பட்டாம் பூச்சி-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

பாப்பிலான் (Papillon) குறித்த உங்களது கட்டுரையைப் படித்தேன்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். பாப்பிலான்தான் என்னுடைய ஹீரோ. அது குமுதத்தில் தொடராக வரும்போதே படித்திருக்கிறேன். எனக்குப் பத்து அல்லது பன்னிரெண்டு வயதிருக்கலாம் அப்போது. தமிழில் படிக்கையில் அதன் தாக்கம் எதுவும் பெரிதாக என்னுள் இல்லை. ஒரு வித்தியாசமான, சுவாரசியமான தொடராகத்தான் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் கல்லூரி நூலகத்தில் படிக்கக் கிடைத்த ஆங்கிலப் பதிப்பு எனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது எனலாம்.

பாப்பிலான் ஒரு குற்றவாளியாக, கொலைகாரனாகக் கூட இருக்கலாம். அல்லது இல்லாமலிருக்கலாம். அது குறித்து எனக்குக் கவலையில்லை. ஆனால் எந்தச் சூழ்நிலையையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெற வைக்கும் Against all odds என்னும் பெரும் போராட்ட குணத்தை நான் பாப்பிலானிடமிருந்தே பெற்றேன். இதனைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமுமில்லை. நம்மில் பெரும்பாலோரைக் கேட்டால் அவர்கள் விவேகானந்தரையோ, அரவிந்தரையோ, பில்கேட்சையோ, ஸ்டீவ் ஜாப்ஸையோ அல்லது இன்னபிறரையோ ஆதர்சமாக, வழிகாட்டியாகச் சொல்வார்கள். ஆனால் ஒரு கொலைக் குற்றவாளியாக தீவாந்திரச் சிறையில் அடைக்கப்பட்ட பாப்பியானை எனது ஆதர்சமாகச் சொன்னால் விசித்திரமாகப் பார்ப்பார்கள்.

கல்லூரிப் படிப்பிற்குப் பின்னர் எங்கள் வீட்டில் நிலவிய கடுமையான வறுமைச் சூழ்நிலையும் அதனால் நானடைந்த அடைந்த அவமானங்களும் வேறொருவராக இருந்திருந்தால் மீள முடியாத படுகுழியில் தள்ளி விட்டிருக்கும். அந்த நேரத்தில் என் முன்னே இரண்டே இரண்டு வழிகள்தான் இருந்தன. ஒன்று, அவமானத்தில் அழுந்தி ஏதாவதொரு சிறியவேலையில் சேர்ந்து வயிற்றிற்குச் சோறிட்டுக் கொள்வது. அல்லது பாப்பிலானைப் போல எதிர்த்துப் போராடி ஜெயிப்பது. நான் இரண்டாவது வழியைத் தேர்ந்தேடுத்தேன். அதையெல்லாம் எழுதினால் இன்னொரு சினிமாக் கதை போலிருக்கும். எனவே அதை விட்டுவிடலாம். :)

இன்றளவும் என்னை அவமானம் செய்பவர்களை, ஏளனம் செய்பவர்களை நான் மனதிற்குள் பூசிக்கிறேன். அவர்கள்தான் என்னை உசுப்பிவிட்டு உத்வேகமளிப்பவர்கள். அவர்கள் அவ்வாறு என்னை கீழ்த்தரமாக நடத்தியிருக்காவிட்டால் நான் முன்னேறியிருக்கவே மாட்டேன். பாப்பிலானிடமிருந்து கற்றது அது.

பாப்பிலான் திரைப்படமும் நன்றாகவே எடுக்கப்பட்டிருந்ததாக நினைக்கிறேன். ஸ்டீவ் மக்வீனும், ஹாஃப்மெனும் அற்புதமாக நடித்திருப்பார்கள்.

அன்புடன்,
நரேந்திரன்

அன்புள்ள நரேந்திரன்

பட்டாம்பூச்சி அப்படி பலருடைய வாழ்க்கையை ஒளிபெறச்செய்த ஆக்கம். அதைப்பற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளது.

இருபதாம்நூற்றாண்டின் தொடக்கத்தில் இலக்கியம் மானுடத்தின் கௌரவம் என்ற கருவை அதிகம் பேசியது. நாம் இன்று காணும் உலகை அந்த விவாதம் மூலம் உருவாக்கி அளித்தது பட்டாம்பூச்சி அந்த வரிசையில் வரும் படைப்புகளில் ஒன்று

இதே தளத்தைச் சேர்ந்தது என்று நான் நினைக்கும் இன்னொரு ஆக்கம் சான் மிசேலின் கதை [ The_Story_of_San_Michele – Axel Munthe ]

நெடுநாட்களுக்கு முன் காஃப்கா, கம்யூ வாசித்து வாழ்க்கைமேல் நம்பிக்கை இழந்த நண்பன் ஒருவனுக்கு இவ்விரு நூல்களையும் நான் வாங்கி அனுப்பினேன். இன்று அந்நண்பருடன் இணைந்து ஒரு சினிமா செய்யவிருக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 15
அடுத்த கட்டுரைஎழுத்தாளனுக்கு பேஸ்புக் தேவையா?