தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்

இந்தியத் துணைக்கண்டத்தில் மனித இனம் உருவானது குமரிக்கண்டம் என்னும் லெமூரியாவில். இங்கே பழங்குடிகள் வாழ்ந்துவந்தார்கள். இவர்கள் பேசிய மொழி தமிழ். இவர்கள் கல்லையும் மண்ணையும் வழிபடுவதுபோன்ற மதப்பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தார்கள். குமரிக்கண்டத்தில் இருந்து இவர்கள் வடக்கே பரவி வடக்கே உள்ள பிராகிருதம் போன்ற பண்படாத மொழிகளை உருவாக்கினார்கள். சிந்துசமவெளிநாகரீகம் அவர்களால் உருவாக்கப்பட்டதுதான். இவர்கள் சிவன் அல்லது பசுபதி போன்ற கடவுள்களை வழிபட்டார்கள். பண்பாட்டுவளர்ச்சி இல்லாத ஒரு வாழ்க்கை இங்கே நிலவியது. இக்காலத்தில் தமிழர்களின் ஆன்மவியல் [soulology]  வளர்ச்சியுறாத நிலையில் காணப்பட்டது. 

இந்நிலையில் வடக்கில் இருந்து வந்த சமணர்களும் பௌத்தர்களும் தமிழர்களின் நிலத்தைக் கைப்பற்றி ஆண்டார்கள். தமிழர்களின் சிந்தனையையும் அவர்கள் அழித்தார்கள். அவர்கள் கடவுளை உணரக்கூடிய ஞானம் இல்லாதவர்கள்.இவர்களால் தமிழர்களின் ஆன்மவியல் முழுமையாக அழிந்தது. இக்காலகட்டத்தில் வடக்கே இருந்து வந்த அன்னியர்களான ஆரியர்கள் தமிழர்களின் பண்பட்டை அழித்து அவர்களை சாதிகளாகப் பிரித்து அவர்களை அடிமையாக்கி சுரண்டினார்கள்.

இந்நிலையில் கிறிஸ்துவின் சீடரான புனித தோமையர் [தாமஸ்] இந்தியாவுக்கு வந்துசேர்ந்தார். இவர் மேலைக்கடற்கரைக்கு வந்து அங்கிருந்து கீழைக்கடற்கரைக்கு வருகைதந்தார். அவர் கிறித்தவ ஆன்மவியலை தமிழர்களுக்கு கற்றுத்தந்தார். தமிழர்களின் தொன்மையான ஆன்மவியலில் கிறிஸ்தவத்தின் இறைச்செய்திகள் சில உள்ளன என்பதைக் கண்டுபிடித்து அதன் வெளிச்சத்தில் அவர் தமிழ்-கிறித்தவ ஆன்மவியலை உருவாக்கினார்.

அதை அரைகுறையாக புரிந்துகொண்டவர்களால்  அந்த தத்துவ சிந்தனைகள் திரிக்கப்பட்டன. இவ்வாறு திரிபுபட்ட கிறித்தவமே சைவம்,வைணவம் என்ற இருபெரு மதங்களாக உருவெடுத்தது. இதுவே பக்தி இயக்கம் ஆகும். இந்த பக்தி இயக்கமானது பௌத்தர்களையும் சமணர்களையும் துரத்தியது

புனித தோமையர் பிராமணர்களால் கொல்லப்பட்டார். அவர் கற்பித்த தமிழ்-கிறித்தவச் சிந்தனைகள் பிராமணர்களால் மேலும் திரிக்கப்பட்டன. அவ்வாறாக சைவத்தையும் வைணவத்தையும் பிராமணர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். ஆதிக்கிறித்தவ சிந்தனைகளை அவர்கள் தங்களுடைய சிந்தனைகளாக மாற்றிக் கொண்டார்கள். இதன்பொருட்டு அவர்கள் சமசுகிருதம் என்ற மொழியை உருவாக்கினார்கள். இந்தமொழியில் வேதங்கள் உபநிடதங்கள் போன்ற நூல்களை எழுதிக்கொண்டார்கள். அவற்றில் உள்ள ஞானம் கிறித்தவ ஞானமே என்று வெளியே தெரியாமல் இருப்பதற்காக அவற்றை யாரும் கற்கக் கூடாது என்று சொன்னார்கள். சாதிப்பிரிவினைகளை நிலைநிறுத்திய அன்னியர்களான பிராமணர்கள் தமிழர்களை இந்தியா முழுக்க அடிமையாக்கி வைத்திருந்தார்கள்.

தமிழர் ஆன்மவியலின் மிகச்சிறந்த நூல் சிவஞானபோதம் ஆகும். இது புனித தாமஸால் கொண்டுவரப்பட்ட ஆதி கிறித்தவ சிந்தனைகளின் சற்று குறைப்பட்ட வடிவம். இன்று இந்துக்கள் சொல்லப்படுகிறவர்கள் உண்மையில் ஆதி கிறித்தவர்களே. இந்து என்ற ஒரு மதம் இல்லை. அப்படி ஒருமதம் இருப்பதாக எந்த ஒரு அறிஞருமே சொன்னதில்லை. அது ஆரிய பிராமணர்கள் சாதிபேதங்களை உருவாக்கும்பொருட்டு உருவாக்கிய பொய். ஆகவே சைவம் வைணவம்  என்ற இரு மதங்களைச் சேர்ந்த இந்துக்களை ஆதிகிறித்தவர்கள் அல்லது தாமஸ்கிறிஸ்டியன்ஸ் என்றுதான் சொல்லவேண்டும். 

சிந்துவெளியில் உள்ள நினைவுக்கல் வழிபாடானது பைபிள் கூறும் பெத்தேல் வழிபாடே ஆகும். கல்லில் எண்ணை ஊற்றி வழிபடுவது கிறித்தவத்தில் இருந்து வந்தது. பெத்தேலில் யாக்கோபால் நினைவுக்கல்லின் மேல் எண்ணை ஊற்றப்பட்டதை நினைவுகூரும்வகையில் ‘எண்ணை ஊற்றப்பட்டவர்’ என்ற அர்த்தம் வரும் சொல்லாகிய கிறிஸ்து என்பதால்தான் ஏசு அறியப்படுகிறார். அந்த வழிபாட்டை நாம் திராவிட [தமிழ்] வழிபாட்டில் காண்கிரோம்.ஆகவே திராவிட சமயம் என்பது கிறித்தவமே.

இயேசுகிறிஸ்து சாவைக்கொடுக்கும் சாத்தானை வென்று உயிர்த்தெழுந்து சாவின்மீது அடைந்த வெற்றியைத்தான் சற்றே உருமாறிய வடிவத்தில் சுடுகாட்டில் முயலகன் மீது சிவன் ஏறி ஆடும் நடனத்தில் காண்கிறோம். பெத்தேலின் நினைவுக்கல்லின் நினைவால் கிறிஸ்து ‘உயிருள்ள கல்’ என்று சொல்லப்பட்டார். அதிலிருந்து சிவலிங்க வழிபாடு தோன்றியிருக்கலாம். சிவலிங்க வழிபாட்டிலிருந்து சிவகுடும்ப வழிபாடு உருவானது. இது திருக்குடும்பம் என்ற கிறித்தவ கருத்தாக்கத்தின் விளைவேயாகும். பிதா சிவன் ஆகவும் சக்தி பரிசுத்த ஆவி ஆகவும் ஏசு முருகன் ஆகவும் உருமாற்றம் பெற்றார்கள்.

கிறித்தவத்தில் மகனாக அவதரித்த கடவுளுக்கு நான்கு குணங்கள் உள்ளன. சாத்தானை வென்றநிலை சூரனை வென்றநிலையாக மாற்றம் செய்யப்பட்டது. இறந்து உயிர்த்தெழுந்த நிலை தலைவெட்டப்பட்ட பிள்ளையாராக ஆகியது. உலகைப்படைத்த நிலை பிரம்மனாக ஆகியது. உலகின் ஒளியாக இருக்கும் நிலை மலைமீது ஒளியாக தெரியும் ஐயப்பனாக மாறியது. புனித தாமஸால் முன்வைக்கப்பட்ட ஆதிகிறித்தவ சிந்தனைகள் இவை என்று தெரியாதபடி பிராமணர்களால் இவை புராணங்களாக ஆக்கப்பட்டன.

இவ்வாறு சிவ வழிபாட்டில் பலதெய்வக் கோட்பாடு ஆரியர்களான பிராமண அன்னியர்களால் உருவாக்கப்பட்டது. அதை மீண்டும் தூய கிறித்தவ அடிப்படைகளின்படி திருத்தி ஓரு தெய்வக் கோட்பாட்டை நோக்கிக் கொண்டுவர எழுதப்பட்ட நூலே சிவஞானபோதம் ஆகும். திருமந்திரம் ‘அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்’ என்று சொல்வது புனித தாமஸால் முன்வைக்கப்பட்ட  இந்த தூய கிறித்தவ கருத்தையே. அன்பு என்பது கிறித்தவக் கருத்து.

தாமஸ்கிறித்தவத்தின் செல்வாக்கினால் பௌத்தத்தில் மகாயானம் என்ற பிரிவு உருவானது. இதன் பிறகே பௌத்தத்தில் தத்துவ சிந்தனைகள் உருவாயின. புத்தரை ஏசுவைப்போன்ற ஒரு கடவுளாக ஆக்கினார்கள். புத்த மைத்ரேயர் என்ற கடவுள் உருவாக்கப்பட்டார். அவர் ஏசுவைப்போன்றே ஊழி முடிவில் பிறந்து வருவார் என்று சொல்லப்பட்டது. மகாயான பௌத்தத்தில் இருந்துதான் பௌத்த தத்துவங்கள் உருவாக்கி சீனாவுக்கு சென்றன. ஜென் பௌத்தம் அவ்வாறுதான் உருவாயிற்று

அதேபோல தாமஸ்கிறித்தவத்தின் செல்வாக்கினால் சமணத்தில் சுவேதாம்பரம் என்ற பிரிவு உருவாகியது. இதன் பின்னரே சமண மதத்திலும் தத்துவ சிந்தனை உருவாகியது. சமணர்கள் கிறித்துவ தீர்க்கதரிசிகளைப் பின்பற்றி தங்கள் தீர்த்தங்காரர்களை கற்பனைசெய்து அவர்களை வழிபட ஆரம்பித்தார்கள்.

கிறித்தவத்தில் இருந்து நான்கு அடிப்படைக் கோட்பாடுகள் தாமசால் தமிழர் ஆன்மவியலுக்குக் கொடுக்கப்பட்டன. மூவொருமைக் கோட்பாடு.[கடவுள் மூன்றாக இருப்பது ]அவதாரக் கோட்பாடு [கடவுள் பிறப்பது] பாவமன்னிப்பு கோட்பாடு. [கடவுளிடம் சரண் அடைந்து பாவத்தைக் களைவது] பலி நிறைவேற்றக் கோட்பாடு. [ஏசு பலியாகிவிட்டார்.ஆகவே இனி உயிர்பலி தேவையில்லை என்ற கோட்பாடு] பக்திவழி விடுதலைக் கோட்பாடு. இவற்றையே நாம் பக்தி இயக்கத்தின் சைவ வைணவ மதங்களில் காண்கிறோம். பக்தி இயக்கம் வழியாக இந்தியா முழுக்க இவை பரவி இப்போது இந்து மதமாக அறியப்படுகின்றன.

வேதங்களில் ஆரியர்கள் கிறித்தவக் கோட்பாடுகளை திருடி எழுதிவைத்திருக்கிறார்கள். பிரஜாபதி என்று வேதங்கள் சொல்வது கிறிஸ்துவையே

திருக்குறள் தாமஸ் கற்பித்த ஆதிகிறித்தவக் கருத்துக்களை முன்வைக்கும் ஒரு முழுமையான கிறித்தவ நூல் ஆகும். திருக்குறளின் பாயிரம் கிறித்தவர்களின் விசுவாசப் பிரமாணமே. அதேபோல சிவஞானபோதமும் ஒரு பற்றுறுதிப்பிரமாணமே.

இவ்வாறு இந்தியசிந்தனைகள் அனைத்தையுமே உருவாக்கிய தாமஸ் பற்றி இந்தியநூல்களில் எதிலுமே எந்தக்குறிப்பும் இல்லை. காரணம் ஆரிய பிராமணர்களின் சதியே.

பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலிருந்து தூய கிறிஸ்தவம் இந்தியாவுக்கு வந்தது. இந்த முழுமையான கிறித்தவத்தின் அடிப்படையில் திரிபு நிலையில் உள்ள் தமிழர்களின் ஆன்மவியலை நாம் திருத்தியமைக்க வேண்டும்.
***
இக்கருத்துக்களை நாம் டாக்டர் தேவகலா எம்.ஏ எம்.·பில் பி.எச்.டி எழுதிய ‘இந்தியா தோமாவழி திராவிடக் கிறித்தவ நாடே’ என்ற தமிழ் நூலில் தெளிவாகவும் விரிவாகவும் காண்கிறோம். இது தமிழ் கிறித்தவ ஊழியருக்கான சுருக்கக் கையேடு. இது ஆய்வளர் தெய்வநாயகம் அவர்களால் செயப்பட்ட ஆய்வுமுடிவுகளை ஊழியர்களுக்குக் கொண்டுசெல்லும்பொருட்டு அவரது மகளால் உருவாக்கப்பட்டது

கிட்டத்தட்ட ஒரு அதிகாரபூர்வ கையேடு இது. சென்னை -மயிலை கத்தோலிக்கப் பொறுப்புப் பேரயர் டாக்டர் லாரன்ஸ் பயஸ் அவர்கள் இதற்கு அளித்த முன்னுரையில் ‘இந்தியா தோமாவழி கிறித்தவ நாடே என்பதை டாக்டர் தெய்வநாயகம் ஆணித்தரமாக நிலைநாட்டியிருக்கிறார்’ என்று சொல்லி ‘சைவர் வைணவர் அனைவரும் மறைமுகக் கிறித்தவர்களே’ என்று சொல்கிறார். இந்தக் கருத்தை பிரச்சாரம்செய்வதற்கான பயிற்சி வகுப்புகள் மயிலை தாமஸ் ஆலயத்தில் நிகழும் என்றும் அதில் பங்குபெறுவோருக்கு வாழ்த்துக்கள் என்றும் சொல்கிறார்.

இந்திய சுவிசேஷத் திருச்சபை பேராயர் டாக்டர் எஸ்றா சற்குணம், சி.எஸ்.ஐ. தென்னை திருமண்டல பேராயர் அம்மா மறைதிரு ஜோன் தேவசகாயம் அவர்கள், சென்னை அப்போஸ்தல தலைமைபோதகர் பாஸ்டஎ எம்.கெ.சாம் சுந்தரம் அவர்கள், குருகுல் லுத்தரன் இறையியல் கல்லூரி முதல்வர் மறைதிரு மாணி சாக்கோ அவர்கள் ஆகியோர் இந்நூலின் ‘நிரூபிக்கப்பட்ட’ கருத்துக்களை வழிமொழிந்து இந்திய சிந்தனைகள் அனைத்துமே தாமஸிடமிருந்து உருவானவையே என்று சொல்கிறார்கள்.

ஆரியர்கள் என்று ஒரு இனம் இல்லை என்று டாக்டர் தேவகலா அவர்கள் சொல்கிறார்கள். இந்தியா மீது படைஎடுத்து வந்த பாரசீகர், கிரேக்கர்,சகர், குஷானர், ஹ¥ணர் ஆகியோர் கிபி ஏழாம் நூற்றாண்டில் மௌண்ட் அபு என்ற இடத்தில் கூடி அப்போது இருந்த திராவிட அரசனான ஹர்ஷவர்தனனைக் கொன்று ஆட்சியைப் பிடித்தார்கள். அவர்கள் தாங்கள் வெள்ளை நிறத்தில் இருந்தமையால் தங்களை ஆரியர் என்று சொல்லிக் கொண்டார்கள். அவர்கள் உருவாக்கிய நீதியே மனுநீதி

மனுநீதியின்படி ஆரியர் உயர்வானவர்கள். திராவிடர்கள் அவர்களுக்கு அடிமைகள். அப்படி அடிமையாக திராவிடர்கள் இருக்க வேண்டுமென்று கூறுவதே இந்துத்துவம் ஆகும் என்கிறார் டாக்டர் தேவகலா. இந்தக்கருத்தை வலியுறுத்துபவர்கள் பிராமணர்கள்.

பழந்தமிழ் இலக்கியங்கள் பத்துபாட்டு எட்டுத்ததொகை முதலியவை கிபி இரண்டாம் நூற்றாண்டில் ,அதாவது தாமஸ் வந்தபின் நூறுவருடம் கழித்து உருவானவை என்று டாக்டர் தேவகலா சொல்கிறார்கள். பழந்தமிழ் இலக்கியங்களில் ஆதன்- அவ்வை என்று சொல்லப்படுகிறவர்கள் ஆதாம் ஏவாள்தான் என்கிறார். தமிழ்ச் சொல்லாகிய அன்பு என்பதில் கிறித்தவத்துக்கே உரிய அன்பு என்ற நற்குணத்தின் சில பண்புக்கூறுகள் காணப்படுகின்றன என்பதை ஒரு முக்கிய ஆதாரமாக தேவகலா குறிப்பிடுகிறார். ஏறத்தாழ 300 பக்க அளவுள்ள இந்த நூல் இத்தகைய விரிவான ஆய்வுகளை முன்வைக்கிறது.

***

இது ஒரு தனிநபரின் ஆய்வோ, அல்லது சிறு குழுவின் கருத்துக்களோ அல்ல. இதற்கு தமிழகத்தின் செல்வாக்குள்ள எல்லா கிறித்தவ சபைகளும் வெளிப்படையான ஆதரவை தெரிவித்திருக்கின்றன என்பதைக் கண்டோம். சென்ற பத்து வருடங்களில் இக்கருத்தை பிரச்சாரம்செய்யும் ஏராளமான ஆங்கில தமிழ் நூல்கள் வெளியாகியிருக்கின்றன. பலநூறு துண்டுப்பிரசுரங்கள் வெளியாகி கிறித்தவ ஆலயங்களில் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. தமிழகக் கிறித்தவர்களில் உயர்கல்வி கற்றவர்கள் பழந்தமிழ் ஆய்வுசெய்தவர்கள் உட்பட பெரும்பாலானவர்கள் இந்தக் கோட்பாட்டை ஒரு நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மை என்றே எண்ணுகிறார்கள். உதாரணமாக குமரிமாட்டத்தின் பிரபல அறிவுஜீவியும் நவின இலக்கிய வாசகருமான பேராசிரியர் ஜேம்ஸ் ஆர் டேனியல் இக்கருத்தை ஒரு நூலில் வழிமொழிகிறார்! கிறித்தவப் பள்ளிகளில் இந்த வரலாற்றை அதிகாரபூர்வமற்ற வகையில் சொல்லியும் கொடுக்கிறார்கள்.

இந்த நூல்களை முழுக்க எனக்கு திரட்டி அளித்தவர் தக்கலையைச் சேர்ந்த லுத்தரன் சபையைச் சேர்ந்த கிறித்தவ ஊழியர் ஒருவர். நான் இவற்றைப் படித்தால் என்னுடைய வரலாற்றுப் பார்வையே மாறிவிடும் என்று சொன்னார். ஆனால் நான் படிக்க மாட்டேன் என்று சவால் விட்டார். படிப்பேன் என்று அவருக்கு உறுதி அளித்தேன். அவர் எனக்கு அளித்த பிற நூல்கள் இவை:

1. India is a Christian Nation- By. M.Sunder Yesuvadian [a] M.S.Mankad. [ Published by Anaryan Publications , Indian Anarya Samaj Trust, 16A, Chidambara Nathan Street, Ramavarma puram. Nagercoil 629001] இந்நூலுக்கும் முக்கியமான எல்லா கிறித்தவ திருச்சபை தலைவர்களும் முழுமையான ஆசியுரை வழங்கியிருக்கிறார்கள். 

2. Hindu Religion is the offshoot of St.ThomaS Dravidian Christianity- By Dr.Devakala [ Meypporul Publications 278, Konnur High Road,ayanapuram Chennai 600023]

3.Love Hindus. By M.Christopher MA LLB, Beniah Kallukatti, Kuzhithurai K K dist Tamilnadu 629163

4 தமிழர் சமயத்தை விடுவிக்கப்போவது யார்? பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எம் ஏ.பி எச் டி [மெய்ப்பொருள் அச்சகம், 278, கொன்னூர் கைரோடு, அயனாவரம் சென்னை 600023 ]

மற்றும் பத்து துண்டுபிரசுரங்கள். பெரும்பாலும் ஒரே ஆதாரங்கள் ஒரே வரிகளினால் ஆனவை இவை. இந்நூல்களின் பின்னட்டைகளில் ஏராளமான பிற நூல்களைப்பற்றிய தகவல்கள் உள்ளன.
***
பேராசிரியர் ஜேசுதாசன் இந்தக் கருத்தமைவின் முக்கியமான தொடக்கப்புள்ளி. எஸ்.வையாபுரிப்பிள்ளை வழிவந்தவரான ஜேசுதாசனுக்கு பைபிளிலும் கம்பராமாயணத்திலும் இணையான ஈடுபாடு உண்டு. தமிழிலக்கியம் சார்ந்த வையாபுரிப்பிள்ளையின் காலக்கணக்குகளை பெரிதும் ஏற்றுக் கொண்டவர் அவர்.பேராசிரியர் தமிழிலக்கிய வரலாறு ஒன்றை ஆரம்பகாலத்தில் எழுதினார். பின்னர் அவரது முதியவயதில் அவரது உதவியுடன் ஹெப்ஸிபா ஜேசுதாசன் அந்த தமிழிலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் மூன்றுபாகங்களாக விரிவாக எழுதினார்.

அந்த தமிழிலக்கிய வரலாற்றின் பெயர் ‘Count Down From Solomon’ அந்நூலின் தலைப்¨ப்பபற்றிச் சொல்லும்போது தமிழிலக்கியம் பற்றிய ஆகப்பழைய குறிப்பு சாலமோனின் பாடல்களில் வருகிறது என்பதனால் அந்த தலைப்பை வைத்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.பேராசிரியரின் நூலில் தாமஸ் இந்தியாவுக்கு வந்ததாகச் சொல்லப்படும் நம்பிக்கையை ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். அத்துடன் தமிழின் சிறந்த இலக்கியங்களில், குறிப்பாக திருக்குறளிலும் ஆழ்வார்பாடல்களிலும் உள்ள அறம் அன்பு பற்றிய தரிசனங்கள் கிறித்தவ விழுமியங்களுடன் ஒத்திசைந்து போகின்றன என்று சொல்லியிருக்கிறார். இது அவருடைய நோக்கில் இலக்கியத்தின் உச்சங்கள் இயல்பாகவே உயரிய மானுடவிழுமியங்களைச் சார்ந்து இருக்கும் என்பதன் வெளிப்பாடே.

இந்நூல்களை பேராசிரியர் ஜி.ஜான் சாமுவெல் வெளியிட்டார். அவர் அப்போது சென்னை ஆசியவியல் நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்தார். கடைசிக்காலத்தில் ஹெப்சிபா ஜேசுதாசன் இந்தியாவில் சிந்தனைகளை கிறித்தவம்தான் கொண்டு வந்தது என்று வாதிட ஆரம்பித்தார். அன்பு, பண்பு, அறம் போன்ற விழுமியங்கள் தமிழிலக்கியத்தில் உள்ளன , அவை சாத்தானால் ஆட்சி செய்யப்பட்ட தமிழ்நாட்டு பழங்குடி மனதில் உருவாக வாய்ப்பில்லை என்பது அவரது தர்க்க முறை.

ஜான்சாமுவேல் இங்கிருந்து ஆரம்பிக்கிறார். 2003ல் ‘தமிழகம் வந்த தூய தோமா’ என்ற நூலை அவர் எழுதினார். இந்தியச் சிந்தனைகள் அனைத்துமே தமிழகம் வந்த தோமஸால் உருவாக்கப்பட்ட¨வையே என்று அதில் வாதிடுகிறார். [ ஹோம் லேண்ட் பதிப்பகம். 23, திருமலைநகர் இணைப்பு, பெருங்குடி,சென்னை 600096 ]

இந்த கருத்தை ஜான்சாமுவேல் மற்றும் தெய்வநாயகம் இருவரும் வெற்றிகரமாக அமெரிக்க இவாஞ்சலிஸ்டுகளுக்கு கொடுத்து ஏற்கச்செய்தனர். பொதுவாகவே மதப்பரப்புதலுக்கு உள்ளாக்கப்படும் நாடுகளின் வரலாற்றை முழுமையாக மாற்றி எழுதுவது கிறித்தவ மரபு. அந்த மாற்றப்பட்ட வரலாற்றை அம்மக்களை ஏற்கசெய்யும்போதுதான் மதமாற்றம் நிரந்தரமாகும் என்று எண்ணுகிறார்கள்.

இந்த வரலாற்று மறு உருவாக்கத்தில் பொதுவாக இரு கூறுகள் செயல்படும். இவற்றை மிகமேலோட்டமாக சமகால ஆப்ரிக்க ஆசிய வரலாறுகளை அணுகினாலே காணமுடியும். ஒன்று அந்நாடுகளில் பண்பாடு, சிந்தனை, மெய்யியல் எதுவும் பூர்வீகமாக இருந்ததில்லை, கிறித்தவம் மூலமே அவை கொண்டுவரப்பட்டன என்று நிறுவுவது. மதம்மாறியவர்கள் அந்த அப்பழைய காலத்தை ‘இருண்டகாலம்’ என்று சொல்லத்தலைப்படுவார்கள்.

இரண்டு அந்த தேசத்தை இரு பெரும் இனப்பிரிவுகளாகப் பிரித்து அதில் ஒன்று இன்னொன்றை முழுமையாக அடக்கி ஆண்டது, அந்த நாட்டின் அனைத்து இழிவுகளுக்கும் அந்த அடக்கியாண்ட இனம்தான் காரணம் என்று நிறுவுவது. பலநாடுகளில் அப்படி குறிப்பிடப்படும் இரு இனங்களிலும் மக்கள் தங்களை மாற்றிக்கொள்ளக்கூட உரிமை இருக்கும்! உதாரணம் ரவாண்டாவின் டுட்சி-ஹடு இனங்கள். நைஜீரியா, சியரா லியோன் போல ஆப்ரிக்க நாடுகள் ஒவ்வொன்றிலும் மாற்றமே இல்லாமல் இதே வரலாற்றுபபணியை கிறித்தவ மதப்பரப்பாளர்கள் கடைபிடித்திருப்பதைக் காணலாம். அந்த வெறுப்புகள் பெரும் இனக்கலவரங்களாக வெடித்து ரத்த ஆறை ஓடவிட்டுக்கொண்டிருக்கின்றன.

ஜான்சாமுவேல்-தெய்வநாயகம் உருவாக்கிய இந்த வரலாற்று உருவகம் இவ்விரு அம்சங்களையும் தெளிவாகவே கொண்டிருப்பதைக் காணலாம். தமிழகத்தில் திராவிட இயக்கம் ஆரிய வெறுப்பை கால்டுவெல்லில் இருந்து கண்டெடுத்து முன்வைத்தது. அது தமிழகத்தில் புதிதல்ல என்றாலும் இந்நூல்களில் காணப்படும் அப்பட்டமான உக்கிரமான வெறுப்பு பீதியூட்டுகிறது. ஆரியர்களையும் பிராமணர்களையும் கிட்டத்தட்ட  ரத்தவெறிகொண்ட பேய்களைப்போல சித்தரிக்கின்றன இந்த நூல்கள். இரண்டாவதாக இந்தியாவில் உள்ள அனைத்துச் சிந்தனைகளையும் கிறித்தவமே கொண்டுவந்தது என்று வாதிடுகின்றன.

ஆகவே இந்தக் கருதுகோள் ஏற்கப்பட்டது. பெரும் நிதியுதவியுடன்  ‘இந்தியாவில் ஆதி கிறித்தவம்’ என்ற தலைப்பில் முதல் சர்வதேச கருத்தரங்கு ஜான்சாமுவேலை முதன்மை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தெய்வநாயகம் மற்றும் தேவகலா ஆகியோர் முக்கியப்பங்காற்ற  2005 ல் நியூயார்க் நகரில் நடத்தப்பட்டது. நியூயார்க்கில் மதப்பரப்பு நிறுவனம் ஒன்றின் தலைவரான டாக்டர் சுந்தர் தேவப்பிரசாத் அதற்கான அமெரிக்க தொடர்பாளர்

கருத்தரங்க மலரில் ஆர்ச் பிஷப் ஆ·ப் காண்டர்பரியின் வாழ்த்துச்செய்தி உள்ளது. செனெட்டர் ஹிலாரி கிளிண்டனின் வாழ்த்துச்செய்தி, ஹெலென் மார்ஷல், பரோ ஆ·ப் குயீன்ஸ் நியூயார்க் அவர்களின் வாழ்த்துச்செய்தி, நியூயார்க் மேயரின் வாழ்த்துச்செய்தி, கவர்னர் ஜார்ஜ் படாகியின் வாழ்த்துச்செய்தி ஆகியவை உள்ளன.ஹிலாரி கிளிண்டன் நேரில்வந்து பங்கெடுத்தார். வழக்கம்போல இந்தியாவின் முக்கியமான எல்லா கிறித்தவ திருச்சபையில் இருந்தும் வாழ்த்துச்செய்திகள் உள்ளன. மலபார் சர்ச்சின் ஆர்ச் பிஷப், சிரியன் மலங்கர திருச்சபை ஆர்ச் பிஷப்,சி.எஸ்.ஐ பேராயத்தின் ஆயரின் வாழ்த்துச்செய்தி போன்றவை உள்ளன

அத்துடன் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் வாழ்த்துச்செய்தியும் உள்ளது. தமிழக கிறித்தவத்தின் இருபது நூற்றாண்டுப்பழமையில் பெருமைகொள்வதாக சொல்லும் முதல்வர் அது ஒரு மிக அறிவார்ந்த நிகழ்வாக இருக்கும் என்று வாழ்த்துகிறார்.

மாநாட்டின் நோக்கம் முதலிலேயே ஜான் சாமுவேலால் தெளிவுறச் சொல்லப்பட்டுவிடுகிறது. தாமஸ்கிறித்தவமே இந்துமதம் என்றும் அதை ஆரியபிராமணர் அழித்தார்கள் என்பதும்தான் அது. தாமஸ் பற்றிய ஒரு துதியுடன் மலர் ஆரம்பிக்கிறது. குடுமி வைத்து பூணூல் போட்டு அரைநிர்வாணமாக தோன்றும் கொடூரமான ஒரு பிராமணன் காவி உடை அணிந்து முழந்தாளிட்டு ஜெபம்செய்யும் தாமஸை  பின்னாலிருந்து ஈட்டியால் குத்திக்கொல்லும் வண்ணச்¢த்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் சைவசித்தாந்தம் இந்துமதம் போன்ற தலைப்புகளில் மீண்டும் மீண்டும் தெய்வநயகமும் தேவகலாவும் கட்டுரைகள் சமர்ப்ப்பித்திருப்பதைக் காணலாம். அத்துடன் பெரும்பாலான கட்டுரைகள் ஒரே குழுவினரால் உருவாக்கப்பட்டவைபோல ஒரேவகையான திரிப்புகள் ஒரேவகையான சொற்றொடர்கள் மையக்கருத்துக்களுடன் காணப்படுகின்றன.

இந்த மாநாட்டில் ஹெப்ஸிபா ஜேசுதாசன் ‘Early Christianity in Tamil Nadu’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார். அதில் தமிழின் எல்லா பண்டைய இலக்கியங்களும் கிறித்தவ தாக்கத்தால் உருவானவையே என்று அவர் வாதிட்டிருக்கிறார்.  

இரண்டாவது சர்வதேசக் கருத்தரங்கு ஜான் சாமுவேலை தலைமையாகக் கொண்டு ஜனவரி 2007ல் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதற்கு குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார். ஆர்ச் பிஷப் மயிலை-சென்னை ஏ.எம்.சின்னப்பா தொடங்கி ஏறத்தாழ எல்லா சபைத்தலைவர்களும் ஆசியுரை வழங்கியிருக்கிறார்கள். முதல் கருத்தரங்கு பெரும் வெற்றிபெற்று இந்தியவரலாற்றைப்பற்றிய மறுக்க முடியாத கருத்துக்களை நிறுவி விட்டது என்று சொல்லும் ஜான் சாமுவேல் அதை மேலும் விரிவுபடுத்தவே இந்த கருத்தரங்கு என்று குறிப்பிடுகிறார்.

டி.தயானந்தன் ·ப்ரான்ஸிஸ், எஸ்ரா சற்குணம், ஹெப்ஸிபா ஜேசுதாசன் போல தமிழில்பரவலாக அறியப்படும் கிறித்தவ சிந்தனையாளர்கள் அனேகமாக அனைவருமே இந்த அரங்கில் கருத்துக்களை முன்வைத்திருப்பதைக் காணமுடிகிறது. எல்லா கருத்துக்களும் ஒரே சாரம் கொண்டவை. ஹெப்ஸிபா கம்பராமாயணம் கிறித்தவ சாரம் கொண்ட நூல் என்கிறார்.

இப்போது இந்த கருத்தரங்குகளின் நீட்சியாக ‘தமிழர் சமய உலக முதல் மாநாடு’ 2008 ஆகஸ்டு 14 முதல் 17 வரை சென்னை- மயிலை உயர் மறைமாவட்ட அருட்பணி மையத்தில் [ரோஸரி சர்ச் சாலை சாந்தோம், சென்னை 600004] நடக்கவிருக்கிறது. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பேராயர் முனைவர் எ.எம்.சின்னப்பா [சென்னை மயிலை கத்தோலிக்க பேராயம். சாந்தோம்.சென்னை] முனைவர் மு.தெய்வநாயகம் நிறுவனர் உலக தமிழர் ஆன்மவியல் இயக்கம் சென்னை. துணைஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ், முனைவர் தெ.தேவகலா அமைப்பாளர் உலகத்தமிழர் ஆன்மவியல் இயக்கம்.

இவ்வரங்கின் கோஷமாக முன்வைக்கப்படுவதை அதன் அறிவிப்பு இதழில் காண முடிகிறது. ‘ஓவ்வொருவரும் தன்மான உணர்வுடன் பிறப்பால் ஏற்றதாழ்வு கற்பிக்கும் இந்துத்துவாவின் பிடியில் இருக்கும் இந்து மதத்தைச் சார்ந்தவனாக தன்னைக் கூறாமல் தான் தமிழர் சமயத்தைச் சேர்ந்தவன் என்று அறிவித்து இந்துத்துவாவின் பிடியில் இருந்து விடுபட்டு தன்னுடைய பழைய சிறப்பு நிலைக்கு திரும்ப வேண்டும்’

அழைப்பிதழின் அட்டையில் உலக உருண்டைக்கு மேல் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரியும் ‘ஒன்றேகுலம் ஒருவனே தேவன் ‘என்ற வரியும் கொடுக்கப்பட்டுள்ளன. அழைப்பிதழிலேயே மாநாட்டில் பேசுபொருட்கள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. தமிழர் சமயம் என்பது தோமாகிறித்தவமே என்பதுதான் அது.

இந்த மாநாட்டுக்குப் பின் ஏறத்தாழ 100 கோடி ரூபாய் செலவில் தாமஸ் இந்தியாவந்தது, வாழ்ந்தது பற்றி ஒரு ஆங்கில-தமிழ் திரைப்படம் எடுக்கப்போவதாகவும் அதில் ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட முக்கிய நடிகர்களை நடிக்கவைக்கப்போவதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

****

தத்துவ வரலாற்றுப் பரிச்சயமே இல்லாமல் , மிக எளிமையான தர்க்கங்களுடன் , கிட்டத்தட்ட கிறுக்குத்தனமாக உருவாக்கபப்ட்டுள்ள இந்த கருத்தமைப்பு குறித்து ஏன் இத்தனை எழுதவெண்டும் என்றால் இதன் பின்னணியில் உள்ள பணம் மற்றும் அமைப்புபலம்தான். ஜான்சாமுவேல் மற்றும் தெய்வநாயகம் மூளையில் உதித்த இந்தக் கரு இப்போது பலகோடி ரூபாய் புரட்டும் சக்தியுடைய ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. தமிழ் அறிவுஜீவிகளில் பணத்துக்காகப் பேசாதவர்கள் மிகச்சிலரே.

இப்போதே அ.மார்க்ஸ் இந்தக் கருத்தரங்கில் பேசவிருப்பதாக எனக்கு இவ்விதழ்களை அளித்தவர் சொன்னார். அ.மார்க்ஸ் அவ்வளவு எளிதாக தன்னை முன்னிறுத்திக்கொள்ள மாட்டார் என்றே எண்ணுகிறேன். ஆனால் அவரையும்  தமிழில் புகழ்பெற்ற அறிவுஜீவிகளான எஸ்.வி.ராஜதுரை, தொ.பரமசிவன், ஞானி, தமிழவன், குமரிமைந்தன் போன்றவர்களையும் சாதாரணமாக இந்த அமைப்பு திரட்டிவிடமுடியும். அவர்களை உள்ளே இழுக்கவேண்டிய இடைவெளிகளை  இந்த கருத்தமைப்பு அதற்கான தந்திரங்களுடன் உள்ளே விட்டிருக்கிறது. ஏற்கனவே தமிழ்ச்சூழலில் பிரபலமாக உள்ள கருத்துக்களை எடுத்து சற்றே திரித்து தோமா வரை கொண்டுசெல்வது இதன் வழி.

உதாரணமாக இந்தியசிந்தனை முழுக்கவே குமரிக்கண்டத்தில் இருந்து வந்தது என்ற கருத்து குமரிமைந்தனுக்கோ ஞானிக்கோ உவப்பானதுதான். தமிழர்களின் சிந்தனையை ஆரியர் அழித்தார்கள் என்றோ இந்துஞானம் என்ற ஒன்று இல்லை என்றோ சொன்னால் தொ.பரமசிவம் அதை ஏற்றுப்பேசுவார்தான். அவர்களை உள்ளிழுக்கும்படி ஒரு பொதுவான தலைப்பில் ஓர் அரங்கை உருவாக்கி அதில் அவர்கள் தங்கள் இடத்தைமட்டும் பேசிவிட்டுச்செல்ல செய்தால்போதும். இயல்பாக அடுத்தபடிக்கு தெய்வநாயகமும் ஜான்சாமுவேலும் நகர்ந்தால்  இவர்கள் பேசாமலிருப்பார்கள்.

மெல்லமெல்ல இது ஒரு வலுவான தரப்பாக ஆகும். உதாரணமாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கமல்ஹாசன் சொன்னார். ‘திருவள்ளுவரை சிலர் சம்ணர் என்ற்கிறார்கள் சிலர் சைவர் என்கிறார்கள் சிலர் கிறிஸ்தவர் என்கிறார்கள்…’ என்று. 1970 களில் ஆர்ச்பிஷப் அருளப்பா காலத்தில் மோசடியாக செப்பேடு ஒன்று உருவாக்கப்பட்டு திருக்குறள் ஒரு கிறித்தவ நூல் என்று சொல்லப்பட்டது. பின்பு அது மோசடி என்று நிரூபிக்கப்பட்டது. ஆர்ச் பிஷப் மன்னிப்பு கோரினார். இன்று அது இயல்பான ஒரு வரலாற்று ஊகமாக ஆகிவிட்டிருப்பதை பாருங்கள்.

அதேபோல இந்திய மெய்ஞானம் முழுக்கமுழுக்க கிறித்தவர்களால், இல்லை தன்னந்தனியாக வந்த ஒரே ஒரு கிறித்தவரால், [தாமஸ் தனியாகவே வந்தார் என்கிறார் தெய்வநாயகம்] கொண்டுவரப்பட்டது என்பதும் தமிழ் வரலாறு பற்றிய பல கோட்பாடுகளில் ஒன்றாக ஆகிவிடும். மெல்ல பாடபுத்தகங்களில் இணைக்கவும் படும். அதை மறுப்பவர்களி இந்துத்துவர்கள், பார்ப்பனியர்கள், சாதியவாதிகள் என்றெல்லாம் முத்திரைகுத்தி வசைபாட ஆரம்பித்தால் ஐயங்கள்கூட மெல்ல இல்லாமலாகும்

***

உண்மையில் தாமஸ் இந்தியா வந்தாரா? வந்திருக்கலாம். ஆனால் ஓரளவேனும் பொருட்படுத்தும்படியான வரலாற்று ஆதாரம் ஏதும் இல்லை என்பதே உண்மை. இன்றுவரை அவரது வருகை அது ஒரு மதநம்பிக்கையாகவே உள்ளது. தாமஸ் பற்றி பொதுவாகவே அதிகம் தெரியாது. மிகவிரிவான கிறித்தவ ஆய்வுகள் நிகழ்ந்த மேலைச்சூழலில் அவரைப்பற்றி கத்தோலிக்க கலைக்களஞ்சியமே மிகக் குறைவான தகவல்களையே அளிக்கிறது.

பிற்காலத்தில் உருவான ஆக்டா தோமா என்ற சிறு நூலில் சில குறிப்புகள் உள்ளன. அதில் இருந்து அறியக்கூடியவை இவை. தாமஸ் கீழைநாட்டுக்கு மதத்தை பரப்புவதற்காக கிளம்பினார். அலக்ஸான்டிரியாவுக்கு வந்தார். ‘காப்டிக்’ திருச்சபையை நிறுவினார். அவர் ஆப்கானிஸ்தான் [காந்தாரம்] வழியாக இந்தியாவுக்கு நுழைந்தார். அதுவே இயல்பான பாதையாகும். அவர் அங்கே ஒரு மன்னனை மதம் மாற்றினார். கொல்லப்பட்டார். அவரது சடலம் மீண்டும் எடேஸாவுக்குக் கொண்டுபோகப்பட்டது. இதுவெ நமக்குக் கிடைக்கும் தகவல்.இதுகூட மிகப்பிற்காலத்தில் எழுதப்பட்ட ஒன்று.

ஆக்டா தோமா தான் தாமஸ் பற்றிய ஒரே ஆதாரம். அதில் தாமஸ் மிஸ்தாய் நாட்டின் மன்னனின் மனைவி டெரிஷியாவையும் மகன் வாசனையும் மதம் மாற்றினார். மன்னனால் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். எப்போது இந்தக்கதை தாமஸ் பிராமணனால் கொல்லப்பட்டார் என்று மாறியது? ஏன்? இன்று எல்லா இடத்திலும் குடுமி வைத்த ஸ்மார்த்த பிராமணன் பிரார்த்தனை செய்யும் தாமஸை பின்னாலிருந்து குத்திக்கொல்லும் சித்திரமாக வரைந்து வைக்கப்பட்டுள்ளது!

நாணய ஆய்வுகளின் படி தாமஸ் வட இந்த்யாவுக்கு வந்திருக்கலாமென சில ஆய்வாலர் சொல்கிறார்கள். தென்னிந்தியா வந்தமைக்கு எந்த விதமான புறவய ஆதாரமும் இல்லை.  அவர்  இந்தியாவந்தார் என்ற நம்பிக்கை ஐரோப்பாவில் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் வாஸ்கோடகாமா முதலியோர் இந்தியா வந்தபோது இங்கே உள்ள கிறித்தவர்களைக் காண விழைந்திருக்கிறார்கள். இங்கெ மலபார் கடற்கரையில் ஒரு சிறு கிறித்தவ சமூகம் இருந்தது.அவர்களை அவர்கள் தாமஸ்கிறித்தவர்களாக அடையாளம் கண்டார்கள்.

ஆனால் அது பாரசீக வணிகர்களால் ஆன ஒரு சிறிய கிறித்தவக் குழுதான். தாமஸ் என்று அவர்கள் சொல்வது  ஏழாம் நூற்றாண்டில் மதமாற்றக் குழு ஒன்றை கொண்டுவந்த ‘கானா தோமா’ வையே என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதற்கான வாய்ப்புகளே அதிகம். ஏனென்றால் இன்றும் உள்ள மார்த்தோமா கிறித்தவர்களின் சபையும் பண்பாடும் பெரிதும் அராபியச் சாயல்கொண்டது. காப்டிக் சாயலே அதில் இல்லை. அவர்களின் போப் பாரசீகத்தில் பதவி ஏற்றார் என்று பண்டைக்கால குறிப்புகள் சொல்கின்றன [Cosmas Indicopleustes] ஆனால் அவர்கள் தாமஸால் மதமாற்றம் செய்யபப்ட்டவர்கள் என்று சொல்லப்படவில்லை.

பதினேழாம் நூற்றாண்டுக்குப் பின் தோமா கிறித்தவர்கள் தாங்கள் ஏசுவின் சீடரான தாமசால் மதமாற்றம்செய்யப்பட்டவர்கள் என்று நம்ப ஆரம்பித்தார்கள். சொல்லப்போனால் ரோமாபுரி கிறித்தவர்களான போர்ச்சுக்கல்காரர்களை எதிர்த்து தங்கள் தனித்தன்மையை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டதானால் அந்நிலைபாட்டை அவர்கள் ஏற்றார்கள் என்று சொல்லலாம். மிகப் பிற்காலத்தைச் சேர்ந்த சில தேவாலயங்களை தாமஸால் உருவாக்கப்பட்டவை என்று அடையாளம் சொல்வது அவர்களின் வழக்கம்.

சென்னைக்கு அருகே உள்ள புனித தோமையர் மலை தாமஸ் இருந்த இடமாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது தாமஸ் அங்கே கற்சிலுவை ஒன்றை உருவாக்கினார் என்று சொல்லி சில கல்வெட்டுகளைக் காட்டுகிறார்கள். தாமஸின் காலத்தில் கிறித்தவ மதத்தில் சிலுவை வழிபாடு வேரூன்றவில்லை என்றும் புனித தாமையர் மலையில் உள்ள சிலுவையில் உள்ள எழுத்துக்கள் மிகவும் காலத்தால் பிந்தியவை என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அவ்வெழுத்துக்கள் இன்றுவரை அதிகாரபூர்வ புறவய ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. தாமஸ் தெற்கு அமெரிக்க நாடுகளுக்குச் சென்றதாககூட நம்பிக்கை உள்ளது.

தாமஸின் இந்திய வருகையை பற்றி மேலைநாட்டு ஆய்வாளர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. அதை ஒரு மதநம்பிக்கை என்று மட்டுமே கொள்கிறார்கள். பெரும்பாலான மதநம்பிக்கைகள் காலத்தால் பலவாறாக உருமாற்றப்பட்டவை. மொழியில் எவ்வகையிலோ இருந்துகொண்டிருப்பவை.

இந்திய நிலப்பகுதியில் வெளிநாட்டவர்கள் சரித்திரகாலம் முன்பே வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். கிரேக்கர்களும் ரோமர்களும் வந்திருக்கிறார்கள். அபிசீனியர்களும் அரேபியர்களும் வந்திருக்கிறார்கள். அவர்களின் சிந்தனைகள் இந்தியாவில் எந்த அளவுக்கு பாதிப்பைச் செலுத்தியிருக்கும்? இந்திய நூல்களைப் பார்க்கும்போது புறச்சிந்தனைகளின் பாதிப்பை பெரும்பாலும் காணமுடிவதில்லை. யவனர்கள் தமிழ்நாட்டில் காவலர்களாகவும் வணிகர்களாகவும் சகஜமாகப் புழங்கியிருக்கிறார்கள். ஆனால் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் எவரது சிந்தனைகளையும் நாம் தமிழிலக்கியத்தில் காணமுடியாது. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டால் ஒழிய.

இதையே சீன சிந்தனைகளுக்கும் சொல்லலாம். நமக்கும் சீனாவுக்குமான உறவு என்பது மிகமிக தொன்மையானது. சீனப்பொருட்கள் இங்கே மிக விரிவாகப் பரவின. நம்முடைய தச்சு சாஸ்திரத்தின் சீனப்பாதிப்பு மிக விரிவானது. இருந்தும் சீனச் சிந்தனைகள் நம் இலக்கியங்கலில் துளியேயும் காணப்படுவதில்லை. உரையாசிரியர் குறிப்புகளில்கூட ஒரு பெயர் இல்லை. ஏன், நமது பண்டைய மொழியில் கிரேக்க,லத்தீன், அராமிக், சீன சொற்கள்கூட இல்லை. மீண்டும் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு தேவை.

ஏன்? இரு ஊகங்களைச் செய்யலாம். ஒன்று இங்கே சிந்தனையில் ஒருவகை செவ்வியல்தன்மை நிலவியது. செவ்வியல் எப்போதும் தன்னைத்தானே மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் கொண்டிருக்கும். நுட்பமான வித்தியாசங்களை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தும். தமிழிலக்கிய வாசகன் எளிதில் இதைக் கண்டடையலாம். இந்த அம்சம் புறப்பாதிப்பை முழுமையாக உதாசீனம் செய்யும்.

இரண்டு, மலையாள வரலாற்றாசிரியர் பி.கெ.பாலகிருஷ்ணன் செய்யும் ஊகம். அதாவது நம் நாட்டுக்கு வந்த அன்னியர் கடலோரங்களில் தனிச்சமூகமாக வாழ்ந்துசென்றனர். அவர்களுக்கும் நம் சமூகத்தின் மையத்துக்கும் எந்தவிதமான உரையாடலும் நிகழவில்லை. இப்போதுகூட கடற்கரை நம் மையப்பண்பாட்டில் இருந்து மிக ஒதுங்கியதாகவே உள்ளது.

இதற்கு பி.கெ.பாலகிருஷ்ணன் ஒரு சான்று சொல்கிறார். [ஜாதி வியவஸ்தையும் கேரள சரித்ரமும்] அரேபியரும் கிரேக்கரும் ஒரே காலகட்டத்தில் மேற்குக் கடற்கரைக்கு வந்து சென்றார்கள். பலநூறு வருடம். கிரேக்கர்கள் நல்லமிளகை கேரளத்தில் கோழிக்கோட்டில் வாங்கினார்கள். போகும் வழியில் அரேபியாவில் இருந்து சுக்கு வாங்கினார்கள். அதை ஒரு அரேபியப்பாலைவன வேர் என்றே பலநூற்றாண்டுக்காலம் அவர்கள் நம்பினார்கள். ஆனால் அரேபியர்கள் சற்று கீழே கொல்லத்தில் இருந்து சுக்கு வாங்கிக்கொண்டுசென்றுதான் தங்கள் நாட்டில் வைத்து விற்றார்கள்.

அந்த அளவுக்கு அன்றைய உரையாடல் இருந்திருக்கிறது. கிரேக்கர்கள் தங்களுக்கு நல்லமிளகை விற்றவர்களிடம் பேசியே இருந்திருக்கமாட்டார்கள். நம் மரபை வைத்துப் பார்த்தால் அந்த வணிகத்தை நடத்த ஒரு தனி சாதி உருவாகியிருக்கும். அவர்கள் அதைச் செய்வார்கள். மற்றவர்களுக்கு தொடர்பே இருக்காது. ஆகவேதான் ஆயிரம் வருடம் கிரேக்கர் வந்து போன மலையாளச்சூழலில் ஒரு சிறு கிரேக்க தடையம் கூட கிடையாது, மொழியில் பண்பாட்டில். இப்படித்தான் நம்முடைய பண்பாடும் இருந்துள்ளது.

தாமஸ் வந்திருந்தால்கூட கடற்கரையோரம் மிகச்சிறிய ஒரு சமூகத்தை உருவாக்குவதுடன் அவரது பணி முடிந்திருக்கும். அவரது காலம் வரலாற்றுத் தொடக்க காலம். அவருக்குப் பின்பு, சாலைகளும் தொடர்புகளும் பலமடங்கு பெருகியபின், வந்த புனித சவேரியார் பல காலம் தமிழ் மண்ணில் வாழ்ந்திருக்கிறார். அவருக்கு தமிழிலக்கியத்தில் சிந்தனையில் பண்பாட்டில் உள்ள பங்களிப்பு என்ன? பைபிளின்படி தாமஸ்  தத்துவம்கற்றவர் அல்ல. ஆனால் சவேரியார் ஒரு தத்துவஞானி. சவேரியாரின் பணி கடலோரங்களில் தொடங்கி அங்கேயே முடிந்தது.காவரது பெயர்கூட நம் இலக்கியங்களில் இல்லை

அதேப்போல முகமது நபிக்குபின் நெடுங்காலம் முஸ்லீம்கள் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் பதிமூன்றாம்ன் நூற்றாண்டில் அவர்கள் வட இந்தியாவிலிருந்து படையெடுபப்து வரை அவர்களின் பாதிப்பு தமிழ்ச் சிந்தனையில் மிகமிகக் குறைவே.
 
இந்த தர்க்கமெல்லாம் தெய்வநாயகம் போன்றவர்களின் கண்மூடித்தனமான பிரச்சார வேகம் முன் ஒன்றும் செய்யமுடியாது. ஆயினும் இதுவே சிந்திக்கும் பழக்கம் உடையவர்களுக்கான பதில். நாளை அவர்களின் மேடை ஏறி முழங்கப்போகும் தமிழ் திராவிட அறிவுஜீவிகளுக்கும் இதுவே விளக்கம்.

****

கிறித்தவ மரபில் தாமஸ் முக்கியமானவர் அல்ல. ஏனென்றால் அவர் கிறிஸ்துவை ஐயப்பட்டவர். இருந்தும் ஏன் அவரை திடீரென மீட்டெடுக்கிறார்கள்?

இந்திய பாரம்பரியம் கிறித்தவம் வருவதற்கு முன்பு சிந்தனையற்ற இருண்டகாலம் கொண்டிருந்தது என்று சொல்வதற்கு தடையாக உள்ளவை இங்குள்ள பேரிலக்கியங்கள். அவற்ரை மறைப்பது கடினம்.ஆகவே அவற்றின் காலத்தை பின்னுக்குத்தள்ளி கிறித்தவத்தின் வருகையை முன்னுக்குக் கொண்டுசெல்கிறார்கள். அதற்கு தாமஸ் தேவையாகிறார்.  

தாமஸின் சுவிசேஷம் என்று ஒன்று எகிப்தில் நாக் ஹமாதியில் கிடைத்துள்ளது. [விவிலியத்தின் முகங்கள் – ஓர் அறிமுகம் ]பாப்பிரஸ் சுவடிகளில் எழுதப்பட்ட அந்தச்சுவடி கார்பன் டேட்டிங் முறைப்படி கிபி இரண்டாம்நூற்றாண்டுக்கு முந்தியதுதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தாமஸ் எகிப்தில் வாழ்ந்தார் என்ற வரலாற்றுடனும் காப்டிக் சர்ச்சை நிறுவினார் என்ற வரலாற்றுடனும் அந்த விஷயம் பெருமளவு ஒத்துப்போகிறது. ஆய்வாளர் நடுவே அச்சுவடி ஒரு வரலாற்று ஆவணமாகவே கருதப்படுகிறது

அந்த சுவிசேஷத்தில் [மறைக்கப்பட்ட பைபிள் :தோமையர் எழுதிய சுவிசேஷம் ] தாமஸ் ஏசுவை ஒரு தேவனாக, கடவுளின் மகனாக முன்வைக்கவில்லை. மாறாக ஒரு ஞானகுருவாக முன்வைக்கிறார். கிறிஸ்து வானத்தில் உள்ள சொற்கத்தைப்பற்றி பேசுபவராக வரவில்லை, மண்ணில் உள்ள சொற்கத்தைப்பற்றி பேசுபவராக வருகிறார். பைபிளின் அதிகாரபூர்வ வரிகளில் இருப்பதைவிட ஆழமும் கவித்துவமும் கொண்டவையாக அவ்வரிகள் உள்ளன. நாக் ஹமாதியிலும் செங்கடல் பகுதிகளிலும் கிடைத்த பல பைபிள் வடிவங்களை வலுவான தொல்பொருள் சான்று இருந்த போதிலும்கூட கத்தோலிக்கத் திருச்சபை நிராகரித்துவிட்டது. ஆனால் எந்த உறுதியான ஆதாரமும் இல்லாமல் இந்தியப் பண்பாடே தாமஸ் என்ற தனிநபரால் உருவாக்கப்பட்டது என்று நிறுவ முயல்கிறது.

மதநம்பிக்கையை பேண எவருக்கும் உரிமை உள்ளது. தன் மதநம்பிக்கையை பரப்புவது ஒருவரது பிறப்புரிமை.. அதிலும் இஸ்லாமிய கிறித்தவ மதங்களில் அது புனித கடமையும்கூட. மதச்சார்பின்மை இந்தியமண்ணில் அதன் வீச்சை ஒருபோதும் இழக்கலாகாது என்று விரும்புகிறேன்..ஆகவே மதமாற்றமும் ஒரு இந்தியனின் பிறப்புரிமையே. முன்பு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மதமாற்றத்தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்த்து நடந்த கூட்டத்தில் நான் விரிவாகவே இதைப்பேசியிருக்கிறேன்.மதமாற்ற தடைச்சட்டமும் ஜனநாயகமும்

ஆனால் வரலாற்றுத்திரிபுகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் மூலம் அதைச்செய்ய நினைப்பது மிக ஆபத்தான போக்கு. கிறிஸ்து மனிதனாக வந்த இறைகுமாரன் என்ற உறுதியான நம்பிக்கை இவர்களுக்கு இருக்கும்பட்சத்தில் அந்த ஒரேவரியை சொல்லியே இவர்கள் தங்கள் மதத்தை பரப்பலாமே?

அதற்கும் அப்பால்சென்று கிறிஸ்துவின் சொற்களில் வெளிப்படும் மானுடநீதிக்கும் எளியவர்மீதான கருணைக்குமான குரலை இவர்கள் கேட்டிருந்தார்கள் என்றால் கிறிஸ்துவை முன்வைப்பதற்கு இத்தனை பொய்களைச் சொல்ல கூச மாட்டார்களா? தியாகத்தின் சிலுவையுடன் கிறிஸ்து வரட்டும், கள்ளநோட்டு எந்திரத்துடன் வரவேண்டாம். 

மறைக்கப்பட்ட பைபிள் :தோமையர் எழுதிய சுவிசேஷம்

புனித தோமையர் ஓர் அறிமுகம்

மதமும் பூசகர்களும்

விவிலியத்தின் முகங்கள் – ஓர் அறிமுகம்

மதமாற்ற தடைச்சட்டமும் ஜனநாயகமும்

முந்தைய கட்டுரைகணியாகுளம்-ஆலம்பாறை:என் மாலைநடை வழி
அடுத்த கட்டுரைகடிதங்கள்