ஐயா வணக்கம்,
அறுபத்தைந்து ஆண்டுகள் இவ்வுலகில் தனிக்கட்டையாக வாழ்ந்து தற்போது அமைதியற்று வாழும் நிலையில் அமைதி தேடி, நீங்கள் எழுதியது போல் பரதேசியாக, இந்திய யாத்திரை செல்ல எண்ணியுள்ளேன். காசிக்கு சென்று அங்கே இருந்து விடவும் எண்ணம்.உங்கள் உதவியை வேண்டுகிறேன்.பண உதவி அல்ல.செல்வது, தங்குவது போன்ற….நன்றி
எம்
அன்புள்ள எம் அவர்களுக்கு,
உங்களை புரிந்து கொள்ள உங்கள் குறைவான வரிகள் போதுமானவையாக இல்லை. ஆனால் வசதிகளைப் பற்றிய உங்கள் கேள்வி ஒருவாறு உங்களை அடையாளம் காட்டுகிறது.
காசி அல்லது இமயமலைப்பகுதிகளுக்குச் செல்வது என்பது சாதாரணமாக நம் மனதிலெழுவதே ஆனால் அது எளியதல்ல. அதற்கு சில சூழ்நிலைகள் சில மனநிலைகள் இருக்கவேண்டும். ஒன்று, காசியைப்பற்றி மிக ஆழமான நம்பிக்கை, அது புண்ய ஷேத்ரம் என்ற தெளிவு, இருக்கவேண்டும்.
அந்நிலையில் அங்குள்ள எந்த அசௌகரியமும் துன்பமும் நம்மை படுத்தாது. நாம் அங்கே கொள்ளூம் மனநிறைவு நம் அகத்தில் உள்ள காசியின் விளைவு. அதாவது புறத்தே காணும் காட்சிகள் நம் அகத்தில் பலவகையான குறியீடுகளாக மாறுவதனால் ஏற்படுவது. கோயிலின் லிங்கம் சப்பையாக இருந்தாலும் நாம் பரம் பொருளை அதில் காண முடியும் என்பது போலத் தான் அதுவும்.
அல்லது, பயணங்களுக்குரிய சாகச உணர்ச்சி இருக்க வேண்டும். புதிய இடங்களைப் பார்க்க, புதிய மனிதர்களை சந்திக்க, தணியாத ஆவல். அந்நிலையில் பலவகையான எதிர்மறை அனுபவங்கள் கூட நமக்கு நிறைவளிப்பதாகவே அமையும். அவை தீவிர அனுபவங்கள் என்பதனால்.
இந்த இரு உணர்ச்சிகளும் இல்லாமல் காசிக்கோ அல்லது வேறு எந்த புது இடத்துக்கோ செல்வீர்கள் என்றால் சிலநாட்களிலேயே சலிப்பும் சோர்வும் எஞ்சும். எரிச்சலும் கசப்பும் தங்கும்.
ஏனென்றால் நாம் நம் அறுபது வயது வரை வாழும் வாழ்க்கை நம்மை மிகவும் பழகி விடுகிறது. சுவைகள், வசதிகள் பழகி விடுகின்றன. எது நல்லது, எது தேவையானது, எது அழகானது என்பதில் எல்லாம் உறுதியான அபிப்பிராயங்கள் உருவாகி விடுகின்றன. பழகாத ஓர் இடத்துக்குச் சென்றால் அங்கே நாம் விரும்பாத விஷயங்களே அதிகம் இருக்கும்.
அத்துடன் உண்மையிலேயே காசி வசதியான அழகான ஊர் அல்ல. அங்கே வரும் மக்களிடம் ததும்பும் காலாதீதமான ஓர் உணர்வெழுச்சி உண்டு. கங்கையின் கம்பீரம் உண்டு. இவ்விரு அம்சங்களையும் கவனிக்கும் கண் கொண்டவர்களுக்கு காசி கண்ணுக்குத்தெரியும். அல்லாதவர்களுக்கு காசி வெறும் அழுக்கான நெரிசலான படித்துறைகள் மட்டுமே.
மேலும் காசியின் வெயிலும் குளிரும் தென்னிந்தியர்களாகிய நமக்கு ஒவ்வாதவை. காசி நம்மை எளிதில் நோய்வயப்படச் செய்துவிடும். ஆகவே ஒரு எளிய மன எழுச்சிக்கு ஆட்பட்டு காசிக்கோ இமயமலைக்கோ செல்வீர்கள் என்றால் அது தவறான முடிவாகவே ஆகிவிடும்.
பொதுவாக துறந்து செல்வது என்பது சொல்வதைப் போல செய்வதற்கு எளிய விஷயமே அல்ல. துறந்தவற்றை நினைவுகளாக, ஏக்கங்களாக, கசப்புகளாகச் சுமந்து செல்வீர்கள் என்றால் அவை அகத்தில் இன்னமும் பிரம்மாண்டமாக வளர்ந்து பெரும் சுமையாக அழுத்தி விடும்.
மேலும் மனிதர்கள் யாராக இருந்தாலும் தனியாக வாழ முடியாதவர்கள். தனியாக வாழ்வதற்கு அபாரமான ஆன்ம பலம் தேவையாகும். அது இல்லையேல் தனிமை விரைவிலேயே ஆழமான சோர்வுக்கும் சலிப்புக்கும் கொண்டுசெல்லும். அப்படி பலரை நானே கண்டிருக்கிறேன்.
அனைத்தையும் விட முக்கியமான ஒன்று உண்டு, செயலின்மை. மனிதன் செயலுக்காக வடிவமைக்கப்பட்ட இயந்திரம். அவன் உடல் ஒன்றும்செய்யாவிட்டாலும் மனம் செயலாற்றியபடியே உள்ளது. மனம் செயலாற்ற உடல் சும்மா இருக்குமென்றால் அது மாபெரும் சலிப்பாக ஆகிவிடும். மனம் செயலற்ற நிலையை அடைவது யோகம் மூலம் தியானம் மூலம் அடையப்படுவது. அவர்கள் ‘சும்மா’ இருக்கலாம். [‘சிந்தையற சும்மா இருப்பதே சுகம்’ என்கிறார் தாயுமானவர். சிந்தையற்றபின்னரே சும்மா இருக்க வேண்டும்] மற்றவர்கள் எங்காவது சும்மா இருந்தால் அதுவே நரகம்.
ஆகவே உங்களுக்கு என்ன தேவை, உங்கள் மனநிலை என்ன என்பதை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு இடமாறுதல் தேவையா? அதற்குக் காரணம் இப்போது நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையின் மாற்றமில்லாத சலிப்பா? பயணம் செய்ய விரும்புகிறீர்களா? வேறு ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க விரும்புகிறீர்களா? இந்தக்கேள்விகளுக்கு திட்டவட்டமான ஒரு பதிலை தேடியபின்னர் மேலே முடிவெடுங்கள்.
அன்றாட வாழ்க்கையின் சலிப்புதான் என்றால் பயணம் செய்வது மிகச்சிறந்த வழிதான். வேறு யாருடனாவது இணைந்து பயணம் செய்ய முடியுமென்றால் அப்படிச் செய்யலாம். தனித்துச்செல்ல விருப்பம் என்றால் அதை தேர்வு செய்யலாம். காசி ஓர் இலக்குதான். இந்தியா முழுக்கவே புண்ணியஸ்தலங்கள்தான். [நாங்கள் சென்ற பாதை ஒன்று என் இணையதளத்திலேயே உள்ளது]
இடமாற்றம் தேவை என்றால் அது உங்கள் உடல்நலத்துக்கு ஒத்துப்போகக்கூடிய, உங்களால் சமாளிக்கக்கூடிய,இப்போது உங்களுக்கு இருக்கும் சலிப்பை வெல்லக்கூடிய ஓர் இடமாக இருந்தால் நல்லது. நீங்கள் ஒரு தமிழக நகரில் இருந்தால் ஏன் ஒரு சிறு கிராமத்துக்கு செல்லக்கூடாது? ஆந்திராவிலோ கர்நாடகத்திலோ ஒரு புத்தம்புது நிலத்தை நோக்கிச் செல்ல்லக்கூடாது? அங்கே சட்டென்று ஒரு புதுவாழ்க்கை தோன்றுவது போல உணர முடியும். அது உற்சாகத்தை அளிக்கும்.
ஆனால் எங்கே சென்றாலும் அந்த இடத்தில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதே முக்கியம். அங்கே ஏதேனும் செயலில் நீங்கள் உங்களை மூழ்கடித்துக்கொண்டாகவேண்டும். எதையும் செய்யாமல் இருந்தீர்கள் என்றால் எந்த இடமும் சலிப்பு தருவதே. கர்மம் செய்வாயாக என்றே நம் முதனூல் நமக்குச் சொல்கிறது. கர்மத்தை தாண்டிய விபூதிநிலையும் கர்மம் வழியாக கைவருவதே
ஒருமுறை நெல்லை அருகே கயத்தாறுக்குச் சென்றிருந்தபோது அங்கிருந்த கோயிலின் அர்ச்சகரிடம் பேச நேர்ந்தது. நீதித்துறையில் உயர்நிலையில் இருந்தவர். சட்டென்று கிளம்பி அங்கே வந்து தங்கி அந்த ஆலயத்திருப்பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரது வாழ்க்கையின் இன்னொரு தொடக்கம் அது. வாழ்க்கை இன்னமும் மிச்சமிருக்கிறது என்ற உணர்வை அது உருவாக்குகிறது.
அப்படி பலரை நான் அறிவேன். கிராமங்களுக்குச் சென்று இயற்கை வேளாண்மையை ஆரம்பித்தவர்கள். பெரிய மொழிபெயர்ப்புப் பணிகளை ஆரம்பித்தவர்கள். ஹோமியோ மருத்துவமனை தொடங்கியவர்கள். அனைவரும் மீண்டும் ஒரு வாழ்க்கையைக் கண்டு கொண்டார்கள். உற்சாகத்துடன் நெடுநாள் வாழ அது அவர்களுக்கு உதவியது.
எந்த மனிதராக இருந்தாலும் வாழ்க்கையில் மூன்று தொடக்கங்கள் தேவை. முதல் தொடக்கம் கல்வி. எந்தக்கல்வி என்று தேர்ந்தெடுப்பது. அது சமூகத்துக்காக. இரண்டாவது தொடக்கம் வேலையும் குடும்பமும். இது தன்னைச் சார்ந்தவர்களுக்காக. மூன்றாவது தொடக்கம் முதுமையில். இது தனக்காக மட்டுமே. தனக்கு மனநிறைவு அளிக்கக்கூடியதை மட்டுமே செய்தல். இந்த மூன்றாவது தொடக்கம் நிகழாதவருக்கு முதுமை என்பது சலிப்பும் சோர்வும் மட்டுமே உடைய ஒரு காலகட்டம்தான்.
முதுமைக்காக ஒரு தனி வாழ்க்கையை, அதுவரையிலான வாழ்க்கையில் இருந்து முற்றாக அறுத்துக்கொண்டு புத்தம் புதிதாக ஒன்றை, தொடங்கியாக வேண்டும். அதை ஈராயிரம் வருடங்களாக நம் மரபு சொல்லிவருகிறது. அதற்கு வானப்பிரஸ்தம் என்று பெயர். அதன்பின் அதுவரையிலான வாழ்க்கையுடன் உணர்வு ரீதியான தொடர்பு கொண்டிருக்கக் கூடாது. மகளுக்கு பணக்கஷ்டம் பேத்திக்கு படிப்பு வரவில்லை போன்ற விஷயங்களில் இருந்து முற்றாக விலகிவிடவேண்டும். அதுவே வானப்பிரஸ்தம்.
நீங்கள் தனிக்கட்டை என்றீர்கள். ஒருவகையில் அது முதுமையில் ஒரு விடுதலைதான். உங்களுக்கு தேவையாக இருப்பது ஒரு செயல்தளம் என்றே எனக்குப்படுகிறது.
உங்களுக்கு எது உகந்தது, எதைச் செய்தால் நீங்கள் நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பீர்கள் என்று நீங்கள்தான் சொல்லமுடியும். ஒருவருடைய விடைகள் இன்னொருவருக்குச் சரியாக இருப்பதில்லை. அனைவருக்கும் உரிய பொதுவான இடமோ வழியோ ஏதும் இல்லை.
சிந்தித்து முடிவெடுங்கள்.
அன்புடன்
ஜெ
மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Dec 29, 2009