கணியாகுளம்,பாறையடி…

கணியா குளம் கிராமம் பார்வதிபுரத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம். வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் இது. நாயக்கர்காலத்திலேயே இந்தக் கிராமம் உருவாகிவிட்டது. பல போர்களைக் கண்ட கிராமம் இது. எல்லா கேரள வரலாற்றிலும் இந்த இடம் உண்டு. நாகர்கோவிலில் இருந்து ஆளூர் வழி பத்மநாபபுரம் செல்லும் சாலை இந்த கிராமம் வழியாக சென்றது. பார்வதிபுரம் வழியாகச் செல்லும் இப்போதைய நெடுஞ்சாலை திவான் மாதவராயர் நூறு வருடம் முன்பு அமைத்தது. அத்துடன் கணியாகுளம் கைவிடப்பட்டு சிற்றூராக ஆகியது. கணியாகுகளம் போரில்தான் திருவிதாங்கூரின் வீரநாயகனாக கதைப்பாடல்களில் வாழ்த்தப்படும் இரவிக்குட்டிப்பிள்ளை  திருமலைநாயக்கர் படைகளுடன் போரிட்டு உயிர்துறந்தார். அவரது நினைவுக்கல் சற்று அப்பால் வயலுக்குள் உள்ளது

கணியகுளம் ‘ஜங்ஷன்’

செல்லும் வழியெங்கும் கூடவே வருகிறது கால்வாய். நீரின் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது, உற்சாகமான சிறுமிகளின் சிரிப்பு போல

கணியாகுளம் ஊர்

 

 எருமைகள் இந்தப்பகுதியின் தட்பவெப்பநிலைக்கு ஏற்ற உயிர்கள்.சேற்றில் விவசாயம்செய்ய இன்றியமையாதவை. நாஞ்சில்நாட்டு சிலுசிலு மழையை பாண்டியநாட்டுக்காரர்கள் ‘எருமைமழை’ என்பார்கள். நாஞ்சில்நாட்டுக்காரர்கள் எருமைபோல மழையை பொருட்படுத்தாமல் செல்வார்கள் என்று பொருள்

 கணியாகுளம் ஏரி. நாயக்கர்கல் வெட்டியது. இப்போது நீர் நிரப்பப்படுவதில்லை. காரணம் சுற்றிலும் பல மாளிகைகள் வந்துவிட்டன. நீர் நிரம்பினால் பங்களாக்காரர்கள் ஆள் வைத்து தோண்டிவிட்டுவிடுவார்கள். விவசாயிகள் வந்து ரத்தக் சிவந்த கண்களுடன் சண்டை போடுவார்கள். ஆனால் பெரியாட்களிடம் மோத முடியுமா என்ன?

குளிர்ந்த காற்று அடர்ந்து வீசுவது கணியாகுளம் சாலையின் சிறப்பியல்பு. ஆடியில் கார்று சமயங்களில் பிடித்து தள்ளிவிடும்.ஆனால் தூசு அனேகமாக இருககது. நீர்த்துளிகள்தான். பொதுவாக வேறு பகுதிக்காரர்களுக்கு சளி பிடிக்கும்

 பாறையடி பாலம். கால்வாய்.பாலம் மீது அமர்ந்தாலே வேதசகாயகுமாருக்கு கால்டுவெல் நினைவுவந்து பேச ஆரம்பித்துவிடுவார்

வேளிமலைச்சிகரம். மேகத்தால் மெல்ல தழுவப்படும்போது மலைகளில் நிறையும் அமைதி….

தூண்பாறை. பாறையடிக்கு அப்பால் செங்குத்தாக நிற்கும் இந்த சிகரத்துக்குமேல் ஒரு சிறுகாடும் உண்டு

 

திரும்பும் வழியில்அவ்வழியாகச் சென்ற  பிளெஸியும் அவள் தம்பியும் அதீத வெட்கத்துடன் ”அக்கா ஒரு போட்டோ எடுப்பியளா?”என்று சைதன்யாவிடம் கேட்டார்கள். தந்தை கொத்தனார் வேலை செய்கிறார். பிளெஸி நான்காம் வகுப்பு தம்பி ஒன்றாம் வகுப்பு. ஆங்கில மீடியம் தனியார் பள்ளிதான்.

முந்தைய கட்டுரைகீதை முகப்பு
அடுத்த கட்டுரைஅக்காமலையின் அட்டைகள்.