«

»


Print this Post

கூந்தப்பனை


வணக்கம்

கூந்தல்பனை பற்றிய நிறைய சந்தேகங்கள் எனக்குள்ளது. வாய்ப்பிருந்தால் பின்வரும் இரண்டு இடுகைகளையும் படித்துவிட்டு, மேற்கொண்டு தகவல்கள் அளித்து உதவினால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். உங்களைவிட்டால் வேறு யாரிடமும் எனக்குக் கேட்கத்தோன்றவில்லை

http://thooralkavithai.blogspot.com/2009/12/blog-post_29.html.

http://thooralkavithai.blogspot.com/2009/12/blog-post_16.html

நன்றி.

ச.முத்துவேல்
மதுரை

 

அன்புள்ள முத்துவேல்,

கூந்தப்பனை என்றால் ‘கூந்தல்’பனைதான். கூந்தல் போல ஓலைகளும் பூக்களும் பரந்து நிற்கும் பனை அது. பிற பெயர்கள் தாலிப்பனை, குடைப்பனை, விசிறிப்பனை. ஆங்கிலத்தில் Corypha umbraculifera என்பார்கள். இணையத்தில் சென்றால் எல்லா தகவல்களையும் பார்க்கலாம். குமரிமாவட்டத்தில் இதன் நான்கு வகைகள் உள்ளன. சில வகை இரண்டாளுயரத்தைத் தாண்டாது. சில உயரமாக வளரும். சில பனைகள் பல தலைகளுடன் காணப்படும். சில மிகத்தாழ்வாக படர்ந்தும் கிடக்கும்.

 

File:Talipot, Corypha umbraculifera, palmier géant.JPG

 

இந்த பனையின் பெயர்களில் இதன் உபயோகம் உள்ளது. தாலம் என்றாலே பனை என்றுதான் பொருள். தாலம் என்றால் இலை என்பது சரியான சொற்பொருள். இலையில் இருந்து உண்ணும் தட்டுக்கு தாலம் என்று பெயர் வந்தது. [ தாலப்பொலி: ஒருகடிதம் ]

பழங்காலத்தில் கணவனின் குலச்சின்னங்களை மந்திரங்களுடன் சிறிய ஓலைத்துணுக்கில் எழுதி சுருட்டி மஞ்சள் தடவி மஞ்சள்நூலில் கோர்த்து பெண் கழுத்தில் கட்டுவார்கள். அதுவே தாலி.

அக்காலத்தில் தாலி என்றால் பெண்ணுக்கு மட்டுமல்ல. ஐம்படைத்தாலி போன்ற ஆணுக்குரிய தாலிகளும் இருந்தன. இவ்வழக்கம் குமரிமாவட்டத்தில் சமீப காலம்வரை இருந்தது.

அவ்வாறு கட்டுவதற்கான பனையோலையை பொதுவாக கூந்தல்பனையில் இருந்தே எடுப்பார்கள். இந்த ஓலை மிக மென்மையானது, தாள் அளவுக்கே மெல்லியது. சிறிதாக செறிவாகச் சுருட்ட முடியும். அதனால்தான் அதன் பெயர் தாலிப்பனை.

குமரிமாவட்டத்தில் எண்பதுகள் வரைக்கூட தலைக்குடை அல்லது ஓலைக்குடை புழக்கத்தில் இருந்தது. குடைபோலக் கவிழ்ந்த வட்டமான பரப்புக்குக் கீழே ஒரு தொப்பிபோல் இருக்கும். தலையில் தொப்பிபோல வைத்துக்கொள்ளலாம். தொப்பிக்குடை என்றும் சொல்வார்கள். இந்தக்குடையை சாதாரண பனையோலையால் செய்வதில்லை. கூந்தப்பனை ஓலையால் செய்வார்கள்.

காரணம் பனையோலை போல் அல்லாமல் கூந்தப்பனை ஓலை பெரிய சிறகு போல இருக்கும். அத்துடன் கெட்டியான தாள் அளவு தடிமனுடன் மிக எடையில்லாமல் இருக்கும். ஆகவே அந்த பனையை குடைப்பனை என்று சொல்கிறார்கள் கேரளத்தில் குடைப்பனை மிக அதிகம். அதன் ஆங்கிலப்பெயர் அங்கிருந்து வந்ததாக இருக்கலாம்.

File:Flowering Talipot Palm 06.jpg

கூந்தப்பனையின் ஓலையை கேரளத்தில் எழுதுவதற்கும் பயன்படுத்துவதுண்டு. தாலியோலை கிரந்தம் என்று சொல்வார்கள்.  தாலியோலைச்சுவடிகள் பனையோலைகளைப் போல அல்லாமல் மிகவும் எடைக்குறைவாக இருக்கும். பெரிய நூல்களை தாலியோலைகளில் எழுதுவது வழக்கம். இப்போதும் அ.கா.பெருமாள் அவர்களிடம் நிறைய தாலியோலை சுவடிகள் உள்ளன. பேணினால் முந்நூறு வருடம்கூட அழியாமல் இருக்கும்.

இந்தப்பனையோலையால் விசிறிகள் செய்வார்கள். பழங்காலத்தில் பங்காக்கள் இதனால்தான் செய்யப்பட்டன. கதகளிக்கு கன்னத்தில் ஒட்டும் சுட்டி என்ற ஒப்பனையும் இதனால்தான் செய்யப்பட்டது. சீனாவில் இந்த மரத்தின் ஓலை தொப்பிகள்செய்ய பயன்படுகிறது.

மிக விசித்திரமான ஒரு மரம். மிகப்பெரிய பூவை பூக்கும்.  நெடுந்தூரம் அதன் மணம் தெரியும். தூரத்திலேயே பூவைப்பார்க்க முடியும். ஆனால் வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் பூக்கும். அதற்கு முப்பது முதல் எழுபது வருடங்கள் ஆகும்போது பூத்து கனியாகும். அந்த விதை உதிர்ந்தபின் பிறகு எப்போதுமே பூக்காது. நெடுங்காலம் உயிர்வாழக்கூடிய மரம் இது.

ஆகவே கூந்தப்பனை மிகக்குறைவாகவே இனப்பெருக்கம் செய்கிறது.  அடர்காட்டில்கூட தனியாகவே காணப்படும்.  கூட்டம்கூட்டமாக பார்க்க முடியாது. இதனால் பொதுவாக தனித்த பனைகளில் காணக்கூடிய ஒரு பண்பு இதில் மேலோங்கியிருக்கும். அதாவது ஒரே பனையிலேயே ஆணும்பெண்ணும் இருக்கும். பெரும்பாலான கூந்தப்பனைகள் அர்த்தநாரீஸ்வரர்கள்தான்.

சு.வேணுகோபால் தன் கதையில் ஆண்மை இல்லாத ஒருவனின் அவலத்தைச் சித்தரிக்கிறார். அவன் தன் மனைவியை நண்பனுக்கே மணம் முடிக்கிறான். ஆனால் அந்த மனைவிமேல் பிரியம் கொண்டிருக்கிறான். அந்த மனைவி அவன் பிரியத்தை புரிந்துகொள்ளாமல் அவமதிக்கவே தற்கொலை எண்ணத்துடன் ஊரைவிட்டு கிளம்புகிறான். தன்னை பயனற்றவனாக பொருளற்றவனாக உணர்கிறான்.

அப்பயணத்தில் ஒரு தனித்த மணல்தேரிமீது அவன் ஒரு கூந்தப்பனையை காண்கிறான்.  அவனுக்கு ஒரு தரிசனம் கிடைத்ததாக தோன்றுகிறது. அந்த மேட்டில் ஓர் ஊற்று சுரப்பதையும் காணநேர்கிறது. கதையின் உச்சம் அது.

எளிமையாகச் சொல்லப்போனால் அவன் தன் இல்லாத ஆண்மையை உணர்வதற்குப் பதில் இருக்கும் பெண்மையை, தாய்மையை உணர்கிறான். வாழ்நாளில் முதல்முறையாக, கடைசிமுறையாக, ஒரு மாபெரும் மலர் அவனில் மலர்கிறது. ஆகவேதான் கூந்தப்பனை என்று பெயரிட்டிருக்கிறார் வேணுகோபால்

மண்ணில் முளைத்தெழுந்த ஒரு கலைஞனை புரிந்துகொள்ள நமக்கு எவ்வளவு தகவல்கள் தேவைப்படுகின்றன இல்லையா? நாம் எத்தனை தூரம் விலகி வந்திருக்கிறோம்!

[கூந்தப்பனை, சு.வேணுகோபால் கதைகள். தமிழினி பதிப்பகம் ]

தாலப்பொலி: ஒருகடிதம்

சு.வேணுகோபாலின் மண்-1

சு.வேணுகோபாலின் மண் 2

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2009 டிசம்பர்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6063/

6 comments

2 pings

Skip to comment form

 1. Ramachandra Sarma

  உண்மைதான்… என்னைப்போன்ற ஜந்துக்கள் புரிந்துகொள்ள வேறு வழியே இல்லையே. எங்க போய் கேக்கறது..இங்கதான் வந்து நிக்கனும்…!!

 2. arvind

  ஐயா..நீங்க பாட்டுக்கு எழுதீட்டே போறீங்க..நானும் நாலு மாசமா ‘கூந்தப்பனை’ புஸ்தகத்தை தேடீட்டு இருக்கேன்.. ரெண்டு வருஷமா மணற்கடிகைய தேடீட்டு இருக்கேன்.. எங்கேயும் கிடைக்க மாட்டீங்குதே சாமீ.. யாருட்ட கேட்டாலும் அவுட் ஆப் ஸ்டாக்குங்க்ய்றாங்களே..

 3. ஜெயமோகன்

  புத்தகக் கண்காட்சியில் தமிழினி அரங்கில் கிடைக்கும். தமிழினி வெளிஒயீடுகள் அவை. சென்னை நியூபுக்லேன்ட்ஸ், மற்ற ஊர்களில் நியூசெஞ்சுரி புக் கவுஸ் ஆகிய இடங்கலில் வாங்கலாம்

 4. arvind

  குசும்பு தான்.. சென்னை நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர் எனி இந்தியன், கோவை நியூ சென்சுரி கடைகளில் மணற்கடிகையை 2007ஆம் ஆண்டு இறுதியில் இருந்து தேடிக்கொண்டிருக்கிறேன். அது தவிர சென்னை மற்றும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியிலும் கேட்டாகிவிட்டது. ஏன், தமிழினி ஸ்டாலில் வசந்தகுமாரிடமே கேட்டுப்பார்த்து விட்டேன். அடுத்து திருப்பூர் செல்வது தான் ஒரே வழி என்று நினைக்கிறேன். கூந்தப்பனையும் எங்கும் கிடைக்கவில்லை.

  இதற்கு நடுவில் நீங்கள் பாட்டுக்கு ‘கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது’ அதுஇதுவென்று எழுதித் தள்ளி, ஆர்வத்தை கிளப்பி விட்டு, எங்கள் அமைதியை குலைத்து விடுகிறீர்கள்!

  உங்கள் நண்பர் வசந்தகுமாரிடம் கொஞ்சம் சிபாரிசு செய்யவும். ஒன்றிரெண்டு காப்பிகள் தப்பித்தவறி இருந்தால் பத்திரமாக ஒளித்து வைக்கச் சொல்லுங்கள். புத்தகக் கண்காட்சியில் வந்து வாங்கிக் கொள்கிறேன்.

  இல்லையேல் எனக்கு ஒரு வழி சொல்லவும்.

 5. ஜெயமோகன்

  என்னது ‘என் தாலிக்குப் பதில் சொல்லுங்கள் என்கிற மாதிரி இருக்கே

 6. ஜெயமோகன்

  நன்றி குருவே,

  இப்போதுதான் உங்கள் வலைத்தளத்தில் பார்த்தேன். எவ்வளவு விரைவான செயல்! எவ்வளவு அரிய தகவல்கள்!பொருட்படுத்தத் தகுந்த கடிதங்களுக்கு தவறாமல் பதிலிடுவது மட்டுமல்ல,விரைவாகவும் செய்கிறீர்கள் என்று என் அனுபவத்திலிருந்தே உணர்கிறேன்.கூந்தப்பனையின் ஆங்கிலப் பெயர் தெரிந்திருந்தால் இணையத்தில் தேடவும், படங்களைக் கண்டுபிடிக்கவும் எளிதாகிவிட்டிருக்கும்.ஆனால், தமிழுக்கே இத்தனைத் தகராறு எனும்போது, ஆங்கிலத்திற்கு எங்கே செல்வது?தமிழில் பெயர் கொடுத்து தேடியபோது, பெரிய அளவில் ஒன்றும் தகவல்கள் கிடைக்கவில்லை. இப்போது அந்தக் குறையை நீக்கிவிட்டீர்கள்.

  கூந்தப்பனையின் அடியில் நின்றுகொண்டுமட்டுமே பார்க்கவாய்த்தது எனக்கு இன்று. அதுவும் ஆர்வத்தால் விளைந்தது.ஆனால், இலையின் மென்மையை, தன்மையை உணரமுடியவில்லை. அதை நீங்கள் உணர்த்திவிட்டீர்கள்.கடலுக்கு உள்ளான விசயங்களை எழுதமுடிந்த ஜோ டி க்ரூஸ் தான் நினைவுக்கு வருகிறார்.

  உங்களைப் பார்த்து வியந்துகொண்டிருப்பதும்,மகிழ்ந்துகொண்டிருப்பதும், பரிந்துரைத்துக்கொண்டிருப்பதுமே என் அன்றாட வேலைகளில் ஒன்றாகப்போய்விட்டது.

  தாலப்பொலி பதிவை நான் எப்படி தவறவிட்டேன் என்று ஆச்சரியமாகவும், அதே சமயம் வருத்தமாகவும் உள்ளது.தாலப்பொலி என்ற ஒரு இடுகையே போதும், நான் உங்களின் புகழ்பாடுதலில் இருக்கும் உண்மையை உணர்த்த.

  நான் கடந்த ஒன்றரை வருடங்களாக உங்கள் வலைத்தளத்தையும், சில நூல்களையும் படித்துக்கொண்டு வந்திருக்கிறேன். நான் உங்களிடமிருந்து கற்றதும், பெற்றதும் நிறைய்ய.இதற்காகவும், இந்த கூந்தப்பனை இடுகைக்காகவும் மனமார்ந்த நன்றியைச் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

  (என் பெயரின் கீழே மதுரை என்று நீங்கள் எழுதியிருப்பது குறித்து எனக்கு வியப்பாக உள்ளது. சுட்டி அளித்துள்ள எனது இரண்டு இடுகைகளில் ஒன்றில், என் ஊர் திருவண்ணாமலை என்பதை (என் வலையில் முதன் முறையாக)சுட்டிக்காடியிருக்கிறேன். உங்களுக்கு எழுதிய கடித்ததிலும், என் ஊரைக் குறிப்பிடவில்லை.ஆனால் என் பெயரின் கீழே மதுரை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.எப்படி நிகழ்ந்தது இது? இதனால் பிழையொன்றும் இல்லைதான். எனக்கும் மதுரையைப் பிடிக்கும். ஆனால், நான் திருவண்ணாமலைக்காரன் என்று சொல்லிக்கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சியை, நான் இங்கு இழந்து நிற்கிறேன். ஏற்கனவே நான் எழுதிய கடிதங்களை மறந்துவிட்டீர்கள்போலும் என்று இதன்மூலம் நான் நினைத்துக்கொள்கிறேன். இது எனக்கு சற்று ஆறுதலாகக்கூட இருக்கிறது. :)

  மீண்டும் நன்றி குருவே!
  ச.முத்துவேல்.

 1. குருகு

  […] கூந்தப்பனை […]

 2. கூந்தல்பனை- கடிதம்

  […] முத்துவேலின் கூந்தல்பனை தொடர்பான ஐயத்திற்கு தாங்கள் பதிலளித்திருந்தீர்கள். […]

Comments have been disabled.