இமயச்சாரல் – 16

ஜம்மு செல்லக்கூடிய வழியில் அவந்திபுரம் உள்ளது. ஸ்ரீநகருக்கு முன் ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் பகுதியின் தலைநகரமாக விளங்கியது அவந்திபுரம். அந்நகரம் முதலாம் அவந்தி வர்மனால் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்டிருக்கலாம்.

அவந்திவர்மனின் வம்சம் ஐநூறாண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் சமவெளியை ஆண்டிருக்கிறது. காஷ்மீரின் பொற்காலம் என்று அதைச் சொல்லலாம். அதற்கு நிரூபணமாக, காஷ்மீர் சமவெளி முழுக்க நிறைந்திருப்பவை பிரமிப்பூட்டும் பேராலயங்கள். இந்த ஆலயங்கள் அப்பகுதியில் அன்று விளங்கி வந்த மாபெரும் பண்பாட்டுச்சிறப்பை சுட்டிக்காட்டுகின்றன.

இவ்வாலயங்களை இத்தனை பெரிய அளவில் எழுப்பவேண்டும் என்றால், மிகப்பெரிய கலாசார ஒருங்கிணைப்பு இங்கே நிகழ்ந்திருக்கவேண்டும். பல துறைகளைச் சார்ந்தவர்களின் வெற்றி ஒரே சமயம் நிகழ்ந்திருக்கவேண்டும். சிற்பக்கலை, ஓவியக்கலை மட்டுமல்லாமல், கல் வேலைக்கும், மரவேலைக்கும், மண் வேலைக்கும் பயின்ற தொழிலாளர்களின் மாபெரும் சமூகங்கள் இருந்திருக்க வேண்டும்.

அவந்திபுரம்

ஒரு ஆலயம் உண்மையில் அதைச்சுற்றி நன்கு ஒருங்கமைக்கப்பட்ட செல்வ வளம் கொண்ட ஒரு பெரிய சமூகம் இருந்திருக்கிறது என்பதற்கான ஆதாரம். காட்டில் புலி நலத்துடன் இருப்பது, காடு ஒட்டுமொத்தமாக நலத்துடன் இருப்பதற்கான சான்று என்று சூழியலாளர்கள் சொல்வது போல, ஆலயம் பிரம்மாண்டமாகவும், கலைச்சிறப்புடனும் இருப்பது அந்த ஒட்டுமொத்த சமூகமுமே சிறப்புடனும், பெருமையுடனும் இருந்ததற்கான ஆதாரமாகும்.

பொருளியல் நோக்கில் சொல்லப்போனால், அச்சமூகத்தில் இருந்து பெருமளவுக்கு உபரி உற்பத்தியாகி மையம் நோக்கி வந்து சேர்ந்ததற்கான ஆதாரமும் கூட. அவந்திவர்மன் காலகட்டத்துக்குப்பிறகு, காஷ்மீரின் சரிவு தொடங்கியது என்றே சொல்லவேண்டும்.

பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்குப்பிறகு, காஷ்மீர் சுல்தான்களால் கைப்பற்றப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து வெவ்வேறு படையெடுப்புகளால் இப்பகுதி ஆலயங்கள் அழிக்கப்பட்டன. பண்பாடு மாறியது, பெருமளவில் மதமாற்றம் நிகழ்ந்தது. இன்றைய காஷ்மீரின் சித்திரம் உருவாகி வந்தது. நாம் இன்று காணும் காஷ்மீருக்கு அடியில் காஷ்மீரின் கடந்த காலத்தின் ஒளிமிக்க அத்தியாயமான, அவந்திவர்மனின் ஆட்சிக்காலம் உள்ளது.

அவந்திபுரம் இன்று ஒரு நவீன நகரம். அனந்தநாக் செல்லும் வழியில் உள்ள இந்நகரம் இன்று பெரும்பாலும் பெரிய பங்களாக்கள் மட்டுமே அமைந்தது. காஷ்மீர் தீவிரவாதத்தின் முகமாக ஒருகாலத்தில் அறியப்பட்டது. இன்றும் அந்த அவப்பெயர் இப்பகுதிக்கு நீடிக்கிறது.

சாலையோரமாக முதலில் நாங்கள் கண்டது அவந்திவர்ம வம்சாவளியின் மன்னர் ஒருவரால் கட்டப்பட்ட ப்ரம்மாண்டமான சிவ ஆலயம் ஒன்றின் இடிபாடு. ஜீலம் நதிக்கரையில்தான் இந்த நகரமும் இதன் பேராலயங்களும் அமைந்துள்ளன. அவந்திவர்மனின் இந்த ஆலயமும் சரி இங்குள்ள பிற ஆலயங்களும் சரி, ஜீலத்தின் மாபெரும் வெள்ளப்பெருக்கால் அழிந்திருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

அவந்திபுரம் பழைய படம்

இவை முக்கால்வாசி சேறால் மூடப்பட்டு கிடந்தன. 1915க்குப் பிறகு ஆங்கிலேய தொல்லியலாளர்களால் அவை மீட்டெடுக்கப்பட்டன. சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய தொல்லியலாளர்களால் முற்றிலும் கைவிடப்பட்டு சாலையோரத்தில் கிடக்கின்றன.

சிவ ஆலயம் சுற்றிலும் காஷ்மீரி பாணி கோஷ்டங்கள் கொண்ட பிராகாரத்தாலும், நான்கு பக்கமும் சிறிய ஆலயங்களாலும் சூழப்பட்ட மையக்கருவறை கொண்டது. ஆற்றங்கரை கட்டுமானம் என்பதனால், 18 அடி உயரமுள்ள மாபெரும் அடித்தளம் அமைக்கப்பட்டு அதன்மேல் கருவறை கட்டப்பட்டுள்ளது.

கற்கள் காலத்தில் உருகி கரைந்து ஒரு நவீன சிற்பம் போல விதவிதமான கற்பனைகளைத்தூண்டும் கனவுகளும் சரிவுகளுமாக இந்த ஆலய எச்சம் நின்றுகொண்டிருந்தது. மையக்கருவறை வெறும் பீடம் மட்டுமாக கிடந்தது. சுற்றிலும் சிற்பங்கள் என ஏதுமில்லை. சிற்ப உடைபாடுகள் சிலவற்றை காண முடிந்தது.

அங்கிருந்து மேலும் ஒரு கிலோமீட்டர் சென்றபோது அவந்திவர்மன் காலகட்டத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான விஷ்ணு கோவில் ஒன்றைப் பார்த்தோம். இப்பயணத்தில் இதுவரை பார்த்தவற்றிலேயே மிகப்பெரிய ஆலயம் இது. உண்மையில் சிதைந்த கோபுரத்தை தாண்டிச்செல்கையில் அதற்கப்பால் அத்தனைபெரிய நகரம் போன்ற பெரிய ஆலய வளாகம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

கோஷ்டங்கள் கூட பாதி சிதைந்த நிலையில் எஞ்சியிருந்தன. தென்னகத்தில் எங்கும் பார்க்கமுடியாத, உருண்ட தூண்கள், இவ்வாலயத்தை எப்படியோ கிரேக்க கொலோசியங்களுடன் இணைத்துப்பார்க்கத் தூண்டுகின்றன. இந்த விஷ்ணு ஆலயத்தில் சிதைந்த நிலையிலும் மழுங்கிய நிலையிலும், ஏராளமான சிற்பங்கள் உள்ளன.

அவந்திபுரம்

இங்கிருந்த சீக்கிய மதத்தைச்சேர்ந்த வழிகாட்டி ஆலயத்தைப்பற்றி காஷ்மீரி உச்சரிப்பு கொண்ட ஆங்கிலத்தில் விளக்கினார். வாயிலின் இருபக்கமும் சிவனும் பிரம்மனும் காவல்காக்கிறார்கள். உள்ளே பல்வேறு தெய்வங்களுக்கான சன்னிதிகள் உள்ளன.

படிக்கட்டில் இறங்கி முற்றத்தில் நடந்து மீண்டும் பல படிக்கட்டுகள் ஏறி, இருபதடிக்கு மேல் உயரம் கொண்ட கருவறையை அடைய முடியும். சுற்றிலும் அறுபத்தி நான்கு கோஷ்டங்கள் பாதி இடிந்த நிலையில் நிற்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே தொல்லியல் துறை அவ்விடிபாடுகளுக்கு மேல் கற்களைச் செருகியும், கற்களை சுமத்தியும் அவை மேலும் சரியாமல் பாதுகாத்திருக்கிறது. ஆங்கிலேயரின் கலை எண்ணத்தாலும், பெருந்தன்மையாலும் இவ்வாலயங்கள் நம் பார்வைக்குக்கிடைக்கின்றன.

அந்தி சரியும் வேளையில் இப்பிரம்மாண்டமான ஆலய வளாகத்திற்குள் சுற்றி வருவது ஒரு கடந்த கால கனவுக்குள் திசை தவறி அலையும் அனுபவத்தை அளித்தது. சிதைந்த ஆலயம் நம் கற்பனையைத் தூண்டுகிறது. விறகில் சிறு நெருப்பு பற்றிக்கொள்வதுபோல நம்மில் அது வளரத் தொடங்குகிறது. அந்தியில் சிதைந்த ஆலயத்தைப்பார்க்கும்போது காலம் என்ற அணையாத செந்நெருப்பைப் பார்ப்பதுபோல அச்செந்நெருப்பில் அவ்வாலயம் அதன் அனைத்து மகத்துவங்களுடன் கருகி அணைந்துகொண்டிருப்பதுபோல கற்பனை எழுகிறது. அந்தியில் பார்க்கும் புராதனமாக ஆலயங்கள் எழுப்பும் ஆழமான தவிப்பு ஒருபோதும் மறக்கமுடியாத மனச்சித்திரங்களை நம்முள் எழுப்புகிறது.

விஷ்ணு ஆலயத்தில் இருந்து கிளம்பவேண்டும் என்று தோன்றியபோதும்கூட அங்கேயே தொடர்ந்து மேலும் அமர்ந்திருந்தோம். இங்கெல்லாம் இரவு எட்டு மணிக்குத்தான் ஒளி அவிகிறது. ஆகவே இன்னும் இன்னும் என்று அங்கேயே சுற்றி வந்தோம்.

இவ்வாலயத்தின் பிரம்மாண்டத்தை மிகத்தேர்ந்த புகைப்படக்கலைஞர்களே பதிவுசெய்யமுடியும். எங்கள் விழிகள் ஒன்றைப்பார்க்கும்போது இன்னொன்றை தவறவிட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. சொற்சித்திரங்கள் ஒருபோதும் இத்தகைய காட்சிகளை முழுதாக வடிக்க போதுமானவை அல்ல.

அவந்திபுரம்

அவந்திப்பூர் சென்ற பத்தாண்டுகளுக்கு முன்பு வரைக்கும் காஷ்மீர் தீவிரவாதத்தின் தொட்டிலாக இருந்தது. இங்கு பொதுவாகவே கல்விகற்றவர்கள் சற்று அதிகம். தீவிரவாதம் வழியாக வந்த பெரும்பணம் இப்பகுதியை இந்தியாவின் செல்வச்செழிப்பு மிக்க பகுதிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. சமீபகாலமாக தீவிரவாதம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் கல்வியில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியா முழுக்கவும், தமிழகத்திலும் கூட உயர்பதவியில் கல்வித் துறைகளில் இருக்கும் காஷ்மீரிகளில் கணிசமானவர்கள் அனந்தநாக் மாவட்டத்தைச்சார்ந்தவர்கள். இந்தியாவின் பல பகுதிகளில் பணியாற்ற வருவது அவர்களின் பார்வையில் உருவாக்கிய மாற்றம் காரணமாகவே இங்கே தீவிரவாதம் தணிந்துள்ளது என்கிறார்கள்.

அதற்கு ஆதாரமாக அனந்தநாக் நகரம் முழுக்க விளம்பரங்கள். பெரும்பாலானவை கல்வி கற்பதற்கான நிறுவனங்களின் விளம்பரங்களும், பல்வேறு படிப்புகளைப்பற்றிய விளம்பரங்களும்தான். பாரதிதாசன் பல்கலையின் விளம்பரத்தையும் அலுவலகத்தையும்கூட நாங்கள் கண்டோம்.

ஆனால் அனந்தநாக் மாவட்டம் இப்போது சற்று பதற்ற நிலையில் உள்ளது. ஏனென்றால் அமர்நாத் யாத்திரை நடந்துகொண்டிருக்கிறது. அது நிகழலாகாது என்பது காஷ்மீரை மையம் கொண்ட சுன்னி தீவிரவாத அமைப்புகளின் ஆணை. மசூதிகளிலிருந்து  தொடர்ந்து அமர்நாத் யாத்திரைக்கு எதிரான அறைகூவல்களும் மிரட்டல்களும் வந்துகொண்டிருக்கின்றன.

அமர்நாத் யாத்திரையே இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப்படைகளால் சூழப்பட்டு ஒரு ரகசிய படை நகர்வு போலதான் நிகழ்கிறது. அமர்நாத் பயணிகள் செல்லும் இடம் முழுக்க ராணுவம் பெருமளவு குவிக்கப்பட்டு சாலைகள் முழுமையாக கையகப்படுத்தப்பட்டு, அணிவகுத்து நிற்கும் சீருடைக்காரர்களின் நடுவே அப்பயணிகள் அஞ்சி சென்றுகொண்டிருக்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்கள் ஒவ்வொரு முறையும் தாக்கப்படுகிறார்கள்.

அவந்திபுரம்

அமர்நாத் யாத்திரை உருவாக்கிய பதற்றம் காரணமாக அவந்திப்பூரில் வெளியே எங்களால் தங்க முடியவில்லை. அனைத்து விடுதிகளும் ராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்தன. ஆகவே ஜோகீந்தர் சிங்கையும் மிஸ்ராவையும் தொடர்புகொண்டு எங்களுக்கு தங்குமிடம் கிடைக்க உதவமுடியுமா என்று கோரினோம். சி.ஆர்.பி.எஃப் முகாமிலேயே தங்கலாம் என்று சொன்னார்கள். சி.ஆர்.பி.எஃப் முகாமுக்குச்சென்று அங்கிருந்த த்ரிபுவன் மிஸ்ரா என்ற பொறுப்பு அதிகாரியிடம் தங்குமிடம் கோரினோம்.

அந்த முகாம் ஒரு மிருக வைத்திய சாலையை கைப்பற்றி அமைக்கப்பட்ட ஒன்று. மிருக வைத்தியசாலை தற்காலிகமாக ஒரு சிறு பகுதிக்கு நகர்த்தப்பட்டு எஞ்சிய வசதி குறைவான பகுதியில் ஆயுதப்படை வீரர்கள் தங்கியிருந்தார்கள். அதில் ஒரு அறையை எங்களுக்கு அளித்தார்கள்.

தமிழக சமையற்காரர்களால் செய்யப்பட்ட தமிழகச் சுவையுடைய சாம்பாரையும் சோறையும் சப்பாத்தியையும் தந்தார்கள். ஒரே அறையில் நாங்கள் ஏழு பேரும் படுத்துக்கொண்டோம். முற்றிலும் பாதுகாப்பற்ற சூழலில் அந்த முகாம் அமைந்திருப்பது போலத் தோன்றியது. கிட்டத்தட்ட தெருவில் தங்குவது போல சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் நெருக்கியடித்துக்கொண்டு அங்கே தங்கியிருந்தனர்.

அங்கிருந்த பல்வேறு வீரர்களிடம் இருந்து திரட்டப்பட்ட படுக்கைகளையும், மெத்தைகளையும் தலையணைகளையும் கொண்டு எங்களுக்கு வசதியான தங்குமிடத்தை அவர்கள் அமைத்துத்தந்தார்கள். இரவில் அங்கு தங்கும்போது சிறு திகில் எங்களைச்சூழ்ந்திருந்தது.

சுற்றிலும் முள் கம்பிகளும், மணல் மூட்டைகளும் காவல் அரண்களும் கொண்ட காவல்துறை முகாமுக்குள்தான் நாங்கள் தங்கியிருந்திருக்கிறோம். இப்படி திறந்த வெளியில் காவலற்ற முகாமுக்குள் தங்குவது என்பது எத்தனை தூரம் பாதுகாப்பானது என்ற எண்ணம் இருந்தது. ஆனால், களைப்பு மிக விரைவிலேயே தூங்கவைத்தது.

முந்தைய கட்டுரைநகைச்சுவை அரசு சு.வெங்கடேசன்
அடுத்த கட்டுரைஅளப்பருந் தன்மை