எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம்
அன்பிற்குரிய ஜெயமோகன்
உங்கள் மாலை நடைபயணத்தில் [கணியாகுளம்-ஆலம்பாறை:என் மாலைநடை வழி] நீங்களும் உங்கள் மகனும் நடந்து செல்லும் புகைப்படங்களை பார்த்தபடியே இருந்தேன். உங்கள் பையன் உங்கள் தோள்மீது கைபோட்டபடி நடக்கும் அந்த புகைப்படம் மிக அற்புதமானது. எழுத்து இலக்கியம் படிப்பு யாவும் மறந்து பசுமையான வயல்வெளியின் ஊடே நடந்து செல்லும் இருவரது தோற்றம் ஏதேதோ சொல்கிறது. உங்கள் மகனுக்கும் உங்களுக்குமான இணக்கமும் அன்பும் அந்த புகைப்படத்தில் மிக நன்றாக வந்துள்ளது. புகைப்படம் எடுத்த உங்கள் மகளுக்கு வாழ்த்துகள். மலையின் நித்ய இருப்பையும் அதை கடந்து போன எண்ணிக்கையற்ற மனிதர்களின் நடைச்சுவடையும் மனது நினைத்துக் கொண்டேயிருக்கிறது. மலையடிவாரத்தில் வாழ்கின்றவர்கள் பாக்கியவான்கள். நான் பிறந்துவளர்ந்த பழைய ராமநாதபுர சூழலில் பசுமையான மலையோ, மழையோ இரணடும் கிடையாது. வெக்கை உமிழும் ஆகாசமும் வெம்பரப்பும் பனைகளும் தான் என் பால்யத்தின் காட்சிகள். புகைப்படங்களின் வழியே தென்படும் இருண்ட மேகமும் மெல்லிய சாரலும் பழைய சாலையும் மனதிற்கு நெருக்கமாக உள்ளது. சிறுவர்கள் புத்தகங்களை விடவும் வேகமாக வளர்ந்துவிடுகிறார்கள் என்று சி.எஸ். லூயிஸின் ஒரு வரி இருக்கிறது. உங்கள் குழந்தைகளைப் பார்த்த போது அது நினைவிற்கு வந்தது
மிக்க அன்புடன்
எஸ்.ராமகிருஷ்ணன்.