தமிழகத்தின் மதமாற்ற தடைச் சட்டம் ஏற்கத் தக்கதல்ல என்பதற்கு இக்கருத்தரங்கில் கூறப் பட்ட காரணங்களை நான் வழி மொழிகிறேன். இந்தச் சட்டம், சமூகங்களுக்கு இடையே மனக் கசப்பையும் அவநம்பிக்கையையும் வளர்க்கக் கூடியதாக உள்ளது. நம்முடைய தேசத்தில் மதம் சில தளங்களை தவிர்த்துப் பார்த்தால் தனிப்பட்ட நம்பிக்கை என்ற தளத்தில் இயங்கவில்லை. தனிப்பட்ட நிலைபாடு என்ற தளம் அதற்கு முற்றிலும் இல்லை.இங்கே மதம் என்பது மத அடிப்படையிலான சமூகங்கள் என்றே பொருள் படுகிறது. ஆகவே மத விஷயங்களில் கூட்டாகச் சிந்திப்பதும், கூட்டாகச் செயல் படுவதுமே இங்கு சாதாரணமாக உள்ளது.ஆகவே மதத்தை அரசியலில் இருந்து பிரிப்பதும் இங்கே சாத்தியமான விஷயமல்ல. இந்நிலையில் மத விஷயங்களில் மிகுந்த பொறுப்புணர்வோடும், நிதானத்திடனும் தான் நடந்து கொள்ளவேண்டும். அத்தகைய நிதானமும், பொறுப்புணர்வும் இந்த சட்டம் விஷயத்தில் கைகொள்ளப் படவில்லை. மத உணர்வுகளை தூண்டி விட்டு, ஒரு சாராரின் ஆதரவினை பெற்று விடலாம் என்ற குறுகலான கணிப்பின் அடிப்படையில் இந்த சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது.
இம்மாதிரியான ஒரு சட்டம், அது மிக அவசியம் என்று வைத்துக் கொண்டால் கூட, அது கோடிக் கணக்கான மக்களின் வாழ்வுடன் நேரடியான முறையில் தொடர்புள்ளது என்பதனால் ஒரு விரிவான விவாதம் மற்றும் பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப் பட்ட பொதுக் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில்தான் கொண்டு வரப் பட்டிருக்க வேண்டும். அறிவு ஜீவிகளும், மதத் தலைவர்களும், இதழாளர்களும் அதன் மாறுபட்ட தளங்களைப் பற்றிய தரப்புகளை மக்கள் முன் எடுத்து வைக்க வாய்ப்பு தரப் பட்டிருக்க வேண்டும். மாறாக இது அவசரச் சட்டமாக கொண்டு வரப் பட்டுள்ளது. இதன் அடிப்படை மனநிலை மக்களின் வாழ்க்கையில் உள்ள எல்லா தளங்களையும் தீர்மானித்து விடும் சக்தி அரசாங்கத்துக்கு உண்டு என்ற சர்வாதிகார நோக்கேயாகும். இது கண்டிக்கத் தக்கது. இது இந்திய ஜனநாயகத்துகே எதிரான போக்கு.
அவசரச் சட்டமென்ற அடிப்படையில் இதன் பல கூறுகள் ஏற்கனவே வந்த அவசர சட்டங்களான தடா மற்றும் பொடா போன்றவற்றை ஒத்துள்ளன. அதாவது இது காவல் துறைக்கு மித மிஞ்சிய அதிகாரம் அளிக்கிறது. கட்டாய மத மாற்றம் பற்றிய ஒரு தகவல் வருமென்றால் அதன் அடிப் படையில் ஒரு காவல் உதவி ஆய்வாளர் சம்பந்தப் பட்டவரை கைது செய்யலாம். மதம், நம்பிக்கை போன்ற நுட்பமான, சிக்கலான விஷயங்களில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இங்கே ஒரு காவல் துறை கடை மட்ட அதிகாரிக்கு விட்டுத்தரப் படுகிறது. மேலே சொன்ன அவசரச் சட்டங்கள் நடை முறையில் நமது அரசியல் சட்டம் நமக்களித்த அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவற்றை பறித்துவிடக்கூடியவையாகும். இந்த சட்டம் ‘எவருக்கும் தன் தரப்பை பிரச்சாரம் செய்யும் உரிமை உள்ளது ‘என்ற அடிப்படை உரிமையை நிராகரிக்கும் சட்டமாகும். வேறு எந்த நியாயத்தை சொல்லியும் ஒருவர் இம்மாதிரி ஒரு ஜனநாயக விரோத சட்டத்தை ஏற்கக் கூடாது. நமது அண்டை நாடுகளில் மதம், இனம் முதலிய வெறிகளின் அடிப்படையில் எழுந்த எல்லா போக்குகளும் இறுதியில் அரசாங்கத்தால் பயன்படுத்தப் பட்டு ஜனநாயகம் பலி தரப் படுவதில்தான் சென்று முடிந்து விட்டிருக்கிறது.
இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் இருந்த ஜனநாயக உரிமைகளை படிப்படியாக ரத்துச் செய்தபடியே வருகிறது. அப்போக்கு இப்போது வேகம் பெற்றுள்ளது. அதன் ஒருபகுதியே இச்சட்டம். நமது அண்டை நாடுகள் இன்று மூச்சுக் காற்றைவிட சுதந்திரம் முக்கியமானதென கருதுகிறார்கள், போராடுகிறார்கள் என நாம் அறிவோம். ஆனால் போராட்டம் கடந்த காலம் போல இருக்கவில்லை. நவீன ஊடகங்கள்,ஆயுதங்கள் ஆகியவை இன்றைய அரசுகளை வெல்ல முடியாதவையாக மாற்றியுள்ளன. மக்கள் சக்தி இன்று எளிதில் வெல்லமுடியாது என்பதே உண்மை. எல்லா அரசுகளும் சர்வாதிகாரம் நோக்கி செல்லவே முயலும்.சர்வாதிகாரத்தை அரசுகளின் கையில் கொடுத்து விட்டால் மீட்பது எளிதல்ல. சர்வாதிகாரம் எப்போதுமே மதம், இனம் புரட்சி போன்ற ‘புனிதமான’ உணர்வு பூர்வமான காரணங்களைப் பயன்படுத்தியே நம்மை ஆட்கொள்கிறது . அந்த கோஷங்களை நம்பும் மக்களே அதன் விலையாக தங்கள் தலைமுறைகளின் நல்வாழ்க்கையை கொடுக்க நேர்கிறது. ஈரான், ஆப்கானிஸ்தான், பர்மா என நாம் உதாரணங்களை அடுக்கியபடியே போகலாம். ஏன் கொலைக்கார போல்பாட் கூட இனச் சமத்துவம் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே கம்போடியாவை கைப்பற்றினான்.
ஜனநாயகம் பற்றி பேசுகிறோம். நாம் பிறருக்கு அளிக்கும் உரிமைகளே நமக்கும் நிலையாக இருக்கும் உரிமைகள் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படைப் பாடம். ஏதேனும் ஒரு தரப்பு அடக்குமுறைக்கு உள்ளாகும் வரை, சுரண்டப் படுவதாக உணரும் வரை முழுமையான ஜனநாயகம் சாத்தியமல்ல. முழுமையான ஜனநாயகம் ஒரு இலட்சியக் கனவென கொள்ளலாம். ஆனால் மேலான ஜனநாயகம் தொடர்ந்த சமரசப் போக்கு மூலமே சாத்தியமாகும். எதிர் தரப்பில் ஆழமான நம்பிக்கையை உருவாக்குவது ஜனநயகத்துக்கான அடிப்படையான தேவைகளில் ஒன்றாகும். மறுதரப்புகளை வாழவும், வளரவும் விடுவதன் மூலமே ஜனநாயகம் உருவாக முடியும். எனக்கு மனக்கசப்பை உருவாக்கும் ஒரு தரப்பு கூட வன்முறையை ஆயுதமாக கொள்ளாதவரை வளர விடப் பட வேண்டும் என்றே நான் சொல்வேன். உதாரணமாக கடுமையான பெண்ணடிமைத்தனத்தையும் சமூக குறுக்கல் வாதத்தையும் வலியுறுத்தும் இந்து, இஸ்லாமிய அடிப்படைவாதங்கள். கிறிஸ்தவ மதத்தில் உள்ள மதமாற்ற வேகம் எனக்கு ஏற்புடையதல்ல என்றும் சொல்ல விரும்புகிறேன். கருத்தியல் ரீதியாக அவை எதிர்க்கப் பட வேண்டும்.அதை மீறி அது வளருமெனில் அதை வளர்ப்பது வரலாற்றின் விதியாகும். அதை ஒழிக்கிறோம் என ஜனநாயகத்தைப் பலி தந்தால் ஜனநாயக இழப்பு மட்டுமே விளைவாக இருக்கும்.
மாற்றுத் தரப்புகளுடனான உரையாடலே ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தில் ஒவ்வொரு கருத்தும் வளர வழி வகுக்கும். உண்மையில் நல்ல ஜன நாயகத்தில் கருத்தியல் தீவிர வாதங்கள் தாக்குப் பிடிக்க முடியாது. உரையாடலை தவிர்ப்பதன் மூலமே அவை தங்கள் தீவிரத்தை தக்க வைத்துக் கொள்கின்றன. இந்து தீவிர வாதம் இஸ்லாமிய தீவிர வாதத்துடன் உரையாட ஆரம்பித்தாலே அவை இரண்டின் குரலிலும் தவிர்க்க முடியாத ஓர் சமரசம் உருவாவதை காணலாம். அதிலும் மதம் நம்பிக்கைகளை சார்ந்தது. மிக எளிதில் நிறுவனங்களாகவும், சடங்குகளாகவும் மாறக் கூடியது. அதிகாரத்தை உள்ளடக்கிய நம்பிக்கையே, மதம் என்பது.அந்நிலையில் தனக்கு மாற்று மதங்களுடன் தொடர்ந்த உரையாடலில், ஏன் போட்டியில் என்று கூட கூறலாம், இல்லாத ஒரு மதம் மிகச் சீக்கிரத்திலேயே தன் அனைத்து ஆன்மீக அம்சங்களையும் இழந்து தேங்கி சீரழிந்து விடும்.
இந்து மதத்தின் வரலாற்றைப் பார்த்தவர்கள் இதை உணர முடியும். இன்று இந்து மதம் என்று சொல்லப்படும் மதத் தொகை முற்காலத்தில் ஒன்றுக்கொன்று போராடும் பற்பல மதங்களாக இருந்தது. ஒவ்வொரு கூறும் பிறிதை மறுத்தது. அவ்விவாதம் மூலம் அவை பரஸ்பரம் வளர்த்தன, முழுமை செய்தன. உதாரணமாக பழங்கால மதங்களான சார்வாகம், சாங்கியம் ,யோகம், நியாயம், வைசேஷ்கம் ஆகியவை பொருள் முதல் வாத [பௌதீகவாத] அடிப்படை கொண்டவை. அவை கருத்து முதல் வாத அடிப்படைகொண்ட மதங்களுடன் செய்த நேரடியான பெரும் உரையாடலே இந்து மத தரிசனங்களை வளர்த்தது. [இவ்வடிப்படையை முன்வைத்து நான் எழுதிய தத்துவ நூல் ‘இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்’ இப்போது வெளியாகியுள்ளது. தமிழினி பதிப்பக வெளியீடு] இன்று முழு கருத்து முதல் வாத மதங்கள் கூட தங்கள் மெய்யறிதல்களில் சாங்கிய யோக, நியாய மரபுகளின் வழி முறைகளையே கடைப் பிடிக்கின்றன. பிற்பாடு பௌத்த சமண மதங்களுடனான உரையாடல். கொல்லாமை, சைவ உணவு, துறவு போன்ற கூறுகள் அம்மதங்களிலிருந்து, இந்து மதத்தால் பெறப் பட்டவையே. இந்து மெய்ஞானத்தின் சாரமாக இன்று அறியப் படும் அத்வைத வேதாந்தம், பௌத்த மெய்ஞானத்தின் தொடர்ச்சியாகும்.
அதன் பிறகு வந்த இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களுடன் அத்தனை துல்லியமான ஓர் உரையாடலை இந்து மதங்கள் மேற்கொள்ளவில்லை என்பது உண்மையே. அதற்கான காரணங்கள் பல. ஆனாலும் இந்து மதச் சீர்திருத்த இயக்கங்கள்பலவும் குறிப்பாக பிரம்ம சமாஜம் போன்றவை கிறித்தவ மரபுடனான உரையாடலில் இருந்து உருக்கொண்டவையெ. மத மோதல் எபோதுமே இருந்து வந்துள்ளது. தமிழக வரலாற்றில் சமணர்களுக்கும்- சைவர்களுக்கும், பிறகு சைவர்களுக்கும்- வைணவர்களுக்கும், பிறகு வைணவ மதங்களுக்கு இடையேயும் நடந்த மோதல்கள் மிக மிக மூர்க்கமானவை. கருத்தியல் மோதல் நேரடி வன்முறையாக வெடித்துள்ளது. அத்தகைய மோதல்கள் தவிர்க்கப் பட வேண்டும். அதற்குத் தான் ஜனநாயகம் என்ற அமைப்பு. அம்மோதல்கள் கருத்து தளத்தில் மட்டுமே நிகழ அனுமதிக்கப் படவேண்டும். அதுவே எல்லா தரப்பும் வளர்ச்சி பெற சிறந்த வழியாகும்.
இந்துமதம் அதன் அனைத்து வளர்ச்சியையும் தொடர்ந்த கருத்துப் போர்கள் மூலமே அடைந்தது. எனக்கு இந்து மெய்ஞானத்தின் சாராம்சமான கருத்தியல் அடிப்படை மீது பற்று உண்டு. அது அத்வைதம் தான். தூய அறிவை அடிப்படைச் சக்தியாக முன்வைக்கும் அத்வைத நோக்கு தான் நாராயண குருவும், விவேகானந்தரும் மேற் கொண்டது. நாராயண குருவின் மரபே என் மரபு என எப்போதுமே சொல்லி வந்துள்ளேன். நித்ய சைதன்ய யதி என் ஆசிரியர் என்றும். அந்த அத்வைதம், பௌத்த ஞான மரபின் தொடர்ச்சி என்றும் அறிவேன். நாராயண குரு தம்மை பௌத்தர் என்று சொல்ல தயங்கியதில்லை [அத்வைதன் என்பது புத்தரின் இன்னொரு பெயர்] இந்த அடிப்படை மீதான ஏற்பிலிருந்தே நான் மதத்தை ஒரு குழு அடையாளமாக கொள்வதை நிராகரிக்க முயல்கிரேன். அதை ஒரு திறந்த விவாதமாக முன் வைக்க எண்ணுகிறேன். என் தரப்பு, முழுமையான தடையற்ற விவாதம் மூலம் மேலும் வலுப் பெறும் என்றும் நம்ப விழைகிறேன். அத்வைதியான நாராயண குருவுக்கு எந்த மதமும் விலக்கப் படவேண்டிய ஒன்றாக இருக்கவில்லை.
இன்றைய சூழலில் இந்து மதத்தில் உள்ள எல்லா குப்பைக் கூளங்களும் கிளறியெடுக்கப் படுகின்றன. மீண்டும் வைதீகம் வல்லமை பெறுகிறது. ராஜாராம் மோகன் ராய் முதல் நித்ய சைதன்ய யதி வரை ஒரு பெரும் ஞானியர் வரிசை நிகழ்த்திய இரு நூற்றாண்டு கருத்துப் பணிகள் மறக்கடிக்கப் பட்டு வைதீக மரபே இந்து மதம் என்று வலியுறுத்தப் படுகிறது .இன்று இந்துமதத்தின் முன் ,அதாவது இன்று இந்து மதத்தின் பிரதிநிதிகளாக வந்துள்ள மடங்கள் மற்றும் அமைப்புகளின் முன், பெரும் சவால்களாக இஸ்லாமும், கிறிஸ்தவமும் நின்று கொண்டிருக்க வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். கிறிஸ்தவத்தின் மனிதாபிமானத் தொண்டு மனப்போக்கு , கிறிஸ்துவின் கருணை, இங்கே அச்சவாலை முன் வைத்தபடியே இருக்கவேண்டும். இஸ்லாமின் சமத்துவத்தில் வேரூன்றிய நீதியுணர்வு அச்சவாலை முன் வைக்க வேண்டும். ஆம், மத மாற்றத்துக்கான சவால் இருந்தாக வேண்டும்.
கருணையும், சமத்துவமும் இந்துமத்திலிருந்து கிடைக்கா விட்டால் மக்கள் வெளியேறட்டும். கிறித்த பாதிரிமார்கள் சேரிகளுக்கு சென்று இருநூறு வருடம் கழித்துதான் நமது மடாதிபதிகளுக்கு சேரிக்கும் செல்லலாம் என்று பட்டிருக்கிறது. இஸ்லாமிய மதமாற்றம் நடைபெற்று ஐநூறு வருடம் கழித்துத் தான் மனிதர்களை ஓரளவாவது சமமாக நடத்த வேண்டும் என்ற ஞானம் இவர்களுக்கு உருவாகியுள்ளது. இம்மதங்கள் இல்லா விட்டால் இன்னும் ஆயிரம் வருடம் ஆகியிருக்கக் கூடும். எழுபது வருடம் முன்புதான் இதே காஞ்சி மடாதிபதியின் மூத்தவர் [சந்திரசேகர சரஸ்வதி] முந்நூறு மைல் நடந்து பாலக்காட்டுக்கு சென்று காந்தியை சந்தித்து ஆலயப் பிரவேச இயக்கத்தை கைவிடக் கோரி மன்றாடினார் என்பது வரலாறு. இன்று அவரது வரலாற்றிலிருந்தே அச்சம்பவம் மறைக்கப் படும் நிலை உருவாகியுள்ளது. அதற்கு கண்டிப்பாக கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் மதமாற்றம் ஒரு காரணம்.
மதமாற்றம் மூலம் இந்தியாவின் பண்டையப் பெரும் பண்பாடு அழிந்துவிடுமா? ஆம், பெரும்பாலும் . அப்படித் தான் உலகம் முழுக்க நடந்துள்ளது. அப்பண்பாட்டை பெரும் ஈடுபாட்டுடன் பயின்று வருபவன், அதன் பகுதியாக என்னை அடையாளம் காண்பவன் நான். அதன் அழிவு, என் அழிவும்தான். ஆனால் மதமாற்றச் சவாலை நம் பண்பாடு எதிர் கொள்ள சிறந்த வழி ஒன்று உள்ளது. சொல்லப் போனால் வேறு வழியே இல்லை. கிறித்தவ மதத்தை விட கருணை மிக்க ஒரு மதமாக நாம் மாறலாம். இஸ்லாமை விட சமத்துவத்தை மேற்கொள்லலாம். எளிய வேலை தானே இது? மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவதை விட ஜெயலலிதா தனக்கு பெரும் ஆதரவு வங்கியாக உள்ள தேவர் சாதியை மனமாற்றம் செய்து தீண்டாமையை சற்றேனும் கைவிடச் செய்ய தன் வசீகரத்தைப் பயன்படுத்தலாம். காஞ்சி சங்கராச்சாரியார், கால்டுவெல் செய்த பணிகளை சிறிதளவேனும் தொடரலாம். சங்கர மடத் தலைவராக ஒரு தலித் வர முடியுமென்றால் யாரைப் பற்றி கவலைப் பட வேண்டும்? சரி, உடனடியாக முடியாவில்லை என்றாலும் இப்போதைக்கு கொள்கை அளவுக்கு அதை ஏற்றுக் கொள்ளலாம். அதற்காக முயலலாம். கிண்டல் செய்யவில்லை. அது ஒன்றே வழி. குறைந்த பட்சம் அந்த வழி நோக்கி அவர்களை நிர்ப்பந்திப்பதற்காகவேனும் மதமாற்றம் நிகழட்டும். இல்லையேல் சங்கராச்சாரியார் 1930க்குத் தான் திரும்பி நடந்து போவார்.தேங்கிநாறி சடங்குக் குட்டையாக இந்து மதம் இந்த தேசத்தில் இருப்பதை விட அது அழிந்து இந்நாடு கிறித்தவ நாடாகவோ, இஸ்லாமிய நாடாகவோ ஆவதேமேல்.
இந்த மதமாற்றத் தடைச் சட்டம் உண்மையில் எதைச் செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் இருப்பதற்கான வழியை தேடுகிறது. தன்னைத் தானே சீர்த்திருத்திக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் இந்து மதத்துக்கு இருக்கும் வாய்ப்புகளை மூடி அதை மேலும் வைதீக முடையில் மூடிப்போடும் முயற்சி. அதன் மூலம் இந்து மதத்துக்கே இது பெரும் தீங்கை விளைவிக்கிறது. இந்து மத அபிமானிகள். அனைவருமே இதை எதிர்க்க வேண்டுமென நான் எண்ணுகிறேன். குறைந்தபட்சம் இவர்கள் எண்ணுவது போல மத மாற்றத்தையாவது இது தடுக்குமா? இல்லை. ஏனெனில் மத மாற்றம் ஒரு கருத்தியல்ச் செயல்பாடு. சட்டமும் வன்முறையும் அதை எவ்வகையிலும் தடுக்காது. இதன் உடனடி விளைவு என்ன? இது மதச்சிறுபான்மையினர் தங்கள் ஒடுக்கப் படுவதாக எண்ண வழி வகுக்கும். மனக் கசப்புகளையும், துவேஷத்தையும் பெருக்கும். நம் சமூகத்தில் உருவாகியுள்ள பிளவு மேலும் அதிகரிக்க வழி வகுக்கும். ஆகவே ஒட்டு மொத்தமாக கண்டனத்துக்கு உரியது இது.
ஆகஸ் 1, 200ம் அன்று நாகர் கோவிலில் கலை இலக்கியப் பெரு மன்றத்தின் சார்பில் நடத்தப் பட்ட மதமாற்ற தடைச் சட்ட எதிர்ப்புக் கருத்தரங்கில் பேசியது]
மறுபிரசுரம்