தாமஸ் கடிதங்கள் மீண்டும்

ஐயா வணக்கம்

நல்ல ஒரு பதிவு

தாங்கள் ஆறு-முக நாவலரின் நூல்கள் படித்திரூப்பீர் என்று நம்புகிறேன். அந் நூல்களில் கிருத்துவ மிஷினரிகளை அவர் எவ்வாறு எதிர் கொண்டார் என்பது புரியும்.

அண்னாரின் நூல் ஒன்றினில் அவரி சைவ சமயத்தை சாடிய கிருத்துவ பாதிரியார்களை நோக்கி கேட்கும் கேள்விகளும் அவரின் சைவ கருத்துகளின் ஸமாதானமும் மிகவும் அருமையானவை ஆழ்ந்த கருத்துகள் உடையவை.

இதன் மூலம் சுமார்  80-100 வருடங்களுக்கு முன் கிருத்துவ பாதிரியர்களின் பொய் பிரசாரங்கள் எவ்வாறு எதிர் கொள்ளபட்டது என்பது தெரிய வருகிறது்.

அன்புடன்
வேங்கடராகவன்

**

அன்புள்ள ஜெயமோகன்,

தமிழகத்தை ஒரு மிகப்பெரிய கிறிஸ்தவ மதமாற்றக் களமாக்கி, மேய்ப்பரின் சாம்ரஜ்யத்தில் ஒரு அடிமை ஆடாக மாற்ற வேண்டும் என்ற நீண்டகாலத் திட்டத்துடன்  கிறிஸ்தவ மிஷநரி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அந்த மாபெரும் திட்டத்தின் முக்கியமான ஒரு கண்ணியைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. 

இந்தத் தகவல்களை முதன்முறையாக படிக்கும் தமிழர்கள் கண்டிப்பாக பெரும் அதிர்ச்சிக்கு ஆளாவார்கள் என்பதில் ஐயமில்லை.   தாங்கள் குறிப்பிட்டிருக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கையில், தமிழகத்தின் பெரும்பாலான  கிறிஸ்தவ அமைப்புகள் கடும் அடிப்படைவாதிகளாலும்,  மதமாற்ற வெறியர்களாலும் நிரம்பியுள்ளன  என்பது கண்கூடு.  இந்த மிகப் பெரிய கலாசார அழிப்பு, வரலாற்றுத்  திரிப்பு புரட்டு பற்றி அவற்றில் ஒரு அமைப்பு கூட எந்தவித விமர்சனத்தையும், என் முணுமுணுப்பையும் கூட தெரிவிக்காமல் இருப்பது மற்றும் இதற்கு ஆதரவும், பெருமலவில் பண உதவியும் செய்வது  மிகவும் கவலையளிக்கும் செய்தி..  தமிழகத்தின் ஜிகாதி தீவிரவாதக் குழுக்களில் கூட இப்படி ஒரு ஒருமித்த, ஒற்றைப் படைப் போக்கு காணக் கிடைப்பதில்லை.

ஆப்ரிக்காவில், தென் அமெரிக்காவில், வட அமெரிக்க பூர்வகுடிகளிடத்தில் கிறிஸ்தவ  மிஷநரிகள்  நிகழ்த்திய  கொடூரங்கள்,  ஆக்கிரமிப்புகள்  பற்றிய விவரணங்கள்  தமிழ்ச்சூழலில்  பரவலாக அறியப் படாதவை.  ஏன், ஆசிய நாடுகளின் காலனியாதிக்க ஆக்கிரமிப்பில்  மிஷநரிகளின்  பெரும்பங்கு  பற்றிக் கூட இங்கு விரிவான பதிவுகள் இல்லை. (சமீபத்தில் திண்ணை இதழில் அபூர்வமாக ஆசியாவின் காலனிய வரலாறும், கிறிஸ்தவ மிஷனரிகளும் என்று ஒரு விரிவான, குறிப்பிடத்தக்க  வரலாற்றுக் கட்டுரை வந்திருந்தது).  இங்கு ஊடகம் மிகப் பெரிய அளவில்  நிறுவன  கிறிஸ்தவத்தின்   கைகளிலோ அல்லது கட்டுப் பாட்டிலோ உள்ளது.  இந்தச் சூழலில்  தங்களது இந்தக் கட்டுரை மிகவும் முக்கியமானதாகிறது..

அறிவுஜீவிகள்  ஒரு குறிப்பிட்ட தளத்தில் சில தேர்ந்தெடுத்த விஷயங்களுக்கு மட்டுமே குரல் கொடுப்பதாக எண்ணிக் கொண்டு, மதமாற்றப் பிரசாரகர்கள் அதை வைத்து எப்படி தங்கள் அடுத்த கட்ட சதிவலையைப் பின்னுகிறார்கள் என்பது பற்றிக் கண்டுகொள்ளாமல் இருப்பது பற்றி நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.   துரதிர்ஷ்டவசமாக இது அனைத்துத் துறைகளிலும் நிகழ்கிறது – திருவாசக இசை ஆல்பத்தை  இசைஞானி இளையராஜா மூலம் வெளியிட்டு அதை ஒரு “கிறிஸ்தவ ஆன்மிக அனுபவமாக’ ப்ரொஜெக்ட் செய்ய எண்ணியிருந்த  அமைப்பின் உள்நோக்கத்தை ராஜா கண்டுகொண்டு அதைக் கடுமையாக  எதிர்த்த விஷயம் பின்னர் தெரியவந்தது.  கலாக்ஷேத்ரா போன்ற ஒரு பாரம்பரியம் மிக்க கலை நிறுவனத்தின் தலைவராக திட்டமிட்டு பொறுப்பேற்கும் கிறீஸ்தவர் லீலா சாம்சன், அங்கு தொடக்க காலம் தொட்டு இருந்துவரும்  நடராஜர் மற்றும் இந்து தெய்வங்களின் திருவுருவை தடாலடியாக நீக்குகிறார். நிறுவனத்தின் சின்னத்தை மாற்றுகிறார்..  கோவில்களிலேயே  பிறந்து வளர்ந்த  தெய்வீக நடனக் கலையான பரதநாட்டியத்தை ஒரு “இந்துமத நிகழ்ச்சியில்”  மாணவர்கள்  கலந்து கொண்டு  ஆடக்கூடாது என்று தடை விதிக்கிறார்.  தாண்டவம், லாஸ்யம், சிருங்காரம் என்பவை தரும் பாவத்தை (bhavam) விட சிலுவையில் செத்துப்போவதை நடனம் மூலம் விளக்குவது தான் பெரிய ரசானுபவம் என்கிறார்…  இதெல்லாம் எதற்காக?  “பரத நாட்டியம் ஒரு திராவிட, தோமா கிறிஸ்தவ நடனம்” என்று சில கலை வல்லுனர்கள் உலக அளவில் ஆய்வுரை வாசித்து அதில் சான்றாகக் காண்பிக்கத் தானோ?  தங்கள் கட்டுரையைப் படித்தபின் இத்தகைய சந்தேகங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.  

புனித தாமஸ் இந்தியா வரவில்லை என்று போப்பாண்டவரே கூறிவிட்டதாக தங்களுக்கு எழுதிய கடிதத்தில் சிறில் அலெக்ஸ் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அது பாதிக் கதை மட்டுமே.  போப்பின் கருத்துக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.  பின்னர் தான் நிகழ்த்திய அதிகாரபூர்வ உரையில்  ஒரு சொல்லை இடமாற்றி  “இந்த ஊகத்திற்கும் பொருந்துமாறு” தனது உரையை மாற்றி விட்டார்  போப்!  உண்மைக்கும்,  நேர்மைக்கும் இந்த மதநிறுவனங்களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு இதில் புலனாகிறது.  கண்டிப்பாக காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் இப்போது தாமஸ் அங்கு வருகை புரிந்த மகோன்னதத்தைப் பற்றிய சரித்திரங்கள் ஆரம்பித்திருக்கும்!  

“..அந்த கிறிஸ்து ஒரு மாபெரும் ஆன்ம ஞானி. எல்லா ஆன்ம ஞானிகளையும்போலவே தன்னை பலியாக்கி ஞானத்தை முன்வைத்தவர்” என்று நீங்கள் குறிப்பிடும் கிறிஸ்துவை  “ஒரே சத்திய வழி”யை உலகெங்கும் வெறிகொண்டு பரப்ப விரும்பும் எந்த *கிறிஸ்தவராலும்* உணரமுடியாது. கிறிஸ்து என்ற கருத்துருவாக்கத்தை ஒரு ஆக்கிரமிப்புக்கான சாதனமாகவே ஆக்கி விட்டிருப்பவர்கள் இவர்கள்  (Jesus Christ: An Artifice for Aggression  என்று சீதாராம் கோயல் இதுபற்றி  ஒரு நூலே எழுதியிருக்கிறார்).  மாறாக  “அன்பு  காண் மரியா மக்தலேனா ஆவி காணுதிர்  ஏசு கிறிஸ்து” என்று பாடிய பாரதி போன்று ஒரு இந்து மெய்ஞானப்  பார்வையினால் மட்டுமே கிறிஸ்துவை அந்த  நோக்கில் பார்க்க முடியும்.   அந்த கிறிஸ்து “உலகின் பாவங்களுக்காக” சிலுவையில் ரத்தம் சிந்தியிருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை,  அவரது சாவு அல்ல, வாழ்வின் செய்தியே போதும்…  (மறைந்த ராமகிருஷ்ண மடத் துறவி சுவாமி ரங்கநாதானந்தரின் இது பற்றிய அழகிய மேற்கோள்  புனித தோமையர் பற்றிய எனது பழைய பதிவு ஒன்றில், கடைசியில்).

அன்புடன்,

ஜடாயு

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு.. தங்களது தமிழர்களுக்கு சிந்திக்க சொல்லித்தந்த புனித தாமஸ் கட்டுரையைப் படித்தேன்.

 தேர்தலில் தோற்கும் ஒவ்வொருமுறையும் கருணாநிதி தமிழர்களை பார்த்து சொல்லும் ஒரு வசனம்.. “தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள்” என. இப்போதும் ஒட்டுமொத்த தமிழினமே அப்படித்தான்  இருக்கிறதோ எனத்தோன்றுகிறது.
 

கிறித்துவ மிஷனரிகளின் ஒரே குறிக்கோள் மதம் மாற்றம் மட்டுமே.  அதன் மூல எண்ணிக்கையைப் பெருக்கவேண்டும். அதற்காக என்னவும் செய்யத்தயங்க மாட்டார்கள். நீங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிடும் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பிக்கும்போது திருத்துபவனுக்கு அல்லது திறனாய்வு செய்பவனுக்குத் தெரியாதா இந்த கட்டுரை என்ன சொல்ல வருகிறது என??

பிராமண வெறுப்பின் உச்சத்தில் தமிழகம் முதலிலும் பின்னர் மாற்ற மாநிலங்களும் மிஷனரிகளின் பிடியில் வந்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டு ரத்தம் சிந்தும் நாளுக்காய் இவர்கள் காத்திருக்கிறார்கள். எத்தனையோ இடர்பாடுகளை சந்தித்த இந்துமதம் இதனையும் செரித்து ஏப்பம் விடும்.

மதச்சார்பின்மை என்றாலே இந்து மத வெறுப்பு மட்டுமே என இருக்கும் அரசியல் வாதிகளும், ஊடகவியலாளர்களும், எழுத்தாளர்களும் இருக்கும்போது நியாயத்தை எந்த மடாதிபதியும் சொல்லமுடியாத தெளிவுடன் சொல்லி இருக்கும் உங்களுக்கு தர்மம் உண்மை துணை இருக்கட்டும்.

உங்களை கிறித்தவ மிஷனரிகளின் கைக்கூலி என நினைத்துக்கொண்டிருக்கும் கூட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் நீங்கள் இந்துவாய்த்தான் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து அபாண்டங்கள் சொல்வதை நிறுத்தட்டும்.

அன்புடன்

ஜெயக்குமார் 

முந்தைய கட்டுரைகிறிஸ்து:ஒருகடிதம்
அடுத்த கட்டுரைஇந்துத்துவம்:ஒரு கேள்வி