«

»


Print this Post

அவதார் – ஒரு வாக்குமூலம்


1988ல் மங்களூர் திரையரங்கு ஒன்றில் ராபர்ட் போல்ட் எழுதி ரோலண்ட் ஜோ·ப் இயக்கிய ‘த மிஷன்’ என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். என்னுடைய சிந்தனையில் ஆழமான ஒது திருப்புமுனையை உருவாக்கிய திரைப்படம் அது. அதுவரை நான் கிறித்தவ மதத்தையும் ஐரோப்பிய ஆதிக்கத்தையும் பார்த்துக்கொண்டிருந்த பார்வையை மிகவும் விரிவாக்கியது. அதன்பின் நான் வாசித்த ஏராளமான நூல்களுக்கான தொடக்கம் அந்த திரைப்படம்தான்.

1750களில் தென்னமேரிக்க பழங்குடிகளின் நிலங்களை ஸ்பானிஷ் ஆக்ரமிப்பாளார்கள் கைப்பற்றி அவர்களை அடிமையாக்கி வணிகம் செய்ததின் சித்தரிப்பு இந்த திரைப்படம்.  திரையை விட்டு அரங்குக்குள் கொட்டுவதுபோல இகுவாழ்சு [ Iguazu ]  அருவியைக் கண்டதுமே நான் வேறு ஓர் உலகுக்குள் சென்றுவிட்டேன். ஒரு பாதிரியாரை அங்கே காட்டுக்குள் வாழக்கூடிய  குவாரன்னி [Guaranni] சிவப்பிந்தியர்கள் சிறைப்பிடித்து அந்த அருவில் போட்டு விடுகிறார்கள். அதுதான் படத்தொடக்கம்.

 

மீண்டும் ஒரு ஜேசு சபைப் பாதிரியார் அந்த பிரம்மாண்டமான அருவியின் விளிம்பில் வழுக்கும் பாறை வழியாக தொற்றி மேலே ஏறும் காட்சியுடன் படம் மீண்டும் ஆரம்பிக்கிறது. ·பாதர் கப்ரியேல் [ஜெர்மி அயன்ஸ்] அந்த காட்டுக்குள் சென்று சிவப்பிந்தியர் நடுவே அமர்ந்து தன் புல்லாங்குழலை இசைக்கிறார். அன்னியர் எவரையும் கொல்லக்கூடிய அந்த மக்கள் அந்த இசையால் மயங்கி அவரை தங்களுடன் வாழ அனுமதிக்கிறார்கள். சேவையால் அவர் அவர்களில் ஒருவராக ஆகிறார்.

ஒரு முறை ஸ்பெயினுக்கு வரும்போது தன் காதலியின் தோழனைக் கொன்ற குற்றவுணர்ச்சியில் இருக்கும் ரோட்டிரிகோ மெண்டாஸா [ராபர்ட் டி நீரோ] வைச் சந்திக்கும் ·பாதர் கப்ரியேல் அவனை தன்னுடன் வந்து சேவையாற்றி குற்றவுணர்ச்சியை தீர்க்கும்படி அழைக்கிறார். அவனும் அவருடன் செவ்விந்தியர்களின் காட்டுக்குள் வருகிறான்.

 

மெண்டாஸா ·பாதர் கப்ரியேலுடன் இணைந்து அந்தக் காட்டுக்குள் செவ்விந்தியர்களுக்குச் சேவை செய்கிறான். அந்த மக்களுக்கு கல்வி கற்பிப்பதே ·பாதர் கப்ரியேல்லின் பணி. கல்வி என அவர் சொல்வது ஸ்பானிஷ் மொழி பைபிளை வாசிக்கக் கற்றுக்கொடுப்பதைத்தான். இந்நிலையில் ஸ்பெயின் தன் நிலங்களை ஓர் போர் ஒப்பந்தம் மூலம் போர்ச்சுக்கலுக்கு அளிக்கிறது. செவ்விந்தியப் பழங்குடிகளை அடிமைகளாக ஆக்கி விற்பதற்கான அனுமதியுடன்.

செவ்விந்தியர்களை ஆன்மா இல்லாதவர்கள் என்று ஒப்புக்கொண்டால் மட்டுமே அவர்களை அடிமைகளாக விற்க கிறித்தவ அறவியல் அனுமதிக்கும். ஆகவே அவர்களை மதம் மாற்றுவதற்கு போர்ச்சுக்கல் அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. அந்த மக்கள் கிறித்தவர்கள் தான் , அவர்களால் ஜெபம்செய்யவும் பைபிளை புரிந்துகொள்ளவும் முடியும் என்று ·பாதர் கப்ரியேல் வாதிடுகிறார். அவர்களின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கத்தோலிக்க தேவாலயத்தின் உயர்பீடம் வரைச் சென்று மன்றாடுகிறார்

 

ஆனால் போர்ச்சுக்கல் அரசின் ஆதரவை இழக்க விரும்பாத கத்தோலிக்கத் திருச்சபை செவ்விந்தியர்கள் மனிதர்களல்ல, அவர்களை மதம் மாற்றியது செல்லாது என்று ஆணையிடுகிறது. போர்ச்சுக்கல் படைகள் குவாரன்னி மக்களை ஒடுக்கி சிறைப்பிடிக்க வருகின்றன. அருவியின் கீழே செவ்விந்தியர்களை அடிமைகளாக்கி பெரும் தோட்டங்களை நடத்தும் முதலாளிகளும் அவர்களுடன் கைகோர்த்துக்கொள்கிறார்கள். சிலுவையேந்தி கத்தோலிக்க பாதிரிகளும் உடன் வருகிறார்கள்.

 

படத்தின் உச்சக்கட்ட காட்சிகள் என் நெஞ்சை உலுக்கின. படைகளின் எதிரே குவாரென்னி இனத்து சிறுவர் சிறுமியர்களை அழைத்துக்கொண்டு ·பாதர் கப்ரியேல் வருகிறார். அவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏற்றிக்கொண்டு கிறிஸ்துவின் நாமத்தைப் பாடியபடி வருகிறார்கள். அவர்களை கண்டு கொஞ்சமும் தயங்காத காலனியப்படைகள் அவர்களை சுட்டு வீழ்த்துகிறார்கள். கூட்டம்கூட்டமாக அவர்கள் செத்து குவிகிறார்கள்.

 

·பாதர் கப்ரியேலின் வழிகளை நம்பாத மெண்டாஸா அம்மக்களை திரட்டி அம்புவில்லுடன்  ஆதிக்கவாதிகளுக்கு எதிராக போரிடுகிறார். கடுமையான போருக்குப்பின்னர் அவர்களும் கொல்லப்படுகிறார்கள். குவாரென்னி இனக்குழுவின் சில குழந்தைகள் மட்டுமே எஞ்சுகிறார்கள். அவர்கள் அந்தபப்டுகொலை நடந்த இடத்துக்கு வருகிறார்கள். அங்கிருந்து ·பாதர் கப்ரியேல்லின் வயலின் புல்லாங்குழல் போன்ற பொருட்களை எடுத்துக்கொள்கிறார்கள்.

 

அவர்கள் சிறிய படகில் ஏறி காட்டுக்குள் செல்லும் நீரோடை வழியாக தப்பி இன்னும் அடர்ந்த காட்டுக்குள் செல்கிறார்கள். செல்லும் வழியில் ஒரு மரச்சிலுவை, ·பாதர் கப்ரியேல் அவர்களுக்குக் கொடுத்த சிலுவை, கிடைக்கிறது. ஒரு பையன் அதை எடுத்துக்கொள்கிறான். அவர்கள் காட்டுக்குள் சென்று மறைகிறார்கள். அவர்கள் மறைந்தபின் அந்தக்காட்டை காட்டியபடி படம் முடிகிறது.

 

·பாதர் கப்ரியேல் உண்மையில் ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டார். குவாரென்னி இனக்குழுவின் காட்டுக்குள் ஊடுவுவதற்கான ஒற்றராக அவரை அறியாமலேயே அவர் பயன்படுத்தப்பட்டார். அவர் காட்டுக்குள் செல்ல ஏற்பாடுகளைச் செய்தவர்கள் அடிமை வணிகம் செய்யும் தோட்டமுதலாளிகள் மற்றும் ராணுவத்தினர்தான். ஆனால் அவரது மனசாட்சி அவர்களுடன் இணைந்து  அவரை பலியாகச் செய்தது.

 

என்யோ மோரிகனின் [Ennio Morricone] அற்புதமான இசையை இன்னமும் நான் மறக்கவில்லை. அந்த கடைசிக்காட்சியின் இசை அவ்வப்போது என்னை வந்து தீண்டுவதுண்டு. சமீபத்தில் அமெரிக்கா சென்று மிஷனரிகளாலும் காலனியவாதிகளாலும் கலி·போர்னியாவில் கொன்றே அழிக்கப்பட்ட பூர்வகுடிகளின் நினைவுக்காக அமைக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தை பார்த்தபடி இருந்தபோது ஒரு மெட்டு என் மனதில் ஓடியபடியே இருந்தது. அது எனியோ மோரிகோனின் அந்த  உச்சகட்ட இசைதான் என பின்னரே அறிந்தேன்.

 

***

நேற்று ஜேம்ஸ் கேமரோன் எழுதி இயக்கிய ‘அவதார்’ என்ற படத்தை குழந்தைகளுடன் பார்த்தேன். 2154ல் விண்வெளியில் உள்ள பாலி·பிமஸ் என்ற வாயுவாலான கிரகத்தின் நிலவாகிய பண்டோரா என்ற கோளத்தில் நிகழ்கிறது கதை. பூமியளவுக்கே பெரியது இந்த நிலவு. இங்கே நாவி என்ற மனிதவகையினர் வாழ்கிறார்கள். மனிதர்களை விட இருமடங்கு பெரிய, மனிதர்களைவிட அறிவுத்திறன் கொண்ட, நீல நிறமான உயிரினங்கள் இவர்கள்.

 

பண்டோராவில் மனிதர்கள் குடியேறிவிட்டிருக்கிறார்கள். அவர்கள் அங்கே ஆக்ரமிப்பாளர்களாகவே வந்திருக்கிறார்கள். தங்கள் உயர்தொழில்நுட்ப முகாமில் அனைத்து வகையான ஆயுதங்களுடனும் இருக்கும் மனிதர்கள் நாவிகளுக்கு ‘கல்வி’ கற்றுகொடுக்கிறார்கள். அவர்களை ‘முன்னேற்ற’ முயல்கிறார்கள். ஆனால் நாவிகள் இவர்களை நம்புவதோ ஏற்றுக்கொள்வதோ இல்லை. நாவிகளுடன் நிகழும் போர்களில் ஏராளமான மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். நாவிகள் ‘பண்படாத’வர்களாகவே இருக்கிறார்கள்

 

நாவிகள் அங்கிருக்கும் இயற்கையுடன் கலந்து அதன் ஒரு பகுதியாகவே வாழ்கிறார்கள். அவர்கள் இயற்கையை ஏய்யா என்ற தாய்தெய்வமாக வழிபடுகிறார்கள். அவர்களுக்கு இயற்கையுடனும் அதன் உயிர்களுடனும் உரையாடக்கூடிய நுண்ணறிவு  இருக்கிறது.ளந்த கிரகத்தின் அத்தனை மரங்களும் வேர்கள் பின்னி ஒன்றுடன் ஒன்று உரையாடுகின்றன, அந்தக்கிரகமே ஒரு மகத்தான மூளை!

பண்டோராவில் அபூர்வமான ஒரு தனிமம் கிடைக்கிறது. அதைக் கொள்ளையடிப்பதற்காகவே அங்கே மனிதர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களால் நாவிகளை நெருங்க முடிவதில்லை. பண்டோராவில் மனிதர்கள் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜன் இல்லை. ஆகவே மனிதர்கள் கண்ணாடி அறைக்கு வெளியெ செல்ல முடியவில்லை. கடைசியில் அதற்காக ஒரு வழி கண்டுபிடிக்கப்படுகிறது. நாவிகளின் உடலின் மரபணுக்களையும் மனித மரபணுக்களையும் கலந்து நாவிகளை போலவே சில உடல்களை உருவாக்குகிறார்கள்

இந்த செயற்கை நாவிகளுக்கு மனம் இல்லை. அந்த மனம்  மனிதர்களில் ஒருவருடையது. அவர் ஒரு கருவிக்குள் படுத்துக்கொள்ளும்போது அவரது மூளையுடன் அந்த நாவியின் மூளை இணைப்பு பெறுகிறது. அந்த நாவியின் உடலில் தன் மனதுடன் அந்த மனிதர் வெளியே சென்று  உலாவி வரமுடியும்.  அந்த பயணம் ஒரு கனவு போல் இருக்கும்.

 

ஜாக் ஸல்லி போலியோ வந்து நடக்க முடியாமலிருக்கும் இளைஞன். அவனது சகோதரன் பண்டாரா கிரகத்தில் கொல்லப்பட்டதனால் அவனுக்குப் பதிலாக இவன் வருகிறான். அவனுடைய சகோதரனைப்போல ஜாக் ஒரு ஆராய்ச்சியாளன் அல்ல, படைவீரன். தன் சக்கர நாற்காலியில் இருந்தே அவனால் போரிட முடியும். அவனுக்கு கால்களை செய்து தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்டு ஜாக் கொண்டு  வரப் பட்டிருக்கிறான்.

அந்த முகாம் ராணுவ கர்னலான மைல்ஸ் குவாரிட்ச் ஜாக்கை ஏன் நாவிகளுக்குள் அனுப்புகிறார் என்பதை விளக்குகிறார். அவன் பணி அந்த நாவிக்குலத்திற்குள் ஒரு நாவியாக ஊடுருவுவது. அவர்களில் ஒருவனாக ஆவது. அவர்களுக்கு என்ன வேண்டும் என்று அறிந்து எப்படியாவது அவர்களை அந்த பகுதியில் இருந்து விரட்டியடிப்பது. ஜாக் ஒப்புக்கொள்கிறான்.

 

மனப்பரிமாற்றம் செய்யும் கருவியில் படுத்து நாவியின் உடலுக்குள் புகுந்து விழித்துக்கொள்கிறான் ஜாக். பண்டோராவின் காட்டுக்குள் செல்பவன் அங்குள்ள அதிசயங்களில் மெய்மறக்கிறான். ஆபத்தில் சிக்கி வழிதவறுபவனை அங்குள்ள இளவரசி நெய்த்ரி காப்பாற்றுகிறாள். அவனை தன் அப்பாவாகிய அரசனிடம் இட்டுச்செல்கிறாள். ஜாக் மீது எப்படியோ நம்பிக்கை கொள்ளும் அந்த நாவிகள் குலம் அவனை தங்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்கிறது. அக்குலத்துக்கு ஒம்மட்டிகாயா என்று பெயர்.

 

ஜாக் அவர்களை உளவறிந்து அந்த தகவல்களை குவாரிட்ச்சுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறான். அவர்களுக்கு ஒரு தாய்மரம் இருக்கிறது. அந்த மாபெரும் மரம் அவர்களுக்கு கடவுள் போன்றது. இயற்கையின் மையம் அது. அந்த மரத்தின் அடியில்தான் மனித ஆக்ரமிப்பாளர்கள் தேடிச்செல்லும் கனிமம் உள்ளது. அந்த மரத்தை நாவிகளை துரத்திவிட்டு அவர்கள் அழித்தாகவேண்டும். ஆனால் அந்த மரத்தை நாவிகள் எக்காரணம்கொண்டும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்கிறான் ஜாக்.

இளவரசி நெய்த்ரியுடன் ஜாக் மெல்ல மெல்ல காதல் கொள்கிறான். அவன் மனம் அந்த நாவிகளில் ஒன்றாக ஆகிறது. ஒருமுறை அவன் நாவிகளின் காட்டை அழிக்கவரும் பிரம்மாண்டமான புல்டோசரை செயலிழக்கச் செய்வதைக் கண்ட குவாரிட்ச் அவன் மனம் தடம் மாறிவிட்டதை உணர்ந்துகொள்கிறான். மேற்கொண்டு அவன் நாவிகளிடம் செல்லவேண்டாம் என தடுக்கிறான்.

 

ஆனால் அந்த முகாமில் இருந்து தப்பும் ஜாக்கும் அவன் நண்பர்களும் நாவிகளுக்கு ஆதரவாக போரிடுகிறார்கள். குவாரிட்ச் தன் பெரும் விமானபப்டையுடனும் வெடிப்பொருட்களுடனும் நாவிகளுடன் போர்புரிந்து அந்த தாய்மரத்தை அழிக்கிறான். நாவிகள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் வனம் சூறையாடப்படுகிறது.

 

அவர்கள் செயலிழந்து தங்கள் தாய்தெய்வத்தின் கோயிலுக்குச் சென்று கூடியிருக்கையில் அங்கே செல்லும் ஜாக் அவர்களிடம் உண்மைகளை சொல்கிறான். அவர்களை திரட்டி மனிதர்களுக்கு எதிரான பெரும்போரை நடத்துகிறான். மனித இனம் தோற்கடிக்கப்பட்டு சிறையிடப்பட்டு பூமிக்கே திருப்பி அனுப்பப்படுகிறது.

மனிதனாகிய ஜாக்கில் இருந்து அவன் ஆன்மாவை இயற்கையாகிய தாய் தெய்வத்தின் உதவியுடன் அவனுடைய நாவி உடலுக்கு மாற்றுகிறார்கள். நாவியாக மாறிய ஜாக் அவர்களுடனேயே இருந்துவிடுகிறான்.

 

*

அவதார் ஒரு பிரம்மாண்டமான படம். திரைத்தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டப்பாய்ச்சலுக்கான  முதற்புள்ளி இது. இதன் பெரும்பகுதி முழுக்க முழுக்க வரைவிய நுட்பத்தாலெயே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த கதைச்சூழலே செயற்கையாக வடிவமைப்பட்டிருப்பது அனேகமாக உலகிலேயே இதுதான் முதல்முறை.  மையக்கதாபாத்திரங்கள், பல்லாயிரம் துணைக்கதாபாத்திரங்கள், பறவைகள், மிருகங்கள், பூச்சிகள், மரங்கள், நிலம்,வானம் எல்லாமே வரைவியம் உருவாக்கியவை.

 

அந்த வரைவியப் பிம்பங்களின் ‘நடிப்பு’ மிகுந்த நுட்பத்துடனும் உணர்ச்சிகரமாகவும் இருப்பது ஒரு கட்டத்தில் என்னை இனிமேல் நடிப்பு என்றால் என்ன பொருள் என்றே எண்ணச்செய்துவிட்டது. இனி நடிப்பதற்கு மனிதர்களோ காட்டுவதற்கு நிலமோ தேவையில்லையா என்ன? அந்த விசித்திரமான குதிரைகளின் ஒவ்வொரு தசைச்சிலிர்ப்பும் துல்லியம்.  அந்த மாபெரும் வவ்வால்பறவைகளின் ஒவ்வொரு சிறசைப்பும் துல்லியம். ஒளிவிடும் தாவரங்கள் பறக்கும் மலர்கள் – அவதார் ஒரு மகத்தான கனவு.

திரும்பி வரும்போது சட்டென்று எனக்கு தி மிஷன் நினைவுக்கு வந்தது. இரண்டுமே ஒரே படங்கள் அல்லவா? உலகத்தைக் காலனியாக்கி முடித்த ஐரோப்பா வேறு கிரகங்களைக் காலனியாக்குகிறது.  அவதாரில் ஒரு வசனம் வருகிறது ‘நமக்கு வேண்டிய ஒன்று அவர்களிடம் இருக்கிறது என்பதற்காக அவர்களை எதிரிகளாக எண்ணுவது அநீதி’ ஆனால் ஐரோப்பா முந்நூறு வருடங்களாகச் செய்துகொண்டிருப்பது அதைத்தான்.

 

·பாதர் கப்ரியேலுக்கும் ஜாக்குக்கும் எத்தனை ஒற்றுமை. ஏதோ ஒரு வாக்குறுதியால் அந்த அன்னிய மனிதர்கள் நடுவே ஊடுருவ விடப்படுகிறார்கள் அவர்கள். உள்ளூர வெள்ளையர், வெளியே இன்னொருவர். அந்த  அன்னிய மனிதக்கூட்டத்திற்குள் செலுத்தப்பட்ட நுட்பமான உளவுப்படை அவர்.  அதை உணரும்போது அவரது மனசாட்சி அவரை திசை திருப்புகிறது.

 

இந்தியாவுக்கு வந்த மிஷனரிகளிலேயே பலர் அத்தகையவர்கள். உதாரணம், ஜி.யு.போப், ஹெர்மன் குண்டர்ட். ஆனால் பலர் அந்த உளவுத்தொழிலை தங்களை அறியாமலேயே செய்து இந்திய சமூகங்கள் மீது காலனியாதிக்கம் வேர்விட்டெழுவதற்குக் காரணமாக அமைந்தார்கள் என்பதே வரலாறு.

 

இந்த சினிமாவில் ஜாக் நாவிகளுக்குள் செல்வதை அப்படியே ஒத்திருக்கிறது சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ காட்டும் ஒரு நிகழ்வு.. பிறமலைக்கள்ளர்களை ஒடுக்கவோ வெல்லவோ முடியாத வெள்ளைய ஆட்சி பிறமலைக்கள்ளர்களில் இருந்து எடுத்து வளர்க்கபப்ட்டு கிறித்தவ பாதிரியாராக ஆக்கப்பட்ட ஒரு ஜேசுசபை உறுப்பினரை அனுப்புகிறது. அவருக்கு அந்த மக்கள் மீது பிரியம்தான்.  தன் சொந்த முன்னோர்களை அறியும் ஆர்வத்துடன்தான் அவர் அந்த மக்களை ஆய்வுக்கு உட்படுத்துகிறார். ஆனால் அந்த ஆய்வேடு வெள்ளையர்களுக்கு மாபெரும் ஆயுதமாக ஆகிறது. பிறமலைக்கள்ளர்களின் எல்லா குலரகசியங்களும் அவர்களுக்கு தெரிந்துவிடுகின்றன. அவர்களை குற்றபரம்பரை என்று முத்திரை குத்தி வேருடன் கெல்லி எறிகிறார்கள்!

 

ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டுமுதல் ‘உலகைவெல்லும்’ இலக்கியங்கள் எழுதப்பட ஆரம்பித்தன. உலகம் என்பது ஐரோப்பியனுக்கான புதையலை ஒளித்து வைத்திருக்கும் மர்மவெளி என்று சித்தரிக்கப்பட்டது. ‘புதியஉலகத்தின்’ ஆச்சரியங்கள் களியாட்டங்கள் அபாயங்கள் விதந்து எழுதப்பட்டன. அங்குள்ள ‘பண்படாத’ ‘மூர்க்கமான’ ‘மனிதத்தன்மை குறைவான’ மக்களுக்கு அங்குள்ள செல்வங்களால் பயனில்லை. அவர்களை வென்று, கொன்றழித்து, அச்செல்வங்களை எடுத்துக்கொள்வதே ஐரோப்பிய வெள்ளையனின் அறம். அவனுடைய சாகசத்திற்கான பரிசு அது.

பலநூறு ஹாலிவுட் படங்களில் இந்த புதையல்வேட்டை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு இப்போது நினைவுக்கு வருவது ‘கிங் சாலமோன்ஸ் மைன்ஸ்’ என்ற மாபெரும் படம். இளமையில் நான் அதன் அகன்ற காட்சியமைப்புக்காக மீண்டும் மீண்டும் அதைப்பார்த்திருக்கிறேன். எச். ரைடர் ஹகார்ட் எழுதிய சாகச நாவல் இது. 1985 ல் இது படமாக வெளிவந்தது. புகழ்பெற்ற பெரும்பட இயக்குநரான லீ தாம்ஸன் இயக்கியது. ஏற்கனவே இந்த நாவல் மூன்று முறை படமாக வெளிவந்திருக்கிறது.  எம்.ஜி.எம் தயாரிப்பாக வந்த முந்தையபடம் நாகர்கோயில் பயோனியர் சரஸ்வதி அரங்கில் அக்காலத்தில் ஐம்பதுநாள் ஓடியிருக்கிறது.

 

புதையலை பயன்படுத்த தெரியாத ‘காட்டுத்தனமான’ மக்கள் நடுவே அது இருக்கிறது. சாகசக்காரனான வெள்ளையன் அபாயங்கள் வழியாக அந்த புதையலை கண்டுபிடித்து எடுக்கிறான். அந்தப்பயணத்தில் அந்தக் காட்டுஜனங்களுக்கு உதவி அவர்களுக்கும் வேண்டியவனாக ஆகிறான் என்பதே இந்நாவலின் கதை. அந்த ஜனங்கள் மனிதர்கள் போல அல்லாமல் ஏதோ பூச்சிக்கூட்டம் போல பெரும்திரளாக காட்டப்படுகிறார்கள். எந்தவிதமான அறிவுக்கூர்மையும் இல்லாமல் விலங்குகள் போல  கதாநாயகனை துரத்தி வந்து கொண்டே இருக்கிறார்கள். அவனை பிடித்ததும் பெரிய பானையில் தக்காளி வெங்காயம் பூண்டு சேர்த்து தண்ணீர் விட்டு வேகவைக்கப்போட்டுவிட்டு ஈட்டிகளை உன்றியபடி ஊகா ஊகா என்று ஒலியெழுப்பி நடனமாடுகிறார்கள். தெளிவாகவே ஐரோப்பா அல்லாத உலகத்தைப்பற்றிய ஐரோப்பிய மனச்சித்திரத்தைக் காட்டும் படம்.

மீண்டும் மீண்டும் நமக்கு வந்துசேரும் படக்கதைகளில் இந்தக்கதையின் வேறு வேறு வடிவங்களே உள்ளன. டார்ஜான், வேதாளர் போன்ற கதைகளில் இதன்  இன்னொரு நுட்பமான மறு வடிவம் உள்ளது. அந்த அறிவில்லாத காட்டு மக்களின் செல்வங்களைக் காப்பாற்றும் ரட்சகராக வெள்ளையர் இருக்கிறார். அவர்கள் அவரை தெய்வமாக வணங்குகிறார்கள்.

 

ஐரோப்பிய சாகச நாவல்கள், திரைப்படங்கள் அனைத்துமே மனிதனை மையமாக்கியவை. மனிதன் என்றால் ஐரோப்பிய மனிதன். அவனுக்கு எதிரான தீய சக்திகளாகவே பிற  நாகரீங்கள், பிற மனிதர்கள், பிற உயிர்கள் காட்டப்படுகின்றன. அது ஆப்ரிக்க காட்டுமனிதர்களாக இருக்கலாம் அல்லது வேற்று கிரக உயிராக இருக்கலாம் அல்லது அனகோண்டா போல வேறு உயிராக இருக்கலாம். அவற்றை நோக்கி சடசடனெ குண்டு மழை பொழியும் ஐரோப்பியன் அந்தப்படங்களின் கதாநாயகன். அவனது வெறுப்பும் சினமும் பொங்கும் கடைசித் தாக்குதல் காட்சியே உச்சம். அதற்காக அந்த ‘மாற்று சக்தி’ படத்தில் தீமையின் வடிவமாக காட்டப்பட்டிருக்கும்.

 

சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற மம்மி படவரிசைகளில் புதையலைக் காக்கும் மம்மிகளும் பூதகணங்களும் எப்படிச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன? கிங்க்ஸ் சாலமோன்ஸ் மைன்ஸ்-ல் ஆப்ரிக்கப் பழங்குடிகள் எப்படி சித்தரிக்கப்பட்டிருக்கின்றனவ் அப்படியேதான். அதே காட்சிப்பிம்பங்கள்தான். காதலியுடன் புதையலிருக்கும் அன்னிய நிலத்தில் அலையும் சாகசக்காரனான கதாநாயகன்!

 

அந்த வழக்கமான சித்தரிப்பை தலைகீழாக்குகிறது என்பதே அவதாரின் மிகமுக்கியமான தனித்தன்மை. இங்கே மனிதர்கள் பேராசையின் அழிவின் தீமையின் வடிவங்களாகக் காட்டப்படுகிறார்கள். கதை அவர்களின் கோணத்தில் சொல்லப்படாமல் அவர்கள் சுரண்டி அழிக்க விரும்பும் தரப்பின் கோணத்தில் சொல்லப்படுகிறது. அந்த மக்கள் இயற்கையின் மடியில் வாழும் வாழ்க்கையின் சுதந்திரமும் அழகும் சித்தரிக்கப்பட்டு அதற்கு நேர்மாறாக தனக்குத்தானே கட்டிக்கொண்ட கண்ணாடிக்கூண்டுக்குள் கொலையந்திரங்கள் சூழ வாழும் மனிதர்கள் காட்டப்படுகிறார்கள். இந்தப்படம் முழுக்க காட்சிரீதியாகவே இந்த முரண்பாடு மீண்டும் மீண்டும் நிறுவப்படுகிறது. பேரழகு கொண்ட பண்டோராவின் நிலக்காட்சி முடிந்த கணத்தில் பளபளக்கும் இயந்திரங்கள் நிறைந்த இடுங்கலான ராணுவ முகாம் காட்டப்படுகிறது.

 

பேராசையால் வளங்களை சுரண்டுவது அப்படிச் சுரண்டுவதற்கு தேவையான ராணுவத்தை உருவாக்குவது அந்த ராணுவத்திற்கு தீனிபோட மேலும் உலகை சுரண்டுவது என்ற ஐரோப்பிய வாழ்க்கைமுறையை திட்டவட்டமாகச் சித்தரிக்கிறது அவதார். ராணுவவெறியும் அறிவியலும் கைகோர்த்துக்கொள்வதை பிற உலகத்தை முழுக்க அவர்கள் துச்சமாக நினைப்பதை காட்டுகிறது. அந்த கூட்டணி நடத்தும் தாக்குதல்களில் தெரியும் ஆணவமும் கண்மூடித்தனமான அழிவு மோகமும் மனதை பெரிதும் பாதிக்கின்றன.

 

குறிப்பாக அந்த அதிபிரம்மாண்டமான தாய்மரம் வேருடன் சரியும் காட்சி மகத்தானதோர் குறியீடு போல் உள்ளது. சென்ற இருநூறு வருடங்களில் ஐரோப்பிய காலனியாதிக்கம் உலகமெங்கும் உள்ள இயற்கைச்செல்வங்களில் முக்கால்பகுதியை அழித்திருக்கிறது என்ற பிரக்ஞையுடன் பார்க்கும் ஒருவருக்கு நெஞ்சடைக்கச் செய்யும் தருணம் அது. பறவைகள் பறந்து தவிக்க உயிரினங்கள் சிதற நாவிகள் கதறி அழ அது சரிவது ஒரு முதுமூதாதையின் மரணம் போலிருக்கிறது.

 

உலகம் முழுக்க இருந்த பன்மைத்தன்மை கொண்ட பண்பாடுகளில் நாமறியாத எத்தனையோ வாழ்க்கைச் சாத்தியங்கள் ஞானங்கள் இருந்தன, மூர்க்கமான ஒற்றைப்படையாக்கும் போக்கால் அவற்றை அழித்துவிட்டோம் என்ற உணர்வை அடைந்துவரும் நவீன ஐரோப்பிய மனத்தின் வெளிப்பாடாக அமைந்த திரைப்படம் இது. அமெரிக்கா சென்றபோது அங்குள்ள அருங்காட்சியகங்களில் வரலாற்று மையங்களில் ஐரோப்பிய மிஷனரிகளும் ஆக்ரமிப்பாளர்களும் அங்கு இருந்த நாகரீகத்தை முற்றாக அழித்ததை எந்தவிதமான மழுப்பல்களும் இல்லாமல் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டேன்.  அந்த வெளிப்படைத்தன்மை அவர்களின் அடுத்த தலைமுறைக்கு அறவுணர்ச்சியை ஊட்டும் என்பது உறுதி

 

பலநுறு நூல்கள் வழியாக பேசப்பட்ட விஷயம்தான். எஞ்சும் உலகையாவது ஐரோப்பியமைய லாபவெறியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற  பதற்றம் உலகமெங்கும் இன்றுள்ளது. அவதார் போன்ற ஒரு மகத்தான கேளிக்கைப்படம் இளம் மனங்களில் அந்தச் சித்திரத்தை ஆழமாக நிலைநாட்டுமென்றால் அது மானுடத்திற்கு லாபமாக அமையும்.

 

ஆனாலும் இந்த எளிய திரைப்படத்திலும் ஓர் ஐரோப்பியமையவாதம் உள்ளது. அந்த நாவிகளில் ஒருவருக்குக் கூட மனிதர்களை எதிர்க்கும் நுண்ணிய  அறிவு வாய்க்கவில்லை. தங்கள் அனைத்து சக்திகளுடன் அவர்களும் பழங்குடிகளாகவே இருக்கிறார்கள். ஆப்ரிக்க மனிதர்களைப்பற்றி பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பியன் என்ன வகையான மனச்ச்சித்திரத்தை வைத்திருந்தானோ அதுதான் நாவிகளைப்பற்றி இந்தப்படத்திலும் உள்ளது.  ஆம் கிங்க்ஸ் சாலமோன்ஸ் மைனிலும் தி மிஷனிலும் பழங்குடிகள் காட்டப்படுவதுபோல, மம்மியில் வேதாளாபப்டை காட்டப்படுவதுபோல இதில் நாவிகள் காட்டப்படுகிறார்கள்! முகமற்ற பெருந்திரளாக. மூர்க்கமான உடல்கூட்டமாக.

 

அவர்களை காப்பாற்ற வெள்ளை மனிதன் உருமாறிச் செல்லவேண்டியிருக்கிறது. இன்னொரு டார்ஜான்! ஆனால் இந்த டார்ஜான் தன் வெள்ளைய அடையாளத்தை இழந்து அந்த மனிதர்களில் ஒருவனாக ஆகிறான். அந்தவரைக்கும் ஐரோப்பியமைய உலகநோக்கு முன்னகர்ந்திருப்பதே ஆச்சரியமளிப்பதுதான்.

மறுபிரசுரம் /முதற்பிரசுரம் Dec 26, 2009

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6018

16 comments

Skip to comment form

 1. bala

  ஜெ..,
  ஐரோப்பிய நோக்கு முன்னகர்ந்தே தீர வேண்டிய சரித்திர தருணம் வந்து விட்டது. அடுத்த 20 ஆண்டுகள் சைனாவும் இந்தியாவும் பொருளாதார ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் உலகை ஆக்ரமிக்கப் போகும் காலம். ஒரு சின்ன உருளைக் கிழங்கு பதம்செய்யும் இயந்திரம் விற்க என் அறைக்கு வெளியே காத்து நிற்கும் சீனர்கள், அமெரிக்கர்கள், இத்தாலியர்களே இதற்கு சாட்சி. ஆனால், உலகை விட்டு நிலவில் தண்ணீர் தேடும் மனித முட்டாள்தனம் மாறவே போவதில்லை. world has enough for everyone’s need – not enough for one man’s greed என்னும் காந்தியின் வழியே தீர்வு. பாலா

 2. ஜெயமோகன்

  உண்மை….சிலவருடங்கள் முன் கேரளத்தில் ஓர் இலக்கிய விழாவில் ஜப்பானிய எழுத்தாளர் சொன்னார், ஜப்பானிய இலக்கியம் கவனிக்கப்பட்டது ஜப்பான் பொருளியல் வளர்ச்சி அடைந்தபோது மட்டுமெ என்று
  ஜெ

 3. Arangasamy.K.V

  பாரதம் ஏன் ஆக்ரமிப்பாளர்களிடம் தோற்றது என்பதற்க்கு பண்பாடு உயர்நிலையை அடையும் போது முரடர்களிடம் போரிடும் சக்தியை இழந்து விடுகிறது என்பதை போல சொல்லியிருந்தீர்கள் ,

  ஐரோப்பாவிற்க்கும் இதுதான் நடக்க போகிறதா ?

  சீன சிந்தனைகளோ கான்பூசியசோ , சீன வாஸ்த்துவோ(?) இப்போது மிக அதிகமான கவனம் பெறுகிறது போல காந்திய அல்ல்து இந்திய சித்தனைகளும் உலக கவனம் பெறும் இல்லையா ?

 4. veerantamil

  ஜெ,

  செவ்விந்தியர்களுக்கும், கருப்பின மக்களுக்கும் ஐரோப்பியர்கள் செய்த அநியாயங்கள் பற்றிய விசயங்கள் கூட அறியாத மக்களாக நம்முடையவர்களை ஆக்கி கொண்டு இருக்கும் விசயம் தான் இன்னும் நெஞ்சை உறுத்துகிறது. இது போன்ற படைப்புகள் உண்மையை உணர்த்தினால் தான் உண்டு.

  திரு. அம்பேத்காரின் சாதனையும் உலக புரட்சியின் வித்தும்

 5. rangadurai

  நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வெள்ளை இனவாத – கிறிஸ்தவ மையவாத நோக்கை வெளிப்படுத்தும் பட வரிசையில், Rabbit-Proof Fence படத்தையும் சேர்த்திருக்கலாம். (http://www.imdb.com/title/tt0252444/combined)

 6. ஜெயமோகன்

  காவல்கோட்டம் விமரிசனத்தில் அப்படத்தைப்பற்றி எழுதியிருக்கிறேன்.

 7. சார்லஸ்

  நமது மனதிற்கினிய மதிப்புக்குறிய ஒரு ஆசிரியரைப் பற்றி திடீரென்று சம்பந்தமில்லாத இன்னொரு மதிப்புக்குரியவர் புகழ்ந்து பேசும்போது ஏற்படும் பரவசத்தைப் போல, நீங்கள் ‘த மிஷன்’ பற்றி எழுதியதைப் படித்ததும் உணர்ந்தேன். மெண்டோஸா கொல்லும் அவனது வருங்கால மனைவியின் காதலன் மெண்டோஸாவின் சொந்தத் தம்பியேதான். தனது குற்ற உணர்விலிருந்து மீள்வதற்காக மெண்டோஸா மலை மீது ஆயுத மூட்டையை இழுத்துச்செல்லும் காட்சித்தொடர் உலகின் சிறந்த மாண்டாஜ்களில் ஒன்று. நான் சினிமாவை என் வாழ்க்கையாக்கிக்கொள்ளக் காரணமான சில படங்களுள் ஒன்று ‘த மிஷன்’. அதையும் ‘அவதார்’-யும் இணைத்து நீங்கள் யோசித்த விதம் மிக அருமை. நானும் அவதார் பார்த்தேன், அந்தப் படத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டுமென்று சாதாரண பார்வையாளனுக்கும் புரியும் விதத்தில் எழுதியிருக்கிறீர்கள். ஒட்டுமொத்த கதைச்சூழலையும் வரைந்து உருவாக்குவதில் முதல் பாய்ச்சல் ‘ஸ்டார் வார்ஸ்’ படவரிசையில் வந்த கடைசி இரு படங்கள்தான். நடிப்பதற்கு இனி மனிதர்கள் தேவையில்லையா என்று கவலைப்பட வேண்டாம், நீங்கள் பார்த்த அந்த கதாபாத்திரங்கள் எல்லாமே நிஜ நடிகர்களை வைத்து முதலில் படமெடுத்துவிட்டு பின்பு வரையப்பட்டவைதான். முகபாவங்கள், உடலசைவு எல்லாமே தேர்ந்த நடிகர்களால் நடிக்கப்பட்டவைதான். ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’, ‘கிங் காங்’ போன்றவற்றிலும் இதே தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இளவரசி நெய்த்ரியாக ஸால்டானா என்ற நடிகை நடிப்பதைப் பார்க்க http://www.youtube.com/watch?v=fOHPCI_9-eQ

 8. ஜெயமோகன்

  ஆம், அதை எப்படி எடுக்கிறார்கள் என ஒரு சினிமா நண்பர் விளக்கினார். ஆனால் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் இந்த ‘நடிப்புகள்’ தொகுக்கப்பட்டு ஒரு நிலையான ரெஃபெரன்ஸ் உருவாக்கப்பட்டுவிடுமா என்று பட்டது. மனித கற்பனை தொழில்நுட்பத்தை தாண்டிச்செல்லும் என்பது உண்மைதான் என்றாலும்…

 9. shaan

  தமிழ் இயக்குனர்கள் எத்தனையோ விதவிதமான படங்கள் எடுக்கிறார்கள். ‘காவல் கோட்டம்’ போன்ற கதைகளை படங்களாக எடுக்க முன் வருவார்களா? அதற்கான துணிவு இவர்களிடம் உள்ளதா என்பது கேள்விக்குறி தான்.

 10. ஜெயமோகன்

  அன்புள்ள வெங்கு

  நான் அறிவியலாளன் அல்ல. ஆகவே ஆராய்ச்சியடிப்படையில் தர்க்கபூர்வமாக என் கருத்துக்களைச் சொல்லவில்லை. எழுத்தாளனுக்குரிய உணர்ச்சிகரமான பொதுப்புத்தி சார்ந்த கருத்துக்கள்தான் அவை

  சிறிய தீவான பிரிட்டன் செல்வத்தில் செழிக்க உலகம் தேவைப்பட்டது. இந்தியா அப்படி ஆவதற்கு எத்தனை உலகம் தெவைப்படும் என்பதே காந்தியின் கேள்வி.

  அப்படி உலகையே சுரண்டியும் கூட பிரிட்டனில் பாதிப்பேர் பட்டினி கிடந்தார்கள். உலகை அமெரிக்காவில் கால்வாசிப்பேர் சேரிகளில் இருக்கிறார்கள்

  இந்தியா இன்று காணும் முன்னேற்றம் முதலில் நம் கிராமங்களை பின் உலகை மொட்டையாக்கவே உதவும்

  நம்முடைய ஆற்றல் மனித சக்தி. மூளைத்திறன். அதை பயன்படுத்தும் மூலதனக்குவிப்பில்லாத இயற்கையை சுரண்டாத ஒரு முன்னேற்றம் சாத்தியமே. அதற்கே காந்தி தேவை

 11. elango

  Dear Jeyamohan,
  The Thathuva peyarchi (philosphical transition) from being to progress itself is a big problem. I see lot of young aspirants who want to see India as a super power. It is a childish dream to become number one of someting. If we start competing in this pace, we will start competing even with our wives and may lose our marriages. I have observed that tribals have less greed and they are very clean too. In adition, they never waste food and create artificial poverty like the villagers or the urbanites. As the world progresses, we will see many gods dying. Fear of death and storing is making us go crazy and makes us play play hide and seek perpetually. It has become very difficult to argue with people who are talking about becoming number one .

 12. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெ

  தங்கள் எழுத்துகளை தொடர்ந்து படித்து வருகிறேன். நன்றி

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

  அறிவியல் புனைவு மற்றும் சினிமாவில் கட்டாயம் நோக்க வேண்டியது ‘தர்கொவ்ச்கி’யின் ‘சொலாரிஸ்’ – புதியதாக ‘ஜார்ஜ் க்ளூனி’ நடித்து வந்த படம் அல்ல. உங்களது கார்ல் சகனின் தொடர்பு மற்றும் ஜெமேஸ் காமரூனின் அவதார் பற்றி எழுத்துகளை தொடர்ந்து வந்ததில் எழுந்த எண்ணம்.

  அறிவியல் புனைவுகளில் முற்றிலும் புதிய அணுகு முறை கொண்டது சொலாரிஸ் என்பதே என் எண்ணம். இதற்கு மேல் பேசினால், விற்பனையாளர் போல் ஆகி விடுவேனோ என்கிற எண்ணத்தில் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்.


  M.Murali
  Consultant
  அன்புள்ள முரளி

  அறிவியல் புனைகதைகளில் ரொம்பவே கை டெக் ஆனவற்றை என்னால் சினிமாவாக பார்க்கமுடியடகு. புத்தம் என்றால் படித்துவிடுவேன். மேட்ரிக்ஸ் வரிசை படங்களை நீலகண்டன் அரவிந்தன் சொன்னார் என்று பார்த்து தலைவலிக்கப்பெற்றேன்

  சொலாரிஸ் பார்க்கிறேன்

 13. சுரேஷ்பாபு

  முப்பரிமாணக்காட்சிகளும், வரைவியலில் அடுத்த கட்டத்துக்குச் சென்ற தொழில்நுட்பமும், நேர்த்தியான தயாரிப்பும் – எல்லாம் மாத்திரைக்கு மேலே தடவிய இனிப்புதான் என்றே நானும் நினைக்கிறேன், இங்கே:http://penathal.blogspot.com/2009/12/blog-post_26.html பதிவு செய்திருக்கிறேன்.

 14. krishnan ravikumar

  Dear Jeyamohan,

  Earlier in one of your articles you mentioned that when you are writing, you will be in a completely different reality inside your writing world and when you come out of it, this world/reality appears ugly…

  Today i felt [still feeling] the same way after seeing Avatar 3D in Satyam Cinemas. After coming out of the theatre and even now i feel like living in a ugly world of pigmies. My heart yearns to go into that reality of Pandora and live in tune with nature for some time.

  A great movie. As masand said “A Cinematic event of our generation”

 15. ஜெயமோகன்

  சோகமான விஷயம் என்னவென்றால் மகத்தான திரைப்படங்கள் கூட பழசாகும் என்பதே. சின்னவயதில் பார்த்துப்பிரமித்த பென்கர் இன்று ஒன்றுமே இல்லை. பத்தே வருடங்களில் அவ்தாரின் தொழில்நுட்பம் வெடிக்கையாக ஆகிவிடும். அடுத்த கட்டம் வரும்

 16. kthillairaj

  வகையாக ஏமாற்றுவது என்ன்பது படித்தவர்கழுடைய திறமை

Comments have been disabled.