அஞ்சலி : மகிழவன்

என் இணையதளத்தில் தொடர்ந்து வாசகர் கடிதங்கள் எழுதும் வாசகர்களில் பலர் ஒருகட்டத்தில் நின்றுவிடுவதுண்டு. அவர்களில் மிகச்சிலரே என்னிடமிருந்து விலகிச்சென்றுவிட்டவர்கள் என்று நான் அறிவேன். பிறர் தொடக்கநிலையில் எழுதிய கடிதங்களில் இருந்து மேலெழுந்து விட்டவர்கள். கேட்பதற்கும் சொல்வதற்கும் ஏதுமில்லாத நிலையில் என் எழுத்துக்களுடன் மட்டும் மானசீக உறவுள்ளவர்கள்

மகிழவன் அப்படிப்பட்ட வாசகர். அவரது கடிதங்கள் பல என் இணையதளத்தில் வெளியாகியிருக்கின்றன. திருமணம் ஆன செய்தியை அறிவித்திருந்தார். பின்னர் கடிதங்கள் குறைந்தன. குழந்தை பிறந்த செய்தியை, உடல்நலச்சிக்கல் சற்று இருந்ததை கடிதமெழுதி அறிவித்திருந்தார். எப்போதும் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்று ஒருமுறை ஒருவரி எழுதியிருந்தார்

இக்கடிதங்களன்றி மகிழவனிடம் தொடர்பில்லை. மகிழவன் என்ற பேரில் நானே எனக்கு கடிதங்கள் எழுதிக்கொள்வதாக இணையஜீவி ஒருவர் எழுதியதை சுட்டிகொடுத்து எழுதிய கடிதமே கடைசியானது

நேற்று ஒரு குறுஞ்செய்தி. மகிழவன் நான்கு நாட்களுக்கு முன்னால் பஹ்ரைனில் ஏழாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டார் என்று . அவர் தன் சித்தப்பாதான் என்றும் தன்னை என் ‘சீடர்’ என்று சொல்லிக்கொள்வார் என்றும் ஆகவே தகவல்தெரிவிப்பதாகவும். இன்னும் சடலம் வந்துசேரவில்லை, எதிர்பார்த்திருப்பதாகச் சொன்னது செய்தி

வெறும் சொற்கள் வழியாக அறிமுகமான ஓர் ஆளுமை. முகம் கூடத் தெரியாது. குரல்கேட்டதும் இல்லை. ஆனால் மிக அணுக்கமானவர். அவரை சந்தித்திருந்தால் அவரைப்பற்றி அதிகம் அறிந்துகொள்வதற்கே இருந்திருக்காது. இத்தகைய மரணத்தை எப்படி எதிர்கொள்வதென்றே தெரியவில்லை. ஓர் ஆளுமையின் மரணம் என்பதை விட ஒரு நினைவின் மரணம் என்றே தோன்றுகிறது

மகிழவனுக்கு என் அஞ்சலி.

மகிழவன் -நூல்கள் கடிதங்கள்

மகிழவன் தியானம் கடிதங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 5
அடுத்த கட்டுரைகேரளக் குடிநிறுத்தம்