பகுதி இரண்டு: 3. அனலெழுதல்
வண்ணத்தலைப்பாகை வரிந்து சுற்றிய தலையும் கம்பிளிமேலாடையும் கையில் வலம்புரிக்குறிக்கோலும் தோளில் வழிச்செலவுமூட்டையுமாக பரிநிமித்திகன் பர்சானபுரிக்குள் வந்தான். அவன் விறலி தோளில் தொங்கிய தூளியில் விரலுண்ணும் விழிவிரிந்த கைம்மகவை வைத்திருந்தாள்.
அவர்கள் முன்னால் அணிக்கம்பளமிட்ட முதுகும் மலர்ச்செண்டு விரிந்த தலையும் நெட்டிமாலையணிந்த கழுத்துமாக மணியோசையும் அணியோசையும் எழுப்பி தலையாட்டி வந்தது நிமித்தப்பரி. பர்சானபுரியின் இளங்கன்றுகள் குதிரைவாசனை அறிந்து மூக்கு தூக்கி சீறி குளம்பொலி எழுப்பின. திகைத்த பசுக்கள் பெருவிழிகளை உருட்டி மூக்கைச்சுளித்து கன்றுகளை நோக்கி குரல்கொடுத்தன.
“இன்று இவ்வூர்” என்றான் பரிநிமித்திகன். “இந்த மண் வாழ்க!” குளம்போசை எழ வலதுகால் எடுத்துவைத்து ஊர் மன்றுநடுவே வந்து நின்றது நிமித்தப்பரி. “ஆயர்குடியில் பசுக்குலம் செழிக்கட்டும். அறவோர் வீடுகளில் நெய்க்கலம் நிறையட்டும். மன்றமர்ந்த நிமித்திகன் மடிநிறையட்டும். அவன் சொல்நிறையட்டும். அச்சொல் விழுந்த மண்பொலிந்து மலர்விரியட்டும்!” என்று நிமித்திகன் தன் குறுமுழவை ஒலித்து குரலெழுப்பினான்.
அந்தியிறங்கத்தொடங்கிய வேளை ஆயர்கள் தங்கள் பசுக்களைத் திரட்டி அணிநிரைத்து கோல்கொண்டு வழிநடத்தி சிற்றோடைகளைக் கடந்து மலைச்சரிவில் இறங்கி ஊர்திரும்பிக்கொண்டிருந்தனர். மலர்க்குச்ச வால்கள் ஒன்றாகச் சுழன்றன. குளம்புகளின் தாளப்பெருக்கை ஏற்று தாளமிட்டன மலைப்பாறை உருளைகள். நாநீட்டி தலைதாழ்த்தி கன்றுகளை அழைத்தன கனிந்த முலைகள்.
மாலைக்கறவைக்காக பாற்குடங்களை ஏந்திய ஆய்ச்சியர் தொழுவுக்குச் சென்று இள வைக்கோல் கூளம் பரப்பி இதம் செய்தனர். பிரிந்து நின்ற இளங்கன்றுகள் அன்னையரின் வாசனை அறிந்து குரலெழுப்பின. பசுக்களுடன் வந்த கொசுக்கூட்டம் பாடும் மேகம்போல ஊரைச்சூழ்ந்துகொள்ள தூமக்கலன்களில் இதழ்விரிந்த கனல் மேல் குங்கிலியமும் அகிலும் தைலப்புல்சுருளும் இட்டு சிற்றூரின் எட்டுமூலைகளிலும் வைத்து அதை நீலப்புகையால் மூடினர். மேலாடைக்குள் மறைந்த கல்நகை போல மேகத்திற்குள் திகழ்ந்தது பர்சானபுரி.
திண்ணையில் இருந்த முதிய ஆயர்கள் கோலூன்றி கால்நீட்டி வைத்து மன்றுக்கு வந்து நிமித்திகனைச் சூழ்ந்துகொண்டனர். இடையில் கைக்குழந்தை ஏந்திய மூதாய்ச்சியர் மரவுரியால் தோள்போர்த்து வந்தமர்ந்தனர். இன்சுவைப் பாற்கஞ்சியும் சுட்டகிழங்கும் அக்காரச் சுக்குநீரும் கொண்டு வந்து கொடுத்தனர் இள ஆய்ச்சியர் இருவர். ”ஊர் புகுந்தாய் நற்சொல் விடுத்தாய். நீயும் உன் குலமும் வாழ்க. உன் சொற்கள் இங்கே வேர்கொள்க” என்று வாழ்த்தினர்.
உணவுண்டு இளைப்பாறி மன்றமர்ந்த நிமித்திகன் கார்காலம் வரும் வழியும் கன்றுகளின் நலமும் குறித்து கணித்துச் சொன்னான். “எங்கிருந்து வருகிறீர் நிமித்திகரே?” என்று ஆயர்முதுமகள் ஒருத்தி கேட்க திகைத்து அவளை நோக்கி சிலகணங்கள் விழிமலைத்துவிட்டு “மதுராபுரியிலிருந்து செல்பவன் நான் அன்னையே. எந்நகரையும் நீங்குகையில் அங்குள்ள எல்லைத்தெய்வங்களை வாழ்த்தி மறுமுறை அங்கே வருவோமென்று சொல்லுரைத்து காலெழுபவர்கள் நாங்கள். இம்முறை மதுராபுரியின் எல்லை கடக்கையில் தெய்வங்களை எண்ணாமல் எவ்விழிகளையும் நோக்காமல் கச்சை இறுக்கி காலெடுத்து வைத்தோம். இனி அந்நகரில் எளியேனும் என் குலமும் ஒருபோதும் நுழையப்போவதில்லை” என்றான்.
அவன் சொல்வதன் பொருளுணர்ந்து அங்கிருந்தோர் உடல்சிலிர்த்து நீள்மூச்செறிந்தனர். காற்றிலேறிய சொற்கள் சில அவர்களுக்கும் வந்து சேர்ந்திருந்தன. “அறம் அழிந்த மதுராபுரியில் நடுமதியத்திலும் நீள்நிழல் திகழ்கிறது ஆயர்களே. அதை நான் என் விழிகளால் கண்டேன்” என்றான் பரிநிமித்திகன். “அன்னைப் பெரும்பசுக்கள் குருதித்துளிகளை கறக்கக் கண்டேன். சுழன்றெழும் பெருங்காற்றிலும் கொடிகள் துவண்டிருக்கக் கண்டேன். நள்ளிரவின் இருளுக்குள் எவர் கையும் தொடாமலேயே பெருமுரசுகள் விம்மி அதிர்வதைக் கேட்டேன்.” அங்கிருந்த ஒவ்வொரு விழியையும் மாறிமாறி நோக்கி அவன் சொன்னான் “ஆவதும் அழிவதும் தெய்வங்கள் கைகளிலே. ஆனால் அழிவை அளிக்கும் தெய்வங்களை தவம்செய்து தன்னிடம் வரவழைப்பார் தீயோர். அதை மாமதுரை நகரில் நான் கண்டேன்.”
தங்கை தேவகிக்கு அஷ்டமிரோகிணி நாளில் பிறந்த மகவை எடுத்துவர படைத்தலைவன் சுபூதனிடம் ஆணையிட்ட கம்சர் கொலைக்கூடத்துக்கு மணிமுடியும் உடைவாளுமாக தானே வந்து அமர்ந்துகொண்டார். அவரது எட்டு தம்பியர் நியகுரோதனும், சுநாமனும், கங்கணனும், சங்குவும், சுபூவும், ராஷ்ரபாலனும், பத்முஷ்டியும், சுமுஷ்டியும் அவரைச்சுற்றி அமர அமைச்சன் கிருதசோமன் கைகட்டி அருகே நின்றான். சுபூதன் கொண்டுவந்த மூங்கில்கூடையில் சிறுகையை வாயிலிட்டு கால்மடித்து தோள் ஒடுக்கித் துயின்றது சிறுமகவு. “அஷ்டமி ரோகிணியில் பிறந்த எட்டாம் மகவிது” என்றான் சுபூதன். ”ஏழு மைந்தரின் குருதி விழுந்த இக்கூடத்திலேயே இம்மகவும் சாகட்டும். உடன்பிறந்தோர் விண்ணில் ஒன்றாகட்டும்” என்று கம்சர் நகைக்க உடன்பிறந்தோர் நகைகூட்டி இணைந்துகொண்டனர்.
“எட்டாம் மகவு மதுராபுரியின் முடிசூடும் என்றது எல்லைப்பெருந்தெய்வம். அச்சொல்லே ஆகட்டும் அரசே” என்றான் கிருதசோமன். “அதைக் கொன்று குருதிகொண்டு அம்முடியை நீங்கள் கொள்ளுங்கள். தெய்வத்தின் சொல்லை அதற்கே திருப்பியளிப்போம்.” சிரித்து தொடைதட்டி “அவ்வண்ணமே ஆகுக!” என்றார் கம்சர். அணிப்பெருந்தாலத்தில் மதுராவின் மணிமுடியும் செங்கோலும் கொண்டுவரப்பட்டது. கூடையிலிருந்து மகவை எடுத்து குருதிக்கறை படிந்த பலிபீடத்தில் வைத்து சுபூதன் விலகி நின்றான். பலிபீடத்தின் தண்மை தன் உடலில் பட்டதும் துடித்து விழித்து கைகால்களை காற்றில்வீசி, உடலதிர, சிறுமுகம் செம்மை கொண்டெரிய, செந்நிறப்புண் போன்ற வாய்திறந்து வீரிட்டழுதது மகவு.
அமைச்சன் கிருதசோமன் மணிமுடியை கொண்டுசென்று சிறுமகவின் தலையருகே வைக்க உடைவாளை ஒளியுடன் உருவி கையிலெடுத்து அதன் அருகே சென்றார் கம்சர். கால்களை உதைத்து உதைத்து பலிபீடத்தில் மேலெழுந்த சிறுகுழவி தலையால் மணிமுடியைத் தட்டி மறுபக்கம் மண்ணில் விழச்செய்தது. வாள் தாழ்த்திய கம்சர் சினந்து கைநீட்டி “பிடி அக்குழவியை!” என்று கூவி அருகணைவதற்குள் மேலுமிருமுறை காலுதைத்து மேலெழுந்து பலிபீடத்திலிருந்து மணிமுடிமேல் தலையறைந்து விழுந்து மெல்லிய விக்கல் ஒலியுடன் துடித்து இறந்தது குழந்தை. கிருதசோமன் ஓடிச்சென்று குழந்தையின் துடிக்கும் உடலை விலக்கி குருதி சொட்டும் புலிவாய் பற்கள் போல வைரங்கள் பதித்த மணிமுடியை கையில் எடுத்தான்.
சுபூதன் குழந்தையின் சிற்றுடலைத் தூக்கி “இறந்துவிட்டது அரசே” என்றான். “மணிமுடி சூடாமலா?” என்று கம்சர் திகைத்து கூவி வாளுடன் திரும்பினார். “நிமித்திகரை அழையுங்கள்… அழையுங்கள்!” என்று கூவியபடி இடைநாழியில் உடல்பதறி ஓடினார். தம்பியர் “நிமித்திகர்கள்! நிமித்திகர்கள்!” என்று கூச்சலிட்டபடி அவர் பின்னால் விரைந்தனர். மணியோசையெழ வாளை வீசிவிட்டு மந்தண அவை புகுந்து மஞ்சத்தில் சரிந்து மூச்சிரைக்க “இக்கணமே அறிந்தாகவேண்டும். என்ன நிகழ்கிறது இங்கே? தெய்வமெழுந்து சொன்ன சொல் எப்படிப் பொய்யாகும்?” என்று கம்சர் கூவினார்.
அறைபுகுந்த நிமித்திகர் எழுவர் நாளும் பொழுதும் கணித்து “அரசே, அஷ்டமிரோகிணி நாளில் தங்கள் தங்கையின் கருவில் பிறந்தவன் மைந்தன். எட்டு மங்கலங்களும் அமைந்த மணிவண்ணன்” என்றனர். “சங்கு சக்கரம் அமைந்த கரத்தன். தாமரையிதழ் விழிமலரன். மார்பில் திருவாழும் மணிமுத்திரை கொண்டோன். சான்றோர் தலையில் சூடும் அருமலர் அடியன்” என்றனர். “அம்மைந்தன் இந்நகரை ஆள்வது உறுதி. அது தெய்வத்தின் சொல்.”
விழிமலைத்து வாய்திறந்து கம்சர் அமர்ந்திருக்க அமைச்சன் “அவ்வண்ணமெனில் இக்குழந்தை எது? எங்குவந்தது இது?” என்று கூவினான். “இதன் வலக்கையில் அனல்குறி உள்ளது. இடக்கையில் முப்புரிவேல்குறி திகழ்கிறது. மண்வந்து மறைந்த கொற்றவை இவள். யோகமாயை என ஆயர்குலம் என்றும் வழிபடும் இறைவடிவம்” என்றனர் நிமித்திகர். துடித்தெழுந்து தோள்தட்டி கம்சர் கூவினார் “எங்கே அந்த மைந்தன்? என்னைக் கொன்று என் நாடுகொள்ளப்போகும் என் குலத்தின் விஷநீல வேர்க்கொடுக்கு எங்கே? இக்கணமே அவன் என் முன் வரவேண்டும். எழுக மதுராவின் நால்வகைப்படைகளும்!”
கொலைப்படைக்கலங்கள் ஏந்தி எட்டுத்திசை நோக்கி எழுந்தனர் தம்பியர் எண்மர். நியகுரோதனும், சுநாமனும், கங்கணனும், சங்குவும், சுபூவும், ராஷ்ரபாலனும், பத்முஷ்டியும், சுமுஷ்டியும் எழுப்பிய படைக்குரல் கேட்டு அஞ்சி மதுராவின் காவல்தெய்வங்கள் ஆலயபீடங்களில் அஞ்சியநாக்குகள் தொண்டைக்குழிகளில் என ஒட்டிக்கொண்டன. ”அறம் நினையவேண்டாம். நூல்நெறி நினையவேண்டாம். குலமூத்தோர் சொல் நினையவும் வேண்டாம். அஷ்டமிரோகிணியிற்பிறந்த அத்தனை மைந்தரையும் கொன்று மீள்க!” என்றார் கம்சர். “ஆம், இன்றே குருதியில் ஆடி அமைகிறோம்!” என்று கூவிக் கிளம்பினர் தம்பியர்.
சிறைக்கதவைத் திறந்து உள்ளே சென்று கல்மஞ்சத்தில் கண் துயிலாது கிடந்த தேவகியையும் வசுதேவரையும் கண்டு கம்சர் கூவினார். “சொல்லிவிடுங்கள், எங்கே உங்கள் எட்டாமவன்? இதோ படைக்கலம் கொண்டு சென்றிருக்கின்றனர் என் சொல்தவறா தம்பியர் எண்மர். பசியாறா புலிநாக்குபோல செங்குருதி நக்கி நக்கித் திளைக்கின்றன அவர்களின் உடைவாள்நுனிகள். நீங்கள் எண்ணும் ஒவ்வொரு கணமும் மதுராவில் ஒரு இளமைந்தன் உயிர்துறக்கிறான். பசுங்குருதி வாசனையை இந்தக் காற்றில் உணருங்கள். அன்னையர் அழுகுரலை செவிகூருங்கள். சொல்லுங்கள் எங்கே மதுராவின் இளவரசன்?”
கம்சரின் காலில் விழுந்து தேவகி கதறியழுதாள். “மைந்தரை விட்டுவிடு மூத்தோனே. என் மைந்தன் இருக்குமிடத்தை நானறியேன். அதை எவ்வண்ணமேனும் கேட்டுச் சொல்கிறேன். அவனை உன் கைகளுக்கு அளிக்கிறேன். அவன் குருதிகொண்டு உன் பழி தீர்த்துக்கொள். அறியாச்சிறுபாலகரையும் அவரைப்பெற்ற அன்னையரையும் கொன்று குலப்பழி கொள்ளாதே!” “தந்தையைக் கொன்று நான் பெற்ற மண் இது இளையோளே. மருகனைக் கொன்றுதான் நான் இதை ஆளவேண்டுமென்பது ஊழென்றால் அவ்வண்ணமே ஆகுக. எங்கே உன் மைந்தன்? அவன் தலையில் இம்மணிமுடியை வைத்து அத்தலையை வெட்டி நான் என் கால்களில் வைத்தாகவேண்டும்… அதன்பின் அம்மணிமுடியைச் சூடி இப்பாரதவர்ஷத்தை ஆள்வேன் நான்.”
“பாவத்தில் நனைந்த அரியணைகள் அசைவின்றி அமைந்த கதையே இல்லை கம்சா” என்றார் வசுதேவர். “பாவத்தின் துளிபடாத அரியணை எங்கே அமைந்துள்ளது சொல்லும் மைத்துனரே” என்று கம்சர் நகைத்தார். “என் தந்தையைக் கொன்று இதை நான் அடைந்தபோது என் வலக்கரத்தருகே நூலேந்தி நின்றவர் நீரல்லவா?” தலைகுனிந்து “ஆம், அப்பெரும்பழிக்காகவே என் கைகளில் ஏழுமைந்தரை ஏந்தி உனக்களித்த ஏலாப்பெருந்துயரை அடைந்தேன். இனி இவ்வாழ்வுள்ள கணம் வரை கண்ணீரின்றி துயிலமுடியாத நினைவுச்சுமையை கொண்டேன். ஏழுபிறவிகள் இங்கே பிறந்திறந்து பிறந்திறந்து அவர்களுக்கு நீர்க்கடன் செய்யவேண்டியவனானேன்…” என்று சொல்லி கண்ணீருடன் தலைகுனிந்தார் வசுதேவர்.
“எட்டாம் மைந்தன் இருக்குமிடத்தை நீர் அறிவீர். அதைச் சொல்லாவிட்டால் அதோ நகரெங்கும் வாள்போழ்ந்து குருதிப்பிண்டமாக மண்ணில் விழும் அத்தனை இளமகவுகளின் பழியும் உம்மைச்சேரும். ஏழாயிரம் பிறவிதோறும் கங்கையையும் யமுனையையும் அள்ளியள்ளி இறைத்தாலும் அழியாது உமது பெரும்பாவம்” என்றார் கம்சர். “எழுந்து வந்து இச்சாளரத்தருகே நின்று கேளும். அன்னையர் அழுகுரல்களில் ஒலிப்பதென்ன என்று அறிவீர்” என்றார். தன் கனத்த கைகளால் வசுதேவரின் தோள்பற்றித் தூக்கி சாளரத்தருகே தள்ளி “கேளும்… உம் செவிநிறையட்டும்! கேளும்!” என்றார்.
நாகம் ஏறிய புள்மரமென ஒலித்த நகரை வசுதேவர் உணர்ந்தார். அன்னையர் குரல்களில் அவரது பதினான்கு தலைமுறையினரும் தீச்சொல் பெறுவதைக் கேட்டார். காற்றுவெளியில் தவிக்கும் சூரசேனரை, தேவபிதூஷரை, ஹ்ருதீகரை, ஸ்வயம்போஜரை, பிரதிஷத்ரரை, ஷார்மரை, சூரசேனரை, விடூரதரை, சித்ரரதரை, பாஜமானரை, பீமரை, சத்வதரை, புருகோத்ரரை, புருவாஷரை, மதுவை அறிந்தார். அவர்கள் ‘மைந்தா, வசுதேவா!’ என்று அலறிக்கூவும் பெருங்குரலைக் கேட்டு மெய்விதிர்த்தார்.
கண்ணீர் மார்பில் வழிய கைகூப்பி திரும்பி கம்சரிடம் “ஆம், இதோ அனல்நின்று அழிகின்றனர் என் மூதாதையர். அழியாப்பெருநரகத்தில் நான் காலமில்லாது நின்றெரிவேன். ஆனால் என் மைந்தனுக்கு நான் எதை அளிக்கமுடியும்? மண்ணில்லாதவன். ஒரு கன்றுகூட இல்லாத யாதவன். கற்ற சொல் ஒவ்வொன்றையும் மறந்தவன். சேர்த்த நற்பேறென ஒன்றில்லாதவன். என் எளியபெயரை அவன் சூடும்போது உடன்வைத்து நான் கொடுப்பதென்ன? இதோ இப்பெருந்துயரை அளிக்கிறேன். அவனுக்காக அவன் தந்தை எழுநூறு பிறவிக்காலம் அணையாச்சிதையில் எரியச்சித்தமானான் என்று அவன் அறியட்டும். அவனுக்களிக்க அதுவன்றி என்னிடம் வேறில்லை” என்றார்.
திகைத்து பின் சினம்வெறித்து சீறிப்பல்காட்டி கம்சர் கூவினார் “நீர் சொல்லவில்லை என்றாலும் இன்னும் சிலநாட்களில் உம் மைந்தன் அழிவான். அஷ்டமிரோகிணியில் ஆயர்குலத்துதித்த ஒரு மைந்தனும் வாழப்போவதில்லை. உம் மைந்தன் தன் தோழர்களின் குருதியில் நீந்தி மூதாதையரைச் சென்றடைவான்.” ஓடிவந்து அவன் கால்களைப்பற்றி “மூத்தவரே, என் குழந்தைகளை விட்டுவிடுங்கள்” என்று கூவி உடல் விதிர்த்து தேவகி மூர்ச்சை கொண்டாள். அவள் தலையை தன் காலால் உதைத்து “இவள் பழிசுமந்து பட்டமரமாக வேண்டாமெனில் சொல்லும் எங்கே அவன்?” என்றார் கம்சர்.
நெடுமூச்செறிந்து கைகூப்பி “இன்று உம் சொற்களில் அறிகிறேன் அரசே. என் மைந்தன் குருதிப்பெருவெள்ளத்தில் நீந்திக்களிக்கவே இப்புவிப் பிறந்தவன். அவன் பிறப்பதற்குள்ளாகவே அவன் ஆடும் களங்கள் அமைந்துவிட்டன. படைக்கலங்கள் கூர்கொண்டுவிட்டன. அவன் ஒழுக்கும் குருதி அன்னத்தில் இருந்து சிவந்து அனலாக எழுந்து விட்டது” என்றார் வசுதேவர். “குருதியில் திரட்டிய மெய்மையை இம்மண்ணில் நாட்டிவிட்டுச் செல்வதற்காக வந்தவன் அவன்.”
ஒருகணத்தில் அகச்சுமை அனைத்தையும் உதிர்த்து வசுதேவர் புன்னகை செய்தார். “இத்தனை குருதியில் பிறந்த அவனே இந்த யுகத்தின் அதிபன். அவனாடும் ஆடலென்ன என்று அவனே அறிவான். தன்னை நிகழ்த்தத் தெரிந்த தலைவன் அவன். இதோ, உம் நெஞ்சில் அச்சமாகவும் உம் தம்பியர் படைக்கலங்களில் வஞ்சமாகவும் அங்கே நகருறையும் அன்னையர் கண்களில் கண்ணீராகவும் அவர் தந்தையர் நெஞ்சில் பழியாகவும் விளைபவன் அவனே.”
பித்துகொண்டவர் போல பல்காட்டி நகைத்து எழுந்து இரு கைகளையும் நீட்டி கூவினார் “பொன்முடிகொண்டு பிறக்கவில்லை. பெரும்புகழ்கொண்டு பிறக்கவில்லை. பொல்லாப்பழிகொண்டு பிறந்திருக்கிறான்! பாலாடி பழியாடி பலநூலில் பகடையாடி பசுங்குருதியாடி எழுக என் தெய்வம்! எழுக! எழுக என் தெய்வம்! எழுக!” கைதட்டி நடனமிட்டு கூவிநகைத்து கம்சரைச் சுற்றிவந்தார். திகைத்து சிறைவிட்டோடும் அரசருக்குப்பின்னால் வந்து கைநீட்டி “வாளேந்திய பேதை! ஆனால் அவன் காலடியில் நெஞ்சுபிளந்து படைக்கும் பெரும்பேறுபெற்றோன்! வாழ்க! உன் பெயர் என்றும் இப்புவியில் வாழும்!” என்று அவர் கூவி நகைத்தார்.
ஆயர்குடிகளே, யானைமத்தகம் பிளந்த கால்களுடன் மலைப்பாறை ஏறிச்சென்ற சிம்மத்தின் தடம் கண்டு திரும்பிய வெள்ளாட்டின் விழிகளை என் முகத்தில் பாருங்கள். சுவைத்த முலைக்காம்பின் குமிண்வடிவம் எஞ்சியிருக்கும் உதடுகள் சிலைக்க தலைகொய்யப்பட்ட மைந்தரை கண்டுவந்தவன் நான். அன்னை இடையமர விரித்த கால்கள் விரைத்திருக்க விழிமலைத்து குருதியாடிக்கிடக்கும் உடல்களைக் கண்டு அம்மண்ணில் விழுந்து அள்ளியள்ளி தலையிலிட்டு ஆறாப்பழி கொண்டவன் நான்.
புன்மயிர் மென்தலைகள். கொழுவிய பால்கன்னங்கள். சந்தனத்துளியென மூக்குகள். பட்டு மொட்டெழுந்த பண்டிகள், சிறுதளிர்விரல்கள். பெருவிரல் நெளித்த பாதங்கள்.. பாலாடைபடிந்த பைதல் விழிகள். கொய்த காய்க்காம்பில் பால்சீறும் கள்ளிச்செடி போல கதறி மண்சேர்ந்த அன்னையர் கைபதறி அள்ளிய மண் சிலிர்ப்பதைக் கண்டேன். நான் கண்டவற்றுக்காகவே என்னை கழுவேற்றுங்கள் தெய்வங்களே!
இங்கு இனி மீளமாட்டேன். இம்மண்ணை இனி எண்ண மாட்டேன். என் குலமகள் வயிற்றில் பிறந்த மைந்தன் என் சொல் ஏந்தி மீண்டு வருவான். அன்றும் மதுராபுரி குருதிக்கொடை கொடுத்துக்கொண்டிருக்கும். துலாத்தட்டுகளால் ஆனது இப்புவியென்று எனக்குக் கற்பித்த எந்தை வாழ்க! வாளுக்கு அஞ்சி வாழும் அறம் மறந்தவர் ஒவ்வொரு கணத்தையும் மீண்டும் உணர்ந்தாகவேண்டும். குருதியால் குருதியை கண்ணீரால் கண்ணீரை பழியால் பழியை நிகர்த்தாகவேண்டும்.
ஆயர்க்குடி ஆன்றோரே! இங்கு இம்மேடையிலமர்ந்து சொல்கிறேன், எளிய நிமித்திகன். இம்மண்ணில் ஒரு சொல்லும் வீணாவதில்லை. ஒரு துளிக்கண்ணீரும் வெறுமே உலர்ந்தழிவதில்லை. ஓம்! ஓம்! ஓம்!