நீலம் யோகம்

அன்புள்ள ஜெ ,

தாங்கள் யோகம் பற்றி கூறியவை நாவலை புரிந்து கொள்ள உதவுகிறது .

நீலம் 12 அத்தியாயத்தை படித்து முதலில் மிகவும் சீண்டப்பட்டேன் , படிக்க மிகவும் கடுமையாக உணர்ந்தேன் . ஒரு சில நிமிடங்கள் கண்ணீரே வந்து விட்டது . பல முறை ஒரு ஒரு சொல்லாக படித்து என் அளவில் புரிந்து கொண்டேன்.

நீலம் – 11 அவன் பாற்கடல் திரிந்தது போல விஷமாகி போன அன்னையின் அமுதத்தை உண்டு அவளுக்கு முக்தி அளிக்கிறான் .

நீலம் – 12 அவன் மூலாதாரத்தின் பெரும் புயலில் விளையாடி திளைக்கிறான் . அந்த வெண்மை மயில் பீலியை ஒன்றும் செய்ய முடியாதது . பிரேமை முன் பணியும் காமம் . அபாரம் .

நன்றி

அசோக் சாம்ராட்

அ ன்புள்ள அசோக்,

இலக்கியத்தை மட்டும் அல்ல வாசிப்பின் எந்தத் தளத்திலும் எப்போதும் நம் அதுவரையிலான வாசிப்பனுபவத்தை, நம் நுண்ணறிதலை அறைகூவும் ஒரு படைப்பைச் சந்திக்கவேண்டியிருக்கும். இத்தனை நாள் வாசித்து, எழுதியபின்னரும் நான் அத்தகைய நூல்களை தொடர்ந்து எதிர்கொண்டுகொண்டே இருக்கிறேன். வாழ்க்கை முழுக்க அது நிகழும்

அப்படி ஒரு நூலைச் சந்தித்து அதைக் கடக்க முடிந்தபின்னர் நாம் உணர்வோம், அதன் வழியாக நாம் முன்னகர்ந்திருப்பதை. நம் அறிவும் நுண்ணுணர்வும் அடுத்த கட்டத்துக்கு வந்திருப்பதை. ஆகவே ஒவ்வொரு முறையும் சற்றேனும் எதிர் அழுத்தத்தை அளிக்கும் நூலையே தேர்ந்தெடுக்கவேண்டும் என்று சுந்தர ராமசாமி வலியுறுத்திச் சொல்வதுண்டு.

அந்த அறைகூவலை அளிக்காமல் இயல்பான வாசிப்பை அளித்து சொகுசாக நம்மை ஒரு நூல் அழைத்துச்செல்கிறது என்றால் அது நம்மை நாமறிந்த பாதை வழியாக வேறு பாவனையில் அழைத்துச்செல்கிறது என்றே பொருள். ஒருவகையில் அவ்வாசிப்பு வீண்

வெண்முரசு ஒவ்வொரு நாவலும் அவ்வகையில் ஒவ்வொரு அறைகூவலையே முன்வைக்கின்றன. நீலம் அவற்றில் புதியவகையான ஒரு மாதிரி. இன்னொரு தளத்தை நோக்கித் திறக்கிறது, அவ்வளவுதான்.

*

தொடர்ந்து இரு தளங்களில் செயல்படுகிறது நீலம் என்று மட்டும் புரிந்துகொள்வோம். அதிதூய பிரேமை ஒரு ஓட்டம். அது ராதையின் கதை. இன்னொன்று அதற்கு எதிர்த்தரப்பாக உள்ள கதைசொல்லிகளின் கூற்று. அதில் கண்ணன் -கம்சன் கதை வருகிறது. அது உக்கிரமானதாகவும், சமயங்களில் குரூரமானதாகவும் உள்ளது.

அந்தக் கதை சொல்லிகளின் கதை பொதுவான உபாசனை மார்க்கங்களின் படிநிலைகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. ராதையின் கதை பிரேமையின் படிநிலைகளை உள்ளடக்கமாக கொண்டுள்ளது.

செழுங்குருதி பாலாழி சுழலாழி என அந்தப் பெயர்களே உபாசனையின் நிலைகளையே சுட்டுகின்றன. பெயர்அறிதல், பெயராதல், பெயரழிதல் பிரேமையின் படிநிலைகளை ராதையின் பகுதியில் காணலாம்.

*

சுருக்கமாக ராஸயோகம் என்ன சொல்கிறது?

பொதுவான உபாசனா முறைகள் மானுடன் மானுடனாக இருப்பதனாலேயே வந்தமைந்த எல்லைகளை முழுமையாகக் கடந்துசென்று முழுஞானத்தை அடைந்து விடுதலை பெறுவதைப்பற்றிப் பேசுகின்றன.

காம குரோத மோகங்களை வெல்வதற்காக அவை பல வழிகளை கண்டடைந்துள்ளன. அவற்றில் மூர்க்கமானவை அகோரம் போன்றவை. அச்சம் அருவருப்பு ஆசை போன்றவற்றை முற்றாகக் கடப்பதன் மூலம் முற்றறிவை அடைந்து பெறப்படும் விடுதலை குறித்து அவை பேசுகின்றன

மயானத்தில் துயின்றும் பெண்பிணத்தில் அமர்ந்தும் மலத்தை உண்டும் ஒருவன் தன் எல்லைகளை முற்றிலும் கடக்கலாம். எங்கும் எதனாலும் தடுக்க முடியாதவனாக ஆகலாம் . அது ஒருவழி

ஆனால் எந்த மனிதனாலும் அந்த திசையில் முழுமையை அடைய முடியாது. இறுதித்துளியாக ஒரு பிரேமை, ஒரு மென்மை எஞ்சியே தீரும். அது எஞ்சும் வரை முழுமை இல்லை. ஆகவே அவ்வழியில் விடுதலையும் இல்லை என்கிறது நீலமார்க்கம்.

கம்சன் கொள்ளும் விடுதலை அது. குழந்தையை கழுத்துவெட்டுபவனுக்கு அதன் பின் எல்லைகளே இல்லை. அவன் செய்யக்கூடாதது என ஏதுமில்லை. ஆனால் ஒரு நீலச்சிறுபறவை எஞ்சிவிடும்

ராதாசியாம மார்க்கம் அந்தப்பிரேமையையே யோகமாக ஆக்குகிறது. அதையே விரித்து விரித்து அதிலேயே முழுமையை அடையலாம் என்கிறது. காம குரோத மோகங்கள் அந்த பிரேமையின் மயிலிறகின் ஒரு இதழைக்கூட அசைக்கமுடியாது என்கிறது.

கண்ணனை எல்லாமாக அடைபவன் எதையும் எதிர்க்கவேண்டியதில்லை. எத்திசையிலும் எதிர்நிலை கொண்டு ஆற்றலை வீணாக்கவேண்டியதில்லை. ஆகவே அவன் முழுமையை எளிதில் சென்றடைகிறான் என்கிறது.

ஏற்பது உங்கள் விருப்பம். இது கனசியாம மார்க்கத்தின் வழிமுறை. நீலத்தின் உள்ளடக்கம்.

ஜெ

 

மறுபிரசுரம்- முதல்பிரசுரம் Sep 2, 2014 

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைசொல்லும் எழுத்தும்
அடுத்த கட்டுரைமௌன நகைச்சுவை