«

»


Print this Post

காடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்கள்


அன்புள்ள ஜெயமோகன்,
கனவும் குரூர யதார்த்தமும் என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.  படிக்கும் போது மன எழுச்சியையும் , துயரத்தையும் ஒருங்கே அனுபவிக்க நேர்ந்தது. ஆனால் என்னால் கதையின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏன் கதை நாயகன் வாழ்க்கையில் தோற்றுக் கொண்டே இருக்க வேண்டும்? என் புரிதலின் படி அவன் எதையும் அடைய வேண்டும் என விரும்பவில்லை. வருவதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் தான் அவன் தோற்கிறான் என நினைக்கிறேன்.   …. மற்றபடி இது ஒரு அற்புதமான் நாவல் .காட்டைப் பற்றிய வர்ணனையில் நானே காட்டிற்குள் சென்றது போல் இருந்தது. மலையன் மகள்  நீலி வரும்   இடங்களில் தான் நாவல் தன் உச்சத்தை அடைகிறது. இப்படி ஒரு நாவலை எழுதியதற்கு மிக்க நன்றி ..

shankaran e r

 

அன்புள்ள சங்கரன்

ஏன் வாழ்க்கையில் முழுமையான தோல்வி என்றால் அது தோல்வியுற்றவனின் கதை என்பதனால்தான்…காரணம் இல்லாவிட்டால் தான் வாழ்க்கையின் போக்கு முழுமையாக நம்பகத்தன்மை பெறுகிறது
ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்,
உண்மையில் தகவல்களுக்காகவே இந்நாவலை நான் விரும்புகிறேன். தலையணைக்கு  உறை தைப்பது போல் ஒரு கதையினூடாக வரும் இந்த தகவல்கள் , வரலாற்றின் கடந்த காலத்தில் வாழ்ந்த உணர்வை ஏற்படுத்துகிறது.ஒரு கருத்து செறிவான நாவலை படித்த திருப்தி ஏற்பட்டது.
நன்றி.

shankaran e r
நன்றி. நாவல் என்பது தகவல்களின் கலை என்று ஒரு கூற்று உண்டு. ஆனால் பின்தொடரும் நிழலின் குரல் தகவல்களின் விளையாட்டு
ஜெ

அன்புள்ள ஜெ

மீண்டும் கொஞ்சம் கொஞ்ச்மாக விஷ்ணுபுரம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இது நாலாவது முறை. இப்போது என் மனம் ஞானசபை விவாதங்களிலேயே கட்டுண்டு கிடக்கிறது. முதலில் வாசித்தபோது அந்த கோயிலும் நகரமும் வர்ணிக்கப்பட்டிருக்கும் விதம் தான் பெரிய ஒரு பிரமிப்பினை அளிப்பதாக இருந்தது. இரண்டாம் முறை வாசித்தபோது ஞானசபை விவாதங்களை பொறுமையாக வாசித்தேன். ஆனால் நீங்கள் கதையை அற்புதமாகப் பின்னிச் செல்வதைத்தான் கவனித்தேன். ஆனால் இப்போது ஞானசபை விவாதங்களில் உள்ள கவித்துவம்தான் முக்கியமானது என்று தோன்றி விட்டது. சிந்தனைகளுக்கு நீங்கள் அளிக்கும் கவித்துவமான அடிக்குறிப்புகள் நிறைந்தது இந்த பகுதி.  கிண்டலாகவும் சீரியஸாகவும் பலவிதமாக சிந்தனைகளை கவிதையால் விமரிசனம் செய்துகொன்டே போகிறீர்கள்…

இன்னும்கூட விஷ்ணுபுரத்தை வாசிப்பேன் என நினைக்கிறேன். வாசித்துத் தீராத நூல் இது

அரசன் சண்முகம்

நன்றி சண்முகம்

எனக்கும் ஞானசபை விவாதங்கள் மேல் ஒரு பிடிப்பு உண்டு. இப்போது அதில் உள்ள நுண்ணிய கிண்டல்கள் மிகவும் பிடித்திருக்கின்றன. அந்த தத்துவங்களை வாசித்தவர்களுக்கு மட்டுமே புரியக்கூடியவை. கோபுரங்களில் யாரும் பார்க்காத இடங்களில் சிற்பி சில நுட்பங்களைச் செய்து வைத்திருப்பான். ஒருவேளை அதையெல்லாம் யாருமே பார்க்க மாட்டார்கள் என்று நினைத்தால் அவனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்…அதைப்போல
ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6054/

11 comments

Skip to comment form

 1. Ramachandra Sarma

  ஒருமாதிரியாக யோசித்துப்பார்க்கிறேன். அந்த தத்துவ விவாதப்பகுதியை நீக்கிவிட்டால் விஷ்ணுபுரம் எப்படி இருக்கும் என்று.. அப்போதும் மீண்டும் மீண்டும் படித்து வெவ்வேறு விதமாக புரிந்துகொள்ள வைக்குமா என்று. ஒருவேளை அந்த தத்துவ விவாதங்கள்தான் மூன்றாம் பகுதியை சரியாக புரிந்துகொள்ள நம்மை தயார் படுத்துகிறதோ என்றும் எண்ணம்.

 2. ஜெயமோகன்

  தத்துவப்பகுதி இல்லையேல் மூன்றாம் பகுதியில் நுழைவதற்கான வெறுமை உருவாகாது என்பது என் எண்ணம். நம் முன் இடிந்து கிடக்கும் இந்த இந்தியா தத்துவவிவாதத்தின் உச்சகட்ட முரண் மூலம் அசைவிழதமையால்தான் அப்படி ஆயிற்று என்பது ஒரு விளக்கம்

 3. ratan

  அன்புள்ள ஜெ.,

  யாருமே பார்க்காத இடங்களில் சிற்பி செதுக்கிய நுட்பங்களைப் பற்றிப் படித்த போது வந்த ஒரு நினைவு.

  கோபுரங்களிலும், கோயில் சிற்பங்களிலும் பல நுட்பமான அரசியல் ரகசியங்கள் செதுக்கப்பட்டிருப்பதாக ஒரு கேள்வி ஞானம். அரச பரம்பரையினர் மட்டுமே அறியக்கூடிய வகையில் அதை வடிவமைத்திருப்பார்கள் என்று விவரமறிந்த என் நண்பர் ஒருவர் கூறியிருக்கிறார். இது குறித்த ஆராய்ச்சிகள் ஏதேனும் நம் நாட்டில் நடந்திருக்கிறதா? குறைவான வரலாற்று ஆவணங்களையே கொண்ட நம் வரலாற்றை அறிய இது போன்ற புறக்கட்டு வழிகள் மிகவும் உதவிகரமானவை அல்லவா?

 4. ஜெயமோகன்

  அன்புள்ள ரத்தன்

  இதெல்லாம் ஒரு நம்பிக்கைதான். உண்மையில் கோபுரச்சிற்பங்களின் முத்திரை சைகைகள் மற்றும் ஒழுங்குகள் பெரும்பகுதி புரிந்துகொள்ளப்படாதவை. ஏனெனெரால் ஒவ்வொன்றுக்கும் அதற்கான அமைப்பு தனியாக உள்ளது. அதாவது கல்சிற்பம் ஒருமரபு. வெண்கலச்சிற்பம் இன்னொரு மரபு. சுதை, மரச்சிற்பங்கள் வேறு மரபு. வேறுவேரு சாதிகளால் செய்யபப்டுபவை. இவற்றில் பல மரபுகள் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே வழக்கொழிந்துவிட்டன. இன்று அவற்றை அப்படியே திருப்பிச்செய்கிறோம். முறையான ஆய்வுகள் இல்லை. தனிமனித முயற்சிகளே உள்ளன. பெருமளவில் ஒட்டுமொத்தமாக ஆய்வுகள்செய்யப்பட்டு பெரும் உரையாடல் நிகழ்ந்தால் மட்டுமே இவை மீட்டெடுக்கப்பட முடியும். அது இப்போது நினைத்தே பார்க்க முடியாத விஷயம். முதலில் கோயில்களின் கலைச்செல்வங்கள் அழியாமலிருந்தாலே போதும்

 5. vijayababub

  I am trying to buy “பின் தொடரும் நிழலின் குரல்” thru online for the past one year. But i am not able to. Could you please tell me where can i buy this book. Thanks.

 6. ஜெயமோகன்

  சென்ற வருடம் பிரதி இல்லை. இப்போது மறுபதிப்பு வந்துள்ளது

 7. Vengadesh Srinivasagam

  Dear Vijayababub,

  Have you tried anyindian.com and udumalai.com?

  Just try to contact by phone Mr.Chidhambaram (Udumalai.com); he can help and guide you. His mobile No. 09994680084.

  Thanks for searching to buy good books; before four years I was also searching like these to buy books online.

  Anbudan Vengadesh.

 8. vijayababub

  Dear Vengadesh,
  Thanks for the info. Yeah, I have tried udumalai and anyindian. Anyway lemme try now.

 9. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெ.மோ,

  திருவையாற்றில் வளர்ந்தவன் என்பதாலோ என்னவோ புனைவியலைப் பொறுத்தவரை தி.ஜானகிராமனை ரசிக்கும் அளவு வேறு படைப்பாளிகளிடம் என்னால் லயிக்கமுடியாமல் போனது. அது அபூர்வமாகவே நிகழும். உங்கள் எழுத்துக்களைப் போல.(உங்கள் எழுத்தை வாசிக்கையில் எல்.சுப்ரமணியம் வயலின் வாசிப்பதைக் கேட்பதுபோல் உணர்வதுண்டு). இலக்கிய முன்னோடிகள் பற்றி நீங்கள் எழுதிய நூல்களை வாசித்தபோது தி.ஜா பற்றிய கட்டுரையில் அவரது கடைசி நாவலான ‘நளபாகம்’ பற்றி நீங்கள் எதுவும் குறிப்பிடாதது கண்டு ஆச்சர்யப்பட்டேன். அந்நாவல் தி.ஜாவை மதிப்பிட முக்கியமானது என்றே நான் நினைக்கிறேன். நளபாகம் பற்றிய தங்கள் விமர்சனம் என்ன? (வேறு) இவ்வருடம் திருவையாற்றுக்கு வந்தீர்களா?

  – ரமீஸ் பிலாலி
  தமிழ் விரிவுரையாளர்
  ஜமால் முகமது கல்லூரி,
  திருச்சி – 20

  அன்புள்ள ரமீஸ்
  நளபாகம் எனக்கு அவ்வளவாக உறைக்காத ஒரு நாவல். அதில் ஜானகிராமனின் நடை குணச்சித்திரச் சித்தரிப்பு உள்ளதே ஒழிய அவரது மனம் ஈடுபடும் பல விஷயங்கள் இல்லையோ என்று ஓர் எண்ணம்– பெண்ணழகு, தஞ்சை அழகு, தஞை வீடுகளின் அழகு, தன்னுடைய சொந்த காமத்தின் அழகு, சங்கீதம்… சாப்பாடு, பயணம் மட்டுமே இருக்கிறது.
  பல வருடங்கள் முன்பு வாசித்தது. கவனத்தில் இருந்தும் பல தப்பியிருக்கலாம். சமீபத்தில் உயிர்மையில் எஸ்.ராமகிருஷ்ணன் மா-நீ பற்றி எழுதியதை வாசித்தபோது கெப்ஸிபாவின் அநாவல் என்னை கவராது போனதைப் பற்றி நினைத்துக்கொண்டேன். மறு வாசிப்பு தேவை என்றுந்
  நளபாகம் ஏன் உங்களை கவர்ந்தது என நீங்கள் ஏன் எழுதக்கூடாது?
  ஜெ

 10. ஜெயமோகன்

  திரு ஜெமோ,
  இந்தப் புத்தாண்டு விடுமுறையின்போது ஹூஸ்டன் நகரிலிருந்து என் நண்பர் சண்முகம் ‘விஷ்ணுபுரம்’ கொண்டு வந்து தந்தார். படித்தவுடன் பிரமித்துப் போனேன். கட்டாயம் இது ஒரு Ridley Scot, Peter Jackson, John Woo போன்ற இயக்குனர்களில் ஒருவரால் திரைப்படமாக எடுக்கப் பட வேண்டும். வெகு ஜனங்களைச் சென்றடைய வேண்டும். மிகவும் நன்றி.

  – பாஸ்கரன் , Austin, TX
  http://baski-reviews.blogspot.com/
  http://baski-lounge.blogspot.com/

 11. ஜெயமோகன்

  Arvind’s note on you in facebook in the Tamil literature group.

  http://www.facebook.com/topic.php?uid=25711886316&topic=7331
  satyakala

Comments have been disabled.