பகுதி ஐந்து: 1. பீலிவிழி
ஆயர்சிறுகுடிகளின் அடுக்குக்கூரை புல்நுனிப் பிசிறுகள்தான் வான்மழையின் வருகையை முதலில் அறிந்துகொண்டன. இளங்காலை எழுகையிலேயே சிட்டுக்குருவியின் சிறகதிர்வென அவற்றை காற்று மீட்டும் சிற்றொலி எழுந்துகொண்டிருந்தது. சூழ்ந்த மலர்க்கிளைகள் சிந்தைகூரும் யானைச் செவிகளென அசைவற்றிருக்க இலைகளில் காதல் கொண்ட கன்னிவிழிகளின் ஒளியும் துடிப்பும் எழுந்தது. நனைந்த முரசுத்தோலாகியது காற்றுவெளி. அதில் ஈசல்கூட்டமென ஒட்டிச் சிறகடித்தன தொலைதூரத்து ஒலிகள். நீரில் கிளையறைந்து முறிந்துவிடும் பெருமரக்கூட்டங்கள் என செவியதிர எழுந்தன அண்மை ஒலிகள். ஊழ்கத்தில் இருந்தது மண். அதன் மேல் மெல்லத்திரண்டுகொண்டிருந்தது விண்.
வருகிறது மாமழை. வண்ணத் தொடிவளையீர், அவன் பெயர்சொல்லி சுழன்றடித்து வெறிகொண்டு ஆடவிருக்கின்றன மரக்கிளைகள். அவன் கால்நினைத்து விழிநிறைந்து சொட்டி அதிர்ந்து உதிர்ந்து பரவவிருக்கும் மலர்கள் விரிந்துவிட்டன. அவன் கையசைத்து அள்ளி களியாடும் குளிர்மணித்துளிகள் விண்ணடுக்குகளில் கனத்து கனத்து எழுகின்றன. அவன் படகோட்டி விளையாடும் செம்மண் சிற்றோடைகள் கருமேகத் தோள்களிலிருந்து மெல்லச் சரியத் தொடங்குகின்றன. அவன் சிறுகுஞ்சி முடிப்பிசிறில் ஒளித்துகள்களாகி அணிசெய்யும் மணித்துளிகள் எங்கோ புன்னகைக்கத் தொடங்கிவிட்டன.
உங்கள் இளமுலை இடுக்குகளில் வெம்மையெழுகிறது. வியர்வை குளிர்ந்து மென்வயிற்றின் சிறுதுளிச் சுழியை எட்டுகிறது. மேலாடை எடுத்து மெல்ல விசிறி செவ்விதழ் மலரை மொட்டாக்கி சலித்துக்கொள்கிறீர்கள். விழிதிருப்பி அசைவின்றி கனவில் நிற்கும் மரக்கூட்டங்களை நோக்கி என்ன இது என்கிறீர்கள். செவிநிலைத்து தலைதாழ்த்தி மூச்செறிந்து நின்றிருக்கும் பசுக்கூட்டம் நோக்கி ‘என்ன ஆயிற்று இவற்றுக்கு?’ என்கிறீர்கள். உங்கள் வியர்வை குளிர்ந்து உப்பாகிறது. மாயக்குழந்தை ஒன்று பின்னால் வந்து மெல்ல சிறுகைநீட்டி கழுத்தணைத்தது போல வருகிறது குளிர்காற்று.
அணிவளையீர், வந்தது கார்காலம். வானிலெழுந்தன கருமுகில் மழைக்கோட்டைகள். ஒளிகொண்டன அவற்றின் மணிமகுடப் பெருமுகடுகள். அங்கே எழுந்து பறக்கின்றன வெள்ளிக்கொடிகள். ரதங்களோடிய பெருவழிப்பாதைகளில் விழுந்து கிடந்தன விண்நடப்போர் பாதப் பொற்தடங்கள். குளிர் இறங்கி மண்ணில் பரவி கூழாங்கற்களை சிலிர்க்கச்செய்கிறது. வேதச்சொல்லெடுத்து நாதக்குரலெழுப்பி நிறைக்கின்றது தேரைப்பெருந்திரள். குஞ்சுகளை சிறகணைத்து கிளைகூடி கழுத்து குறுக்கி அவ்வேதம் கேட்டு விழிமூடுகின்றன பறவைகள். தண்ணென்ற நினைவொன்று கருக்க வைத்த நீர்ப்பரப்பை வருடிச் சிலிர்க்கவைக்கின்றன நீர்நடப்பூச்சிகள். துள்ளி எழுந்தமைந்தது யமுனையில் வெள்ளிமீனென ஒரு பெயர்.
மேகக்குவைகளில் வைரச்சவுக்கெனச் சுழன்று சுழன்றடங்கியது அப்பெயர். திசைகள் புரண்டமைந்து முழங்கிச்சென்றது அப்பெயர். உங்கள் சிறுமுலைக்காம்புகள் குளிர்கொண்டு விரைத்தெழ இளந்தோள் குறுக்கி “என்னடி இது?” என்று தோழியரை தோளணைத்து சொல்லிக்கொள்கிறீர்கள். கன்னியரே கோபியரே, உங்கள் அனைவரையும் அவன் கைவந்து தழுவிச்சென்றதை நீங்கள் அறியவில்லை. மாயக்கைகள் மீட்டும் மெல்லிய யாழ்களே நீங்கள் வாழ்த்தப்பட்டவர்கள். மாயச்சொல்லுக்கு நடமிடும் குளிர்தழல்களே நீங்கள் ஒளிவிடும் வரம்கொண்டவர்கள்.
கருக்கொண்ட நாகமென வளைந்து அசைவிழந்த காளிந்தியின் மேல் சிறுபடகில் துழாவி வந்தனர் மதுவனத்தில் இருந்து ஓர் அன்னையும் அவள் மைந்தனும். யமுனைக்கரையணைந்து ஆலமரத்து வேர்த்துறையில் படகணைத்து வெண்தாமரை மலர்போன்ற விழிவிரிந்த மைந்தனை எடுத்து மார்போடணைத்து கலைந்த குழல் நீவி ஆயர்பாடி நோக்கிச் சென்றாள் அன்னை. படைக்கலம் கையிலேந்தி மூவர் அவளுடன் சென்றனர். கோகுலம் விட்டு பர்சானபுரிக்குக் கிளம்பிய ராதை தன் படகைத் தொட்ட புன்னை மலர்க்கிளையை மெல்லப் பற்றி குனிந்து “யாரடி அது?” என்றாள். “மதுவனத்தின் ஆயர்குடித்தலைவர் சூரசேனரின் மைந்தர்களில் இளையவர் வசுதேவரின் முதல் மனைவி அவள். ரோகிணி என்று அவள் பெயர்” என்றாள் லலிதை. “அவள் கையிலிருப்பது அவள் மைந்தன் பலராமன்.”
ராதை “என் கரியவனின் வெண்நிழல் அல்லவா? அவனை கையில் எடுத்து தலையில் சூட விழைகிறேன்” என்றாள். “கண்ணனுக்கு உறவாகாத மைந்தனை நீ கண்டதுண்டா?” என்றாள் லலிதை. “கண்ணனன்றி இப்புவியில் குழவியேது?” என்று பல் ஒளிர புன்னகைத்தாள் ராதை. “ஒரு குவளையில் நிறைவதல்ல விண்பசுவின் பாற்கடல். ஓருடலில் அமைவதல்ல மண்ணெழுந்த விண்ணமுது.” கண்கள் சிவக்க கரைநோக்கி “எத்தனை அன்னையரடி ஒருவனுக்கு?” என்று சொல்லி பெருமூச்செறிந்தாள் விசாகை. “ஆம், எத்தனை முலையுண்பான்? எத்தனை கையறிவான்? எத்தனை மடிகளில் தவழ்வான்? வீணன், வெறும் சிறுக்கன். பித்தாகி பெண்கள் புலம்புவதற்கென்றே பிறந்தான்” என்றாள் சுசித்ரை.
“ஏடி, ஏனிந்த பொறாமை? இப்புவியில் பெண்ணென்று முலைகொண்டு விழிகனிந்து அவனை எண்ணுபவர்களெல்லாம் நானல்லவா? இவ்வோருடலில் இருந்து அவனை அறிந்து நிறைகிலேன். ஓராயிரம் அன்னையராகி மண்நிறைத்து அவனைச் சூழ்வேன். தலைமுறை தலைமுறையாக முலைநிறைத்து அகம்இனித்து அவனுக்காகப் பிறந்து வருவேன். அன்னையென்று ஆனதெல்லாம் கண்ணன் அள்ளியுண்ணும் கனியமுதேயல்லவா?” என்றாள் ராதை. “இதோ, கனியெழுந்த மரங்கள் அமுதுறையும் பெரும்பசுக்கள் நீர்பெருகும் காளிந்தி எல்லாமே அன்னைவடிவல்லவா? இவையனைத்திலும் இருப்பவள் நானல்லவா? இன்னும் இன்னும் என்றே என் கண்ணனுக்காக விரிகிறேன். கடலை அள்ளி உண்ண கைகோடி வேண்டுமடி பெண்ணே!” சிரித்து கைவளை ஒலிக்க அவள் தோளில் தட்டி “போடி பெரும்பிச்சி. உன்னை நிகர்க்க இப்புவியில் நீயே” என்றாள் சம்பகலதை.
கோகுலத்து நந்தனின் இல்லம் நோக்கி ரோகிணி செல்ல செய்தியறிந்து கைவிரித்து நகைத்தோடி வந்தாள் யசோதை. “என் சிறுகுடிலில் உங்கள் கால் தொட தவம் செய்தேன் அக்கா. இன்றுகாலை மகிழம்பூ மணம்அறிந்து கண்விழித்தேன். காகக்குரல் கேட்டு நாள் கொண்டேன். அப்போதே அறிந்தேன் என் இல்லம் இன்று மலருமென்று.” கைநீட்டி மைந்தனை வாங்கி “அய்யோ! என் கருவண்ணன் அன்று பாலுருளிக்குள் பாய்ந்து இப்படித்தான் எழுந்துவந்தான். ஒன்றென வந்து இயற்றியது போதாதென்றா இரண்டென எழுந்து வந்தாய், கள்வா?” என்று கூவி கண்கள் கனிய கட்டியணைத்து முத்தமிட்டாள். ”என் மைந்தனை எனக்குக் காட்டடி” என்று சொல்லி ரோகிணி ஆடை ஒலிக்க கால்களில்பட்டு கற்கள் தெறிக்க மூச்சிரைக்க ஓடி இல்லத்துக்குள் புகுந்தாள்.
பால்நிறப் புல்பாயில் விரித்த அரவுநிற மரவுரியில் ஒருகை தலைவைத்து மறுகை தொடை சேர்த்து சேவடி இணைத்து மணிமார்பில் ஒரு மலருதிர்ந்து கிடக்க மல்லாந்து விழிவளர்ந்தான் மைந்தன். வாயில் கைசேர்த்து நின்ற ரோகிணி “மாலே, மணிமார்பா, மலைநின்ற பேருருவே, அலைகடல்மேல் படுத்த அறிதுயிலா!” என்று தன் அகம்கூவப்பெற்றாள். சொல்லுருகி விழிதுளிக்க நின்றாள். பின்னால் வந்து நின்ற யசோதையின் காலடியோசை கேட்டு உடல் விதிர்த்து “என்னடி இது, பாம்பணையில் பள்ளிகொண்டிருப்பவன் போன்றே துயில்கிறான்? யாரிவன்? நம் கைதொட வந்த கடந்தோனே தானா?” என்றாள். கண்கள் பூத்துச் சிரித்து “நாம் ஏதறிவோம் அக்கா? விதையில் உறங்குவதை மண் அறியாதல்லவா?” என்றாள் யசோதை.
யசோதையின் கையில் இருந்து இறங்கிய பலராமன் கரியவனை கைசுட்டி “அம்மா, அது நானா?” என்றான். அன்னை நகைத்து குனிந்து அவன் கன்னம் தொட்டு “ஆம், அது நீயே” என்றாள். “இங்கெல்லாம் அது உறைகிறது என்பார் நூலோர்” என்றான் பலராமன். யசோதை வாய்பொத்தி நகைத்து “நூலறிந்த மெய்யெல்லாம் மைந்தர் நாவில் வந்து நிற்கின்றன” என்றாள். ராமன் ஓடிச்சென்று இளையோன் அருகே அமர்ந்து அவன் தோள் பற்றி உலுக்கி “கரியவனே, என்ன துயில்? எழுக!” என்றான். கண்மலர்ந்த கணமே வாய்மலர்ந்து நகைத்தான் சிறியவன். “அம்மா, நான் நகைக்கிறேன்” என்றான் பலராமன். “அது உன் இளையோன். உன் பெயருடன் என்றுமிருப்போன்” என்றாள் ரோகிணி.
துள்ளி எழுந்து பாயில் அமர்ந்து துயில்கையில் அன்னை தன் குடுமியில் கட்டிய மலர்மாலையை கையால் இழுத்து எடுத்து வீசி மீண்டும் வெண்மணிப்பற்கள் காட்டி கன்னக்குழி தெளிய நகைத்தான் கண்ணன். “என்னை நோக்கி நகைக்கிறான்!” என்று சொல்லி “அவனுக்கு என்னை எப்படித்தெரியும்?” என்றான் பலராமன். “உன் முகம் கொண்ட மூதாதையர் அவன் கனவில் வந்திருப்பார்கள்” என்றாள் ரோகிணி. கண்ணன் இரு கைகளையும் விரித்து “தா தா” என்று சிறுபுட்டம் துள்ள எம்பினான். “வா” என்று அவனை அள்ளி தோள் சேர்த்த பலராமன் “ஆ!” என்று அலறி விலகினான். சிரிக்கும் கண்ணனை நோக்கி கண்ணீருடன் “கடிக்கிறான்!” என்றான். அவன் வெண்தோளில் விழுந்திருந்த வடு நோக்கி சிரித்து “புலிக்குருளை பாதத் தடம்போலிருக்கிறதேடி” என்றாள் ரோகிணி.
“அய்யோ அக்கா, இவனுக்குப் பல்முளைத்த பின்பு ஆயர்குடியிதில் இவன் பற்தடம் படியாத தோளே இல்லை. அவன் கள்ளச்சிரிப்புடன் கண் ஒளிர்ந்தாலே தோள்பொத்தி விலகிவிடவேண்டும்” என்றாள் யசோதை. “இதோ பாருங்கள். உலக்கையை உரலடியை மரத்தட்டை முழக்கோலை. புலியாக புதல்வன் வரத் தவமிருந்தால் எலியாக வந்து வாய்த்திருக்கிறது” என்றாள் யசோதை. “இப்புவியையே கடித்துண்ண விழைகிறாயா? நீயென்ன ஊழிப்பெருநெருப்பா?” என்று குனிந்து கண்ணனின் கன்னத்தை தொட்டாள் ரோகிணி. “என்னடி, இவன் ஏதோ தன்னகத்தே கரந்தவன் போல விழிக்கிறான்? மறைவேதம் நான்கையும் மடித்து உள்ளே மறைத்துக் கொண்டிருக்கிறானோ?”
“ஓட்டைப் பானை போல் ஒழுகிக்கொண்டிருப்பான். நானென்ன செய்வேன்? இது என் வீடு மணக்கும் பன்னீர் என்று மனம்கொண்டேன்” என்று கண்ணனைத் தூக்க துளி சொட்டி கால் உதைத்து அவன் அன்னை இடையில் அமர்ந்துகொண்டு தலைவாழைக் குலைபோல தொங்கி கைநீட்டி மூத்தோனை நோக்கி “தா தா” என்றான். “என்ன கேட்கிறான் இளையோன்?” என்றான் பலராமன். “தா தா என்று கேட்கிறான்… நான் எதைக்கொடுப்பது?” ரோகிணி நகைத்தபடி “உன்னை முழுதாகக் கேட்கிறான். எதையும் எஞ்சவிடாது கொடு” என்றாள். “யாரைப்பார்த்தாலும் அவன் கைநீட்டி கேட்கிறான். எதைக்கொடுத்தாலும் வாயில் வைத்துக் கடித்து தூக்கி வீசிவிடுவான்” என்றாள் யசோதை.
குனிந்து அவன் முகத்தை நோக்கி “குமிண்சிரிப்பு எதற்காக? எதைக் கருக்கொண்டு இங்கு எழுந்தருளியிருக்கிறாய்?” என்றாள் ரோகிணி. கைநீட்டி தழலென எம்பி எம்பிச் சிரித்தான் கண்ணன். “தா தா” என்றான். “தாதனல்ல மூடா, அவன் உன் அண்ணன். உன்னைப்போல் கரியநிறம் கொண்ட கள்வனல்ல. வெண்மை ஒளிரும் வேந்தன்” என்றாள் யசோதை. “சொல், வாய்மலர்ந்து சொல் என் முத்தே. அண்ணன் அண்ணன்.” கண்களில் ஒளியுடன் நோக்கி நகைத்து “த்தா” என்றான் கண்ணன். “எதைக்கேட்கிறான் இளையோன்?” என்றான் பலராமன். “கடிக்க தோள் கேட்கிறான், வேறென்ன?” என்று யசோதை நகைத்தாள்.
“என் செல்வனை என்னிடம் கொடு” என்று வாங்கி கையில் வைத்து “நீலச்சிறுதழல் போலிருக்கிறான். நிலத்தமையாது வானுக்கு எழுகிறான். மண்தொட்டவன் விண்தொட விழைகிறான்” என்றாள் ரோகிணி. “இருங்கள் அக்கா, இவனுக்கு பால் காய்ச்சி எடுக்கிறேன்” என்றாள். “பாலெனும் சொல் கேட்டதுமே துள்ளுகிறானே. இவனுக்கு உன் மொழி தெரியுமா?” என்றாள் ரோகிணி. “அவனுக்குத்தெரியாமல் இங்கு எவரும் எதையும் பேசிவிடமுடியாதென்று சொல்கின்றன அவன் விழிகள். மொழிபடியா மழலை என்கின்றன நம் விழிகள்” என்றாள் யசோதை.
பலராமன் ரோகிணியின் ஆடையை இழுத்து “அன்னையே, இளையோன் ஏன் இனிக்கிறான்?” என்றாள். அவள் திகைத்து “நீ என்ன அவனை கடித்துப்பார்த்தாயா?” என்றாள். வெட்கி விழிதாழ்த்தி காலை ஆட்டி பலராமன் “அவன் மட்டும் என்னைக் கடிக்கவில்லையா?” என்றான். யசோதை நகைத்து “நானும்தான் என் அக்கார உருளையை அடிக்கடி கடித்துப்பார்ப்பதுண்டு” என்றாள். “ண்ணா” என்றான் கண்ணன். “அய்யோடி, இதென்ன அண்ணன் என்கிறான்?” என்று ரோகிணி கூவினாள். யசோதை திரும்பி “சொல்லிவிட்டானா? என் செல்லக்கரும்பே! சொல், அண்ணா” என்றாள்.
கண்களில் கதிரவன் தொட்ட நீர்த்துளி என ஒளி மின்ன “ண்ணா ண்ணா” என்று யசோதையை நோக்கித் தாவினான் கண்ணன். “மூடா, நான் உன் அம்மா. இதோ இது அண்ணா. சொல், அண்ணா” உவகையால் ரோகிணியின் இடையில் துள்ளி காலாட்டி கைவீசி “ண்ணா ண்ணா” என்றான். “சொல் கண்ணல்ல, இதோ உன் அண்ணன்… சொல், அண்ணா” வெட்கி ரோகிணியின் தோளில் முகம் புதைத்து “ண்ணா” என்றான். “அய்யே! அது உன் பெரியன்னை. அதோ, அது உன் அண்ணா” என்றாள் யசோதை. பலராமன் அருகே வந்து அவன் காலைப்பிடித்து ஆட்டி “அண்ணன்… நான் உன் அண்ணன்” என்றான். எச்சில் பளிங்குச்சரடாக வழியும் ஊற்றுச்செவ்விதழை மலரச்செய்து சிரித்து கைநீட்டி குனிந்து துள்ளினான்.
“நாம் கேட்டால் அழைக்கவே மாட்டான், பழிகாரன். ஆயர்மகளிரிடம் இவன் என்னை அம்மா என்றழைக்கிறான் என்று சொல்லி கண்ணீர் மல்கினேன் அக்கா. அன்று முழுக்க ஆயிரம் முறை மன்றாடினேன். ஒரு முறைகூட சொல்ல மறுத்துவிட்டான். எப்படித்தான் இவனறிகிறானோ அன்னையைப் பழிவாங்கும் வழிமுறைகள்” என்று யசோதை சொன்னாள். “இளையோனை என் கையில் கொடுங்கள் அன்னையே” என்றான் பலராமன். “நீ அவனை கீழே போட்டுவிடுவாய். இதோ தரையில் விடுகிறேன். நீ அவனுடன் விளையாடு” என்றுரைத்தாள் ரோகிணி.
தரையிலிறங்கிய கணமே தவழ்ந்து விரைந்து சுவர்மூலையை அடைந்து அமர்ந்து திரும்பி பலராமனை நோக்கி நகைத்து “த்தா தா” என்றான். அண்ணன் அருகே வர வெண்கலக் கிண்ணத்தில் கரண்டிபடும் ஒலியுடன் நகைப்பு ஒலிக்க தவழ்ந்தோடினான். அவன் ஓடிச்சென்று பற்றியதும் அப்படியே தரையில் படுத்து புரண்டு கைகால்களை ஆட்டி சிரித்தான். “சிரிக்கிறான் இளையோன்” என்றான் பலராமன். “அவன் என்னைக் கடித்தால் நானும் கடிப்பேன்.”
சூடான பசும்பாலை வெள்ளிக்கிண்ணத்தில் எடுத்து கண்ணனருகே சென்று “பால்! பால்!” என்றாள் யசோதை. கைகளை காலாக்கி விரைந்தோடி அருகணைந்து அன்னை ஆடைபற்றி எழமுயன்றான். “எழுவதற்கு இடையையா முதலில் தூக்குவாய்? மூடா, உனக்கென மண்நெறிகள் மாறும். வான் நெறிகளுமா வளையும்?” என்று சிரித்தாள் ரோகிணி. யசோதை அவனைத் தூக்கி கையில் கிண்ணத்தைக் கொடுத்து கீழே பற்றிக்கொண்டாள். ”தா தா” என்று திரும்பி அவள் கையால் பிடிக்கக்கூடாதென்று உதறினான். சிந்திய பால் சிறுபண்டி வழியே வழிய இரு கைகளாலும் பற்றி மேலே தூக்கி அருந்தினான். கிண்ணத்தை ஒரு கையால் பற்றி ஆட்டியபடி பால்வழியும் வாயில் மேலண்ண வெண்பற்கள் மின்ன நகைத்தான்.
“ஆயிரம் பிறவியில் அறிந்ததுபோல் நகைக்கும் ஒரு குழந்தையை நான் அறிந்ததே இல்லையடி. கடலுக்கில்லை கண்ணேறென்று நெஞ்சமைகிறேன். என்றாலும் எளியவள் அகம் கனிந்து உன் கன்னம் தொட்டு நெட்டிமுறிக்கிறேன். கண்ணொளியே உடலாக ஒளிகொண்ட கண்மணியே, உனக்குப் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு” என்று ரோகிணி கண் நனைந்தாள். கிண்ணத்தை ஓசையெழ தூக்கி வீசிய கண்ணன் கால்களை உதைத்து இறக்கிவிடக்கோரினான். சறுக்கி அவன் இறங்க யசோதையின் ஆடையும் அவனுடனே சென்றது. “ஒருகையால் முந்தானை பற்றாமல் ஒருநாளும் இறங்கியதில்லை…” என்று சொல்லி அதைப்பிடுங்கி மார்பிலிட்டாள். தரையில் தவழ்ந்தோடி கிண்ணத்தை எடுத்து தலைமேல் ஆட்டி சிரித்தான். “கண்சிரிக்கும். வாய் சிரிக்கும். மைந்தர் முகம் சிரிக்கும். கண்டதே இல்லையடி, உடலே ஒரு சிரிப்பாவதை” என்று ரோகிணி உரைத்தாள்.
“முன்னரே வருவீர்கள் என்று எண்ணினேன் அக்கா” என்றாள் யசோதை. “செய்திகேட்ட நாள் முதலே செய்த தவம் இன்றே விளைந்தது யசோதை. நாடெங்கும் அலைகின்றனர் மதுரையின் ஒற்றர்கள். மதுவனத்து காடெங்கும் அவர்கள் காலடிகளைக் காண்கிறோம்” ரோகிணி சொன்னாள். “இன்றுதான் மதுராபுரியிலிருந்து செய்திவந்தது. விருஷ்ணிகளும் போஜர்களும் யாதவப்பெருங்குலங்கள் அனைத்தும் கொடிபிணைத்து கங்கணம் அணிந்து கம்சனுக்கு எதிராக அணிதிரண்டுள்ளன. கம்சனின் படைகள் இனிமேல் மதுராபுரிக்கு வெளியே கால்வைக்கமுடியாது. கேட்டதுமே கிளம்பிவிட்டேன்…” என்றவள் திரும்பி கண்ணனை நோக்கி “கணவனை கண்டநாள் குறைவு. என் தாயுடன் இருந்த நாளும் சிலவே. ஆனால் என் கருமணியைக் காணாது காத்திருந்த நாட்களையே நான் என்றென்றுமாக இழந்திருக்கிறேன்” என்றாள்.
“ண்ணா நா” என்ற குரல்கேட்டு யசோதை திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தாள். கிண்ணத்தை வலக்கையில் எடுத்து பலராமனுக்கு நீட்டியபடி இடக்கையை ஊன்றி தவழ்ந்துசென்றான் கண்ணன். “அழைத்துவிட்டானே!” என்று ரோகிணி வியக்க “சொல்லாதீர்கள் அக்கா. இக்கணமே மொழிமாறவும் கூடும்” என்றாள் யசோதை. “ண்ணா, ண்ணா” என்று சொல்லி கால்மடித்து அமர்ந்திருந்த பலராமன் தோள்தொட்டு எழுந்தான் கண்ணன். எழுந்தமர்ந்து எழுந்தமர்ந்து “ண்ணா ண்ணா” என்று சிரித்தான். “இனி சிலநாட்கள் கோழிக்குஞ்சுக்கு குரல்வந்ததுபோல் இவ்வொரு சொல்லைத்தான் எங்கும் கேட்போம்” என்று சொல்லி யசோதை நகைத்தாள்.
தன் தலைசூடிய மயிற்பீலியை பிய்த்து கையில் வைத்து ஆட்டி “ராதை!” என்றான். அதை அண்ணனை நோக்கி வீச தலைக்குமேல் கைதூக்கினான். பின்பக்கம் எழுந்து பறந்து சென்று விழுந்தது நீலம். அதை தொடர்ந்தோடிச் சென்று அள்ளிக்கசக்கி எடுத்து வாயில் வைத்து எச்சில் வழியக் கடித்து அன்னையை நோக்கி விழிதூக்கி நகைத்து நீட்டி “ராதை!” என்றான். “யாரடி அது ராதை?” என்று ரோகிணி கேட்டாள். “இவன்மீது பித்துகொண்டவள். பர்சானபுரியின் பெண்களில் ஒருத்தி” யசோதை சொன்னாள். “அவள் மாயம் தெரிந்தவள் யசோதை. அவன்மீது தன் விழிகளை எப்போதும் விட்டுச்சென்றிருக்கிறாளே” என்றாள் ரோகிணி.
“என் விழிகளைச் சொல்லி வியக்கிறாள் அன்னை ரோகிணி” என்றாள் ராதை. “எங்கே? எப்படி அறிந்தாய்?” என்றாள் லலிதை. “பிச்சி அறியாத பேச்சுண்டோ? அவள் தன் விழிகளை அங்கே விட்டுவந்திருக்கிறாள்” என்றாள் சம்பகலதை. “ஆம், கண்ணனை நான் காணாத கணமொன்றுள்ளதோ?” என்று ராதை சிரித்தாள்.
அதோ அவனைக்குனிந்து நோக்கி ‘மூத்தோனைக் கடிக்கலாகாது கண்ணா’ என்கிறேன். சிரித்து ‘கடிக்கட்டும், அவன் தோள்களணியும் அணிகளடி அவை’ என்கிறேன். ‘பாலருந்திய கிண்ணத்தின் மேலா அமர்வாய்? கண்ணா, அடிவாங்குவாய். இறங்கு’ என்கிறேன். ‘அன்னம் கொடுக்கும் நாளேதடி?’ என்று நான் கேட்க ‘நாள் நோக்கிச் சொல்ல நிமித்திகரை நாடவேண்டும் அக்கா’ என்கிறேன்.
“விழிகளால் சூழ்ந்திருக்கிறேன். என் நெஞ்சத்தால் அவன் மேல் கவிந்திருக்கிறேன்” என்றாள் ராதை. “கண்ணனாகி என்னை கைகளில் வைத்திருக்கிறது காலம். என் பிரேமையாகி அவன் முன் சென்று நிற்கிறது ஞாலம்.” விழிவெறிக்க பித்தில் முகம் வெம்மை கொள்ள “கண்ணனை என் நெற்றிச்சுட்டியாக அணிந்துள்ளேன். என் புன்னகைமேல் ஆடும் புல்லாக்கு அவனே. பேசப்பேச பித்தெழுந்து என் விழிகளுடன் சேர்ந்து துள்ளும் காதணியும் அவனே. என் முலைசூடிய மணிமாலை. ஆலிலைப் பொன் அரைஞாண். என் கைவளைகள் மோதிரங்கள். அடி, என் காலணிந்த சிலம்பும் பாதமணிந்த புழுதியும் அவனேயல்லவா?” என்றாள்.
கன்னியரின் கருங்குழல் பின்னலென வண்ண மலர்சுமர்ந்து மூன்று ஒழுக்குகள் முந்திப்பிணைந்து கரிய ஒளிஎழுந்து காளிந்தி ஒழுகியது. கீழ்த்திசையில் எழுந்த கருமேகம் நதி எடுத்த நச்சுப் படம்போல நின்றது. “முகிலெழுந்து குளிர்கிறது. மாமழை மணக்கிறது” என்றாள் லலிதை. “அதோ, நீலமயிலொன்று தோகை விரித்தாடுகிறது” என்றாள் சம்பகலதை. “அதோ இன்னொரு மயில். அதோ” என்று கைசுட்டிக் கூவினர் கோபியர். நதிக்கரையில் மலைச்சரிவில் மரக்கிளைகளில் அலர்ந்தெழுந்தன ஆயிரமாயிரம் பீலிவிழிகள். வான்நோக்கி பிரமித்து நின்றன பித்தெழுந்த நீலப்பார்வைகள்.