அன்புள்ள ஜெ.
வண்ணக் கடல் 66 இல் – சுவர்ணையின் செயல் – மிக உக்கிரமாக இருந்தது. மனம் சுழன்று கொண்டே இருந்தது. ஏற்கனவே தெரிந்த கதையிலும் மிகுந்த துயரம். ஏகலவ்யன் ஒவ்வொரு செயலும், சொற்களும் அவன் வில் வித்தை போன்றே சிறப்பாக..புதிய சிகரங்களுடன், சிறகுகளுடன் – அந்தரங்கமாக கண்ணீர் சிந்தினேன் –
அந்த நிகழ்வில் சூழ்ந்திருந்த அனைவருக்காகவும்.. மிகச் சிறந்த நாடகத் தருணம்.
எனக்கு நவகண்டம் பற்றி அதிகம் தெரியாது. சில அம்மன் கோவில்களில், சிரம் மட்டும் தரை மட்டத்தில் கீழிருக்கும் சிலைகளை பார்த்திருக்கிறேன் – அவையும், அன்னையரின் தியாகமோ?
சிவன் முதல் வேடன் என்றும், கண்ணப்பன் கதையும் கண் முன் ஒளிர்ந்தன –
எனக்கு ஒரு கன்னட நண்பர் இருந்தார். அவரது மகனுக்கு மிருண்மயி என்று பெயர் இட்டிருந்தார் – சாம்பல் பூசிய சிவன் என்று அர்த்தம் சொன்னார். இன்று வண்ணக் கடலில் பார்த்த சொற்றொடரில் ஒரு மனத் துள்ளல் –
எஷரின் ஓவியத்தில், ஏஞ்செல்ஸ் அண்ட் டீமன் (Angels & Demons) – தேவதைகள் விட்ட காலியிடத்தை அரக்கர்கள் நிறைப்பனர்
http://www.pinterest.com/pin/299067231475512006/
உங்கள் காவியம் ஒரு தளத்தில் எல்லோருக்கும் இடம் அளிக்கிறது. இடம் என்று பல பரிமாணங்களில் – பேரன்னையின் அன்பு போல, விண்ணக தெய்வங்களின் பரிவு போல, எல்லோரும் சிறப்பாக செயல் புரிய களம் உண்டு.
பரப்பியல் நோக்கில், அசுரர்களுக்கும், ஏன் கர்ணனுக்கும் கூட தம் கொடையில் ஆணவம் உண்டு என்றும், அதை ஆண்டவன் தடுத்து தண்டிக்கிறார் – என்று சொல்கிறார்கள் – அது மனதிற்கு சங்கடமாக இருந்தது.
அவர்களுக்கு ஆணவம் என்று தோன்றவில்லை – உண்மையிலேயே அவர்கள் தம் அறிவிக்கப் பட்ட அழிவையும் மீறி – அவர்கள் கொடையினை கொடுக்க தயாராக இருந்தார்கள் என்றே தோன்றுகிறது. அவர்களை பெரியவர்களாக மற்றவருக்கு காட்டும் பெருங்கருணை – எல்லாவற்றையும் இணைக்கும் பெரும் புள்ளி அல்லவா – என தோன்றியது.
அன்புடன்
முரளி
அன்புள்ள முரளி
நீங்கள் சொல்வதையே சுவர்ணையும் இன்னொரு கோணத்தில் சொல்கிறாள். கட்டுக்கடங்காத உயிர்ஆற்றல் என்பதே அசுரர்களின் இயல்பு. அவர்களின் பெருங்கருணை பெருஞ்சினம் இரண்டுமே அதன் இரு முகங்கள்.
பிற்காலத்தில் எழுந்த புராணக்கதைசொல்லி மரபு மகாபாரதத்தின் அசுரகதைகளை மட்டும் அல்ல கர்ணன் துரியோதனன் போன்ற கதாபாத்திரங்களின் இயல்புகளையும் கறுப்புவெள்ளையாக திரித்துக்கொண்டது. கர்ணனின் குறைகளை மிகைப்படுத்தியும் அர்ஜுனனின் குறைகளை சமாளித்து விளக்கம் அளித்தும் இன்றும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்
நவகண்டம் பற்றி இந்த தளத்திலேயே சில கட்டுரைகள் உள்ளன.
ஜெ
நவகண்டம் -சுயபலி http://www.goodreads.com/author_blog_posts/2978312