விவேக் ஷன்பேக் சிறுகதை – 4

காரணபூதம்

 

மரிகாம்பா கோயிலுக்குச் செல்லும் சிறிய தெருவின் இருபக்கமும் வீடுகள் நெருக்கியடித்துக்கொண்டிருந்தன. பல வீடுகளுக்கு பொதுவான சுவர்கள்தான். வீடுகள் நடுவே சிவந்த தெரு பூமாலையின் பூக்கள் நடுவே வாழைநார் ஓடுவதுபோல சென்றது. இந்த அடர்ந்த வீட்டுவரிசையின் நடுவே ஒரு காலி மனை. அந்த காலியிடத்தை நோக்கியதுபோல் இருந்தது தாத்தாவின் வீடு.

விடுமுறை விடும்போதெல்லாம் தாத்தா வீட்டுக்கு போய்விடுவோம். ஒவ்வொரு முறை போகும்போதும் பிறந்தவீட்டுக்கு வந்து தங்குவதைப்பற்றி ஏதாவது சண்டையை இழுக்காமல் இருக்கமாட்டாள் அம்மா. அவளுடைய நான்கு சகோதரிகளில் யாராவது வந்திருந்தார்கள் என்றால்  அவர்கள் சேர்ந்து ஏற்கனவே நடந்த, அல்லது நடந்ததாக கற்பனைசெய்யபப்ட்ட, அல்லது நடக்கச் சாத்தியமாக இருந்த கடந்தகாலச் சம்பவம் ஒன்றை தோண்டி எடுத்து பாட்டியின் மனசை குத்துவதுபோல அதை முன்வைப்பார்கள். ஐந்து சகோதரிகளுக்கும் இந்த விஷயத்தில் அபாரமான செயல்திறமை இருந்தது.

மகள்களின் உரிமை, வரதட்சிணை, சொத்தில் பங்கு போன்றவை பேச்சில் அடிபடும். இந்த சர்ச்சைகளில் சட்டநுட்பங்களை நுட்பமாக கோர்க்கக்கூடிய திறமை கொண்ட என் அம்மாதான் எல்லாவற்றுக்கும் பின்னணிச் சக்தி என்று நான் ஊகித்தேன். உரிய முறையில் எதற்காவது அழைக்கப்படாமலிருத்தல், பரிசுப்பொருட்களில் விலை வித்தியாசம் இருத்தல், ஏதாவது உள்ளர்த்தம் தொனிக்கும் கருத்து, பாராட்டப்பட வேண்டிய ஒன்று உரியமுறையில் பாராட்டப்படாமலிருத்தல் இப்படி ஏதாவது ஒன்று ஒரு சண்டையைக் கொளுத்திப்போடும். எவ்வளவுநாள் அங்கே தங்குவோம் என்பது எங்களுக்கு அந்தச் சண்டை எந்த அளவுக்கு சத்தமாக இருக்கிறது என்பதை வைத்துத்தான் ஊகிக்கக் கூடியதாக இருக்கும்

தாத்தாவின் வீட்டுமுகப்பில் இருந்த காலிமனை நாலைந்துவீடுகள் கட்டுவதற்கு போதுமான அளவுக்குப் பெரியது. அதன் வலதுபக்கம் பண்டிதரின் வீடு. தாத்தாவீட்டு வராந்தாவில் நின்றால் காலிமனைக்கு எல்லை வகுத்த  அதன் உயரமான சுற்றுமதிலைப் பார்க்க முடியும். அந்த மதிலில் நான்கு பெரிய ஜன்னல்களும் அவற்றில் கீழே இழுத்து மூடும் கதவுகளும் உண்டு. கீழே உள்ள கதவுகள் எப்போதுமே மூடித்தான் இருக்கும். மேலே உள்ளவை கால்வாசி திறந்து உள்ளே என்ன நடக்கிறதென காண்பிக்காதமாதிரி தெரியும்.அந்த சன்னல்களின் கனமான கம்பிகள் துருப்பிடித்து நிறமாறியிருக்கும்.

சுவரின் மேல் பகுதியில் நேர்த்தியான மாபெரும் எழுத்துக்களில் ‘ஆஸ்துமாவுக்கு அரியமருந்து! டாக்டர் புரோகித்தின் மருந்து வேலைசெய்கிறது!!!” என்று எழுதப்பட்டிருக்கும். இந்த விளம்பரம் வைக்கப்பட்டபின் டாக்டர் புரோகித் அதிகநாள் உயிர்வாழவில்லை என்று பாட்டி சொன்னாள். அந்த சுவரையும் விளம்பரத்தையும் பற்றி பாட்டி அங்கிங்காகச் சொன்னவை கொஞ்சம் மர்மமாகத்தான் இருந்தன. புரோகித் இறந்து நெடுநாட்கள் ஆனபின்னாலும்கூட அந்த விளம்பரம் அங்கேயேதான் இருக்கிறது.  காலிமனையையும் புரோகித் வீட்டையும் அந்த விளம்பரம் இல்லாமல் எவரும் நினைத்தே பார்க்க முடியாது.

நாங்கள் எப்போதெல்லாம் பாட்டிவீட்டு வராந்தாவுக்கு வருகிறோமோ அப்போதெல்லாம் அந்த விளம்பரத்தை ஒருமுறை சத்தமாக வாசித்துப் பார்த்துவிடுவோம். பாட்டியின் ஏராளமான பேரக்குழந்தைகளில் ஏதேனும் ஒன்று எல்லாவருடமும் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்திருக்கும். அதனிடம் இந்த எழுத்துக்களை வாசி பார்க்கலாம் என்று சோதனை வைத்து பார்ப்போம். அவை எழுத்து எழுத்தாக சேர்த்து உருட்டி முழித்து வாசிக்க திணறும்போது என்னைப்போன்ற ‘கற்றுத்தேறிய’ பசங்கள் எங்களைப்பற்றி பெருமிதம் கொள்வோம். நாகேஷ்மாமா மட்டும் அந்தப்பிராந்தியத்தில் இல்லாமலிருக்க வேண்டும். சூபரிண்டெண்ட் , ·ப்ரீடம் ·பைட்டர் என்று எதையாவது சொல்லி ஸ்பெல்லிங் கேட்டு எங்கள் மானத்தை வாங்கிவிடுவார்

பண்டிதர் வீடு ரொம்ப பெரியது, அரண்மனை என்றே சொல்லலாம். வீட்டின் ஒருபகுதியை கடையாக ஆக்கியிருந்தார்கள். வீட்டின் வலதுபக்கம் அந்தக்கடையின் ஒருபகுதி தெரியும், இடதுபக்கம் பெரிய நுழைவுவாசல். வீட்டின் அஸ்திவாரம் ஒன்றரையாள் உயரமானது. வராந்தாவை அடைவதற்கே பத்துபடி ஏறவேண்டும். வராந்தாவின் தடிமனான தூண்கள் மீது  அமர்ந்திருக்கும் கனமான உத்தரச் சட்டங்கள் தெருவில் நின்றாலே தெரியும்.  மையக்கதவில் உள்ள பூவேலைச் செதுக்கல்கள் அந்த வீட்டின் பழங்காலப்பெருமையை காட்ட முயன்றன. கண்ணுக்குத்தெரியாத ஒரு கை இந்த புறக்கணிக்கப்பட்ட வீட்டின் மீது மெல்லிய திரை போல ஒரு அலட்சியத்தை பரவ விட்டிருந்தது.  ஆங்காங்கே அதன் பழம்பெருமை கிழிசல்கள் வழியாக வெளியே வந்தாலுண்டு. மங்களூர் ஓடுகள் வேய்ந்த கூரைமடிப்புகளில் புழுதி சேர்ந்திருக்கும். ஓடுகள் மீது படிந்த பாசி வெயிலில் காய்ந்து கருமையாக மாறி கூரை ஒரு பெரிய கரும்பாறை போல இருக்கும்

வராந்தாவின் நடுவே ஒரு ஒரு உயரமான திண்டு உண்டு, கடைக்கு வருபவர்கள் வீட்டுக்குள் செல்லும் வழியில் ஏறிவிடாமல் தடுப்பதற்காக என்று படும். கடையின் கதவு நிரைப்பலகைகளால் ஆனது. கடையை மூடியிருக்கும்போது எண்ணினால் சுண்ணாம்பால் எப்போதோ எழுதப்பட்டு அழிந்துபோன ஒன்றுமுதல் இருபத்தெட்டுவரையிலான எழுத்துக்களை கவனித்து வாசிக்க முடியும். மதுகரர் கடையைத் திறக்கும்போது நாங்கல் அடுத்து அவர் எடுக்கப்போகும் பலகையின் எண்ணைச் சொல்லி கூச்சல்போடுவோம்.

கடைக்குள் எண்ணைப்பிசுக்கு படிந்து தோல்மாதிரி வழவழப்பாக ஆன கறுப்பு மர அலமாராக்கள் இரு சுவர்களிலும் வரிசையாக இருக்கும். ஆனால் அவையெல்லாம் காலியாகத்தான் காணப்படும். கடைக்குள் எந்நேரமும் இருட்டுதான். அந்த இருட்டும் கடைச்சுவர்களின் கருமையும் சேர்ந்து உள்ளே முடிவில்லாது சென்றுகொண்டே இருக்கும் மந்திரவாதியின் மாயக்குகை போலிருக்கும். கடைமுன்னால் ஒரு சாக்கில் தேங்காய்கள் வைக்கப்பட்டிருக்கும். பித்தளைத் தாம்பாளத்தில் குட்டியான ஒரு குங்கும மலை. மரத்தட்டில் ஊதுவத்திகள். சிறிய சுருள்களாக கதம்பம். ஓரமாக ஒரு பழைய ஜாடியில் பெப்பர்மிண்ட்.

வாசலில் இரு பூஜைக்கூடைகளில் ஒரு தேங்காயும் ஒரு கூடு ஊதுவத்தியும் கொஞ்சம் பூவும் ஒரு சிறிய பொட்டலம் குங்குமமும் ஒரு பச்சைநிறமான விரிப்பின் மீது போகிறவர்களின் கவனத்தை கவர்வதுபோல வைக்கப்பட்டிருக்கும். ”தேவி மரிகாம்பாவுக்கான வழிபாட்டுக்கூடைகள் இங்கே விற்கப்படும்” என்று ஒரு தகரத்தில் வெள்ளை எழுத்தில் எழுதி அருகே சாத்தப்பட்டிருக்கும்.

கிராமத்தில் யாருமே இந்தக்கடைக்கு வருவதில்லை. அன்றாட உபயோகத்துக்கான எப்பொருளும் இங்கே கிடைக்காது. கோயிலுக்குப்போகும் வேற்றூர்க்காரர்கள்  இந்தபூஜைக்கூடைகளில் ஒன்றை வாங்குவார்கள். அது அவர்களுக்கு வசதியானது. சிலசமயம் கூடவே போகும் பிள்ளைகள் அடம்பிடித்து பெப்பர்மிண்ட் வாங்கிக்கொள்ளும். படித்துப் படித்துச் சொன்னாலும் பெரும்பாலான பக்தர்கள் கூடைகளை திருப்பித்தர மறந்துவிடுவதனால் மதுகரர் அவர்கள் திரும்பிவருவதற்குக் கொஞ்சம் தாமதமானாலும் பதற்றம் அடைவார். தாத்தாவின் வீட்டில் நின்று பார்க்கும்போது மதுகரர் நிலைகொள்ளாமல் கோயிலின் திசையை அடிக்கடி பார்த்துக்கொண்டு ஓரக்கண்னால் இருப்புப்பெட்டியையும் பார்த்து கடைத்திண்ணையில் முன்னும் பின்னும் நடந்துகொண்டிருந்தாரென்றால் ”அங்கேபார் யாரோ கூடையை திருப்பிக்கொடுக்கவில்லை…மதுகரர் குண்டி சுட்ட பூனையை மாதிரி  நடந்துகொண்டிருக்கிறான்” என்பார் தாத்தா.

ஆனால் அவர்கள் கூடையை திருப்பிக்கொடுக்கும்போது தன்னுடைய பொறுமையின்மையை எண்ணி தானே கொஞ்சம் நாணுவதனால் மதுகரர் ”சரி சரி, அங்கெ வைத்துவிட்டுப்போங்கள்” என்பார். ஆனால் திண்ணையில் நாகேஷ் மாமா இருந்தால் கண்டிப்பாகச் சொல்லாமல் இருக்கமாட்டார் ”பார்த்தீர்களா இப்போதுதான் வாடிக்கையாளர்கள் அந்தக்கூடையை வைத்துவிட்டுப்போனார்கள். உடனே அதை எடுத்து எத்தனை தடவை திருப்பித்திருப்பி பார்க்கிறான்…” தாத்தா கேட்டாரென்றால் ”போடா உனக்கென்ன தெரியும் சொத்தை இழப்பதில் உள்ள துக்கம்….”என்பார்

அந்த பெரிய கல்லாப்பெட்டி கடையின் முன்பகுதியில் இருந்தது. அதற்குபின்னால் உள்ள மரநாற்காலியில் மதுகரர் அமர்ந்திருப்பார். இருப்பைப் பார்த்தால் கடும் வியாபாரத்தை எதிர்பார்க்கும் தோரணைதான். நரைத்த பழைய பைஜாமாவும் காலர் பிரிந்த சட்டையும் அணிந்து அடிக்கடி வழுக்கைத் முன்தலையை மேல் நோக்கி தடவிவிட்டுக்கொண்டு மங்கலான கண்களால் தெருவை பார்ந்தபடி நாள் முழுக்க அங்கேயே குந்தியிருப்பார்.

மதுகரர் எவரிடமும் பேச்சை ஆரம்பிப்பதேயில்லை. தாத்தா கடையை தாண்டிசெல்லும்போது சிலசமயம் நின்று அவரிடம் சில சொற்கள் பேசுவார். தாத்தாவைக் காணும்போது மரியாதை நிமித்தம் எழும்பாவனையில் மதுகரர் நாற்காலியில் கொஞ்சம் முன்னால் வருவார். தாத்தா திண்ணைக்கு வந்ததுமே எழுந்து மரியாதையாக ஒதுங்கி நிற்பார். தாத்தா சும்மா”மதுகரா” என்று சொல்லிவிட்டு போவார். அவ்வளவுதான் குசலம் முடிந்துவிடும்

குழந்தைகளை அந்த காலியிடத்தில் விளையாட அனுமதிப்பதேயில்லை. இந்த காலியிடம் பண்டிதரின் குடும்பத்துக்குச் சொந்தமானது. ஆனால் அதை எவரும் எதற்காகவும் பயன்படுத்தியதில்லை .மதியச்சாப்பாட்டுக்கும்பின்னர் வராந்தாவில் சாய்வுநாற்காலியில் படுத்துக்கொண்டு என் சித்தியின் கணவர் நாகேஷ் மாமாவிடம் சொன்னார் ”தெருவோரமாக இப்படிப்பட்ட இடத்தில் இந்த காலிமனை நல்ல விலைக்கு போகுமே”

கையில் வெற்றிலையை எடுத்து கூர்ந்து ஆராய்ச்சி செய்தபடி இன்னொருகையை பாக்குக்காக நீட்டிய நாகேஷ் மாமா சொன்னார் ”அந்தக்கிழவி உயிரோடிருக்கும்வரை இந்த நிலத்தை வாங்க யாருமே வரமாட்டார்கள் மாப்பிள்ளை… சரி, இந்தக் காலத்தில் இதையெல்லாம் நம்புவது கஷ்டம்தான்”

சித்திகணவருக்கு ஹொன்னவரத்தில் பல தொழில்கள். அவர் தொட்டதெல்லாம் பொன் என்றார்கள். நினைத்ததைச் செய்யக்கூடிய ஆள். அவர் கப்பல் ஏற்றுமதி முதல் ஐஸ் தொழிற்சாலை வரை பல விஷயங்களை ஒரேசமயம் திறம்பட நடத்திவந்தார். அந்த காலிமனையின் வணிகசாத்தியங்களைப் பற்றி சிந்தித்தபடி அவர் பேசிகொண்டிருந்தார்

மச்சானின் மனதை அறிந்தவர் போல நாகேஷ் மாமா அந்தக் காலியிடத்தைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார். ”கிம்மாணியில் இருந்து ஹம்மண்ணாவின் மகன் மாட்டுவண்டி கட்டிக்கொண்டு வந்திருந்தான். அவன் இங்கே வருவது இதுதான் முதல் தடவை. சாயங்காலநேரம்.  நாங்களெல்லாம் உள்ளே இருந்தோம். காலியிடம் இருப்பதைக் கண்டு வண்டியை அங்கே நிறுத்தி மாட்டுக்குக் கொஞ்சம் வைக்கோலும் போட்டுவிட்டு இங்கே வந்தான். எங்கள் கொல்லைப்பக்கத்துக்கு வந்து பேசிக்கொண்டிருந்தபோது அம்மா ‘நீ காளைகளை இங்கே தொழுவத்திற்குக் கொண்டுவந்து கட்டு’ என்றாள். அப்போதுதான் அவன் வண்டியை காலிமனையில் நிறுத்திய விஷயத்தைச் சொன்னான்.  அய்யய்யோ என்று அம்மா அலறிவிட்டாள். இங்கே கொண்டுவந்து கட்டு என்று சொல்லி கட்டாயப்படுத்தி அந்த மிருகங்கள் வைக்கோல் தின்றுகொண்டிருக்கும்ப்போதே இழுத்து வந்து இங்கே கட்டிவிட்டாள். நல்ல திடமான மாடுகள். ஆனால் கிம்மானிக்கு திரும்பிச்செல்லும் வழியில் பண்டால கட்டாவில் வண்டி சரிந்து ஒரு மாட்டுக்கு கால் முறிந்துவிட்டது. இதற்கு என்ன சொல்கிறாய்?”

”நான் கிழவியை பார்த்ததே இல்லை. அவள் எப்போதும் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறாள் என்றா சொல்கிறாய்?”

”இங்கே இருந்து அவளைப் பார்க்க முடியாது. அந்தச்சுவரைப் பார்க்தீர்கள் அல்லவா? சிலர் அவள் முகத்தை அந்தச் சன்னல் இடுக்கு வழியாக பார்த்திருப்பதாகச் சொல்கிறார்கள். இங்கே இருந்து பார்த்தால் ஒன்றும் தெரியாது, இருட்டாக இருக்கும்”

”மாமாவுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை உண்டா ?”

”இல்லை. கடவுளே கூட அவரிடம் உண்மையைச்சொல்லி நம்பவைக்க முடியாது. கண்ணெதிரே தெரியும் விஷயத்தை நம்பமாட்டேன் என்று சொல்வாரென்றால் நாம் என்ன செய்ய முடியும்? போனவருடம் இப்படித்தான் நரசிம்ம பார்க்குரனின் மகள் சக்கு கோவாவில் இருந்து வந்திருந்தாள். அவள் மகனுக்கு பதினாறு வயது. அப்படி ஒரு திடகாத்திரமான பையன். கட்டைகுட்டையாக இருப்பான். நாங்கள் அவர்களுக்குச் சொந்தம் என்பதனால் இங்கே வந்திருந்தார்கள். பையன் அங்கே போய் விளையாடினான். மறுநாள் காய்ச்சல் ஆரம்பித்தது. கடுமையான டைபாயிடு. தப்பித்ததே பெரிய விஷயம்.சக்கு இனிமேல் இந்த திசைக்கே வரமாட்டேன் என்று சொல்லிவிட்டுச் சென்றாள். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?” 

”இந்த நிலத்தை இப்போது வாங்கினால் அடிமாட்டு விலைக்கு தட்டி எடுக்கலாம். வாங்கிப் போட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபம் வரும்”

”ஆனால் அந்த ஆள் அதை விற்கமாட்டானே. அவன் கடையில் இருந்து அவருக்கு நாளைக்கு பத்து ரூபாய் வந்தால் அதிகம். எப்படித்தான் தின்று குடித்து வாழ்கிறானோ, கடவுளுக்கே வெளிச்சம். அவர்கள் திருமணங்களுக்கோ மற்ற சடங்கு சாங்கியங்களுக்கோ தலைகாட்டுவதே கிடையாது. அவரை எதற்காகவாவது கூப்பிட்டால் என்னவோ லட்சரூபாய் வியாபாரம் மாதிரி ‘நான் வந்தால் கடையை யார் பார்த்துக்கொள்வது? கல்லாப்பெட்டியை விட்டுவிட்டு எப்படி வர முடியும்?’ என்பார். ஒருநாள் அந்த காலிமனையை விற்பதைப்பற்றி மேலோட்டமாக பேசிப்பார்த்தேன். அவ என்ன சொன்னார் தெரியுமா? அவர் அதை விற்றால் அவரது வாடிக்கையாளர்கள் எங்கே வண்டியை நிறுத்துவார்கள் என்கிறார்? வேடிக்கைதான் இல்லை? அந்தக்காலத்தில் அவரது அப்பா தொழில்செய்த நாட்களில் அங்கே  அவரது வாடிக்கையாளர்களின் வண்டிகளை நிறுத்துவதற்காக நல்ல பெரிய பந்தல் போட்டு வைத்திருந்தார்களாம்…மனிதர்களின் பகற்கனவுகளுக்கு அளவே கிடையாது”

”உன் அப்பா சொன்னால் ஒருவேளை கேட்பார்”

”அப்பாவை அதற்குச் சம்மதிக்க வைக்கமுடியாது. நாம் மதுகரரை வேறு ஆள் வழியாக அனுகினால்கூட அப்பாவிடம் ஒரு வார்த்தை கேட்காமல் அவர் ஒப்புக்கொள்ளமாட்டார். அதை மறந்துவிடுங்கள்” நாகேஷ் மாமா வெற்றிலைச் சாறை துப்ப வராந்தாவின் எல்லைக்குச் சென்றார்

யாருமே அந்தக்கிழவியைப் பற்றி எதுவுமே வெளிப்படையாகப் பேசுவதில்லை என்றாலும் நான் ஒட்டுகேட்டும் ஒளிந்து கேட்டும் நிறைய விஷயங்களை உள்வாங்கி மிச்சத்தை கற்பனையில் பூர்த்திசெய்து எனக்கென ஒரு உருவத்தை கற்பிதம்செய்துகொண்டேன். என் பாட்டி தாத்த  இருவருக்குமே கிழவி மீது ஒரு பிரியம் இருப்பதை அவர்கள் சொற்கள் காட்டின. ஆனால் மற்ற எவருமே அவளைபப்ற்றி நல்லதாக ஏதும் சொல்லி நான் கேட்கவில்லை.

அந்தப் பெரிய வீடு கனசியாம பண்டிதருடையது. கிழவி அவரது ஒரே தங்கை. கிழவியின் பெயர் முக்தா. கனசியாம பண்டிதர் கிராமத்தின் முக்கியமான வியாபாரி. அவரது பலசரக்குக் கடை புகழ்பெற்ற ஒன்று. பக்கத்து ஊர்க்காரர்கள் கூட இங்கே வந்து திருமணத்துக்கு சரக்கு எடுப்பதுண்டு. அவர்களுக்குச் சொந்தமான மாட்டு வண்டியில் நாங்கள் ஒருமுறை பக்கத்து ஊரில் ஒரு திருமணத்துக்குச் சென்றபோது அதற்குள் போடப்பட்டிருந்த மென்மையான மெத்தை திண்டுகளைப் பற்றி என் பாட்டி பெருமையாகப் பேசிக்கோண்டது நினைவிருக்கிறது.

முக்தா ஏராளமான செல்வமும்  அழகும் இருந்தும்கூட நெடுநாட்கள் திருமணமாகாமலேயே இருந்தாள். ஜாதக தோஷமோ என்னவோ அதுபோல ஏதோ பிரச்சினை. அவளுக்கு வயது முதிர்ந்தபின் எப்படியோ விஷயங்கள் சாதகமாக ஆகி தெர்னமக்கி குடும்பம் திருமணத்துக்கு முன்வந்தார்கள். கனசியாமப் பண்டிதர் வரதட்சிணை விஷயத்தில் பெருந்தன்மையுடன் இருந்தார். முக்தாவின் கணவர் திடீரென்று இறப்பது வரை எல்லாம் சரியாகத்தான் போயிற்று. அதன்பின் அவள் கணவனின் குடும்பம் அவளைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தது. அவள் ஒரு துக்கிரி என்றும் அவள் பார்வை பட்டாலே அழிவுதான் என்றும் வதந்தி பரவியது

ஒருமுறை முக்தா சாதாரணமாக ஒரு நல்ல தென்னைமரத்தைப் பார்த்து ஏதோ பாராட்டாகச் சொன்னாள், அந்த தென்னைமரத்தில் அன்றிரவே இடி விழுந்தது. வேலைக்காரியின் மகனுக்கு திருமணம் முடிந்து வந்தபோது ”பொண்ணு அழகா இருக்கா” என்று அவள் சொன்னாள். அவளை இரண்டுநாள் கழித்து பாம்பு கடித்தது. ”எங்கள் வீட்டு கிணறு வற்றியதே இல்லை” என்று அவள் யாரிடமோ பேச்சுவாக்கில் சொன்னாள். அந்த கோடையில் அவள் கிணறு வரண்டு அடித்தரையில் சேறு உலர்ந்தது.  ”தேவி மகாமாயியின் தேர் ஊர்வலத்தைப்பார்க்க ஒரு கண் போதாது” என்றாள் ஒருமுறை. அந்த முறை தேரின் கடையாணி உடைந்து சக்கரம் சரிந்தது

அவளுடைய கண்ணின் கொடூரத்தை கடவுளாலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றுதானே அர்த்தம் ? குற்றச்சாட்டுகள் பெருகின. இது அவள் சதுர்த்திக்கு நிலவைப்பார்த்ததனால் வந்ததா என்று சந்தேகப்பட்டு முக்தா கணேச பூஜை செய்து பிராயச்சித்தமெல்லாம் எடுத்தாள். இதற்கெல்லாம் உச்சமாக ஒருமுறை முக்தாவின் மைத்துனரின் மகன் தென்னைமரத்தில் ஏறி கீழே  விழுந்து இறந்தான். அவன் கோபவெறியில் முக்தாவைப்பிடித்து இழுத்துவந்து தூணில் கட்டி எரியும் தென்னை மட்டையால் அடி அடி என்று அடித்தான். அவள் முந்தின நாட்களில் பையனைப்பற்றி ஏதாவது சொன்னாளா என்று நுட்பமாக ஆராய்ந்தார்கள். சொல்லியிருப்பாள் என்றே முடிவும்கட்டினார்கள். அடிதாங்கமுடியாமல் முக்தா ஓடி பக்கத்துவீட்டுத் தொழுவத்தில் அடைக்கலம் புகுந்தாள்.

மறுநாள் முக்தாவின் கணவனின் தம்பியும் அண்ணாவும்சேர்ந்து அவளைக் கொண்டுவந்து அவள் பிறந்தவீட்டிலேயே விட்டுவிட்டுச்சென்றார்கள். கனசியாம் பண்டிதரை அவரது அந்தஸ்த்தை பொருட்படுத்தாமல் கண்டபடி வைதார்கள். ஊரார் சிலரும் அப்போது கூட இருந்தார்கள். கனசியாம பண்டிதர் கோபம் தாங்காமல் பாய்ந்து அவர்களில் ஒருவனை அறைந்தார். ”நீ துரத்தி விட்டால் என் தங்கை அனாதையாகிவிடுவாள் என்றா நினைத்தாய்? நான் என் சொத்தில் பாதியை அவளுக்குக் கொடுப்பேன்…அவளுக்கு உன்னுடைய பிச்சை வேண்டாம்…போடா” என்றார். அவ்வாறாக முக்தா அண்ணாவுடனேயே தங்கிவிட்டாள் 

செய்தி சீக்கிரமே பரவியது. முக்தாவுக்கு எப்படி அந்த துக்கிரித்தனம் திடீரென்று வந்தது என்று எவருமே கேட்கவில்லை. கிராமத்தில் என்ன விபத்து நடந்தாலும் அது அவளால்தான் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். பாகவதரின் வைக்கோல்போரில் தீப்பிடித்ததும் சரி வடுபக்ரியின் மகள் தற்கொலைச் செய்துகொண்டதும் சரி, விட்டல் ராவின் மகனுக்கு பைத்தியம் பிடித்ததும் சரி லக்கப்பாவின் பேரன் மந்தபுத்தியாக பிறந்ததும் சரி எல்லாமே அவளால்தான் என்றார்கள்.

அவள் ஊருக்குத்திரும்பி வந்தபிறகு எல்லா விபத்துக்களுக்கும் காரணம் உண்டாகிவிட்டது. அவள் சொன்ன சொற்கள், அவளுடைய புன்னகை ,அவளுடைய பார்வை, அவள் தொட்ட பொருட்கள் எல்லாமே காரணம்தான். கிராமத்தின் விதியையே அவள்தான் தீர்மானித்தாள்.னதன் பின்னர் எவருக்கும் வாழ்க்கையில் சிக்கல்களோ மர்மங்களோ இல்லாமலாயிற்று. எல்லாவற்றுக்கும் முக்தாவையே காரணமாக ஆக்கினார்கள்.

நாங்கள் எங்கள் அம்மாவின் கடைசித்தம்பி சுதிர் மாமாவின் திருமணத்துக்காக கிராமத்துக்குப் போயிருந்தோம்.  பெல்காமில் திருமணம் முடிந்து திரும்பி வந்தபின் என் அம்மா என்னை மதியம் தூங்குவதற்காக படுக்க ¨ந்த்தாள். அம்மாவும்  நானும் கட்டிலில் படுத்திருக்க பாட்டி கீழே தரையில் ஜமுக்காளத்தில் படுத்திருந்தபடி தற்செயலாக முக்தாவைப்பற்றிப் பேச ஆரம்பித்தாள். குடும்பத்தின் புதிய மருமகளான சுரேகா மாமியும் அறையில் இருந்தாள். பாட்டி உற்சாகமாகப் பேசப்பேச என் அம்மா நிம்மதியிழப்பதைப் பார்த்தேன்

”அந்தக் குடும்பத்திற்கும் அதனால் தீங்குதானே?” என்று சுரேகா மாமி தன் அச்சத்தை மறைத்தபடி கேட்டாள்.

”பின்னே? இதுவரை நடந்ததே போதாதா? கனசியாம பண்டிதரின் கடை எப்படி இருக்கும் தெரியுமா? சும்மா சொல்லவில்லை. யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பார். ஒருகாலத்தில் பக்கத்தில் இருக்கும் வீட்டுக்கு மத்தியான்னம் சாப்பிடப்போகக்கூட நேரமில்லாதபடி வியாபாரம் நடந்துகொண்டிருக்கும்.  செவ்வாய்கிழமைச் சந்தை மாதிரி ஆட்கள் வந்து கூட்டி வரிசையாக நின்று சாமான்கள் வாங்கிக்கொண்டுசெல்வார்கள். எல்லாம் கனவு மாதிரி அபப்டியே கலைந்து போயிற்று. இப்போது கடை எப்படி இருக்கிறது என்று பார். எல்லா பெட்டியும் காலியாக இருக்கிறது. எல்லாம் என் கண்ணெதிரே நடந்த சம்பவங்கள். என்ன ஏது ஏன்று தெரிந்துகொள்வதற்குள் மொத்தக்குடும்பமே திவாலாகிவிட்டது”

அம்மா சொன்னாள் ”போதும் அம்மா….அவள் அப்படி என்ன செய்தாள்? கனசியாம பண்டிதரின் அருமை மகன் என்ன செய்தான் என்று யாராவது சொல்கிறார்களா என்ன?”

”அந்த முட்டாள் செய்ததிலும் ஒரு காரணம் இருக்கும் இல்லையா? இல்லாவிட்டால் ஒரு போலிச்சாமியார் வந்து கேட்டான் என்று ஒரு சுயபுத்தி உள்ள ஆண்பிள்ளை மொத்தக் குடும்பத்துச் சொத்தையும் தங்கமாக ஆக்கி அவன் கையில் கொடுப்பானா என்ன? அவள் கண்ணால் அந்தக்குடும்பமே அழிவதாக இருந்தது. அதனால்தான் அப்படி நடந்தது…”

”இப்போது சொல்கிறாய்…மதுகரனுடைய பேராசை அப்படி. பண்டாரம் வந்து தங்கத்தைக் கொடுத்தால் இரட்டிப்பாக ஆக்கி தருகிறேன் என்று சொன்னதும் தூக்கிக் கொடுத்துவிட்டான். யாரிடமும் எதுவும் கேட்கவில்லை… எல்லாம் போனபின்னாடி அவளைக் குற்றம் சொல்லி பிலாக்காணம் வைத்து என்ன பயன்…”

”அவனுக்கு எப்படி அந்தமாதிரி ஒரு குருட்டு புத்தி தோன்றியது என்றால்…”

பாட்டியின் பேச்சை அம்மா குறுக்காக போய் மறித்தாள் ”நான் சொல்கிறேன் ஏன் என்று. கனசியாம பண்டிதர் பாதிச்சொத்தை தங்கைக்குக் கொடுத்ததை இவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. குடும்பத்தைவிட்டு கட்டிக்கொடுத்து போனவளுக்கு எதற்காகச் சொத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அப்பாவை எதிர்த்துப் பேசவும் தைரியமில்லை. அப்பாவுக்குத்தெரியாமல் இப்படிச் செய்துவிட்டான். பேராசைப்பட்டு செய்தானா, அப்பாவை பழிவாங்கச்செய்தானா, எரிச்சலில் செய்தானா யாருக்குத்தெரியும்? ஆனால் ஒரே நாளில் கஜானா காலி…”

 

”அதற்கு முன்னால் என்ன நடந்தது என்று கேள்…ஒருநாள் முக்தா வந்து கனசியாமை சாப்பிடக்கூப்பிட்டிருக்கிறாள். அப்போது இரும்புப்பெட்டி திறந்து உள்ளே பணம் நிறைந்து ததும்பிக்கொண்டிருந்தது. அவர் பணத்தை எண்ணி கட்டுக்கட்டாக அடுக்கிக் கொண்டிருந்தார். அவள் அதைப்பார்த்தாள். அவ்வளவுதான் எல்லாமே போயிற்று…இதுதான் நடந்தது” என்றாள் பாட்டி

‘மேற்கொண்டு பேச்சைத்தொடராமல் அம்மா வெளியே போனாள் ”மனுஷர்களுக்கு மூளை கழண்டுபோனால் என்ன செய்வது?” ஆனால் பாட்டி அதை பொருட்படுத்தாமல் புதிய மருமகளிடம் மேலும் பேசிக்கொண்டிருந்தாள்.

கனசியாம பண்டிதரின் அதிருஷ்டம் அந்த தங்கத்துடன் போய் விட்டது. அவரால் அதிலிருந்து மீளவே முடியவில்லை. சரக்கு எடுக்க பணமில்லாமல் அவரது வியாபாரம் சரிந்தது. சங்கர் நாயக்கின் புதிய கடை அதேசமயம் தோன்றி நன்றாக விற்பனையாக ஆரம்பித்தது. ஆறு மாதத்தில் பண்டிதர் மனமுடைந்து இறந்தார். அவர் கடைசி காலத்தில் தன் தங்கையிடம் என்ன சொன்னார் என்று யாருக்கும் தெரியாது. அல்லது அவளே ஊரார் முழுக்க் என்ன சொன்னார்கள் என்று தெரிந்துகொண்டிருப்பாள். அவள் ஒரு சபதம் எடுத்தாள். ”இனிமேல் செத்து பிணமாக சிதையிலேறுவதற்காக மட்டும்தான் இந்த வீட்டைவிட்டு வெளியே வருவேன்..” அதன்பின்னர் இத்தனை வருடங்களில் அவள் வெளியே வந்ததே இல்லை. அவளை யாரும் பார்த்ததும் இல்லை.

”அய்யோ, அதற்கு முன்னால் எல்லா இடங்களுக்கும் சென்றுகொண்டா இருந்தாள்” என்று சுரேகா மாமி அச்சத்துடன் கேட்டாள்.

”ஆமாம். எல்லா இடத்துக்கும் போவாள். யார் அவளை குற்றம்சாட்டினாலும் அவள் ஒத்துக்கொள்ளவே மாட்டாள். அவள் வெளியே வருவதே அவள் பார்வையில் அப்படி ஒன்றும் துக்கிரித்தனம் இல்லை என்பதை நிரூபிப்பதற்காகத்தான் என்று தோன்றும். ஆனால் சந்தேகம் என்று வந்துவிட்டால் அதை கடவுளால் கூட மாற்ற முடியாதல்லவா? எல்லாருக்குமே அவளைப் பார்த்தாலே பீதிதான். அவள் எங்கே பார்ப்பாள் என்ன சொல்வாள் என்று எல்லாருமே திகிலடித்துக்கிடப்பார்கள். ஒரு கட்டத்தில் இங்கே உள்ளவர்கள் எதைப்பற்றியும் நல்லதாக எதுவுமே சொல்லாமலானார்கள். அது அவள் காதுகளுக்குப் போய் ஆமாம் என்று அவள் சொல்லிவிட்டால் என்ன ஆவது? நீயே சொல்லு, ஒன்றுக்குள் ஒன்றாக இருந்த தம்பதியினர் அவள் எதிரே வந்த மறுநாளே நிரந்தரமாக பிரிந்தார்கள் என்றால் என்ன காரணம்? வேறு யாரோ தெரியாத ஆளைப்பற்றி சொல்லவில்லை. நம்முடைய ரங்கப்பாவின் மகன் மோகன் அவனுடைய புதிய மனைவியுடன் இவளைப்போய் சந்த்தித்து ஆசி வாங்கியிருக்கிறான். சொன்னால் கேட்டால்தானே? அருமையான பையன். ஒழுக்கமானவன். அவனுக்கு ஏன் திடீரென்று மேட்டிமைக்காரி ஒருத்தியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு பம்பாய்க்கு ஓடிபோகத்தோன்ற வேண்டும்? அந்த சம்பவத்துக்குப் பிறகுதான் எல்லாரும் முக்தாவை வெளிப்படையாகவே எச்சரிக்க ஆரம்பித்தார்கள். இனிமேல் உன் காலடியே எங்கள் வீட்டில் படக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அவள் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. ஆனால் கனசியாம் பண்டிதர் இறந்த பிறகு அவள் மாறிவிட்டாள்… ஏன் என்றே தெரியவில்லை. ஆனால் அவள் அதன் பின்னால் வெளியே வரவில்லை. உண்மை என்னவென்று யாருக்குமே தெரியாது”

”அதன் பின்னர்  அவள் வரவேயில்லையா?”

”இல்லை…. மதுகரனின் திருமணத்துக்குக் கூட வரவில்லை. அவனுக்கு ஒரு பெண்ணைக்கண்டுபிடிக்க என்ன கஷ்டப்பட்டோம் தெரியுமா? கடைசியில் ஹால்டிபூரில் இருந்து வயது மூத்த ஒரு பெண்ணை கண்டுபிடித்தோம். பரம ஏழைகள். அவனைவிட பெரிய முட்டாள் அவள். காளிக்கு கணவனுமிலை வேதாளத்துக்கு மனைவியுமில்லை என்று சொல்வார்களே அந்த மாதிரி.. அவர்களும் இவனைமாதிரி ஒரு மாப்பிள்ளையை தேடிக்கோண்டிருந்திருக்கிறார்கள். என்ன ஒரு ஜோடி! கடவுள்  இருவரையும் சேர்த்தே படைத்திருக்கிறார்”

”’இந்த வராந்தாவில் நிற்பவர்களை அவளால் பார்க்க முடியுமா மாமி?”

”சேச்சே.. நீ பயப்படாதே…ஒன்றும் நடக்காது. அவள் அந்த ஜன்னல் வழியாக வெளியே பார்க்கிறாள் என்று சொல்கிறார்கள். நான் பார்த்ததில்லை. அது ஒரே இருட்டாக இருக்கும். ஆனால் அந்த காலிமனைக்கு யாருமே போகமாட்டார்கள்…”

அம்மா வந்ததனால் பேச்சு அறுபட்டது. பாட்டி சொன்ன அந்த ஜன்னலைப்பற்றிய தகவலை நான் குறித்துக்கொண்டேன். அந்த ஜன்னலின் கதவு கொஞ்சமாக திறந்திருக்கும். எவ்வளவு கவனித்தாலும் உள்ளே என்ன நடக்கிறதென்று தெரிந்துகொள்ள முடியாது

அன்று மதியத்துக்குமேல் பெண்கள் யாருமே தூங்கவில்லை. வெவ்வேறு விஷயங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு பாட்டி சொன்னாள் ”எல்லாருக்கும் லட்டு கொடுக்கவேண்டுமே. ஏகப்பட்ட வீடு இருக்கிறது…”

டீ சாப்பிட்டபின்னர் எல்லாருமாக அமர்ந்து லட்டுகளை பொட்டலம் கட்ட ஆரம்பித்தார்கள். லட்டுகளை கொண்டுசென்று கொடுக்கும் வேலை பிள்ளைகளுக்கு. எங்களுக்கு அதில் ஒரே உற்சாகம், சண்டை. பாட்டி ஒரு பொட்டலத்தைக் கொடுத்து அதை எங்கே ஒப்படைக்கவேண்டும் என்று சொல்வாள். அதைக் கேஎட்டதும் பையன்கள் கிளம்பி நிற்காமல் ஓடி கொண்டுசென்று கொடுப்பார்கள். பெரிய பையன்களுக்கு தூரத்தில் உள்ள வீடுகள் கிடைக்கும்.

நான் பண்டிதர் வீட்டுக்குக் கொண்டு சென்று கொடுத்தால் போதும் என்றபோது ஏமாற்றமாக இருந்தது. பக்கத்துவீடுவரை போகும் சின்ன பயணத்தில் சுவாரசியமே இல்லை. நான் சிணுங்க ஆரம்பித்த போது பாட்டி சொன்னாள் ”இதை முதலில் கொண்டுசென்று கொடு. என்னைப் போட்டு படுத்தினால் அப்புறம் நான் எல்லாவற்றையும் மறந்து யாருக்கு கொடுத்தேன் என்று தெரியாமல் கொடுத்தவர்களுக்கே திருப்பியும் கொடுத்தனுப்புவேன்…. மதுகரன் வாசலிலேயே கடையில் இருப்பான். அவனிடம் கொண்டுபோய் கொடுத்துவிட்டு திண்ணையிலிருந்தே திரும்பிவந்துவிடு. அதன்பின் நீ பர்குராவின் வீட்டுக்குப் போகலாம்”

ஆனால் மதுகரர் கடையில் இல்லை. நான் கொஞ்ச நேரம் காத்திருந்தேன். அவர் இருப்பதாகவே தெரியவில்லை. நான் பர்க்குராவின் வீட்டுக்குப்போகும் வாய்ப்பு பறிபோவதை எண்ணி பதைப்படைந்தேன். ஒருவேளை அவர் வீட்டுக்குள் இருப்பாரோ என்று எண்ணி மெல்ல உள்ளே சென்றேன். திண்டை தாண்டி வாசல் வழியாக உள்ளே நுழைந்தேன்.

யாருமே கண்ணுக்குப்படவில்லை. நான் கதவைத்தட்டினேன். பதில் இல்லை. கொஞ்சம் தயங்கிவிட்டு உள்ளே சென்றேன். பெரிய கூடம் அது. ஆனால் நன்றாக இருட்டிக்கிடந்தது. ஒருபக்கம் மாடிக்குப் போகும் மரப்படிகள். பிடித்துக்கொண்டு ஏறுவதற்காக ஒரு கயிறு தொங்கவிடப்பட்டிருந்தது. அங்கே யாரோ இருக்கிறார்கள் என்று காட்டும்படியாக அந்தக் கயிறு ஆடிக்கொண்டிருந்தது. வீட்டின் அமானுடமான சூனியத்தன்மை எனக்கு திகிலூட்டியது. எங்கே பார்த்தாலும் காலியான சுவர்கள்.  இன்னும் உள்ளே நிலவறைகளில் இருப்பதுபோல ஒரு இரும்புக்கதவு. அது பூட்டப்பட்டிருந்தது.  நான் உள்ளே செல்லச்செல்ல கடைசியில் ஒரு கதவு திறந்திருந்தது. அப்பாலிருந்து வெளிச்சம் வந்தது. அங்கே வரிசையாக விறகடுப்புகள் இருந்தன. அதுதான் சமையலறை. மிகவும் பெரியது

அடுத்த அறையில் இருந்து வந்த சத்தம் என்னை அதிர வைத்தது ”யார்? வா, வா இங்கே”

அந்தக்குரல் மேலும் ஒலித்தது. ”யார் நீ? என்ன வேண்டும்?” இருட்டுக்குள் எனக்கு எதுவும் தெரியவில்லை.  நான் வெளிச்சமான தெருவில் இருந்து சட்டென்று உள்ளே சென்றதனால்கூட இருக்கலாம். என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறி எச்சில் விழுங்கினேன்

”நீ அனந்தண்ணாவின் பேரனா? ஏன் திருடன் போல பதுங்குகிறாய்?”

”ஆமாம்”

”யாருடைய பையன் நீ?”

நான் அம்மாவின்பெயரைச் சொன்னேன்.

”ஏன் இப்படி பயப்படுகிறாய்? வா…உள்ளே வா” அந்த குரல் விளையாட்டுத்தனமாக இருந்தது. கையில் லட்டு பொட்டலத்துடன் நான் அங்கேயே நின்றேன்

”சரியான கோழையாக இருக்கிறாயே…வாடா இங்கே” அந்த குரல் கட்டளை போல ஒலித்தது. நான் திரும்ப நினைப்பதற்குள் ஒரு கை என்னைபிடித்துக்கொண்டது.

”எனக்கு வெளிச்சமே பிடிக்காது. கண்ணைக்கூசும். அதனால்தான் உள்ளே வரச்சொன்னேன். கொஞ்சம் நில்லு. நான் ஜன்னல் கதவை இன்னும் கொஞ்சம் திறக்கிறேன். ரொம்ப நாளாகவே நான் இருட்டில்தானே இருக்கிறேன் அதனால்தான்… ”

நான் முன்னால்நகர்ந்தபோது மென்மையான மெத்தை என் முழங்காலில் இடித்தது. அவள் மெத்தையில் அமர்ந்திருக்கிறாள் என்று தெரிந்துகொண்டேன்

”உட்கார்”

”நான் வீட்டுக்கு போகிறேன்”

”உட்கார்.. நீ என் செல்லம் தானே.? நான் உன் அம்மாவை தூக்கி வளர்த்தவள். அவளுக்கு குண்டி கழுவி விட்டவள் தெரியுமா? உட்காரச்சொன்னால் உட்காரவேண்டும், என் கண்ணில்லையா? யார் லட்டு கொடுத்தனுப்பியது?

”பாட்டி”

”நீ கல்யாணத்துக்கு போனாயா?”

”ஆமாம்”

”பெண் வீட்டில் வைத்தா கல்யாணம்? இல்லாவிட்டால் கோயிலிலா?”

”அது வீடு…பெரிய வீடு…அதன் முன்னால் ஒரு பந்தல்…”

”உன் மாமி அழகாக இருக்கிறாளா? அவள் பேரென்ன?”

”அழகுதான்..சுரேகா மாமி என்று அவளுக்கு பெயர்”

”சுதீர்…சுரேகா.. சு-வுக்குகு சு நல்ல பொருத்தம்… பெண் உயரமாக இருக்கிறாளா? என்ன மாதிரி நகையெல்லாம் போட்டுக்கொண்டு வந்தாள்?”

”அவள் மாமாவைவிட குள்ளம்தான். நிறைய வளையல் போட்டிருந்தாள்”.

”நல்ல கதை… மாப்பிள்ளையை விட உயரமான பெண்ணை எங்காவது பார்ப்பார்களா என்ன? மக்காக இருக்கிறாயே.  எல்லா பெண்களும்தான் வளையல் போடுகிறார்கள்? வேறே என்ன நகை? தோளில் நகை போட்டிருந்தாளா?”

நான் மாமியின் நகைகளை நினைவுகூர முயன்றேன். புஜங்களில் நகை ஏதும் இல்லை. இடுப்பில்? இடுப்பிலும் எந்த நகையும் இல்லை. மூத்த மாமிதான் இடுப்பில் நகை போட்டிருந்தாள். ஒன்றும் புரியவில்லை, ஆனால் நான் எனக்கு தோன்றியது போல உற்சாகமாக விவரிக்க ஆரம்பித்தேன். உண்மையையும் பொய்யையும் என்னாலேயே பிரித்தறிய முடியவில்லை

”அவள் இடுப்பில் நகை இருக்கிறது! பெரியநகை!”

”அப்படியா? கழுத்திலே எத்தனை சங்கிலி?”

”ஒன்றுதான்”

”உன்னை மாதிரி பையன்கள் எதையுமே பார்ப்பதில்லை. எங்காவது ஒரே சங்கிலியுடன் திருமணம்செய்துகொள்வார்களா? உன் வயதில் நானெல்லாம் கல்யாணத்துக்குப் போய்விட்டு வந்தேன்றால் எல்லா நகைகளையும் எண்ணி எண்ணி பாட்டியிடம்  சொல்வேன் தெரியுமா…ஒரு சின்ன விஷயம்கூட விட்டுவிடமாட்டேன்”’

”நான் வீட்டுக்குப் போகிறேன்”

”நில்லு கண்ணா… நான் ஜன்னலைத்திறக்கிறேன்…நீ என்ன உன் குதிரையை வாசலில் விட்டுவிட்டு வந்ததுபோல பறக்கிறாய்?” அவள் எழுந்து ஜன்னலை கொஞ்சமாகத் திறந்தாள். கொஞ்சம் வெளிச்சம் உள்ளே வந்தது. 

”வரபூஜை செய்தபோது மாப்பிள்ளையுடன் இருந்தது யார்?”

”சந்துரு…சீமந்தி மௌஷியின் மகன்”

”நீ போய் பக்கத்தில் உட்காரவேண்டியதுதானே? நீதான் நன்றாக வளர்ந்திருக்கிறாயே…   என்ன சாப்பாடு போட்டார்கள்?”

”சோறு”

”உன்னைப்போய் கேட்டேன் பார்… என்ன பாயசம்? எவ்வளவு இனிப்புவகைகள்? அதைச்சொல்லு”

”ஜிலேபி..அப்புறம் லட்டு… அந்த மாமியின் பெயரும் என் மாமாவின் பெயரும் பப்படத்திலே அச்சிட்டிருந்தார்கள் தெரியுமா?”. பொரித்த பப்படத்தில் அவர்களின் பெயரைக் கண்டு நான் அதிச்சி அடைந்துவிட்டிருந்தேன். மஞ்சள் கொண்டு எழுதப்பட்டிருந்த பெயர் பப்படத்தின் உள்ளே இருந்து வருவதுபோல் இருந்தது. அவள் அதை அதற்கு முன்னால் கேள்விப்பட்டதே இல்லை. ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தாள். அவளுக்கு ஒரு புதிய விஷயத்தைச் சொல்லும் பெருமிதம் என்னிடம் ஏற்பட்டது

”ஆர்ப்பாட்டமான திருமணம் போலிருக்கிறதே…எத்தனை பேர் வந்திருந்தார்கள்?”

”நிறையபேர்….சாயங்காலம் மூன்று மணிவரை இலைபோட்டார்கள்”

”பெல்காமில் இப்போது நன்றாகக் குளிருமே…எல்லாரும் எங்கே தங்கியிருந்தார்கள்?”

திருமணத்துக்கு முன்னால் திருமண கோஷ்டி பெல்காமில் ஒரு பெரிய வீட்டில் தங்கியிருந்தார்கள். அங்கே ஆவிபறந்த சோறு போட்டதை நான் நினைவுகூர்ந்தேன். நான் அந்த தகவல்களை துல்லியமாக நினைவுகூர்ந்து சொல்ல ஆரம்பித்தேன். அவள் ”ஆகா…சொல்லு அப்புறம்” என்று கேட்டுக்கொண்டே இருந்தாள். அதைக் கேட்க கேட்க எனக்கு தகவல்கள் நினைவுக்கு வந்தபடியே இருந்தன. அந்த மொத்த இரவையே என் முன்னால் திரும்ப நிகழச்செய்தேன். கீழ்த்தளத்தில் மெத்தைகளை தூக்கிப்போட்டு படுக்க ஏற்பாடுசெய்தார்கள். கோயில் மண்டபம் போல பெரிதான அந்த கூடத்துக்கு ஏராளமான வாசல்கள் இருந்தன . எல்லா அம்மாக்களும் பயணக்களைப்பால் பொறுமை இழந்திருந்தார்கள்.  ஆனால் பிள்ளைகள் புதிய இடமாதலால் உற்சாகமாக தூங்க மறுத்து அடிவாங்கின.

திருமணக்கோஷ்டி தாமதமாக வந்ததனால் வரபூஜையை அவசர அவசரமாகச் செய்யவேண்டியிருந்தது. அதனால் பல பெண்களுக்கு மனக்கசப்பு. கடைசியாக எல்லாம் முடிந்ததும் பெண்கள் வந்து அப்பாடா என்று படுத்துக்கொண்டார்கள். ஆண்கள் எல்லாம் மறு பக்கம் இன்னொரு கூடத்தில் படுத்தார்கள். கடைசி விளக்கை அணைக்கும் முன்னால் நாகேஷ் மாமா பலமுறை எச்சரித்தார்.

நாங்கள் தூங்க ஆரம்பிக்கும்போது வெளியே மராத்தி பாட்டு ஒன்று கேட்க ஆரம்பித்தது. கூடவே ஆர்மோனிய இசையும். ”ராமா ராமா மதுசூதனா மனமோகனா…” பிள்ளைகள் எல்லாம் பாய்ந்து எழ ஆரம்பித்த போது அம்மாக்கள் உஷ் உஷ் என்று சொல்லி அதட்டினார்கள். அவர்களுக்கும் ஆவல்தான். கொஞ்சநேரத்தில் ஒருபையன் எழுந்து சென்று ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். பின்பக்கம் பெரிய கொல்லைமுற்றத்தில் ஏராளமான காய்கறிகளை பாயில்பரப்பி நறுக்கிக் கொண்டிருந்தார்கள். அங்கே மின் விளக்கு இழுத்து அந்த வெளிச்சத்தில் ஏராளமானவர்கள் வேலைசெய்துகொண்டிருந்தார்கள். கொஞ்சபேர் தேங்காய் துருவினார்கள். முன்னால் ஒரு ஆர்மோனியத்தை வைத்துக்கொண்டு பெண்ணின் அப்பாதான் வேலைசெய்பவர்களை உற்சாகப்படுத்த பாட்டு பாடிக்கொண்டிருந்தார். 

முதல் பாட்டு முடிந்ததும் அடுத்த பாட்டு. ”சேயிசண்டா மகரந்தா! பிரியா, ஹா மிலிந்தா!”  பிள்ளைகள் எல்லாம் ஜன்னலருகே கூடி கீழே பார்த்தார்கள். பேர்போன வம்புக்காரரான தாத்தாவின் தம்பி எரிச்சலுடன் சொன்னார். ”அய்யய்யோ, இது இப்டியே விடிய விடிய போகும்போல் இருக்கிறதே… நாம் இதுவரை நாடகக்கூத்தாடிகளின் குடும்பத்தில் பெண் எடுத்ததில்லை…” மற்றவர்கள் என்ன செய்வது என்று நிற்கையில் அவர் ஜன்னலருகே போ ”யாருடா அது கத்துறது?” என்று கத்தினார். பாட்டு நின்றது. ஒருகணம் கவனித்தபின் தாத்தா மீண்டும் கத்தினார் ”ராத்திரியிலே என்ன பாட்டும் கூத்தும்? மனுஷன் தூங்க வேண்டாமா? கிறுக்குப்பயல்களா”

பெண்ணின் அப்பா ஆர்மோனியம் வாசிப்பதை நிறுத்திவிட்டு மேலே பார்த்தார். அவரால் எங்களை பார்க்க முடியவில்லை, இருட்டாக இருந்தது. உடலற்ற அந்த அதட்டலுக்குப் பணிந்தவரைப்போல பெண்ணின் அப்பா ஆர்மோனியத்தை எடுத்துக்கொண்டு உள்ளே போய்விட்டார். சுதீர் மாமாவை நாளை மணக்கப்போகும் சுரேகா மாமியும் பிறருடன் சேர்ந்து மேலே ஜன்னலை ஏறிட்டுப்பார்ப்பதை நான் கவனித்தேன்.

நான் சுரேகா மாமி எப்படி கண்ணைச்சுருக்கிக்கொண்டு மேலே பார்த்தாள் என்று நடித்துக்காட்டினேன். சின்ன தாத்தா  ”பார்த்தாயா, ஒரே பேச்சு. அந்தாள் பாட்டை அப்படியே நிறுத்திவிட்டேன்” என்று தன் வீரத்தைச் சொல்லிக்காட்டியபடியே இருந்தார். அதே அறையில் இருந்தபோதிலும்கூட தாத்தாவும் சரி ,சுதிர் மாமாவும் சரி, எதுவும் சொல்லவில்லை

”பெண் வீடென்றால் அபப்டித்தான். அவர்கள் எல்லாவற்றையும் எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று அவள் சொன்னாள். நான் உடனே ”நான் வீட்டுக்குப் போகிறேன்” என்று மீண்டும் சொல்ல ஆரம்பித்தேன். இவ்வளவுதூரம் பேசிய பிறகும்கூட என்னால் இருட்டுக்குப் பழக முடியவில்லை. நான் அதுவரை பேசியதேகூட என்னால் பார்க்கமுடியாத ஓர் இருளுருவத்திடம்தான்.

அவள் எழுந்து எனக்கு ஒரு உலரவைத்த மாம்பழத்தைத் தந்து ஆறுதல்படுத்தினாள். நான் மொத்த மாம்பழத்தையும் வாய்க்குள் போட்டபோது அவள் ”மெல்ல சாப்பிடு, விக்கப்போகிறாய்” என்றாள்

அவள் என்னிடம் திருமணத்தைப்பற்றி இன்னும் நிறைய கேட்க விரும்பினாள்.  நான் ”நான் போகிறேன்..நான் வீட்டுக்குப் போகிறேன்”என்று சிணுங்க ஆரம்பித்தேன். அவளிடமிருந்து திமிறிவிலகினேன்.

இருண்ட காலியான அறைகள் வழியாக நான் திரும்பி நடந்தேன். இவ்வளவுநேரம் மதுகரர் எங்கே போனார் என்பது தெரியவில்லை. பணப்பெட்டிக்குப் பின்னால் இருந்தபடி அவர் சொன்னார் ”இங்கேயா இருக்கிறாய்? அங்கே எல்லாரும் உன்னை தேடிக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை நேரம் எங்கே போனாய்?”

நான் ஒன்றும் சொல்லாமல் வராண்டாவுக்கு வந்து தெருவில் பாய்ந்து வீட்டை நோக்கி ஓடினேன்

பாட்டி பர்குராவின் வீட்டுக்கு கொடுக்க வேண்டிய லட்டுப்பொட்டலத்தை தயாரித்தபின்புதான் என்னைபப்ற்றி நினைவுகூர்ந்தாள். நான் நெடுநேரமாகியும் வரவில்லை என்பதைக் கவனித்ததும் மதுகரரின் கடைக்குப்போய் கேட்டிருக்கிறார்கள். அவர் நான் அங்கே வரவில்லை என்று சொல்லிவிட்டார். ஆகவே எல்லா இடத்திலும் தேடியிருக்கிறார்கள். பக்கத்தில் இருந்த எருக்குழியில்கூட தேடிப்பார்த்திருக்கிறார்கள். தாத்தாவின் கடைக்கும் தகவல் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்.

நான் நடந்ததைச் சொன்னேன். ”நான் பண்டிதர் வீட்டுக்குள் போய் அங்கே இருந்த பாட்டியிடன் பேசினேன்” 

”எந்தப் பாட்டிடா சனியனே?”

”அந்தப்பாட்டிதான்”

”அய்யோ அவளா?” என்றாள் பாட்டி ”அவள் அதற்குள் கிழவி ஆகிவிட்டாளா?” ஏராளமானபேர் என்னைச்சுற்றி வந்து நின்று என் பேச்சை கவனித்தார்கள். என் அம்மா கூட  நம்பாமல் நின்று பார்த்தாள். அவள் எப்படி இருப்பாள் என்று குடைந்து குடைந்து கேட்டார்கள். நானே அவளைச் சரியாகப்பார்க்கவில்லை.  ஆகவே என்னை கூப்பிட்டு உட்காரச்செய்து விரிவாக நுட்பமாக விசாரணைசெய்தார்கள்

சர்ச்சை தீவிரமாக நடந்துகொண்டிருக்கும்போது நாகேஷ் மாமா நான் காணாமல்போனதை அறிந்து ஓடிவந்தார், ஒன்றும் நடக்காது என்றார் மாமா. ”அப்படி இந்தச் சோனிப்பையன் மேல் அவளுடைய கெட்ட பார்வை விழுந்திருந்தால் அது நேர் தலைகீழாகத்தான் பலிக்கும். அப்போதாவது இந்த ஒல்லிப்பிச்சான் உடம்பில் சதை போடுகிறதா பார்ப்போம்”

அம்மாவுக்கு அந்த பேச்சு பிடிக்கவில்லை. அவள் ஏதோ சொன்னாள். மாமா திருப்பிச் சொன்னார். ஆனால் அந்தச் சண்டை கூரையை முட்டவில்லை. அதனால் நாங்கள் ஒன்றும் சமீபத்தில் பாட்டி வீட்டை விட்டு கிளம்பப்போவது போல தோன்றவில்லை.

 

ஆங்கில மொழியாக்கம் சந்தன் கௌடா. தமிழாக்கம் ஜெயமோகன் 

 

சிறுகதை, விவேக் ஷன்பேக்

விவேக் ஷன்பேக் சிறுகதை 3

விவேக் ஷன்பேக் சிறுகதை- 2

முந்தைய கட்டுரைகாந்தியும் நானும்
அடுத்த கட்டுரைரோடுரோலர் சிந்தனைகள்