பகுதி மூன்று: 2. பெயராதல்
ஆயர் சிறுமகளே, உனக்கிருக்கும் ஆயிரம் பணிகளை உதறிவிட்டு அதிகாலையிலேயே எழுந்து எங்கு ஓடிச்சென்றுவிட்டாய்? கைதுழாவி, கூந்தல் அலைதுழாவி நீ குளிராடும் யமுனைப்படித்துறையின் புன்னைமலர்ப்படலம் இன்னும் கலையவில்லை. உன் வெண்பஞ்சுப் பாதம் மெத்திட்டு மெத்திட்டு ஓடிவரும் பனிசுமந்த புல்பரப்பும் உன் ஈரப்பாவாடை உடல் ஒட்டி இழுபட்டு மந்தணம் பேசிச்செல்லும் இருள் படிந்த சிறு வழியும் காத்திருக்கின்றன. அதோ உன் தொழுவங்களில் அன்னை மடிக்கீழே கன்றுகள் உனக்காக வால் தூக்கி நாசிகூர்கின்றன.
அரசி, உன் கரம்தொட்டு வருடி கறந்தெடுக்கும் புதுப்பால்நுரை எழும் பொன்னொளிர் சிறுகலம் வெறுமையள்ளி வீற்றிருக்கிறது. அதை நிறைக்கும் அமுதம் விண் நிறைந்த பாற்கடலில் அலைததும்பி எழுந்து அன்னைப் பசுவின் அகிடுகளில் துளிவிட்டு ததும்பி நின்றிருக்கிறது. எங்கே சென்றிருக்கிறாய்? இளங்காலை இருள் விலகும் முன்னரே கன்னியர் இல்லம் விட்டுச்செல்வது முறையா? நில் நில், உன்னுடன் துணைவருகிறேன். என்னை சேர்த்துக்கொள், உன் இடையாடையில் ஆடுகிறேன். உன் மலர்க்குழலை உலைக்கிறேன். உன் மங்கல மணத்தை நீ செல்லும் வழியெல்லாம் நிறைக்கிறேன்!
விடிவதற்குள்ளேயே ராதை கோகுலத்தை அடைந்துவிடுவாள். அவள் வந்தபின்னரே கருக்கல் துயில்மயக்கம் விலகி யசோதையும் கண்விழிப்பாள். மொட்டலர்ந்த வல்லியை, முழுக்குருடர் தொட்டறியும் எல்லியை, தொட்டில் விட்டெடுத்து தன் மொட்டுமுலைகள் மேல் அள்ளி அணைத்து ராதை முதல்முத்தம் ஈந்த பின்னரே அன்னைதரும் முத்தம் அவனைத் தீண்டும். “உன் குடியில் உனக்கு வேலையென ஒன்றில்லையோடி? உன் தாய்தந்தை உன்னை தேடுவதில்லையோ?” என்பாள் யசோதை. “ஆயர்குலமகள் வாழும் குடி ஒன்றை தாங்குபவள் அல்லவா? உன் வாசலில் கோலமிட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறாயா?”
கருமை ஒளிரும் மைந்தனை கைநிறைய அள்ளியிருக்கையில் எவ்வினாவும் ராதையை தொடுவதில்லை. நீலமெழுந்த மெல்லுடலின் இசையைக் கேட்பாள். செவ்விதழ் குமிண்சிரிப்பை உண்பாள். பால்மணக்கும் மூச்சின் வண்ணங்களில் கண்ணளைவாள். செல்லக்கழலின் சிற்றொலியை தோள் விரித்து அணைப்பாள். சிறுகால்களின் உதைகளை முகர்வாள். அங்கெலாம் அவனிருப்பான், அவளோ அங்கிருப்பதேயில்லை. அன்னை விழி நோக்காத சிறுமகவுதான் அவளும் என்றெண்ணிக்கொள்வாள் யசோதை. கனவில் மலர் எழுந்ததுபோலத்தான் அவளும் புன்னகைத்துக் கொள்கிறாள்.
பாலருந்தும் வெண்சங்கை உதைத்துக் கவிழ்க்கிறான். வீசிய சிறுகைபட்டும் உருண்டோடுகிறது விளையாட்டுச் சிறுசக்கரம். தன் வயிற்றை தான் தொட்டு புடவியை அறிகிறான். தன் கைகளை ஆட்டி ஆட்டி காலத்தை சூழவைக்கிறான். மார்பமைந்த தேவி வந்து மலர் காட்ட இதழ் விரித்து கண்ணொளிர்ந்து சிரிக்கிறான். ஒற்றைக்கால்தூக்கி மூவுலகை அளக்கிறான். மற்றைக்கால் அசைத்து விண்ணிலெழ முயல்கிறான். அரைக்கணமும் பசி தாளாது சிவந்து துடித்தழுகிறான். “கச்சவிழ்க்கும் கணம்கூட அளிக்க மாட்டாயா? ஊழிப்பெரும்பசியா உனக்கு? உலகேழும் உண்டுதான் அமைவாயா?” யசோதை ஒருமுலையை அவன் வாயிலூட்டி ஊற்று சீறும் மறுமுலைக்கண்ணை கைகளால் பற்றிக்கொள்கிறாள். கட்டை விரல் நெளித்து கண்சொக்கி கடைவாய் வழிய அவன் அருந்தும் அமுத வெளியாகிறாள்.
பாதிவயிறானதும் தலைதிருப்பி கையசைத்து வாய் நிறைத்து வெண்கடல் வழிய சிரித்து பொருளாகா பெருஞ்சொல் ஒன்றைச் சொல்கிறான். அவன் நீலமுகம் மீது ஊற்றெழுந்து வழிகிறது அவள் நெஞ்சுருகும் இளநீல கொழுங்குருதி. அடுக்கு மலர்போல மடிந்த மென்தொடையில் மெல்ல அடித்து “என்ன விளையாட்டு? குடிக்கிறாயா, இல்லை காற்றுக்கே கொடுத்துவிடவா?” என்று அதட்டுகிறாள் அன்னை. தலைதிருப்பி ராதையை நோக்கிச் சிரித்து கைநீட்டி கால்களால் மடியை உதைத்து எம்புகிறான். அவனை அள்ளி எடுத்து அன்னையின் பாலுடன் அமுதும் வழியும் குளிர்ந்த வாயை கன்னம் சேர்த்துக்கொள்கிறாள். காலுதைத்து எம்பி எம்பிக்குதித்து “இங்கு இங்கு” என்கிறான்.
உதடுகுவித்து “முத்தம். முத்தம் கொடு… முத்தம்கொடு என் முத்தே” என்று அவள் கேட்க கண் மின்னச் சிரித்து கைகளை விரித்து ஆட்டி “அம்மு அம்மு” என்று துள்ளுகிறான். கழுத்தின் மென்சதை மடிப்புகளுக்குள் தோளின் இடுக்குகளுக்குள் ஊறிவழிந்திருக்கிறது ஆயர்குலத்து அன்னையரின் ஆயிரம் தலைமுறை குருதிப்பால் சரடு. “பால்குடித்தாயா? பாற்கடலில் நீந்தினாயா? பழிகாரா? எத்தனைபேருடன் ஒரே கணத்தில் விளையாடுவாய்?” என்று ராதை அவன் வாய்மலர்வை தன் விரல்நுனியால் துடைத்தாள். இடைவளைத்து புரண்டு அன்னையை நோக்கி கைநீட்டி அவளும் வேண்டும் என்றான். “ஒற்றைக் கணத்தில் ஒருத்திதான் உன்னை அள்ளமுடியும் என் சிறு மூடா” என்று சிரித்தாள் யசோதை.
உலர்சாணி அடைகளை அடுக்கிய உறையடுப்பில் வெண்கலப் பானையை ஏற்றி வேப்பந்தளிரும் மகிழம்பூவும் இட்டு காய்ச்சிய வெந்நீரை மலர்மணக்கும் ஆவியெழ அள்ளி வாயகன்ற பாத்திரத்தில் வளாவி வைத்தாள் ராதை. கஸ்தூரிமஞ்சள் கலந்து இடித்த செம்பயறுப்பொடியை சிறு சம்புடத்தில் எடுத்து அருகே வைத்து கால்நீட்டி அமர்ந்துகொண்டாள் யசோதை. சந்தன எண்ணையிட்டு நீவி மெழுகிய சிறுமேனியை கைவழுக்க விரல் நழுவ அள்ளி மடியிலிட்டு தலைவருடி தோள் வழித்து கால்களில் படுக்கவைத்தாள். முழங்காலில் குப்புறப்படுத்து காலுதைத்து கைநீட்டி நீந்தி மேலெழமுயல்பவனின் செல்லச்சிறு புட்டங்களில் கைகளால் மெல்லத்தட்டி “எங்கே செல்கிறாய்? ஒரு கணமும் அசைவறாமலிருக்க நீயென்ன மாமதுரை கோட்டைமேலெழுந்த வெற்றிக்கொடியா? யாதவர்களின் வேள்விக்குண்டத்திலெழுந்த தென்னெருப்பா? அடங்கு. இல்லையேல் அடிவாங்கி அழுவாய்” என்றாள் யசோதை.
இளவெந்நீரை அள்ளி விடுகையில் நீலத்தாமரையிதழில் நீர்மணிகள் உருண்டோடும். செம்மஞ்சள் பொடி தேய்க்கையில் நீலத்தில் பொன்வழியும். தலைமேல் நீர் விழுகையில் வாய்திறந்து மூச்சடக்கி எம்பி கைநீட்டுகிறான். நீரோடும் சிறுமேனி கைநழுவி விடுமோ என்று யசோதை அள்ளிப்பற்ற சிறுபுயத்தின் மென் தசைகள் அழுந்தக் கண்டு கால்களைப் பற்றிக்கொள்கிறாள் ராதை. “கண்களுக்குள் பொடி விழுவதற்காகவே முகம் திருப்புகிறான் சதிகாரன். கண்ணீரில்லாமல் இவன் குளித்துமுடிப்பதேயில்லையடி” என்றாள் யசோதை. கதறி கைகால் உதைத்து வெண்கலக்கிண்ணியை மணியோசை கொள்ளச்செய்கிறான். நீர்செம்பை உதைத்து ஓடவைக்கிறான். தீத்தழல் போல கைகளில் பற்றி எழுந்து படர்கொழுந்தாடி நெளிகிறான். மென்துகிலால் மெல்லப் பொத்தி எடுத்தணைத்து தலைதுவட்டுகையில் அக்கணமே பசி எழுந்து அன்னைமுலையைப் பற்றிக்கொள்கிறான்.
பாலருந்தி கைநெளித்து மெல்லக் கண்வளர்கிறான். அருகே முழந்தாளிட்டு அமர்ந்து ராதை மண்மகள் நினைத்தேங்கும் அவன் மலர்செம்பாதங்களை துடைக்கிறாள். மென்தசை மலர்மடிப்புகளை ஒவ்வொன்றாக நீவி விரித்து ஒற்றி எடுக்கிறாள். தாழைமலர்ப்பொடிசேர்த்து இடித்தெடுத்த நறுஞ்சுண்ணத்தூளை மெல்ல தளிர் மேலிட்டு பூசுகிறாள். அவள் சிவந்த மெல்விரல்கள் தீண்டுகையில் முலைக்கண் விட்டு வாயெடுத்து இதழோரம் கோடுவிழ இமையிதழ் மயிர்கள் ஒட்டிப்படிந்திருக்க கண்மூடிச் சிரிக்கிறான். கண்ணீர் மல்கி குனிந்து அவன் பூம்பாதம் கையிலெடுத்து இதழ்சேர்ப்பவள் அக்கணம் முழுமைகொண்டு மறுகணத்தில் மீண்டும் பிறந்தாள்.
“துயிலும்போதன்றி அவனுக்கு திலகமிட எவராலும் இயலாது” என்றாள் யசோதை. “நீலச்சிறுமுகத்துக்கு பொன்னிறத்தில் பொட்டிடுவேன். என் ஆயர்குடிகளில் பொன்னிறத்தில் கண்ணேறு களைபவன் இவன் ஒருவனே” என்றாள். அரைத்துயிலில் மெல்ல விரிந்த கைமுடிச்சுக்குள் இருந்தது அன்னையின் கூந்தலிழை ஒன்று என்று கண்டு ராதை மெல்ல அதை விலக்கி புன்னகைத்தாள். “கூந்தலிழை பற்றுவதை அவ்வுலகிலேயே கற்றுவந்திருக்கிறான் கள்வன்” என்று அன்னை சொல்ல கண்பொங்கி அவளும் சிரித்தாள். துயில்கொள்ளும் மைந்தனருகே மயிற்பீலி விசிறியுடன் கண்மலர்ந்து கருத்தழிந்து அமர்ந்திருந்தாள்.
ராதையின் இடையமர்ந்து அவள் கைசுட்ட கண்ணோட்டி கண்டவையே அவன் அறிந்தவை அனைத்தும். சிறகுகள் பறக்கும் இதழ்கள் என்றும் மலரிதழ்கள் பறக்கத்துடிக்கும் வண்ணச்சிறகுகள் என்றும் அவன் அறிந்தான். மரங்களில் விரிந்த பல்லாயிரம் செவிகளை, மான்களில் சிலிர்த்தசையும் இரு இலைகளை, தும்பியின் துதிக்கைச்சுருளை, யானையின் சிறகுகளை, ஆலமரத்தின் வால்குஞ்சங்களை, ஆநிரைகளின் விழுதுகளை, வீடு பறக்கும் வானை, மேகம் உறைந்த மலைத்தொடர்களை, யமுனையின் அனல் நெளிவை, சுடர்விளக்கின் குளிரூற்றை அவள் விழிகள் வழியாகவே கண்டடைந்தான்.
தென்றலை அறிந்து அவள் இடையமர்ந்து துள்ளினான். கைநீட்டி வெயிலை அள்ளித் தரச்சொல்லி அடம்பிடித்தான். இடியோசை கேட்டு சிலிர்த்து அவள் தோள்தழுவி இறுக்கி கழுத்துவளைவில் முகம்புதைத்தான். நிலவை நோக்கி “தா தா” என்று கை நீட்டி விரலசைத்தான். இருண்டவானில் எழுந்த விண்மீன்களை நோக்கி விழிமலைத்து அமர்ந்திருந்தான். கண்சொக்கி கருத்தழிந்து கட்டைவிரலை வாய்க்குள் செலுத்தி தலைதொங்கி துயின்றான். அவள் தோளில் குளிர்ந்து வழிந்தது அவன் கண்ட கனவு. அவனை மார்போடணைத்து “என்ன கனவு என் கண்ணனுக்கு?” என்று அவள் கேட்டாள். நாக்கு சுழற்றி தன் இனிமையை தான் சுவைத்து “உம்” என்று அவன் பதில் சொன்னான்.
ஒவ்வொன்றுக்கும் ஒரு சொல்லிருப்பதன் விந்தையில் துள்ளித்ததும்பி கை வீசிச் சிரித்தான். “மா!” என்று வானைச்சுட்டிக்காட்டினான். அச்சொல்லாலேயே பசியையும் மகிழ்ச்சியையும் துயிலையும் விழிப்பையும் வீட்டையும் சுட்டினான். ஆற்றலைச் சொல்லும் ஒலியே “பா” என்று கண்டுகொண்டான். கனத்த புயங்களில் இறுகிய மரத்தடிகளில் பாறைப்பரப்புகளில் அச்சொல்லை அடைந்துகொண்டே இருந்தான். இருத்தலே தானென்றறிந்து தன் வயிற்றை தான் தொட்டு கண்ணொளிர நகை மலர்ந்து “ண்ணன்” என்றான். இங்கே, இது, இப்போது, இனி என அனைத்துக்கும் அதையே சொல்லாக்கினான்.
சொல்பெருகி உலகாகும் விந்தையை அவள் குரல் வழியாக கண்டைந்தான். ஒவ்வொன்றையும் சுட்டும் அவள் விரலையும் குவிந்து நீண்டு விரிந்து ஒலிக்கும் அவள் உதடுகளையும் புன்னகையும் பாவனை அச்சமும் எழுந்துவரும் அவள் கண்களையும் மாறிமாறிக் கண்டு அவன் சிந்தைமொழியை அடைந்தான். ஒன்று முளைத்து ஓராயிரமாகும் முடிவிலா மாயமே சொல்மொழி என்றுணர்ந்தான். காகம் என்று கருமேகத்தை கண்டடைந்தான். கிளி என்று இலைகள் அனைத்தையும் சொன்னான். குருவி என்று தன் கைவிரல் குவித்துக் காட்டினான். பூ என்று அவள் செவ்விதழ்கள்மேல் கைவைத்துச் சிரித்தான்.
கோப்பைகளையும் கிண்ணங்களையும் கரண்டிகளையும் வீட்டுக்குள் பரப்பிவைத்த அதே அன்னை பேருருக்கொண்டு விளையாடி எழுந்துசென்றதே வெளி என்றறிந்தான். “அங்கு!” என்று கைசுட்டி அதைச் சொல்லி எழுந்து செல்லத் துடித்தான். மலைகளையும் நதிகளையும் காடுகளையும் வைத்தவளின் முந்தானை நெளிவை வெயிலென்று கண்டு இரு கைகளையும் விரித்து அதில் பறந்தாட விழைந்தான். “போ, போ” என்று இடையமர்ந்து துள்ளித்துள்ளி ராதையிடம் சொல்லிக்கொண்டே இருந்தான். “அங்கே! அங்கே” என்று கைநீட்டிக்கொண்டே இருந்தான். சிரித்துக்கொண்டே “அங்கேயா? அங்கேயா?” என்று கேட்டு அவள் அவனை எடுத்துக்கொண்டு ஓடினாள்.
பச்சைவெளிமேல் இளமஞ்சள் ஒளிவிரிந்த அந்தியில் யமுனைக்கரை மேட்டின் எல்லைவரை சென்று நின்றாள். கைவிரித்து காலுதைத்துத் தாவிஎழும் மைந்தனுக்கு புரவியாக கால் விரைந்தாள். அந்நீலக்கொடி பறக்கும் மரமாக அங்கே நின்றிருந்தாள். பின் நீலத் தழல் பற்றி நின்றெரியும் விறகாக தன்னை உணர்ந்தாள். நீட்டிய கைகளுக்கு அப்பால் குடைசாய்த்தது போல் நின்றிருந்த நெடுவானைக் கண்டு அசைவழிந்து விழி ஒளிர்ந்து அமர்ந்திருந்தவன் மெல்ல நெடுமூச்செறிந்து அவள் கழுத்தில் கையிட்டு தோளில் முகம் சேர்த்து “ராதை!” என்றான். மழைபட்ட நீர்ப்பரப்பாக உடல் சிலிர்த்து “உம்?”என்று அவள் கேட்டாள். “ராதை!” என்று சொல்லி கண்மூடி முகம்புதைத்தான்.
அந்தியிருளில் அமிழாதொளிர்ந்த நீலத்தை ஒரு கணம் நோக்கி ‘யாரிவன்?’ என்று திகைத்தாள். செவி அறிந்ததா சிந்தை மயங்கியதா என்று தவித்தாள். ‘யார்? யார்?’ என்று மீண்டும் மீண்டும் கேட்டாள். செவியிலாது விழியிலாது சொல்லிலாது கருவறை அமர்ந்த கருஞ்சிலை போல் அவள் இடையமர்ந்திருந்தான். நெஞ்சுபொங்கி எழுந்த பேரலையால் துடித்தெழுந்த கைகளுடன் அவனை மார்போடணைத்து “ஆம், நான் ராதை! ராதை நான்” என்று அவள் விம்மினாள். கண்ணீர் பெருக முத்தமிட்டு “ராதை! ராதை! ராதை!” என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தாள்.
இனித்து இனித்து இருளை நிறைத்த ஒற்றைச் சொல்லுடன் தன் ஆயர்குடி மீண்டாள். ஒவ்வொரு காலடியிலும் அச்சொல்லாகி நெகிழ்ந்தது மண். ஒவ்வொரு மூச்சிலும் அச்சொல்லாகி நெளிந்தது காற்று. ஒவ்வொரு அசைவிலும் அச்சொல்லாகி விண்மீன் சூடி அதிர்ந்தது வானம். அச்சொல்லில் ஏறி அச்சொல்லின் அலைகளில் மிதந்து அவள் தன் இல்லம் அணைந்தாள். “எங்கு சென்றாயடி?” என்று கேட்ட தன் அன்னையை பாய்ந்து அணைத்து “ஏன் இப்பெயரை எனக்கிட்டாய்? என்ன பொருள் இதற்கு?” என்றாள்.
புன்னகையுடன் அவள் கூந்தல்தழுவிய அன்னை “ராதை என்றால் ராதிப்பவள். ஆராதிப்பதற்குரியவள் அல்லவா நீ?” என்றாள். “ஆம் ஆம் ஆம்” என்று சொல்லிச் சிரித்து அன்னையை முத்தமிட்டு மீண்டும் தழுவிக்கொண்டாள் ராதை.