அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
“நாகலோகம்” என்றால் என்ன? நமக்கும் நாகங்களுக்கும் ஏன் அதனை தொடர்பு? நாகலோகம் பற்றி இன்னும் பல இடங்களில் காணமுடிவதால் ஒருவேளை பாரதம் எழுதப்பட்ட காலங்களில் பாம்பு மிகப்பரவலான விலங்காக இருந்து அதனாலோவென்று தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லை. அல்லது ஏன் அந்த சொல்லாடல் என்று சற்றே விளக்க முடியுமா? மிக்க நன்றி.
அன்புடன்,
TKB காந்தி
அன்புள்ள காந்தி
இதைப்பற்றி பல ஆய்வுகள் உள்ளன. சமூகவியல் நோக்கிலும் அழகியல் நோக்கிலும் மெய்யியல் நோக்கிலும்
சமூகவியல்நோக்கில் இப்படிச் சொல்லப்படுகிறது. நாகர்கள் என்ற பழங்குடிகள் இந்தியா முழுக்க இருந்தனர். அல்லது இந்தியாவின் பல பழங்குடிகள் தங்களை நாகர்கள் என்று சொல்லிக்கொண்டனர்
அவர்களை பிற பழங்குடிகள் அழித்தனர். தங்களுக்குள் இழுத்துக்கொண்டனர். அவர்களுடைய பண்பாட்டை தங்கள் பண்பாட்டின் அடித்தளமாக ஆக்கிக்கொண்டனர். ஆகவே நாகர்கள் அனைத்து பண்பாட்டுச்சித்தரிப்புகளிலும் ஊடாடியிருக்கிறார்கள்
அழகியல் நோக்கில் இப்படிச் சொல்லப்படுகிறது. நாகம் அதன் உருவத்தின் சிறப்பாலேயே மகத்தான படிமம் ஆகிறது. காதற்றது. ஒலியெழுப்பாதது. அற்றது. காலற்றது, ஆனால் விரைவானது அழகியது ஆனால் கொல்லும் விஷம் கொண்டது. நீர் போலவும் நெருப்பு போலவும் தெரிவது.
இக்காரணத்தால் அது ஒரு பெரிய கவித்துவ உருவகமாக எல்லா இலக்கியங்களிலும் உள்ளது. உலகம் முழுக்க நாகம் இல்லாத இலக்கிய மரபே இல்லை.
மூன்றாவதாக மெய்யியல் நோக்கில் நாகம் ஒரு ஆழ்படிமமாக இருக்கிறது. தன் வாலை தானே விழுங்கிக் கிடக்கும் நாகம் காலம். அமுதக்கடலில் சுருண்டுகிடக்கும் விஷம் அது. அப்படி பலவகையில் நாகம் யோகத்தில் அறியும் ஆழ்படிமமாக அமைந்துள்ளது. ஆகவே அது ஆன்மீகத்தில் அழியாமல் உள்ளது
இம்மூன்று தளங்களிலுமே பொருள்கொள்ளும்படி நான் வெண்முரசை அமைத்துள்ளேன்
ஜெ