«

»


Print this Post

மைய ஓட்டமும் மாற்று ஓட்டமும்


அன்புள்ள ஜெயமோகன்,

 

நீங்கள் தொலைக்காட்சியில் தோன்றுவதை தவிர்த்தீர்கள் என்று நீங்கள் எழுதியதை வாசித்தேன். அது ஏன்? அதன் மூலம் என்ன லாபம்? உங்கள் எழுத்தை அதிகமான பேரிடம் கொண்டுசெல்வது நல்லதுதானே?

 

செல்வா

 

நேற்று விஜய் டிவியில் இருந்து ஓர் இதழாளர் அழைத்தார். அதில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியுமா என்றார். நிகழ்ச்சி 2009 ஆண்டுக்கான சினிமாவைப்பற்றிய கலந்துரையாடல். விவாதம் அல்ல என்றார். 2009 ஆண்டு நான்கடவுள் வெளிவந்திருக்கிறது. ஆகவே நான் பேசினால் நல்லது என்றார்.

 

நான் மறுத்துவிட்டேன். நான் தொலைக்காட்சியில் தோன்றுவதில்லை என்ற கொள்கை வைத்திருக்கிறேன் என்றும் இதுவரை பேட்டிகூட கொடுத்ததில்லை என்றும் சொன்னேன். ஏன், வீட்டில் தொலைக்காட்சியே கிடையாது. நான் அதைப் பார்ப்பதே இல்லை என்றேன்.

 

சன் டிவி ஆரம்பிக்கப்பட்டபோதே என் நல்ல நண்பர்கள் அதில் இருந்தார்கள். மிக ஆரம்பத்தில் என் பேட்டிக்காக கேட்டார்கள். அவர்களில் சிலர் எனக்கு பல உதவிகளும் செய்திருக்கிறார்கள். நான் ஆர்வம் காட்டவில்லை. அது முதல் பேட்டிகளுக்காக கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இன்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களில் நல்ல நண்பர்கள் உள்ளனர். ஆனால் நான் ஒத்துக்கொள்ளவில்லை.

 

அதேசமயம், நான் எழுதும் படங்களுக்காக அவற்றின் விளம்பரங்களில் தோன்றி சில வரிகளை பாராட்டாகச் சொல்வது உண்டு. அது அந்த தொழிலின் கட்டாயம். அங்கே சென்றபின் அதில் நிபந்தனைகளை போடமுடியாது. அப்போதுகூட கூடுமானவரை அவற்றை தவிர்த்து விடுவேன் ‘நான்கடவுள்’ சம்பந்தமான உரையாடல்களுக்கு நான் செல்லவேயில்லை.

 

ஏன், எழுத்தாளனுக்கு அவை விளம்பரம் தானே? விளம்பரம் நல்லது அல்லவா? தொடர்ச்சியாக பலர் இப்படி கேட்பதுண்டு.  இதுசார்ந்து எனக்கும் திட்டவட்டமான புரிதல்கள் இல்லை. பலவகையாக குழம்பிப்போய்த்தான் இருக்கிறேன்.

 

நடைமுறை சார்ந்து இவ்வாறு வகுத்துக்கொள்கிறேன். தமிழில் இப்போது நடக்கும் பண்பாட்டு உரையாடல்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று பெரும்பிரவாகமாக உள்ள ஒட்டுமொத்த உரையாடல். அது சினிமா, தொலைக்காட்சி, இதழ்கள் ஆகியவற்றினூடாக பிரம்மாண்டமாக நடக்கிறது. முழுக்க முழுக்க கேளிக்கை மற்றும் அன்றாட அரசியல் சார்ந்தது அது. சினிமா, சினிமா, சினிமா, அரசியல், மீண்டும் சினிமா என்பதே அதன் சூத்திரம். முழுக்க முழுக்க வணிகநோக்குடன் இது நடத்தப்படுகிறது.

 

இன்னொன்று சிற்றோடையாக உள்ள ஓரு தனியுரையாடல். இலக்கியம், அரசியல்க் கோட்பாடுகள்,சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றைச் சார்ந்தது இது. தீவிரமானது, அர்ப்பணிப்புள்ளவர்களால் நடத்தப்படுவது. அவர்களுக்குள் ஆயிரம் சிக்கல்கள் மோதல்கள் இருக்கலாம், ஆனால் அவர்களனைவருமே சமூகத்துடன் உரையாட விழைகிறார்கள். நெடுங்காலம் இது சிற்றிதழ்கள், சிறிய அரங்குகள் சார்ந்து மிகச்சிறுபான்மையினருக்காக மட்டுமே நடத்தப்பட்டது. பெரும்போக்கு பண்பாட்டால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இயங்கி வந்தது.

 

தொண்ணூறுகள் வரை இந்த இரு போக்குகளும் இரு தனிவழிகளாக, ஒன்றை ஒன்று முற்றாகவே புறக்கணிப்பவையாக, இருந்தன.  சிற்றிதழ்கள் பெரும்பண்பாட்டின் எல்லா கூறுகளையும் முழுமையாகவே நிராகரித்தன. சிற்றிதழ்களில் ஒரு வணிகசினிமாவைப்பற்றிய பேச்சு என்பது நினைத்தே பார்க்க முடியாததாக இருந்தது. 1986ல் எஸ்.வி.ராஜதுரை நடத்திய இனி என்ற இதழில் சிலுவைப்பிச்சை என்ற பேரில் தியடோர் பாஸ்கரன் சினிமாப்பாடல்களைப்பற்றி எழுதிய ஒரு கட்டுரை அக்காலகட்டத்தில் பரபரப்பாக நிராகரிக்கப்பட்டது.

 

தொண்ணூறுகளின் இறுதியில் இந்த சிறு போக்குகளுக்கு மேலும் கவனம் கிடைக்க ஆரம்பித்தது. பெரிய மைய ஊடகங்களில் சிறிய ஒரு இடம் இவற்றுக்கு அளிக்கப்பட்டது. அந்தச் சாத்தியத்தை பயன்படுத்திக்கொண்டு இது சட்டென்று கவனம் பெற்று தன் இருப்பை மறுக்க முடியாததாக நிறுவிக்கொண்டது.

 

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் பெரிய ஊடகங்களுடன் சிற்றூடகங்கள் முயங்கும் நிலை உருவானது. சுபமங்களா, புதியபார்வை போன்ற இடைநிலை இதழ்கள் உருவாயின. வேலிகள் உடைபட்டன. பெரிய ஊடகங்களில் தீவிர இலக்கியத்தை அறிமுகம் செய்யலாம் என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டது. தினமணியின் தமிழ்மணி மூலம் உருவான இந்த போக்கு பின்னர் எல்லா இதழ்களுக்கும் பரவியது. பெரிய இதழ்களின் கடும் எதிரியாக விளங்கிய சுந்தர ராமசாமிகூட அவற்றில் எழுத முற்பட்டார்.

 

என் முதல்சிறுகதைத் தொகுதியில் என்னால் பெரிய இதழ்களில் எழுத முடியாது என்று சொல்லியிருந்தேன். ஆனால் இந்தியா டுடே போன்ற இதழ்கள் அவ்வெண்ணத்தை மாற்ற வைத்தன. இந்தியா டுடெ வெளியிட்ட இலக்கிய மலர்கள் தரமான இலக்கியத்தை அந்த தரம் குறையாமல் பிரபல வாசகர்களிடம் கொண்டு சென்று சேர்த்தன. தமிழில் அது பெரிய, நம்பிக்கையூட்டும் தொடக்கம். அதைத்தொடர்ந்து குமுதம் கூட தரமான இலக்கிய இணைப்புகளை வழங்கியது. ஒரு மலரின் அட்டையில் நான் பிரசுரிக்கப்பட்டிருந்தேன்.

 

இது பொதுப்பண்பாட்டு உரையாடலை நிகழ்த்திய பெரிய ஊடகங்களின் வேலிகளை பிரித்து மாற்று உரையாடல்களை நிகழ்த்திய சிற்றிதழ்கள் உள்ளே நுழைந்ததாக அமைந்தது. இன்றுள்ள பரவலான வாசகர்த்தளம் அவ்வாறு உருவானதே. இன்று புத்தகக் கண்காட்சிகள் நடப்பதற்கும் நூல்கள் விற்பதற்கும் காரணம் அந்த திருப்புமுனைதான். அதை உருவாக்கிய பாவை சந்திரன், மாலன், ஐராவதம் மகாதேவன், வாசந்தி, கோமல்சுவாமிநாதன், மணா போன்ற இதழாளர்களுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்

 

அனால் பத்து வருடங்களுக்குள் சிற்றிதழ்களின் வேலிகள் உடைபட்டன. சிற்றிதழாளர்கள் புதிய முக்கியத்துவத்தை ரசித்து பொதுப்போக்குக்குள் இறங்க முயன்றார்கள். பெரிய இதழ்களின் நகல்களாக சிற்றிதழ்கள் மாறின. பொதுப்பண்பாட்டுக்குரிய எல்லா விஷயங்களும் இங்கே வந்தன. இன்று சிற்றிதழ்கள் முன்வைப்பதற்கு மாற்றுப்பண்பாடு ஏதும் உண்டா என்று அஞ்சும் நிலை உருவாகியிருக்கிறது. குமுதத்தில் என்ன இருக்கிறதோ அதையே நாம் நம் சிற்றிதழ்களிலும் காண்கிறோம். ஆம், சினிமா சினிமா சினிமா அரசியல் மீண்டும் சினிமா என்ற வெற்றிபெற்ற தமிழ் வாய்ப்பாடு!

 

இந்தப்போக்குக்கு எதிராக நான் எப்போதுமே கடுமையான விமரிசனங்களை முன்வைத்து வருகிறேன். ஆழமான சுயவிமரிசனமும் செய்து கொள்கிறேன். 2003ல் மு.கருணாநிதி அவர்களை சில எழுத்தாளர்கள் வரம்பு மீறி புகழ்ந்ததை நான் விமரிசனம் செய்தபோதே இந்த வரம்பைப்பற்றி கடுமையாகக் குறிப்பிட்டேன். அதன் பின்னர் எல்லா சிற்றிதழ்களையும்  இந்த அணுகுமுறையுடன் மட்டுமே அணுகி வருகிறேன். இன்று இந்த எச்சரிக்கைகள் அனேகமாக காலியாகி விட்டிருக்கின்றன. சிற்றிதழாளர்களில்பலர் பொதுப்பண்பாட்டு உரையாடலின் பகுதிகளாக ஆக மாறுவதற்காக வரிசையில் நிற்கிறார்கள்.

 

பொதுப்பண்பாடு சிற்றிதழ் சார்ந்த பண்பாட்டு அம்சங்களுக்கு இடமளித்த காலம் போய்விட்டிருக்கிறது. இங்கிருந்து சிலரை தேர்வுசெய்து அவர்களை தாங்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கும் பொது உரையாடலின் பங்களிப்பாளர்களாக ஆக்குகிறார்கள். அதாவது அவரக்ள் விரும்புவதைச் சொல்லக்கூடியவர்களாக. அவர்களின் நிகழ்ச்சியில் நடிப்பவர்களாக. அவர்களின் ஆட்டத்தை ஆடுபவர்களாக.

 

உதாரணமாக விஜய் டிவியின் அழைப்பு. அவர்கள் திரும்பத்திரும்ப நிகழ்த்தும் சினிமாச்சமையல் நிகழ்ச்சிக்கு ஓரு தீவிர எழுத்தாளர் தேவைப்படுகிறார். வேறுவேறு வடிவில் சினிமாவைப்பற்றித்தான் பேசுகிறார்கள். இது இன்னொரு வடிவம், அவ்வளவுதான்.

 

தொலைக்காட்சியை நான் ஏன் அஞ்சுகிறேன் என்றால் அது ஏற்கனவே நம் வாரஇதழ்ச்சூழலில் இருந்து வந்த விஷயங்களை பலமடங்கு பிரம்மாண்டமாக ஆக்குகிறது என்பதனால்தான். சன் டிவி என்பது ஆயிரம் குமுதங்களுக்குச் சமம். எல்லா டிவிகளும் சேர்ந்து ஒரு சன் டிவி ஆகியுள்ளன இன்று. அவற்றில் மீண்டும் மீண்டும் வணிக சினிமா.   

 

நான் தொலைக்காட்சியில் தோன்ற மறுப்பது அதை அஞ்சியே. தொலைக்காட்சி மேலோட்டமான பிரம்மாண்டமான ஓர் உரையாடலை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது. பார்க்கும் எவருக்கும் எதிலும்  ஆர்வமில்லை. அது ஒரு பெரிய திருவிழா. அதில் ஒரு குரலாக இலக்கியமும் தத்துவமும் ஒலிக்கும்போது அதன் மாற்றுச்சாத்தியம் முற்றாக இல்லாமலாக்கப்படுகிறது. அதுவும் ஒரு வேடிக்கையாக, அரட்டைக்கான விஷயமாக மாற்றப்படுகிறது.  சில விஷயங்கள் கொஞ்சம் அபூர்வமாகவே இருந்தாகவேண்டும். ஒரு தடையைத்தாண்டி தேடி வருபவர்களுக்கு மட்டுமே அவை கிடைக்கவேண்டும்.

 

2000த்தில் நான் ஆனந்த விகடனில் ‘சங்கசித்திரங்கள்’ எழுதினேன். அது என்னுடைய சிறந்த ஆக்கங்களில் ஒன்று. இன்றும் அது முக்கியமான நூலாகவே உள்ளது. விகடனின் வழக்கமான அரட்டைத்தனத்தில் இருந்து முற்றாகவே மாறுபட்டிருந்தது அது. அன்று அதை சோதனைசெய்து பார்க்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. ஆனால் சீக்கிரமே விகடன் அந்த தளத்தில் இருந்து வெகுவாக பின்னகர்ந்தது. விகடன் ஒவ்வொருநாளும் மேலும் மேலும் சினிமாபக்கங்களை கூட்டிக்கொண்டே செல்கிறது. 

 

2004ல் குமுதத்தில் நான் ஒரு தொடர் எழுதினேன். குமுதம் வாசகர்கள் வாசிக்கும்படியான அமைப்புக்குள் சில தீவிரமான விஷயங்களை அதில் எழுதலாமென எண்ணியிருந்தேன். அதாவது குமுதத்தின் அரட்டை என்ற வழடிவுக்குள் என்னுடைய வழக்கமான விஷயங்களைச் சொல்ல முடியுமா என்று பார்த்தேன். சூ·பிசம் குறித்தும் இந்திய தத்துவம் குறித்தும் மேலை இலக்கியம் குறித்தும் பல காத்திரமான கட்டுரைகளை எழுதினேன். அவையெல்லாம் மிகவும் சுருக்கப்பட்டு திரிக்கப்பட்டு அவற்றில் வெளியாயின.  குமுதத்தின் அரட்டைக்குறிப்பு என்ற வடிவுக்குள் அது அடங்கவில்லை. ஆரம்பத்தில் எளிய குறிப்புகளை அளித்தபின் நான் எழுதிய எளிய நடையிலான தீவிரமான கட்டுரைகளை அதன் வாசகர்கள் நிராகரித்துவிட்டார்கள். தொடர் நின்றது.

 

அந்த அனுபவம் எனக்கு ஒரு பாடம். ஓர் ஊடகத்தின் பொதுவான மனநிலைக்கு அப்பால் சென்று அதில் எதையும் எழுதிவிடமுடியாது என்று அறிந்தேன். அது எழுதும் விஷயத்தின் தீவிரத்தைக் குறைத்து அதன் மீது உருவாகும் வாசக கவனத்தையும் இல்லாமல் ஆக்கி விடுகிறது. ஏற்கனவே இது தீவிரமானது என்ற எண்ணத்தை அளித்து அதற்கு தயாராக உள்ள வாசகர்களை  உள்ளே இழுப்பதே சிறந்தது. அதன்பின் வார இதழ்களில் எழுதும் வாய்ப்புகளை நான் ஏற்கவில்லை.

 

இணையத்தின் மீதும் அந்த அவநம்பிக்கை எனக்கு உள்ளது. இங்கும் வணிக சினிமா, அன்றாட அரசியல் வம்புகள், சண்டைகள் ஆகியவையே அதிகம். அதாவது அரட்டை. மலையாளிகளுக்கு தமிழ்ச்சமூகத்துக்கு அரட்டை அடிப்பதில் உள்ள ஈடுபாடு மிதமிஞ்சியது. உலகத்தில் எங்கும் அப்படித்தான். ஆனால் இங்கே அது மிக அதிகம்.  மக்களுடன் அரட்டையடிப்பவர்களே இங்கே பெரிய நட்சத்திரங்களாக பொது வெளியில் உள்ளனர். பாலகுமாரன் முதல் பெப்ஸி உமா வரை. ஆனால் இணையம் பிற நிறுவனங்களின் கட்டுக்குள் இல்லை. இந்தச் சுதந்திரம் நமக்கான மாற்று இடத்தை உருவாக்கி மாற்று உரையாடலை முன்வைப்பதற்கு பெரிதும் உதவுகிறது.

 

அந்தவகையில்தான் இணையத்தை பயன்படுத்தி வருகிறேன். இதில் மிக அதிகமானபேர் உள்ளே வந்த தருணத்தில், விகடன் உருவாக்கிய சர்ச்சையின்போது, கனமான கட்டுரைகளை போட்டு தரமான வாசகர்கள் மட்டுமே உள்ளே வந்தால் போதும் என்ற தடையை நான் உருவாக்கியது அதனால்தான். இன்றுவரை இந்த போக்கே இந்த இணையதளத்தில் உள்ளது.

 

தமிழின் பொதுப்போக்கான மாபெரும் அரட்டையில் சலிப்புற்று வேறு ஒன்றுக்காக ஏங்கும் வாசகர்களே சிறுபோக்கின் ஆதரவாளார்களாக இருக்க முடியும். அவர்களுக்கு மாற்றுச் சாத்தியத்தை முன்வைப்பதாகவே நம் முயற்சிகள் இருக்கவேண்டும். ஆகவே வேறுபாடு ஒவ்வொரு முறையும் அழுத்திக்காட்டப்பட வேண்டும். இது வேறு போக்கு, இதற்கான தயாரிப்புகள் வேறு என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். வேறுபாடுகளை அழிக்கும் எந்தப்போக்கும் ஆபத்தானது.

 

அதேசமயம் சென்ற காலகட்டங்களில் சிற்றிதழாளர்கள் தங்கள் தனித்தன்மையை தக்க வைக்கும் பொருட்டு உருவாக்கிய மூடிய இயல்பை இக்காலகட்டத்தில் தொடர வேண்டியதில்லை என்றும் நினைக்கிறேன். சமூகத்தின் அத்தனை தளங்களையும் கணக்கில் கொண்டு விரியும் கலைச்செயல்பாடும் ஆய்வுநோக்குமே இன்றைய தேவைகள்.

 

அதாவது உங்கள் கேள்விக்குப் பதில் இதுவே. வாசகர்களிடம் செல்வதல்ல வாசகர்களை வரவழைப்பதே இலக்கியவாதியின் பணி. வாசகர்களுக்காக தன்னை மாற்றிக்கொள்வதல்ல, தன் வாசகர்களை மாற்றுவதே அவன் வேலை.

 

ஜெ

மறுபிரசுரம் /முதற்பிரசுரம் 2010 ஜூலை

தொடர்புடைய பதிவுகள்

 • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/6057

19 comments

Skip to comment form

 1. kuppan_yahoo

  நல்ல கட்டுரை ஜெமோ.

  சிற்றிதழ்களின் குறிகொள்களும் நீங்கள் கூறுவது போல இன்று மாறி வருகிறது. பதிவர்களின் நோக்கம் கூட இன்று புகழை தேடி தான் போகிறது.

  ஆரம்ப காலங்களில் பதிவர்கள் ஒரு மாற்று இயக்கமாக தளமாக வருவார்கள் என்ற எடிர்பாப்ர்ப்பு இருந்தது. இன்று பெரும்பாலான பதிவர்களும் , அச்சில் தங்கள் படைப்பு, எழுத்து வரும் புகழுக்கு மயங்கி இந்த பெரிய இதழ்களின் வணிக போக்கிற்குள் சிக்கி விட்டனர்.

  எப்படி மும்பை திரை உலகத்திற்கு நுழைய உலக அழகி போட்டி ஒரு நுழை வாயிலாக இருக்கிறதோ, அதே போல இன்று எழுத்து அச்சு வடிவ பெரிய இதழ்களில் வர பதிவு உலகம் ஒரு நுழை வாயிலாக மாறி விட்டது.

  நீங்கள் பொதிகை தொலைக்கட்சியில் தோன்றலாம், இன்றளவும் சினிமாவிற்கு அதிகம் முக்கியத்துவம் தராத தொலைக்காட்சி பொதிகை.

 2. sitrodai

  தாங்கள் சின்ன திரையை இந்த அளவுக்கு வெறுப்பதற்கு தொடர்ந்து சிம்பு படங்களை சின்ன திரையில் பார்ப்பதுதான் காரணமா?

  – சிற்றோடை

 3. Mahi

  வணக்கம் குரு.

  இறுதி இரண்டு வரிகள் முற்றிலும் உண்மை.,நல்ல வாசகன் நல்ல எழுத்தை கண்டு கொள்வான்.. குமுதத்தில் உங்கள் ஒரேயொரு கட்டுரை மட்டும் வாசித்தேன் (தலைப்பு நினைவில்லை). கல்லூரி விடுமுறை காலங்களில் என் கிராமத்தில் எந்த இதழ்களும் கிடைக்க வாய்ப்பேயில்லை.,நான் சந்தாதாரனும் அல்ல.,13கி.மீ நண்பர்களுடன் சைக்கிளில் சென்று, இருக்கும் தொகை முழுவதும் (அதிகம் போனால் 20ரூ) வாங்கி வருவோம். எந்த நூல் அறிமுகமும் அப்போது இல்லை.அப்போதைய வாசிப்பு விகடன் மற்றும் குமுதம்.
  அவ்வார குமுததில் தான் உங்கள் பெயரே எனக்கு அறிமுகம். அக்கட்டுரையில் குரு நித்யா வை பற்றியும் அவருடன் தங்களின் உரையாடல் பற்றியும் எழுதியிருந்தீர்கள். ஏதோ ஒரு வெளிச்சம் மிகவும் ஈர்த்தது.. பின்னர் ஜெய என்று வாசிக்க ஆரம்பித்தாலே உற்சாகம் தொற்றிகொள்ளும் (காந்தன்,மோகன் 2ம் தான்). முதன்முதலில் நாவலாக வாசித்தது ஏழாம் உலகம் தான்.பின்பு சென்னையில் இருந்த நாட்களில் தான் மற்ற நாவல்கள் வாங்கும் தகுதியே(பணம்.!) வாய்த்தது.

  இதழ்களில் இது போன்ற ஒரு சிறப்பு இருக்கிறதல்லவா? எளிய கிராமத்து வாசகர்களுடனும் அறிமுகம் கிடைப்பது,இன்றளவும் வாசிப்பு ஆர்வமுள்ள வாசகன்,பழுதடைந்த பாலத்தை சைக்கிளிலோ,(சந்தை சாமான்களை ஏற்றி செல்லும்)மாட்டு வண்டியிலோ கடந்து நகரத்திற்க்கு சென்று புத்தகம் வாங்க விருப்பம் கொண்டால் அவனுக்கு கிடைப்பது இதுபோன்ற இதழ்கள் தானே? உங்கள் எழுத்தாக ஏதோ சிலவரிகள் அவனுக்கும் தென்படும் அல்லவா?

 4. Ramachandra Sarma

  சில விஷயங்கள் கொஞ்சம் அபூர்வமாகவே இருந்தாகவேண்டும். ஒரு தடையைத்தாண்டி தேடி வருபவர்களுக்கு மட்டுமே அவை கிடைக்கவேண்டும்.

  – இதைத்தான் இதையேத்தான் சொல்கிறேன். இசை விஷயங்களிலும், மற்ற விஷயங்களிலும். எல்லோருக்கும் புரியும்படி இருக்கவேண்டும் என்ற கட்டாயமே இல்லை. முட்டாள்களுக்கு அதுபுரியாமல் போவது பற்றிய கவலையும் இல்லை. திருமலை கோவில் கடவுளை புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம், பலமணி நேரம் உட்கார்ந்து பார்க்கலாம் என்றால் இன்றுள்ள அளவு மக்கள் அங்கு செல்லமாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

  நீங்கள் உங்கள் நிலையை தளர்த்திக்கொள்ளவேண்டாம். பர்ஸனலாக என் அபிப்ராயம் என்னவென்றால், ஒரு எழுத்தாளன் சின்னத்திரையில் தோன்றி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவேண்டிய அல்லது மேலோட்டமாக உரையாடவேண்டிய தேவை இல்லை என்பதுதான்.

  இது எனக்கு நெடுநாட்களாக இருக்கும் ஒரு கேள்வி, சினிமாவிலேயே உழலும் கவுண்டமணி அவர்கள் எத்தனை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார், எத்தனை புத்தகங்களில் பேட்டி கொடுக்கிறார். இருந்தாலும் அவரைக்குறித்து பேசாமல் ஒரு நாளும் நகர்வதில்லை. எப்படி நடந்திருக்கிறது இது? புரியவில்லை.

 5. சார்லஸ்

  சத்தியமான வார்த்தைகள்.
  சமீபத்தில் கமல்ஹாசன் பொன்விழாவையொட்டி நடந்த கலந்துரையாடலில் எஸ்.ராமகிருஷ்னன், மனுஷ்யபுத்திரன், ஷாஜி ஆகியோர் மிகப் பரிதாபகரமாக உட்கார்ந்திருந்தார்கள். தொகுப்பாளரால் கிட்டத்தட்ட கமலைப் புகழ்பாடும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். “அவர் நடிக்க வராமல் பாடகராகியிருந்தால் அதில் அவர் நம்பர் ஒன்னாக ஆகியிருப்பார்” என்று ஷாஜி சொன்னது, கமல் ரசிகனான எனக்கே கொஞ்சம் அதிகமாகத்தான் தோன்றியது.
  இம்மாதிரி விவாத மேடைகளில் பேசப்படும் பொருள் தீவிரமானது ஆழமானது என்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்குவதற்காகவே இலக்கியவாதிகளும் பாரம்பரியக் கலைஞர்களும் கல்வியாளர்களும் நிபுனர்களும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் நிகழ்ச்சிக்குள் எதையும் ஆழமாகவோ விரிவாகவோ பேசிவிடாதபடி நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்துக்கொள்வார். அப்படிக் கட்டுப்படுத்த முடியாதவர்களை எடிட்டிங்கில் தூக்கிவிடுவார்கள். ஆனால் அதே ஆட்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பானபிறகு கிடைக்கும் புதிய வெளிச்சத்தைப் பார்த்து மலைத்துப்போய் வாலை ஆட்டியபடியே மீண்டும் அடுத்த நிகழ்ச்சிக்கு வந்து தேவைக்கும் அதிகமாக நடித்துவிட்டுப் போவதுதான் வழக்கமாக நடப்பது.
  இந்த விஷயத்தில் உங்களுக்கு இருக்கும் தெளிவு ஆச்சர்யமானது. வியாபார நோக்கோ, அரசு சார்போ, கட்சி சார்போ இல்லாத ஆட்களால் ஒரு தொலைக்காட்சியை ஆரம்பித்து நடத்துவது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்பதால் நீங்கள் இந்த முடிவிலிருந்து மாறாமலிருக்க வேண்டுமென்பதே என் விருப்பம்.
  இணையத்தில் வேண்டுமானால் அப்படிப்பட்ட மாற்றுப் பண்பாட்டை முன்னிறுத்தும் ஒரு தொலைக்காட்சியை ஆரம்பிக்க வழியிருக்கிறது. நடக்கும் என்றும் நம்புகிறேன்.

 6. Parthiban

  அன்புள்ள மகி நான் உங்கள் கருத்தை அமோதிக்கிறேன். விகடன் சர்ச்சைதான் என்னக்கு ஜெமோன்னு ஒரு (வாழ்க்கைல முக்கியமான) எழுத்தாளனை எனக்கு அறிமுகபடுத்தியது. தினமும் காலையில் மெயிலுக்கு பதிலா இப்பொது எல்லாம் நான் ஜெமோ பக்கத்தை திறக்கிறேன். கண்டிப்பா நீங்க பொது ஊடகத்துக்கு வரணும் ஜெமோ.

 7. Ramachandra Sarma

  உண்மை…!! பலரைப் பார்த்திருக்கிறேன். கேமராவைப்பார்த்துவிட்டால், மைக் முன்னாடி வைத்துவிட்டால் மகுடி முன் பாம்புதான். என்ன வேண்டுமோ அதை செய்யவைக்கலாம். :)) இதில் காசு வாங்கிக்கொண்டுவேற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்கள்.

 8. yuvakrishna

  அன்புள்ள ஜெ!

  நான் கடவுள் படத்துக்காக சிறந்த இயக்குனர் விருதை பெற்ற பாலாவுக்கு எனது வாழ்த்துகள். அடுத்த ஆண்டு அங்காடித்தெரு வசந்தபாலனுக்கும் இதே விருது கிடைக்க இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துகள்!

 9. kalabairavan

  அன்பினிய ஜெயமோகன்,
  சீரழிவின் காலத்தில் வசிக்கும் நம்முடைய மொன்னையான மனோபாவத்தை மாற்ற உங்களின் இந்த கட்டுரை நிச்சயம் உதவும்.
  தொடர்ந்து குப்பைகளையே உருவாக்குவதை தொழிலாக கொண்ட தமிழ் தொலைக்காட்சிகளை தயவுதாட்சன்யமின்றி ஒதுக்கலாம் என்பதே எனது எண்ணமும் கூட.
  -காலபைரவன்.

 10. kuppan_yahoo

  டைரக்டர் பாலா தேசிய விருது வாங்கியமைக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், மத்திய அரசிற்கு நன்றிகள்.

  உங்கள் கருத்துகளை பகிரவும் முடிந்தால் இது குறித்து.

 11. kuppan_yahoo

  அடுத்த ஆண்டு அல்லது இந்த ஆண்டின் சிறந்த தமிழ் பட நடிகை ரீமா சென்னிற்கு கிடைக்குமா.

 12. tamilsabari

  //வாசகர்களிடம் செல்வதல்ல வாசகர்களை வரவழைப்பதே இலக்கியவாதியின் பணி. வாசகர்களுக்காக தன்னை மாற்றிக்கொள்வதல்ல, தன் வாசகர்களை மாற்றுவதே அவன் வேலை.//
  Parthibanஐ வழி மொழிகிறேன். (தங்களது பணியில் ஒரு உதாரணமாக என்னையும் கருதலாம்.)

 13. Mahi

  திரு,ரா.ச.,

  நீங்கள் சொல்லும் தடை என்பது எவ்விததில்? மேல்மட்ட அறிவு ஜீவிகள் மட்டும் தனக்கு கிடைத்த வாய்ப்பை எளிதில் பயன்படுத்திகொண்டு,எளிய உலகமறியா வாசகனை வெளியில் நிற்க சொல்லும் தடையா? தடை என்பது அவன் தகுதிக்கேற்ப இருக்க வேண்டும் என்பதே தவிர,குறிப்பிட்டவர்கள் தான் பங்கு பெற வேண்டும் என்பதோ,வாய்ப்பு கிடைக்காதவர்கள் தடையை மீறி வரவே கூடாது என்பதோ எந்த தளத்திலும் ஏற்கபடமுடியாது என்றே எண்ணுகிறேன்.,

  முட்டாள்கள் என்று குறிப்பிடும் சொல் யாரை முன் வைத்து? உங்களுக்கு புரிந்ததினால் நீங்கள் அறிவு ஜீவி., அதை பயில்பவர்கள் முட்டாள்கள் அல்லவா? நீங்கள் குறிப்பிட்ட துறையை அறியும் வரை நீங்களும் முட்டாள் தான் என்பதை உணர தவற வேண்டாம்,

  கவுண்டமணியின் வீச்சு பற்றி பேசும் நீங்கள், சினிமா துறையிலே எந்த இடத்தில் உங்கள் அவதானிப்பு உள்ளது என்று பட்டவர்த்தனமாக புரிகிறது., எந்த ஒரு கலைஞன் ஆனாலும் அவனின் “திராணி” நேர் பேச்சில் சடுதியில் புலப்படும். அந்த திராணி இருந்து இருந்தால் நீங்கள் சொல்வது போல் கவுண்டமணியும் சுலபத்தில் தொலைகாட்சியில் தலைகாட்டி அல்லது தலை ஆட்டி இருப்பார்.

  இவ்வலைமனைக்கு வரும் எவரும் அற்ப ஜீவிகள் இல்லை தங்களையும் சேர்த்து., குருவை பயிலும் மாணவர்கள்., முரண்பட்டோ ஒன்றுபட்டோ..,

 14. Ramachandra Sarma

  திரு மஹி,

  முட்டாள்கள் – புரிந்துகொள்வதற்கு முயற்சி கூட செய்யாதவர்கள்.
  என் ரேஞ்சு கவுண்டமணி ரேஞ்ச் தான். நான் முற்றும் அறிந்த முனிவன் என்று எப்போதுமே சொல்லிக்கொள்வதில்லை. :) மற்றபடி நீங்கள் என்ன சொல்கிறீர் என்று “முயற்சி” செய்தும் விளங்கவில்லை.

 15. த.ஜார்ஜ்

  திரு.ராமச்சந்திர சர்மா இந்த வாய்ப்புக்கு ரொம்ப காத்துக் கொண்டிருந்திருப்பார் போல.உயர்ந்தவர்குதான் உயர்ந்த விசயங்கள்.மற்றவர்கள் கதவுக்கு வெளியேதான் என்று கழுத்தைப் பிடித்து தள்ளுவது மாதிரி இருக்கிறது.
  அது ஏன் ஐயா, எளியவன் எதையும் தெரிந்து கொள்ளக்கூடாது என்ற சிந்தனை.இது ஆதிக்க மனப்பாங்கா அல்லது தீண்டாமை தன்மையா.
  என்னை போன்ற ‘முட்டாள்கள்’ அறிவு பெற வேண்டுமென்று ஆர்வம் காட்டவே கூடாதா. கடினமாக எழுதி யாருக்கும் புரியக்கூடாது என்றால்தான் அது மதிப்பு மிக்கதா. ஒரு விசயத்தை தெரிந்து கொள்ள நானும்தான் கஷ்டப்பட்டேன்.அதெப்படி நீ சுலபமாக தெரிந்து கொள்ளலாம் என்றுதான் வேலி போடுகிறீர்களா. நீர் புரிந்து கொண்டதை எம்மை போன்றோருக்கு எளிமையாக புரிய வைக்க முடியவில்லையென்றால் உங்கள் ஞானத்தை என்னென்பது. நீங்கள் கற்றவைதான் எதற்கு?

  பூடகமாக எழுதி அதை ஆளுக்கொரு திக்கில் பொருள் சொல்லி பாமரனை மேலும் குழப்பவேண்டுமா. அல்லது அதற்கு பொருள் புரிந்தவந்தான் ஆண்டான்,மற்றவர்கள் அவனை அண்டி இருக்கும் அடிமைகளாகதான் இருக்க வேண்டுமா. இந்த பெருந்தன்மையை ஜெயமோகனுக்கு வேறு சிபாரிசு செய்கிறீர்கள்.

  அன்பு ஜெயமோகன் நீங்கள் தொலைக்காட்சியை தவிர்ப்பது உங்கள்விருப்பம்.உரிமை. அதற்காக மேற்படியாரின் சிபாரிசை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.ஞானம் உடையோரிடமிருந்து சிறிதளவேனும் கிரகித்துக் கொள்ள தாகம் கொண்டோர் என்னைப் போல் பலருண்டு. விலை உயர்ந்தவையே நல்ல பொருள் என்று நம்பச் சொல்லும் விளம்பரங்களைப் போல கனமானவையே உயர்ந்த இலக்கியம் என்று சொல்லி பாமர வாசகனை பழிதீர்த்து கொள்ளாதீர்கள்.

  ரா.சா கூறியதைப் போன்று எனக்கும் சொல்லத்தோன்றுகிறது. வடிவேலு நகைச்சுவையை ரசித்திருப்பீர்கள்.அவர் பயன் படுத்தும் வார்த்தைகள் எல்லாம் மிக சாதாரணமாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள்தான்.இந்த எளிய வார்த்தைகளை அவர் பயன்படுத்தும்போதுதான் எல்லோரையும் சென்றடையக்கூடிய நகைச்சுவையாக மாறிவிடுகிறதுதானே.எந்த வயதினரும் இன்று அந்த வார்த்தைகளையே தங்கள் பேச்சினிடையே காமெடியாக பயன்படுத்தி இறவாததாக்கிக் கொண்டிருப்பதை காண்கிறோம்தானே.

  எளிய வார்த்தைகளால் உங்களாலும் உயர்வான விசயங்களை சொல்ல முடியும். அதை தவிர்த்து விடாதீர்கள்.
  இந்த முட்டாளுக்கு சரியாக எழுத வராது.சொல்ல வந்ததை சரியாக சொன்னேனா என்றும் தெரியவில்லை.பிழையிருந்தால் பொறுத்தருள்க.
  நன்றி

 16. Mahi

  திரு.சர்மா.,
  நான் எழுதியதே புரியவில்லை என்றால் என்னால் ஒன்றும் சொல்ல இயலாது.,; “எதுவாக நிகழ்கிறதோ அதுவே அது”. குருவிடம் கேட்போம். அவர் பதில் சொல்லட்டும்.

  இதில் தங்களுக்கு மகிழ்ச்சி என்றால்., எனக்கும் நிறைவே..!!

 17. ஜெயமோகன்

  அன்புள்ள மகி

  நான் வலைப்பதிவுக்கு அல்லது வாசிப்புக்கு வரும் எவரையுமே குறைத்து மதிப்பிடவில்லை. அனைவருமே என்னுடைய வாசகர்கள்தான்.

  ஆனால் பொதுவாக இன்றைய சூழலில் ஊடகம் மூலம் எழுத்தாளன் தன்னை முன்வைக்கும்போது அவனுக்கு வரும் வாசகர்கள் இருவகை. முதல்வகையினர் ஒரு புதிய விஷயத்தை தெரிந்துகொள்ள ஆர்வம் கொண்டவர்கள். அதற்காக முயற்சி எடுத்துக்கொள்பவர்கள். இரண்டாம் வகை தாங்கள் ஏற்கனவே எதை வாசிக்கிறார்களோ எதை ரசிக்கிறார்களோ அதைத்தவிர எதையுமே வாசிக்க ரசிக்க தயாராக இல்லாதவர்கள். இது இன்றைய தமிழின் மிக முக்கியமான ஒரு மனநிலை. தமிழ்ச்சினிமா இம்மனநிலையின் கைதி. கதைவிவாதங்களில் மிகத்தெளிவாகவே இது பேசப்படும். 10 சதவீதம் புதுமை என்பதுதான் உச்சகட்ட சாத்தியம். மிச்சமெல்லாம் வழக்கமான கதையாக இல்லையேல் ரசிக்க மாட்டார்கள். இது எல்லாருக்கும் தெரியும்.

  நான் சொல்வது இலக்கியத்தில் இதில் மாட்டிக்கொள்ளக் கூடாது, நான் முதலில் சொல்லப்பட்ட வாசகர்களுக்காகவே எழுதவேண்டும் என்று மட்டுமே. நான் மட்டுமல்ல எல்லா எழுத்தாளர்களுக்கும் இதையே சொல்ல விரும்புகிறேன். ஜெயகாந்தன் என்னிடம் ஒரு பேட்டியில் விகடனில் எழுதிய காலகட்டத்தில் விகடன் வழியாக வரும் ஒரு வாசகர் கடிதத்தைக்கூட வாசிக்கமாட்டேன், அவர்கள் என்னை விகடன் சராசரியை நோக்கி இழுத்துவிடுவார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

  கண்டனத்தைவிட பாராட்டுக்கு அந்த வலிமை உண்டு. நம்மிடம் பல ஆயிரம் பேர் ஒரு விஷயத்தை பாராட்டினால் அந்த விஷயத்தை மேலும் செய்ய நம் மனம் தூண்டப்படும். அந்த விஷயம் நம் இயல்புக்கு மாறான, நம்முடைய படைப்பூக்கத்துக்கு மாறான விஷயமாகக் கூட இருக்கும். இது எழுத்தாளனுக்குரிய மாபெரும் பொறி

  அந்த பொறியை தவிர்ப்பதற்காகவே நான் ஊடகங்களிடம் கவனமாக இருக்கிறேன்

 18. john

  திரு ஜெயமோகன்

  ரொம்ப சந்தோஷம். உயிர்மையுடன் சண்டை வந்ததுமே உங்களுக்கு வேறுபாடுகளை அழிப்பது பெரிய தப்பு என்று தெரிந்து விட்டது. இதற்காகவாவது அந்த சண்டையை நாம் பாராட்ட வேண்டும். இனிமேல் கடந்த மூன்றாண்டுகளாக நல்ல இலக்கியத்துக்கும் கீழ்த்தர அரசியலுக்கும் பாலம் போட்டதே உயிர்மைதானே என்பதை நாம் மறந்து விடலாம். கீழ்த்தர சினிமாவுக்கு சிறுபத்திரிகையில் பக்திக்காவியங்களை எழுதியது உயிர்மைதானே என்பதையும் மறந்துவிடலாம். உயிர்மை என்ற ‘சிற்றிதழ்க்குமுத’த்தின் உயிர்நாடிகளில் ஒருவராக நீங்கள் இதுவரை செயல்பட்டதையும் மறந்துவிடலாம். வேறுபாடுகளை அழிப்பதை அழிக்க ஆரம்பிக்கலாம் ஜெய்கோ!

 19. Mahi

  நன்றி குரு.,

  //கண்டனத்தைவிட பாராட்டுக்கு அந்த வலிமை உண்டு//
  இதை முற்றிலும் ஏற்கிறேன். இனிமேல் புதிதாக பாராட்டுகள் உங்களை அந்நிலைக்கு கொண்டு செல்லாது என்றே எண்ணுகிறேன். இலக்கியம்,தத்துவம் பற்றிய ஆரம்பகட்ட புரிதல்கள் அனைவரையும் சென்றடைய தங்களை போன்றவர்கள் முயன்றால் சாத்தியம் என்ற கருத்தாலே நான் இதுபற்றி மூன்று முறைக்கு மேல் பின்னூட்டம் அனுப்ப வேண்டியதாகிவிட்டது., மேலும் உங்கள் கருத்தை அறியவே அவ்வாறு செய்ய நேர்ந்தது.

Comments have been disabled.