கேரளக் குடிநிறுத்தம்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் கட்டுரைகளிலும், தனிப்பட்ட முறையில் நாம் பேசும்போதும் கேரளாவில் மிக மிக அதிகமாகிவிட்ட குடிப்பழக்கம் பற்றியும், அதனால் குடும்பங்கள், குழந்தைகள் நாசமாவது பற்றியும் நீங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள்.

இப்போது படிப்படியாக அங்கே மதுவிலக்கு வரப் போகிறது என்கிற செய்தியை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

இது ஆத்மார்த்தமான, ஆக்கபூர்வமான நல்ல.முயற்சிதானா? அல்லது இது ஒரு மாதிரி அரசியல் ஸ்டண்டா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

அன்புள்ள ராம்

தமிழகத்திலும் சரி, பொதுவாக இந்தியாவிலும் சரி மது என ஒன்று உண்மையில் கிடைப்பதில்லை. சர்க்கரைப்பாகில் இருந்து சீனி எடுக்கப்பட்ட பின்பு எஞ்சும் ‘மொலாஸஸ்’ தான் வெவ்வேறு வகையில் சாராயமாக ஆக்கப்பட்டு உண்ணப்படுகிறது. பரம்பொருளுக்கு ஆயிரம் பெயர்கள் என்பதுபோல அந்த திரவம் பல வண்ணங்களில் ,பல சுவைகளில் ,பிராந்தி விஸ்கி ரம் வோட்கா பீர் என பல நாமங்களில் குடிக்கப்படுகிறது.

இந்த மொலாசஸ் தொழிற்சாலைக்கு நான் மூன்றுமுறை சென்று பார்த்திருக்கிறேன். கழிப்பறை செப்டிக் டேங்க் போல நாறும். அதன் உண்மையான மதிப்பு லிட்டருக்கு இரண்டு ரூபாய்க்குள் என்றார்கள். மதுவாக நாமகரணம் செய்யப்பட்டு நூறு மடங்கு விலைக்கு விற்கப்படுகிறது. உலகிலேயே அபாயகரமான குடிவகை என அதை ஒருமுறை சிங்கப்பூர் நண்பர் ஒருவர் குறிப்பிட்டார்.

சரி, விலை உயர்ந்த மது என்றால்? அப்போதும் அதேதான். ஆனால் மேலும் அதிக பணத்தை அரசுக்கும் முதலாளிகளுக்கும் அளித்த கொடைவள்ளலாக குடிகாரர் மாறுகிறார். அவ்வளவுதான். தமிழகத்தின் நட்சத்திர விடுதிகளில்கூட அதே மொலாஸஸ்தான். மொலஸாஸால் ஆளப்படுகிறது நம் தேசம். நம் மக்களின் உடல்நிலையை, உணர்வுநிலையை, நம் பொருளியலை, அரசியலை அனைத்தையும் அதுவே தீர்மானிக்கிறது.

தமிழக அரசியலை பொறுத்தவரை மதுவே எல்லாம். இரு பெரும் கட்சிகளையும் மொலாஸஸ் அதிபர்களே நடத்துகிறார்கள். ஓர் அரசு இந்த நேரடி விஷத்தை விற்பதும், விற்பனையைப் பெருக்க மாதம்தோறும் திட்டமிட்டு ஆணையிட்டு ஊக்குவதும், விற்பனையை சாதனையாக அறிவித்துக்கொள்வதும்போல நாம் வெட்கி நாணவேண்டிய பிறிதொன்றில்லை.

என் வாசகர் ஒருவரை திருவண்ணாமலையில் பவா வீட்டில் போனமாதம் சந்தித்தேன். அரசுத்துறை அதிகாரியாக பணியாற்றுகிறார். தன் அலுவலகத்தில் தன்னைத்தவிர அனைவருமே மதிய உணவுக்குப்போகும்போது குடித்துவிட்டு பிற்பகலில் முழுப்போதையில் இருப்பதாகச் சொன்னார். எந்த வேலையும் நிகழ்வதில்லை . எதையும் கேட்கமுடியாது. அத்தனை ஊழியர்களையும் எப்படி அதிகாரி தண்டிக்க முடியும்? சக அதிகாரிகளின் துணையும் அவர்களுக்கிருக்கையில் என்ன செய்ய முடியும்?

கல்வித்துறை அதிகாரி ஒருவர் சொன்னார். தமிழக அரசுக்கல்வியின் பெரும் சிக்கலே மதியம் கடந்தபின் பாதிக்குமேல் ஆசிரியர்கள் குடித்துவிட்டு வருவார்கள் என்பதுதான் என. ஒரு பேருந்தில் பெண்கள் தனியாகப் பயணம் செய்யமுடியாத நிலை இங்கு பத்தாண்டுகளில் உருவாகிவிட்டிருக்கிறது என அ.வெண்ணிலா ஒருமுறை எழுதியிருந்தார். அப்பேருந்திலுள்ள ஓட்டுநரும் நடத்துநரும் உட்பட அத்தனை ஆண்களும் குடித்திருந்தால் எதை நம்பி பயணம்செய்ய முடியும்?

சமீபத்தில் திருநெல்வேலி கிராமங்களில் பயணம்செய்தேன். ஒவ்வொரு கிராமத்திலும் ஆண்கள் முழுமையாகவே குடிகாரர்களாகி , பார்வைத்திறன் இழந்து , வெயிலில் நின்று வேலைசெய்ய முடியாதவர்களாக வீணே இருக்கிறார்கள். பெண்களின் உழைப்பில் வாழ்க்கை நகர்கிறது. தமிழகத்துக்கு பிகாரிகள் வேலைக்கு வருவதற்குக் காரணம் இங்கே வேலை மலிந்திருப்பது அல்ல. இங்குள்ள ஆண்களால் வேலைசெய்யமுடியதென்பதே. குடி இன்று தமிழகத்தில் ஒரு கேளிக்கை அல்ல. ஒரு தீய பழக்கம் அல்ல. ஒரு மாபெரும் சமூகநோய்.

கேரளத்தில் பண்பாட்டுச்செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தனர், மதுவைக் கட்டுப்படுத்தும்படி. மதுவின் லாபமே அரசுக்கான முதன்மை வருமானமாக இருப்பதனால் பொதுவாக எவரும் அதற்கு துணியவில்லை. அத்துடன் எந்த அரசியலிலும் மதுவிற்பனையாளர்களின் பணச்செல்வாக்கு அதிகம்

அந்நிலையில் சென்ற சில ஆண்டுகளுக்கு முன் முதல்வர் ஏ.கே.ஆண்டனி துணிந்து மதுவைக்கட்டுப்படுத்தும் சில நடவடிக்கைகளை எடுத்தார். அந்த நடவடிக்கைகள் அளித்த பயன்கள் உண்மையில் அரசையும் மக்களையும் திகைக்க வைத்தன. பொதுவாகவே குடியிலும், பொது இடங்களில் குடியால் நிகழும் சமூகப்பிரச்சினைகளிலும் பெரும் மாறுதல் வந்தது.கங்கிரஸின் தேர்தல் வெற்றிக்கும் மதுக்கட்டுப்பாடு ஒரு முதன்மைக்காரணமாக உள்ளது.

அதை ஒட்டியே படிப்படியாக குடியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்து வருகிறது. அதைச்செய்யமுடியாது என்பதற்கு பரவலாகச் சொல்லப்படும் அத்தனை காரணங்களும் அபத்தமானவை என்று தெரியவந்தது.

குடியை கட்டுப்படுத்துவதை பெண்கள் மட்டுமல்ல, குடிகாரர்களே கூட வரவேற்பதை காணமுடிகிறது. ஏனென்றால் பெரும்பாலான குடிகாரர்கள் குடி அதிகமாக கிடைப்பதனால், கண்படும் இடமெல்லாம் அதுவே தெரிவதனால் தான் அதிகம் குடிக்கிறார்கள். தங்கள் குடியைக் கட்டுப்படுத்துவது அவர்களுக்கு எளிதாக இல்லை. அரசின் கட்டுப்பாடுகள் மூலம் தாங்களும் கட்டுப்படலாமென நினைக்கிறார்கள்.

எந்த ஒரு போதைப்பொருளையும் அதிகமாக கிடைக்கவைப்பதன் மூலம், கண்ணுக்கு பட்டபடியே இருக்கச்செய்வதன் மூலம் பரப்ப முடியும். கிடைப்பதை தடுப்பதன் மூலம் கட்டுப்படுத்தவும் முடியும். இந்த மதுவைப்போல கஞ்சாவும் சுலபமாக கிடைக்குமென்றால் ஆறே மாதத்தில் ஒட்டுமொத்த தேசத்தையே கஞ்சாவில் விழவைக்கமுடியும்

கேரள அரசின் பொருளியலை எவ்வகையிலும் குடிக்கட்டுப்பாடுகள் குறைக்கவில்லை. குடியில் வரும் வருமானத்தை மிக எளிதாக பிறவற்றில் ஈடுகட்ட முடிகிறது. அதேசமயம் பகலில் முழுமையாகவே குடி கட்டுப்படுத்தப்படுவதனால் உழைப்புத்திறன் வீணாவதில்லை. பணியிடங்களில் திறன் அழிவதில்லை. முக்கியமாக வாகன விபத்துக்கள் வியக்கத்தக்க அளவில் குறைந்துள்ளன.

தமிழக அரசு, நம் அரசியல்வாதிகள் கருணை கூர்ந்து பகலில்மட்டுமாவது மதுக்கடைகளை மூடினால் தமிழகத்திற்கு ஒரு சிறிய ஆறுதல் கிடைக்கலாம்.அதற்கு முன் குடி ஓர் அறிவுச்செயல்பாடு என நம்பும் பின்நவீனத்துவப் பேமானிகளை ஏதாவது வாசிக்கப் பழக்க வேண்டும்.கடினம்தான், ஆனால் செய்யமுடியும்.

ஜெ

முந்தைய கட்டுரைஅஞ்சலி : மகிழவன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 6