«

»


Print this Post

மனுஷ்யபுத்திரன்,சாரு நிவேதிதா,உயிர்மை – ஒரு விளக்கம்


அன்புள்ள ஜெ,

25.12.2009 அன்று சென்னையில் நடந்த உயிர்மை கூட்டத்துக்கு போனேன். அங்கே ஒரு புத்தகத்தில் நீங்கள் மனுஷ்யபுத்திரனின் உடலூனத்தைப் பற்றி எழுதிவிட்டீர்கள் என்று சாரு நிவேதிதா உங்களை மிக அவமரியாதையாக ‘டேய் முட்டாள், வாடா போடா’ என்றெல்லாம் பேசினார் . சாரு நிவேதிதா அன்று மிகக்கேவலமாக பேசினார். நாகரீகவரம்புகளுக்குள் நிற்கவில்லை.

சாரு நிவேதிதா உயிர்மை வெளியிட்ட அந்தப்புத்தகத்தை அந்த மேடையில் கிழித்து வீசி அதை அனைவரும் காறித் துப்ப வேண்டும் என்று சொன்னார். பிரபஞ்சன் உட்பட மேடையில் இருந்த பலர் அதை கைத்தட்டினார்கள். அதை உங்களிடம் போனில் சொன்னேன். நீங்கள் சரிதான் என்று விட்டு விட்டீர்கள். ஆனால் என் மனம் கேட்கவில்லை. என் அபிமானத்திற்குரிய எழுத்தாளர் நீங்கள். நீங்கள் அப்படி எடுத்துக் கொண்டாலும் என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு எழுத்தாளரை அவமரியாதை செய்வதை எப்படி எடுத்துக் கொள்வதென்றே தெரியவில்லை. இதெல்லாம் ரொம்ப அநியாயம். ஒருவர் பொறுத்துப்போகிறார் என்பதற்காக அரைவேக்காட்டு ஆசாமிகள் இப்படியெல்லாம் திட்டுவது அராஜகம். உயிர்மை இதற்கெல்லாம் எப்படி இடம் கொடுக்கிறது? நீங்கள் இதை மனுஷ்யபுத்திரனிடம் கேட்டாக வேண்டும்.

ஸ்ரீனிவாஸ் கண்ணன்

அன்புள்ள ஸ்ரீ,

தமிழில் சாதாரணமாக நடப்பது இது. தமிழைப்பற்றி ஏதோ சொன்னார் என்று ஜெயகாந்தனை நாய் என்று ஊர் ஊராக திட்டினார்கள். அசோகமித்திரன் தமிழகத்து பிராமண வெறுப்பு பற்றி கருத்துச் சொன்னார் என்பதனால் பிணமே என்று திட்டினார்கள். சுந்தர ராமசாமியை ‘பிள்ளைகெடுத்தாள் விளை’ கதைக்காக கேவலமாக வசை பாடினார்கள். எஸ்.ராமகிருஷ்ணனையும், யுவன் சந்திரசேகரையும் குட்டிரேவதி சச்சரவில் ஆபாசமாக வசைபாடினார்கள்.

இது ஒரு தமிழ் மனநிலை. படைப்பூக்கத்துடன் செயல்படுபவர்களைப்பற்றி நம் ஊரில் அரைவேக்காடுகளுக்கு ஓர் உள்ளார்ந்த அச்சம் இருக்கிறது. அவனது படைப்பூக்கநிலை அவனுக்கு அளிக்கும் அதிகாரத்தைப்பற்றிய அச்சம். அது தான் தங்களை அரைவேக்காடுகளாக காட்டுகிறது என்ற அச்சம். இது எப்போதும் தொடரக்கூடியது. எனக்குப் புதியதும் அல்ல.

நம் சூழலில் அரைவேக்காடுகளே பொதுவெளியில் அதிகம். எழுதுபவர்களிலும் சரி வாசிப்பவர்களிலும் சரி. சாருவை விட பெரிய அரை வேக்காடுகள் அவரைவிட ஐம்பது மடங்கு பிரபலமாக இருக்கும் மண் இது.

எந்த எழுத்தாளனையும் வாசிக்காமல் கருத்துக்களை மட்டுமே உருவாக்கிக் கொள்பவர்கள், வம்புச் சண்டைகளை மட்டுமே கவனிப்பவர்கள் நம்மிடம் அதிகம். அதிலும் சமீபமாக அத்தகையோர் கொஞ்சம் அதிகரித்திருக்கிறார்கள்.  அவர்கள் இன்று சாருவையும்  அவர் வழியாக உயிர்மையையும் மையம் கொண்டிருக்கிறார்கள்.

சாரு ஒரு வெறும் கேளிக்கையாளர், கோமாளி என்பதனால் அந்தக் கும்பலை மகிழ்ச்சிப் படுத்துவதற்காகவே இந்த மாதிரி நாடகங்களை நடிக்கிறார். அது மனுஷ்யபுத்திரனின் வணிகத்துக்கு உதவியாக இருப்பதனால் அவர் ஊக்குவிக்கிறார்.

இவர்களை எவ்வகையிலேனும் பொருட்படுத்த ஆரம்பித்தால் எழுத முடியாது. நான் இந்தக்குறிப்பை எழுதுவதே தொடர்ச்சியாக வரும் வாசகர் கடிதங்கள், அழைப்புகளுக்காகவே. [‘இரவு’ என்ற சிறிய நாவல் ஒன்று ஆரம்பித்திருக்கிறது. அதில் இருக்கிறேன்]

========

அன்புள்ள ஜெ,

‘கடவுளற்றவனின் பக்திக்கவிதைகள்’ கட்டுரையில் மனுஷ்யபுத்திரனின் உடலூனத்தை நீங்கள் சொன்னது தப்பு என்று சிலர் சொன்னார்கள். [உயிர்மைக்கூட்டத்தில் சாரு உங்களை மிகக்கேவலமாக வசைபாடினார் என்றும் அங்கிருந்தவர்கள் அதை கைதட்டி ஊக்குவித்தார்கள் என்றும் கேள்விப்பட்டேன்] அந்தக் கட்டுரையில் அதைப்பற்றி என்ன தப்பாக இருக்கிறது என்றும் எனக்குப்புரியவில்லை. ஒருவருடைய  அந்தரங்கத்தைப்பற்றியோ தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விமரிசனங்களில் எழுதவேண்டுமா என்ற எண்ணமும் ஏற்படுகிறது. குழப்பமாக இருக்கிறது. உங்கள் கருத்தை தெளிவுபடுத்த முடியுமா?

சிவம்

இந்த விஷயத்தைப்பற்றி விரிவான ஒரு விவாதம் என் இணையதளத்தில் பேசும்  தீவிரமான விஷயங்களை திசை திருப்பிவிடும் என்று எண்ணுவதனால் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்.

ஓர் எழுத்தாளனின் அந்தரங்க விஷயங்களை முழுக்க கணக்கில் கொண்டு அந்த எழுத்தாளனின் ஆக்கங்களை ஆராயும் போக்கு ஐரோப்பிய விமரிசனங்களில் உண்டு. அந்தப்போக்கை நான் கைகொள்வதில்லை. ஆனால் அதை ஒருவர் தன் முறைமையாக கருதினால் தவறென சொல்லமாட்டேன்.

என்னைப் பொறுத்தவரை ஒருவர் தன் புனைகதைகளில் அல்லது கவிதைகளில் எதை முன்வைக்கிறாரோ அதைப் பற்றியே பேசுவேன். ஒருவர் தன்னுடைய சாதியை, மதத்தை, உடலை, தோற்றத்தை படைப்பில் பேசு பொருளாக்கினால் அது ஆய்வுக்கு உள்ளாவது இயல்பான விஷயம். ஒருவர் தன் புனைகதைகளிலும் கவிதைகளிலும் பேசும் ஒரு பொருளைப்பற்றி விமரிசகன் ஒன்றும் சொல்லக்கூடாது என்பது அபத்தமான வாதம்.

உதாரணமாக மாதவிக்குட்டி [கமலாதாஸ்] யின் தோற்றம் குறித்து நான் எழுதிய சில வரிகளுக்காக பெண் கவிஞர்கள் கொந்தளித்தார்கள். மாதவிக்குட்டியின் கதைகளை வாசித்தவர்களுக்கு அவருடைய ‘என் கதை’ முதலிய ஆக்கங்களில்  அவர் தன் தோற்றம் குறித்து எழுதியவற்றையே நான் விவாதித்திருக்கிறேன் என்பது புரியும். இங்கே கொதித்தவர்கள் எவருமே அவரை வாசித்திருக்கவில்லை!

அதாவது என் விமரிசனம் என்பது பிரதிசார்ந்த விமரிசனம். [Textual criticism ] படைப்பில் வாசகனாகிய எனக்கு என்ன அளிக்கப்படுகிறதோ அதைக் கூர்ந்து நோக்கி நான் எழுதுகிறேன். படைப்புக்குப் பின்னால் உள்ள மனிதர் எனக்கு முக்கியமே இல்லை. அவர் எப்படி படைப்பில் வெளிப்படுகிறார் என்பதே முக்கியம்.

தனிப்பட்ட விஷயங்களை ஏன் விவாதிக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன் என்றால் அதற்கு எல்லை இல்லை, அது பிரதியை தாண்டிச் சென்று விடும் என்பதனாலேயே.

*

இனி மனுஷ்யபுத்திரன் கவிதைகளைப்பற்றிய என்னுடைய ஆய்வுக்கு வருகிறேன். பொதுவாக கவிதை விமரிசனம் என்பது கவிதைகளை வாசித்து விவாதிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கானது.  அதுவும் கவிதையின் கருவிகளாலேயே எழுதப்பட்டிருக்கும். ஆகவே பொதுவாசகர் அதை சாதாரணமாக புரிந்துகொள்ள முடியாது.

என்னுடைய கட்டுரைகளில் நான் ஆரம்பத்திலேயே ஒரு வடிகட்டியை வைத்துவிடுவேன். தீவிரமான ஒரு கோட்பாட்டுவிவாதம் ஆரம்பத்தில் இருக்கும். அது உருவாக்கும் வரலாற்றுச் சித்திரத்தில்தான் பிற மதிப்பீடுகளை செருகுவேன். ஒரு வாசகருக்கு அந்த முதல் பகுதியை கடந்து வரும் திராணி இருந்தால் மேலே வாசித்தால் போதும் என்பதே என் எண்ணம். இதை எல்லா திறனாய்வுக்கட்டுரைகளிலும் நீங்கள் காணலாம். ஏனென்றால் விவாதம் அத்தகைய சிறு வட்டத்திற்குள் மட்டுமே நிகழ முடியும்.

ஆனால் சாரு போன்றவர்கள் உள்ளே வரும்போது இந்த வரையறுக்கப்பட்ட விவாதச்சூழல் சிக்கலுக்குள்ளாகிறது. இவர்களுக்கு என்ன புரியும், இவர்கள் ஏற்கனவே என்ன வாசித்திருக்கிறார்கள் என்ற திகைப்பு ஏற்படுகிறது. கவிதை விமரிசனத்தின் அந்தரங்கத்தன்மை பாதிக்கப்படுகிறது. அவ்வாறு உள்ளே வரும் பொதுவாசகர்களிடையே புரிதல்சிக்கல்கள் உருவாகின்றன. அவர்களிடம் ஆரம்பத்தில் இருந்தே பேசவேண்டியிருக்கிறது

ஆகவே அக்கட்டுரையை சுருக்கிச் சொல்கிறேன். ஆனால் இவ்வரிகளை மட்டும் வாசித்தவர்களிடம் மேலே விவாதிக்க மாட்டேன்.

1. தமிழ்க்கவிதையின் செவ்வியல் [கிளாசிக்] அடிப்படை சங்கப்பாடல்களால் உருவாக்கப்பட்டது. நிதானமான உணர்ச்சிகள், கச்சிதமான வடிவம் ஆகியவற்றைக் கொண்டது அது.

2. கட்டற்ற உணர்ச்சிகளும் நீண்டுசெல்லும் வடிவமும் கொண்ட உணர்வெழுச்சி [ரொமாண்டிக்] கவிதைகள் நம் மரபில் பக்திக்காலகட்டத்தில் உருவாகி வந்து இன்றும் மரபில் ஒரு வலுவான போக்காக உள்ளன

3. தமிழில் நவீன கவிதை பாரதியில் உணர்வெழுச்சிக் கவிதையாக உருவானது.  ஆனால் பின்னர் புதுக்கவிதை செவ்வியல் அடிப்படைகளை ஏற்றுக்கொண்டது.

4 ஆகவே பிரமிள், தேவதேவன், சுகுமாரன் போன்ற சிலரிடம் மட்டுமே உணர்வெழுச்சிப்போக்கு இருந்தது. அந்த வரிசையில் வருபவர் மனுஷ்ய புத்திரன்

இந்த விரிவான பின்னணியில் வைத்து மனுஷ்யபுத்திரனின் கவிதைகளின் வளார்ச்சிப் போக்கை நான் ஆராய்கிறேன். அதை இவ்வாறு சுருக்கலாம்.

1 மனுஷ்யபுத்திரனின் கவிதைகளின் பாடுபொருள் ஆரம்பத்தில் புரட்சிக்குரலாக இருக்கிறது. இடதுசாரி அமைப்புகளுடன் தொடர்புள்ளவராக இருக்கிறார். அவரது உணர்வெழுச்சிவாதம் அங்கிருந்து தொடங்கியது.

2 இக்காலகட்டத்திலேயே தன் உடற்குறை குறித்த தன்னுணர்வு வலுவாக இருந்து அது வளர்ந்து வலுவான தன்னிரக்கக் கவிதைகளை எழுதியிருக்கிறார். ‘கால்களின் ஆல்பம்’, ‘கழிப்பறையில் 90 நிமிடங்கள்’ முதலிய பல கவிதைகள்.

3 இந்த தன்னிரக்க அம்சம் அவரது கவிதைகளில் என்ன வகையான விளைவுகளை உருவாக்கியது என்ற ஆய்வே கட்டுரையில் உள்ளது. புரட்சிகரம் என்பது சுயபெருமிதம் சார்ந்த ஓர் உணர்ச்சி. தன்னை பிறரில் இருந்து மேலானவன், பிறரை வழிநடத்துபவன் என்று ஒருவர் எண்ணும்போதே புரட்சியாளன் ஆகிறார்.

ஆனால்  தன்னிரக்கம் அதற்கு நேர் எதிரானது. அது தன்னை பிறரை விட எளியவனாக எண்ணுகிறது. உடற்குறை காரணமாக இந்த அம்சம் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் வலுவாகவே உள்ளது. அது அவரை புரட்சிகர மனநிலையில் இருந்து இருந்து விலக்குகிறது.

4 பிற்காலக் கவிதைகளில் மனுஷ்யபுத்திரன் இந்த உடற்குறை குறித்த தன்னுணர்வை சமூக அளவிலும், உலகளாவிய தளத்திலும் விரிவுபடுத்திக் கொள்கிறார். அவர் தன்னை கைவிடப்பட்ட, தோற்கடிக்கப்பட்ட, கீழான பெரும்பான்மையினரின் குரலாக மாற்றிக்கொள்கிறார். இதுவே அவரை முக்கியமான கவிஞராக ஆக்கும் திருப்புமுனை. இப்படி ஆகாமல் புரட்சி, தன்னிரக்கம் இரண்டையும் மட்டும் அவர் எழுதியிருந்தால் அவர் இந்த முக்கியத்துவத்தை அடைந்திருக்க முடியாது.

5. புரட்சிகரம் என்பது நேர்நிலை [பாசிடிவ்] கொண்டது. அது உணர்வெழுச்சிவாதத்துக்கு உகந்தது. நவீனத்துவம் எதிர்மறைத்தன்மை [நெகட்டிவ்] ஆனது ஆகையால் அது புரட்சிகரத்துக்கு எதிரானது. புரட்சிகரத்தில் கசப்பு கொள்ளும் கவிஞர்கள் அந்தக் கசப்பு மூலமே நவீனத்துவத்திற்குள் வருகிறார்கள். உதாரணம் சுகுமாரன்.

6 மனுஷ்யபுத்திரன் புறக்கணிக்கப்பட்ட சாமானியர்களின் கசப்பையும் எதிர்ப்பையும் பிரதிநிதித்துவம் செய்யும் அவரது எதிர்மறைத்தன்மை காரணமாக நவீனத்துவத்திற்குள் வந்தார். நவீனத்துவம் கட்டுப்பாடுள்ள வடிவத்தை கொண்டது. அந்த மாற்றம் மனுஷ்யபுத்திரன் கவிதைகளிலும் நிகழ்ந்தது. அவரது நடுக்காலக் கவிதைகள் கச்சிதமான வடிவம் நோக்கிச் செல்கின்றன. உதாரணம் ‘இடமும் இருப்பும்’ தொகுப்பு.

7 ஆனால் அந்தக் கசப்பில் நின்று முழுமையான நவீனத்துவக் கவிஞராக அவரை  ஆக விடாமல் செய்த ஓர் அம்சம் அவரது கவிதைகளில் உள்ளது. அது கனிவு. ‘நான்’ என்ற உணர்வுநிலைக்கு எதிராக அவர் ‘நீ’ என்ற உணர்வு நிலையை உருவாக்குகிறார். அவரது கவிதைகள் முழுக்க நீ என்ற முன்னிலையிடம் உணர்ச்சிகரமாகப் பேசுகின்றன.

அந்த நீ முதலில் ஒரு கனவுப்பெண்ணாக ,காதலியாக இருந்து விரிந்துகொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் அந்த ‘நீ’ ஒரு மனித இருப்பாகவே இல்லை. வெறுமே நீ ஆகவே சொல்லப்படுகிறது.

8 இந்த நீ நம் பக்திக்கவிஞர்கள் முன்வைக்கும் கடவுளுக்கு நிகரானதாக இக்கவிதைகளில் உள்ளது. இக்கவிதைகளில் உள்ள நீ என்பது கடவுளைக்குறிக்கும் என எடுத்துக்கொண்டால் மனுஷ்யபுத்திரனின் பல கவிதைகலை தமிழின் பக்திக் கவிதைகளில் சேர்த்துவிடக்கூடியவை என்றே சொல்லலாம். அதாவது இவை கடவுள் இல்லாதவனின் பக்திக்கவிதைகள்.

9 இந்த கனிவு காரணமாக மனுஷ்யபுத்திரன் ஒரு உணர்வெழுச்சிக் கவிஞராக இருக்கிறார். பாரதியின் வழிவந்தவராக, தேவதேவனுக்கும் சுகுமாரனுக்கும் பின்வந்தவராக இருக்கிறார். அவரது பிற்காலக் கவிதைகளில் மீண்டும் நெகிழ்ச்சியான கட்டற்ற உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன.

இதுவே என்கட்டுரையின் சுருக்கம்.

*

இக்கட்டுரையில் ஊனத்தை இழிவுபடுத்தும் எந்த அம்சம் உள்ளது? கொஞ்சம் வாசிப்புப்பழக்கம் உடையவர்கள் இது பற்றி யோசிக்கலாம். ஒரு கவிஞன் இங்கே அவன் கவிதைகளில் பேசிய விஷயத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறான். அவன் கவிதைகளில் நெடுநாள் ஈடுபாடுள்ள ஒருவனால் மட்டுமே சொல்லத்தக்க நுண் அவதானிப்புகளினால் ஆனது இந்தக்கட்டுரை. உருவகமொழி ஊடாடி வருவதனால் கவிதை வாசகர்களுக்கு மட்டுமே புரியக்கூடியது.

இலக்கிய விமரிசனம் என்பது மேடைப்பசப்பு அல்ல. அது ஒரு தீவிரமான செயல்பாடு. அறுவைசிகிழ்ச்சைக் கத்தியின் கச்சிதமான இரக்கமற்ற கூர்மை கொண்டது அது. தனி வாழ்வில் நான் ஒருபோதும் எவரையும் எதன் பொருட்டும் புண்படுத்துவதில்லை. அதற்கான காரணம் இருந்தாலும் நாகரீகம் கருதி விட்டுவிடுவேன். பெரியவர்களுக்கு ஒரு தருணத்திலும் மரியாதை செலுத்தாமலிருக்க மாட்டேன். நாசூக்கற்ற எச்சொல்லையும் கருத்தையும் சொல்ல மாட்டேன். ஆனால் இலக்கிய விமரிசனத்தில் அந்த கொள்கைகள் இல்லை. இது கறாரானது, மதிப்பீட்டை மட்டுமே மையநோக்கமாகக் கொண்டது.

மனுஷ்யபுத்திரனை நான் 20 வருடங்களுக்கு மேலாக அறிவேன். அவரது ஆரம்பகாலக் கவிதைகளை வாசித்து மிகநீண்ட கடிதங்களை எழுதியிருக்கிறேன்.அவர் காலச்சுவடு முகாமில் இருந்த நாட்களில்கூட அவரது வாசகன் என்ற இடத்தில் இருந்து அவரிடம் தொடர்பு கொண்டிருக்கிறேன்.

வேதசகாயகுமார் என் அறிதல் இல்லாமல் சதக்கத்துல்லா ஹசனீ ஆசிரியராக இருந்த சொல் புதிதில் எழுதிய நாச்சார் மடம் என்ற உருவகக் கதை அவரது உணர்வுகளைப் புண்படுத்தியது என்று அறிந்தபோது நானே நேரடியாக அவருக்கு கடிதம் எழுதி மன்னிப்பு கோரினேன். அவர் என்னைபப்ற்றி கடுமையான கட்டுரை ஒன்றை எழுதியபோதுகூட கடிதம் எழுதி நான் அப்போதும் அவரது வாசகனே என்று சொன்னேன். ஏனென்றால் என் ஆதர்சக் கவிஞர்களில் அவரும் ஒருவர்.

கடந்த இருபதாண்டுகளாக தொடர்ச்சியாக தமிழின் முக்கியமான கவிஞர் அவர் என்று சொல்லிவரக்கூடியவன் நான். கவிதை பற்றிய என்னுடைய எந்த உரையாடலிலும் அவரது ஒரு வரியேனும் இருக்கும். கடைசியாக சென்னை உரையில்கூட.

தமிழில் வலுவாக உள்ள செறிவான,பூடகமான கவிமொழி மனுஷ்யபுத்திரன் கவிதைகளில் இல்லை என்பதனால் தேர்ந்த கவிதை வாசகர்களில் பெரும்பாலானவர்கள் அவரை ஏற்பதில்லை. ஆனால் இது உணர்வெழுச்சிவாதக் கவிதை என்று விளக்கி , இவ்வகை கவிதைகளின் இடம் குறித்து மீண்டும் மீண்டும் நான் பேசியிருக்கிறேன். அவரது கவிதை பற்றி நான் எழுதும் மூன்றாவது கட்டுரை இது.

ஒரு நல்ல கவிதை வாசகனுக்கு அவனுடைய ஆதர்ச கவிஞர்களுடனான உறவு மிக நெகிழ்ச்சியான ஒன்று. எனக்கு தேவதேவன், சுகுமாரன், எம்.யுவன், மனுஷ்யபுத்திரன்  போன்ற எனது கவிஞர்களுடனான உறவு மிக அந்தரங்கமானது. அவர்களின் எச்செயலும் எனக்கு பிழையானதல்ல. அவர்களின் புகைப்படங்க¨ளையே நான் பெருங்காதலுடன் பார்ப்பதுண்டு. நேரில் சந்தித்தால் அவர்களின் உடல்மொழியையே கவனித்துக்கொண்டிருப்பேன். நான் என் சிந்தனைகளில் இவர்களை மீண்டும் மீண்டும் தொட்டுக்கொள்கிறேன். திட்டமிட்டு அல்ல, இயல்பாகவே இவர்களின் வரிகள் பேச்சில் கலக்கின்றன.சாதாரண உரையாடல்களில் இவர்களை மேற்கோள் காட்டாத நாளே இல்லை

இந்த ஐந்தாண்டுகளில் அனேகமாக தினமும் மனுஷ்யபுத்திரனுடன் பேசிக்கொண்டிருந்தேன். பலசமயம் அவரது குரலுக்காக மட்டுமே.

இக்கட்டுரையையே இரு மாதங்கள் முன்பு எழுதி அவருக்கு அனுப்பி அவரே தட்டச்சு செய்து அனுப்பி அதன்பின் பிரசுரமாகியது. அந்த நாட்களில் இந்தக் கட்டுரையைப்பற்றி விரிவாகப் பேசியிருக்கிறோம். அனேகமாக தினமும். நக்கலாகவும் வேடிக்கையாகவும் தீவிரமாகவும். இக்கருத்துக்கள் இருபதாண்டுகளாக நான் அவரைப்பற்றி எழுதிவரும் கருத்துக்களின் அடுத்த படிநிலையே. இதில் உள்ள எல்லா கருத்துக்களும் அவரிடம் அவ்வப்போது நான் சொன்னவையே.

உடலூனம் என்பது நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் ஒரு குறைபாடாக இருந்திருக்கலாம் இப்போதல்ல என்பதை அக்கட்டுரையிலேயே சொல்லியிருக்கிறேன். ஆகவே ‘கால்களின் ஆல்பம்’ போன்ற தன்னிரக்கக் கவிதைகள் இன்றையசூழலில் பெரிய முக்கியத்துவம் உடையனவல்ல என அவை வெளிவந்து பலரும்  மனுஷ்யபுத்திரன் மீது அனுதாபங்களை கொட்டிய அக்காலத்திலேயே சொல்லியிருக்கிறேன். அவ்வனுதாபங்களை ஓரு கவிஞனாக அவர் பெற்றுக்கொள்ளலாகாது என்பதே என் கருத்தாக இருந்து வந்தது. கவிஞன் செயல்படும் தளமே வேறு. அவன் ஒரு தனிமனிதனல்ல, அவன் ஒரு மக்கள்த்திரளின் ஆன்மா.

என்னுடைய கட்டுரையில் மனுஷ்யபுத்திரன் அவரது கவிதையில் அவரே எழுதிய ஒரு பேசுபொருளாகிய உடலூனம் குறியீட்டு ரீதியாக எப்படி கவிதையை பாதிக்கிறது என்று மட்டுமே பேசப்பட்டுள்ளது. அதுவும் கவிதை விவாதத்தின் நுண்பரப்பில் ஆனால் அவரை மேடையில் வைத்துக்கொண்டு அவரது உடலூனத்தை ரசாபாசமான ஒரு விவாதமாக ஆக்கி தனிப்பட்ட காழ்ப்புகளுக்கு அவரை இரையாக்கியதையே உண்மையில் மிகக்கொடுமையான  அவமதிப்பாக எண்ணுகிறேன்.

அந்த விஷயத்தை பிரபல ஊடகங்களின் வம்புப்பகுதிகளுக்கு தீனிபோடவென்றே பொதுமேடையில் செய்ததன் மூலம் மனுஷ்யபுத்திரனை சாரு கீழ்மைபப்டுத்திருக்கிறார். இருபதாண்டுகளுக்கும் மேலாக என் ஆதர்சக் கவிஞராக இருந்து வரும் ஒருவருக்கு நிகழ்த்தப்பட்ட அந்த அவமதிப்பே என்னை அதிர்ச்சியும் வருத்தமும் அடைய வைக்கிறது.

மனுஷ்யபுத்திரன் இங்கே தந்திரமான மௌனத்தை கடைப்பிடிக்கிறார். மாற்றுக்கருத்துக்கள் எங்கும் உள்ளவையே. ஆனால் அவரது மேடையில் நான் வசைபாடப்பட்டமைக்கு அவர் பொறுப்பாகாமல் இருக்க முடியாது. உயிர்மை கடந்த நாலைந்தாண்டுகளாக அதன் முகமாக, அது தமிழ்சமூகத்துக்கு அளிக்கும் முதன்மை எழுத்தாளராக, சாரு நிவேதிதாவையே முன்னிறுத்துகிறது. ஆகவே அவரது செயல்களுக்கு அது பொறுப்பேற்றாகவேண்டும்.

ஒரு பதிப்பாளராக இன்று மனுஷ்யபுத்திரன் எங்கோ அவரது இலக்குகளை உருவாக்கிக் கொண்டு விரைந்து சென்று கொண்டிருக்கிறார். அந்த இலக்குகளுக்கு அவருக்கு இன்று சாருதான் தேவையானவராக இருப்பார். நான் அதற்கு தடையாக இருக்கக் கூடும். அவரது இதழுக்கும் பிரசுரத்துக்கும் அதன் முதல் இதழ் முதல் பலன்நோக்காது உழைப்பவனாக இருந்திருக்கிறேன். அதற்கு அவர் மீது கொண்ட மதிப்பும் நம்பிக்கையுமே காரணமாக இருந்திருக்கிறது. இனி அதற்கான தேவை இல்லை என்று எண்ணுகிறேன்.

உயிர்மையில் இனி என் எழுத்துக்கள் எதுவும் பிரசுரமாகாது. அதனுடனான எல்லா தொடர்புகளையும் நிறுத்திக்கொள்கிறேன். இப்போதிருக்கும் நூல்கள் விற்கப்படுவது வரை, அதிகபட்சம் 2012 வரை, அவர் என் பெயரை விளம்பரங்களில் பயன்படுத்தலாம். என்னுடைய நூல்களை அவர் மறுபதிப்புசெய்யலாகாது. நான் அவற்றை வேறு பதிப்பாளருக்கு அளிக்கவிருக்கிறேன்

ஆனால் இனியும் மனுஷ்யபுத்திரன் என் ஆதர்ச கவிஞர்களில் ஒருவராகவே நீடிப்பார். அவர் நல்ல கவிதை என ஒன்றை எழுதும்போது எப்போதும் என் நினைவு  வரும் என நினைக்கிறேன். ஏனென்றால் என்னைப்போல அவரது ஒவ்வொரு சொல்லையும் வாசிக்கும் வாசகர்கள் குறைவாகவே இருப்பார்கள்.

ஒரு நெடுங்கால நண்பராக அவரது இலக்குகள் கைகூடி அவருக்கு அனைத்து வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

*

தமிழ் எழுத்தாளர்களில் அனேகமாக அதிக நண்பர்கள் கொண்டவன் நான். உலகமெங்கும் தொடர்பு அறாமல் நீடிக்கும் முந்நூறு நண்பர்களேனும் எனக்குண்டு. பத்துக்கும் மேற்பட்ட பாலியகால நட்புகள் உண்டு. மாற்று அரசியல் தளங்களில்கூட நெருக்கமான நட்புகள் உண்டு. பல அறிவுலக நட்புகள் கால்நூற்றாண்டாக நீடிப்பவை. எந்நிலையிலும் நான் நட்புகளை விட்டுக்கொடுப்பதில்லை. என்னிடமிருந்து முறிந்துபோன நட்பு என்று ஒன்றிரண்டைக்கூட சொல்லமுடியாது. என் வாழ்நாளில் நானே முறிக்கும் இரண்டாவது நட்பு இது. என் நட்பு எவரிடமும் சுமையாக கனக்கக்கூடாது என்பதற்காக.

இந்தக்குறிப்பை மிகுந்த மனவலியுடன்தான் எழுத ஆரம்பித்தேன். முடித்த உடனே அதைக் கடந்தும் வந்துவிட்டேன். வாழ்க்கை மிக மிகக் குறுகியது. சட்டென்று கடந்துசென்றுவிடுவது. நாட்கள் மிகவும் பெறுமதிகொண்டவை. நானோ பெரிய கனவுகளை, என்னைவிடப்பெரிய கனவுகளை எப்போதும் சுமந்தலைபவன். ஆகவே தேவையற்ற அல்லல்களை அளிக்கும் , பயனற்ற எதையும்  வெட்டிவிட்டுக்கொண்டு என் பணிகளில் மூழ்கிவிடுவதையே முக்கியமாகக் கருதுகிறேன்.

என்னைப்பொறுத்தவரை இரு பதிற்றாண்டுகள் நீண்டிருந்த ஒரு காலகட்டம் இந்தக் கணத்தில் முடிகிறது. மறு கணத்தில் இது சார்ந்த எந்த உணர்ச்சிகளுக்கும் இடமில்லை. அந்த வெட்டிவிடுதலே இந்தக் குறிப்பு. இது எப்போதுமே எனக்கு உதவிசெய்திருக்கிறது. மனித உறவுகள் வரும்போகும். ஒரு ஆறுமாதம் கழிந்தால் இந்த நினைவுகளை தேடித்தான் எடுக்க வேண்டியிருக்கும். காலத்தை தாண்டி நிற்பவை மனித வாழ்க்கைக்கும் சிந்தனைக்கும் நாம் அளிக்கும் பங்களிப்புகள் மட்டுமே.

[இவ்விஷயம் குறித்து 48 மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. ஐம்பதுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள். அனைவருக்குமான பதிலாக இதைக் கொள்ளக் கோருகிறேன்]

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6079/

30 comments

Skip to comment form

 1. Arangasamy.K.V

  இந்த எல்லை நோக்கிதான் இவ்வளவு நாட்களாக இந்த விஷயம் நகர்த்தப் பட்டதாக தோன்றுகிறது .

 2. dhana

  நீங்கள் இக்கட்டுரையை எழுதும் போது ஏற்பட்ட வலி, படிக்கும் போது வாசகர்களுக்கு குறைவில்லாமல் வந்தடைந்திருக்கிறது. மேலும் திரு.மனுஸ்யபுத்திரனின் உள்நோக்கமுடைய, வியாபாரத்தனமான அமைதிக்கான உங்களின் இந்த முடிவு கவலை அளிக்ககூடியதாக இருப்பினும் சரியானதே என்பது என்னைபோன்ற வாசகர்களின் எண்ணமாக இருக்கிறது.

 3. upm.sivakumar

  Dear Jeya,
  I suscribed Uyirmai only because, you wrote in it. But now I am feeling guilty to continueing it. I register my strong condemn to the Psyco Charu and to Mr.Manushya puthran. Please ignore them and go on in your own path.

 4. nexguna

  ஒரு பொது இடத்தில அநாகரிகமாக நடப்பது, அதை ஒரு அறிவுள்ள சமூகம் வரவேற்பது, மன சோர்வளிக்கிறது.மனுஷ்யபுத்திரன் இதை அனுமதிப்பது ஏனோ?

 5. சங்கரன்

  ஐயா,
  சாரு நிவேதிதாவின் ‘பின் நவீனத்துவ’ பண்பாட்டு செயலைக் கண்டு கடும் கோபம் தான் வருகிறது.சற்றும் பண்பாடின்றி நடந்து கொண்ட சாரு நிவேதிதாவின் செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது. ஒரு சாமானியனுக்கு இருக்கும் அடிப்படை நாகரிகம் கூட இல்லாமல் நடந்து கொள்ளும் இவர் இச்செயல்களால் தன்னைத் தானே அவமானப் படுத்திக் கொள்கிராறேயன்றி வேறு எதையும் பெரிதாக கிழித்து விடப் போவதில்லை. சூரியனைப் பார்த்து நாய் குறைத்தால் இழப்பு சூரியனுக்கு அல்ல என அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

  உயிர்மை தங்களின் நூல்களை வெளியிட்ட சில நாட்களுக்குள் ஏற்பட்ட இந்த உறவு முறிவு துரதிஷ்டவசமானாலும் சரியான முடிவு தான் .அனைத்தையும் விட சுயமரியாதை தான் ஒவ்வொருவருக்கும் முக்கியமானது

 6. kum

  ஆபாசமாய் பேசிய சாருவை விட மேடை அமைத்து கொடுத்து மௌனமாய் ரசித்த மனுஷ்யபுத்திரன் தான் இதில் கண்டிக்கப்பட வேண்டியவர்..நீங்கள் எடுத்த முடிவு மிகச் சரி.

  kumar

 7. rajesh.scorpi

  திரு ஜெயமோகன்,

  உங்கள் வாதத்தை ஒத்துக்கொள்ள முடியாது என்பதே என் கருத்து. ஒரு உதாரணத்துக்கு, நீங்கள் சொல்வதையே எடுத்துக்கொள்வோம். “அவரே அவரைப்பற்றி எழுதியிருக்கிறார். அதனைத் தான் நான் சொல்கிறேனேயன்றி, நன் அவரை அவமதிக்கவில்லை” என்று சொல்கிறீர்கள். இப்பொழுது, நீங்கள் பொதுவாகப் பேசும்போதும் சரி, எழுதும்போதும் சரி, ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டனின் கொள்கை விளக்கம் போலத்தான் அது இருக்கிறது. நீங்களும் , அந்த இயக்கம்தான் உங்களை, உங்களின் ஆரம்பகாலத்தில் அரவணைத்தது என்று எழுதி உள்ளீர்கள். அம்பேத்கரைப்பற்றி நீங்கள் தொடர்ந்து எழுதிவரும் விஷயங்களைப் பற்றியோ அல்லது இந்த ஆர்.அஸ்.எஸ் விஷயங்கள் பற்றியோ உங்களை யாரேனும் விமரிசித்தால், உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது?

  உங்கள் கட்டுரையில், நீங்கள் மனுஷ்யபுத்திரனைப் பல காலம் அறிந்ததாகவும், தினமுமே அவரிடம் பேசிவருவதாகவும் எழுதியுள்ளீர்கள். அப்படி இருப்பதனால் மட்டுமே நீங்கள் எழுதியுள்ளது நியாயமாகிவிடாது. பொதுவாகவே, ஒரு மனிதன் வெளிப்படுத்தும் படைப்பை நோக்கித்தான் நமது விமர்சனங்கள் இருக்க வேண்டுமே தவிர, அவனது தனிப்பட்ட வாழ்வுமுறை பற்றி அவை இருந்துவிட்டால், பின் அவை எரிச்சலின்பாற்பட்டு வருபவைதான் என்று எல்லோருக்கும் புரிந்துவிடும்.

  அதுபோலவே, நீங்கள் உயிர்மையை விட்டு உங்கள் தொடர்பை முறித்துக்கொள்வதைப்பற்றி: தேனிக்கூட்டின் மேல் கல்லெறிந்தாயிற்று; இனிமேல், அந்தத் தேனிக்கூடு நம்மைப் புறக்கணிப்பதாகச் சொல்லிவிடுமுன், நாமே அதை விட்டு ஓடிவிடுவோம் என்பதை இது தெளிவாக்குகிறது. நீங்கள் எழுதியது சரி என்ற உறுதியான எண்ணம் உங்களுக்கு இருக்குமாயின், நீங்கள் ஏன் விலகவேண்டும்? (ஆனந்த விகடன் – சிவாஜி, எம்.ஜி.ஆர் விஷயம் வேறு என் நினைவுக்கு வந்து தொலைக்கிறது). இன்றுவரையில், ஒரு மனிதரைப்பற்றி ஜெயமோகன் எழுதுகிறார் என்றால், அவரது தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி எழுதி, தனது காழ்ப்பை வெளிப்படுத்திவிடுவார் (விதிவிலக்கு: அவர் உங்களின் ‘வட்டத்தை’ சேர்ந்தவராக இருக்க வேண்டும் – சுந்தர ராமசாமி போல்) என்ற எண்ணத்தை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவனவாகவே உங்கள் கட்டுரைகள் அமைகின்றன. இதைப்பற்றி ஏதேனும் கேள்விகள் வந்தால், உடனே, இது அரைவேக்காடுகள் செய்யும் சதி; நான் படைப்பூக்கத்துடன் செயல்படும் ஒருவன் போன்ற மொண்ணையான சமாதானங்களே உங்களிடம் இருந்து வருகின்றன.

  இப்போதைய காலத்தில், உடல் ஊனமுற்றவர்களைப் பற்றி அப்படிச் சொல்வதோ எழுதுவதோ, மனப்பிறழ்வுநிலை உள்ளவர்கள் மட்டுமே செய்யும் ஒரு செயல் என்ற உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அவரது கவிதையில் அப்படி அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். நான் அதனைத் தான் விமரிசித்துள்ளேன் என்பது, எந்த விதத்திலும் அதற்கான விளக்கம் ஆகிவிடாது. நீங்கள் அக்கவிதைகளை ஏன் அப்படிப்பட்ட நோக்கத்துடன் அணுகுகிறீர்கள்? புரட்சி அது இது என்று எழுதியும், இறுதியில் அவரது குறைபாடு என்ற இடத்தில் வந்து கருத்தைச் சொல்லியே ஆகவேண்டும், இல்லையா? இல்லையென்றால், அது ஒரு ‘முழுமையான’ ஆய்வு ஆகிவிடாதே?

  நான் உங்கள் மேல் எந்த வெறுப்போ அல்லது அதனைப்போல் வேறு எதுவுமோ கொண்டிருக்கவில்லை. நீங்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட தனிநபர் அர்ச்சனைகளை, எழுத்து என்ற போர்வையில் செய்துகொண்டிருப்பது ஆரோக்கியமான ஒரு விஷயமாக எனக்குப் படவில்லை. அதனால் தான், எனது கருத்தை இங்கு வெளியிட்டிருக்கிறேன்.

  மேலும், நீங்கள் எழுதியுள்ள இந்த வரிகளுக்குமேல் நான் எதையும் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

  ‘இது ஒரு தமிழ் மனநிலை. படைப்பூக்கத்துடன் செயல்படுபவர்களைப்பற்றி நம் ஊரில் அரைவேக்காடுகளுக்கு ஓர் உள்ளார்ந்த அச்சம் இருக்கிறது. அவனது படைப்பூக்கநிலை அவனுக்கு அளிக்கும் அதிகாரத்தைப்பற்றிய அச்சம். அது தான் தங்களை அரைவேக்காடுகளாக காட்டுகிறது என்ற அச்சம்.’

 8. arun

  இது முற்றிலும் வியாபார யுக்திதான். மேடை பசப்பதனம். மனுசயபுத்திரன் உங்களை பு ரிந்துகொள்ளாமலா இருப்பார்?. நீங்கள் நல்ல பண்பாளார். மேலும் உங்களை இது பண்படையவே செய்யும். கவலைபட வேண்டியதில்லை.

 9. K.R அதியமான்

  அன்புள்ள ஜெ,

  மிக வருத்தமாக இருக்கிறது.

  சாருவின் வசைபாடலை ‘மன்னிக்கும்’ நீங்கள், மனுஸ்யபுத்திரன் மீது வருத்தம் கொள்வது சரியாக தோன்றவில்லை. சாரு எழுதும் உயர்மை பத்திரிக்கை கட்டுரைகளிலோ, அல்லது உயிர்மை பதிப்பகம் பிரசுரிக்கும், சாருவின் நூல்களிலோ, உங்களை பற்றிய வசைகளை அவர்கள் பிரசுரித்திருந்தால் மட்டும் மனுஸ்யபுத்திரன் மீது நீங்கள் வருத்தம் கொள்ளலாம்.

  புத்தக வெளியிட்டு விழாவில், சாரு என்ன பேச போகிறார் என்று முன்கூட்டியே மனுஸ்யபுத்திரன் அறிந்திருக்க முடியாது. சாருவின் வசைகளுக்கு சாரும் மாத்திரம் தான் பொறுப்பாக முடியும்.

  மனுஸ்யபுத்திரன் ஒரு gentleman. மிக அமைதியான பண்பாளர். இது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அவரின் அமைதியை கள்ள மவுனம் என்றும்
  வர்ணிக்க முடியாது. வணிக நோக்கம் என்றும் கருதலாகாது. அவர் அத்தனை cheap ஆனவர் அல்ல. இதை நான் சொல்லி நீங்கள் அறிய தேவையில்லை.
  He is too much a gentleman for this kind of things. He remained silent for many years about Kannan’s abuse and mis-nformation about him. His nature is like that. Quiet and introvert. Mild mannered and a gentle soul. God bless him.

  அவசரப்பட்டு உயிர்மையுடன் அத்தனை தொடர்புகளையும் துண்டித்துக்கொள்ள வேண்டாம் என்று வேண்டுகிறேன். மனுஸ்யபுத்திரனின் நட்பையும் தொடர்ந்து பேணினால் மிக மகிழ்வோம்.

  நீங்கள் எழுத வேண்டிய ஆக்கங்கள் மிக அதிகம் காத்துக்கொண்டுள்ளது. இது போன்ற சச்சரவுகள் உங்கள் கவனத்தையும், மனவோட்டத்தையும் divert செய்து, தேவையில்லா மனச்சோர்வுகளை அளிக்கும் தான்.

  எனவே…

  அன்புடன்
  அதியமான்.K.R

 10. Sanjeevi

  >>>>
  அவரை மேடையில் வைத்துக்கொண்டு அவரது உடலூனத்தை ரசாபாசமான ஒரு விவாதமாக ஆக்கி தனிப்பட்ட காழ்ப்புகளுக்கு அவரை இரையாக்கியதையே உண்மையில் மிகக்கொடுமையான அவமதிப்பாக எண்ணுகிறேன்
  <<<<<

  200% you are correct

 11. tdvel

  1. பொறாமை ஐயா பொறாமை. அடிவயிற்றில் எழுந்து எரியும் பொறாமை. சிலர் அதை மறைக்கக்கூட இயலாத பலகீனர்கள். மற்றவரோ அதை மறைத்துக்கொண்டதாய் நினைத்துக்கொள்பவர்கள்.

  2. படித்து வேலைக்கு செல்லும் என் மனைவி, உறவுபெண்களிடம் காணும் அதே பிரச்சினை. எல்லோரும் என் மனைவி தானே வந்து பேச வேண்டும் என எதிர்பார்ப்பர். எப்படித்தான் நடந்துகொண்டாலும் ஒரு இயல்பான நெருக்கத்தை மற்ற பெண்களிடம் பெறவே முடியாமல் போகும். அவளுக்கு மிக வருத்தமாய் இருக்கும். நான் சொல்லுவேன், உனக்கு நான் இருக்கிறேன் என்று. நீங்கள் பெரிய எழுத்தாளர், நானோ சின்னஞ்சிறு வாசகன். இருப்பினும் நான் உங்களுக்கு கூறவிழைவது, நான் இருக்கிறேன் உங்களுக்கு.

  3. நெடுங்காலமாக ஆனந்தவிகடனை வாங்கி வந்திருந்தேன். எழுத்தாளரை காட்டிக்கொடுக்கும் ஒரு அடாத செயலுக்கு என் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக இனி அதை வாங்குவதில்லை என உறுதி கொண்டேன். என்னைப்போன்ற ஒரு எளிய வாசகன் வேறென்ன செய்யமுடியும்? அதே நிலையையே இப்போது நான் உயிர்மை விஷயத்திலும் எடுக்கப்படவேண்டியுள்ளது.

  4. திரௌபதியில் துகில் உரிதலை ஆணையிட்ட துரியோததனைவிட தடுக்காத அனைவரும் பெருங்குற்றம் புரிந்தவர் ஆவர். இங்கோ சிரித்துபாராட்டி ரசித்துள்ளனர். இவர்கள் அந்த”துரியோததனை”விட பெருங்குற்றவாளிகள் அல்லவா. இவர்களுக்கல்லவா அவனைவிட பொறாமைத் தீ கனன்று எரிகிறது.

  த.துரைவேல்

 12. சங்கரன்

  @rajesh.scorpi
  //நீங்கள் பொதுவாகப் பேசும்போதும் சரி, எழுதும்போதும் சரி, ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டனின் கொள்கை விளக்கம் போலத்தான் அது இருக்கிறது.//

  இதில் ஆர். எஸ்.எஸ் எங்கிருந்து வந்தது? விட்டால் வீட்டுக் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் கூட ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என்பீர்கள் போல.

 13. Vengadesh Srinivasagam

  Dear Jeyamohan Sir,
  I am writing this lines just to say to you, “Your Decision is Correct”; I know you are Mature enough to handle all these types of matters. “Pidithamaana, Manathukku Nerukkamaana Neengal, -mana valiyudanthaan Ezhutha aarambithean – endru ezhuthiyirunthathai padikkumpozhuthu migavum kastamaaka irunthathu”.

  Ellavatrirkum Kaalam Pathil Sollum.

  Here I am not writing about C… because I not even wants to mention his name. Reg Manushyaputhiran, – Naarodu Saernthu Poovum…

  In your recent post about Sundara Ramasamy, you have written that your daughter asked “Now a Days you are not talking about his books; you are talking about him only”.

  Enakku Neengal Ungal Ezhuthukkalaal arimugam aanalum, ungal ezhuthukkalai vida neengal orupadi melthaan manathukkul irukkirirkal.

  Ellavatraiyum purangaiyal thalli, padaippukal Neengal Athikam Thara Dhyanikkiraen.

  Anbudan Vengadesh.

 14. ஜெயமோகன்

  நெல்லின் உமி சிறிது நீங்கிப் பிரிந்தாலும்…

  பிரச்னை, மனுஷ்யபுத்திரனின் கவிதை உலகம் குறித்த உங்களுடைய விமர்சனம் மட்டுமே அல்ல என்றே நினைக்கிறேன்.

  விதவை ஒருவர் எழுதும் கவிதையில் அந்த வாழ்க்கையின் தாக்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ இருக்கத்தான் செய்யும். தலித் ஒருவர் எழுதும் படைப்புகளில் அது சார்ந்த பாதிப்பு இருக்கவே செய்யும். இவையெல்லாம் மிகவும் இயல்பான, தவிர்க்க முடியாத அம்சங்கள். ஒருவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய செல்வாக்கைச் செலுத்தும் ஒரு அம்சம் அது பணம் சார்ந்ததோ, அந்தஸ்து சார்ந்ததோ, சாதி, மதம், தேச அபிமானம், முற்போக்கு போன்ற கருத்துகள் சார்ந்ததோ எதுவாக இருந்தாலும் அது அவருடைய படைப்பிலும் வெளிப்படவே செய்யும். இதை ஒருவர் விரும்பலாம். அல்லது விரும்பாமல் இருக்கலாம். திட்டமிட்டுச் செய்யலாம் அல்லது திட்டமிடாமல் நிகழலாம். அது நிகழ வாய்ப்புகள் உண்டு. அது தவிர்க்க முடியாததும் கூட. அதில் எந்தத் தவறும் கிடையாது. மல்லிகைச் செடி மல்லிகைப் பூக்களை மலரச் செய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

  மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் அவரது உடல் சார்ந்த பாதிப்புகளின் தடயங்கள் ஆங்காங்கே காணப்படுவதிலும் அதை ஒரு விமர்சகன் என்ற வகையில் நீங்கள் சொன்னதிலும் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. கவிதையில் அவர் நிகழ்த்திய உச்சங்களைப் பார்த்து கலை சார்ந்த காழ்ப்பு உணர்ச்சி கொண்டு, என்ன ஆனாலும் நீ ஒரு குறைபாடு உடையவன்தானே என்று நினைவுபடுத்தி மட்டம் தட்டும் தொனி உங்கள் விமர்சனத்தில் எங்கும் தென்படவில்லை. ஒரு காகத்தை கறுப்பு என்று சொல்வது அதன் மீதான பொறாமையினாலோ, மட்டம் தட்டுதலினாலோ, வெறுப்பினாலோ அல்ல. அதன் நிறம் அது. அதைச் சொல்லாமலும் காகத்தின் மகிமைகளைப் பற்றி பேச முடியும்தான். ஆனால், அதைச் சொல்வதால் எந்தவகையிலும் இழிவுபடுத்துவதாக ஆகவும் செய்யாது. அவருடைய கவிதைகளை எந்தவகையிலும் அந்தரங்கக் கையேடாக நீங்கள் சுருக்கவும் இல்லை. இது மனுஷ்யபுத்திரனுக்கும் நன்கு தெரிந்திருக்கும். ஆனால், கையில் காற்சிலம்புடன் தலையை விரித்துப் போட்டபடி வாயிற்காப்போனை மிரட்டிய காவிய நாயகி போல், மேடையேறி புத்தகத்தைக் கிழித்து எறிந்து பின்நவீனத்துவ கண்ணகன் (கண்ணகிக்கு ஆண்பால்..?!) தன் சலம்பல் அதிகாரத்தின் புதிய காட்சியை அரங்கேற்றியது எதிர்பார்த்ததுபோலவே நடந்த விபத்து! ஆஸ் யூஷுவல் அன் யூஷுவல்!

  ஒரு நிகழ்ச்சியில் மனுஷ்யபுத்திரன், பக்கத்தில் அமர்ந்திருந்த சாருநிவேதிதாவிடம் அரங்கில் கூடிருப்பவர்களைச் சுட்டிக்காட்டி, தணிந்த குரலில், இவர்கள்தான் என்னை தூக்கி வளர்த்தவர்கள் என்று சொன்னபோது மேடை விளக்குகளின் வெளிச்சத்தில் கவிஞரின் கண்களில் நீர் கோர்த்து நின்றதாகவும், உனக்காவது இத்தனை பேர் இருக்காங்க… எனக்கு உன்னைவிட்டா யார் இருக்காங்க என்று சாரு அதைவிட கண்ணீர் பெருக்கியதாகவும் உள் வட்டாரத்தில் உலவும் தகவலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உனக்கு ஏதாவதுன்னா நான் என் உயிரையே கொடுப்பேன். ஏன்னா நீ என் நண்பன் என்று அன்னார் பேசியதையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனுக்கு அடுத்ததாக, மம்மூட்டிரஜினிக்கும் மேலாக இருக்கும் நட்பின் வாழும் இலக்கணம் சாரு அண்ட் மனுஷ்

  .
  மனுஷ்யபுத்திரன் உங்கள் விமர்சனத்தை சரியாக எடுத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் உங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். ஆனால், சாரு என்ற ஆருயிர் நண்பர் ஒருவருடைய இருப்பை நீங்கள் கணக்கில் கொள்ளாமல் விட்டுவிட்டீர்களே! (அல்லது..?)

  நீங்கள் இந்து தீவிரவாதத்தை மட்டுமல்லாமல் இஸ்லாமிய தீவிரவாதத்தையும் கடுமையாக விமர்சிப்பவராக இருக்கிறீர்கள். இந்து மதம் என்றாலே சாதி கட்டுமானம் என்பதைத் தாண்டி அதன் சிறப்பு அம்சங்களைப் பற்றியும் பேசுகிறீர்கள். திமுக, பெரியாரிய கோஷ்டியை நீங்கள் கடுமையாக விமர்சிக்கிறீர்கள். உங்களுடைய இந்தக் கருத்துகளில் பலவற்றோடு மனுஷ்யபுத்திரன் ஓரளவுக்கு ஒத்துப் போகக்கூடியவர்தான் என்றாலும் தன் வியாபாரத்தையும் அவர் பார்த்துக் கொண்டாக வேண்டியிருக்கிறது.

  மனுஷ்யபுத்திரனின் நலம் விரும்பிகள் பலருக்கு உங்களை அறவே பிடிக்காது. உங்களுடனான நட்பும் பிடிக்காது. தமிழ் சூழலில் முற்போக்கு முகமூடி மாட்டிக் கொண்டு இருக்கவிரும்பும் ஒருவருக்கு உங்கள் நட்பு எப்போதும் ஒரு அமிலச் சொட்டாக உருக்கிக் கொண்டுதான் இருக்கும். யார் மனதும் நோகாமல் கைகளை விடுவித்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை அவர் எதிர்நோக்கிக் காத்திருந்திருக்கலாம். உங்களைக் கைவிடுவது மேலும் சில கதவுகளை எளிதில் திறந்து கொள்ள அவருக்கு உதவக்கூடும். அந்தப் பாதையில் போய் அவர் சாதிப்பவை அவருடைய லவுகீக வெற்றியை துரிதப்படுத்தலாம். ஆனால், கலை பயணத்துக்கு கரும்புள்ளியாகவே இருக்கும். அவர் விரும்புவது அதுவாகவே இருப்பதாகத் தெரியும் நிலையில் நீங்கள் நாகரிகமாக விலகிக் கொண்டது மிகவும் நியாயமான செயலே.

  நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். சாருவின் சலம்பலுக்கும் அந்த சக்தி இருப்பது ஒருவகையில் நல்லதே..!
  maha devan <[email protected]

 15. snramesh

  தமிழ்நாட்டில் ஒருவர் உடற் பாகங்களை பற்றிப் பேச வேண்டும் என்றால் அவை உயர்வாக மட்டுமே பேச வேண்டும், ஒருவர் சாதி பற்றி பேசவேண்டும் என்றால் பிராமண எதிர்ப்பு, தேவர், நாடார் ஆதரிப்பு போன்ற தளங்களில் மட்டும். நீங்கள் சிவாஜி தொப்பை, மனுஷ்ய புத்திரன் உடல் சார்ந்த சில கவிதைகள், கிருஸ்துவை பிடித்தாலும் திருச்சபைகளை விமரிசிப்பேன் , கருணாநிதி எழுதுவது கவிதை அல்ல, காந்தி தலித்துகளுக்கு எதிரி அல்லர் என இருப்பது கண்டிப்பாக பலரை திக்கு முக்காட வைக்கும் செயல். தம்மை மறு பரிசீலனை செய்வது சிரமமாக இருப்பதால் சாதுவான உங்களை தாக்கி விடுகிறார்கள். ஒரு அரசியல் தலைவரையோ, திரைப்பட நடிகரையோ இட்ட பெயரில் அழைப்பது தவறு, புகழ்ச்சிக் குறிமொழிகளில் அழைப்பதுதான் சரி என மாய உலகில் சஞ்சரிக்கும் சமுகம் வேறு எப்படி எதிர்வினை ஆற்றும்?

 16. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெ,
  சாரு நிவேதிதா உயிர்மை கூட்டத்தில் மிகவும் தரக்குறைவாக பேசினார் என்று கேள்விபட்டேன். ஆனால் சற்றும் ஆச்சரியப்படவில்லை. அவர் இயல்பே இதுதான். “என்னைப் பற்றி யாரும் தவறாகப் பேசி விடக்கூடாது, ஆனால் அடுத்தவர்களைப் பற்றி நான் என்ன வேண்டுமானாலும் பேசுவேன்” என்பதே அவரது கொள்கையாக இருந்து வருகிறது. ஆனால் மீண்டும் மீண்டும் உங்களை அவர் தகாத முறையில் வசை பாடிய போதும் நீங்கள் மிகவும் அமைதியாக இருந்தது எனக்கு மிகவும் மனவேதனையை அளித்தது. இந்த முறை நீங்கள் அப்படி செய்ய விரும்பவில்லை என்று தெரிந்ததும் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

  உயிர்மையுடனான உங்கள் தொடர்பை துண்டித்துக்கொள்ள போகிறீர்கள் என்று படித்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எழுத்தாளர்களை நம்பித்தான் பதிப்பகங்களே தவிர பதிப்பகங்களை நம்பி எழுத்தாளர்கள் இல்லை. இருக்கவும் கூடாது. உங்களின் மிகத்தீவிரமான வாசகன் என்ற முறையில் நீங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவை மனதார வரவேற்கிறேன்.

  சாரு போன்ற அரைகுறை ஆசாமிகளை கருத்தில் கொள்ளாமல் தங்களின் எழுத்துப் பணியை தொடருங்கள். உங்கள் நேரம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு வாசகர்களாகிய எங்களுக்கும் முக்கியம். நீங்கள் நிறைய எழுத வேண்டும், நாங்கள் நிறைய படிக்க வேண்டும். இதே என்னுடைய ஆசை.

  நன்றி
  கிருஷ்ணன்

 17. Rajendran

  மகாதேவன், கிருஷ்ணன் இருவருக்கும் ஒரு வேண்டுகோள்: உங்களுடைய கருத்துக்கள் ஜெயமோகன் என்ற பெயரில் பதிவாகின்றனவே – ஏன்? உங்களுடைய public name ஜெயமோகன் என்று பதிவு செய்திருந்தால் தயவு செய்து அதை மாற்றிக்கொள்ளவும். அல்லது இது technical பிரச்சினை என்றால் தலைவர் கவனிப்பார் என்று நம்புவோம்.

 18. ஜெயமோகன்

  அவை எனக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள். அவர்களின் மின்னஜ்சல்முகவரிகளுடன் பிரசுரமாகியுள்ளன. அவர்கள் மேற்கொண்டு இங்கேயே ழுதலாம். இந்த எதிர்வினைப்பகுதி முழுமையாக தொடங்குவகற்குள் இப்படி போடவேண்டியிருக்கிறது. சிலர் இங்கே கணக்கு தொடங்குவது கொஞ்சம் சிரமமாக இருப்பதாக எழுதியிருந்தார்கள். வேருவழியில்லை. கடிதம் எழுதும் எல்லா நண்பர்களுக்கும் இதுவே அழைப்பு
  ஜெ

 19. Arangasamy.K.V

  //நீங்கள் பெரிய எழுத்தாளர், நானோ சின்னஞ்சிறு வாசகன். இருப்பினும் நான் உங்களுக்கு கூறவிழைவது, நான் இருக்கிறேன் உங்களுக்கு.//

  உங்கள் எல்லா வாசகர்களும் சொல்ல நினைப்பது …

 20. raghunathan

  அன்பு ஜெ சார். இது ஒரு வெறும் பதிவல்ல ஒரு கேள்வி. உங்கள் பதில் தேவை. கல்லூரியில் 5 வருடங்கள் இலக்கியம் படித்து முடித்து இந்த 33 வருடங்களாய் நான் தீர நம்பிக்கொண்டிருந்தது இலக்கியம் மனிதர்களை நிச்சயம் பண்படுத்தும் என்றுதான். ஆனால் இன்றைய இலக்கியவாதிகளுக்குள் நிகழும் பூசல்கள் என் நம்பிக்கை பொய்யோ என அஞ்ச வைக்கிறதே. கள்ளமோ கரைந்தழுகும் என்று ஜேகே ராஜாவைப்பார்த்து சொன்னதாய் உங்கள் கதையில் படித்தேன். கள்ளமும் கபடும் காசாசையும் (பாரதியிடம் காண முடியாதவை) இன்ன பிறவும் எப்படி படைப்பாளர்களிடம் வந்து சேர்ந்தது?
  தயவு செய்து உங்கள் பதில்.
  அன்புடன் ரகுநாதன்

  0

 21. ஜெயமோகன்

  புலமையும் பூசலும் எப்போதும் உள்ளவை. எல்லா கலையுலகிலும் இந்தவகையான வேகங்கள் உண்டு. ஒன்று கலைஞர்கள் உணர்ச்சிப்பூர்வமானவர்கள். இரண்டு சில மதிப்பீடுகளில் ஆழ்மான நம்பிக்கை நம்மை கடுமையானவர்களாக ஆக்குகிறது.
  ஜெ

 22. karthivsubu

  அன்புள்ள ஜே,
  இந்த சம்பவம் உங்கள் வாசகர்கள் அனைவருக்கும் மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது. மனுஸ்யபுத்திரன் உங்களிடம் தன்னுடைய வருத்தத்தையாவுது தெரிவித்திருப்பார் என்று நம்புகிறேன்.

  உங்களின் இந்த முதிர்ச்சியான பண்பு தான் பலரை உங்களிடம் நெருங்கி வரச் செய்கிறது. அந்த எழுத்தாளர் ஞானி ஒரு தொண்டு நிறுவன கூட்டத்தில் ஊனமுற்றவர்களை “நீங்கள் மனுஷியபுத்திரன் போல் கல்வியை கையில் எடுக்க வேண்டும். அவரை உதரணமாக கொள்ள வேண்டும்” என்று கூறியதற்கு அவரை திட்டியவர் தானே.

  அன்புடன்,
  கார்த்தி

 23. M.A.Susila

  அன்பின் ஜெ.எம்.,
  குருவணக்கம்.
  உங்கள் எழுத்தின் வீச்சையும்,ஆழத்தையும் எட்ட முடியாத உள் காய்ச்சலோடு,சரக்கே இல்லாத ஒரு நபர் தொடர்ந்து தொடுத்துவரும் போர் இது.உண்மையில் அதில் அவருக்கே ஆயாசம் தட்டாமலிருப்பது ஆச்சரியம்தான்!
  இதனாலெல்லாம் உங்களை முடக்கி விடலாமென நினைத்தால் தோல்வி அந்தத் தரப்புக்குத்தான்.வெற்றுச் சரங்கள் ஒரு பக்கம் வந்துகொண்டே இருக்க…முன்னிலும் பன் மடங்கு வீரியத்தோடு உங்கள் படைப்பின் உச்சங்கள் அவர்களுக்குப் பதில் கூறும்.
  நயத்தக்கோராகிய தங்கள் மனம் ஒரு கணமேனும் புண்பட்டுப் போயிருக்குமல்லவா…அதில்தான் எனக்கு வருத்தம்.

  ’’அவரை மேடையில் வைத்துக்கொண்டு அவரது உடலூனத்தை ரசாபாசமான ஒரு விவாதமாக ஆக்கி தனிப்பட்ட காழ்ப்புகளுக்கு அவரை இரையாக்கியதையே உண்மையில் மிகக்கொடுமையான அவமதிப்பாக எண்ணுகிறேன்’’
  என்று நீங்கள் எழுதியிருப்பதுதான் மிகவும் சரியான நேரிய பார்வை.பரீக்‌ஷா ஞாநியும் இதே காரணத்துக்காக அஞ்ஞாநியென அதே நபரால் பழிக்கப்பட்டதை
  அறியும்போது கோணல்பார்வை யாருடையது என்பது நடுநிலையாளர்களுக்குத் தானே விளங்கும்.

  ’’எந்த எழுத்தாளனையும் வாசிக்காமல் கருத்துக்களை மட்டுமே உருவாக்கிக்கொள்பவர்கள், வம்புச்சண்டைகளை மட்டுமே கவனிப்பவர்கள் நம்மிடம் அதிகம். அதிலும் சமீபமாக அத்தகையோர் கொஞ்சம் அதிகரித்திருக்கிறார்கள்.’’
  என்ற தங்கள் கருத்து மிகவும் பொருத்தமானது. எந்தப் படைப்பையும் வாசிக்காமல் இப்படிப்பட்ட வம்புகளுக்கு மட்டுமே செவியும்,மனமும் கொடுக்கும் கூட்டம் நல்ல இலக்கியத்துக்கு நஞ்சு பாய்ச்சும் வேலையை மட்டுமே செய்து வருகிறது.

  உங்கள் வாசகர்கள் ….தீவிர வாசகர்கள் அறிவார்கள் உங்களை !
  உங்களை என்றும் பின் தொடரும் நிழல்கள் அவர்கள்தான்!

  உங்கள் இறுதி முடிவு எனக்குக் கீழ்வரும் சங்கக் கவிதையைத்தான் நினைவூட்டுகிறது.
  ‘’…கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
  தன்னறியலன் கொல் என்னறியலன்கொல்
  அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென
  வறுந்தலை உலகமும் அன்றே அதனால்
  காவினெங்கலனே சுருக்கினெங்கலப்பை
  மரங்கொல் தச்சன் கைவல் சிறார்
  மழுவுடைக் காட்டகத்தற்றே
  எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’’
  நெடுமான் அஞ்சியிடமிருந்து விலகிச் செல்லும்போது ஔவை பாடிய இந்தப் பாடல் புலமை படைத்தோரின் தனித்த மதிப்பிற்குக் கௌரவம் சேர்ப்பது.
  தாங்கள் இப்போது செய்திருப்பதும் அதுதான்.
  அன்புடன்,
  எம்.ஏ.சுசீலா

 24. த.ஜார்ஜ்

  மதிப்பிற்குரிய ஜெயமோகன்

  வணக்கம்.
  நான் ஒரு மிகச்சாதாரணமான வாசகன்.உங்கள் மொழியில் ‘பொது வாசகன்’

  எழுத எழுத ஊற்றெடுக்கிற விசய ஞானம் உள்ளவர்கள் நீங்கள்.என்னைப் போன்றவர்கள் புரிந்து கொள்ள திணறும் விசயங்களில் தெளிவு தரும் முதிர்ச்சி பெற்றவர்கள்.தனித்தன்மை கொண்ட படைப்பாளி. இப்படி உங்களைப் பற்றி ஒரு பிம்பம் நான் உருவாக்கிக் கொண்டதற்கு நீங்கள் பொறுப்பாளி ஆக முடியாதுதான்.

  சாரு சர்ச்சை குறித்த கட்டுரையின் முதல் பகுதியின் கடைசி பத்தியில் ‘இதை விட வேற வேல இருக்குப்பா’ என்று வசையை பொருட்படுத்தாத உங்கள் நிலையை வெளிப்படுத்தினீர்கள்.மனிதர்களையும் அவர்தம் பண்புகளையும் அடையாளம் கண்டு கொள்கிற திறமையிருப்பதாக மெச்சத் தோன்றியது.

  இடையே சாருவை கோமாளி என்றும்,புத்தியில் ஊனம் உள்ளவர் என்றும் தூற்றியபோதுதான் திடுக்கிட்டுப் போனேன். தனி மனித தூற்றலில் அவருக்கு இணையானவராவதற்கு ஏன் போட்டி போட வேண்டும். எறும்பு கடிக்கிறது என்பதற்காக உங்கள் தனித்துவத்தை விட்டு அதன் தரத்துக்கு இறங்கி நானும் திருப்பி கடிப்பேன் என்கிற மாதிரி…..

  மனுஷ்யபுத்திரன் உங்கள் இருபதாண்டு கால பரிச்சயம் என்கிறீர்கள். அவரது மௌனம் குறித்து அவரிடமே கேட்டிருக்கலாமே? அவரது மௌனத்துக்குப் பின்னால் உங்கள் யூகத்துக்கு அப்பாற்பட்ட காரணமிருக்க வாய்ப்புகளும் உண்டுதானே….
  யார் யாரோ உசுப்பி விட்டு அதற்கு ஈடாக உங்கள் இருபதாண்டு கால நட்பை அறுத்து தூக்கி எறிந்து விட்டீர்கள். எதிர்பார்ப்பில்லாத நட்பு உடைபடுவது சகிக்க முடியாதது. தவிர்க்க பட வேண்டியது என்றே என் சிற்றறிவிற்குபட்டது. மறுபடி யோசிக்கலாம் நீங்கள்.

  நான் எழுதியது புண்படுமாறு பொருள் தருவதாக இருந்தால் அது என் எழுத்து ஆற்றலின்மையேயன்றி வேறில்லை.

  நன்றி.

 25. K.R அதியமான்

  அன்புள்ள ஜெ,

  ஒரு prayer இங்கு பொருத்தமாக படுகிறது. (மனுஸ்யபுத்திரன் அவர்களுக்கான prayer) :

  “God, Save me from my ‘friends’ ; I can take care of my enemies myself”

  சாருவை பற்றி அவர் கடவுளிடம் வேண்ட, மிக பொருத்தமான பிராத்தனை !!!

  சென்ற ஆண்டு, நீங்கள் உங்கள் வலைமனையில், சாரு ஒரு பத்தி எழுத்தாளர் என்று எழுதப்போக, உடனே அவர் ’முதலாம் உலக யுத்தத்தை’ ஆரம்பித்தார்.
  உங்கள் நண்பர்கள், நலம் விரும்பிகள், வாசகர்கள் என பல நூறு பேர்கள்,
  இனிமேல் சாரு பற்றி எழுதாதீர்கள் என்று வேண்டினோம். சுமார்,ஒரு வருடம் ’ceasefire and peace’ நிலவியது.

  ஆனால், சில வாரங்களுக்கு முன், மீண்டும் அவர் ஒரு பத்தி எழுத்தாளர் என்று எழுதினீர்கள். வந்தது வினை. நடந்த நிகழ்வுகள் அனைத்தும், அதனால் விளைந்தவையே. உங்களை தாக்க ஏதாவது நொண்டி சாக்கு, சந்தர்பம் கிடைக்குமா என்று பார்த்தவர், மனூஸ்யபுத்திரனின் கவிதை பற்றிய உங்கள் விமர்சனத்தை வைத்து, ’இரண்டாம் உலக போரை’ துவக்கிவிட்டார்.
  Damages இந்த முறை மிக அதிகம்.

  எனவே, மீண்டும் கேட்டுக்கொள்கிறோம். அவரை பற்றியோ, அவரின் எழுத்தை பற்றியோ இன் எப்போதும், எங்கும் எழுதாதீர்கள், பேசாதீர்கள், நினைக்காதீர்கள். ’துஸ்டனை கண்டால் தூர விலகு’ என்ற பழமொழி மிக சரி.
  Forget him and delete all files of charu.*

  சாருவின் எழுத்து பத்தி எழுத்து அல்ல என்று பல எழுத்தாளர்களும், விமர்சகர்களும் வாசகர்களும் கருதுகிறார்கள். அது பத்தி எழுத்தா அல்லது பின் நவீனுத்தவமா என்பதை காலம் முடிவு செய்யட்டும்.

  இது போன்ற விசியங்களில், காலம் சென்ற சுஜாத்தா அவர்களின் அணுகுமுறை தான் மிக சரி. அவர் தம்மை பற்றிய விமர்சனங்கள், வசைகள் எதற்க்கும், எப்போதும் பதில் அல்லது தன்னிலை விளக்கம் அளிக்கமாட்டார்.
  எப்போதும் அமைதி காப்பார். சக எழுத்தாளர்களை பற்றி விமர்சிக்க மாட்டார்.
  அவர்களின் ஆக்கங்களை விமர்சிக்க வேண்டியிருந்தால் மிக மிக mild ஆக, மென்மையாக விமர்சிப்பார். A gentleman par excellence.
  அதுதான் சரி என்று கருதுகிறேன்.

  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 26. vengku

  அன்புள்ள ஜேமோ

  மனுஷ்யபுத்திரனை இனிமேலே தான் நீங்கள் புரிந்துகொள்ள போகிறீர்கள். அவர் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறார் என்று பார்த்திருப்பீர்கள். அந்த ஆயுதங்கள் எல்லாம் சாரு நிவேதிதா வழியாகவும் வந்து சேரும். ஆழ்ந்த அனுதாபங்கள். சுந்தர ராமசாமியை சாரு வசைபாட அய்யய்யோ அதெல்லாம் தப்பு என்று இவர் கொஞ்ச என்ன ஒரு சிறப்பான நடிப்பு இல்லையா? சாருவுக்கு மனுஷ்புத்திரன் டப்பின்ங் கொடுப்பதை பார்க்கத்தானே போகிறோம்

  வெங்கட்

 27. ஜெயமோகன்

  dear george,
  true…i am deliting the said portions thank u
  j

 28. Manikandan

  அன்புள்ள ஜெயமோகன்

  நீங்கள் மன்னிக்க வேண்டும். சில விசயங்களை சொல்லாமல் இருக்க முடியாது. உங்களுக்கு தமிழில் பலபேருக்கு உங்கள் மேலே இருக்கும் வெறுப்பைப்பற்றி தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பக்கத்திலேயே வெளிவந்திருக்கும் கடிதத்தையே எடுத்துப் பாருங்கள். எப்படி இருக்கிறது என்று பாருங்கள். அதை எழுதியவருக்கு இருபது வருஷங்களாக நீங்கள் எழுதியது எதுவுமே தெரியாது. எத்தனை புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். யார் யாரோ முகம் தெரியாத கவிஞர்களையும் கதையாசிரியர்களையும் பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். எத்தனை பழைய எழுத்தாளர்களை விரிவாக ஆராய்ச்சி செய்து முன்வைத்திருக்கிறீர்கள். எவ்வளவு உழைப்பு…எப்படியும் இரண்டாயிரம் பக்கங்கள் எழுதியிருப்பீர்கள் இல்லையா? இதனால் உங்களுக்கு என்ன லாபம்? நீங்கள் இலக்கியம் என்று நம்பக்கூடிய ஒன்றுக்காக செய்கிறீர்கள்.

  அதைத்தவிர எவ்வளவு நாவல்கள்…கதைகள். தமிழிலே இன்றைக்கு இன்னொருமுறை வாசிக்கலாம் என்ற தகுதி கொண்ட எத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்? பெரும்பாலான சிறிய இதழ்களில் உங்கள் படைப்புகளை நான் வாசித்து வருகிறேன். என்னிடம் சாட்டிலே பேசிக்கொண்டிருந்தபோது எல்லா சின்ன அளவிலான மாற்று முயற்சிகளுக்கும் உங்கள் ஆதரவு உண்டு என்று சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்களைப் போட்டுத்தான் எல்லாருமே ஆரம்பிக்கிறார்கள். காலச்சுவடும் உயிர்மையும் அப்படித்தான் ஆரம்பித்தார்கள்.. எந்த அமைப்புடனும் நீங்கள் நின்றதில்லை. ஆனால் எதைப்பற்றியுமே இவர்களுக்குத் தெரியாது. தெரிந்துகொள்ள அக்கறையும் இல்லை. இப்படி தெரியாமலே சொல்கிறோமே வாசிக்கும் வழக்கம் உடையவன் நம்மைப்பற்றி என்ன நினைப்பான் என்ற கவலையும் கிடையாது. இதேபோல ஏராளமானவர்களை நான் சந்தித்துக்கொண்டே இருக்கிறேன். நீங்கள் எழுதிய ஒரு கதையைப்பற்றிச் சொன்னால் போது, ஓகோ ஜெயமோகன் ஆளா என்று கேட்டு விடுவார்கள். இவர்களிடம் பேசவே முடியாது.

  இவர்களுக்கு கடுமையான கோபங்கள் இருக்கின்றன. அந்தக் கோபத்துக்கான காரணமே இவர்களுக்கு தெரியாது. கொஞ்சபேருக்கு வெறும் பொறாமை. மிச்சபேருக்கு ஏதாவது சின்ன கசப்புகள். சாதிக்கசப்புகள் நிறையபேருக்கு இருக்கின்றன. திராவிடக்கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு அந்த மாதிரிக் கசப்பு இருக்கிறது. கம்யூனிஸ்டுகளுக்கும் உங்கலைப் பிடிக்கவில்லை.தீவிரமான தலித்துக்களுக்கும் பிடிக்கவில்லை. எல்லாரும் ஒரு வரியிலே தூக்கிப்போட்டுவிடுவார்கள். இப்படி ஏதாவது ஒரு நிலை உள்ளவர்களுக்கு உங்களை பிடிக்கவில்லை. அவர்கள் நீங்கள் என்ன எழுதினாலும் வாசிக்க மாட்டார்கள். என்ன சொன்னாலும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எதிலும் தப்புதான் கண்டுபிடிக்கிறார்கள். உங்களை ஒருவன் எந்த அளவுக்கு அநீதியாக வசைபாடினாலும் சந்தோஷம்தான்படுவார்கள். தப்பும்சரியும் என்ற பேச்சே கிடையாது.

  இது சாரு நிவேதிதாவுக்குத் தெரியும். அவர் உங்களை வசைபாடினால்தான் அவருக்கு ஆதரவாளர்கள் வருவார்கள். அவர்கள் எல்லாருமே உங்களுடைய எதிரிகள். அவர்கள் சார்பில் இவர் திட்டுகிறார். இந்த எதிரிகளுக்கு சாரு நிவேதிதா மீது கொஞ்சம்கூட மரியாதை இல்லை. சாருவையே ஒரு கோமாளி என்றுதான் சொல்வார்கள். அவரது எழுத்து பைசாவுக்கு பெறாது என்று என்னிடமே சொல்லியார்கள் அவர் உங்களை திட்டுவதை ஆவலாக போய் வாசிக்கிறார்கள்.இப்படி ஒரு கும்பலைத்திரட்டத்தான் சாரு நிவேதிதா முயற்சி செய்கிறார். அவர் வேறு எப்படியும் ஆதரவை திரட்ட முடியாது. அவருடைய வெப்சைட்டையே பாருங்கள். தினமும் அத்தனைபேர் பார்க்கிறார்கள் ஆனால் யாருமே புக் வாங்க மாட்டேன் என்கிறார்கள் என்றும் பணம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்றும் அவரே சொல்கிறார். அவர்கள் சாரு நிவேதிதா திட்டினால் மட்டும் போரும் என்று நினைப்பவர்கள். அதற்காக மட்டும்தான் அவரது வைப்சைட்டுக்கும் கூட்டத்துக்கும் வருகிறார்கள். அது தெரிந்துதான் ஒரு இடைவெளியில் அவர் உங்கலை திட்டிக்கொண்டே இருக்கிறார். எதாவது ஒரு விஷயம் அவருக்குக் கிடைத்துவிடும். அந்த விஷயம் எதுவானாலும் அதுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது.

  இப்பக்கூட இந்த விஷயத்தைச் சொல்லி ஒரு ஆறுமாதம் அலம்பல் செய்வார். அவர் உங்கள் அப்பா அம்மாவைப்பற்றி ஆபாசமாக எழுதினபோதுகூட அதை ஆதரித்தவர்கள் ஏராளமானவர்கள் உண்டு. இந்த மாதிரி ஒரு கார்ணமும் சொல்லும்போது இன்னமும் ஆதரிப்பார்கள். கொஞ்சநாள் உங்களுக்கு அர்ச்சனை நடக்கும். அவரே சென்னையிலே மேடையில் அப்படிச் சொன்னார் என்றார்கள். கொஞ்ச்நாளைக்கு கச்சேரி உண்டு என்று. மனுஷ்யபுத்திரனைப்பற்றி அப்படியெல்லாம் சொன்னீர்களே இனிமேல் பாருங்கள் சுயரூபம் தெரியும். அவரும் சாருவும் சேர்ந்து எழுதப்போவதை பாருங்கள். மத்தவர்களுக்கு தெரியாது. ஆனால் உங்களுக்கு வாசித்ததுமே தெரியுமே யார் அதுக்கு பின்னால் என்று தெரியும் அல்லவா? உங்கள் கருத்துக்களை நியாயமாக எதிர்க்க முடியாதவர்கள் செய்யும் கேவலமான உத்திதான் இது. ஆனால் நீங்கள் இந்த தந்திரத்திக்கு எளிமையாக பலியாகி விடுகிறீர்கள். இந்தக் கட்டுரையை நீங்கள் எழுதியிருக்கவேகூடாது. இதை வைத்துக்கொண்டு கொஞ்ச நாள் கொண்டாடுவார் சாரு நிவெதிதா. இது முடிந்ததும் எல்லாரும் பணம் கொடுங்கல் என்று கேட்பார். உங்கள் எதிரிகள் கொஞ்சபேர் பிச்சை போடுவது போல பணம் அனுப்புவார்கல். சர்க்கஸ் முடிந்ததும் தொப்பியை நீட்டிக்கொண்டு வருவார்களே அதை மாதிரி.

  எல்லாம் உங்கள் தப்பு. நீங்கள் அவரது தந்திரத்துக்குப் பலியாகி பேசிப்பேசி அவரை ஏற்றி விடுகிறீர்கள். இன்றைக்கு அவரை இலக்கிய உலகம் பேசுகிறது. ஏன் என்று பாருங்கள். நான் இருபதாண்டுகளாக புஸ்தகம் வாசிக்கிறவன். அதேபோல சிற்றிதழ்களை வாசிக்கிறவன். உலக இலக்கியம் வாசிக்கிறவன். மௌனமாக வாசிக்கிறேன். இவர் இன்றுவரை ஒரு நல்ல கதை எழுதினது இல்லை. மேலும் ஒரு நல்ல கட்டுரைகூட எழுதினதில்லை. சாதாரணமாக பெயர்களை உதிர்ப்பது தவிர ஒரு ஆசிரியரைப்பற்றியும் ஒரு பாரா கூட இன்றைக்குவரை படித்துவிட்டு எழுதினது இல்லை. ஏதாவது புஸ்தகம் வாசிக்கிறாரா என்ற சந்தேகமே எனக்கு உண்டு. அப்படியும் ஏன் இந்த வட்டம் உருவாகி இருக்கிறது? முன்னாடி சுந்தர ராமசாமியை திட்டிக்கொண்டே இருந்தார். அவரை சுந்தர ராமசாமியின் எதிரிகள் தூக்கி விட்டார்கள். இப்போது உங்களை திட்டுகிறார். இது மிகவும் சீப்பான ஒரு டெக்னிக். இதை நீங்கள் புரிந்துகொள்ளாமல் வளர்த்து கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் செய்வதுதான் முட்டாள்தனம்.

  மனுஷ்யபுத்திரனை நீங்கள் விட்டுவிட்டது சரிதான். இதை முன்னாடியே செய்திருக்க வேண்டும். நான் நாலைந்துமுறை உங்கலிடம் சொல்லியிருக்கிறேன். அப்போது நான் காழ்ப்புடன் பேசுவதாகச் சொல்லிவிட்டீர்கள். அவர் ஒரு பக்கா வியாபாரி. அவருக்கு நீங்களும் வேணும். உங்கள் எதிரிகளும் வேனும். இருசாராருமே அவருடைய புஸ்தகங்களை வாங்க வேண்டும். எஸ்.ராமகிருஷ்ணனும் வேண்டும் தமிழச்சியும் வேண்டும். அதுதான் அவரது தந்திரம். கேட்டால் எனக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்லுவார். அவர்தான் சாரு நிவேதிதாவை வளர்த்து விட்டவர் என்று சொல்லியிருக்கிறேன். நன்றாக யோசித்துப்பாருங்கள். சாரு நிவேதிதா எழுத வந்தது எப்போ? 1980களிலே. அது முதல் 2000 வரை இருபது வருசம் அவருக்கு என்ன இடம் இருந்தது இலக்கியத்திலே? பிரேமின் ஒரு ஜால்ராவாக இருந்தார். அதுக்கு மேலே என்ன? மனுஷ்யபுத்திரன் அவரை ஒரு பெரிய இடத்துக்கு தூக்கி வைக்கிறார். உயிர்மையின் எல்லா இதழிலும் சாரு நிவேதிதாவின் கட்டுரைகள்தான் அட்டைப்படம். எல்லாம் சீப்பான சினிமாக் கட்டுரைகள். குமுதத்தை விட கேவலமான கட்டுரைகள் இல்லையா? அதற்கு நாம் குமுதத்தையே வாசிக்கலாமே. சாரு நிவேதிதாதான் அவருக்கு முக்கியமான நம்பர் ஒன் எழுத்தாலர். அதாவது நீங்கலும் எஸ்.ராமகிருஷ்ணனும் யுவன் சந்திரசேகரும் சேர்ந்து நல்ல கதைகள் எழுதி ஒரு சீரியஸான மீடியாவை உருவாக்கிகொடுக்கிறீர்கள். அதுக்கு தலைமையில் மனுஷ்யபுத்திரன் சாரு நிவேதிதாவை உக்கார வைக்கிறார். இதுதானே நடக்கிறது? இதை நான் சொன்னால் முன்னால் உங்களுக்கு புரியவில்லை. இப்போதாவது புரிந்ததில் சந்தோஷம். நன்றாக சிந்தித்த்ப் பாருங்கள். நான் அனுப்பிய கடிதத்துக்கு பதில் இல்லை. ஆகவே இங்கே பதிகிறேன். உங்கள் வாசகர்களும் யோசிக்கட்டும்

 29. ஜெயமோகன்

  அன்புள்ள ஜார்ஜ்

  உங்கள் கேள்விக்கு ஒரு எளிய விளக்கம். சாரு நிவேதிதா எனக்கு எப்போதுமே ஒரு பொருட்டு அல்ல. சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி சாரு இப்படி செய்வது எல்லா வருடமும் வழக்கம். ஆனால் அவரது அன்றையபேச்சு மனுஷ்யபுத்திரனுக்கும் முன்னரே தெரியும் என்று நான் நினைக்க எனக்கு நேரடியான ஆதாரங்கள் உள்ளன. பலருக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப் பட்டுள்ளன. இதுதான் வருத்தம்.

  அவரை மீறி நடந்திருந்தால் அந்த மேடையில் அவர் அதை மறுத்திருக்க வேண்டும். என் நண்பர்களைப்பற்றிப் பேசப்பட்டிருந்தால் நான் மறுத்திருப்பேன். கண்டித்திருப்பேன். இது அவரது அரங்கு, அவரது நூல். மேடையில் அவரே இருந்தார். அதன்பின் ஐந்துநாட்கள் நான் அவரிடமிருந்து ஏதாவது தகவல் வரும் என காந்திருந்தேன். மாறாக என் நண்பர்கள் பலர் அவரை அழைத்தபோது அவர் ·போனை எடுக்கவில்லை. அதேசமயம் சாருவும் அவரும் பலமுறை சந்தித்து பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். மனுஷ்யபுத்திரனைப் பொறுத்தவரை இது புத்தகக் கண்காட்சியை ஒட்டிய ஒரு விளம்பர யுத்தம். அவர் நடுவர்.

  அகநாழிகைக்கு அவர் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் வேறுயாரையோ விமரிசிக்கிறார், அவர்கள் அவரை அவரது ஊனத்தின் அடிப்படையில் மட்டுமே பார்க்கிறார்கள் என்று. அது என் கட்டுரையுடன் சம்பந்தப்பட்டதல்ல, கட்டுரைக்கு ஒருமாதம் முன்னரே அச்சாகிவிட்டபேட்டி அது. அதை சாரு எடுத்து பிரசுரிக்க அவர் ஒத்துக்கொள்கிறார்.

  நான் அவருக்கு என் வருத்தத்தை தெரிவித்து கடிதம் எழுதினேன். அதற்கான பதிலில் மூன்று வருடம் முன்பு நான் ஒரு மேடையில் சாருவை பற்றி பேசியதற்கு இது சாருவின் பதில் என்று சொல்லியிருந்தார். நான் ‘சாருவை நான் எழுத்தாளனாக எண்ணியதில்லை. ஏதோ எழுதுகிறார் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் சீரோ டிகிரி வந்தபோது அது நல்ல படைப்பு என்று சொல்ல தயங்கியதில்லை’ என்ற இரண்டே வரிகளை, இப்படியே சொல்லியிருந்தேன். அது என் கருத்தாம் சாரு மேடையில் ஆபாசமான வசைகளை பேசியது அவரது கருத்தாம். இரண்டும் சமமாம். இந்தக் கருத்துமோதலில் அவர் நடுநிலை வகிக்கிறாராம். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனச் சொல்லி எழுதிவிட்டேன்.

  இந்த இருதரப்பையும் அவர் இனிமேல் சேர்த்துக்கொண்டு போக முடியாது. எந்த கலாச்சார சீரழிவுக்கு எதிராக நான் இலக்கியம் படைக்கிறேன் என நம்புகிறேனோ அந்தச்சீரழிவின் உச்சத்தை வழிநடத்தியபடி அவர் என்னையும் தக்கவைத்துக்கொள்ள முடியாது. அவரது வழி வேறு என முடிவுசெய்தேன்.

  *

  அன்புள்ள அதியமான்,

  உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். இலக்கியவிமரிசனம் என்பது இலக்கியச்சூழலை விமரிசனம் செய்வதும்கூடத்தான் என்பதே என் எண்ணம். ஆனால் இப்போது இது ஆபாசத்தின் எல்லைகளை நோக்கிச் சென்றுவிட்டது.

  இனிமேல் இந்த இணையதளத்தில் அல்லது என் எழுத்தில் எப்போதும் சாரு, உயிர்மை, மனுஷ்யபுத்திரன் ஆகியோர் இடம்பெற மாட்டார்கள். அவர்களின் உலகமே முற்றிலும் வேறு. எந்தவகையான அவதூறுகள் திரிபுகள் எதற்கும் பதில் சொல்லப்போவதில்லை

  இந்த திரியை இங்கே முடித்துக்கொள்வோம்

  அன்புடன்

  ஜெயமோகன்

 30. selva

  http://naayakan.blogspot.com/

Comments have been disabled.