்றைக் கண்டேன். நீள்நாகம் ஒன்றின் வாலசைவென்று அதை உணர்ந்தேன்.

கன்று ஒன்றின் கயிறு பற்றி மூன்று சோலை வழிகடந்து குறிதேரச் சென்றேன். வேப்பிலைக் கொழுந்தெடுத்து வெறிகொண்டாடி குறிசொன்னாள் குறத்திமகள். ஆறாயிரம் யோசனைக்கு அப்பாலுள்ளது ஆயிரம் காதம் அகலமுள்ள ரமணகத்தீவெனும் பாதாள உலகம். அதன் வானிலெழுந்த அனலோனின் நிழல் விழுந்து ஒரு நாகமாகியது. தன் மைந்தனை குனிந்து நோக்கி முகம் மலர்ந்த எரிதேவன் “கரியோனே, காளியனே” என்றழைத்தான். ஐம்பெரும் பூதங்களையும் தலைகளாக்கினான். தன் ஐந்து விரல்களையே செந்நாக்குகளாக அளித்தான். ரமணகத்தீவில் ஒற்றைப்பெருந்தெய்வமாக, அரசும் குடியும் அவனேயாக ஆட்சி செய்தான் காளியன்.

விண்ணவன் ஏறும் புள்ளரசன் வானில் பறக்கும் நிழல்கண்டு மண்ணிலும் ஆழத்திலும் வாழும் நாகங்களெல்லாம் தலைதாழ்த்தி தன்னுடலில் தான்சுருண்டு ஒடுங்கவேண்டுமென்பது நெறி. அனலோன் மைந்தனென்னும் ஆணவத்தால் தழல்சிறகு நிழல்கண்டும் தலைஐந்தும் தூக்கி காளியன் நா பறக்கச் சீறினான். குனிந்து நோக்கிய சிறகோன் உகிர்கவ்விய இரை கீழே விழுந்தது. ஐந்து வாய் விரித்து நெளிந்தோடிச் சென்று அதை எடுத்து உண்டான். சீறித் தழைந்துவந்து நாகத்தலை ஐந்தும் கொத்தி நீலக்குருதி வழிய தூக்கிச் சென்றது விண்ணாளும் பெரும்புள். வடவானில் சிரமெழுந்த இமய முடிமீது கொண்டுவைத்து கொத்தி உண்ண எண்ணியது.

“எந்தையே! எனைக்காக்க எழுந்தருள்க” என்று காளியன் ஏங்கும் குரல்கேட்டார் எரிவடிவோன். விரிதழல் முகிலென வானிலெழுந்தார். வெம்மைகொள் கரத்தால் புள்ளரசன் சிறகை அறைந்தார். உகிர்நழுவி மண்ணில் விழுந்து நெளிந்து படமெடுத்த மைந்தனிடம் “பிருந்தாவனம் செல்க. அங்கே சௌபரி முனிவர் தவம்செய்த நீர்ச்சுழியில் குடிகொள்க. இப்புவியில் புள்ளரசன் அணுகமுடியாத இடம் அதொன்றே” என்றார். நிலத்தில் நெளிந்தோடி நீரில் பாய்ந்து மூழ்கி வந்து பிருந்தாவனத்தருகே யமுனைச்சுழியொன்றில் குடிகொண்டான் அனல்மைந்தன். காளியனின் நாநுனியில் வாழ்கின்றான் செங்கனலோன். அவன் வால்நுனியில் எழுகின்றான் கருந்தழலோன் என்றாள் குறிசொன்ன குறத்தி. சௌபரி முனிவர் சொன்ன சொல் நின்றிருக்கும் நீர்ச்சுழியில் பெருஞ்சிறகோன் இறங்க மாட்டான். காளியனை வெல்ல இப்புவியில் எவருமில்லை என்றாள்.

அஞ்சி உடல்நடுங்கி கண்ணீர் வழிந்தோட குடிமீண்டேன். குறிச்சொல்லை எடுத்துரைத்து அன்னையர் நெஞ்சை அழியவிடலாகாதென்று உறுதிகொண்டேன். என் உடலெங்கும் விழியாகி மைந்தனை வழிதொடர்ந்தேன். யமுனைக்கரையோரம் தோழர்சூழ்ந்தாடி அவன் செல்லும்போதெல்லாம் தொடர்ந்தோடி அழைத்துவந்தேன். “பித்தியானாள் பேரன்னை. பெயரன் பெயர் சொல்லி சோலையெங்கும் அலைகின்றாள்” என்றனர் ஆயர்குலமகளிர். நான் எண்ணுவதென்ன என்று எங்கனம் உரைப்பேன்? ஆயிரம் கால்முளைத்த ஆயர்ச்சிறுவனை எப்படித் தொடர்வேன்? கன்னியரே, கேளுங்கள். கண்ணனை அறிவதற்கு கண்ணீரொன்றே வழியென்றறிந்தேன்.

நேற்று மதுவனத்தில் இருந்து ரோகிணியுடன் பலராமன் வந்திருந்தான். விருந்தாவனத்தைக் காட்டுகின்றேன் வா என்று தம்பி தமையனை அழைத்துச்சென்றான். அவன் சென்ற வழிதேடி புதரளைந்து மரக்கிளை விலக்கி நானும் சென்றேன். எதிரேவந்த மைந்தனிடம் “எங்கே என் கண்ணன்?” என்றேன். “வனமாடி வியர்த்ததனால் நீராடிவரலாம் என்றான். யமுனைக்குச் செல்லாதே என என் அன்னை சொன்னதனால் நான் மட்டும் மீண்டேன்” என்றான். “கண்ணா! நதிப்பெருக்கில் நஞ்சுள்ளது.வேண்டாம் விலகிவிடு” என்று கூவி நான் விருந்தாவனத்தின் சோலைமரங்கள் நடுவே விரைந்தேன்.

நீர்ச்சுழியின் மீதெழுந்த நீலக்கடம்பில் நின்றிருக்கும் மைந்தனை தொலைவிலேயே கண்டுவிட்டேன். கைநீட்டி கண்ணா கரியவனே என்று கூவி அணுகிச்சென்றேன். அவன் கையிலொரு மரப்பந்திருந்தது. அவன் பந்தை வீச இளங்கோபர்கள் ஓடிப்பிடித்து திரும்ப எறிந்தனர். அம்மானையாடும் கையாக அசைந்தது கடம்ப மலர்க்கிளை. அதிலொரு நீலக்கரும்பந்தாக துள்ளியாடினான் என் சிறுமைந்தன். என் ஆழத்தில் எழுந்து அடிவயிற்றில் கொழுந்தாடி சிந்தையைப் பழுக்கவைத்த செங்கனலை என்னென்பேன். அன்னையென்றான அக்கணமே பெண்ணறியும் பெருநெருப்பல்லவா அது? சிதையேறி எரிகையிலும் விண்ணேறிச் செல்கையிலும் ஆடையென அகம்சூடும் அனல் அல்லவா? “கண்ணா குலக்கொழுந்தே. நில் அங்கே. அன்னை குரல் கேள்” என்ற என் குரலைக் கேட்டு அவன் ஒருகணம் திரும்பினான். அம்முகத்தில் எழுந்த இளநகையைக் கண்டேன். மறுகணமே கால்நழுவி கருநீர்ச்சுழிக்குள் விழுந்தான்.

ஆயிரம் நூல்கற்று அமைந்தாலும் அதைச்சொல்ல மொழிகொள்ளேன் அன்னையரே. அலையிளகிக் கொந்தளிக்கும் நீர்ச்சுழியைப் பிளந்தெழுந்து ஐந்து தலைசீற வால்சுழல எழுந்துவந்தான் காளியப்பெருநாகம். கருந்தழல் கொழுந்தாடல். எரிந்தாடும் செந்நாக்கு. சீறும் அனல்மூச்சு. ஏழு தலைமுறையின் அன்னையரெல்லாம் என்னுடலில் எழுந்துவரக்கண்டேன். ஆயிரம் கைகள் அடிவயிற்றில் அறைந்து அலறுவதைக் கேட்டேன். அக்கணம் அறிந்தேன் அன்னையாகி நிற்பதன் வதை என்ன என்று. விண்ணாளும் தெய்வங்கள் என் மீது ஏற்றிய சுமை என்ன என்று.

நீருள் புகுந்து நீந்தும் நீலக்கரங்களைக் கண்டேன். பின் அலைபிளந்து எழுந்து ஐந்து தலை மீது ஆடும் கால்களைக் கண்டேன். உலகேழும் சுமப்பவன் கொண்ட எடைபோல அவன் சிறுகால்கள் ஐந்துதலை அரவை அழுத்தி நீருள் செலுத்தக் கண்டேன். மண் உமிழ்ந்தது நீலவிஷம். நெருப்புமிழ்ந்தது செவ்விஷம். நீர் உமிழ்ந்தது பால்விஷம். காற்றுமிழ்ந்தது கருவிஷம். விண் உமிழ்ந்தது பொன்விஷம். ஐந்து நஞ்சும் அனல்காற்றென சீறிவந்து விழுந்த நீர் சினந்து கொதிப்பதைக் கண்டேன். நெருப்புண்ணும் நீரின் சீற்றத்தைக் கேட்டேன். அலையிளகி அலையிளகி கொந்தளிக்கும் ஆற்றின்மேல் விண்ணிலொரு செம்மேகமாக எரிதேவன் எழுந்துவரக்கண்டேன். அவன் தன் அனல் கைகள் வீசி அழுவதைக் கேட்டேன்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

அணைந்தது கருந்தழல். அலையடங்கி அமைந்தது கருநதி. அதிலாடி எழுந்தது என் கருநீலக் கண்ணன் கழல். நீந்திக் கரைசேரும் நீலமேக நிறத்தானை கூடி கூச்சலிட்டு ஓடிச்சென்று தழுவும் ஆயர்மைந்தரைக் கண்டு அங்கே அயலவள் போல் நின்றேன். கைகளும் கால்களும் என் கண்களும் குளிர்ந்து நின்றன. கருத்தும் கடந்து நின்ற கனலும் அணைந்து நின்றன. அன்னையரே, ஆய்ச்சியரே, என் ஆயிரம் தலைமுறை அன்னையரெல்லாம் அழலவிந்து அமைந்ததை உணர்ந்தேன். இங்குள்ள அனைத்தும் ஆற்றும் அங்குளப் பொருள் ஒன்றைக் கண்டேன். எங்குமுளது வந்து என் கையில் தவழ்ந்ததை அறிந்தேன். என்னவன் என்னுயிர் என்று மன்னுயிரெல்லாம் மயங்கும் வண்ணம் உணர்ந்தேன். அக்கணமே அவனிலிருந்து உதிர்ந்து எங்கோ சென்று நின்றேன்.

காளியனிலாடிய கரியவனைத் தூக்கி நடமிட்டு கொண்டுசென்றது கோபச்சிறுவர் குழாம். அவர்களை விட்டுப்பிரிந்து சென்று பூத்தமலர் மரமொன்றின் கீழே அமர்ந்துகொண்டேன். ஆழியும் வெண்சங்கும் கொண்டோன். ஊழிமுதலெழுந்து பாழிவரை நிறைந்தோன். அறிந்தறிந்து நிறைந்தாலும் அப்பால் எஞ்சும் அரும்பொருள். என்னுள் எரிந்தெரிந்து நின்றதெல்லாம் அவன் ஆடல். இனி இவ்வுடலில் எஞ்சுவதெல்லாம் ஒரு சிறு நினைப்பு. கருவுக்குள் புகுந்த அணுவுக்குள் வாழும் உயிர்த்துளி. பற்றியதெல்லாம் உதிர்த்து பாசமறுக்கும் ஒரு பெயர். ஒற்றைத்தனிப்பெயர்.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைவரலாற்றெழுத்தின் வரையறைகள் 1
அடுத்த கட்டுரைபுறப்பாடு பற்றி…