‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 3

பகுதி ஒன்று: 3. முகிழ்முலை கனிதல்

முதற்கரிச்சான் காலையை உணர்வதற்குள் சிற்றில் மூலையில் புல்பாயில் எழுந்தமர்ந்த ராதை தன் சுட்டுவிரலால் தோழியைத் தீண்டி “ஏடி, லலிதை” என்றழைத்தாள். அவிழ்ந்த கருங்கூந்தல் நெற்றியில் புரள, அழிந்து பரவிய குங்குமம் கொண்ட பொன்னுதலுடன் துயில் ததும்பும் விழிகளால் நோக்கி “என்னடி?” என்று லலிதை முனகினாள். “என்னுடன் வருகிறாயா?”என்று மெல்லியகுரலில் ராதை கேட்டாள்.

“எங்கே?” என லலிதை திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள். சிற்றகல் ஒளியில் செம்மை மின்னிய முகத்தைக் கண்டு “என்னடி இது? கூந்தல் நீவி முடைந்திருக்கிறாய்? ஆடை திருத்தி அணிகள் ஒருக்கியிருக்கிறாய். எங்கே கிளம்புகிறாய்? அய்யோ!” என்று பதறினாள். “நான் அம்மைந்தனை தேடிச்செல்லவிருக்கிறேன்” என்றாள் ராதை. லலிதை திகைத்து “எந்தக்குழந்தையை?” என்றாள். “இன்று மாலை முதுதாதை சொல்வதைக் கேட்டேன். அந்த கருநீலக்குழந்தை சென்ற இடத்தை அறிந்தேன்” ராதை சொன்னாள்.

லலிதை மூச்சிழுத்து இளமுலைகளைக் கையால் அழுத்தி “பிச்சி போல் பேசுகிறாய்! இவ்விடியல் கருக்கலில் எப்படி அத்தனை தொலைவு செல்லமுடியும்?” என்றாள். “நான் சென்றாகவேண்டும். சற்றுமுன் என் கனவில் அந்த செவ்விதழ் பாதம் விரிந்த நீலக்கழல்களை மீண்டும் கண்டேன்” என்று ராதை சொன்னாள். “நீ வரவில்லை என்றால் நானே செல்கிறேன். என் உள்ளம் அப்போதே கிளம்பி பாதிவழிசென்றுவிட்டது” என்று செம்பட்டு மேலாடையை கையில் எடுத்தாள்.

“குடிநிறைத்த குமரி பன்னிரு நாட்களுக்கு வெளியே செல்லவே கூடாதடி. சேமக்கல ஒலியும் காவல்பெண்டிர் துணையும் காப்புமலர்க்கிளையும் கொண்டு நீராடச்செல்வதற்கு மட்டுமே நெறி ஒப்புகிறது… அன்னையோ மாமியோ அறிந்தால் அக்கணமே பிரம்பை எடுத்துவிடுவார்கள்” என்று லலிதை கூறிக்கொண்டிருக்க ராதை தன் சதங்கைக்குமேல் மென்துகிலைச் சுற்றினாள். கைவளைகளுக்குமேல் மேலாடையைச் சுற்றினாள்.

“என்ன செய்கிறாயடி பிச்சி?” என்றாள் லலிதை. “வளையலோசையும் சதங்கை மணியோசையும் இங்கு எவரையும் எழுப்பவேண்டியதில்லை” என்றாள் ராதை. “ஒவ்வொன்றாக கழற்றுவதற்கு இங்கே ஒளியில்லை” என்றபின் தன்னைச்சுற்றித் துயிலும் தோழியர் பாய்களுக்கு நடுவே சேற்றில் நடக்கும் நீர்க்கொக்கு போல நீளக்கால் எடுத்துவைத்து கடந்துசென்றாள்.

“அய்யோ… நான் என்ன செய்வேன்” என்று புலம்பிய லலிதை அவளைப்போலவே அணிகளில் துணிசுற்றி காலெடுத்துவைத்து பின்னால் வந்தாள். “இத்தனை களவும் என்று நீ கற்றாய்? நீ யாரென்றே என் அகம் திகைக்கிறதே” என்றவள் அடுமனையின் மேடையில் இருந்த வெண்ணைக்கலங்களின் விளிம்புநெய்யை வழித்து கதவின் தாழில் பூசி அதை ஓசையின்றி மெல்லத்திறந்த ராதையை நோக்கி நெஞ்சில் கைசேர்த்தாள்.

வண்ணச்சிறகெழுந்தது போல் மேலாடைபறக்க வெளியிருளின் முன் நின்ற ராதையை நோக்கி “வேண்டாமடி. கருக்கிருட்டில் பெண்டிர் செல்லக்கூடாதென்பர் மூதன்னையர்” என்று அவள் கைகளைப்பற்றிக்கொண்டாள். “இருட்டிலும் எனக்கு விழி தெளிகிறது. இதோ முற்றத்து மரத்தின் ஒவ்வொரு இலையையும் காண்கிறேன்” என்று அவள் இருளுக்குள் காலெடுத்து வைத்தாள். “பெண்கள் செய்யக்கூடாத செயலடி இது” என்றாள் லலிதை. “நான் பெண்ணே அல்ல” என்று ராதை சிரித்த ஒலி இருளில் புள்சிலம்பியது போலக் கேட்டது.

“நில்லடி… தனியாக உன்னை எப்படி விடுவேன்” என்று லலிதை பின்னால் ஓடினாள். “மாயவரும் பேயவரும் உலவும் விடிகாலை என்பார்களே” என்று அரற்றியபடி அவளைத் தொடர்ந்து மூச்சிரைக்க விரைந்தாள். “என்னை ஆட்கொண்டிருக்கும் பெருமயல் கண்டு மாயவர் அஞ்சுவர். பேயவர் உடன் வந்து நடமிடுவர்…” என நகைத்தபடி ராதை பசுஞ்சாணி மணக்கும் ஆயர்க்குடில்கள் இருளில் நிரைவகுத்து அமைந்த தெருவில் இலைவருடிச்செல்லும் இளங்காற்று போலச் சென்றாள். “சிறகு முளைத்தபின் எந்தப்பறவையும் கூடுகளில் அமர்ந்திருப்பதில்லை தோழி.”

பசுக்களின் மடி நிறைக்கும் தெய்வங்களின் பெயர்களை நாவுக்குள் சொல்லி ஊழ்கத்திலிருக்கும் மூதன்னையர் போல பனிசொட்டும் இலைநுனிகளுடன் இருளுக்குள் மூழ்கிநின்ற பெருமரங்கள் அரணிட்ட யமுனைப்பாதையில் சென்று இருளுக்குள் கனிவே ஒளியாக ஓடிக்கொண்டிருந்த நதிக்கரையை அடைந்தனர். “இவ்வழியேதான்” என்று கைசுட்டிய ராதை அத்திசை நோக்கி பாய்ந்து சுழித்தோடிச் சென்றாள்.

“எங்கே? எங்கென்று சொல்லடி” என்றாள் லலிதை. “இவ்வழியே நான் செல்வதுபோலக் கனவுகண்டேன். என் முன் தென்றலில் ஏறி மலர்கள் சென்றுகொண்டிருந்தன. நீலம்பூத்து விழி நிறைந்த யமுனையின் கரையோரமாக. கடம்பு மலர்க்கம்பளம் விரிந்த பாதையின் வழியாக. அங்கே ஓர் ஆயர்ச்சிறுகுடியில் அன்னையின் முலைவெம்மையில் ஒடுங்கி உறங்கும் நீலச்சிறுமணியைக் கண்டேன்” என்றாள் ராதை. “நீலக்கடம்பு பூத்து நின்றிருக்கும் நடுமுற்றம். அதன் வலப்பக்கம் இரட்டை மருதமரங்கள் நிழல் விரித்து நின்றிருக்கும்.”

லலிதை ‘அய்யோ! என்ன செய்வேன். ஏதோ அறிவின்மையில் இப்பிச்சியுடன் இத்தனை தொலைவுக்கு வந்துவிட்டேனே…’ என்று ஏங்கினாள். திரும்பிச்செல்லலாமா என ஒரு கணம் எண்ணி நோக்கியபின் அப்பால் அகன்று சென்ற ராதையை நோக்கி “நில்லடி! நில்லடி அங்கே!” என்று கூவியபடி ஓடினாள்.

நீர்த்துளி கனத்த மலர்க்கிளைகளை நகைத்தபடி துள்ளிக்குதித்து கையால் அடித்து சிதறவைத்துச் சிரித்துக் கூவினாள். சிறுமலர்களைப்பற்றி உருவி எடுத்து தன் தலையில் தானே தூவி உடல்குறுக்கி சிலிர்த்துக்கொண்டாள். புதரில் தலையெடுத்த இளமானைக் கண்டு கூவிநகைத்து துரத்திச்சென்று அள்ளித்தழுவிக் கொண்டாள். ஒளிவிட்டு சாலையைக் கடந்த கருநாகத்தை ஓடிச்சென்று எடுத்து தன் கழுத்திலணிந்துகொண்டாள். “ராதை! ராதை!” என்று அரற்றுவதன்றி ஒன்றும் செய்ய இயலாதவளாக உடன் சென்றுகொண்டிருந்தாள் லலிதை. “பிச்சி ஆகிவிட்டாயா? தோழி, சற்று நில்! நான் சொல்வதைக்கேள்” என்று கூவினாள்.

ராதை உரக்க நகைத்து “பிச்சியாவதென்ன, பேய்ச்சியாவதென்ன, இங்குள ஏதுமாவதென்ன. நான் அங்குளேன். அருகுளேன். எஞ்சுகிலேன். ஏதுமிலேன்” என்றபின் கைவிரித்து ஓடத்தொடங்கினாள். அவள் பின்னால் ஓடிச்சென்று அவள் கையைப்பற்றி இழுத்து “ராதை, நம் இல்லம் திரும்புவோம் வா” என்றாள் லலிதை. “நீ யார்?” என்று அவள் கையை உருவிக்கொண்டு சினந்து கேட்டாள். “என் கைவளை உடைய பற்றி இழுக்க உனக்கேது உரிமை?” கண்ணீர் வழிய “ராதை ராதை ராதை” என்றாள் லலிதை.

கிழக்கின் இளங்கதிர்களால் யமுனை ஒளிப்பெருக்காக மாறியபோது குசவனத்தையும் கொன்றைவனத்தையும் செண்பகவனத்தையும் கடந்து அவர்கள் ஆயர்குடிகள் வாழும் சிற்றூரைச் சென்றடைந்தனர். சற்றுமுன் விழித்தெழுந்த ஊரெங்கும் கன்றுகள் முலைக்குத் தாவும் குரலும் அன்னைப்பசுக்கள் அருகழைக்கும் மறுகுரலும் கேட்டுக்கொண்டிருந்தன. கொதிக்கும் எண்ணையில் நீர் விழும் ஒலிபோல பால்கறக்கும் ஒலிகள் எழுந்தன. ஒலித்து ஒலித்து நிறைந்து நுரைத்து ஞானத்தின் அமைதிகொண்டன சிறுபாற்குடங்கள். உள்ளே சென்று பெருங்கலத்தில் ஒழிந்தபின் முக்தியின் வெறுமையை அள்ளிக்கொண்டன. அவற்றை கணவர் கைகளில் இருந்து வாங்கி உள்ளே கொண்டுசென்ற ஆய்ச்சியர் முற்றத்தில் விரைந்தோடும் இரு பெண்களை நோக்கி “யாரிவர்? இவ்வேளையில்?” என வியந்து நின்றனர்.

இரவுக்காற்று வீசிப்படிந்த மென்மணல் அலைகள்மேல் காலடித்தடம் பதிய ராதை விரைந்தாள். வெண்மலர் வீழ்ந்து கிடந்த அப்பாதத்தடங்களை மிதிக்கலாகாதென்ற உள்ளுணர்வால் சற்றே விலகி ஓடினாள் லலிதை. அந்த ஊர் கோகுலம் என்றும் அங்கே முன்பொருமுறை கன்றுஅணையும் விழவுக்கு தோழியர் சூழ தான் வந்திருப்பதையும் உணர்ந்தாள். ஊர்நடுவே எழுந்த இரண்டடுக்குக் கூரைகொண்ட புல்வீடு ஊர்த்தலைவர் நந்தகோபனுடையது என்று அவள் உணர்ந்தபோது ராதை அதை நோக்கித்தான் செல்கிறாள் என்றும் அறிந்தாள்.

“இதுதான். இங்குள்ள ஒவ்வொரு கூழாங்கல்லையும் நான் கண்டேன். ஒவ்வொரு மலரின் நோக்கும் என்னை அறிந்துள்ளது. ஒவ்வொரு இலைநுனிச் சொல்லும் என் பெயர் சொல்கிறது” என்றாள் ராதை. பிறிதொரு இல்லமென்னும் நாண் சற்றுமில்லாது மரப்படிகளில் ஏறி பசுஞ்சாணி மெழுகப்பட்ட திண்ணையில் கால்வைத்து வெள்ளிச்சதங்கைகளும் வெண்சங்குவளையல்களும் ஒலிக்க உள்ளே சென்றாள்.

வாசலிலேயே நின்ற லலிதை அவ்விடத்தை அவளும் எங்கோ கண்டதாக உணர்ந்து மெய்விதிர்த்தாள். அன்னைப்பசு நக்கிநக்கித் துவட்டிய ஈரநாத்தடம் படிந்த மென்மயிர் உடலுடன் அதிகாலையில் சிலிர்த்து நின்றிருக்கும் சிறு கன்றென குளிர்வானிலிருந்து எழுந்த தென்றலில் புல்பரப்புகள் படிந்து நின்றிருந்தது கோகுலம். அண்ணாந்து அன்னையின் அடிவயிற்றை நக்கும் இளம்கன்று என இலைகளால் வானைத் துழாவியது நீலக்கடம்பு. அப்பால் சொல்லாக் காதல் தேங்கிய விழிகள் என இலைகள் பளபளத்து நின்றன இரட்டை மருதுகள். அதிகாலைப் பசுஞ்சாணி தெளிக்கப்பட்ட முற்றத்தில் ஓரிரு வெண்மலர்களுடன் ஒரு பொற்தகடென பழுத்த இலை ஒன்று விழுந்து கிடந்தது.

அஞ்சி வளையும் மணிமயில் கழுத்தென ஒரு நொடி. சிலிர்த்துத் தோகை நடுங்கும் மறு நொடி. மலர் உதிரும் கிளையசைவென ஒரு நொடி. வானிலெழும் புள்சிறகென மறு நொடி. வெளித்த வெறும் வானமென ஒரு நொடி. பெருகும் மேகவெள்ளமென மறு நொடி. ஒளியென ஒரு நொடி. அதிலோடும் ஓங்காரமென மறு நொடி. காலமே, இங்கே சுழித்துச் சுழித்து நீ நின்றிருந்தால் அங்கே பிரம்மம் எவ்வண்ணம் தன்னை நிகழ்த்தும்?

மோனம்சூடி அமர்ந்திருந்தது கோகுலம். ஓசைகளை எல்லாம் தானாக்கிக் கொண்டு எழுந்தது பேரமைதி. இலைகள் சலசலக்கும் அமைதி. கன்று ஒன்று அன்னையே என்னும் அமைதி. கலம் ஒன்று முட்டிக்கொள்ளும் அமைதி. மத்துக்கள் வெண்ணையைத் திரட்டும் அமைதி. எங்கோ ஓர் அன்னை தன் மகவைக் கொஞ்சும் அமைதி. அமைதியில் மிதந்தசைந்தன புல்கூரை கவிழ்ந்த இல்லங்கள். அமைதியின்மேல் வழிந்து நிறைந்தது காலையிளவெயில். அமைதியின் மேல் சிறகடித்தன சிறுபுட்கள்.

தென்றல் விரிந்த மென்மணல் பரப்பில் எழுதப்பட்டிருந்தன பறவைமென்விரல் மந்திரங்கள். ஒளிச்சரடான சிலந்தி வலையில் சுழன்று சுழன்று சுழன்று தவித்துக்கொண்டிருந்தது சிறுமலரிதழ்ச் சருகு. ஏன் என்றது தொலைதூரக்காகம். ஆம் ஆம் என்றது அண்மையிலொரு சிட்டு. இங்கே இங்கே என்றது முற்றத்தில் வந்து சிறகடுக்கி அமர்ந்து மஞ்சள்பட்டையிட்ட சிறுமணி விழிகளால் நோக்கிய மைனா. இங்கு நிகழ்ந்துகொண்டிருப்பதென்ன? எந்தப்பெருநாடகத்தின் துளியில் அமர்ந்திருக்கிறேன் அன்னை இடையமர்ந்து விழவு காணச்சென்ற விழிதெளியா கைம்மகவென?

உள்ளே சென்ற ராதையின் உடைவண்ணம் இருளில் மூழ்கியதை கண்டாள். நடுங்கும் காலடிகளுடன் அவளும் உள்ளே சென்றாள். அரையிருளில் தரையிலிட்ட புல்பாயில் மரவுரி விரிப்பின் மீது ஒருக்களித்து விழிவளர்ந்தது வானாளும் விரிநீலம். ஓடும் கால்கள் என ஒன்றிலிருந்து ஒன்று தாவி எழுந்து நின்றன செவ்வல்லியிதழ்ப் பாதங்கள். முக்குற்றி மலரிதழே நகங்கள். தெச்சிப்பூங் கொத்தே விரல்கள். பாதங்களும் புன்னகைக்குமோ? மெல்ல உட்குவிந்து முகம் சுளித்து செல்லம் சிணுங்குமோ? கட்டைவிரல் விலகி உடல் நெளித்து நாணுமோ? நீலக்குவளை மலர்க்குழாயென கணுக்கால். கரண்டையில் எழுந்த சிறுமடிப்பு. நீலம் செறிந்த முட்டுக்கள். இப்புவியாள இரு பாதங்களே போதுமே. ஏன் முழுதாக வந்தாய்?

ராதை அருகமரும்போதுதான் தன்னுள்நிறைந்த மயக்கத்தில் விழிகரைந்துகிடந்த யசோதை விழித்து நோக்கினாள். செவ்வரியோடிய பெரிய விழிகளால் திகைத்து ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருந்த உலர்ந்த இதழ்கள் மெல்லப்பிரிய ஏதோ கேட்கவந்து நின்றுவிட்டாள். ராதை பிறிதொன்றையும் அறியா பேதைவிழி கொண்டவளாக மைந்தனை நோக்கி குனிந்தாள். உலர்ந்த பாலாடை என முதற்தோல் படிந்த சிறுதொடைகள் கவ்விப் பற்றிய சிறுகிண்கிணி மென்குருத்து. மடிந்த மென்வயிறு. மேலே குவிந்த இருமார்பின் தேன்சொட்டுகள். முட்டைக்குள் விழித்த கிளிக்குஞ்சின் இருமணிவிழிகள்.

ஒன்றெனச் சொல்லி நீட்டிய பட்டுநகம் எழுந்த வலக்கைச் சுட்டுவிரல் சுட்டியதை அருந்தவச்சொல்லெனக் கரந்ததோ மடிந்த நான்குவிரல்களின் நகம் அழுந்திய வெண் கைமலர்? இங்கென மரவுரியிலமர்ந்தது இடக்கை. மணிக்கட்டின் மடிப்புகள். மேல்கையின் கதுப்புகள். இதழ்பிரித்து வெளியே எடுத்த புல்லிமலர்த் தோகை அடுக்கென விரல்கொத்து. இங்கு இவ்விழிகளறியும் இவ்வுலகுக்கப்பால் எங்கு நின்று எதையுணர்வேன்? தங்கி நின்று தயங்கி நின்று துளித்தாடும் இச்சிறு உயிர்த்துளி உலைந்தாடி உதிர்ந்துவிடும் கண்ணே. போதும், இவ்வழகுக்குமேல் ஒரு துளியழகையும் தாளாது இப்புவியென்றறிந்தபின் இவ்வளவோடு அமைந்தாயா?

அமுது எனச் சொல்லிக் குவிந்திருந்தது கொழுங்கன்னம். முலை என்று அமைந்திருந்தது செம்மணி வாய்மலர்க்குமிழ். அம் என கீழுதடு அழுந்த, மு என்று மேலுதடு வளைந்து மேலே குவிந்திருக்க அத்தனை குழந்தைவாயும் சொல்லும் அச்சொல்லிலா நீயும் வந்தமைந்திருக்கிறாய்? அய்யோ, நீயுமொரு குழந்தையேதானா? சுட்டுவிரலால் சற்றே தொட்டு வைத்ததுபோன்ற சிறு மூக்கு. பொன்னகையில் கொல்லன் ஊதிஊதியிட்ட இருசிறுதுளைகள். மூச்சிலாடும் கழுத்தின் கதுப்பு. மூடிய இமைகளுக்குள் கனவிலாடும் விழிகள் நெளிந்தமையும் சிறுநடனம். நடக்கும் யானைகளை மூடிய நீலப்பட்டுக் கம்பளங்கள். கருங்குழல் நுரைச்சுருள்கள் விழுந்துகிடக்கும் நீலஎழில்நுதல். காற்றசைக்கும் குழல்பிசிறுகள் நெளிந்தாடி நெளிந்தாடி கொன்று படைத்து உண்டு உலகாண்டன.

படிந்த சிறுபண்டியின் செவ்வரிக்கு நூறுமுறை இறப்பேன். மடிந்த சிறுபுயங்களில் விழுந்த கோடுக்கு ஆயிரம் முறை இறப்பேன். பிரிந்த செவ்விதழ்களுக்குள் பால்விழுது தங்கிய ஈறுநுனி மொட்டுக்கு பல்லாயிரம் முறை இறப்பேன். கண்நீலக்கருமணியே உன் மூக்குவளைவின் இந்த அழுந்தலுக்காக கோடிமுறை இறப்பேன். இவ்வழகின் முழுமுனையின் இப்பால் இங்கிருந்து இவ்வுடல்கொண்டிருக்கும் பெரும்பாவத்தை இறந்திறந்து களைகிறேன். உன்னை அள்ளி உண்டு நானாக்குகிறேன். உன்னைத்தழுவி என்னுள் செலுத்திக்கொள்கிறேன். வாய்திறந்தொரு கருஞ்சுழிப்பெருவெளியாக எழுக. உன் உணவாகி உன்னுள் மறைகிறேன். இருத்தலென்றறியும் இப்பெரும்வதையில் இருந்து இருளில் உதிர்கிறேன். ஆதலென்றாகும் அப்பெருங்களியில் ஏதும் எஞ்சாமலாகிறேன். சொல்வெளி திகைத்து பொருள்வெளி மலைத்து இப்புவியில் திரண்டதோர் பித்துப்பெருவெளியின் விளிம்பில் நின்று கண்ணீர் துளிக்கிறேன்.

செவ்விதழ்க் கீழ்நுனியில் வழிந்து திரண்டு நின்றிருந்த ஒரு துளி அமுதை ராதை தன் சுட்டுவிரல் நுனியால் தொட்டு மெய்விதிர்த்து கண்பனித்தாள். உலைக்கனலில் வைத்து ஊதிக்காய்ச்சிய பொற்சிலை எனச் சிவந்து மூச்சு சீறி அதை தன் செவ்விழிகளால் நோக்கினாள். உலகேழும் எரித்து விண்ணேழும் மிளிரச்செய்து ஊழியிருள் நிறைக்கும் அவ்வொளித்தழலை தன் இதழ்களில் வைத்து “இன்றிருந்தேன், இனியுள்ளேன்” என்று நெடுமூச்செறிந்தாள். அங்கிறந்து எங்கோ பிறந்து அங்கு மீண்டு இங்கெவள்நான் என்று திகைத்தாள். ஓங்கி உள்ளறைந்த பேரலை ஒன்றில் திகைத்தபின் முன் துடித்தெழுந்து இரு கைகளாலும் அந்நீலச்சிறுபாதங்களை அள்ளி ஆழத்தீ கொதித்த முலைக்குவை முகப்பில் வைத்துக்கொண்டு கண்மூடினாள். அவள் கன்னத்தின் வெம்மையில் கண்ணீர்த்துளி உலர்ந்து மறைந்தது.

“உன்னை நான் கனவில் கண்டேன்” என்று யசோதை கனவிலுரையாடுபவள் போலச் சொன்னாள். “உன்னையல்ல, மணலில் பதிந்து சென்றிருந்த உன் பாதங்களை. நீ நடக்கவில்லை, நடனமிட்டுச் சென்றிருந்தாய். அதன் மேல் வெண்மலர்கள் உதிர்ந்துகிடந்தன.” ராதையின் கழுத்திலும் கன்னத்திலும் மயிர்சிலிர்ப்பின் புள்ளிகள் எழுந்தன. “இன்றுகாலை கோலமிடுகையில் என் முற்றத்திலும் அப்பாதத் தடங்கள் விழுந்திருப்பதைக் கண்டேன்.” லலிதை தொழுதபடி கால்தளர்ந்து அமர்ந்து “அவள் பெயர் ராதை. பர்சானபுரியின் ஆயர்குடித்தலைவர் ரிஷபானுவின் மகள்” என்றாள். “மண்ணில் பிறிதொருத்தி இப்பேரெழிலை இனி கொள்ளமுடியாது. நீ வாழ்க!” என்றாள் யசோதை.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

உடல் எத்தனை மகத்தானது. அவனுக்காக அழகுகொள்ளும் வரம் அதற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. நிலையிழந்தாடும் உள்ளமே இரங்கத்தகுந்தவள் நீ. இங்கே நான், இதோ நான், இவ்வண்ணமே நான் என இருத்தலே அறிவிப்பாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் வரம் உனக்கில்லை. உள்ளி உள்ளி ஓராயிரம் தவம்செய்தாலும் ஓதி நூல் ஒருகோடி அறிந்தாலும் இவ்வுடலறிந்ததை அகம் அறியுமா என்ன? உன்னை என் கண்களால் அறிகிறேன். என் உதடுகளால், கைகளால், கன்னங்களால் அறிகிறேன். உன்னை அறிந்து உருகித் துளிக்கின்றன என் மார்பில் பூத்த மலர்க்குவைகள். எங்கோ விழுந்து திகைத்து விழிமலைத்துக் கிடக்கிறது என் இளநெஞ்சம்.


வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைகாசா ஒரு தரப்பு
அடுத்த கட்டுரைகடிதங்கள்