இலக்கியமும் சமூகமும்

கலேவலா – தமிழ் விக்கி

ஒரு மொழியில் இலக்கியம் ஏன் தேவையாகிறது? ஒரு சமூகத்துக்கு ஏன் இலக்கியம் தேவையாகிறது?

தனிமனிதனுக்கு இலக்கியத்தின் பங்களிப்புகள் ஏராளமானவை. ஒவ்வொரு தனிமனிதனும் அறம், ஒழுக்கம், நம்பிக்கைகள் போன்ற அனைத்தையும் இலக்கியம் வழியாகவே அடைந்திருக்கிறான். இங்கிருக்கும் ஒவ்வொருவரும் இலக்கியம் வழியாகத்தான் உங்களுடைய அத்தனை சிந்தனைகளையும் அடைந்திருப்பீர்கள்

உடனே சிரித்துவிடவேண்டாம். ஒரு வார்த்தை இலக்கியம் வாசிக்காதவர்கள் கூட இலக்கியத்தை அறிந்திருப்பார்கள். நாம் கருவிலே இருக்கும்போது நம் அம்மா உண்ட உணவும் நம் உடலில் ஓடும் அல்லவா? நம் பாட்டி சாப்பிட்ட உணவுகூட நம் உடலில் ஓடும் இல்லையா?

எது சரி எது தப்பு என நாம் எப்படி முடிவு செய்கிறோம்? எதைக்கேட்டதும் மனம் நெகிழ்கிறோம்? எதைக்கேட்டதும் கடுமையான கோபம் கொள்கிறோம்? யோசித்திருக்கிறீர்களா? அவற்றை எல்லாம் தீர்மானிக்கும் சில விதிகள் நமக்குள் உள்ளன. அவை நம்பிக்கைகளாகவும் உணர்ச்சிகளாகவும் உள்ளன. அதைத்தான் விழுமியங்கள் என்கிறோம்.

அந்த விழுமியங்களை நம் அன்னையும் தந்தையும் சிறுவயதில் கதைகளாகத்தான் நமக்குச் சொல்லியிருப்பார்கள். அந்தக் கதைகள் எல்லாமே நம்முடைய இலக்கியத்தில் இருந்து வந்தவையாக இருக்கும். நாம் நேரடியாக இலக்கியத்தை வாசிக்காமல் இருந்தாலும் இலக்கியம் நமக்குள் வந்து சேர்வது இப்படித்தான்.

மலையாள திரைப்பட எழுத்தாளர் லோகிததாஸ் சொன்னது இது. மகாபாரதம் ராமாயணம் பற்றி பேச்சு வந்தது. நம் நாட்டில் லட்சம் பேரில் ஒருவர் கூட மகாபாரதம் கதையை வாசித்திருக்க மாட்டார்கள் என்றார் ஒரு நண்பர். ஆனால் அத்தனைபேருக்கும் அடிப்படை நம்பிக்கைகளை மகாபாரதம்தான் தீர்மானிக்கும் என்றார் லோகிததாஸ்

சரி பார்த்துவிடுவோம் என்று இருவரும் பந்தயம் கட்டினார்கள். அன்று சாயங்காலத்துக்குள் எத்தனைபேர் ஏதேனும் வழியில் மகாபாரதத்தை குறிப்பிடுகிறார்கள் என்று பார்க்க முடிவெடுத்தனர். மூன்றுபேராவது மகாபாரதத்தைப்பற்றிச் சொல்வார்கள் என்று லோகிததாஸ் பத்தாயிரம் ரூபாய் பந்தயம் கட்டினார்.

அரைமணிநேரத்தில் ஒருவர் ‘ஆளு நல்லா பீமன் மாதிரி இருப்பான்…அதை நம்பி பொண்ணக் குடுத்தோம்’ என்று சொல்லிக்கொண்டு போனார். இன்னொருவர் ‘பெரிய அர்ச்சுன மகாராசான்னு நினைப்பு. மாசம் நூறு ரூபா வருமானமில்ல’ என்று யாரையோ திட்டிக்கொண்டு போனார். கொஞ்ச நேரத்தில் இன்னொருவர் ‘எச்சில் தொடாம தின்ன துரியோதனன் ஆன கெதி தெரியும்ல?’ என்றார். பகலுக்குள் பதினேழு முறை மகாபாரதம் காதில் விழுந்தது

நண்பர் அயர்ந்து போனார். இப்படித்தான் இலக்கியம் இங்கே ஒவ்வொருவர் மனதிலும் வாழ்கிறது. ஒருநாளில் கண்ணகியை எத்தனைபேர் எப்படியெல்லாம் குறிப்பிடுகிறார்கள் என்று பாருங்கள். சிலப்பதிகாரத்தை அதிகம்பேர் வாசிக்கவேண்டியதில்லை. சிலப்பதிகாரம் எல்லா மனங்களிலும் வாழும்

இன்னொரு வகையிலும் இலக்கியம் வாழ்கிறது. தூள் என்று ஒரு சினிமா. விக்ரம் நடித்தது. ஒரு ஊரிலே பெரிய அநீதி. அந்த ஊருக்கு புஜபலபராக்ரமியான விக்ரம் வருகிறார். அநீதியை தட்டிக்கேட்கிறார். வில்லனை வீழ்த்துகிறார்

அதேகதை மகாபாரதத்தில் உள்ளது. பீமன் ஓர் ஊருக்கு வருகிறான். அங்கே எல்லாரும் சோகமாக இருக்கிறார்கள். கேட்டால் அங்கே பகாசுரன் என்பவன் தினம் ஒரு இளைஞனை ஒரு வண்டிச் சோற்றுடன் கொன்று தின்றுகொண்டிருக்கிறான். அன்றைக்கு ஓர் அன்னையின் மகன் சோறுடன் உணவாகச் செல்லவேண்டும். அவள் அழுதுகொண்டிருக்கிறாள். குந்தி சொல்கிறாள், பரவாயில்லை என் மகன் செல்லட்டும் என்று

பீமன் வண்டி நிறைய சோறுடன் செல்கிறான். செல்லும் வழியிலேயே வண்டிச்சோற்றை தின்று விடுகிறான். பகாசுரன் அதைக்கண்டு கோபம் கொண்டு அடிக்க வருகிறான். கிளைமாக்ஸ் ஃபைட்! கொஞ்சம் கிராஃபிக்ஸ் உண்டு. பகாசுரன் சாகிறான். பீமன் ஊரைக் காப்பாற்றுகிறான்

நம் சினிமாக்கதைகளுக்கு உரிமைத்தொகை [காப்பிரைட்] கொடுப்பதாக இருந்தால் எல்லா சினிமாவுக்கும் வியாசனுக்கு பணம் கொடுக்கவேண்டும். வியாசர் கோடிக்கணக்கில் சம்பாதிப்பார்!

இதுதான் இலக்கியம் தனி மனிதனுக்கு அளிக்கக்கூடிய பங்களிப்பு. அவனுக்கு அது விழுமியங்களை அளிக்கிறது.

அப்பா அம்மா அளிக்கக்கூடிய விழுமியங்களை மட்டும் நம்பி அப்படியே வாழ்பவர்கள் பெரும்பாலானவர்கள். மிகச்சிறுபான்மையினர் விழுமியங்களை மறுபரிசீலனை செய்கிறார்கள். இது சரியா, இப்படிச் செய்யலாமா என்று யோசிக்கிறார்கள். அவர்கள் நேரடியாக இலக்கியத்தை வாசிக்கிறார்கள்.

சிந்திக்கக்கூடியவர்கள், அதாவது சமூகத்தில் இருந்து சற்று மேலே எழுந்து வாழ விரும்பக்கூடியவர்கள் இலக்கியத்தை வாசிக்கிறார்கள். இலக்கியம் வழியாக மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் இலக்கியம் எழுதப்படுகிறது. நீங்கள் எந்த வகை என்பதை நீங்கள்தான் முடிவெடுக்கவேண்டும்

சரி, நான் முதலில் கேட்டது ஒரு சமூகத்துக்கு ஏன் இலக்கியம் தேவை என்று. அதைப்பற்றி யோசித்திருக்கிறீர்களா?

ஒருசில உதாரணங்களைச் சொல்கிறேனே. பெரும்பாலான ஆப்ரிக்க நாடுகளை இன்று பார்த்தால் அவர்கள் ஒரு நாடாகவோ சமூகமாகவோ உருவாகாமல் இருப்பதைக் காணலாம். அவர்கள் தனித்தனி இனக்குழுக்களாக பிரிந்திருக்கிறார்கள். ஒவ்வொரு இனக்குழுவும் ஒன்றுடன் ஒன்று கடுமையாகப் போர் செய்தபடியே இருக்கிறது.

ஆகவே அந்நாடுகளில் உள்நாட்டுப்போர் முடிவுறவே இல்லை. அந்நாடுகளில் வளர்ச்சி இல்லை. அந்நாடுகளில் செல்வங்களை அன்னியர் கொள்ளையடித்துச்செல்கிறார்கள். அங்கெல்லாம் பெரிய பஞ்சம் வந்து லட்சக்கணக்கான மக்கள் செத்து அழிகிறார்கள்.

நீங்களே டிவியில் பார்த்திருக்கலாம், எலும்பும் தோலுமாக குழந்தைகள் கைநீட்டி நின்றிருப்பதை. சாகக்கிடக்கும் குழந்தைக்கு அருகே கழுகு காத்திருப்பதை படமாகக் கண்டு கண்ணீர் விட்டிருப்பீர்கள். ஆனாலும் அவர்கள் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை ஒற்றுமைப்படுத்த என்ன செய்வதென்றே எவருக்கும் தெரியவில்லை.

உலகில் உள்ள அத்தனை சமூகங்களும் அப்படித்தான் இருந்திருக்கின்றன. மனித குலம் வளர்ச்சி பெறும் விதம் அப்படித்தான் அமைந்திருக்கிறது. முதலில் சிறிய இனக்குழுக்களாக இருப்பார்கள் மக்கள். அதன்பிறகு கொஞ்சம் பெரிய இனக்குழுக்களாக ஆவார்கள். அந்த இனக்குழுக்கள் ஒன்றாக மாறி ஒரு சமூகமாக ஆகும்.

அப்படி சமூகங்கள் உருவானபின்னர்தான் அம்மக்களிடையே அமைதி உருவாகும். அனைவருக்கும் பொதுவான அறமும் நீதியும் ஒழுக்கமும் உருவாகும். அவற்றின் அடிப்படையில் அந்தச் சமூகம் செயல்படத் தொடங்கும்

இப்படிப்பட்ட சமூக உருவாக்கம் நிகழும்போதுதான் இலக்கியங்கள் தேவையாகின்றன. இலக்கியங்கள் அந்த சமூகங்களை உருவாக்குகின்றன. கான்கிரீட் கட்டிடம் கம்பி, மணல், செங்கல் எல்லாம் கலந்தது. சிமிண்ட்தான் அதை ஒட்டி ஒன்றாக நிலைநிறுத்தியிருக்கிறது. சமூகம் ஒரு கான்கிரீட் கட்டிடம். அதன் சிமிண்ட் என்பது இலக்கியம்தான்

ஆப்ரிக்காவில் காங்கோ,கென்யா, எதியோப்பியா, சூடான் போன்ற நாடுகளெல்லாம் இனக்குழுச் சண்டைகளால் அழிந்துகொண்டிருக்கின்றன. அதே மாதிரியான ஒரு நாடுதான் நைஜீரியா. அந்த நாட்டிலும் இனக்குழுக்கள் உண்டு. அவர்கள் நடுவே கடுமையான சண்டைகளும் நடந்துகொண்டிருந்தன

ஆனால் இருபதாம் நூற்றாண்டு முதல் அங்கே வலிமையான இலக்கியங்கள் உருவாக தொடங்கின. ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருந்த வொலே சோயிங்கா என்ற எழுத்தாளர் அதை விட்டுவிட்டு நைஜீரிய மொழியில் எழுத ஆரம்பித்தார். பென் ஓக்ரி என்ற மாபெரும் எழுத்தாளர் அங்கே எழுத ஆரம்பித்தார். ஃபெமி ஓசோபிசான், எலச்சி அமாடி போன்ற பல எழுத்தாளர்கள் எழுத ஆரம்பித்தனர்

அப்படி ஒரு வலிமையான இலக்கியம் உருவானபோது அங்கே கொஞ்சம் கொஞ்சமாக இனக்குழு வெறுப்புகள் மறைந்தன. ஒவ்வொரு இனக்குழுவும் இன்னொரு இனக்குழுவை அறிந்துகொள்ளத் தொடங்கியது எல்லா இனக்குழுக்களுக்கும் பொருத்தமான நெறிகளும் அறங்களும் வந்தன.அவர்கள் ஒரே சமூகமாக மாறினர்

காங்கோவுக்கும் நைஜீரியாவுக்கும் என்ன வேறுபாடு? காங்கோவில் இலக்கியம் வலுவாக இல்லை. ஆகவே அது ஒரு சமூகமாக ஆகவில்லை. நைஜீரியாவில் இலக்கியம் வலுவாக உள்ளது. சமூகம் உருவாகி விட்டது . ஆகவே காங்கோ அழிகிறது நைஜீரியா வளர்கிறது.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் கரேலியா ஃபின்லாந்து என்று இரண்டு நாடுகள் இருந்தன. இரண்டு நாடுகளுக்கும் நடுவே கடுமையான மனவேறுபாடு இருந்தது. ஆனால் அவர்கள் ஒரே மக்கள். அவர்கள் ஒன்றாக இருந்தால்தான் முன்னேறமுடியும் . அந்த மண்ணின் வளங்களை பயன்படுத்தமுடியும். அந்த மண்ணின் எதிரிகளை எதிர்கொள்ளமுடியும்

பின்லாந்து அன்று ரஷ்யாவின் ஆதிக்கத்தின் கீழே இருந்தது. ரஷ்ய ஆதிக்கத்துக்கு எதிராக பின்னிஷ் மக்களையும் கரேலிய மக்களையும் ஒன்றாக்கவேண்டும். ஒரே சமூகமாக ஆக்கவேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை

அவர்களை எப்படி ஒன்றாக ஆக்குவது? அவர்கள் மொழிக்குள் மிகச்சிறிய வேறுபாடுதான் உள்ளது. பின்னிஷ் மொழியிலும் சரி கரேலிய மொழியிலும் சரி பெரிய காப்பியங்கள் ஏதும் இல்லை. பெரிய இலக்கிய வரலாறுகூட அவர்களுக்கு கிடையாது.

அவர்களுக்கு ஒரு வாய்மொழிக் காப்பியம் இருந்தது. அதன் பெயர் கலேவலா, எலியாஸ் லோன்ராட் [ Elias Lönnrot] என்ற மொழியியல் அறிஞர் அந்த காப்பியத்தை வாய்மொழி மரபில் இருந்து அச்சுக்குக் கொண்டுவந்தார். 1835ல் அது நூலாக வந்தது.

கரேலியாவையும் பின்லாந்தையும் ஒற்றை சமூகமாக ஆக்கியது அந்த காப்பியம்.அந்த மக்களை ஒன்றாக்கியது. அவர்களின் விழுமியங்களை தொகுத்து அவர்களை ஒரு நாடாக கட்டி எழுப்பியது. அவர்கள் சுதந்திரப்போரில் ஈடுபட்டார்கள். ரஷ்ய ஆதிக்கத்தை ஒழித்து வெற்றிபெற்றார்கள்.

ஒரு காப்பியம் என்ன செய்யும் என்பதற்கு கலேவலா மிகச்சிறந்த உதாரணம். பின்லாந்து நாட்டின் எல்லையை கலேவலாதான் முடிவு செய்தது. அந்த நாட்டின் பண்பாடு என்ன அறம் என்ன அதன் மூதாதை மரபு என்ன அனைத்தையும் அந்தக் காப்பியம் முடிவுசெய்தது. இன்று அது பின்லாந்தின் தேசியக்காப்பியமாக உள்ளது

பின்லாந்து அரசு அந்நூலை உலகம் முழுக்க கொண்டு செல்கிறது தமிழில் ஆர்.சிவலிங்கம் (உதயணன்) அதை மொழியாக்கம் செய்தார்.(நாட்டார்த்தன்மையும் வீரசாகசத் தன்மையும் கொண்ட கலேவலாவை செயற்கையான, திருகலான , தேய்வழக்குகள் மிக்க மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது)

நண்பர்களே, அவர்களெல்லாம் இலக்கியங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். கண்டுபிடிக்கிறார்கள். நமக்கோ மகத்தான இலக்கியங்கள் ஏற்கனவே இருக்கின்றன. அவற்றை நாம் கற்காமல் மறந்துகொண்டிருக்கிறோம்.

நம்மை ஒரே சமூகமாக ஆக்கக்கூடியவை நம் இலக்கியங்கள்தான். நம் பண்பாடு என்ன என்று நமக்கே கற்பிக்கக் கூடியவை. நம்முடைய அறம் என்ன என்று நமக்கு சொல்லக்கூடியவை. அவற்றை இழந்தால் நாம் நம் சமூகத்தையே இழப்போம். நம் சமூகம் சிதறினால் நம் மண் அன்னியமாகும். நம் சந்ததியினரின் வாழ்க்கை அழியும்

மூன்று பெருநூல்களை தமிழின் அடிப்படைகள் என்று சொல்வார்கள். யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவன் போல் இளங்கோவைப்போல் பூமிதனில் கண்டதில்லை என்று பாரதி அந்த பட்டியலை நமக்கு அளித்திருக்கிறார்

தமிழகம் ஒருகாலத்தில் ஆப்ரிக்கா போலத்தான் இருந்தது. இனக்குழுச்சண்டைகள். உள்நாட்டுப்போர்கள். சங்ககாலம் முழுக்க நாம் காண்பது போர்களைத்தான். சிறிய அரசர்களை பெரிய அரசர்கள் அழித்தனர்.

அந்தக்காலகட்டத்தில்தான் இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம் வந்தது. வடவேங்கடம் தென்குமரி ஈறாக தமிழ்கூறும் நல்லுலகம்’ என தமிழகத்தின் எல்லைகளை அது வகுத்தது. முடியுடை மூவேந்தர்களை அடையாளம் காட்டி தமிழகத்தின் அரசியல் மரபை நிலைநிறுத்தியது. அரசியல்பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும் உரைசால்பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவதும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதும் தமிழர் மெய்யியலின் அடிப்படை என வகுத்தது

அதன்பின் வள்ளுவன் எழுதிய குறள் நம்முடைய பண்பாட்டின் மூலநூல் அது. அறம்பொருள் இன்பம் என்று அது நம்மை வகுத்துரைத்துவிட்டது. அறத்தின் மூர்த்தியாகிய ராமனைப் பாடிய கம்பன் தமிழ் மரபின் உச்சமான படைப்பை ஆக்கினான்

இந்த மிகப்பெரிய மரபு நமக்கிருக்கிறது. நம் பண்பாட்டின் இலக்கணமே இந்நூல்களில் இருக்கிறது, தமிழ்பண்பாடு ஒரு ஏரி என்றால் இவைதான் கரைகள். இவை அழிந்தால் தமிழ்பண்பாடே அழிகிறது என்றுதான் பொருள்

நண்பர்களே, நாம் தமிழகத்தில் பயணம் செய்தால் இங்குள்ள அத்தனை ஏரிகளும் கரையிடிந்து கிடப்பதைக் காணலாம். பாழடைந்து குப்பைமேடாகக் கிடக்கும் ஏரிகள் போல ஆகிக்கொண்டிருக்கிறது தமிழ்ப்பண்பாடும்.

எங்கோ சிலர் அந்த ஏரிக்கரைகளுக்காக கவலைப்படுகிறார்கள். அந்த ஏரிக்கரைகளை பாதுகாக்க போராடுகிறார்கள். அவர்களை நாம் அறிவதே இல்லை.

அப்படிப்போராடுபவர்கள்தான் நவீன எழுத்தாளர்கள் அவர்களுக்கு புகழ் இல்லை. பணம் இல்லை. அவர்களை நீங்கள் கேள்விப்பட்டே இருக்கமாட்டீர்கள்.

பாரதி நவீன இலக்கியத்தின் தொடக்கம். புதுமைப்பித்தன், க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி,கி.ராஜநாராயணன் என்று பலர் இங்கே எழுதியிருக்கிறார்கள். பலர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். உலகில் எந்த மொழியிலும் அவர்களுக்கு சமானமான தரத்தில் எழுதுபவர்கள் மிகக்குறைவுதான் அவர்கள் தான் உடைந்துகொண்டிருக்கும் இந்த ஏரிக்கு கரையாக இன்று இருப்பவர்கள்

இந்தமேடையில் நான் சொல்லவிருப்பது இது ஒன்றே. தன் மரபை பேணிக்கொண்ட சமூகங்களே வாழ்கின்றன. நாம் வாழ்வதும் அழிவதும் நம் தேர்வுதான்.

நமக்கு நம் முன்னோர் தொடர்ந்து ஒரு விஷயத்தை கற்பிக்கிறார்கள். வாழ்வது என்பது பிழைப்பது என்பதுதான் அது. நம் தந்தையர் நம்மை எதையும் படைக்காதவர்களாக எதையும் சாதிக்காதவர்களாக வெறுமே பிழைத்துக்கிடப்பவர்களாக ஆக்க முயல்கிறார்கள். அவர்கள் அப்படி வாழ்ந்தவர்கள். அவர்கள் அறிந்தது அதையே

‘நான் செட்டில் ஆகிவிட்டேன்’ என்கிறார்கள். ’என் மகன் செட்டில் ஆகவேண்டும்’ என்கிறார்கள். எதில் செட்டில் ஆவது? எங்கே செட்டில் ஆவது? சோறில் கறியில் குழம்பில் கூட்டில் வீட்டில் சாதியில் மதத்தில் செட்டில் ஆவது அல்லவா அது?

எதிலும் செட்டில் ஆகாதவர்களுக்கானது இலக்கியம். அவர்களே நம் மரபை வாழவைப்பவர்கள். நாளை நம் பண்பாட்டை முன்னெடுப்பவர்கள். படைப்பவர்கள். அவர்களுக்கானது இலக்கியம்

அத்தகைய சிலரேனும் இந்த அரங்கில் என் முன் இருக்கலாம். அவர்களுக்காகவே பேசுகிறேன். அவர்கள் இச்சொற்களைக் கேட்கட்டும்

[27-8-2014 அன்று சென்னை தாம்பரம் கிறித்தவக்கல்லூரி அவ்வை மன்றத்தின் விழாவில் பேசிய உரை]

மறுபிரசுரம். முதற்பிரசுரம் Aug 31, 2014

முந்தைய கட்டுரைஅறம்
அடுத்த கட்டுரைவல்லினம் கதைகள்