இமயச்சாரல் – 17

காலையில் அனந்தநாக் மாவட்டத்தில் இருந்து காக்கிபொரா என்ற இடத்திற்குச் செல்ல முடிவெடுத்தோம். அங்கிருக்கும் ஆலயம் பழமையானது என்று தொல்லியல் துறை சொன்னது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் மாவட்டத்தின் தொல்பொருள் துறை உண்மையில் பெரிய அளவில் எந்த ஆய்வையோ தகவல் சேகரிப்பையோ செய்யவில்லை.

ஆகவே பெரும்பாலான ஆலயங்களைப்பற்றி ஒற்றை வரி குறிப்புகளே உள்ளன. அங்கு சென்றால் கூட அங்கிருக்கும் அறிவிப்புப்பலகையில் அந்த ஆலயத்தில் என்னென்ன இருக்கிறது என்ற குறிப்பு மட்டுமே இருக்கும். தோராயமாக 10 அல்லது 11 ஆம் நூற்றாண்டைச்சார்ந்ததாக இருக்கக்கூடும் என்ற வகையில் ஒரு வரியும் காணப்படும். மிக அபூர்வமாக கட்டிய மன்னனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

காக்கிபொரா ஆலயம் வெறும் கற்குவியலாக இருந்தது. அங்கே அறிவிப்புப்பலகையோ, குறிப்புகளோ எதுவுமே இல்லை. அதைத்தேடி விசாரித்துச்சென்று பார்த்துவிட்டு மீண்டோம். எப்போதுமே இவ்வாறு தேடிச்செல்வது என்பது பெரும்பாலும் ஏமாற்றமும் அபூர்வமாக வியப்பும் அளிக்கும் அனுபவமாக உள்ளது. அந்த வியப்புக்காக எப்போதும் ஏமாற்றங்களைத தாங்கிக்கொள்ளலாம் என்று தோன்றும்.

ஒரு ஆலயத்தைப்பார்ப்பது மட்டும் அல்ல. பலரிடம் விசாரித்து, பல்வேறு நிலங்கள் வழியாக உள்ளூர் கிராமங்கள் வழியாக சிறு சிறு ஊடு பாதைகளின் ஊடாக விசாரித்துச்செல்வது ஒரு முதன்மையான அனுபவமாகும். சொல்லப்போனால் விசாரித்துச்சென்றடையும் ஓர் ஆலயம் அளிக்கும் உற்சாகமே அலாதியானது.

இந்தப் பயணத்தில் தொடர்ந்து உள்ளூர் பகுதிகளில் இருக்கும் ஆலயங்களுக்கு சென்றுகொண்டிருக்கிறோம். பொதுவாக பழங்கால நகரங்கள் காலப்போக்கில் கைவிடப்பட்டு மானுட வாழ்க்கை அடுத்தகட்டத்திற்கு நகரும்போது புதிய இடத்திற்கு சென்றுவிட்டிருக்கும், கைவிடப்பட்ட பகுதிகளில் அடித்தள மக்கள் மிக நெடுங்காலத்திற்குப் பிறகு குடியேறியிருப்பார்கள். அவை தொலைதூர கிராமங்களாகவோ மறக்கப்பட்ட பகுதிகளாகவோ மாறியிருக்கும்.

பெரும்பாலான தொல் நகரங்களுக்குமேல் இன்று விளைநிலங்களோ, குடிசைப்பகுதிகளோ அமைந்திருப்பதைக்காணலாம். இது வரலாற்றின் நுட்பமான முரண்நகை என்றே எப்போதும் தோன்றும். ஒரு பொற்காலத்தின் மீது எப்போதும் எதிர்காலத்தின் நிழல் படிந்திருப்பது போல இருக்கும்.

அனந்தநாக் மாவட்டத்தில் கடைசியாக நாங்கள் பார்ப்பதற்கு எஞ்சியிருந்தது பாயர் என்ற ஊர். அங்கு பெரும்பாலும் சிதையாத ஒரு ஆலயம் உள்ளது என்ற குறிப்பு மட்டுமே எங்களிடம் இருந்தது. அது எவ்வளவு பெரிய ஆலயம் என்று எங்களால் ஊகிக்க முடியவில்லை. நாங்கள் பார்க்க விரும்பிய ஆலயங்களில் மிக உள்பகுதியில் இருந்த ஆலயம் இது.

பாயர் பற்றி விசாரிக்கும்போது அநேகமாக எவருக்குமே அதைப்பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. எங்கள் ஓட்டுனர் மீண்டும் மீண்டும் அனந்தநாக்கின் இந்த கிராமங்கள் மிக மிக ஆபத்தானவை, இன்னமும் ஒவ்வொரு கிராமத்திலும் தீவிரவாதக் குழு ஒன்று உள்ளது. அந்நிய வாகனங்களை அவர்கள் தாக்குவது மிக சாதாரணம். பாராமுல்லா பகுதியில் கல்வீச்சுதான் நிகழும். அனந்தநாக் பகுதியில் துப்பாக்கிச்சூடு அடிக்கடி நிகழும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அதனால் பதற்றத்துடனும் சினத்துடனும் எங்கள் வற்புறுத்தலுக்கேற்ப வண்டியை ஓட்டினார்.

முந்தைய நாள் இப்பகுதியின் தனித்தன்மை பற்றி சொன்னார்கள். பாராமுல்லா பகுதி சற்று வறண்டது. அதிகமும் மேய்ச்சல் நில மக்கள் வாழக்கூடியது. தீவிரவாதத்தாலும், அதன் விளைவாக உருவான பணப்புழக்கத்தாலும் அப்பகுதி அவ்வறுமையில் இருந்து மீண்டு செல்வச்செழிப்புள்ளதாக மாறியுள்ளது. எல்லை தாண்டி வரும் பாகிஸ்தானின் பணமும், அதை எதிர்கொள்ள இந்திய அரசு குவிக்கும் பணமும் அங்கு சென்றுகொண்டிருக்கிறது.

அதன் மறுபக்கமான பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் கொடுமையான வறுமை நிலவும் பகுதி. ஆனால் அனந்தநாக் எப்போதுமே வளமானதாகவும் உயர்குடிகள் வாழக்கூடியதாகவும் இருந்துள்ளது. காஷ்மீரின் இதயமான அவந்திபுரா இங்குதான் உள்ளது. இங்குள்ள உயர்குடிகள் கல்விகற்றவர்கள், ஆரம்பகாலத்தில் தீவிரவாதத்தால் கவரப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மதத்தலைமையையும் அரசியல் தலைமையையும் கைப்பற்றிக்கொண்டு இப்பகுதியின் ஒட்டுமொத்த ஆதிக்கத்தையும் பெற்றுவிடலாம் என்று எண்ணியிருக்கிறார்கள்.

மெல்ல மெல்ல வணிகம் மூலமும் கல்வி மூலமும் இந்தியாவின் பிறபகுதிகளோடு தொடர்பு ஏற்பட்டபோதுதான், படித்த உயர்வர்க்கம் தீவிரவாதப்போக்கில் இருந்து விலக ஆரம்பித்துள்ளது. ஆயினும் இப்பகுதியின் தீவிரவாதம் பெரும்பாலும் நேரடியாக பாகிஸ்தானுடன் தொடர்புடையது. ஆகவே துப்பாக்கிகள், தொலைதூர துப்பாக்கிகள் போன்ற நவீன ஆயுதங்கள் இங்கே அதிகமாக புழங்குகின்றன. அதைத்தான் ஓட்டுனர் சொல்லிக்கொண்டே இருந்தார்.

பாயருக்கு பலரிடம் வழிகேட்டு ஒருவழியாக சென்று சேர்ந்தோம். ஒரு பெரிய மசூதியின் அருகே உள்ள சிறிய சாலை வழியாக நடந்து பாயர் சிவன் கோவிலைச்சென்றடைந்தோம். மசூதியிலேயே சிலர் எங்கள் காரை கவனிப்பதை நாங்களும் பார்த்தோம். பாயருக்குச் சென்றிறங்கிய உடனே, உமர் என்ற இளைஞர் வந்து உற்சாகமாக அறிமுகப் படுத்திக்கொண்டு எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்.

பாயர் சிவன் கோயில்

கன்யாகுமரியில் இருந்து வருகிறோம் என்று சொன்னதும் அடையாளம் கண்டுகொண்டு பிறரிடமும் சொன்னார். ஒரு முதியவர் ஆவலுடன் வந்து இரு கைகளையும் நீட்டி எங்களை வரவேற்றார். தமிழ்நாட்டில் இருந்து வருகிறோம் என்பது அவரை பெருமகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர்கள் கூட்டமாக வந்து எங்களை அழைத்துச்சென்று பாயரின் ஆலயத்தைக் காட்டினார்கள்.

பாயர் சிவ ஆலயம் முப்பதடி உயரமுள்ள செங்குத்தான கோபுரம் உள்ள முழுமையான வடிவில் அமைந்த மிகச்சிறிய ஆலயம். உள்ளே சிவலிங்கம் பழுதடையாத நிலையில்தான் இருந்தது. ஆலயத்தில் சிற்பங்கள் என ஏதும் இல்லை. நான்கு வாயில்கள் திறந்திருந்தது. நாற்புறமிருந்தும் சிவலிங்கத்தைக்காணமுடியும். ஒரு சிறிய கல்ரதம் போன்ற அமைப்பு, அவ்வளவுதான். வழிபாடு எதுவும் நிகழ்வதில்லை. ஆகவே ஆலயத்துக்கு பாதுகாப்போ மற்ற மிரட்டல்களோ ஏதுமில்லை.

நாங்கள் ஆலயத்தை சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கும்போது வெள்ளை பைஜாமாவும் குர்த்தாவும் அணிந்த ஒருவர் வந்து எங்களைப் பார்த்தார். எங்கிருந்து வருகிறீர்கள் என்று துவங்கி சில கேள்விகளைக்கேட்டார். பின்னர் சற்று விலகி நின்று செல்பேசியில் பேசத்தொடங்கினார். உடனே அப்பகுதியில் இருந்தவர்களிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டதைக்  காணமுடிந்தது.

மேலும் அங்கே இருப்பது அபாயகரமானது என்று தோன்றத்தொடங்கியது. நான் பதற்றமடைந்து செல்வோம் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால் அனைவரும் அந்தப் பதற்றத்தை உணர்ந்தது போல தெரியவில்லை. எங்களை உற்சாகப்படுத்திக்கொண்டு வந்த பெரியவர் உடனடியாக அங்கிருந்து கிளம்பிச்சென்றார்.

செல்பேசியில் பேசிய மனிதர் சிகரெட்டை ஆழமாக இழுத்து அந்தப் புகையை க்ருஷ்ணன் முகத்தில் ஊதினார். நாங்கள் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. திரும்பத் திரும்ப மலர்ந்த முகத்தையே காட்டி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தோம். அங்கு நாங்கள் எந்த வழிபாடும் செய்யவில்லை என்பதும் வெறும் புகைப்படங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டோம் என்பதும் அவர்கள் எங்களை திரும்ப அனுப்பியதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

இப்பயணத்தில் மிக அபாயகரமான நிலையில் நாங்கள் நின்றது இங்குதான். புன்னகையையே பெரிய தற்காப்பு ஆயுதமாக அணிந்தபடி மீண்டும் மீண்டும் கைகூப்பி விடைபெற்று நழுவிவந்து காருக்குள் ஏறிக்கொண்டோம். மதிய உணவுக்கு பள்ளி விட்டுச்சென்ற மாணவர்கள் எங்களைத்தாண்டிச் சென்றார்கள். எவரோ ஏதோ காஷ்மீரி மொழியில் சொன்னதைக்கேட்டு அவர்களும் எங்களை நோக்கிச் சிரிப்பதையும் முகம் சுளிப்பதையும் கண்டோம். சில சிறுவர்கள் மண்ணை அள்ளி காரை நோக்கி வீசினார்கள்.

காரை எடுத்துக்கொண்டு ஒரு வழியாக மையச்சாலைக்கு வந்து திரும்பி அனந்தநாக் நோக்கிக் கிளம்பினோம். இம்மாவட்டத்தில் எங்களுடைய பயணத்தை அத்துடன் முடித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். மேலும் பார்க்கவேண்டியிருந்த இரண்டு ஆலயங்களை விட்டுவிட்டு உடனடியாக ஜம்முவுக்கே திரும்பிச்செல்லலாம் என்று முடிவெடுத்தோம். ஓட்டுனரிடம் ஜம்முவுக்குச் செல்லலாம் என்று சொன்னதும் அவர் சற்று தெளிவடைந்தார். ஜம்முவை நோக்கி கிளம்பினோம்.

முந்தைய கட்டுரைஇரு வேறு ஆளுமைகள்
அடுத்த கட்டுரைவண்ணங்களின் சுழி