ஜெயமோகன்,
சாகித்ய அக்காதமி விருதுக்கு உங்களுடைய இலக்கணம் என்ன, கொஞ்சம் சொல்ல முடியுமா? நீங்கள் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு பரிசு கிடைத்தால் ஆதரிக்கிறீர்கள். திலகவதிக்கு கிடைத்தால் சும்மா இருக்கிறீர்கள். வைரமுத்துவுக்கும் தமிழன்பனுக்கும் கிடைத்தால் எகிறுகிறீர்கள்…உங்கள் கணக்குகள் என்ன? யாருக்குக் கொடுத்தால் சந்தோஷப்படுவீர்கள்? [சாகித்ய அக்காதமி விருதுகள்]
ஜான் செல்வா
***
அன்புள்ள ஜான்
இந்த இணையதளத்திலேயே என்னுடைய கருத்துக்களை விரிவாக எழுதியிருக்கிறேன். எனக்கு ஓர் இலக்கியவிமரிசகனாக உறுதியான இலக்கிய அபிப்பிராயங்கள் உண்டு. அவற்றை நான் சாகித்ய அக்காதமி போன்ற ஓர் அரசமைப்புக்கு நிபந்தனைகள் ஆக்க முடியாது. அது எப்படியோ ஒரு ஜனநாயகத்தன்மை கொண்டது.
ஆகவே நான் செய்யக்கூடுவது மூன்று.
1. நான் நம்பும் இலக்கிய அளவுகோல்களை சாகித்ய அக்காதமியின் அமைப்பு ஏற்பதற்காக முடிந்தவரை அழுத்தம் கொடுப்பது. நல்ல எழுத்தாளர்கள் என நான் நம்புகிறவர்களை முன்னிறுத்தி அவர்களுக்காக வாதாடுவது. அது என் கடமை.
2 நான் ஏற்றுக்கொள்ளாத இலக்கியவாதியாக இருந்தால்கூட குறைந்தபட்சம் இலக்கியத்தின் ஏதேனும் ஒரு கருத்துத் தரப்பில் அவருக்கு வலுவான பங்களிப்பு இருந்ததென்றால் அதை ஏற்றுக்கொள்வது
3 விருதளிப்பதின் முறைமைகள் மீறப்பட்டு அது ஒரு சதிவேலையாக ஆகுமென்றால் சுட்டிக்காட்டுவது
ஆ.மாதவன், ஞானக்கூத்தன், வெங்கட் சாமிநாதன், அபி, தேவதச்சன், கலாப்ரியாஅம்பை, நாஞ்சில்நாடன்,பூமணி, வண்ணநிலவன், வண்ணதாசன், ராஜேந்திரசோழன், தேவதேவன், விட்டல்ராவ், தமிழவன், ராஜ்கௌதமன், விக்ரமாதித்யன், சுகுமாரன் ஆகியோரை உடனடியாக பரிசீலிக்க வேண்டியவர்கள் என நினைக்கிறேன்.
மேலாண்மை பொன்னுச்சாமி அல்லது திலகவதி போன்றவர்கள் அவர்களின் தளத்தில் எழுதியிருக்கிறார்கள். முற்போக்கு எழுத்துக்கு அவர்கள் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள். எனக்கு அவர்களின் எழுத்து தரமானது என்ற எண்ணம் இல்லை. ஆனால் அவர்கள் ஒரு தரப்பு. அது அங்கீகாரம் பெறும்போது விமரிசனங்களுடன் ஏற்றுக் கொள்வதே முறை.
ஆனால் சாகித்ய அக்காதமி விருது இலக்கியத்தரம் , சமூகத்திற்கு பங்களிப்பு என்ற இரு அடிப்படைகளில் வழங்கப் படுகிறது. இருவகையிலுமே முக்கியமல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டால் அது ஒரு பெரும் மோசடி. அந்நிலையில் அதை கண்டிக்க வேண்டியிருக்கிறது.
ஒரு கூட்டுச்சதியாக அது வழங்கப்படும்போது சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. கடந்த 10 வருடங்களாக சாகித்ய அக்காதமி விருதுகளில்ள் திட்டமிட்டு முக்கியமான படைப்பாளிகள் புறக்கணிக்கப்பட்டு எந்தவிதமான பங்களிப்பும் இல்லாத வெறும் சத்தங்களுக்கு அளிக்கப்படுகிறது. புவியரசு சிறந்த உதாரணம். ஒரு தகுதியற்ற குழுவுக்குள் அது முடக்கப்பட்டிருக்கிறது. சதிவேலைகளால் அது அளிக்கப்படுகிறது. அதற்கு பாலா, சிற்பி இருவரும் மைய விசைகள்.
ஏன் சாகித்ய அக்காதமி விருது முக்கியமாகிறது? கலைஞர் விருதும் தினதந்தி விருதும் ராஜா சர் முத்தையாசெட்டியார் விருதும் இன்னமும் அதிகமான பணம் கொண்டவை. அவற்றை யார் யாருக்கு கொடுத்தாலும் ஒன்றும் இல்லை. உதாரணமாக என்னைப்பொறுத்தவரை ‘இயல்’ விருது [கனடா] இனிமேல் ராஜேஷ்குமாருக்கு கொடுக்கப்பட்டால்கூட பிரச்சினை இல்லை. அந்த விருது அதன் எல்லா முக்கியத்துவத்தையும் இழந்துவிட்டது. இனி அது சிலர் ஏதோ காரணத்துக்காக அளிக்கும் பணம் மட்டுமே
ஆனால் சாகித்ய அக்காதமி விருது அப்படி அல்ல. அது அரசு விருது. மற்ற மொழிகளில் அது தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழில் தகுதியான பலருக்கு வழங்கப்பட்டு அதற்கு ஒரு முக்கியத்துவம் உருவாகி உள்ளது. ஆகவே தகுதியற்ற ஒருவர் விருது பெறும்போது அதைச் சுட்டிக்காட்டி அவரது இடத்தை வாசகர்களுக்கு காட்டுவது ஒரு விமரிசனப் பணி
விருது கிடைப்பதனால் யாரும் எழுத்தாளர் ஆகிவிடுவதில்லை. தமிழன்பனுக்கு விருது கிடைத்ததனால் அவர் கவிஞராக அங்கீகாரம் பெற்றுவிட்டாரா என்ன? புவியரசு ஒரு ஐந்துநாள் பேசப்படுவார் – அதுவும் எதிர்மறையாக. இவ்வாறு தகுதியற்ற விருதுகளை சதிவேலைமூலம் பெறுவது ஒருவரை ஆழமான அவமானத்துக்கே உள்ளாக்கும். சேற்றை அள்ளிபூசிக்கொள்வதன்றி வேறல்ல இது.
அதேபோல விருது கிடைக்காததனால் ஆ.மாதவனோ வண்ணநிலவனோ நாஞ்சில்நாடனோ குறைந்து போய்விடுவதுமில்லை. ஆனால் இவ்வாறு தகுதியற்றவர்கள் விருது பெறும்போது நாம் பேசாமலிருந்தால் அது ஓர் மௌன அங்கீகாரமாக ஆகிவிடும். நம் மொழிக்கும் பண்பாட்டுக்கும் பெரும் பங்களிப்பாற்றியவர்களை புறக்கணிக்கும் செயலுக்கு நாமும் உடந்தை என்றாகிவிடும். ஒரு வாசகராக நின்று, ‘இல்லை, இவர்கள் அல்ல எங்களுக்கு நீங்களே படைப்பாளிகள்’ என நாம் அப்பெரும் படைப்பாளிகளிடம் சொல்கிறோம். அதன் மூலம் அவர்களின் பணியை அங்கீகரிக்கிறோம்.
இந்த மனநிலை இலக்கியவாசகர்களால் மட்டுமே புரிந்துகொள்ளத்தக்கது. வாசிப்பின் மூலம் இலக்கியப்படைப்பின் தரத்தை உணர்ந்த, அதன்மூலம் படைப்பாளிகள் மேல் மதிப்பு கொண்ட, ஒருவரின் உணர்வு இது. இந்த வட்டத்துக்குள் வராத லட்சக்கணக்கானவர்களுக்கு ஒருவருக்கு கொஞ்சம் பணம் கிடைக்கும்போது சிலர் எதிர்க்கிறார்கள் என்று மட்டுமே பொருள்படும். அவர்கள் ‘ஒருத்தருக்கு பணம் கெடைக்கிறப்ப எதிர்க்கிறது அநாகரீகம்ங்க’ என்ற மட்டில் சொல்லுதிர்க்கக்கூடும். அவர்களிடம் இது இலக்கிய விவகாரம் , நீங்கள் உங்கள் ஜோலியை பாருங்கள் என்றே சொல்ல முடியும்.
தவறான பரிசுகள் அளிக்கப்படுவதும் இலக்கிய மதிப்பீடுகளை உருவாக்கும் தருணமாக ஆக முடியும். நம் இலக்கிய மதிப்பீடுகளை இத்தருணத்தில் உறுதிசெய்துகொள்வோம்
சாகித்ய அகாடமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்
மேலாண்மைப்பொன்னுச்சாமிக்கு சாகித்ய அகாடமி விருது
கேள்வி பதில் – 04 சாகித்ய அகாடமியைப் புனரமைக்கத் தாங்கள் சொல்ல நினைக்கிற ஆலோசனைகள் என்னவாக இருக்கும்?
அறக்கோபமே என் எழுத்து-நீலபத்மநாபன்