இமயச்சாரல் – 18

எங்கள் பயணத்திலேயே முக்கியமான கோயில் நாங்கள் ஆறாம் தேதி காலையில் பார்த்த மார்த்தாண்டன் ஆலயம்தான். மார்ட்டண்ட் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் இவ்வாலயம் மார்த்தாண்டனாகிய சூரியனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. இந்த ஆலயத்தைப்பற்றி நிறையவே கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் நேரில் சென்று பார்த்தபோது பிரமித்துப்போனோம். இன்று மையக்கருவறை இடிந்த நிலையில் உள்ளது. முகப்புக்கோபுரவாயிலும் இடிந்து நிற்கிறது. ஆனால் இவ்வாலயத்தின் மகத்தான கட்டமைப்பை கற்பனையில் விரித்துக்கொள்ள முடிந்தது.

மார்த்தாண்ட் இந்திரன்

கிரேக்கபாணி காந்தாரக் கலையின் சாயல் அழுத்தமாக விழுந்த ஆலயம் இது. உருண்ட தூண்கள் நிரைவகுத்த பிராகாரங்கள். மேலே முக்கோண வடிவக் கூரை. அதன்மேல் சிறிய கோபுரம். பிராகாரம் என்பது 365 சிறிய கருவறைகளால் ஆனது. ஒவ்வொன்றிலும் ஒரு தெய்வம் இருந்திருக்கிறது. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கருவறைமேல் கோபுரவாயில் தாண்டி வரும் கதிரவனின் முதல் கதிர் விழுவதுபோல அமைக்கப்பட்டிருக்கிறது என்றார்கள். உண்மையா என்று தெரியவில்லை. மொத்த ஆலயமும் சிலேட் நீலத்தில் இடிபாடுகளாக இருந்தது. அங்கே இருக்கையில் டாலியின் உருகும் கடிகாரங்களை நினைவுகூர்ந்தேன். இது உருகிவழியும் ஆலயம்.


மட்டன் அருகே உள்ள மார்த்தாண்ட் ஆலயத்துக்கு சுற்றுலாப்பயணிகள் அனேகமாக வருவதில்லை. உள்ளூர்க்காரர்கள் மனம்நிறைந்து வரவேற்றாலும் தீவிரவாத அமைப்புகள் பயணிகளைத் தாக்குவது எல்லா வருடமும் நிகழ்கிறது. பெண்களை குறிப்பாக தாக்குகிறார்கள். கார்க்கோட வம்சத்தின் லலிதாதித்த முக்தபீடரால் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இவ்வாலயம். ஆனால் இருநூறு வருடங்களுக்கு முன்னரே ரணாதித்தரால் இதன் அடித்தளம் போடப்பட்டுவிட்டது என்றார்கள்.

காஷ்மீருக்கே உரிய தனித்துவம் மிக்க கட்டடக்கலையின் மிகச்சிறந்த உதாரணம், சாதனை இவ்வாலயம்தான். பதினைந்தாம் நூற்றாண்டில் சிக்கந்தர் புட்ஷிகானால் இவ்வாலயம் அழிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகாலம் சிக்கந்தர் இவ்வாலயத்தை அழித்ததாகச் சொல்லப்படுகிறது. நெடுங்காலம் மண்மேடாகக் கிடந்த இந்த ஆலயத்தை மீட்டு இன்றைய நிலையில் பாதுகாக்க சர் அலக்ஸாண்டர் கன்னிங்ஹாம் பெருமுயற்சி எடுத்துக்கொண்டார்.

வட இந்தியா முழுக்க முக்கியமான சூரியனார் கோயில்கள் உள்ளன. சௌரமதம் முதன்மையான அரசமதமாக இருந்திருக்கிறது. காஷ்மீரின் மன்னர்கள் சூரியவம்சத்தினர் என்று தங்களை சொல்லிக்கொண்டார்கள். சூரியகோயில்களில் இன்று ஓரளவு முழுமையாக இருக்கும் கோயில் சவாய்மாதாப்பூரில் உள்ளதுதான். கொனார்க் சூரியர் கோயில் புகழ்பெற்றது. ரதவடிவில் அமைந்த ஆலயம் அது. பாகிஸ்தானில் உள்ள மூல்தானில் ஒரு பெரிய ஆலயத்தின் இடிபாடு உள்ளது. ஆனால் இந்தியாவிலேயே பெரிய சூரிய ஆலயம் மார்தாண்ட் ஆலயமாகவே இருந்திருக்கும். இது சக்கர வடிவம் கொண்டது. அதாவது ஒரேபோன்ற நான்கு கருவறைகளும் வாயில்களும் படிக்கட்டுகளும் கொண்டது.

இந்த ஆலயத்தின் வளாகத்தில் நின்றிருந்தபோது சமகாலத்தை இழந்து தொன்மையான வரலாற்றுக்காலத்துக்குள் சென்றுவிட்ட உணர்வே உருவானது. புகைப்படங்கள் ஏமாற்றுபவை. இந்த ஆலயத்தின் அடித்தளமே நம் சராசரி ஆலயங்கள் அளவுக்கு உயரமானது. தலைக்குமேல் மாபெரும் கற்குவியல்களாக எழுந்து நின்றிருக்கின்றது கருவறை. அங்கே சிலை ஏதும் இல்லை. ஆனால் கருவறைச்சிலை கோயிலின் ஏதேனும் ஒரு பகுதியில் இருக்கும். ஏழுகுதிரைகளில் செல்லும் சூரியனின் சிலை முகப்பிலேயே இருந்தது.

வாயிலின் இருபக்கமும் கங்கையும் யமுனையும் முதலையிலும் ஆமையிலும் ஆரோகணித்திருந்தனர். யானைமேல் ஏறிய இந்திரன், தொப்பையுடன் செண்டு ஏந்திய குபேரன், வருணன் சிலைகள் சுவர்களில் இருந்தன. காஷ்மீரச் சிற்பக்கலைக்கு இந்தியாவில் வேறெங்கும் இல்லாத தனித்தன்மை உண்டு என்பதைக் காட்டும் அழகிய சிற்பங்கள் அவை.

அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பும்சு என்னும் சிற்றூரில் இருக்கும் குகைக்கோயிலைப் பார்ப்பதற்காகச் சென்றோம். செல்லும்வழியில் ஜீலம் நதியின் கிளைநதியான ரிட்டார் ஒளியுடன் பெருகி வழிந்துகொண்டிருந்தது. அதிலேயே குழாய்களை இறக்கி கீழே ஊர்களுக்கு குடிநீர் கொண்டுசென்றார்கள். நதியை தலைமேல்நீர்த்தொட்டியாகப் பயன்படுத்துவது சற்று வேடிக்கையாகவே இருந்தது.

பும்சு குகை

லிட்டார் நதிக்கரையில் ஒரு பிரம்மாண்டமான மசூதி இருந்தது. அது பதினைந்தாம் நூற்றாண்டு சூபியான பாபா ராம்தின் ரெஷி மற்றும் அவரது மாணவரான ருக்கு தின் ரெஷி இருவருக்குமாக கட்டப்பட்ட தர்கா. அதன் அருகே ஒரு பெண்மணி வேண்டுதலுக்காகக் கொண்டுவந்த சாதத்தை அளித்துக்கொண்டிருந்தார். கைநீட்டினோம். புளியோதரையேதான். பெருமாளுக்கு மட்டுமல்ல புளியோதரை என்று தெரிந்தது. அருகே இருந்த பும்சு குகைக்கு அந்த அம்மணியே வழிகாட்டினார். சற்று சுற்றிவளைத்து வீடுகளின் முற்றங்கள் வழியாகச் செல்லவேண்டும். அறுபதடி வரை ஏறிச்சென்று அந்த குகைக்கோயிலை அடைந்தோம்.

மார்த்தாண்ட் மூலச்சிலை சூரியன்

பும்சுவில் மூன்று குகைக்கோயில்கள் இருந்துள்ளன. இரண்டு குகைகள் இடிந்துவிழுந்து நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன. அழகிய முகப்பு கட்டப்பட்டுள்ள குகை ஒன்று திறந்து கிடந்தது. காவல் ஏதுமில்லை. இயற்கையான குகைதான். உள்ளே சிறிய கோயில் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அது நாரா அரசர்களால் கட்டப்பட்டது. காலதேவர் ஆலயம் என அழைக்கப்பட்டிருந்தது. கிபி இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்ட இந்தக் கோயில் காஷ்மீரின் புராதனமான கட்டிடக்கலையின் மிகச்சிறந்த உதாரணம்.

[மார்த்தாண்ட் மிதுன சிற்பம்]

கோயில் கட்டப்படுவதற்கு முன்பு அங்கே இருந்த சிவலிங்கம் தனியாக நடப்பட்டிருந்தது. மிகத்தொன்மையான சிவலிங்கம் அது. பிற்காலச் சிவலிங்கங்கள் போலன்றி கச்சிதமாக ஆண்குறி வடிவிலேயே இருந்தது. காஷ்மீர சைவத்தின் தொன்மையின் அடையாளம் அது. குகைக்குள் குளிர்ந்த இருளில் சற்று நேரம் அமர்ந்து காஷ்மீரின் தொன்மைக்குள் வாழ்ந்தோம்.

திரும்பி வரும்போது அனந்தநாக் மாவட்டத்தில் ஒரு பதற்றச்சூழல் இருந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது. ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி சில வன்முறைகளை நிகழ்த்துவது தீவிரவாதிகளின் வழக்கம். ஒருபக்கம் மக்கள் அதற்காக பதற்றம் கொள்ள மறுபக்கம் ராணுவம் நிலைகுலைந்து அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது.

பும்சு

இயல்புவாழ்க்கை என்பது மிகமிக நொய்மையான ஒரு வலை. ஐநூறுபேர் இருந்தால் ஒரு மாநிலத்தையே அச்சத்தில் பதற்றத்தில் சிதறடிக்கமுடியும் என்பதற்கு காஷ்மீரே உதாரணம். இயல்பான வாழ்க்கை என்பது மிக அரிய ஒரு வரம். வரலாறெங்கும் இயல்புவாழ்க்கை மிக அபூர்வமாகவே மானுடருக்கு வாய்த்துள்ளது – பேரரசர்களின் ஆட்சிக்காலத்தில். அப்போதுதான் கலையும் இலக்கியமும் சிந்தனையும் பண்பாடும் செழித்தன.

பும்சு கோயில் குகைக்குள் இருப்பது

இருபதாம் நூற்றாண்டில் மிக மிக மெல்ல, பல்வேறு சோதனைகள் வழியாக நாம் அடைந்தது வன்முறை அற்ற இயல்புவாழ்க்கை. இன்னும்கூட உலகின் பல நிலப்பகுதிகளில் வரலாற்றுக்கால குருதி காயவில்லை. ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான். அங்கு சகமதத்தவரையே கொன்று குவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆப்ரிக்காவில் இனக்குழுப்போர்கள் இப்போதுதான் அடங்கி வருகின்றன. பல மாமனிதர்களின் பெருமுயற்சியால்.

பும்சு லிங்கம்

யாரோ சிலர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மதம் இனம் மொழி என்றெல்லாம் பேசி காழ்ப்பை உருவாக்கி வன்முறையை பரப்புகிறார்கள். அவர்கள் அதிகாரத்தை அடைந்தாலும் சாமானியனுக்கு கஞ்சி அவன் கைகளால்தான். ஆனால் அவன் அதற்குக்கொடுக்கும் விலை அதிகம். வன்முறை அரசியல் விசித்திரமான வேடிக்கை. விலை கொடுப்பவன் சாமானியன். அறுவடை செய்பவர்கள் அதிகாரவர்க்கமும் அவர்களை அண்டி வாழும் போலி அறிவுஜீவிகளும்.

முந்தைய கட்டுரைவண்ணங்களின் சுழி
அடுத்த கட்டுரைஇமயச்சாரல் – 19