கிறிஸ்து:ஒருகடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களுக்கு வந்த கடிதங்களில் ஒன்று என் மனதை மிகவும் புண்படுத்தியது. ஒரு கிறித்தவர் அனுப்பியது அது. முற்றிலும் கிறித்தவ மனநிலைக்கு எதிரானது அது. ஒரு போதும் ஒரு கிறித்தவனால் சொல்லப்படக்கூடாத சொற்கள். அதற்காக உண்மையிலேயே வருந்துகிறேன். சகல நன்மைகளையும் பைபிளில் மட்டுமே காண்பதும் வெளியே உள்ள அனைத்தையும் வெறுப்பதும் விசுவாசிகளில் சிலருக்கு வழக்கமாக உள்ளது. அது உண்மையான கிறிஸ்தவனின் இயல்பே அல்ல. கிறிஸ்தவம் இன்று இந்தியாவில் ஊழலாலும் அரசியல்சூழ்ச்சிகளாலும் முதன்மைபெற்றவர்களால் கையாளப்படுகிறது. அதன் தீங்கைத்தான் கண்டுகொண்டிருக்கிறோம். நண்பரே,நாம் நெடுங்காலம் பழகியவர்கள். பேசியவர்கள். குழந்தைகளைப்பற்றிய சொற்கள் உங்களை வேதனைபப்டுத்தும் என்று நான் அறிவேன். உங்கள் நலனுக்காகவும் உங்கள் இனிய குடும்பத்தின் நலனுக்காகவும் என்னை ஆளும் தேவனிடம் மனம் கனிந்து ஜெபம் செய்கிறேன். என் ஜெபத்தை உங்கள் வாசகர்களுக்கு தெரிவியுங்கள். என்னைப்போல உங்களுக்காக ஜெபிக்கும் கிறித்தவர்களும் இருப்பார்கள் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

அன்புடன்
 

**

அன்புள்ள ·பாதர்,

உங்கள் அமைப்புக்கு உள்ளிருந்து நீங்கள் செய்யக்கூடுவது அதிகம். ஆகையால் நீங்கள் கோரியும் உங்கள்பெயரை நான் இணையத்தில் போடப்போவதில்லை.

மெதடிஸ்ட் சர்ச்சில் போதகராக இருக்கும் என் நண்பர் என்னிடம் உணர்ச்சிகரமாக பேசி ·போனை வைத்த சில நிமிடங்களில் உங்கள் கடிதம்.

நீங்கள் சொன்னது உண்மை, சில கடிதங்கள் மனதை சற்றே சங்கடப்படுத்தின. ஆனால் நான் கிறிஸ்துவை என்னைச்சூழ்ந்துள்ள கிறித்தவ சமூகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையின் எளிய துயரங்களை முறையிடவும் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கவும் விண்ணில் இருக்கும் ஒரு மேலிடமாகவே கிறிஸ்துவைக் காண்கிறார்கள். அதற்கு மேல் பைபிளையும் கிறிஸ்துவையும் அறிந்த மிகச்சிலரையே நான் கண்டிருக்கிறேன், மிகவும் பிந்தி.

நான் என் சொந்த வாழ்க்கையின் பயங்கர இருள் வழியாக அலைந்த நாட்களில் எப்படி கீதையை கண்டு கொண்டேனோ அப்படியே பைபிளையும் கண்டுகொண்டேன். பல இரவுகளில் கண்ணீருடன் பரவசத்துடன் நான் கிறிஸ்துவின் சொற்களை மீண்டும் மீண்டும் வாசித்திருக்கிறேன். தத்துவார்த்தமான ஒரு சமநிலையை கீதையில் இருந்தும் உணர்ச்சிகரமான ஒரு உன்னதநிலையை பைபிளில் இருந்தும் நான் அறிந்தேன். அதற்குமேல் என்ன என்று சொல்ல முடியாது, அது மிக அந்தரங்கமானது. அதை பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் வரும் கிறிஸ்து வழியாகச் சொல்ல முயன்றிருக்கிறேன். என் புனைவுத்தருணங்களின் உச்சங்களில் ஒன்று அது.

ஆகவே ஒட்டுமொத்த கிறித்தவ சமூகமே என்னை வெறுத்துப் பழித்துரைத்தால் கூட-  அப்படி ஒருநாளும் நிகழாது, கிறிஸ்துவின் சொற்கள் ஒருபோதும் வீணாகாது– என்னால் கிறிஸ்துவை விட்டுவிட முடியாது. அவரது சொற்களை என் ஆத்மாவால் நான் கேட்டிருக்கிறேன்.

உங்கள் பிரியத்துக்கு நன்றி

அன்புடன்

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைசுதந்திரதினம்-டிவி இல்லாமல்
அடுத்த கட்டுரைதாமஸ் கடிதங்கள் மீண்டும்