«

»


Print this Post

குருதியும் கண்ணீரும் படிந்த காலடிச்சுவடுகள்.


1997 ஜூலை மாத தொடக்கத்தில் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான வி ராமமூர்த்தி இந்து நாளிதழ் அலுவககத்துக்கு வந்து அதன் ஆசிரியர் என்.ரவியைச் சந்தித்து காந்தியின் கடைசி இருநூறு நாட்களைப்பற்றி தான் எழுதவிருக்கும் நூலை நாளிதழில் தொடக்கமாக வெளியிட அவருக்கு விருப்பமா என்று கேட்டார்.காந்தியின் கடைசி நாட்கள் ஒரு கிரேக்க துன்பியல் நாடகத்துக்கு நிகரானவை என்று ராமமூர்த்தி சொன்னர். ரவி அதற்கு ஒப்புக்கொண்டார்.

ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் காந்தி கொல்லப்பட்ட 1948 ஜனவரி 30 ஒரு வெள்ளிக்கிழமை. அதேபோல 1998 ஜனவரி முப்பதும் ஒரு வெள்ளிக்கிழமையாக அமைந்தது. ஹிந்துவின் கேலிப்படக்காரரான கேசவ் வரைந்த கோட்டோவியங்களுடன் காந்தியின் கடைசி இருநூறு நாட்கள் என்ற தொடர் ஹிந்துவில் அன்று ஆரம்பித்தது. தொடர்ச்சியாக இருநூறு நாட்கள் வெளிவந்து அது நிறைவடைந்தது. அதன்பின் அக்கட்டுரைகள் நூலாக வெளிவந்தன.

பாரதி புத்தகாலயம் அந்நூலை தமிழில் கி.இலக்குவன் மொழியாக்கத்தில் நூலாக்கி 2007ல் வெளியிட்டது. தமிழில் காந்தியைப்பற்றிக் கிடைக்கும் நூல்களில் மிக முக்கியமான ஒரு ஆக்கம் இது.  வரலாற்றுக்கொந்தளிப்பு மிக்க அந்த நாட்களில் காந்தியுடனேயே பயணம்செய்யும் அனுபவத்தை அளிக்கிறது இது. முற்றிலும் புனைவம்சம் இல்லாத ஆவணமாக இருந்தாலும்  நெஞ்சை அடைக்கவைக்கும் ஒரு துயரத்துடன் மகத்தான சோககாவியமொன்றை வாசிப்பதுபோலத்தான் இந்நூலை வாசிக்க முடியும்.

காந்தியின் கடைசி இருநூறு நாட்கள் அவருக்கு மிகவும் சோதனையானவை. அவர் மகாத்மாவா இல்லையா என்று விதி விசாரணை நடத்திய நாட்கள். அது வரையிலான காந்தி ஆழமான தன்னம்பிக்கை கொண்டவர். அவரது கடிதங்களில் உரைகளில் எப்போது தான் சத்தியத்தின் பக்கம் நிற்கும் வல்லமை கொண்டவர் என்றும், சத்தியம் எந்நிலையிலும் வெல்லும்  என்றும் அவர் கொண்டிருந்த நம்பிக்கை வெளிப்படும். அந்த நம்பிக்கை ஆட்டம் கண்ட நாட்கள் இவை.

ஏனென்றால் காந்தி அந்த தன்னம்பிக்கையை மனிதர்களின் நல்லியல்பு மீது கொண்ட நம்பிக்கையில் இருந்தே அடைந்தார். மனித மனம் சத்தியத்தையும் கருணையையும் மட்டுமே என்றும் நாடக்கூடியது என்று காந்தி உறுதியாக நம்பினார். சத்தியாக்ரகம் என்று அவர் சொன்ன போராட்டமே அந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. தன் எதிரிக்கும் மனசாட்சி உண்டு என நம்பி அந்த மனசாட்சியுடன் தன் மனசாட்சியால் உரையாட முயல்வதே சத்தியாக்கிரம். அந்த நம்பிக்கை கண்முன் உடைவதை காந்தி கண்டார். தன்னுடைய இலட்சியங்களின் பெறுமதி என்ன என்று அவரே நேரடியாக வரலாற்றைக்கொண்டு பார்க்க நேர்ந்தது.

அந்த காலகட்டத்தில் சிலுவையில் என்னை ஏன் கைவிட்டீர் என்று கதறிய ஏசுவைப்போல காந்தியும் நம்பிக்கை இழந்தார். மனக்கொந்தளிப்புக்கும் உக்கிரமான துயரத்துக்கும் ஆளானார். மானுடத்தீமையின் மானுட அவலத்தின் விஸ்வரூபத்துக்கு முன் செயலற்று நின்றார். தன் ஆன்மசுத்தியை ஐயப்பட்டார். தன்னையே வருத்திக்கொண்டார். ஆனால் அப்போதும் தன் நம்பிக்கையைக் கைவிடாமல் உறுதியை உருவாக்கிக்கொண்டு அந்த குருதிநதி வழியாக கடந்து சென்றார். துரோகங்கள் அவதூறுகள் வெறுப்புக்கூச்சல்கள் புறக்கணிப்புகள் நடுவே தன் சத்தியத்தையே கைவிளக்காகக் கொண்டு ஊடுருவிச்சென்றார்.

ஆகவே காந்தியின் கடைசி நாட்கள் அவர் யாரென்று உலகுக்குக் காட்டுவதாக அமைந்தன. அவரது கடுமையான எதிரிகள்கூட அவரது தியாகத்தின் மகத்துவத்தின்  முன் சொல்லிழந்தனர். அரை நூற்றாண்டாக உலகின் மாபெரும் வரலாற்றாசிரியர்கள் அவரது கடைசிநாட்களை ஆழ்ந்த தீவிரத்துடன் விவாதித்து வருகிறார்கள். அப்போது நடந்த ஒவ்வொன்றும் மீள மீள பேசப்படுகின்றன. மாபெரும் ராணுவங்கள் தோற்கும் இடத்தில் ஒரு தனிமனிதனின் அர்ப்பணிப்பு வென்றதன் கதை அது என்று இன்று வரலாற்றாசிரியர்கள் எழுதுகிறார்கள்.

அந்த இருநூறு நாட்களின் நேரடி நிகழ்ச்சிப்பதிவு இந்த நூல். 1947 ஜூலை 15 ஆம்தேதி காந்தி டெல்லியில் உள்ள துப்புரவுத்தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருக்கிறார். மாபெரும் மதக்கலவரம் நடந்த பிகாரின் கிராமப்புறங்களில் ஓர் அமைதியாத்திரையை முடித்துவிட்டு அவர் திரும்பியிருந்தார். டெல்லியில் அரசியல் விவாதங்கள் கொதித்துக்கொண்டிருந்தன. காந்தி டெல்லிக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது அவரது இடுப்பிலணியும் கடிகாரம் காணாமல் போய்விட்டிருந்தது. அந்தப்புகழ்பெற்ற கடிகாரம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கடிகாரம். இந்நூலின் முதல் பத்தியில் வரும் அந்த நிகழ்ச்சி ஒரு நாவலுக்குரிய திறப்பு போல, ஒரு நுட்பமான குறியீடு போல இருக்கிறது.

இந்நூலில் ஒவ்வொருநாளும் காந்தி மூன்று விஷயங்கள் செய்கிறார். நாள்முழுக்க பொதுமக்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறார். எந்தவிதமான தடையும் இல்லாமல் எளிய மக்கள் கூட்டம்கூட்டமாக வந்து அவரிடம் முறையிட்டுக்கொண்டு விவாதித்துக்கொண்டு  இருக்கிறார்கள். நடுவே இந்திய அரசை அமைக்கப்போகும் காங்கிரஸ் தலைவர்களும் இதழாளர்களும் ராஜதந்திரிகளும் அவரிடம் வந்து ஆலோசனை செய்கிறார்கள். மாலையில் அவர் தவறாமல் ஒரு பிரார்த்தனைக்கூட்டத்தில் பேசுகிறார். இந்தியாவின் கோடானுகோடி எளியமக்களுக்கும் இந்தியாவின் அரசமைப்புக்கும் நடுவேயான ஊடகமாக காந்தி நாள் முழுக்கச் செயல்படுகிறார். மாலையில் இந்த மொத்த நாடகத்துக்கும் அப்பால் நின்றுகொண்டு அழியாத மானுட விழுமியங்களை அவர்களனைவருக்கும் ஒரேகுரலில் சொல்லும் தீர்க்கதரிசியாக இருக்கிறார்.

முதல்நாள் காந்தி தேசம் பிரிவினை செய்யப்படுவதைப்பற்றிய தன் துயரத்தை பற்றிச் சொல்கிறார். எக்காரணத்தாலும் மக்கள் பிளவுபடுத்தப்படுவதை தான் விரும்பவில்லை என்கிறார். மனிதர்கள் ஒருவரோடொருவர் பகை கொண்டு கொன்று அழிப்பதைப்பற்றி கண்ணீர் தோய்ந்த சொற்களில் பேசும் காந்தி மற்ற மனிதனின் நல்லியல்பை நம்பவேண்டும் என்று அங்கே வந்திருக்கும் மக்களுக்குச் சொல்கிறார். பிறனிடம் உள்ள தீய அம்சத்தை மட்டுமே காணும் போக்கே  ஆபத்தானது என்கிறார்.

ஒருவகையில் காந்தியின் செய்தியே அதுதான். அன்றுவரையிலான அரசியல் நமர் X பிறர் என்ற இருமையின் அடிப்படையில் இயங்கிக்கொண்டிருந்தது. பிறரை உருவகிப்பதே அரசியலின் அடிப்படையாக இருந்தது. அந்த எல்லைக்கோட்டை அழித்ததே காந்தியின் சாதனை. நாம் எதிர்த்துப் போராடுபவர்கள் நம் எதிரிகளல்ல அவர்களும் நம்மவரே என்பதே காந்திய அணுகுமுறையின் சாரம். வாழ்நாள் முழுக்க சகமனிதனை பிறன் என்று பார்க்காதீர்கள், அரசியல் சார்ந்து மதம் சார்ந்து சாதி சார்ந்து ஆதிக்கம் சார்ந்து பிறனை கட்டமைக்கும் எல்லாவற்றையும் நிராகரியுங்கள் என்றே காந்தி சொல்லிக்கொண்டிருந்தார்.

ஒவ்வொருநாளும் காணும் அனைவரிடமும் மீண்டும் மீண்டும் அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார் காந்தி. அடுத்த நாள் இந்தியர்கள் ஒவ்வொருவரும் மற்ற பிரிவினரின் மொழிகளையும் பழக்கவழக்கங்களையும் அறிமுகம்செய்துகொள்ள வேண்டும், குறுகிய பிரதேச வெறித்தனத்தைக் கைவிட வேண்டும், உண்மையான தேசபக்தி இத்தகைய அணுகுமுறைகளில்தான் அடங்கியிருக்கிறது என்கிறார். இன்னொருநாள் ‘மகத்தான செயல்களைச் செய்ய முற்படும் ஒவ்வொருவருக்கும் மகத்தான பொறுமை தேவைப்படுகிறது’ என்று ஒரு கடிதத்தில் எழுதுகிறார்.

ஆகஸ்ட் 13 அன்று காந்தி கல்கத்தாவில் இஸ்லாமிய தலைவர் சுரவர்த்தியுடன் இஸ்லாமியக்குடியிருப்பு ஒன்றில் தங்கினார். அப்பட்டமான வகுப்புவாதியும் சுயநல அரசியல்வாதியுமான ஷஹீத் சுரவர்த்தியின் தலைமையில் முஸ்லீம்கள் இந்துக்களுக்கு எதிராக கொலைவெறியாட்டம் ஆடியிருந்தார்கள். ஆனால் பின்னர் கிராமப்புறத்தில் இருந்து இந்து இளைஞர்கள் திரண்டு திருப்பியடிக்க ஆரம்பித்தபோது அவர்கள் நடுவே தன் மக்களுடன் சுரவர்த்தி மாட்டிக்கொண்டார். தங்களை காக்கும்படி காந்தியிடம் அவர் சரண்புகுந்தார். முஸ்லீம்களை இந்து வெறியர்களிடம் இருந்து காக்க காந்தி சுரவர்த்தியுடன் அங்கே வந்தார், அவரும் சுரவர்த்தியும் சேர்ந்து ஹைதாரி மாளிகை என்று சொல்லபப்ட்ட பாழைந்த நாற்றமடிக்கும் கட்டிடத்தில் தங்குவதாக ஏற்பாடாகியது.

சுரவர்த்தியை காரில் இருந்து இழுத்துப்போட்டு கொல்லவந்த இந்துவெறிக்கும்பலிடம் காந்தி கைகூப்பி மன்றாடி அவருடைய உயிரை காப்பாற்றினார். அவர்களிடம் தன் பேச்சைக் கேட்குமாறு அவர் மன்றாடினார். மெலிந்த தோள்களுடன் நின்ற தந்தைவடிவம் அவர்களை அமைதியடையச்செய்தது. ஆனால் அவர்கள் அவரை வசைபாடினார்கள். இந்துக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்படும்போது அவர் எங்கே சென்றிருந்தார் என்று கேட்டார்கள்.  அப்போதுகூட இந்துக்கள் கொல்லப்படுகிறார்களே அதை தடுக்க அவரால் ஆகுமா என்றார்கள். ஆனால் அவர் மீண்டும் மீண்டும்  அவர்களிடம் அகிம்சையை வலியுறுத்தினார். பரஸ்பரப்புரிதலை நோக்கி பொறுமையுடன் முன்னகர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

‘நான் என்னை உங்கள் பாதுகாப்பில் விடப்போகிறேன்.அவ்வளவுதான். நீங்கள் எனக்கு எதிராக திரும்பலாம். என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். நான் என் வாழ்க்கைப்பயணத்தின் இறுதிக்கட்டத்தை அனேகமாக எட்டிவிட்டேன். நான் இன்னும் நீண்டதூரம் செல்லவேண்டியதில்லை. ஆனால் பைத்தியக்காரத்தனத்துக்கு நீங்கள் இடம்கொடுக்கப்போகிறீர்கள் என்றால் நான் அதை உயிரோடு பார்க்கும் சாட்சியாக இங்கே இருக்கப்போவதில்லை” அவர்கள் அமைதியடையவில்லை. அவர்கள் ஆழமாக புண்பட்டிருந்தார்கள். கொதித்துக்கொண்டிருந்தார்கள், ஆனால் அவரை மீறவும் அவர்களால் முடியவில்லை.

மறுநாள் இந்தியா சுதந்திரமடைவதற்கு முந்தைய காலையில் மீண்டும் அந்த வெறிகொண்ட இளைஞர்கள் அவரிடம் வந்தார்கள். அவரை வசைபாடினார்கள். அவரை சாபமிட்டு அழுதார்கள். ஆனால் அவர் மீண்டும் அவர்களிடம் பொறுமையையும் அகிம்சையையும் சகமனிதர்கள் மீதான நம்பிக்கையையும் வலியுறுத்தினார். நவீன யுகத்திலும் அதிசயங்கள் நிகழக்கூடும் என்பது மெல்ல மெல்ல நிரூபணமாகியது. அந்த இளைஞர்கள் அவர் முன் மெல்ல அமைதியடைந்தனர். அவரது சொற்களுக்குப் பனிந்து வன்முறையைக் கைவிட்டனர். கல்கத்தா பரிபுரணமாக அமைதிக்குத் திரும்பியது.

அன்று மாலை நடந்த பிரார்த்தனைக்கூட்டத்தில் காந்தி பேசும்போது இந்தியா பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கக்கூடிய பொறுப்பு உண்டு என்றார். சுதந்திரம் கிடைக்கும் ஆகஸ்ட் 15 நாள்முழுக்க உண்ணாநோன்பிருந்து பிரார்த்தனை செய்து இந்தியாவும் பாகிஸ்தானும் நலம்பெறுவதற்காக பிரார்த்தனை செய்வோம் என்றார். அந்த கூட்டத்தில் மக்கள்நடுவே தோன்றிய சுரவர்த்தி அவர் தலைமைதாங்கி இந்துக்கள் மீது நடத்திய கொலைவெறியாட்டத்துக்கு முழுப்பொறுப்பு ஏற்பதாக அறிவித்து தலைகுனிந்து இந்துக்களிடம் மன்னிப்பு கோரினார்.

ஆகஸ்ட் 15 அன்று  தேசமே மகாத்மா காந்திக்கு ஜே என்று கூவிக்கொண்டிருந்தது. டெல்லியில் காந்தியின் படத்தை வைத்து நேருவும் படேலும் புதிய இந்திய அரசை அமைத்தனர். ஆனால் காந்தி கல்கத்தாவில் கலவரத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பெலியகட்டா பகுதியில் இருந்தார். அன்று அவர் உணவுண்ணவில்லை. அவரது அமைதிச்செய்தி அங்கே பரவி தெருக்கள் தோறும் இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து மதநல்லிணக்க ஊர்வலங்களை நடத்தினார்கள். மாலை ஆக ஆக மகிழ்ச்சியும் களியாட்டம் கலந்த மனநிலை உருவாக ஆரம்பித்தது.

அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்திருந்த காந்தி அன்று தூஙகச்செல்ல பதினொரு மணி ஆகிவிட்டிருந்தது. மூன்றுமணிநேரம் தூங்கிவிட்டு எழுந்த அவர் கைராட்டையில் நூல்நூற்க ஆரம்பித்தார். அதன் பின் காலைநடை சென்றார். அந்த பாழடைந்த மாளிகை காந்தியாலும் ஊழியர்களாலும் முழுமையாக தூய்மைசெய்யப்பட்டு ஆசிரமம் ஆக மாற்றப்பட்டிருந்தது.

இதிகாசமொன்றின் நிகழ்வுகள் போல விரிகின்றன இந்த மகத்தான நூலின் அத்தியாயங்கள். மானுடத்தின் தீமைகள் யாவும் விரிந்து கிடந்தன அவரது கண் முன். தன் ஆன்மவல்லமையை மட்டுமே நம்பி காந்தி சென்றுகொண்டே இருக்கிறார். அவரது மகத்துவத்தின் முன் இருண்ட மனங்கள் சட்டென்று ஒளிகொண்டு மண்டியிடுகின்றன. அவரோ இன்னமும் பெரிய ஓர் ஒளியை நோக்கி தன் கண்களை தூக்கியவராகச் சென்றுகொண்டே இருக்கிறார். மனசாட்சி மிச்சமிருக்கும் எவரும் கண்ணீருடன் மட்டுமே வாசித்துச்செல்லக்கூடிய பக்கங்கள் இவை.

1948 ஜனவரி இருபத்தைந்தாம் தேதி காந்தி ஒரு கடிதத்தில் எந்தினார். ‘ நான் ராமனின் சேவகன் அவன் விரும்புகிறவரை அவனுக்கான பணியை நான் ஆற்றுவேன். உண்மை மற்றும் அகிம்சையின் வலிமையை உலகுக்கு உணர்த்தக்கூடிய ஒரு மரணத்தை அவன் எனக்கு அருள்வானானால் நான் எனது வாழ்க்கை இலட்சியத்தில் வெற்றிபெற்றவனாவேன். நான் அவற்றை மனப்பூர்வமாக பின் தொடர்ந்திருந்தால் கடவுளை சாட்சியாகக் கொண்டு நான் செயல்பட்டிருந்தால் அத்த¨கைய மரணத்தை கடவுள் எனக்கு நிச்சயம் அருள்வான்  யாராவது ஒருவன் என்னைக் கொல்வானானால்  அந்தக்கொலையாளியின் மீது எனக்கு எந்தவிதமான கோபமும் ஏற்படக்கூடாது. நான் ராமநாமத்தை உச்சரித்தபடியே மரணமடையவேண்டும்…” அவரைக்கொல்ல நடந்த முயற்சிகள் அவருக்குச் சொல்லப்பட்டிருந்தன.

ஐந்துநாட்கள் கழித்து 1948 ஜனவரி 30 அன்று நாதுராம் கோட்ஸே காந்தியை அவரது பிரார்த்தனைக்கூட்டத்தில் சுட்டுக்கொன்றான். இந்நூல் அந்த உச்சகட்டத்துடன் ஒரு பெரும் நாவலுக்குரிய மன எழுச்சியை அடைந்தபடி முடிவடைகிறது. நம் காலகட்டத்தின் உச்சகட்ட தார்மீக வெளிப்பாடு ஒவ்வொரு வரிகளிலும் வெளிப்படும் ஒரு காவியம் இந்த நூல். நம் ஆத்மாவை பரிசுத்தமான கண்ணீரால் கழுவிக்கொள்வதற்கு உதவும் இத்தகைய நூல்கள் மிக அபூர்வமாகவே வந்துள்ளன.

காந்திஜியின் கடைசி 200 நாட்கள். வி.ராமமூர்த்தி. தமிழாக்கம் கி இலக்குவன். பாரதிபுத்தகாலயம் சென்னை வெளியீடு

http://viruba.blogspot.com/2008/02/200.html

http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=38

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6028

9 comments

Skip to comment form

 1. kuppan_yahoo

  New year you have started with Gandhi’s post and about non violence.

  Wish you a happy and prosperous new year

 2. subramaniam

  மதிப்பிற்குரிய ஜெயமோகன்,
  தங்களுடைய எழுத்து 2009-இல் தான் எனக்கு அறிமுகமாகியது. தங்களுடைய கட்டுரைகளை படிக்கும் வரை நானும், காந்தியின் செயல்களும், சிந்தனைகளும் அவருடைய குற்ற உணர்வினால்தான் என்று நம்பினேன். காந்தியை மகாத்மா, தேசத்தந்தை என்று கூறினாலும் ஆதரமற்ற சில தவறான கருத்துகள் நிலவுகின்றன என்பது உண்மையே. உங்களுடைய எழுத்தினால் ஆதரமற்றவற்றை நம்புவது, பிறரிடம் பகிர்ந்துகொள்வது மிகப்பெரிய தவறு என்று உணர்ந்தேன்.


  நன்றி,
  சுப்பிரமணியம்

 3. பாண்டியன்

  ஜெயமோகன்,

  ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க விட்டு விடுகிறீர்கள். சுஹ்ரவர்த்திக்கும், கல்கத்தா முஸ்லீம்களுக்கும் இந்தியா உருவாகும் நிலையில் வேறு வழி இருக்கவில்லை. குறைந்த பட்ச செயல்திட்டமாக தங்களது எண்ணத்தை மறைத்து தக்கியா (தகிடுதத்தம்) செய்வதை இஸ்லாம் அனுமதிக்கின்றது. எனவே, இந்துக்களுடன் இணைந்து கல்கத்தாவில் மதநல்லிணக்க ஊர்வலம் எல்லாம் போனார்கள்.

  இன்று இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களும் இந்த மதநல்லிணக்க ஊர்வலம், மதச்சார்பின்மை என்றெல்லாம் பேசுவதையும் இந்துக்களுடன் (இந்துக்களில் உள்ள ஏமாறக்கூடியவர்கள்/மதச்சார்பின்மை பேசி புகழாரங்களை பெற விரும்புகிறவர்கள்) இணைந்து செயல்படுவதையும் காணமுடியும். இதெல்லாம் இந்துக்கள் தங்களை திருப்பித்தாக்க முடியாதவாறு அவர்களை செயலிழக்கவைக்கும் ஜிஹாது தாக்குதலின் ஒரு பகுதியே.

  ஆனால், அடிப்படையில் வன்முறையையும், மதவெறியையும், மதமாச்சர்யத்தையும், காஃபிர்கள் மீதான வெறுப்பையும் தூண்டும் தமது மத அடிப்படைகளை அவர்கள் எந்த அளவுக்கு நிராகரிக்கிறார்கள் என்று பார்த்தே நாம் அவர்களின் செயல் உள்ளார்ந்து வெளிப்படுவதா அல்லது தக்கியாவா என்பதை முடிவு செய்யவேண்டும்.

  இஸ்லாம் மத நல்லிணக்கத்தை முழுவதுமாக நிராகரிக்கிறது. மக்கத்து காஃபிர்கள் முகமதுவிடம் சென்று, ‘வா, நாங்கள் உனது கடவுளை வழிபடுகிறோம், நீயும் எங்களது தெய்வங்களை ஏற்று வெறுப்பை பரப்பாமலிரு’ என்று அழைத்தபோது மறுத்து ‘நீ வணங்குவது வேறு(சாத்தான்) நான் வணங்குவது வேறு(உண்மையான கடவுள்), எனவே உனது மார்க்கம் உனக்கு, எனது மார்க்கம் எனக்கு’ என்று சொல்லி மதநல்லிணக்கத்தை நிராகரித்துவிட்டு அவர்களை ஏமாற்றி, அவர்களை நம்பச்செய்து பின்பு அவர்கள் எதிர்பாராத விதமாக தாக்கி பூண்டோடு அழித்து மக்கமா ஆலயத்தை மசூதியாக மாற்றியதை நினைவு கூறுங்கள்.

  இஸ்லாத்தைப் பற்றிய நமது அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு எது அப்பட்டமான மதவெறிக் கோட்பாடோ அதையே மத நல்லிணக்கம் போல சொல்லி நம்மை ஏமாற்றிவருகின்றனர் இஸ்லாமிய மதவாதிகள் (அதாவது முந்தய வரியை விட்டுவிட்டு பாதியை மட்டும் சொல்லி – உங்கள் மார்க்கம் உங்களுக்கு என்று அமைதியை போதிக்கிறது இஸ்லாம் என்று ஏமாற்றுவது).

  இந்தியாவில் இருக்கக் கூடிய இஸ்லாமியர்கள் மதச்சார்பின்மை, பிற மதங்களை மதிப்பது, இந்த நாட்டின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மதிப்பது, செக்யூலர் சட்டங்களை ஏற்பது, ஜிஹாதை கைவிடுவது ஆகியவற்றை ஏற்றால் தான் இருக்க அனுமதிப்போம். இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் தாங்கள் இவ்வளவு காலம் போராடிய தாருலிஸ்லாத்துக்கு ஹிஜ்ரத் செய்யலாம் என்று காந்தியடிகள் சொல்லியிருந்தாரென்றால், அவர் மஹாத்மா மட்டுமல்ல, ஒரு நாகரிக – மதச்சார்பற்ற – ஜனநாயக இந்தியாவுக்கு அடிகோலிய தந்தை என்றும் இந்த நாட்டையும், மக்களையும், பண்பாட்டையும், பன்முகத்தன்மையையும் பாதுகாத்தவர் என்று பாராட்டலாம்.

  ஆனாது துரதிர்ஷ்டவசமாக காந்தியடிகள் தானும் ஏமாந்து அல்லது தனது மூர்க்கத்தனத்தினால் இந்த உண்மைகளை காண மறுத்து, எந்த சுதந்திரத்தை ரத்தம் சிந்தி பெற்றோமோ அதை ஜிஹாதிகள் காலடியில் வைத்து, எதிர்கால இந்தியாவை அவர்களின் கருணைக்கு விட்டுவிட்டார் (left India at their mercy). இதன் விளைவாக இன்று நாடெங்கும் ஜிஹாது நடக்கிறது. செக்யூலர் சட்டங்களை ஏற்க முஸ்லீம்கள் மறுக்கின்றனர், பிற மதங்களை சைத்தானியன் என்று சொல்வது தொடர்கிறது.

  இப்பேர்ப்பட்ட ஒரு நிலைக்கு நம்மை கொண்டு வந்து விட்டுவிட்டாரே மஹாத்மா என்று அவர் மீது வருத்தமே ஏற்படுகிறது.

  (இதை நீங்கள் பதிப்பிக்காவிட்டாலும் பரவாயில்லை, உங்களது பார்வையில் படட்டும் என்றே எழுதுகிறேன். உங்கள் கருத்தை நீங்கள் மாற்றிக்கொள்ள மாட்டீர்கள், பிடிவாதத்தில் நீங்கள் மஹாத்மாவை பின்பற்றுகிறவர் என்று தெரியும். இருந்தாலும், சங்கை ஊதிவைப்போமே என்று எழுதினேன்).

 4. raghunathan

  அன்பு ஜெ சார்- மனிதர்களின் நல்லியல்பில் மற்றும் சத்தியம் போன்ற தத்துவங்களில் நம்பிக்கை இழக்காமல் இருப்பது காந்திஜி போன்ற மகான்களுக்கே கடினம் என்றால் சாதாரண மனிதர்கள் என்னதான் செய்வார்கள்? அரிச்சந்திரனின் மன உறுதியை எப்படித்தான் வியந்து கொண்டாடுவது? என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என ஏசுவில் ஆரம்பித்து காந்தி வரை இந்த மனத் தளர்ச்சி எப்படி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்த் தொடர்கிறது? ஒரு வேளை கடைசி சிரிப்பு சாத்தானுடையதாகவே இருந்து விடுமோ ? இருக்கக்கூடாது எனப் பிரார்த்திப்போம். 1940 களில் காந்தியை சுற்றி இருந்தவர்கள் செய்தது துரோகங்கள் என்றால், 60 ஆண்டுகளுக்குப்பின் இன்றைய சமூகத்தின் நிலையை எண்ணிப்பார்க்கவே பயமாக இல்லையா? மருந்தே இல்லாத ஒரு இரத்தப்புற்று நோயில் சிக்கிக்கொண்டதா இந்த உலகம்?

  அன்புடன் ரகுநாதன்

 5. ஜெயமோகன்

  அன்புள்ள பாண்டியன்,உங்கள் கருத்து ஒரு தரப்பு என்பதால் பதிப்பிக்கிறேன். ஆனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. மனிதர்களைப்பற்றிய ஆழமான அவநம்பிக்கை இதில் உள்ளது. புத்தாண்டில் முதல் வாழ்த்துக்கு எதிராக முதல் கடிதம். பரவாயில்லை)))
  ஜெ

 6. ஜெயமோகன்

  அன்புள்ள ரகுநாதன், காந்தியை அன்று எதிர்த்த எத்தனையோ குரல்கள் காற்றில் மறைந்தன. காந்தி அவரது வரலாற்றுக்காலகட்டத்தில் இருந்து எழுந்து என்றைக்கும் நீடிக்கும் மானுட அறப்பிரக்ஞையின் பகுதியாக ஆனார். அந்த வெற்றியே ஒரு சிறந்த ஆதாரமல்லவா? மனித இயல்பு சுயநலம்,பிளவுப்போக்கு. ஆனால் அவன் அகம் நன்மையை நாடுகிறது. அந்த நாட்டமே மானுடத்தை முன்னேற்றுகிறது
  ஜெ

 7. Ramachandra Sarma

  காந்தி என்ற மனிதரைத் சற்றே தவிர்த்துவிட்டு அவர் முன்னெடுத்த கொள்கைகளைப் பற்றி மட்டுமே விவாதிக்க இயலாதா என்ன? நீங்கள் காந்தியை முன்னிருத்துகிறீர்களா அல்லது அவரது கொள்கைகளை முன்னிருத்துகிறீர்களா என்று பலசமயம் குழம்பவேண்டியுள்ளது. ஏனெனில் நீங்கள் அவரது கொள்கைகளை முன்னிருத்துகிறீர்கள் என்றால் ஏற்கலாம் ஆனால் எப்போதுமே அவரை முன்னிருத்துகிறீர்கள் என்றால் சற்றே யோசிக்கவேண்டும். இது அவர் பின்பற்றிய கொள்கைகளுக்கு அவரையே ஒரு பாவையாக ஆக்கும் முயற்சிபோல இருக்கிறது. காந்தியை பற்றி யோசிக்காமல் அஹிம்சை, சத்யாக்ரஹம் போன்ற கொள்கைகளை விளக்கவோ விவாதிக்கவோ முடியாதா என்ன? காந்தி ஒரு ஃபினாமினன் என்பதில் சந்தேகம் இல்லை. காங்ரஸுக்கு நேருபோல, திமுகவிற்கு பெரியார்போல, நீங்கள் காந்தியை முன்வைக்கிறீர்களோ என்ற எண்ணம். இல்லை அவரது கொள்கைகளைத்தான் என்றால், அப்போது காந்தியை இழுக்கவேண்டிய அவசியம் ஏன்? அந்த கொள்கைகளுக்கே அவர்தான் அதாரிடி என்பதுபோல ஏன் கருதவேண்டும். (இது என் நண்பனோடு உரையாடியதில் வந்த ஒரு பகுதி, என்னால் பதில் சொல்ல இயலாததால் இதை உங்களிடமே வைக்கிறேன்)

 8. ஜெயமோகன்

  ‘என் வாழ்வே என் செய்தி’ -காந்தி

 9. ஜெயமோகன்

  அன்பு ஜெயமோகன்,

  காந்‌தி பற்றிய பல்வேறு பதிவுகளை, ஆவணங்களை படித்த பின்னும் என்னுள் ஆதாரமாய் இந்‌த கேள்வி நெருடிக்கொண்டே இருக்கிறது.

  “சுட்டுக் கொல்லப்படுமளவுக்கு காந்‌தி என்ன குற்றம் செய்துவிட்டார்?”

  காந்‌தி பற்றிய நடுநி‌லையான விமரிசனங்களை விடவும் கேளிக்கை ரசமுடைய விமரிசங்களே மலிந்‌து கிடக்கும் இன்றைய சமூகச் சூழலில் தங்களுடைய பதில் என் போன்ற இளைய தலைமுறைக்கு காந்‌தி பற்றிய புரிதலுக்கு பேருதவி புரியும் என எண்ணி இதனை தங்களிடம் வினவுகிறேன்.

  தங்களுடைய பொன்னான நேரத்தை சிதைக்க மனமில்லை என்ற போதும் இதனைக் கேட்டு தெரிந்‌துகொள்ள தங்களைவிடவும் சிறந்‌த ஆளுமை எனக்கு வேறு யாரும் தோன்றவில்லை. சிரமத்திற்கு மன்னிக்கவும்.

  அன்புடன்,

  லோ. கார்த்திகேசன் [email protected]

  அன்புள்ள கார்திகேசன்

  என்னுடைய கட்டுரைகளிலேயே அது மீண்டும் மீண்டும் வருகிறது. ஒருவரோடொருவர் வெறுப்புகொண்டு போராடும் இருதரப்புகள் நடுவே காந்தி நியாயத்தின் கருணையின் சமரசத்தின் தரப்பாக இருந்தார். ஆகவே இரு தரப்புமே அவரை வெறுத்தார்கள். அதிதீவிரஇந்துத்துவர் இன்றும் அவரை வெறுக்கிறார்கள் என்பதைக் காணலாம். அவர்களை வெறுப்புறச்செய்தது காந்தி இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடக்க்காமல் இருக்க முயன்றது. அவர்களை பாதுகாத்தது. ஆனால் இஸ்லாமியர்கள் அவரை கா·பிராக மட்டுமே பார்த்தார்கள். அவர் இறந்தபோது முகமது அலி ஜின்னா அது இந்துக்களுக்கு இழப்பு என்றுதான் ‘அனுதாபம்’ தெரிவித்தார். காந்தி செய்த பிழை அவர் காந்தியாக இருந்ததுதான்

  ஜெ

Comments have been disabled.