அடடா மோடி அரசு சமஸ்கிருதவாரம் கொண்டாட உத்தரவிட்டதன் காரணம் இதுதானா! நினைவுதினக்கொண்டாட்டம். இறப்பை நினைவுகூரும் வாரத்தைக் கூடவா இந்த தமிழ் தேசிய பாஸிசவாதிகள் எதிர்க்கிறார்கள்.என்ன ஒரு காட்டிமிராண்டித்தனம்.சே..
In the memorable year of 1857, a Gujarati poet, Dalpatram Dahyabhai, was
the first to speak of the death of Sanskrit:
All the feasts and great donations
King Bhoja gave the Brahmans
were obsequies he made on finding
the language of the gods had died.
Seated in state Bajirao performed
its after-death rite with great pomp.
And today, the best of kings across the land
observe its yearly memorial.
http://www.columbia.edu/itc/mealac/pollock/sks/papers/death_of_sanskrit.pdf
சிவேந்திரன்
அன்புள்ள சிவேந்திரன்,
நானறிந்த ஈழத்தமிழ் நண்பர்கள் அனைவருமே தமிழகத் தமிழர்களைவிட அறிவுத்திறன் கொண்டவர்கள், வாசிப்பு கொண்டவர்கள். ஆனால் அவர்கள் சீமான் போன்ற ஒருவரை எப்படி மேடையேற்றி அமர்ந்து கேட்டு ரசிக்கிறார்கள் என்பதை எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன். இத்தனை கல்வியும் ஆர்வமும் இருந்தும் ஈழத்தில் இருந்து ஒரு முதன்மையான அறிவுலகச் சாதனை ஏன் நிகழவில்லை என எண்ணியிருக்கிறேன் [தளையசிங்கம் என்னும் தொடக்கம் தவிர்த்து]
அதற்கான பதில் உங்கள் கடிதத்தில் உள்ளது என்று பட்டது. ஆறுமுகநாவலர் முதல் கதிரைவேற்பிள்ளை வழியாக இன்று வரை தொடரும் ஒரு மனநிலை. அதை எதிர்மறை மனநிலை என்று சொல்லலாம். ஏதோ ஓரு தாழ்வுணர்ச்சி காரணமாக தன்னை ஒரு பீடத்தில் வைத்துக்கொண்டு எளியநக்கல்கள் வழியாகக் கடந்துசெல்வது. ஓர் அறிவியக்கத்தை நிகழ்த்துவதற்கான நீடித்த பொறுமையை, உழைப்பை அளிக்காமல் வசதியான கட்டங்களுக்குள் கம்பு சுற்றுவது.
சம்ஸ்கிருதம் இந்தியாவின் சில பகுதிகளில் மட்டும், மகாபாரத காலகட்டத்துக்கு முன்னர், நாலைந்துவகை குறுமொழிகளாகப் பேசப்பட்டது. பின்பு இந்து மதத்தின் நாடளாவிய அறிவியக்கத்துக்காக அதை தரப்படுத்தினார்கள். அதன்பின்னரே அது சம்ஸ்கிருதம் என அழைக்கப்பட்டது. என்றும் அது அறிஞர்களின் மொழியே. மூலநூல்களை வாசிப்பவர்களுக்கு மட்டும் உரிய மொழியே. அதை ஒருவர் அன்றாடப்பேச்சுக்கு பயன்படுத்த முடியாது.
ஆனால் அதில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வருடங்களாக தொடர்ச்சியாக ஓர் அறிவியக்கம் நிகழ்ந்துள்ளது. தத்துவம், இலக்கியம் மற்றும் மதநூல்கள் அதில் எழுதப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அனைத்துப்பகுதிகளிலும் உள்ள அறிஞர்களின் நூல்கள் அதில் உள்ளன. அது வைதிக மரபுக்கான மொழி அல்ல. இணையாகவே அதில் பிற மரபுகளின் நூல்களும் உள்ளன. நாத்திக மரபுகள், அவைதிக மரபுகள் மற்றும் சிற்பக்கலை, மருத்துவம் போன்ற நூல்கள்.
இன்று சம்ஸ்கிருதம் பண்டைய இந்தியாவின் ஞானக்களஞ்சியத்தின் மொழி. அத்துடன் அந்த ஞானக்களஞ்சியம் தொடர்ந்து இந்தியாவின் பிறமொழிகளுடன் உரையாடிக்கொண்டிருக்கிறது. ஆகவே இந்தியாவின் எந்த ஒரு மொழி இலக்கியத்தை அணுகி அறியவேண்டுமென்றாலும் அதற்கு சம்ஸ்கிருதம் தேவை. சம்ஸ்கிருதம் ஓர் அறிவியக்க மொழியாக இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு நீடிக்குமென்றே நினைக்கிறேன்.
உங்களுக்கு சமஸ்கிருத எதிர்ப்போ மறுப்போ இருக்கலாம். அப்படியென்றால் அதை வெளிப்படுத்தும் முறை இதுவல்ல. அந்த பெரும் மரபை இப்படி முச்சந்தி ‘காமெடிகள்’ மூலம் கடந்துசெல்லவும் முடியாது. ஓர் அறிவியக்கத்தை இணையான ஆற்றல் கொண்ட இன்னொரு அறிவியக்கம் மூலமே எதிர்கொள்ளமுடியும்.
சம்ஸ்கிருதம் அழியுமென்றே வைத்துக்கொள்வோம். அதில் என்ன குதூகலம்? தமிழ் கூடத்தான் அழியப்போகும் மொழிகளின் பட்டியலில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக மற்றவர்கள் எம்பிக்குதிக்கவேண்டுமா என்ன? சம்ஸ்கிருதம் பிராகிருதம் பாலி தமிழ் போன்ற மொழிகள் அழிந்தால் இந்தியா இல்லை. அவற்றை அழியவிடாமல் காக்கவே எந்த அரசும் முயலும்.
அன்புள்ள சிவேந்திரன், இன்னொருவர் இக்கடிதத்தை எழுதியிருந்தால் ஓர் உதட்டுச்சுழிப்புடன் அழித்திருப்பேன். எனக்கு உங்களைத் தெரியும். ஆகவே இந்நீண்ட கடிதம். சம்ஸ்கிருதத்தின் பண்டைய அறிவியக்கம் இன்று எத்தனை பேரால் வாசிக்கப்படுகிறதோ அதில் கால்வாசிப்பேரால்கூட தமிழ் இலக்கியமரபு வாசிக்கப்படுவதில்லை தெரியுமா? அடிப்படை தமிழறிவே தமிழகத்தில் இல்லாமலாகி வருகிறது தெரியுமா? அறுபதுகளுடன் தமிழியக்கமே அழிந்துவிட்டது தெரியுமா?
அதை நோக்கி உங்கள் கவனத்தை திருப்புங்கள். அதற்கு ஆய்வும் பொறுமையும் தேவை. அப்படி திரும்பினால் தமிழை அறிய மிக உதவியான மொழிகளாகவே சம்ஸ்கிருதத்தையும் பிராகிருதத்தையும் காண்பீர்கள். ஓர் உண்மையான அறிஞன் எந்நிலையிலும் காழ்ப்புகளை, சில்லறைக்கேலிகளை உருவாக்கிக்கொள்ள மாட்டான்.
ஒரு சிறு எதிர்மறைத்தன்மை எஞ்சியிருந்தால்கூட அது அஸ்திவாரத்தில் கோணலாகிவிடும். மொத்த அறிவியக்கத்தையே திரிபடையச்செய்யும். அதற்காகச் செலவிடப்படும் வாழ்க்கையைப்போல வீணான பிறிதொன்று இல்லை. நான் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது ஒரு அழுத்தமான அறிவுச்செயல்பாட்டை. அது எதுவாக இருந்தாலும் சரி. அதற்கான மனநிலைகளை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
இல்லையேல் நீங்களும் செந்தமிழன் சீமானின் உரைகேட்க சென்று அமரவேண்டியதுதான்.
ஜெ