காடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,
கனவும் குரூர யதார்த்தமும் என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.  படிக்கும் போது மன எழுச்சியையும் , துயரத்தையும் ஒருங்கே அனுபவிக்க நேர்ந்தது. ஆனால் என்னால் கதையின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏன் கதை நாயகன் வாழ்க்கையில் தோற்றுக் கொண்டே இருக்க வேண்டும்? என் புரிதலின் படி அவன் எதையும் அடைய வேண்டும் என விரும்பவில்லை. வருவதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் தான் அவன் தோற்கிறான் என நினைக்கிறேன்.   …. மற்றபடி இது ஒரு அற்புதமான் நாவல் .காட்டைப் பற்றிய வர்ணனையில் நானே காட்டிற்குள் சென்றது போல் இருந்தது. மலையன் மகள்  நீலி வரும்   இடங்களில் தான் நாவல் தன் உச்சத்தை அடைகிறது. இப்படி ஒரு நாவலை எழுதியதற்கு மிக்க நன்றி ..

shankaran e r

 

அன்புள்ள சங்கரன்

ஏன் வாழ்க்கையில் முழுமையான தோல்வி என்றால் அது தோல்வியுற்றவனின் கதை என்பதனால்தான்…காரணம் இல்லாவிட்டால் தான் வாழ்க்கையின் போக்கு முழுமையாக நம்பகத்தன்மை பெறுகிறது
ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்,
உண்மையில் தகவல்களுக்காகவே இந்நாவலை நான் விரும்புகிறேன். தலையணைக்கு  உறை தைப்பது போல் ஒரு கதையினூடாக வரும் இந்த தகவல்கள் , வரலாற்றின் கடந்த காலத்தில் வாழ்ந்த உணர்வை ஏற்படுத்துகிறது.ஒரு கருத்து செறிவான நாவலை படித்த திருப்தி ஏற்பட்டது.
நன்றி.

shankaran e r
நன்றி. நாவல் என்பது தகவல்களின் கலை என்று ஒரு கூற்று உண்டு. ஆனால் பின்தொடரும் நிழலின் குரல் தகவல்களின் விளையாட்டு
ஜெ

அன்புள்ள ஜெ

மீண்டும் கொஞ்சம் கொஞ்ச்மாக விஷ்ணுபுரம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இது நாலாவது முறை. இப்போது என் மனம் ஞானசபை விவாதங்களிலேயே கட்டுண்டு கிடக்கிறது. முதலில் வாசித்தபோது அந்த கோயிலும் நகரமும் வர்ணிக்கப்பட்டிருக்கும் விதம் தான் பெரிய ஒரு பிரமிப்பினை அளிப்பதாக இருந்தது. இரண்டாம் முறை வாசித்தபோது ஞானசபை விவாதங்களை பொறுமையாக வாசித்தேன். ஆனால் நீங்கள் கதையை அற்புதமாகப் பின்னிச் செல்வதைத்தான் கவனித்தேன். ஆனால் இப்போது ஞானசபை விவாதங்களில் உள்ள கவித்துவம்தான் முக்கியமானது என்று தோன்றி விட்டது. சிந்தனைகளுக்கு நீங்கள் அளிக்கும் கவித்துவமான அடிக்குறிப்புகள் நிறைந்தது இந்த பகுதி.  கிண்டலாகவும் சீரியஸாகவும் பலவிதமாக சிந்தனைகளை கவிதையால் விமரிசனம் செய்துகொன்டே போகிறீர்கள்…

இன்னும்கூட விஷ்ணுபுரத்தை வாசிப்பேன் என நினைக்கிறேன். வாசித்துத் தீராத நூல் இது

அரசன் சண்முகம்

நன்றி சண்முகம்

எனக்கும் ஞானசபை விவாதங்கள் மேல் ஒரு பிடிப்பு உண்டு. இப்போது அதில் உள்ள நுண்ணிய கிண்டல்கள் மிகவும் பிடித்திருக்கின்றன. அந்த தத்துவங்களை வாசித்தவர்களுக்கு மட்டுமே புரியக்கூடியவை. கோபுரங்களில் யாரும் பார்க்காத இடங்களில் சிற்பி சில நுட்பங்களைச் செய்து வைத்திருப்பான். ஒருவேளை அதையெல்லாம் யாருமே பார்க்க மாட்டார்கள் என்று நினைத்தால் அவனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்…அதைப்போல
ஜெ

முந்தைய கட்டுரைசாகித்ய அகாடமி மீண்டும்
அடுத்த கட்டுரைமனுஷ்யபுத்திரன்,சாரு நிவேதிதா,உயிர்மை – ஒரு விளக்கம்