‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 14

பகுதி ஐந்து: 2. நறுவெண்ணை

மின்னற் கனவுகள் மின்னி மின்னி அணைந்துகொண்டிருந்த மேகக்கருவானை நோக்கியபடி ஆயர்குடியின் சாணிமெழுகிய திண்ணையில் அமர்ந்து மடிக்குழியில் இளையோனும் தோள்சாய்ந்து மூத்தோனும் அமர்ந்திருக்க ரோகிணி கதைசொன்னாள். அவள் முந்தானை முனையை விரலில் சுழற்றி வாய்க்குள் வைத்து கால்நீட்டி கண் பிரமித்து வான் நோக்கி அமர்ந்திருந்தான் கரியோன். குளிர்காற்றில் அவன் குஞ்சிமயிர் அசைய மெல்லுடல் புல்லரித்து புள்ளி கொள்ள கட்டைவிரல் சுழித்து கால்களை நெளித்துக்கொண்டான். தோள்வெம்மைக்கு ஒட்டிக்கொண்ட வெண்ணிறத்தான் அவள் கைகளுக்குள் கைநுழைத்து இறுக்கிக்கொண்டான்.

“முதற்பெரும்பொருளாக அமைந்தது முற்றிருளே என்பர் நூலறிந்தோர்” என்றாள் ரோகிணி. “அன்னையே, அது என்ன?” என்று பலராமன் கேட்டான். அகவிரைவெழுந்து திரும்பி எச்சில்நனைத்த சுட்டுவிரல் தூக்கி நீலவிரிவிழிகள் விரித்து ஈரமலர்ச்செவ்வுதடுகள் சுழித்து “அது அது அது” என்றான் கண்ணன். பிறகு திரும்பி வானைநோக்கிச் சுட்டி அவர்கள்மேல் எழுந்த கருமேகக்குவை நோக்கி “பசு!” என்றான். “அய்யோ, என் கண்ணே” என்று கூவி அவனை அள்ளி தன்னோடணைத்து இறுக்கி “ஆமாம், அது ஒரு பெரும்பசுவேதான். அய்யோ, இதற்குமேல் என்ன சொல்வேன்?” என்று சிரித்தாள் ரோகிணி. வெட்கி விழிதாழ்த்தி உடல்வளைத்தான் நீலமணி நிறத்தான்.

“பசுவா அன்னையே?” என்றான் பலராமன். “ஆம், அது ஒரு மிகப்பெரிய பசு. கன்னங்கரிய நிறமுடையது. அந்தப்பசுவுக்கு அன்னை இல்லை. அதுவாழ தொழுவும் இல்லை. அது நிற்க மண்ணோ அது உண்ண புல்லோ அது நீராட நதியோ ஏதும் இல்லை.” கண்ணன் கட்டை விரல்கள் விலகி நிற்க கைகளை விரித்து “இல்லை!” என்றான். துடிப்புடன் திரும்பி அவள் தாடையைத் தொட்டு திருப்பி “அம்மா அம்மா அம்மா” என்று திக்கி மீண்டும் கைவிரித்து “இல்லை!” என்றான். “ஆமாம் கண்ணே, ஒன்றுமே இல்லை. அந்தப்பசு மட்டுமே அங்கே நின்றிருந்தது” என்றாள் ரோகிணி.

“அன்னை இல்லையேல் அது எப்படிப்பிறந்தது?” என்று பலராமன் கனத்த தலையை சற்றே சாய்த்து கேட்டான். “இருளில் முதலில் அதன் கருவிழி ஒன்று மட்டும் ஒளிகொண்டு தோன்றியது. அந்தக்கருவிழித் துளியைச் சுற்றி அந்தக்கரியபசு உருவாகி வந்தது” என்றாள் ரோகிணி. “ஆம், நான் பார்த்தேன். இருளில் பசுவின் கண்கள் மட்டும்தான் ஒளியுடன் தெரியும்” என்ற பலராமன் “அன்னையே, நம் கரியவன் நேற்றுமாலை உள்ளறை இருட்டுக்குள் சென்றபோது பார்த்தேன். இவனும் பசுவின் கண்கள் போல தெரிகிறான்” என்றான். “அதனால்தானே அவன் கண்ணன்” என்று அவனை வளைத்துக்கொண்டாள் ரோகிணி. அவன் தன் சிறுபண்டியில் இரு கைகளாலும் தட்டி “கண்ணன்!” என்றான். மேலும் சற்று சிந்தித்து ஆதுரத்துடன் “கண்ணன், பாவம்” என்றான்.

பலராமன் வாய்பொத்திச்சிரித்து தணிந்த குரலில் “அவன் நல்ல குழந்தை என்று அவனே சொல்லிக்கொள்கிறான்” என்றான். “என் செல்லம் நல்ல குழந்தைதானே?” என்றாள் ரோகிணி. “நல்லகுழந்தை எங்காவது கோதுமை மாவில் சிறுநீர் கழிக்குமா?” பலராமன் கோபத்துடன் கேட்டான். “அவன் தெரியாமல் செய்திருப்பான்” என்று ரோகிணி சொல்ல “தெரிந்தேதான் செய்கிறான் அன்னையே. கையால் பிடித்து நீட்டி சிறுநீர் பெய்தபின் என்னைப்பார்த்து சிரித்தான். இளையஅன்னை ஓடிவந்தபோது என்னை சுட்டிக்காட்டி அண்ணா அண்ணா என்று சொல்லி நான் அதைச்செய்தேன் என்று சொல்கிறான்.”

ரோகிணி குனிந்து கண்ணனை நோக்கி “அப்படியா சொன்னாய் திருடா?” என்றாள். அவன் தன் வயிற்றைத் தொட்டு நோயுற்றவன் போல நொய்ந்த முகம் காட்டி “கண்ணன் பாவம்!” என்றான். அவள் சிரித்து அவன் தலையைப்பிடித்து ஆட்டி “பேசுவதெல்லாம் புரிகிறது. கண்ணைப்பார்த்தாலே தெரிகிறதே கள்ளமெல்லாம்” என்றாள். பலராமன் அவள் தோளைப்பற்றி அசைத்து “அந்தப்பசு என்ன செய்தது?” என்றான். “அந்தப்பசு அங்கேயே நின்றிருந்தது. அதை யாருமே பார்க்கவில்லை. ஆகவே அதற்கு நிறமே இல்லை. அதனால்தான் அது கருமையாக இருந்தது. அதன் குரலை யாருமே கேட்கவில்லை. ஆகவே அது ஊமையாக இருந்தது.”

கண்ணன் அவள் கன்னங்களை எச்சில் சிறுகையால் பற்றித்திருப்பி “பசு பசு பசு பாவம்” என்றான். பலராமன் “பிறகு?” என்றான். “தான் மட்டும் தனித்திருந்து அந்தப்பசுவுக்கு சலித்தது. ஆகவே அது தன்னைப்போல ஒரு குட்டியைப்போட்டது. கன்னங்கரிய கன்று. கண்கள் ஒளிவிடும் காளைக்குழவி.” பலராமன் நகைத்து “அந்தக் கன்று என்ன செய்தது?” என்றான். “அது அந்தப்பசுவை அம்மா என்றழைத்தது. ஆகவே அந்தப்பெரும்பசு அம்மாவாக மாறியது. குட்டி அம்மா அம்மா என்று கூப்பிட அன்னை அதை கண்கனிந்து நா நீட்டி நக்கியது.”

கண்ணன் சுட்டுவிரலைத் தூக்கி தீவிரம் நிறைந்த முகத்துடன் “அம்மா!” என்றபின் திரும்பி வீட்டுக்குள் பார்த்து உடலில் கூடிய துடிப்புடன் பாய்ந்து எழுந்து ஓடப்போனான். “எங்கே போகிறாய்? ஒரு கணம் அமராதே. என்னவோ இவனே ஈரேழுலகும் இயற்றி இயக்குவதுபோல ஒரு நினைப்பு… அமர்கிறாயா இல்லையா? அசையக்கூடாது” என்று அவன் புட்டத்தில் அடித்து திருப்பி இழுத்து அமரச்செய்தாள் ரோகிணி. “அம்மா என்றதுமே தின்பதற்கு நினைவு வந்து எழுந்து போகிறான்” என்றான் பலராமன். உடனே குரல் தாழ்த்தி “அம்மா, எனக்கு அப்பம்?” என்றான். “கதைதானே கேட்கிறாய்? நடுவே எதற்கு நாநீளம்? நீ முதலில் ஒழுங்காக இரு” என்றாள் ரோகிணி.

“அந்த அன்னைப்பசுவின் நாக்கு ஒளிமிக்கது. அதைத்தான் நாம் மின்னல்களாகப் பார்க்கிறோம். சிறுகுட்டியை அது நக்கி நக்கி ஒளிவிடச்செய்கிறது” என்றாள் ரோகிணி. “அந்தக்குட்டி அன்னையின் கால்நடுவே சென்று அகிடைத் தேடிக்கண்டடைந்து வாயால் கவ்வி முட்டிமுட்டி பால் குடித்தது.” பலராமன் ஊறிய வாயை விழுங்கி “இனிய பாலா?” என்றான். “சீ, ஆயர்குடிபிறந்தாய், வெண்ணைக்கட்டி போலிருக்கிறாய், உனக்கென்ன பாலே சலிக்காதா?” என்று அவனை மெல்ல அடித்தாள் ரோகிணி.

அன்னை தமையனை அடிப்பதைக் கண்டதும் கன்ணன் தன் வயிற்றைத் தொட்டு “கண்ணன் பாவம்” என்றபின் விழிசரித்து ஆழ்ந்து சிந்தித்து எடைகொண்ட எண்ணங்களை முழுவிசையாலும் முன்னகரச்செய்து அவ்வெதிர்விசையில் உடல் சற்று கோணலாக உறைந்து இருகணங்கள் கழித்து மீண்டு “கண்ணன், பால், சீச்சீ” என்றான். பிறகு எழுந்து வயிற்றைத் தொட்டு “கண்ணன் பாவம்” என்றான் “அய்யோ, நீயேதான் சொல்லிக்கொள்ள வேண்டும்… ஆயர்பாடியில் உன்னைப்பற்றி ஒரு நல்ல வார்த்தை காதில் விழவில்லை” என்றாள் ரோகிணி. “நீ விளையாடியதைச் சரிசெய்வதே ஆயர்களின் அன்றாட வாழ்க்கையாகிவிட்டது.”

“அன்னையே, அந்தப்பால் எங்கே?” என்றான் பலராமன். “அந்தப்பால் மிகமிக வெண்மையானது. கரிய கன்றின் வாயிலிருந்து வழிந்து அது வானம் முழுக்க நிறைந்தது. நாம் கீழே இருந்து பார்க்கும்போது வெண்ணிறமான வெயிலாக அது தெரிகிறது. இரவில் அது நிலவொளியாக வழிகிறது” என்றாள் ரோகிணி. “முன்பொருகாலத்தில் ஆயர்குலத்து அன்னை ஒருத்தி அந்தப் பாலை அதிகாலையில் ஒரு கலத்தில் அள்ளிவிட்டாள். அந்தக்கலம் நிலவுருளை போல ஒளிவிட்டது. அதை கைதொட்டு எடுத்த அவள் உடலும் ஒளிவிட்டது. அவள் சென்ற வழியும் அவள் உடல்தீண்டிய புற்களும் இலைகளும் எல்லாம் ஒளியாயின. அவள் உடல் ஒளியால் வெம்மைகொண்டது.”

பலராமன் “உம்” என்றான். கண்ணன் இருகைகளாலும் முந்தானைச்சுருளை வாய்க்குள் செலுத்திக்கொண்டான். அது ஊறி அவன் மார்பில் எச்சில் வழிந்தது. “தன் இல்லத்து உள்ளறைக்குள் கொண்டுவைத்து அந்தப்பாலை அவள் தயிராக்கினாள். வெம்மை இழந்து உறைந்த தயிரை அவள் மத்தெடுத்துக் கடைந்தாள். அவள் வழித்தெடுத்த வெண்ணை வெண்ணிறவைரம் போலிருந்தது. வெண்பனிபோலக் குளிர் கொண்டிருந்தது.” மிகத்தாழ்ந்த குரலில் “அது இனிக்குமா அன்னையே?” என்றான் பலராமன். “அறைவேன் உன்னை. வேறு நினைப்பே இல்லையா?” என்றாள் ரோகிணி. கண்ணன் “உம்” என்றான்.

“அய்யோ என் கருமுத்தே, கதைகேட்கிறாயா நீயும்?” என்று அவனைக் குனிந்து முத்தமிட்டு ரோகிணி சொன்னாள் ”அந்த வெண்ணை அவள் உறியிலேயே இருந்தது. அவள் அதை அஞ்சினாள். ஆகவே எவரிடமும் அதைச் சொல்லவுமில்லை. ஒருமுறையேனும் அதைத் திறந்து அவள் நோக்கவுமில்லை. அது அங்கிருப்பதை மட்டும் அறிந்திருந்தாள். அதை மட்டும் நினைப்பாகக் கொண்டிருந்தாள்.” “அதை பூனை தின்றுவிட்டதா?” என்று பலராமன் கேட்டான். “பூனையால் அதைத் தொடமுடியுமா? அது வெண்வைரம் அல்லவா?” என்றாள் ரோகிணி. “உறிக்குள் உறைந்திருந்த அது வெளியே நிகழும் அனைத்தையும் அறிந்திருந்தது. சிறுவெயிலிலும் தனக்குள் உருகியது. குளிரில் உறைந்து கல்லாகியது.”

“பிறகு?” என்று பலராமன் அவள் கைகளைப் பிடித்தான். “ஒருநாள் அவர்களின் ஆயர்பாடியில் வெயில் ஏறி ஏறிச் சென்றது. நாய்களெல்லாம் நாக்குகளை நீட்டின. பசுக்களெல்லாம் தலைதாழ்த்தி கண்ணீர் வடித்தன. வெயிலுக்கு அஞ்சி ஆயர்முதுமகள் தன் இல்லத்தில் தனித்திருந்தாள். அவள் அன்னைக்கரும்பசுவையும் அதன் காரான் குட்டியையும் நினைத்துக்கொண்டிருந்தாள். அவள் உறிக்குள் வெண்ணை உருகி நெகிழ்ந்தது. நெய்யாகி மணத்தது. மணம் அறிந்து வியந்து அவள் எழுந்து நோக்கியபோது இருளறைக்குள் தொங்கிய உறிப்பானைக்குள் அந்த நெய் செந்நெருப்பாக தழல்விட்டு எரிந்ததைக் கண்டாள்.”

“பிறகு?” என்றான் பலராமன். “அந்த நெருப்பில் எரிதேவன் எழுந்துவந்தான். அவளை கைப்பற்றி விண்ணகம் கொண்டுசென்றான். விண்ணில் ஒரு செம்மேகத்தீற்றலாக மாறி அவள் விரிந்துசென்றாள். வானாளும் கதிரவனைக் கண்டாள். பின்னர் கிழக்குமுதல் மேற்குவரை நிறைந்திருக்கும் ஆதித்யர்களின் முடிவிலியைக் கண்டாள். அவர்களை தன் ஆடையின் வைரங்களாக அணிந்து விரிந்து கிடக்கும் இருள்வடிவைக் கண்டு அதில் கலந்து மறைந்தாள்” என்றாள் ரோகிணி. “அவள் நம் மூதன்னை. அவள் பெயர் ராதை.”

“ராதை!” என்று சொல்லி கண்ணன் தன் தலையில் சூடிய மயிற்பீலியை தொட்டான். “ராதை!” என்று கண்களில் சிரிப்பின் ஒளியுடன் சொல்லி எழுந்து தலைக்குமேல் கை தூக்கி “ராதை!” என்றான். “பர்சானபுரியிலிருந்து வருபவள் பெயர் ராதை தானே?” என்றான் பலராமன். “மூதன்னை பெயர்தான் அவளுக்கும். அவளும் ஒருநாள் நம் மூதன்னையாவாள்” என்றாள் ரோகிணி. “ராதை!” என்று சொல்லி இருகைகளையும் விரித்து “ராதை! ராதை அங்கே…” என்று கண்ணன் சொன்னான். உடனே நினைத்துக்கொண்டவன் போல முற்றத்தில் பாய்ந்திறங்கி தவழ்ந்தோடத் தொடங்கினான்.

“பிடி பிடி அவனை… எங்கே செல்கிறான்? பர்சானபுரிக்கே ஓடிவிடுவான் போலிருக்கிறதே” என்றாள் ரோகிணி. பலராமன் ஓடிச்சென்று அவனைப் பற்றி இழுக்க அவன் தரையில் அமர்ந்து கால்களை புழுதியில் உதைத்து “ராதை! ராதை போவேன்… கண்ணன் ராதை போவேன்!” என்று கதறி அழத்தொடங்கினான். “இழுக்காதே” என்று சொல்லி ஓடிவந்த ரோகிணி அவனை அள்ளித்தூக்கி இடையமர்த்தி “ராதைதானே, இதோ வந்து விடுவாள்… இதோ வந்துவிட்டாளே. ராதை ஓடிவா… ஓடிவா” என்றாள். கால்களை உதறி “ராதை. ராதை… கண்னன் ராதை போ” என்று சொல்லி அவன் கண்ணீர் துளிகள் சிறுதொந்தியில் சொட்ட வாய்திறந்து அழுதான்.

அவனைத் தூக்கிக்கொண்டு உள்ளே வந்த ரோகிணி “யசோதை, இவனை வளர்க்கும் பொறுமை இருந்தால் கிஷ்கிந்தையை கட்டியாளலாம். கழுவிவிடுகிறேன். வெந்நீர் இருக்கிறதா?” என்றாள். “நான் கழுவுவதே இல்லை… இவன் அழுக்கை கழுவ யமுனை போதாது” என்றாள் சமைத்துக்கொண்டிருந்த யசோதை. நீர்க்கலம் அருகே சென்றதும் கண்ணன் கைநீட்டி தொங்கி “கண்ணன்… நீர்” என்று துள்ளத் தொடங்கினான். அவனை இறக்கி விட்டதும் செம்பை நோக்கி கை நீட்டி “நான். நான்” என்று துள்ளினான். அவள் செம்பை அளிக்க அதை இரு கைகளாலும் பற்றி நீரை அள்ளி தன் வயிற்றில் ஊற்றிக்கொண்டு “கண்ணன், நீர்” என்றான்.

“பானைநீரை முழுதாக விட்டபிறகுதான் வருவான்… நான் எத்தனைகுடம் நீர்தான் அள்ளிவருவேன்!” என்றாள் யசோதை. இருவரையும் குளிப்பாட்டி துடைத்து கொண்டுவந்து உள்ளறையில் விட்டு “மழைவரப்போகிறது பலராமா. நீயும் இளையோனும் இல்லத்துக்குள் விளையாடுங்கள்” என்றாள் ரோகிணி. “கண்ணன் பாவம்” என்றான் கண்ணன். அதைக்கேட்டபோதே ரோகிணிக்கு எங்கோ பிழையொன்று தெரிந்தது. அவள் சமையலறைக்குள் வந்து யசோதைக்கு உதவிசெய்யத் தொடங்கியபோதே பேரோசையுடன் ஏதேதோ நிலத்தில் விழுந்தன. அழுகையொலியும் கூச்சலும் எழுந்தது.

அவர்களிருவரும் ஓடிச்சென்று உள்ளறையை நோக்கி திகைத்து நின்றனர். வெண்ணைப்பானை அடுக்குகளுடன் உறி அறுந்து தரையில் விழுந்து உடைந்து பரவியிருந்தது. அதிலமர்ந்து அழுதுகொண்டிருந்த கண்ணன் அன்னையைக் கண்டதும் கைநீட்டி எழுந்து கால்வழுக்கி விழுந்து மீண்டும் எழுந்து மீண்டும் விழுந்து புரண்டு எழமுயன்று உருண்டு வழுக்கி கைகால்கள் நழுவி வெண்ணையில் நீச்சலிட்டான். யசோதை சிரித்து வாய்பொத்தி உடல் நடுங்க ரோகிணி முகத்தில் வெண்ணைத்திவலை வழிய நின்ற பலராமனிடம் “என்ன செய்தாய்? எப்படி நிகழ்ந்தது?” என்று கை ஓங்கிச்சென்றாள்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

“அவன்தான் வெண்ணை வெண்ணை என்று உறியருகே கொண்டு சென்றான். அவன் சுட்டிக்காட்டியதனால்தான் நான் தூக்கினேன்” என்று பலராமன் சுவரோடு சேர்ந்து நின்று நடுங்கிச் சொன்னான். “கால்திருந்தா குழந்தை அவன். அவனையா நீ ஏற்றிவிட்டாய்? மூடா” என்று அவனை அடித்தாள் ரோகிணி. “அக்கா, அவன் மேல் பிழையில்லை. இங்கு நிகழும் எல்லாபிழைக்கும் இவனே ஆதாரம். சாளரம் வழியாகவே ஏறிச்சென்றிருக்கிறான் ஒருமுறை” என்று சொல்லி கண்ணனை அள்ளிய யசோதை கால்வழுக்கி தானும் விழுந்தாள்.

“அய்யோ” என்று ரோகிணியும் நகைக்க பலராமன் வாய்பொத்தி நகைத்து சுவர்நோக்கி திரும்பிக்கொண்டான். அன்னை விழுந்ததை கண்ணன் திகைத்து நோக்க “அக்கா, முதலில் இந்தக் கரியோனை தூக்குங்கள். நான் சுவர் பற்றி எழுகிறேன்” என்றாள் யசோதை. “அவன் வெண்ணைச்சகதியில் என்னையும் இழுத்துவிடுவான் போலிருக்கிறதே” என்றபடி சுவர் பற்றிச்சென்று கரிய கையைப்பிடித்து இழுத்தாள் ரோகிணி. “பற்றப்பற்ற வழுக்கிச்செல்கிறான். இவனைப் பற்றி நிறுத்தும் கை எங்கும் இல்லையடி” என்றாள். யசோதை எழுந்து அவனைத் தூக்கி எடுக்க கையிலிருந்து வழுக்கி உருவி நிலத்தில் விழுந்து எழமுயன்று மீண்டும் சறுக்கி மீண்டும் எழுந்து மீண்டும் சறுக்கினான்.

“இளையோனை அப்படியே இழுத்துச்செல்லலாம், எளிது” என்று சுவர் அருகே நின்று பலராமன் ஆலோசனை சொன்னான். “சீ, வாய் மூடு, உன்னால்தான் எல்லாம். இத்தனை வெண்ணையை எவர் வந்து துடைப்பது? நினைக்கவே இடுப்பு வலிக்கிறது” என்றாள் ரோகிணி. “நாயை கூட்டிவந்தால் நக்காதா?” என்று பலராமன் கேட்டான். யசோதை நகைத்து “ஆகா, செய்வதையும் செய்துவிட்டு அதை சரிசெய்யவும் சிந்திக்கும் பிள்ளைகள் எங்குள்ளனர்?” என்றபடி கண்ணனை தன் முந்தானைத் துணியில் சுற்றி பிடித்து கொண்டுசென்றாள். கால்களை உதறி “ண்ணை ண்ணை” என்று கதறிக்கொண்டே அவன் சென்றான்.

முற்றத்து மண்ணை அள்ளிக்கொண்டு வந்து வெண்ணைமேல் கொட்டி விரித்து உடைந்தகலங்களுடன் அதை அள்ளி கூடையில் எடுத்துக்கொண்டாள் ரோகிணி. “அன்னையே, கூடையை நான் எடுத்துவரவா?” என்றான் பலராமன். “என் கையருகே வந்தால் உன் கன்னத்தை கிழித்துவிடுவேன். சென்று குளித்துவிட்டு வா” என்று சீறி அவள் கூடையைத் தூக்கினாள். “அவன்தான் அன்னையே என்னை வெண்ணை நோக்கி கூட்டிச்சென்றான். தூக்கிவிட்டால் எடுத்துத் தருவதாகச் சொன்னான். அன்னை அறியாமல் தின்றுவிடலாம், அதில் பிழையே இல்லை என்றான்.”

சினந்து திரும்பிய ரோகிணி “யார், மொழிமுளைக்காத சிறியவனா? அவனா உன்னிடம் சொன்னான்?” என்றாள். பலராமன் குழம்பி பின்னடைந்து “அவன்தான் சொன்னான்… உண்மை அன்னையே, அவனே சொன்னான்” என்றான். ரோகிணி சினத்தை அடக்கி “எப்படிச் சொன்னான்?” என்றாள். “வாயால் சொல்லவில்லை.” ரோகிணி கண்களைச் சுருக்கி “பிறகு எப்படிச் சொன்னான்?” என்றாள். பலராமன் மேலும் குழம்பி தலைகுனிந்து “சொன்னான்” என்றான். “நீ பொய்யுரைத்து மீள நினைக்கிறாய்” என்றாள் ரோகிணி. “இல்லை அன்னையே, அவனால் என்னிடம் பேசமுடிகிறது” என்று சொன்ன பலராமன் சட்டென்று கண்களில் கண்ணீருடன் தொண்டை அடைக்க “அவன் பேசுகிறான்” என்றான்.

ரோகிணி அவன் தலையைத் தொட்டு “சரி, அவன் உன் இளையோன். உன் உதிரம். அவன் பேசுவதை நீ கேட்கலாம்… அதிலென்ன?” என்றபின் வெளியே சென்றாள். அவள் வெண்ணையை அள்ளி முடிக்கவும் கால்கள் துள்ளும் கண்ணனை துணியால் சுற்றி தூக்கிக்கொண்டு வந்தாள் யசோதை. “இதை விட கன்றுக்குட்டிக்கு மூக்குக் கயிறு போடுவது எளிது… மூன்று கலங்கள் உடைந்துவிட்டன. இனி இந்த இல்லத்தில் கல்லால் ஆன கலங்கள்தான் வேண்டும்” என்றாள். “கல்லால் ஆன தொட்டிகள்தானே உள்ளன?” என்று பலராமன் ஐயம் கேட்டான். அதேகணம் அவள் கையில் இருந்து வழுக்கி உருவி கண்ணன் கீழே விழுந்தான்.

“மாவிட்டு கழுவிவிட்டிருக்கவேண்டும் நீ” என்றாள் ரோகிணி. “அத்தனை குளியல்பொடியையும் போட்டேன் அக்கா. போதாதென்று சமையலுக்கு வைத்திருந்த பருப்புப்பொடியையும் போட்டேன். எத்தனை வெண்ணையைத்தான் வழித்தெடுப்பது?” என்று சொன்ன யசோதை “அங்கேயே கிடக்கட்டும். தூக்கி வைத்து என்ன செய்ய?” என்று உள்ளே சென்றாள். கண்ணன் எழுந்து அமர்ந்து தன் குறியை பற்றி இழுத்து நீட்டி சிரித்து “ராதை!” என்றான். “அய்யே!” என்று பலராமன் வாயைப் பொத்தி நகைத்தான்.

ரோகிணி வந்து அவனை அள்ளி எடுத்து கைகளில் இறுக்கி “ராமா, இவனுக்கொரு ஆடை கொண்டுவா” என்றாள். அவன் முகத்தை தன் முகத்துடன் சேர்த்து “குழம்பிலிட்ட காய் போல மணக்கிறாயே. எதற்கு வெண்ணையை எடுத்தாய்? உனக்கு வெண்ணை வேண்டுமென்றால் அன்னை அளிக்கமாட்டேனா?” என்றாள். “உள்ளுருகும் வெண்ணையெல்லாம் எனக்கல்லவா?” என்றான் கண்ணன். அவள் திகைத்து அவனை நோக்கி “நீயா சொன்னாய்?” என்றாள். அவன் பேதை விழி மலர்ந்து எச்சில் குழாய் மார்பில் வழிய உதடுகளை வளைத்து வயிற்றைத் தொட்டு “கண்ணன், பாவம்” என்றான்.


வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைகமலும் ஜீயரும்
அடுத்த கட்டுரைகண்ணனை அறிதல்- பாலா