இமயச்சாரல் – 19

காஷ்மீரில் இருந்து ஜம்முவைப்பிரிப்பது ஒரு பெரிய சுரங்கப்பாதை. அதன்வழியாக மறுபக்கம் சென்றபோதே எங்கள் ஓட்டுநர் மறுபிறவி எடுத்துவிட்டவர் போலத் தோன்றினார். ஜம்முவை நெருங்க நெருங்க அவரது முகத்தில் சிரிப்பும் பேச்சில் மிடுக்கும் வந்தன. அதுவரை தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு வந்தவர் என்ன உதவி தேவை செய்கிறேன் என்று பேச ஆரம்பித்தார். வெளியூருக்கு வழிதவறிச்சென்ற நாய் ஊர் திரும்புவதுபோல என்று சிரித்துக்கொண்டோம்.

திரும்பி வரும்போது ஒட்டுமொத்தமாக நினைவில் எழுந்து நின்றது மார்த்தாண்டர் ஆலயமே. அந்த கம்பீரத்தை மீண்டும் திரும்பிச் சென்று பார்க்கவேண்டும் என மனம் ஏங்கியது. அதைப்பற்றியே பேசிக்கொண்டு வந்தோம். அதை இடித்த சிகந்தர் புட்சிகான் காஷ்மீரின் ஷா மீரி வம்சத்தின் இரண்டாவது சுல்தான்[ 1389–1413] இவர் ‘சிலையுடைப்பு சிக்கர்ந்தர்’ என்றே வரலாற்றில் அழைக்கப்படுகிறார். [ (“Sikandar the Iconoclast”]

அதி தீவிர மதவெறியரான சுல்தான் சூபி மதகுருவான மீர் முகமது ஹமதானி என்பவரது வழிகாட்டலில் காஷ்மீரி இந்துக்கள் மேல் மிகப்பெரிய மதத்தாக்குதலை ஆரம்பித்துவைத்தார். லட்சக்கணக்கானவர்கள் மதம்மாறினர். பல்லாயிரம் பேர் கொன்று ஒழிக்கப்பட்டனர். மதம் மாறாதவர்கள் கடுமையான சித்திரவதைகளை சந்தித்தனர். சித்திரவதைகள் மற்றும் கொலைகளுக்காகவே சிக்கந்தர் வரலாற்றில் இடம்பெற்றார்

மார்த்தாண்ட் ஆலயம் 1868ல் ஜான் பர்க் எடுத்த புகைப்படம்

சிக்கந்தர் பாட்டு நடனம் போன்றவற்றை தடைசெய்தார். இந்து பௌத்த வழிபாடுகளை அழித்தார். காஷ்மீர் சமவெளியின் மிகப்பெரும்பாலான இந்து ஆலயங்களையும் பௌத்த விகாரைகளையும் அழித்தவர் அவரே. அவரது வரலற்றை எழுதிய இஸ்லாமிய ஆட்சியாளர்களே அவர் ஆயிரம் ஆலயங்களையும் விகாரைகளையும் இடித்து அழித்ததாக சொல்கிறார்கள். திலகம் அணிந்த எந்தத் தலையையைம் எப்போதுவேண்டுமானாலும் வெட்டி வீச அனுமதி இருந்தது. அவை அனைத்துமே ஷிர்க் [இறைவனுக்கு இணை வைத்தல்] என்னும் பாவமாக அறிவிக்கப்பட்டன.

காஷ்மீரின் தொன்மையான இஸ்லாமிய வரலாற்றுநூலான பஹரிஸ்தான் இ ஷாகி சுல்தானின் மதவெறியின் அழிவுகளை அவரது சாதனைகளாக மிக விரிவாகச் சித்தரிக்கிறது. சூபியான ஹமதானி காஷ்மீருக்கு வந்ததுமே அவரைச் சென்று பணிந்த சுல்தான் நாட்டை அவரது பாதங்களில் காணிக்கை வைத்தார். அதன் பின் அவரது ஆணைப்படி ஆலயங்களை இடிக்க ஆரம்பித்தார். ஒருநாளேனும் ஆலயம் ஒன்று இடிந்த செய்தியைக் கேட்காமல் சுல்தான் தூங்கச்சென்றதில்லை என்று அந்நூல் சொல்கிறது. காஷ்மீரை இஸ்லாமிய மயமாக்கியவர் சிக்கந்தர்தான்.

ஹமதானி

ஹமதானி பாரசீகத்தில் பிறந்தவர். அங்கிருந்து தன் எழுநூறு மாணவர்களுடன் கிளம்பி காஷ்மீருக்கு வந்தார். காஷ்மீர் சுல்தானை வென்று தன் மாணவராக ஆக்கியபின் தன் அதிதீவிர மதக்கொள்கைகளை பரப்பத் தொடங்கினார். அவரது வழிகள் மிகமிகக் குரூரமானவை என வரலாறு பதிவுசெய்துள்ளது. காஷ்மீர் சமவெளியில் இருந்த அனைத்து கோயில்களையும் விகாரைகளையும் அழித்து அனைத்தையும் மசூதிகளாக ஆக்கினார் என்பதே அவரது வரலாற்றில் சொல்லப்படும் சாதனையாக உள்ளது.

ஆனால் ஹமதானி ஒரு நல்ல வணிகர். ஆட்டுமுடியால் சிறந்த கம்பளங்கள் செய்யும் கலையை அவர்தான் தொடங்கிவைத்தார் எனப்படுகிறது. சிறந்த கவிஞரும் கூட. நூறுக்கும் மேற்பட்ட மதநூல்களை எழுதியிருக்கிறார். அல்லாமா இக்பால் போன்ற நவீனக் கவிஞர்கள்கூட அவரை புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.

இன்று காஷ்மீரில் சுன்னி தீவிரவாத அமைப்பினரால் சுல்தான் சிக்கந்தரும் அவரது குரு ஹமதானியும் காஷ்மீரை ‘விடுவித்தவர்களாக’ கருதப்படுகிறார்கள். காஷ்மீர் தீவிரவாதிகளால் அழைக்கப்பட்டுச் செல்லும் இதழாளர்கள் ஹமதானியின் கபரிடம் சென்று அஞ்சலி செலுத்தும் வழக்கம்கூட உள்ளது. அருந்ததி ராயும் சென்றிருந்தார் என்று அறிந்தேன்.

DSC_0129_thumb

சுவாரசியமான ஒரு விஷயத்தை கவனித்தேன். அவந்திபுரா உட்பட கணிசமான இந்து பேராலயங்கள் இஸ்லாமியரால் இடிக்கப்படவில்லை, நிலநடுக்கத்தாலும் வெள்ளத்தாலும் அழிந்தன என்று அங்குள்ள வழிகாட்டிகள் சொல்கிறார்கள். அரசுக்குறிப்புகளும் சொல்கின்றன. ஆனால் அவை அனைத்துமே சிக்கந்தராலும் பிறகு வந்த சுல்தான்களாலும் இடிக்கப்பட்டன என அந்த சுல்தான்களின் வரலாற்றாசிரியர்களாலேயே எழுதப்பட்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இன்றைய சுன்னி தீவிரவாதிகளும் அவை இஸ்லாம் மதத்தால் ‘தூய்மைப்படுத்தும்பொருட்டு’ அழிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். வரலாற்றை அணுகுவதில் இந்துக்களுக்குத்தான் பெரும் பிரச்சினைகள் உள்ளன.

உதம்பூர் என்னும் ஊரில் தங்குவதாக திட்டம். வந்துசேர இரவாகிவிட்டது. மலைப்பாதையில் சுழன்று சுழன்று வந்த பயணம். தொங்கும் ஊர்களை பார்த்துக்கொண்டே வந்தோம். உதம்பூரில் அரசினர் விடுதியில் அறை. முதலில் அறையே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். பிறகு எங்கள் கெஞ்சலைக் கேட்டு இறங்கி வந்தனர். அறைகள் மொத்தம் நாநூறு ரூபாய்க்குக் கிடைத்தன. பராமரிக்கப்படாத அறைகள். ஆனால் எங்களைத்தவிர அங்கே எவரும் தங்கியிருக்கவில்லை.

காலையில் எழுந்ததும் கிர்மாச்சி என்னும் சிற்றூரில் உள்ள கோயில் வளாகங்களைப் பார்ப்பதற்காகச் சென்றோம். சேனாப் நதிக்கரையில் உள்ள இந்த ஆலயவளாகத்துக்கு சாலையில் இருந்து ஒற்றையடிப்பாதை வழியாக ஆற்றுக்குள் இறங்கி நடந்து செல்லவேண்டும்.

மகாபாரதத்தில் வரும் கீசகன் என்னும் அரசர் கட்டியதாக இக்கோயிலைப்பற்றி தொன்மக்கதை உள்ளது. [ஆனால் கீசகன் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் விராட தேசம் கங்கையின் கரையில் உள்ளது] கிர்மாச்சி ஏழு சிறிய கோயில்கள் கொண்ட ஒரு வளாகம். ஆய்வாளார்கள் இக்கோயில்களில் பழையனவற்றை கிபி இரண்டாம்நூற்றாண்டில் குஷானமன்னர்கள் கட்டியிருக்கலாம் என்றும் கிபி எட்டாம் நூற்றாண்டில் காஷ்மீரை ஆண்ட தேவ் வம்சத்து மன்னர்கள் விரிவாக்கியிருக்கலாமென்றும் சொல்கிறார்கள்.

கச்சிதமான சிறிய ஆலயங்கள். அழகியல்ரீதியாக அவை கஜூராகோ ஆலயங்களுக்கு மிக நெருக்கமானவை. வளைந்து செல்லும் சோளக்கதிர் போன்ற கோபுரம். கருவறையும் மண்டபமும் ஒன்றேயான வடிவம். உயரமான அடித்தளம். சிவப்புக் கற்களால் கட்டப்பட்டவை. சிற்பங்களனைத்தும் காலப்போக்கில் கரைந்து போயிருந்தன. கருவறைகள் காலியாகக் கிடந்தன. அனைத்துமே சிவன் கோயில்கள் . ஒரே ஒரு கருவறையில் மட்டும் லிங்கம் இருந்தது.
DSCN4593

தொல்லியல்துறையால் சிறப்பாக பராமரிக்கப்பட்டுவரும் ஆலயவளாகம் என்று தெரிந்தது. நாங்கள் செல்லும்போது அங்கே எவரும் இல்லை. ஆலயங்களை பார்த்துமுடிக்கும்போதுதான் ஒருவர் வந்து அமர்ந்து எங்களிடம் கட்டணச்சீட்டு அளித்தார். காலை வேளையில் ஓர் ஆலயவளாகத்தில் இருப்பது நிறைவளிக்கக் கூடியது. அன்றைய நாள் அழகுடன் மலரவிருப்பதாக ஒரு மனச்சித்திரத்தை அது அளிக்கிறது.

இங்குள்ள ஆலயங்களின் வரலாறு சரியாகத் தெரியவில்லை என்பதனாலேயே ஒரு குறிப்பிட்ட மனநிலை அமைந்துவிடுகிறது. யார் கட்டியது, எப்போது கட்டியது என்ற கவனம் இல்லாமல் ஒரு நகையை, சிற்பத்தை பார்ப்பதுபோல பார்க்க ஆரம்பித்துவிடுகிறோம். சிவந்த கற்களால் ஆன ஆலயங்கள் தென்னகத்தில் இல்லை. கற்கோயில் என்றாலே நமக்கு கருங்கல்லும் மணல்கல்லும்தான். சிவந்த கல்லால் ஆன கோயில் கற்கோயில் என்பதை விட ஒரு பெரிய சிற்பம் என்றே எனக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. நுட்பங்களை வைத்துப்பார்த்தால் இவற்றை கல்லில் செய்த நகைகள் என்று சொல்லலாம்.

வடஇந்தியாவில் மிகப்பெரும்பாலான ஆலயங்கள் பன்னிரண்டாம்நூற்றாண்டில் அழிக்கப்பட்டுவிட்டன. அழியாமல் எஞ்சியிருக்கும் ஆலயங்கள் கைவிடப்பட்ட நகரங்களில் காடுகளுக்குள் மறைந்து வழிபாடற்றுக் கிடந்தவை மட்டுமே. கஜூராகோ அப்படிப்பட்ட ஆலயவளாகம். கிர்மாச்சியும் அவ்வாறு ஐநூறாண்டுகளுக்கும் மேலாக காடுகளுக்குள் கைவிடப்பட்டு கிடந்த கோயில் வளாகம். ஆகவேதான் அது பெருமளவுக்கு முழுமையாக எஞ்சியிருக்கிறது. ஜம்மு பகுதியின் ஆலயங்கள் எப்படி அமைந்திருக்கும் என்பதற்கான ஆதாரம் இது.
kirmassi1
ஆனால் இவ்வாலயத்திற்கும் காஷ்மீர் சமவெளியின் மாபெரும் ஆலயங்களான மார்த்தாண்ட் சூரியர் கோயில் போன்றவற்றுக்கும் சம்பந்தமே இல்லை. இவற்றின் அமைப்பு கங்கைச்சமவெளி முதல் மத்தியப்பிரதேசம் வரை பரவியிருக்கும் சிற்பமரபையே காட்டுகின்றன. காஷ்மீர் ஆலயங்கள் அளவில் மிகப்பெரியவை. கரியநிறமான கற்களால் கட்டப்பட்டவை. சிற்பங்களும் சரி கட்டிட அமைப்பும் சரி காந்தார பாதிப்பு கொண்டவை.

உதம்பூரில் இருந்து ஐந்து கிமீ தொலைவில் இருந்த லாண்டன் கோட்லி என்னும் இடத்தில் இருந்த ஜலந்தரிய தேவி ஆலயத்துக்குச் சென்றோம். வழிகண்டுபிடித்து சோளம் பயிரிடப்பட்டிருந்த வயல்கள் வழியாகச் சென்று அந்தக் கோயிலை கண்டுபிடித்தோம். அங்கே இருந்த பெரிய ஊற்றுக்குளத்தில் ஓர் அன்னை தன் குழந்தைகளை குளிப்பாட்டிக்கொண்டிருந்தாள். அன்னியரைக் கண்டதும் நிர்வாணமாகக் குளித்துக்கொண்டிருந்த குழந்தைகள் திகைத்தன.
DSC_0121_thumb
சிறிய இரண்டு கோயில்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து அமைந்திருந்தன. இரு கருவறைகளுமே ஒழிந்து கிடந்தன. கங்கை அன்னைக்கான கோயில். அங்கே ஒரு ஊற்று இருந்தது. அதைச்சுற்றி கட்டப்பட்டிருந்த சுவர்களில் கங்கையின் சிலை இருந்தது. அதுதான் கோயிலின் மூலத்தெய்வமாக இருந்திருக்கக்கூடும் என்று தோன்றியது. முற்றிலும் மறக்கப்பட்டு கிராமத்தின் அமைதிக்குள் வயல்வெளிக்குள் கிடந்த கோயிலின் வளாகத்தில் நின்றிருந்தபோது தெற்கே அத்தனை தொலைவில் இருந்து தேடி வந்து அங்கே நின்றிருப்பதன் விசித்திரத்தை எண்ணி புன்னகைக்கத் தோன்றியது.

jalawthariyatheevi

முந்தைய கட்டுரைஇமயச்சாரல் – 18
அடுத்த கட்டுரைஏகலைவனின் வில்