பகுதி இரண்டு: 2. பொருளவிழ்தல்
யமுனைக்கரையில் சரிவில் வேரிறக்கி, விழுதுகளால் நீர்வருடி, தன் முகத்தை தான்நோக்கி நின்றிருந்த ஆலமரத்தடியில் ஆயர்குடிப்பெண்கள் கூடி நீராடிக்கொண்டிருக்க வேர்ப்புடைப்பில் அமர்ந்து அவர்கள் தந்த நறுஞ்சுண்ண வெற்றிலையைச் சுருட்டி வாயிலிட்டு மென்று சுவையூறிச் சொக்கி முகம் வியர்த்த முதுசெவிலி சொன்னாள் “அஞ்சுபவன் உள்ளத்தில் ஐந்து பேய்கள் குடியேறுகின்றன பெண்களே. ஐயமும், தனிமையும், விழிப்பும், குரூரமும், நிறைவின்மையும் என அவற்றை அவன் அறிவான். தன்னைத்தானே அஞ்சுபவனிடமோ ஐந்து பேய்களையும் தேர்க்குதிரைகளாகக் கட்டி விரையும் ஆறாவது பெரும்பேய் குடியேறுகிறது. அதை ஆணவம் என்கின்றனர் சான்றோர். அது தொட்டவனை தான்கொண்டு செல்வது. பட்டகுடியை பாழ்நிலமாக்கியபின்னரே விலகுவது.”
விண்ணிலிருந்து நோக்கும் தெய்வங்களுக்கு கீழே விரிந்திருக்கும் நதிகளும் மலைகளும் நாடுகளும் நகரங்களும் கொண்ட விரிநிலம் ஒரு பெரும் ஆடுகளம். அதைச்சுற்றி அமர்ந்து அவர்கள் சிரித்து அறைகூவியும் தொடைதட்டி எக்களித்தும் காய்நகர்த்தி களிகொண்டு விளையாடுகிறார்கள். கைநீட்டி காய் அமைக்கும் தெய்வத்தின் கரங்களுக்குத் தெரிவதில்லை கீழே கண்ணீரும் குருதியுமாக கொந்தளித்து அமையும் மானுடச்சிறுவாழ்க்கை. எங்கோ ஒரு கரு அமைக்க நீண்ட தெய்வத்தின் கை நிழல் மதுராபுரியின் மேல் கருமேகமாகப் படர்ந்தது. காலம் கருமைகொண்டது. கனவுகளுக்குள் இருள் சுழித்தது.
ஏகநம்ஷையின் ஆலயத்தில் சன்னதம் வந்தெழுந்த முதுமகள் சொன்னதைக்கேட்டு கம்சதேவர் நாகத்தைக் கண்ட குதிரைபோல உடல் நடுங்கி மெய்சிலிர்த்து அமர்ந்துவிட்டார். அவளைத் தொடர்ந்தோடிவந்த பூசகர்கள் அவள் கைகளைப் பற்றி இழுத்து அமரச்செய்து மன்னரைப் பணிந்து பொறுத்தருளும்படி கோரினர். பொருளின்மை ஒளிவிட்ட பெரிய விழிகளுடன் மெல்ல உறுமி குதிரைகளை மெல்லத்தட்டி ரதத்தை திடுக்கிட்டு எழச்செய்து முன்னகர்ந்தார் அரசர். செல்லும் வழியெங்கும் ஒரு சொல்லும் சொல்லாமல் கூழாங்கல் பதித்ததுபோன்ற விழிகளுடன் அமர்ந்திருந்தார். அரண்மனை முற்றத்தை அடைந்ததும் நீள்மூச்சுடன் விழித்தெழுந்து கடிவாளத்தை சேவகன் கையில் கொடுத்து ஒரு கணமும் திரும்பாமல் நடந்து உள்ளே சென்றார்.
வளையோரே, அறிவிலாதோர் அக்கணமே அச்சம் மூலம் அனைத்தையும் அறிந்திருப்பர். அறிவுடையோர் அறிவின்மூலம் அறிந்துகொள்வர். அறிவிருந்தும் அறியாமை கொண்டவனோ அறியவேமுடியாதவன். தேவகியின் கரம்பற்றி இறங்கி அரண்மனை இடைநாழியில் நடந்த வசுதேவரிடம் அவள் வியர்த்துக்குளிர்ந்த கைகளால் புயம்பற்றி விரிந்த விழிகளில் ஈரம் பரக்க “என்ன எண்ணுகின்றார் தமையனார்?” என்றாள். “அஞ்சாதே. அச்சொல்லில் அவர் நிலையழிந்துவிட்டார். என் சொல்லில் அவரை நிலை நிறுத்துகிறேன்” என்றார் வசுதேவர். “என் அகம் நடுங்குகிறது இறைவ” என்றாள் தேவகி. “இந்நகரும் இங்குள அரசும் என் சொல்லில் அமைந்தவை என்றுணர்க. இன்று மாலையே உன் தமையன் வந்து உன்னிடம் பேசுகையில் அதை உணர்வாய்” என்றார் வசுதேவர்.
மந்தண அறைபுகுந்த மன்னர் தன் நெஞ்சுடன் தனித்திருந்தார். நிகழ்ந்ததை அறிந்து அருகணைந்த அமைச்சன் கிருதசோமன் வணங்கி “சொல்நிகழ்ந்தது நல்லூழென்றே அடியேன் எண்ணுகிறேன் அரசே. ஆவதென்ன என்று நோக்க அனைவருக்கும் ஒரு வாய்ப்பு அது” என்றான். காய்ச்சல் பரவிய கண்களுடன் நோக்கிய கம்சர் “சொல்லும் அமைச்சரே, இன்று நான் செய்யவேண்டியதென்ன?” என்றார் “அன்னையில் எழுந்த சொல் மெய்யே. யாதவகுலமுறைப்படி பெண்வழி செல்வதே மண். இந்த மண்ணும் இதன் மணிமுடியும் உங்கள் தங்கைக்குரியவையே. அவள் கருவிலெழும் மைந்தர் இம்மண்ணைக் கொள்வதே நெறி. மதுராபுரியின் மக்களின் அக விழைவே அன்னையின் சொல்லேறி வந்தது” என்றான் கிருதசோமன்.
“இக்கணமே அவளைக் கொல்கிறேன். உயிர்போனபின் அவள் வயிற்றில் எப்படி முளைக்கும் என் குலமறுக்கும் கரு?” என்று உடைவாளை உருவியபடி எழுந்தார் கம்சர். “அரசே, அன்னை சொல் பொய்க்காது. இம்மண்ணை உங்கள் தமக்கையின் எட்டாவது மைந்தன் ஆள்வது நிகழ்ந்தாகவேண்டும்” என்றான் கிருதசோமன். ”அவள் இறந்தால் அவள் ஆறு தங்கையரின் கருவில் மைந்தர் பிறக்கலாம்.” திகைத்து “என்ன சொல்கிறீர் அமைச்சரே?” என்று விழிமலைத்தார் கம்சர். கிருதசோமன் “அரசே, மைந்தர் பிறக்கட்டும். அன்னை கருவிட்டு இறங்கி அவர்கள் நம் கைகளுக்கே வரட்டும். ஏழு மைந்தரை கருமணம் காய்வதற்குள்ளேயே கொல்வோம். எட்டாவது மைந்தனுக்கு பிறந்த அன்றே மணிமுடி சூட்டுவோம். அவன் தலையை அக்கணமே கொய்து அம்மணிமுடியை நீங்கள் வென்றெடுங்கள். மன்னனைக் கொன்று மணிமுடி கொய்தல் ஷாத்ர நெறியே ஆகும். நெறிப்படியும் முறைப்படியும் அம்மணிமுடிக்கு நீங்களே உரிமைகொள்ளலாம்” என்றான்.
அமைச்சனை ஆரத்தழுவி “ஆம், அதுவே முறை! அதுவே நான் செல்லும் நெறி!” என்று கூவிச்சிரித்தார் கம்சர். படைத்தலைவன் சுபூதனை அழைத்து தேவகியையும் வசுதேவனையும் கற்சிறையில் அடைக்க ஆணையிட்டார். “இவ்வுலகொரு சிறைக்கூடம் என்பார்கள் சூதர்கள். சிறைக்கூடத்தையே உலகாக்க நூல்கற்றவனால் முடியும் என்று நான் சொன்னதாகச் சொல்” என்று சொல்லி கம்சர் புன்னகைத்தார். சுபூதன் வணங்கி “கற்றகல்வியில் கல்பெயர்க்கும் கலை இல்லையேல் அவர் காலம் முழுக்க அங்குதான் இருப்பார் அரசே” என்றான். தொடையில் அறைந்து கூவி நகைத்தார் கம்சர்.
கற்சிறைக்குள் செல்லும் வரை வசுதேவர் “நான் அரசரைப் பார்க்கவேண்டும். அவரிடம் ஒரு சொல்லேனும் பேசவேண்டும்” என்று கூவிக்கொண்டிருந்தார். இரும்புக்கதவுகள் கூவியபடி மூடிக்கொள்ள இரும்புக் குறடுகள் ஒலிக்கும் காவலர் காலடிகளே புறவுலகென்றானதை உணர்ந்தபோது உடைந்து முழங்காலில் முகம் சேர்த்து அமர்ந்து அழுதார். அவர் அருகே அமர்ந்த தேவகி “சிறை எனக்குப் புதிதல்ல வீரரே. கன்னிச்சிறையில் இருந்தேன். கொழுநரின் சிறைக்கு வந்துள்ளேன். அன்னைச்சிறை வழியாகச் சென்று சிதையேறினாலும் என் வாழ்க்கை முழுமை உடையதே” என்றாள்.
நீர்வழியும் கண்களால் அவளை ஏறிட்டு நோக்கிய வசுதேவர் “இக்கணத்தில் திரைவிலகி அனைத்தையும் காண்கிறேன் அரசி. நான் கற்றறிந்த மூடன். அறிவிலிக்கு நூல்கள் அறியாமையை மட்டுமே அளிக்கின்றன” என்றார். “அறிதலும் அறியாமையும் கொண்டு வாழ்வை ஆடமுடியுமா என்ன? இது தெய்வங்களின் ஆடற்களம். இதில் வெல்லலும் தோற்றலும் இல்லை. விதியறிந்து அமைதலொன்றே விவேகமாகும்” என்று அவள் சொன்னாள். நீளமுகமும் நீலச்செண்பக விழிகளும் கொண்ட மெலிந்த பெண்ணின் தோளில் தன் கைகளை வைத்து “அறியவேண்டியதை எல்லாம் அறிந்திருக்கிறாய். என் அறியாமையையும் ஏற்றருள்க. இன்று உன் முன் முழுதமைகிறேன். நான் உன் சிறுமைந்தன்” என்றார் வசுதேவர்.
அன்றிரவு அவள் தன் மெல்லிய கரங்களால் அவரைத் தொட்டபோது அட்டை போல உடல் சுருங்கிக்கொண்டார். அவளுடைய கைக்கொடிகள் அவர் உடலைச் சூழ்ந்தபோது “வேண்டாம் தேவி, இந்தக் கற்சிறையில் நான் உன்னைத் தொட்டால் என் அகத்தில் ஓர் ஆண்மகன் கூசிச்சிறுக்கிறான்” என்றார். ”சிறையிலெனில் சிறையில். நாம் கைப்பிடித்தது இதற்காக அல்லவா? எங்கோ காலவெளியில் நம் ஊனும் குருதியும் பெய்யப்படுவதற்காகக் காத்திருக்கும் நம் குழந்தைகளுக்காக” என்று அவள் சொன்னாள். “நம்மைச் சிறையிட்டிருக்கும் வீணனின் ஆணையை அல்லவா நிறைவேற்றுகிறோம்?” என்று வசுதேவர் விம்மினார்.
அவள் அவர்முகத்தில் முகம்சேர்த்து, “அன்னையின் குரலெழுந்த முதுமகள் சொன்னது அரசனை நோக்கி என ஏன் எண்ணவேண்டும்? அது எனக்கான ஆணை என்றே நான் கொள்கிறேன். எட்டு மைந்தரைப்பெற்று என் கடன் தீர்க்க இப்பிறவியை அடைந்திருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “எத்தனை கொடியதென்றாலும் ஒரு பிறவியில் செய்யவேண்டியதென்ன என்று அறியமுடிந்தவர் நல்லூழ் கொண்டவரே. இலக்கறிந்த பறவைக்கு திசைதடுமாற்றம் இல்லை…” அவர் அவள் கைகளைப்பற்றி “உன் சொற்களில் திகழும் இந்த ஒளியை ஒரு நூலிலும் நான் கண்டதில்லை” என்றார்.
ஆனால் தன் வயிற்றில் கருநிலைத்ததை அறிந்ததுமே அவள் பிறிதொருத்தியானாள். நாள்தேர்ந்து திதிகணித்துக் காத்திருந்தவள் அதை உணர்ந்ததும் கால்பின்ன ஓடிவந்து அவர் அருகே விழுந்தமர்ந்து மூச்சிரைக்க “என்னுள் உயிர்நிறைந்திருக்கிறது யாதவரே!” என்றாள். முகம் வியர்க்க உடல் அதிர அவர் கைகளைப்பற்றிக்கொண்டு “நான் இங்கிருக்க மாட்டேன். என் மைந்தனை அவ்வரக்கன் கை தொட ஒப்பமாட்டேன். என்னை எப்படியேனும் தப்பவைத்து கொண்டு செல்லுங்கள்!” என்று விம்மி அழுதாள். துடிக்கும் உதடுகளும் விரிந்த மழைக்கண்களுமாக வெறுமொரு பேதையாக “என் மைந்தனை இழந்து உயிர்கொள்ள மாட்டேன். எவர் கால்களிலும் விழுகிறேன். எந்நெறியையும் கடக்கிறேன். எவ்விழிவையும் ஏற்கிறேன். என் மைந்தன் ஒருவனன்றி இப்புவியில் எனக்கேதுமில்லை” என்றாள்.
செயலற்று அவளை நோக்கி “என்ன சொல்கிறாய் அரசி? நாம் அவ்வரக்கன் கைவெள்ளையில் வைத்து கூர்ந்து நோக்கும் இரு சிறு பூச்சிகள் மட்டுமே. நாம் செய்வதற்கேதுமில்லை” என்றார். “சீ, நீயுமொரு ஆண்மகனா? இச்சொல்லை என் விழிநோக்கிச் சொல்லி அமர்ந்திருக்கவா அன்னை வயிற்றில் பிறந்தாய் இழிமகனே?” என்று தேவகி சீறினாள். “ஏதேனும் செய். கொல். இல்லையேல் செத்து அழி. இங்கிருக்காதே. என் குருதியில் ஊறும் மைந்தனுக்கு தந்தையாக இருப்பதென்றால் இச்சிறையின் கற்சுவரை உன் தலையால் முட்டி உடை. உன் குலதெய்வங்களை இங்கே அழைத்து கொண்டு வந்து நிறுத்து” என்று கூவினாள்.
கருமுதிர அவள் பித்தெழுந்தவளானாள். கேட்கும் குறடொலியை எல்லாம் வாளுடன் வரும் ஒலியாக அறிந்து உடல்நடுங்கி தோள் ஒடுங்கி மூலையில் செறிந்துகொண்டாள். நிழல்களை நோக்கிக் கைநீட்டி கூவி அலறினாள். தன் கைத்தொடுகையிலேயே விதிர்த்தெழுந்து பெருங்குரலில் கதறினாள். இரவும் பகலும் துயிலிழந்தவளாக சுற்றிவந்தாள். அவள் தோள்கள் தொய்ந்து தோல் வெளிறியது. வாய் உலர்ந்து விழிகள் கருகின. நடுங்கும் கைவிரல்களால் உணவை அள்ளி உண்ணமுடியாதவளானாள். மெலிந்த தொண்டையால் நீரும் பருகமுடியாதவளானாள். பொருளற்ற சொற்துளிகள் சொட்டி உதிரும் வாயுடன் கலுழ்ந்து வழியும் விழிகளுடன் எங்கும் அமரமுடியாதவளாக எங்குமிருந்தாள். எதையும் நோக்காத விழிகளால் சுவர் துளைத்து நோக்கி தவமிருந்தாள். கலைந்து எழுந்து குனிந்து தன் வீங்கிய வயிறை நோக்கி இது என்ன என்று திகைத்தாள்.
குருதிவாசனை அறிந்து வசுதேவர் கண்விழித்தெழுந்த இரவில் இருளுக்குள் முனகியபடி அமர்ந்திருந்த தேவகியை உணர்ந்தார். நெய்விளக்கை ஏற்றி கையிலெடுத்து அருகே சென்று குனிந்து “தேவி” என்றபோது அவள் “தின்றுவிட்டேன்! குருதிச்சுவை அறிந்தேன்! தின்றுவிட்டேன்!” என்று பேதைமொழி சொல்லி வறண்ட விழிகளால் நோக்கி பல்காட்டி நகைத்தாள். அடிவயிற்றில் உதைபட்டவள் போல கைகால்கள் அகல குருதியின் வெந்நா வந்து அவர் காலைத் தீண்டியது. அலறியபடி நெளிந்து தாவி அவர் கைகளைப்பற்றிக்கொண்டு “என் குழந்தையை காப்பாற்றுங்கள் யாதவரே. அவ்வரக்கன் அவனைக் கொல்ல விடாதீர்!” என்று கூவியபடி உடல் வலிப்பு கொண்டு அதிரத்தொடங்கினாள்.
ஓசைகேட்டு சேவகன் ஓடிச்சென்று செய்தி சொல்ல மருத்துவச்சிகள் இரும்புக்கதவு திறந்து உள்ளே வந்தனர். மார்கழி மாதத்து கடுங்குளிரில் விரைத்துப் போயிருந்த கல்திண்ணையில் அமர்ந்தபடி தேவகியின் வலியின் ஒலியைக் கேட்டு வசுதேவர் கண்ணீர் உகுத்தார். மைந்தனின் முதல்குரல் எழுந்ததும் கதறியபடி கல்லில் முகம் சேர்த்து கருக்குழந்தை போல் ஒடுங்கிக்கொண்டார். குருதிப்பூச்சைத் துடைத்து மென்பட்டில் பொதிந்து மூங்கில்கூடையில் இட்டு மைந்தனை அவர்கள் கொண்டுசென்றனர். எழுந்தமர்ந்து ஒரு கணம் அம்முகத்தை நோக்கவேண்டுமென்று அவர் எண்ணியபோது வலக்கையும் வலக்காலும் இழுத்துக்கொள்ள வாய்கோணி எச்சில் வழிய குளிர்திண்ணையில் திளைத்து பின் நினைவழிந்தார்.
மறுநாள் தேவகியின் குரல்கேட்டு விழித்துக்கொண்டார். வனநீலி எழுந்த பூசகி போல் உடல் முறுக்கி தொண்டைபுடைக்க இருகைகளாலும் கருங்கல்தரையை ஓங்கியறைந்து அவள் ஓலமிட்டாள். களிம்பேறிய செம்புச்சிலைபோல் அவள் உடல் பசுமைபூத்திருப்பதை அறைக்கு வெளியே கதவில் பாதிமறைந்து நின்று அவர் கண்டார். அக்கணமே இறந்து அங்கே கிடக்கவேண்டுமென்று ஏங்கினார். அவள் கண்கள் முன் சென்று நின்றால் பசிகொண்ட வேங்கைபோல தன்னை உடல்கிழித்து குதறி வீசுவாள் என்றெண்ணினார். அவள் சொல்லொன்று தன் மேல் பட்டால் தன் ஏழுதலைமுறை மூதாதையர் இருள்வெளிக்கு இழிவார்கள். அவள் ஒரு நோக்கு தன்னைத் தொட்டால் தன் தெய்வங்கள் இடிபட்ட பசுமரமென நின்றெரியும்.
செவிலியர் அவள் வீங்கிய சிறுமுலைகளைப் பிழிந்து பாலெடுத்தனர். வெண்சங்குக் கிண்ணத்தில் பாலுடன் ஊறிக் கொட்டியது கொழுங்குருதி. கண்ணீர் வழிந்து நனைந்த மேலாடையில் ஊறி வந்தன குருதி வட்டங்கள். சொட்டி வடிந்தொடியும் புயல்மழைக்கிளை என அவள் தொய்ந்து அமைந்த கல்தரையில் எண்ணித் தயங்கி வழிந்து வந்தது கண்ணில்லாத செந்நிறப்புழு போன்ற குருதி. மூடிய விழிகள் அதிர்ந்து அதிர்ந்து அமைய துடித்து அடங்கிய தொண்டைக்குழிக்குள் நின்றது அவள் இடாது அம்மைந்தன் சூடாது விண்ணின் நாதவெளியில் தங்கிவிட்ட அவன் பெயர்.
இனி அது நிகழலாகாதென்றே வசுதேவர் எண்ணியிருந்தார். ஆனால் விழித்தெழுந்த அவளோ துள்ளும் உவகையுடன் ஓடிவந்து அவரை அணைத்துக்கொண்டாள். கண்பூத்துச் சிரித்து “அறிந்தீர்களா? என் மைந்தன் நேற்று என் கனவிலெழுந்து வந்தான். செந்நிற சிறுமலர் போல. அவன் கொழுங்கன்னம் குழிந்த சிற்றிதழ் நகையை நான் கண்டேன். அவனை அணைத்து என் நெஞ்சோடு சேர்த்தபோது என் நெஞ்சுக்குள் இறுகிய செம்பளிங்குக் கட்டி ஒன்று உடைந்து உருகி வழிவதாக உணர்ந்தேன். அவனுக்கு நானிட்ட சுமுகன் என்னும் பெயரை அவன் கண்கள் வாங்கிக்கொண்டன. அவ்விழிகளை குனிந்து நோக்கி இரவெல்லாம் அவனை அழைத்துக்கொண்டிருந்தேன். பெயரற்று என் மடியில் வந்தவன் சுமுகனல்லவா நான் என்று என்னிடம் சொல்லி புன்னகை புரிவதைக் கண்டேன்” என்றாள். திகைத்து அவள் தோளைத் தழுவி “ஆம், அரசி, நானும் அவனைக் கண்டேன்” என்றார் வசுதேவர்.
தன் வயிறொழிந்ததை அரசி அறியவேயில்லை. எப்போதேனும் ஒரு நாள் அவள் அதை உணர்ந்து “எங்கே என் மைந்தன்? யாதவரே, எங்கே என் வயிற்றின் நிறைவு?” என பதறியோடி அருகே வருகையில் அவளை மெல்ல அணைத்து “நம் மூதாதையரைத் தேடி அவன் சென்றிருக்கிறான் அரசி. நாளை எழுந்தருள்வான்” என்று கண்களில் படர்ந்த ஈரத்துடன் சொல்வார் வசுதேவர். மீண்டும் மீண்டும் அவள் நிறைந்து ஒழிந்துகொண்டிருப்பதை அவளறியவே இல்லை. குன்றா கருவுடன் எட்டு வருடங்கள் சிறையிலேயே அகம் நிறைந்து இருந்தாள். களிப்பும் கனவும் சிரிப்பும் நாணமுமாக கலையாப் பெருங் கனவொன்றுக்குள் அவள் வாழ்ந்தாள்.
காலமொன்றே பெருஞ்சிறை என்றறிந்தார் வசுதேவர். காலமில்லா வெளியில் சுவர்கள் பொருளிழந்து திகைத்து நின்றன. அவள் உத்தரமதுராபுரியின் நந்தவனத்தில் உலவினாள். யமுனையின்மேல் படகோட்டினாள். குழந்தையும் குமரியுமாக வாழ்ந்தாள். அவள் உடல் உவகையால் நிறைந்து பேரழகு கொண்டது. முகம் முழுக்கதிர் விரியும் சந்திரவட்டம் ஆயிற்று. கண்களில் இளங்காலையின் ஒளி எழுந்தது. சிரிப்பில் புதுமலர்களின் வண்ணம் மலர்ந்தது. கன்றின் துள்ளல் கொண்டாள். நீரோடையின் நெளிவு கொண்டாள். மலர்க்கொடியின் அசைவு கொண்டாள். தென்றல் எடுத்து விளையாடும் மயிலிறகு போல அங்கெல்லாம் பறந்தலைந்தாள்.
அவரிடம் “ஏன் முகம் கனத்திருக்கிறீர்கள் யாதவரே? விருஷ்ணிகுலத்து வேந்தனின் தந்தை துயருறலாமா?” என்று அவள் சிரித்து தோள்சேர்ந்து கேட்கையில் “இல்லை, துயரே இல்லை அரசி” என்று வசுதேவர் சொன்னார். “நம் மைந்தன் வளர்ந்துகொண்டிருக்கிறான். கண்வளர்ந்து முகம் வளர்ந்து கை வளர்ந்து கால்வளர்ந்து கனவு வளர்ந்து அவன் எழுகிறான். கைதொட்டு அவன் அசைவை நான் அறிகிறேன். அவன் புன்னகையை கனவில் காண்கிறேன்” என்று அவள் சொன்னாள்.
“அவன் கன்னங்கரியவன். ஆகவே கிருஷ்ணன் என்று அவனுக்குப் பெயரிட்டேன். ஆனால் அப்பெயரை அத்தனை பேரும் அழைப்பார்களே என்று ஏங்கினேன். எனவே நான் அவனுக்குக் கண்ணனென்று பெயரிட்டேன். கைகளும் கால்களும் சிரிப்பும் சொல்லும் என அவன் எதுவாக இருந்தாலென்ன? என் கண்ணுக்கு அவன் கண் மட்டுமே. கண்ணாகி வந்தவனுக்கு கண்ணன் என்றல்லாமல் பெயருண்டா என்ன?” என்றாள் பெண்ணென்றான பெருசுமைகொண்ட பேதை.
அனைத்துத் தடைகளையும் மீறி வசுதேவர் அழத்தொடங்க “அய்யோ, என்ன அழுகை இது? மைந்தனை நினைத்தால் இவ்வழுகை என்றால் மடிநிறைத்து அவனை எடுத்தால் எப்படி அழுவீர்? யாதவரே, மானுடனாகப் பிறந்தமைக்கே பொருள் அளிக்கும் பொற்கணங்கள் வழியாகச் செல்லப்போகிறீர். வாழும் ஒவ்வொரு கணமும் ஒரு மணிமுத்தாக அம்முத்துக்கள் வழியாகச் செல்லப்போகிறது கண்ணனென்ற சொல்லெனும் கருஞ்சரடு. அம்மணிமாலையை அணிந்து இவ்வுலகை ஆளவிருக்கும் மாமன்னர் நீர்” என்றாள். பொருளிழந்து வழியும் சொற்களில் மட்டும் குடியேறும் பேரழகைக் கண்டு அவர் கண்ணீருடன் நகைத்தார்.
“இளையோரே, இன்னொரு நறுவெற்றிலை சுருளெடுத்து எனக்களியுங்கள். நானறியேன் அங்கு நிகழ்ந்தவை என்னவென்று. இம்மாதம் அஷ்டமி ரோகிணியில் அன்னை மணிவயிறு ஒழிந்தாள். அக்கருவை கைதொட்டு எடுத்தவள் நான். கருக்குருதி பூசிய நீலப்பட்டுடலை என் கண்ணாலும் கருத்தாலும் கடந்துறையும் மெய்யாலும் மெய்யிறந்த நுண்ணாலும் அறிந்தேன். உலகாளும் செம்பாதங்களை என் சென்னியில் சூடினேன். இளவெந்நீரால் பூம்பட்டுச்சுருளை நனைத்து அவனைத் துடைத்தேன். நீலமணியின் சுடர் எழுந்து இருளறைக்குள் ஒளியெழக்கண்டேன். மூங்கில் கூடையில் வெண்பட்டு விரித்து அவனைப் படுக்கவைத்து சேடியரிடம் கையளித்தேன். மறுநாள் நானறிந்தேன். மதுரையின் மாமன்னர் எட்டாவது மகவையும் கொன்றுவிட்டார் என்று.”
மூச்சொலிகள் எழ நீர் விட்டெழுந்து நெஞ்சுபொத்தி நின்றனர் ஆயர்குலமகளிர். பொக்கை வாய் காட்டிச் சிரித்து செவிலி சொன்னாள் “அவன் ஆடலை அறிந்தவர் இங்குளரோ பெண்களே? மன்னனின் கைவாள் போழ்ந்து எரிசிதைக்கனுப்பிய உடல் ஒரு பெண்மகவு என்கிறார்கள் அரண்மனைச் சேடியர்” என்றாள். “யாரந்த மகவு?” என்றனர் ஆய்ச்சியர். “அந்த நீலமைந்தன் எங்குளான்?” என்று எழுந்து ஈரம் சொட்ட அவள் அருகே வந்தனர். “நானொன்றறியேன். இனி ஒருமுறை அப்பாதங்களை நோக்கி விழிதெளிக்கும் வாழ்நீளமும் எனக்கில்லை. ஒரு நோக்கு கண்டதனாலேயே இப்பிறவிக் கடல்நீந்த புணை பற்றியவளானேன்” என்றாள் செவிலி.