சென்னை நூல் வெளியீட்டுவிழா

மறைந்த கேரள இறையியலாளர் ஜோசப் புலிக்குந்நேல் அவர்களின் ஒரு கூட்டத்துக்குச் சென்றிருந்தேன், இருபது வருடம் முன்பு.  கூட்டத்தில் பல சில்லறை குளறுபடிகள். ஃபாதர் சொன்னார் ”குளறுபடிகள் ரொம்ப நல்ல விஷயம், கடவுளும் உள்ளே வந்து கலந்து கொள்வது தான் அது”

 

உண்மைதான். ஒரு விஷயத்தை ஏற்பாடு செய்யும் போது என்ன உத்தேசிக்கிறோமோ அது தற்செயல்களின்  நுட்பமான தலையீட்டால் மாற்றியமைக்கப் படுகிறது. சர்வ சாதாரணம் என்று நாம் நினைக்கும் விஷயங்களில் கூட நாம் அறியாத எத்தனை விசைகள் ஊடுருவிச் செயல் படுகின்றன என்று அது காட்டுகிறது.

 

பொதுவாக கூட்டங்களில் அவ்வாறு பல குளறுபடிகள் நடக்கும். அப்போது பதற்றமாக இருந்தாலும் நடந்த பின்னர் அதுவே சுவாரசியமாக இருக்கும். சென்னையில் டிசம்பர் பத்தொன்பதாம் தேதி என்னுடைய பத்து நூல்களின் வெளியீட்டு விழா தேவநேயப் பாவாணார் அரங்கில் மாலை ஐந்தரைக்கு நடப்பதாக இருந்தது. மாலை இரண்டுமுதல் ஐந்துவரை ஜி.கே.வாசன் பங்கு கொண்ட ஒரு நூல் வெளியீட்டுவிழா. ஐந்தரை மணிக்கு அவர்கள் முடித்தார்கள்.

 

முடித்து அந்தக் கும்பல் வெளியே செல்லவும் உயிர்மை ஏற்பாடு செய்திருந்த டீ பிஸ்கட் வரவும் சரியாக இருந்தது. பொதுவாக இப்போதெல்லாம் இலக்கியக் கூட்டங்கள் மிகக் கச்சிதமாக நடந்து முடிகின்றன, ஆகவே இடைவெளி விடுவதில்லை. இதனால் கூட்டம் தொடங்கும் முன்பே டீ கொடுப்பது வழக்கம். ஜி.கே.வாசன் கூட்டத்துக்கு வந்த மூவண்ணக் கரைவேட்டிகள் டீக்காரரைச் சூழ்ந்துகொண்டு கோப்பைகளை எடுத்து டீ ஊற்றி குடிக்க ஆரம்பித்தார்கள். ‘சார் உங்களுக்கு இல்லை இது வேறே’ என்று அவர் கதறுவதை பொருட்படுத்தவில்லை. ஒரு கட்டத்தில் அவர்களே அவரை அகற்றிவிட்டு திருப்தியாக டீ சாப்பிட்டார்கள். போகும்போது சமூஸா இல்லை என்று புகார் வேறு.

 

இலக்கியக் கூட்டத்துக்கு வந்தவர்கள் இங்கேதான் கூட்டமா என்று தெரியாமல் குழப்பமானார்கள். சிலர் கும்பலாக டீ குடிக்க போய் பிந்தி வந்ததாக என்னிடம் பிறகு சொன்னார்கள். வாசன் ஆதரவாளர்கள் டீயை தீர்த்து விட்டு கோப்பைகளை அங்கேயெ போட்டு விட்டுப் போக ஆறுமணி ஆகியது. அதன் பின்னரே இடம் காலியாகி இலக்கியக் கூட்டத்துக்கு வந்தவர்கள்  நான்கு இடத்தில் விசாரித்து அடையாளம் கண்டு கொண்டு உள்ளே வர ஆரம்பித்தனர். ஆறே காலுக்கு கூட்டம் ஆரம்பிக்கும்போது பாதி அரங்குதான் கூட்டம். அதன்பின் கதவைத் திறந்து வந்துகொண்டே இருந்தார்கள்.

 

பழைய அரங்கை இப்போது சீரமைத்து அண்ணா, கலைஞர் படமெல்லாம் வைத்து பொன்மொழிகள் பொறித்து குளிர்சாதன வசதி செய்திருக்கிறார்கள். இப்போது இதுவே சென்னையில் இலக்கியக் கூட்டங்கள் நடக்கும் அரங்குகளில் பெரிது. ஆனால் இக்காரணத்தால் அரசியல் கூட்டங்களுக்கு பதிவு செய்யப்பட்டு இலக்கியக் கூட்டம் நடத்தமுடியாதபடி ஆகலாம். முந்நூற்று எண்பது இருக்கைகள் கொண்ட அரங்கு விரைவிலேயே நிறைந்தது. விவேக் ஷன்பாக் பேசிக் கொண்டிருக்கும் போது வந்த ஏழெட்டுபேருக்கு இடமிருக்கவில்லை. கொஞ்ச பேர் புத்தக விற்பனை அருகிலேயே நின்றிருந்தார்கள், கூட்டத்தை ஏறிட்டும் பார்க்காமல். கொஞ்சபேர் நின்று கொண்டு வெளியே போய் உள்ளே வந்து கொண்டே இருந்தார்கள், புகையர்களாக இருக்கலாம்.

 

உயிர்மையின் முந்தைய கூட்டங்களுக்கு வந்த அதேயளவுக்கு கூட்டம் இங்கும் வந்திருந்தது, ஆனால் அந்தக் கூட்டங்களுக்குச் சென்றவர்களில் ஒருசிலரே இங்கே வந்திருந்தார்கள் என்றார் நண்பர். இங்கே வந்தவர்களில் அங்கே சென்றவர் சிலரே இருபபர்கள். வரவிருக்கும் கூட்டங்களில் வேறு வாசகர்கள் வரக்கூடும். இப்போதெல்லாம் இலக்கியக் கூட்டங்களே வெவ்வேறு உலகங்களில் நடக்க ஆரம்பித்து விட்டன. கூட்டங்களின் மனநிலையும், தொனியுமே மாறுபட ஆரம்பித்து விட்டன. சென்னையின் இலக்கியவாதிகள் ஒரு சிலரே தென்பட்டனர். பெரும்பாலானவர்கள் நான் பார்த்திராத புதிய வாசகர்கள். பெரும்பாலும் இளைஞர்கள்.  எனக்கு ஏற்கனவே தெரிந்த சிலரை மட்டுமே இந்த முறை கண்டேன். அதை ஒரு நல்ல அடையாளமாகவே சொல்ல வேண்டும்.

 

மனுஷ்ய புத்திரனின் வரவேற்புரைக்குப் பின் டாக்டர் வி.ஜீவானந்தம் என்னுடைய ‘நலம்’ என்ற நூலை ஒட்டியே உரையாற்றினார். உடல் நலம் என்பது ஒவ்வொருவருடைய உரிமை. ஆனால் அது இன்று ஒரு பெரு வணிகமாக ஆக்கப் பட்டிருக்கிறது. அதற்கு எதிராக உலகம் முழுக்க நிகழ்ந்து வரும் உரையாடல் அந்நூலில் உள்ளது என்றார். ஊருக்கு நூறு பேர் என்றார் பாரதி. அந்த வரிகளின் அடிபப்டையில் நூறு பேர் பணம் போட்டு நடத்தும் மக்கள் மருத்துவமனை என்ற இயக்கத்தை ஆரம்பித்திருப்பதாகவும் ஈரோட்டில் ஆரம்பிக்கப் பட்ட மருத்துவமனை குறைந்த கட்டணத்தில் நல்ல சிகிழ்ச்சையை அளித்து வருவதாகவும் சொன்னார். அதைத் தொடர்ந்து தஞ்சையில் ஒன்று ஆரம்பிக்கவிருப்பதாகக் குறிப்பிட்டார்.

 

சிறப்பு விருந்தினராக வந்த கன்னட எழுத்தாளர் விவேக் ஷன்பேக் பொதுவாக கன்னட இலக்கியத்தின் தற்போதைய சூழலைப் பற்றி ஆங்கிலத்தில் பேசினார். கன்னடத்தில் இன்று பல்வேறு வாழ்க்கைச் சூழல்களைச் சேர்ந்த பலவகையான இளைஞர்கள் எழுத வருகிறார்கள். ஆகவே புதிய அனுபவங்கள் இலக்கியத்திற்குள் வருகின்றன. ஆனால் அவ்விளைஞர்கள் அழுத்தம் மிக்க வாழ்க்கையில் வேலைச்சுமையில் இருக்கிறார்கள். ஆகவே கன்னட இலக்கிய மரபை ஆழமான அறியவே இலக்கியத்தில் அர்ப்பணத்துடன் ஈடுபடவோ இயலாதவர்களாக இருக்கிறார்கள். அந்த இரு விசைகளும் சேர்ந்தே நவீன கன்னட இலக்கியத்தை உருவாக்கியிருப்பதாகச் சொன்னார்.

 

பொதுவாக அரசு சார்ந்த முயற்சிகளைத் தவிர இலக்கியப் பரிமாற்றம் இந்திய மொழிகள் நடுவே இல்லை. அதை தவிர்க்கும் நோக்குடன் அவர் நடத்தி வரும் தேஷ்காலா இதழில் மொழியாக்க கதைகளை வெளியிட்டு வருவதாகவும் தமிழில் இருந்து ஜெயமோகன், சு.வேணுகோபால், வா.மு.கோமு கதைகளை வெளியிட்டிருப்பதாகவும் சொன்னார்.

 

இரண்டாவது சிறப்புரையாளரான மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் ஆசிரியருக்கும் அவருக்குமான நட்பைப்பற்றியும்  அவர் மீதான மதிப்பீடுகளைப்பற்றியும் மலையாளத்தில் பேச நானே மொழியாக்கம் செய்ய நேர்ந்தது. இந்த அரங்கின் இரண்டாவது குளறுபடி நான் என் மூக்குக்கண்ணாடியை விடுதியில் மறந்து விட்டுவிட்டேன் என்பது. ஆகவே நான் எழுதிய குறிப்புகளை என்னாலேயே வாசிக்க முடியாமல் திண்டாடினேன். குத்துமதிப்பாக மொழியாக்கம் செய்தேன். ஆனால் அவரது அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு காரணமாக மலையாளமே பெரும்பாலானவர்களுக்குப் புரிந்திருந்தது. பேச்சுக்கு உடனடி எதிர்வினைகள் வந்து கொண்டிருந்தன. பின்னர் வாசகர்கள் என் மொழியாக்கம் தாங்கள் புரிந்துகொண்டது சரிதானா என உறுதிப்படுத்த உதவியது என்றார்கள்.

 

கல்பற்றா நாராயணன் பெரு நாட்டு எழுத்தாளர் மரியோ வர்கா லோஸாவின் [Mario Vargas Llosa] ஓர் உதாரண கதையைச் சொன்னார். மத்தியகால பிரிட்டனில் பெண்கள் மெலிந்து வெளிறி இருப்பதே அழகு என்று கருதப்பட்டது. அதாவது வெளியே நடமாடாத வேலைசெய்யாத பெண்கள் போல. வெளியே நடமாடாமல் இருந்தால் குண்டாகிவிடுவார்கள். அதற்காக உணவைக் கட்டுப்படுத்தவேண்டுமென்றால் விருந்துகளுக்கு போக முடியாது. ஆகவே ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள். நாடாப்புழுவை சாப்பாட்டுக்குள் வைத்து விழுங்கிவிடுவார்கள்.

 

அந்தப்பெண் வயிறு முழுக்க நாடாப்புழு நிறையும். கடுமையாக பசிக்கும். நன்றாக சாப்பிடலாம். ஆனால் உடலில் ஒன்றுமே ஒட்டாது. அதன்பின் அந்தப்பெண் சாப்பிடுவது குடிப்பது எல்லாமே அந்த நாடாப்புழுவுக்காகத்தான். இலக்கியவாதி இலக்கியம் என்ற நாடாப்புழுவை விழுங்கியவன். அவன் சிந்திப்பது செயல்படுவது வாழ்வது எதுவுமே அவனுக்காக அல்ல, அவனுள் இருக்கும் அந்த நாடாப்புழுவுக்காகத்தான். அத்தகைய அர்ப்பணிப்பு இருந்தால் மட்டுமே இலக்கியம் சாத்தியம்.

 

பத்து நூல்கள் ஒரே சமயம் என்றால் ஆச்சரியம் இருக்கும். ஆனால் அவை ஒரே வருடத்தில் எழுதப் பட்டவை அல்ல. அவற்றை எழுத நாற்பதுக்கும் மேல் வருடங்கள் ஆகியிருக்கின்றன என்பதே உண்மை. சீனக்கதை ஒன்றில் ஓர் அரசன் நண்டின் படமொன்றை வரைய ஆசைப் படுகிறான். தேர்ந்த ஓவியன் ஒருவனைக் கொண்டு வந்து வரையச் சொல்கிறான். ஓவியன் இருபது வருட அவகாசமும் இருபது ஊழியர்களும் அதற்கேற்ற செல்வமும் கேட்கிறான். அரசன் சம்மதிக்கிறான்

 

ஓவியன் இருபது வருடம் கடற்கரையில் வாழ்ந்தும் வரையவில்லை. மேலும் இரு மாதங்கள் அவகாசம் கேட்கிறான். மேலும் இரு வாரம் அவகாசம் கேட்கிறான். மேலும் இரு மணிநேர அவகாசம் கேட்கிறான். இன்னும் வரையாவிட்டால் உன்னைக் கொல்வேன் என்கிறான் மன்னன். மேலும் இரு நிமிட அவகாசம் கேட்கிறான். கடைசிக் கணத்தில் சரசரவென ஒரு மகத்தான ஓவியத்தை வரைந்து விடுகிறான். ஒரு ஆக்கத்துக்குப் பின்னால் அத்தகைய நெடும் உழைப்பின் வரலாறு உள்ளது என்றார் கல்பற்றா நாராயணன்.

 

அடுத்து நூல்கள் வெளியிடப் பட்டன. தொடர்ந்து பேசிய யுவன் சந்திரசேகர் ‘பண்படுதல்- சில பண்பாட்டு விவாதங்கள்’ என்ற நூலைப் பற்றி பேசினார். ஆசிரியர் முந்நூற்று அறுபது பாகையும் பார்க்கக் கூடியவர் என்று ஒரு நண்பர் சொன்னதாகச் சொன்ன யுவன் மிக விரிவான பண்பாட்டு ஆராய்ச்சிகள் அக்கட்டுரைகளில் இருப்பதாகச் சொன்னார். ஆனால் எழுத்தாளன் அவற்றை எழுதியிருக்கிறான் என்பதற்கான தடையங்கள் அவற்றில் உள்ளன. குறிப்பாக நடை. ‘புன்னகைக்கும் பெருவெளி’ என்ற கட்டுரையில் உள்ள அபாரமான நகைச்சுவை பண்பட்ட நகைச்சுவைக்கான மிகச் சிறந்த உதாரணம் என்றார்.

 

இந்நூலின் கருத்துக்கள் பலவற்றின் மீது தனக்கு மாறுபட்ட அபிப்பிராயங்கள் உள்ளன என்றார் யுவன். இலக்கியம் அதன் பயன் மதிப்பை வைத்து அளவிடப்படக் கூடாது என்று வாதிடும் ஆசிரியர்  தத்துவத்தை அதன் பயன் மதிப்பை வைத்து அளவிட வேண்டும் என்று கூறும் இடம் ஓர் உதாரணம்.  அவ்வாறு பல இடங்களை சுட்டிக் காட்டலாம் என்றார்.

 

‘லோகி நினைவுகள் மதிப்பீடுகள்’ நூலைப்பற்றி பேசிய வசந்தபாலன் அவர் லோகியைச் சந்தித்த நிகழ்ச்சியை சுவாரசியமாகச் சொன்னார். வெயில் படத்திற்காக மீரா ஜாஸ்மினை ஒப்பந்தம் செய்வதற்காக லோகியைச் சந்திக்கச் சென்றதையும் மீராவை சந்தித்ததையும் கடைசியில் அது நடக்காமல் போனதையும் விவரித்தார். லோகி அங்காடித்தெருவின் உச்சகட்ட காட்சியை கேட்டு பாராட்டி அதை அவர் பயன்படுத்தவில்லை என்றால் அதற்காக வேறு ஒரு கதை எழுதி தானே எடுப்பதாகச் சொன்னார். லோகி என்ற அசலான கலைஞனின் சித்திரம் இந்நூலில் துலங்கி வருகிறது என்றார் வசந்தபாலன்.

 

‘சாட்சிமொழி-சில அரசியல் விவாதங்கள்’ என்ற நூலைப்பற்றி பேச வந்த செல்வ புவியரசன் ஆசிரியரின் இந்த அரசியல்நூலுடன் முழுமையாகவே மாறுபடுவதாகச் சொன்னார். இதில் திராவிட இயக்கத்தைப்பற்றிய மதிப்பீடுகள் முன்தீர்மானங்களுடன் இருக்கின்றன. திராவிட இயக்கத்தை ஒரு சமூக இயக்கமாக அணுகாமல் அதன் தேர்தலரசியல் முகம் சார்ந்தே ஆசிரியர் அணுகுகிறார் என்றார். இந்நூல் இ.எம்.எஸ் குறித்து பேசும்போது காட்டியிருக்கும் சமநிலையை பெரியாருக்கு அளிக்கவில்லை. பெரியாரை ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமே ஆசிரியர் காண்கிறார், சிந்தனையாளராக அல்ல. அது ஆசிரியரை ஒரு திரைக்கதைக்காரர் என்று ஒருவர் சொல்வதைப்போன்றது. பெரியார் தமிழின் முக்கியமான சிந்தனையாளர்

 

பெரியாரின் இயக்கம் மேடை சார்ந்தது, நூல் சார்ந்தது  அல்ல என்கிறார் ஆசிரியர். அது முற்றிலும் தவறான கருத்து. அவரது காலகட்டத்தில் பெரியாரின் எல்லா சிந்தனைகளும் உடனுக்குடன் நூலாக வெளிவந்து கொண்டிருந்தன. எந்தக்கூட்டத்திலும் எத்தனை நூல்கள் விற்றன என்றுதான் பெரியார் கவனிப்பார். அவர் தன் காலகட்டத்தின் எல்லா விஷயங்களைப்பற்றியும் கருத்து தெரிவித்திருக்கிறார். பெரியாரின் சிந்தனைகள் முழுமையாக இன்று கிடைக்கின்றன. அவற்றை முழுமையாக வாசித்துவிட்டு ஆசிரியர் கருத்து சொல்ல வேண்டும் என்றார் செல்வ புவியரசன்

 

‘மேற்குச்சாளரம்’ குறித்து பேசிய பேராசிரியை பர்வீன் சுல்தானா ஆசிரியருடைய எழுத்துக்கும் அவருக்குமான உறவைப்பற்றிச் சொன்னார். குறிப்பாக கொற்றவை அவரை பெரிதும் கவர்ந்த நூல். சென்ற ஆண்டு ஹஜ் பயணம் சென்றபோது புனித குர்-ஆனுடன் கொற்றவையையும் எடுத்துசென்று வாசித்ததாகச் சொன்னார். மேற்குச்சாளரம் அதிகம் அறியப்படாத மேலைநாட்டு நாவல்கள் சிலவற்றை அறிமுகம் செய்கிறது. ஓர் எழுத்தாளன் ஒரு நாவலை திருப்பி எழுதும்போது நாம் இரு ஆசிரியர்களை வாசிக்கும் அனுபவம் கிடைக்கிறது. மாஸ்டர் கிறிஸ்டியன் நாவலில் ஏசு போப்பாண்டவருடன் உரையாடும் பகுதி ஆசிரியரின் நடையில் சிறப்பாக அமைந்துள்ளது என்றார்.

 

இதழாளர் மதன் ‘முன்சுவடுகள்’ நூல் குறித்து பேசினார். சரளமான நகைச்சுவையுடன் பேசிய மதன் வாழ்க்கை வரலாறுகளை நாம் இன்னமும் எழுத ஆரம்பிக்கவில்லை என்றார். பொதுவாக புகழ்பாடி எழுதுவதே வாழ்க்கை வரலாறு என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையை எழுதுவதே வாழ்க்கை வரலாறு என்று மேலைநாட்டு இலக்கிய மரபு நம்புகிறது. ரூஸோவின் சுயசரிதை அவ்வகையில் ஒரு திறப்பாக அமைந்த நூல். தன்னுடைய பால்வினைநோய் குறித்துகூட வெளிப்படையாக எழுதுகிறார். ரஸ்ஸலின் சுயசரிதையைப்போல ஒன்றை நம்மால் யோசிக்க முடியாது. தன்னுடைய கட்டற்ற பாலியல் விருப்பு பற்றி எழுதும் ரஸ்ஸல் தன்னுடைய வாய்நாற்றத்தால் பெண்கள் சங்கடப்படுவதைக் கண்டுகொண்டதைப்பற்றியும் எழுதுகிறார்.

 

இந்நூலில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி எழுதப்பட்ட வரிகளை அல்லது எம்.ஓ.மத்தாய் நேரு பற்றி எழுதிய தகவல்களைபற்றிய வரிகளை ஓர் இதழ் பிடுங்கிப்போட்டு ஆசிரியருக்கு எதிராக காழ்ப்பை கிளப்பிவிட முடியும். ஆனால் அத்தகைய போக்குகள் அழிவுத்தன்மை கொண்டவை. இவை உண்மைகள். ஆகவே பொதுவெளியில் விவாதிப்பதற்கு உரியவை. இந்நூலில் உள்ள வாழ்க்கைக்குறிப்புகள் அனைத்துமே நேரடியானவையாக உள்ளன என்றார் மதன்.

 

இந்திரா பார்த்தசாரதி மூட்டுநோயால் மருத்துவமனைக்கு சென்றிருந்தமையால் கூட்டத்திற்கு வரவில்லை. கடைசியாக நான் என் ஏற்புரையை ஆற்றினேன். விமரிசனங்களுக்கு பதில் சொல்லவேண்டாமென முன்னரே முடிவுக்கு வந்திருந்தேன். ஏனென்றால் நூல்கள் வாசிக்கப்பட்ட பின்னரே அந்த பதில்களுக்கு பொருளிருக்க முடியும். பொதுவாக என் நூல்களைப்பற்றி பேசி முடித்துக்கொண்டேன்.

 

கூட்டத்திற்கு பாலு மகேந்திரா வந்திருந்ததை கூட்டம் முடிந்தபின்னர்தான் கண்டேன். வந்து ஹாய் சொல்லிவிட்டுச் சென்றார்.பல நண்பர்கள் வந்து நூல்களில் கையெழுத்து கேட்டார்கள். கண்ணாடி இல்லாத காரணத்தால் கிட்டத்தட்ட இருட்டில் கையெழுத்து போடுவது போலத்தான் கிறுக்கினேன். கணிசமான பேர் புதிய வாசகர்கள். ஒரிரு சொற்களே பேச முடிந்தது. பொதுவாக பலர் கூடி பேசும்போது அனைவரிடமும் சமமாக உரையாடுவது சிரமமான காரியம். அத்துடன் விவேக் வெளியே சென்று காத்திருந்தார்.

 

வழக்கமாக ஒரு விதி உண்டு, ஒருகூட்டத்தில்  ஒருவர் சொதப்பியாக வேண்டும். சென்னையில் என் முந்தைய நூல் வெளியீட்டு விழா 2004ல். அதில் நண்பர் சோதிப்பிரகாசம் சொதப்பினார். எல்லாருமே நன்றாக பேசிய கூட்டத்தில் நானே சொதப்பியிருக்கிறேன். யாருமே சொதப்பாமல், இழுக்காமல் கச்சிதமாக இக்கூட்டம் முடிந்தது.

 

சென்னையில் இப்போதெல்லாம் இலக்கியக் கூட்டங்களுக்கு ஏராளமான பேர் வந்து அரங்குகள் நிறைவது நல்ல விஷயம். இலக்கியம் மீது இளைய தலைமுறை வாசகர்களுக்கு உருவாகி வரும் ஆர்வத்தையே காட்டுகிறது. பொதுவாக எனக்கு வரும் வாசகர்களை நான் அவதானித்திருக்கிறேன். அவர்கள் கூட்டமாக வருவது குறைவு. தனியாக வருபவர்களாக, தயக்கமானவர்களாக இருப்பார்கள். வெற்றார்வம் கொண்ட வாசகர்களே அனேகமாக எனக்கு கிடையாது. என்னையும், பிறரையும் வாசித்தவர்களாக இருப்பார்கள். அனேகமாக பிற எழுத்தாளர்களைக் கடந்து என் எழுத்துக்களை நோக்கி வந்தவர்களாக இருப்பார்கள்.

 

இதனால் பெருந்திரளை நான்  எதிர்பார்ப்பதில்லை. எனவே அத்தனைபேர் வந்திருந்ததும் கடைசிவரை இருந்து பேசிவிட்டு போனதும் மகிழ்ச்சியுடன் வியப்பையும் அளித்தது. பெரும்பாலானவர்களிடம்  உரையாட முடியவில்லை. இனிமேல் உரையாடல் வடிவில் ஏதேனும் நிகழ்ச்சியை அமைத்தால் நல்லது என்று பட்டது.

முந்தைய கட்டுரைகோவையில் வாசகர் சந்திப்பு
அடுத்த கட்டுரைவம்சி பதிப்பகம் புதிய நூல்கள்