அஞ்சலி : யு.ஆர்.அனந்தமூர்த்தி

கன்னட இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரான யூ.ஆர்.அனந்தமூர்த்தி இன்றுமாலை மறைந்தார். தென்கனராவின் சோஷலிச இயக்கத்தின் வழியாக உருவாகி வந்த அனந்தமூர்த்தி வாழ்நாளின் பிற்பகுதியில் தீவிரமான காங்கிரஸ் ஆதரவாளராக ஆனார். கோழிக்கோடு மகாத்மா காந்தி பல்கலையின் துணைவேந்தராகவும் சாகித்ய அக்காதமி மற்றும் நேஷனல் புக் டிரஸ்டின் தலைவராகவும் பணியாற்றினார். அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா அவருக்கு பெரும்புகழைப் பெற்றுத்தந்த நாவல். அவரது நண்பர் ஏ.கே.ராமானுஜனால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு அவருக்கு மேலும் பெருமைசேர்த்தது அந்நூல். அவஸ்தே, பாரதிபுரா, ஹடஸ்ராத்தா ஆகிய நாவல்களும் அவரை புகழ்பெற வைத்தன. இவை தமிழிலும் வாசிக்கக் கிடைக்கின்றன

இந்திய நவீனத்துவத்தின் மிகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் என்று அனந்தமூர்த்தியைக் குறிப்பிடலாம். எம்.முகுந்தன், அக்ஞேய, சுனீல் கங்கோபாத்யாய, சுந்தர ராமசாமி என இந்திய நவீனத்துவத்தால் உருவாக்கப்பட்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் உரிய பல பொதுக்கூறுகள் அவரது ஆக்கங்களில் உண்டு. இந்திய மரபை முற்றிலும் எதிர்மறைக்கோணத்தில் அணுகுதல், சமகால வாழ்க்கையின் பொருளின்மையை வலுவான படிமங்கள் வழியாக சித்தரித்தல், அங்கதம், கனகச்சிதமான வடிவம், பிரக்ஞைபூர்வமான மொழிநடை என அவ்வியல்புகளை ஒருவகையாக வகுத்துச் சொல்லமுடியும்.

நான் யூ.ஆர்.அனந்தமூர்த்தியை நான்குமுறை சந்தித்திருக்கிறேன். 1986ல் எம்.கோவிந்தனைச் சந்திக்க நானும் சுந்தர ராமசாமியும் ஆற்றூர் ரவிவர்மாவும் ஷொர்ணூர் சென்றிருந்தபோது அவரும் எம்.வி.தேவனும் எர்ணாகுளத்தில் இருந்து வந்திருந்தனர். அனந்தமூர்த்தியின் தொடர்ச்சியான உரையாடல் நல்ல உரையாடல்காரரான எம் கோவிந்தனை புன்னகையுடன் கவனிக்கச்செய்ததை நினைவுகூர்கிறேன். பின்னர் அவரை எர்ணாகுளத்தில் எம்.பி.பால் நினைவுக்கூட்டத்தில் சந்தித்தேன். அதன்பின்னர் டெல்லியில் இந்தியா இண்டர்நேஷனல் சென்டரில் இருமுறை

அனந்தமூர்த்தியுடனான சந்திப்புகள் எல்லாமே உற்சாகமானவையாக நினைவில் நிற்கின்றன. தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருப்பவர். மேற்கோள்கள், நக்கல்கள், அடிக்குறிப்புகள் என சென்றுகொண்டே இருக்கும். அவ்வுரையாடல்கள் வழியாக அவரை ஓர் எழுத்தாளர் என்பதைப்பார்க்கிலும் பேராசிரியராகவே நினைவில் பதித்துக்கொண்டிருக்கிறேன். அவரது மதிநுண்மையும் கூர்மையுமே அவரது படைப்புலகின் எல்லைகளையும் அமைத்தன என்று தோன்றுகிறது. அவரை மீறி ஏதும் நிகழாத புனைவுகள் அவர் உருவாக்கியவை.

கடைசியாக நாங்கள் சமணப்பயணம் மேற்கொண்டிருந்தபோது ஷிவ்மொக்கே சென்றிருந்தபோது அவரிடம் போனில் பேசினேன். அவருடைய ஊரில் இருக்கிறேன் என்று சொல்லி பெங்களூர் வந்தால் அவரை பார்க்கமுடியுமா என்று கேட்டேன். சிறுநீர் கோளாறுக்காக டயாலிஸிஸ் செய்துகொண்டிருப்பதாகவும், எவரையும் சந்திக்கமுடியாத நிலை என்றும் சொல்லி அவரது ஊரின் நினைவுகளை நான் கிளறிவிட்டதாகச் சொன்னார்.

யூ.ஆர்.அனந்தமூர்த்திக்கு அஞ்சலி

காந்தி அனந்தமூர்த்தி

அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா

அனந்தமூர்த்தியின் அரசியல்

முந்தைய கட்டுரைஆத்மானந்தா
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 5