அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் தொலைக்காட்சியில் தோன்றுவதை தவிர்த்தீர்கள் என்று நீங்கள் எழுதியதை வாசித்தேன். அது ஏன்? அதன் மூலம் என்ன லாபம்? உங்கள் எழுத்தை அதிகமான பேரிடம் கொண்டுசெல்வது நல்லதுதானே?
செல்வா
நேற்று விஜய் டிவியில் இருந்து ஓர் இதழாளர் அழைத்தார். அதில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியுமா என்றார். நிகழ்ச்சி 2009 ஆண்டுக்கான சினிமாவைப்பற்றிய கலந்துரையாடல். விவாதம் அல்ல என்றார். 2009 ஆண்டு நான்கடவுள் வெளிவந்திருக்கிறது. ஆகவே நான் பேசினால் நல்லது என்றார்.
நான் மறுத்துவிட்டேன். நான் தொலைக்காட்சியில் தோன்றுவதில்லை என்ற கொள்கை வைத்திருக்கிறேன் என்றும் இதுவரை பேட்டிகூட கொடுத்ததில்லை என்றும் சொன்னேன். ஏன், வீட்டில் தொலைக்காட்சியே கிடையாது. நான் அதைப் பார்ப்பதே இல்லை என்றேன்.
சன் டிவி ஆரம்பிக்கப்பட்டபோதே என் நல்ல நண்பர்கள் அதில் இருந்தார்கள். மிக ஆரம்பத்தில் என் பேட்டிக்காக கேட்டார்கள். அவர்களில் சிலர் எனக்கு பல உதவிகளும் செய்திருக்கிறார்கள். நான் ஆர்வம் காட்டவில்லை. அது முதல் பேட்டிகளுக்காக கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இன்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களில் நல்ல நண்பர்கள் உள்ளனர். ஆனால் நான் ஒத்துக்கொள்ளவில்லை.
அதேசமயம், நான் எழுதும் படங்களுக்காக அவற்றின் விளம்பரங்களில் தோன்றி சில வரிகளை பாராட்டாகச் சொல்வது உண்டு. அது அந்த தொழிலின் கட்டாயம். அங்கே சென்றபின் அதில் நிபந்தனைகளை போடமுடியாது. அப்போதுகூட கூடுமானவரை அவற்றை தவிர்த்து விடுவேன் ‘நான்கடவுள்’ சம்பந்தமான உரையாடல்களுக்கு நான் செல்லவேயில்லை.
ஏன், எழுத்தாளனுக்கு அவை விளம்பரம் தானே? விளம்பரம் நல்லது அல்லவா? தொடர்ச்சியாக பலர் இப்படி கேட்பதுண்டு. இதுசார்ந்து எனக்கும் திட்டவட்டமான புரிதல்கள் இல்லை. பலவகையாக குழம்பிப்போய்த்தான் இருக்கிறேன்.
நடைமுறை சார்ந்து இவ்வாறு வகுத்துக்கொள்கிறேன். தமிழில் இப்போது நடக்கும் பண்பாட்டு உரையாடல்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று பெரும்பிரவாகமாக உள்ள ஒட்டுமொத்த உரையாடல். அது சினிமா, தொலைக்காட்சி, இதழ்கள் ஆகியவற்றினூடாக பிரம்மாண்டமாக நடக்கிறது. முழுக்க முழுக்க கேளிக்கை மற்றும் அன்றாட அரசியல் சார்ந்தது அது. சினிமா, சினிமா, சினிமா, அரசியல், மீண்டும் சினிமா என்பதே அதன் சூத்திரம். முழுக்க முழுக்க வணிகநோக்குடன் இது நடத்தப்படுகிறது.
இன்னொன்று சிற்றோடையாக உள்ள ஓரு தனியுரையாடல். இலக்கியம், அரசியல்க் கோட்பாடுகள்,சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றைச் சார்ந்தது இது. தீவிரமானது, அர்ப்பணிப்புள்ளவர்களால் நடத்தப்படுவது. அவர்களுக்குள் ஆயிரம் சிக்கல்கள் மோதல்கள் இருக்கலாம், ஆனால் அவர்களனைவருமே சமூகத்துடன் உரையாட விழைகிறார்கள். நெடுங்காலம் இது சிற்றிதழ்கள், சிறிய அரங்குகள் சார்ந்து மிகச்சிறுபான்மையினருக்காக மட்டுமே நடத்தப்பட்டது. பெரும்போக்கு பண்பாட்டால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இயங்கி வந்தது.
தொண்ணூறுகள் வரை இந்த இரு போக்குகளும் இரு தனிவழிகளாக, ஒன்றை ஒன்று முற்றாகவே புறக்கணிப்பவையாக, இருந்தன. சிற்றிதழ்கள் பெரும்பண்பாட்டின் எல்லா கூறுகளையும் முழுமையாகவே நிராகரித்தன. சிற்றிதழ்களில் ஒரு வணிகசினிமாவைப்பற்றிய பேச்சு என்பது நினைத்தே பார்க்க முடியாததாக இருந்தது. 1986ல் எஸ்.வி.ராஜதுரை நடத்திய இனி என்ற இதழில் சிலுவைப்பிச்சை என்ற பேரில் தியடோர் பாஸ்கரன் சினிமாப்பாடல்களைப்பற்றி எழுதிய ஒரு கட்டுரை அக்காலகட்டத்தில் பரபரப்பாக நிராகரிக்கப்பட்டது.
தொண்ணூறுகளின் இறுதியில் இந்த சிறு போக்குகளுக்கு மேலும் கவனம் கிடைக்க ஆரம்பித்தது. பெரிய மைய ஊடகங்களில் சிறிய ஒரு இடம் இவற்றுக்கு அளிக்கப்பட்டது. அந்தச் சாத்தியத்தை பயன்படுத்திக்கொண்டு இது சட்டென்று கவனம் பெற்று தன் இருப்பை மறுக்க முடியாததாக நிறுவிக்கொண்டது.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் பெரிய ஊடகங்களுடன் சிற்றூடகங்கள் முயங்கும் நிலை உருவானது. சுபமங்களா, புதியபார்வை போன்ற இடைநிலை இதழ்கள் உருவாயின. வேலிகள் உடைபட்டன. பெரிய ஊடகங்களில் தீவிர இலக்கியத்தை அறிமுகம் செய்யலாம் என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டது. தினமணியின் தமிழ்மணி மூலம் உருவான இந்த போக்கு பின்னர் எல்லா இதழ்களுக்கும் பரவியது. பெரிய இதழ்களின் கடும் எதிரியாக விளங்கிய சுந்தர ராமசாமிகூட அவற்றில் எழுத முற்பட்டார்.
என் முதல்சிறுகதைத் தொகுதியில் என்னால் பெரிய இதழ்களில் எழுத முடியாது என்று சொல்லியிருந்தேன். ஆனால் இந்தியா டுடே போன்ற இதழ்கள் அவ்வெண்ணத்தை மாற்ற வைத்தன. இந்தியா டுடெ வெளியிட்ட இலக்கிய மலர்கள் தரமான இலக்கியத்தை அந்த தரம் குறையாமல் பிரபல வாசகர்களிடம் கொண்டு சென்று சேர்த்தன. தமிழில் அது பெரிய, நம்பிக்கையூட்டும் தொடக்கம். அதைத்தொடர்ந்து குமுதம் கூட தரமான இலக்கிய இணைப்புகளை வழங்கியது. ஒரு மலரின் அட்டையில் நான் பிரசுரிக்கப்பட்டிருந்தேன்.
இது பொதுப்பண்பாட்டு உரையாடலை நிகழ்த்திய பெரிய ஊடகங்களின் வேலிகளை பிரித்து மாற்று உரையாடல்களை நிகழ்த்திய சிற்றிதழ்கள் உள்ளே நுழைந்ததாக அமைந்தது. இன்றுள்ள பரவலான வாசகர்த்தளம் அவ்வாறு உருவானதே. இன்று புத்தகக் கண்காட்சிகள் நடப்பதற்கும் நூல்கள் விற்பதற்கும் காரணம் அந்த திருப்புமுனைதான். அதை உருவாக்கிய பாவை சந்திரன், மாலன், ஐராவதம் மகாதேவன், வாசந்தி, கோமல்சுவாமிநாதன், மணா போன்ற இதழாளர்களுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்
அனால் பத்து வருடங்களுக்குள் சிற்றிதழ்களின் வேலிகள் உடைபட்டன. சிற்றிதழாளர்கள் புதிய முக்கியத்துவத்தை ரசித்து பொதுப்போக்குக்குள் இறங்க முயன்றார்கள். பெரிய இதழ்களின் நகல்களாக சிற்றிதழ்கள் மாறின. பொதுப்பண்பாட்டுக்குரிய எல்லா விஷயங்களும் இங்கே வந்தன. இன்று சிற்றிதழ்கள் முன்வைப்பதற்கு மாற்றுப்பண்பாடு ஏதும் உண்டா என்று அஞ்சும் நிலை உருவாகியிருக்கிறது. குமுதத்தில் என்ன இருக்கிறதோ அதையே நாம் நம் சிற்றிதழ்களிலும் காண்கிறோம். ஆம், சினிமா சினிமா சினிமா அரசியல் மீண்டும் சினிமா என்ற வெற்றிபெற்ற தமிழ் வாய்ப்பாடு!
இந்தப்போக்குக்கு எதிராக நான் எப்போதுமே கடுமையான விமரிசனங்களை முன்வைத்து வருகிறேன். ஆழமான சுயவிமரிசனமும் செய்து கொள்கிறேன். 2003ல் மு.கருணாநிதி அவர்களை சில எழுத்தாளர்கள் வரம்பு மீறி புகழ்ந்ததை நான் விமரிசனம் செய்தபோதே இந்த வரம்பைப்பற்றி கடுமையாகக் குறிப்பிட்டேன். அதன் பின்னர் எல்லா சிற்றிதழ்களையும் இந்த அணுகுமுறையுடன் மட்டுமே அணுகி வருகிறேன். இன்று இந்த எச்சரிக்கைகள் அனேகமாக காலியாகி விட்டிருக்கின்றன. சிற்றிதழாளர்களில்பலர் பொதுப்பண்பாட்டு உரையாடலின் பகுதிகளாக ஆக மாறுவதற்காக வரிசையில் நிற்கிறார்கள்.
பொதுப்பண்பாடு சிற்றிதழ் சார்ந்த பண்பாட்டு அம்சங்களுக்கு இடமளித்த காலம் போய்விட்டிருக்கிறது. இங்கிருந்து சிலரை தேர்வுசெய்து அவர்களை தாங்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கும் பொது உரையாடலின் பங்களிப்பாளர்களாக ஆக்குகிறார்கள். அதாவது அவரக்ள் விரும்புவதைச் சொல்லக்கூடியவர்களாக. அவர்களின் நிகழ்ச்சியில் நடிப்பவர்களாக. அவர்களின் ஆட்டத்தை ஆடுபவர்களாக.
உதாரணமாக விஜய் டிவியின் அழைப்பு. அவர்கள் திரும்பத்திரும்ப நிகழ்த்தும் சினிமாச்சமையல் நிகழ்ச்சிக்கு ஓரு தீவிர எழுத்தாளர் தேவைப்படுகிறார். வேறுவேறு வடிவில் சினிமாவைப்பற்றித்தான் பேசுகிறார்கள். இது இன்னொரு வடிவம், அவ்வளவுதான்.
தொலைக்காட்சியை நான் ஏன் அஞ்சுகிறேன் என்றால் அது ஏற்கனவே நம் வாரஇதழ்ச்சூழலில் இருந்து வந்த விஷயங்களை பலமடங்கு பிரம்மாண்டமாக ஆக்குகிறது என்பதனால்தான். சன் டிவி என்பது ஆயிரம் குமுதங்களுக்குச் சமம். எல்லா டிவிகளும் சேர்ந்து ஒரு சன் டிவி ஆகியுள்ளன இன்று. அவற்றில் மீண்டும் மீண்டும் வணிக சினிமா.
நான் தொலைக்காட்சியில் தோன்ற மறுப்பது அதை அஞ்சியே. தொலைக்காட்சி மேலோட்டமான பிரம்மாண்டமான ஓர் உரையாடலை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது. பார்க்கும் எவருக்கும் எதிலும் ஆர்வமில்லை. அது ஒரு பெரிய திருவிழா. அதில் ஒரு குரலாக இலக்கியமும் தத்துவமும் ஒலிக்கும்போது அதன் மாற்றுச்சாத்தியம் முற்றாக இல்லாமலாக்கப்படுகிறது. அதுவும் ஒரு வேடிக்கையாக, அரட்டைக்கான விஷயமாக மாற்றப்படுகிறது. சில விஷயங்கள் கொஞ்சம் அபூர்வமாகவே இருந்தாகவேண்டும். ஒரு தடையைத்தாண்டி தேடி வருபவர்களுக்கு மட்டுமே அவை கிடைக்கவேண்டும்.
2000த்தில் நான் ஆனந்த விகடனில் ‘சங்கசித்திரங்கள்’ எழுதினேன். அது என்னுடைய சிறந்த ஆக்கங்களில் ஒன்று. இன்றும் அது முக்கியமான நூலாகவே உள்ளது. விகடனின் வழக்கமான அரட்டைத்தனத்தில் இருந்து முற்றாகவே மாறுபட்டிருந்தது அது. அன்று அதை சோதனைசெய்து பார்க்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. ஆனால் சீக்கிரமே விகடன் அந்த தளத்தில் இருந்து வெகுவாக பின்னகர்ந்தது. விகடன் ஒவ்வொருநாளும் மேலும் மேலும் சினிமாபக்கங்களை கூட்டிக்கொண்டே செல்கிறது.
2004ல் குமுதத்தில் நான் ஒரு தொடர் எழுதினேன். குமுதம் வாசகர்கள் வாசிக்கும்படியான அமைப்புக்குள் சில தீவிரமான விஷயங்களை அதில் எழுதலாமென எண்ணியிருந்தேன். அதாவது குமுதத்தின் அரட்டை என்ற வழடிவுக்குள் என்னுடைய வழக்கமான விஷயங்களைச் சொல்ல முடியுமா என்று பார்த்தேன். சூ·பிசம் குறித்தும் இந்திய தத்துவம் குறித்தும் மேலை இலக்கியம் குறித்தும் பல காத்திரமான கட்டுரைகளை எழுதினேன். அவையெல்லாம் மிகவும் சுருக்கப்பட்டு திரிக்கப்பட்டு அவற்றில் வெளியாயின. குமுதத்தின் அரட்டைக்குறிப்பு என்ற வடிவுக்குள் அது அடங்கவில்லை. ஆரம்பத்தில் எளிய குறிப்புகளை அளித்தபின் நான் எழுதிய எளிய நடையிலான தீவிரமான கட்டுரைகளை அதன் வாசகர்கள் நிராகரித்துவிட்டார்கள். தொடர் நின்றது.
அந்த அனுபவம் எனக்கு ஒரு பாடம். ஓர் ஊடகத்தின் பொதுவான மனநிலைக்கு அப்பால் சென்று அதில் எதையும் எழுதிவிடமுடியாது என்று அறிந்தேன். அது எழுதும் விஷயத்தின் தீவிரத்தைக் குறைத்து அதன் மீது உருவாகும் வாசக கவனத்தையும் இல்லாமல் ஆக்கி விடுகிறது. ஏற்கனவே இது தீவிரமானது என்ற எண்ணத்தை அளித்து அதற்கு தயாராக உள்ள வாசகர்களை உள்ளே இழுப்பதே சிறந்தது. அதன்பின் வார இதழ்களில் எழுதும் வாய்ப்புகளை நான் ஏற்கவில்லை.
இணையத்தின் மீதும் அந்த அவநம்பிக்கை எனக்கு உள்ளது. இங்கும் வணிக சினிமா, அன்றாட அரசியல் வம்புகள், சண்டைகள் ஆகியவையே அதிகம். அதாவது அரட்டை. மலையாளிகளுக்கு தமிழ்ச்சமூகத்துக்கு அரட்டை அடிப்பதில் உள்ள ஈடுபாடு மிதமிஞ்சியது. உலகத்தில் எங்கும் அப்படித்தான். ஆனால் இங்கே அது மிக அதிகம். மக்களுடன் அரட்டையடிப்பவர்களே இங்கே பெரிய நட்சத்திரங்களாக பொது வெளியில் உள்ளனர். பாலகுமாரன் முதல் பெப்ஸி உமா வரை. ஆனால் இணையம் பிற நிறுவனங்களின் கட்டுக்குள் இல்லை. இந்தச் சுதந்திரம் நமக்கான மாற்று இடத்தை உருவாக்கி மாற்று உரையாடலை முன்வைப்பதற்கு பெரிதும் உதவுகிறது.
அந்தவகையில்தான் இணையத்தை பயன்படுத்தி வருகிறேன். இதில் மிக அதிகமானபேர் உள்ளே வந்த தருணத்தில், விகடன் உருவாக்கிய சர்ச்சையின்போது, கனமான கட்டுரைகளை போட்டு தரமான வாசகர்கள் மட்டுமே உள்ளே வந்தால் போதும் என்ற தடையை நான் உருவாக்கியது அதனால்தான். இன்றுவரை இந்த போக்கே இந்த இணையதளத்தில் உள்ளது.
தமிழின் பொதுப்போக்கான மாபெரும் அரட்டையில் சலிப்புற்று வேறு ஒன்றுக்காக ஏங்கும் வாசகர்களே சிறுபோக்கின் ஆதரவாளார்களாக இருக்க முடியும். அவர்களுக்கு மாற்றுச் சாத்தியத்தை முன்வைப்பதாகவே நம் முயற்சிகள் இருக்கவேண்டும். ஆகவே வேறுபாடு ஒவ்வொரு முறையும் அழுத்திக்காட்டப்பட வேண்டும். இது வேறு போக்கு, இதற்கான தயாரிப்புகள் வேறு என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். வேறுபாடுகளை அழிக்கும் எந்தப்போக்கும் ஆபத்தானது.
அதேசமயம் சென்ற காலகட்டங்களில் சிற்றிதழாளர்கள் தங்கள் தனித்தன்மையை தக்க வைக்கும் பொருட்டு உருவாக்கிய மூடிய இயல்பை இக்காலகட்டத்தில் தொடர வேண்டியதில்லை என்றும் நினைக்கிறேன். சமூகத்தின் அத்தனை தளங்களையும் கணக்கில் கொண்டு விரியும் கலைச்செயல்பாடும் ஆய்வுநோக்குமே இன்றைய தேவைகள்.
அதாவது உங்கள் கேள்விக்குப் பதில் இதுவே. வாசகர்களிடம் செல்வதல்ல வாசகர்களை வரவழைப்பதே இலக்கியவாதியின் பணி. வாசகர்களுக்காக தன்னை மாற்றிக்கொள்வதல்ல, தன் வாசகர்களை மாற்றுவதே அவன் வேலை.
ஜெ
மறுபிரசுரம் /முதற்பிரசுரம் 2010 ஜூலை