ஜெமோ..
தங்களின் ‘தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ் கட்டுரை’ படித்தேன். மிக மிக புதிய அதிர்ச்சிகள். உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன். ஒரிரு வினைல் போஸ்டர்கள் மூலமே ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டும் அந்த ‘டியுப் லைட்’ நற் செய்தி கூட்டங்களை பார்த்து மிகவும் ஆச்சரியப்படுவேன். அந்தக் கூட்டங்களின் பின்னால் உள்ள கட்டமைப்புகளையும்,நிதி ஏற்பாடுகளையும் நினைத்தால் பிரமிக்க வைக்கிறது. நம்பிக்கைகளின் பின்னால் வைக்கப்படும் வாதங்களை எதிர் கொள்ளவது ஒன்றும் பெரிய விசயமல்ல. ஆனால் இந்த மாதிரி வரலாற்றை திரித்து அமைக்கும் முயற்சிக்கு நம் எதிர்ப்பை காட்டி, அந்த சவாலை எதிர்கொள்ளவேண்டியதுதான் பெரிய விசயம். அது நம் கடமையும் கூட. அதை நீங்கள் சரியாக செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். ஆனால் இந்த மாதிரி புது ‘அலிபி’ களை உருவாக்கும் முயற்சியில் எல்லா மதங்களுமே ஈடுபடுகிறது என்பது என் கருத்து. சமீபத்திய உதாரணம் ஒரு நம்பிக்கை சார்ந்த விசயத்தை ‘அலிபி’ யாக மாற்ற ஒரு மத நம்பிக்கை முயற்சித்ததன் விளைவு, ஒரு நாட்டின் உச்ச நீதி மன்றத்தை ‘மாற்று பாதையை ஏன் யோசிக்கக் கூடாது?’ எனக் கேட்க வைத்துள்ளது.
மனோகர்.
அன்புள்ள மனோகர்,
உங்கள் கருத்துக்களுடன் நான் முழுமையாகவே முரண்படுகிறேன்.மதம் என்ற நிறுவனத்துடன் எனக்கு உறவு ஏதும் இல்லையென்றாலும் அந்த அமைப்பு பெரும்பாலானவர்களுக்கு தேவையாக இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஒரு வழிபாட்டமைப்பாக, பண்பாட்டுத்தொகுப்பாக மதம் ஒரு சாராரின் இடையே இருப்பது இயல்பானது.
ஆனால் எப்போது மதம் அல்லது மொழி அல்லது ஏதாவது பண்பாட்டுக்கூறு அரசியல் ரீதியாக மக்க¨ள் இணைக்க கையாளப்படுகிறதோ அப்போதே அது ·பாசிச அமைப்பாக ஆகிவிடுகிறது. ஏனென்றால் அதன்பின் அதில் தர்க்கபுத்தி, மாறுபட்ட தரப்பு எதற்குமே இடமில்லை. முழுமையாக ஏற்றுக்கொள் இல்லையேல் நீ துரோகி என்பதே அதன் கோஷமாக இருக்கிறது. பாரதீய ஜனதாக் கட்சியின் அரசியல் எப்போதுமே இந்த தளத்தில்தான் இருந்து வந்திருக்கிறது, வருகிறது.
இந்நாட்டில் அவர்களின் வெறிக்குரல்கள் உருவாக்கும் பண்பாட்டு அழிவுகள் பிரம்மாண்டமானவை. இந்தியா ஒரு ‘ஹிந்து அடிப்படைவாத’ நாடாக ஆகுமென்றால் இது அழிவதே மேல் என்றே நான் எண்ணுவேன். நான் இதுஞானமரபின் விளைநிலம் என்று இந்த மண்ணை எண்ணுவதற்கான எந்த அம்சமும் அப்போது எஞ்சியிருக்காது.
பொதுவாக நான் அரசியல் விஷயங்களில் நேரடியாக விரிவாக ஏதும் சொல்லவேண்டாம் என்ற எண்ணம் கொண்டிருக்கிறேன். அது என் தளம் அல்ல என்றும், அந்தத் தளம் சார்ந்துபேச ஆரம்பித்தால் எழுத்தாளனின் நேரம் கவனம் முழுமையாகவே சிதறடிக்கப்படும் என்றும் தற்கலிகமான விவாதங்களில் அவன் அழிவான் என்றும் நினைக்கிறேன். என் கருத்தை ஒருமுறை பதிவு செய்துவிட்டு ஒதுங்கிவிடுவதே என் பாணி. நீண்டகால அடிபப்டையில் நான்செய்யவேண்டியவையெ அதிகம் உள்ளன.
ஆயினும் அவ்வப்போது என் தரப்பை சுருக்கமாகப் பதிவுசெய்யவேண்டியிருக்கிறது. இதையெல்லாம் பலமுறை எழுதியிருக்கிறேன். ஆயினும் இச்சந்தர்ப்பத்துக்காக மீண்டும். ராமஜன்மபூமி-பாப்ரிமஸ்ஜித் விவகாரம் தொடங்கி ,சேதுசமுத்திர திட்டம், இப்போது அமர்நாத் கோயில் திட்டம் முதலியவற்றில் இந்துத்துவ அமைப்புகள் காட்டி வரும் பொறுமையோ சகிப்புத்தன்மையோ இல்லாத உணர்ச்சிகர அரசியல் இந்தியாபோன்ற பன்முகப் பண்பாட்டுச் சமூகத்தில் பேரழிவை உருவாக்கக் கூடியது என்று நினைக்கிறேன்.
இந்தியமண்ணில் அனைத்தையும் ஒருங்கிணைக்கக் கூடியதும், ஆக்கப்பூர்வமான உரையாடல்களுக்கு எப்போதுமே திறந்திருக்கக் கூடியதுமான ஒரு அரசியலியக்கமே தேவை என்று நான் எண்ணுகிறேன். காந்திய இயக்கம் அப்படிப்பட்டதாக இருந்தது.
இன்றைய இந்துத்துவ அரசியல் அல்லது ‘இந்துமுல்லாத்தனம்’ ஒட்டுமொத்த இந்துஞானமரபையே நிராகரிக்கும் இடத்துக்கு நம் ‘சுதந்திரஜனநயக சிந்தனையாளர்’களில் பெரும்பாலானவர்களக் கொண்டுசென்றுசேர்க்கிறது என்பதே இதில் மிகமிக துரதிருஷ்டவசமானது. இந்துமரபு மீது மேலை ஊடகங்கள் உருவாக்கும் அனைத்து அவதூறுகளுக்கும் வலுவான ஆதாரமாக அமைகிறது இந்துத்துவ முச்சந்தி அரசியல். இங்குள்ள சிறுபான்மையினர் நடுவே ஐயங்களை உருவாக்கி அவர்களைத் தனிமைப்படுத்துகிறது. இந்தியப்பண்பாட்டின் உள்ளிருந்து வளரும் புற்றுநோய் என்றே இன்று வளர்க்கப்பட்டுவரும் ‘முச்சந்தி’ ‘வசைபாடல்’ இந்துத்துவ அரசியலை நான் மதிப்பிடுகிறேன்.
ஆனால் இந்துத்துவ அரசியலையும் இந்து ஞானமரபையும் ஒன்றாகக் காண்பவர்கள் ஒருபோதும் தோற்கடிக்க முடியாத மகத்தான ஆயுதம் ஒன்றை இந்துத்துவர்களுக்கு தாங்களே தூக்கி வழங்குகிறார்கள். இந்துஞானமரபு அதன் விரிவான மகத்தான தத்துவத் தேடல் காரணமாகவே நிலைத்திருக்கக் கூடியது. அதனுடைய பிரதிநிதிகளாக சர்வசாதாரணமான இந்துத்துவ தெருக்கூச்சல்காரர்களை நியமிப்பது நம்முடைய இடதுசாரிகள்தான்.
ஒருவன் கீதையை படித்தால், உபநிடதத்தைமேற்கோள் காட்டினால், திருவாசகத்தை சொன்னால், இந்து என்று சொல்லிக்கொண்டாலே அவனை இந்துத்துவ அரசியல்வாதி என்று கூச்சலிடும் நம் இடதுசாரிகள் இன்னொருவகை வெறியர்கள், கருத்துக்குருடர்கள்.அவர்கள் இந்துத்துவ அரசியலுடன் போர் புரியவில்லை, இந்துஞானபரபின் பல்லாயிரம் வருடத்து வரலாற்றுடன் அட்டைக்கத்தியை வைத்துக் கொண்டு போரிடுகிறார்கள். இந்திய மண்ணில் இருந்து கீதையையும் திருவாசகத்தையும் யார் துடைத்து விடமுடியும்? இங்குள்ள இடதுசாரிகள் இந்துத்துவ அரசியலுடன் போரிடுவதாக சொல்லிக்கொண்டு இந்துஞானமரபை இழிவுசெய்தும் திரித்துரைத்தும் செய்துகொண்டிருக்கும் கீழ்த்தரமான போரே இங்கே இந்துத்துவ அரசியல் செழிக்க வேர்நீராக அமைகிறது.
இன்னொன்று இந்தியாவெங்கும் கிளைக்கும் வெறிமிக்க பிரிவி¨னைப்போக்குகள். இந்திய நிலமெங்கும் மீளமீள அலைந்து திரிந்தவன் நான். இந்த மண் ஒரே பண்பாட்டுக்களம் என்பதை என் நேரடி அனுபவமாக உணர்ந்தவன். கண்முன் தெரியும் உண்மையாக அதைக் கண்டு கொண்டிருப்பவன். வரலாற்றுக்காலம் முதல் இன்றும் ஒவ்வொருநாளும் ஞானதாகிகளாக இம்மண்ணெங்கும் அலையும் விடுபட்ட மனிதர்களால் இது இணைக்கப்படுகிறது. பிச்சைக்காரர்கள், துறவிகள், பித்தர்கள், ஞானிகள். அவர்களாலேயே இந்த மண் இணைக்கப்பட்டிருந்தது, பட்டிருக்கிறது. அவர்களுக்கு காசி இல்லாமல் ராமேஸ்வரம் இல்லை. பத்ரிநாத் இல்லாமல் திருவண்னாமலை இல்லை. அவர்களில் ஒருவனாக என்னை உள்ளூர உணர்பவன் நான். இந்த நாடு அரசியலால் என்றும் இணைந்திருக்கவில்லை, ஆன்மீகத்தால் இணைந்திருக்கிறது. என் நெஞ்சில் உள்ளது அந்த இணைந்த இந்தியா என்ற ஆன்மீக பூமிதான்.
இந்த நாட்டை கீழ்த்தரமான சுயநல அரசியலுக்காகவும் ,கண்மூடித்தனமான வெறுப்பின் பொருட்டும், மேலைநாட்டு கோட்பாட்டு ஊடுருவல் காரணமாகவும் பிரித்து அழிக்க நினைக்கும் தரப்புகள் நாடெங்கும் இன்று பெருகியிருக்கின்றன. தங்களை முற்போக்கு என்றும் சுதந்திர சிந்தனையாளர் என்றும் எண்ணும் பெரும் கூட்டத்தினர் இந்தச் சிந்தனைகளை ஏற்பதே ‘நவீன மனப்பான்மை’ என்று நம்புகிறார்கள். நம்முடைய எந்த அறிவுஜீவி இதழை எடுத்துப்பார்த்தாலும் இந்த ஒற்றைக்குரலே ஒலித்துக் கொண்டிருக்கிறது. மாற்றுதரப்பை அவர்கள் வெளியிடுவதுகூட இல்லை. இந்தத் தரப்புகளின் ஆழமற்ற கூச்சல்கள் இங்கே இந்துத்துவ அரசியலுக்கு உரமாக அமைகின்றன. இவர்களின் பிரிவினை வாதத்தால் பதற்றமும் ஆதங்கமும் கொள்ளும் இந்திய மக்களில் பெரும்பான்மையினர் இந்துத்துவ அரசியலை இணைக்கும் சக்தியாக எண்ணத்தலைப்படுகின்றனர்.
இவ்வாறு இருதரப்பிலும் உரமூட்டப்பட்டு வெறுப்பரசியல் வளர்கிறது. அவ்வரசியலால் வளர்க்கப்பட்டு கிறித்துவ மதப்பரப்பு அரசியல், இஸ்லாமிய மதவெறி அரசியல் ஆகியவை வளர்கின்றன. இன்று நம் மண்ணில் கிறித்தவ மதமாற்ற திரிபுவாதத்தை எதிர்க்கவும் வெல்ல கருத்துச்செயல்பாடுகள் இல்லை. இந்துத்துவ கூக்குரல்கள் அதற்கு ஆக்கமும் ஊக்கமும்தான் அளிக்கும். ஒரு வெறுப்பரசியல் இன்னொரு வெறுப்பரசியலை அழிக்காது. வளர்க்கவே செய்யும்.
இன்று செய்யவேண்டியதென நான் எண்ணுவது இந்துஞானமரபு என்பது இந்துத்துவ அரசியலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை நிறுவுவதே. அது ஒற்றைப்படையானது அல்ல. மையம் கொண்டது அல்ல. அது மிகவிரிவான ஒரு விவாதக்களம். பல்லாயிரம் விதைகள் உறங்கும், விதைகள் ஓயாது முளைக்கும் வேர்நிலம். அது கட்டற்ற சுதந்திர சிந்தனைகளின் வெளி. முடிவிலாத மகத்தான தத்துவ தேடலின் ஒட்டுமொத்த இயக்கம். நம் இந்துத்துவ ஒற்றைப்படை அடையாள அரசியல் ஒருபோதும் புரிந்துகொள்ள் முடியாது. அதில் கிறித்துவம், இஸ்லாம், மார்க்ஸியம், நவீன அறிவியல் என எதையும் உள்ளே வைத்து விவாதிக்க முடியும். இந்த நிமிடம் வரை இந்துமரபு அடைந்த அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் உரிமையையும் எனக்கு அளிக்கிறது என்பதே இந்துமரபின் பெருமை.
இந்த பூமி இந்துஞானமரபு, பௌத்த ஞானமரபு, சமண ஞானமரபு ஆகியவற்றால்தான் ஒன்றாக்கப்பட்டுள்ளது. அம்மரபுகள் உருவாக்கிய பண்பாட்டு பாரம்பரியத்தின் நீட்சியே இன்றும் இங்கே நிலவுகிறது. அந்தப் பண்பாட்டு மரபுகள் உயிருடன் இருக்கும்போது மட்டுமே அதை நாம் ஒன்றாக நிலைநிறுத்த முடியும். சமரசம், உரையாடல், சுதந்திரம் மூலமே அது நிகழ முடியும். இந்த தெளிவே இன்று தேவைப்படுகிறது. பழங்காலம் முதல் நவீனகாலம் வரை இந்தியப் பேரிலக்கியங்கள் அனைத்தும் சொல்லும் உண்மை இதுவே. மீண்டும் மீண்டும் என் நூல்களில் நான் பேசுவது இதையே.
சொல்லும் ஒவ்வொரு சொல்லும் மாறுபட்டு ஒலிக்கும் பல்வேறு தரப்புகளால் ஓய்விலாது திரிக்கப்படும் இச்சூழலில் என் உள்ளத்தில் சத்தியம் என்னைப் புரியவைக்கும் என்ற நம்பிக்கையுடன், என் மகத்தான குருமரபு என்னுடன் இருக்கும் என்ற கனவுடன் மீண்டும் மீண்டும் நான் சொல்லவேண்டியதைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். உண்மை ஒருபோதும் அழிந்துவிடாது. ஆடிக்காற்றில் மலைபறந்துவிடுமா என்ன?
ஆம் அவ்வாறே ஆகுக.