வண்ணங்களின் சுழி

வண்ணக்கடல் வண்ணக்கொந்தளிப்புகளின் கதை அல்ல. வண்ணத்திரிபுகளின் கதை. மகாபாரதத்தின் மாபெரும் அவலத்தை நிகழ்த்திய அடிப்படை விசைகளில் வெவ்வேறு காரணங்களால் வெளியேதள்ளப்பட்டவர்கள், அவமதிக்கப்பட்டவர்கள், அடையாளமறுப்புக்கு உள்ளானவர்களின் வன்மம் முக்கியமானது. அவற்றை நோக்கி விரியும் புனைவுலகம் இது

அந்தக் கதைகளை இணைக்கும் மையச்சரடாக உள்ளது இளநாகனின் மெய்த்தேடல். அது படிப்படியாக வளார்ந்து செல்கிறது. வெவ்வேறு நிலக்காட்சிகள் வழியாக. வெவ்வேறு சிந்தனை மரபுகள் வழியாக.

மகாபாரதம் அனைவருக்குமான கதை. அனைவரும் தங்கள் கதைகளைக் கொண்டு சேர்த்துவைத்த களஞ்சியம். ஆகவே அது அசுரகுலத்தின் வரலாற்றையும் பீடுறவே சொல்கிறது. இந்நாவல் அந்த வரலாற்றைத் தொகுத்து முழுமையாக்கி முன்வைக்கிறது.

காவியத்தை கண்ணீருடன் வாசிக்கவேண்டுமென எனக்குக் காட்டியவர் பேராசிரியர் ஜேசுதாசன். அவரிடமிருந்தே நான் கம்பராமாயணத்தின் உணர்வுநிலையை புரிந்துகொண்டேன். அவரை எனக்கு அறிமுகம்செய்த வேதசகாயகுமார் என் நன்றிக்குரியவர்,

பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களின் தூயநினைவுக்கு இந்நூலைப் படைக்கிறேன்.

ஜெ

[வண்ணக்கடல் நாவலுக்கான முன்னுரை]

முந்தைய கட்டுரைஇமயச்சாரல் – 17
அடுத்த கட்டுரைஇமயச்சாரல் – 18