இயக்குநர்,நடிகர் அழகம்பெருமாள் என்னுடைய நண்பர் அ.கா.பெருமாளின் மருமகன். பொதுவாக நிமிர்ந்த தலையுடன் கம்பீரமாக இருக்கும் அழகம்பெருமாள் மாமா முன் பவ்யமாக இருப்பது வேடிக்கையாக இருக்கும். அவரும் ‘டேய்’ என்று ஓர் அழைப்புக்குப்பின் ஒன்றும் பேசமாட்டார். அழகம்பெருமாள் அவரது திருமண அழைப்பிதழை 10 வருடம் முன்பு எனக்கு அனுப்பியிருந்தார். அதன்பின் அவரை சந்தித்தேன். மணிரத்தினத்தின் உதவியாளாராக இருந்தவர். அப்போது ‘டும்டும்டும்’ முடிந்து ‘ஜூட்’ தயாராகிகொண்டிருந்தது.
அழகம்பெருமாளின் வீட்டுக்குச் சென்று இரவு தங்கியபோதுதான் பாண்ட் அறிமுகமானான். கம்பீரமான ஜெர்மன் ஷெப்பர்ட். அகிம்சையில் நம்பிக்கை கொண்டவன். சடை சிலும்ப வந்து வரவேற்று குதிரை வால் போன்ற வாலை ஆட்டி கொஞ்சப்பட்டபின் நாம் வீட்டுக்குள் நுழைவதற்குள்ளாகவே பாய்ந்து உள்ளே ஓடி சோபாவில் தன்னுடைய இடத்தை காபந்துசெய்துகொண்டான். பாண்ட் பொதுவாக இலக்கியம் அரசியல் சினிமா விஷயங்களை கேட்க விரும்புபவன்
அதன்பின் அழகம்பெருமாள் வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் பாண்டை சந்திப்பதுண்டு. மே மாதத்தில் குளிர்சாதனப்பெட்டி அருகே வாழ்க்கை. ஐஸ் வாட்டரை அடிக்கடி பெருமாள் ஊற்றி வைப்பார். தூக்கம் வந்தால் ஏஸி அறையை திற என்று கைகளால் பிராண்டி கூப்பிடுவான். அழகம்பெருமாளின் வீட்டில் நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது நள்ளிரவில் என் மூக்கில் ஒரு சில்லிடல். கண்ணைத்திறந்தால் மாபெரும் சிங்க முகம். ‘என்னது நரசிம்மமா’ என்று பதறினேன், அயம் பாண்ட் என்ற பின் என்னருகே படுத்துக்கொண்டான்.
அழகம்பெருமாள் காரின் சாவியை கையால் தொட்டால் பான்ட் ஓடிப்போய் கார்க்கதவருகே நிற்பான். கிளம்பச் சொன்னால் மறுத்துவிடுவான். பாண்டை தண்டிக்க அழகம்பெருமாள் ஒன்றுதான் செய்வார். கட்டிப்போடும் சங்கிலியை கையில் எடுப்பார். பவ்யமாக போய் மூலையில் சுருண்டுகொண்டு ஏறிட்டுப் பார்ப்பான்.
சென்ற டிசம்பர் 20 ஆம் தேதி அழகம்பெருமாள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். பாண்ட் மாடியிலேயே என்னை அடையாளம் கண்டுகொண்டு வருக வருக என்றான். உள்ளே போய் அவனை தட்டி தடவினேன். பாண்டை பார்த்து ஐந்து வருடம் இருக்கும். கொஞ்சம் வயதாகிவிட்டிருந்தான். ஒரு நிதானம் பக்குவம் வாழ்க்கையைப்பற்றிய சமரச நோக்கு எல்லாம் வந்திருந்ததாக பட்டது.
கொஞ்ச நேரத்தில் ஓவியர் ஜீவா வந்தார். “அய்யோ நாய்! நாய்!” என்று பதறினார். “சும்மா இருங்க, அவன் நாய்னு அவனுக்கு இன்னும் தெரியாது” என்றார் பெருமாள். ஐந்து நிமிடங்களில் ஜீவாவுக்கு அது பரிணாமத்தில் மனிதனை கொஞ்சம் தாண்டிச் சென்று விட்ட விவேகி என்று புரிந்து விட்டது.
ஜீவா நாஞ்சில் நாடனுக்கும் எனக்கும் இன்னும் பலருக்கும் நண்பர். திரை விமரிசகர். ரசனையில் அவர் எழுதி வரும் கட்டுரைகள் தான் தமிழில் சினிமா பற்றிய கட்டுரைகளில் சிறந்தவை என்று நான் எழுதியிருக்கிறேன். ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் அண்ணா.
பாண்ட் கொஞ்சம் நொண்டினான். என்ன என்றேன். நடை கூட்டிச்சென்றபோது காரில் கால் தட்டுபட்டுவிட்டது, சின்ன அடிதான் என்றார் அழகம்பெருமாள். உள்ளே போய் காயத்திருமேனி எண்ணை கொண்டு வந்து தேய்த்து உருவி விட்டார். நாய்கள் இத்தனை ஆவலாக மருந்து போட்டுக்கொள்ளாதே, இந்த அளவுக்கு முதிர்ச்சியா என எண்ணி வியந்தேன்.
ஆனால் பெருமாள் கையை எடுத்ததுமே மொத்த எண்ணையையும் சுத்தமாக நக்கிவிட்டு இன்னும்போடு என்றான் பாண்ட். பலமுறை போட்டு, நக்கி, சுவைகண்டு, எண்ணை பிடித்து போய் விட்டிருந்தது. புட்டியை திறந்து குடித்தாலும் ஆச்சரியமில்லை.
ஜீவா கிளம்பினார். விடைபெறும் போது பாண்ட் சம்பிரதாயமாக வாலை ஆட்டினான். ஜீவா எதையோ எடுக்க உள்ளே காலடி எடுத்து வைத்ததும் அவரை முந்தி பாய்ந்து போய் தன் சோபாமூலையில் படுத்துக்கொண்டான்.
சரிதான், பாண்ட்டுக்குள் அந்த நாய்க்குட்டி இன்னமும் இருக்கிறது என எண்ணிக்கொண்டேன். நாய்க்குள் இருக்கும் அந்த அழியாத நாய்க்குட்டியைத்தான் நாம் ஓயாமல் கொஞ்சுகிறோம்