கடிதம் டிசம்பர் 9,2004 – சோதிப்பிரகாசமும் பாவாணரும்

சோதிப்பிரகாசம் – தமிழ் விக்கி

சோதிப்பிரகாசம் அவர்களின் மடல் கண்டேன்.

என் குறிப்பின் இலக்கை அவர் சரியாக கவனிக்கவில்லை. பாவாணர் ஆய்நெறியை கண்மூடித்தனமாகப் பின்பற்றும்போது உருவாகும் அபத்தங்களையே நான் குறிப்பிட்டிருந்தேன்.

சோதிப்பிரகாசம் அவர்களின் ஆரியர் வரலாறு, திராவிடர் வரலாறு ஆகிய இரு நூல்களும் பாவாணர் வழிவந்த ஆய்வுகளில் அபூர்வமாகத் தென்படும் குறிப்பிடத்தக்க ஆய்வுகள். ஆரியர் என்ற இனம் இல்லை என்றும் தென்நாட்டில்– குமரி கண்டப் பகுதியில் — உருவான ஒரே இனமே வடதிசை நோக்கி குடியேறிப் பரவிய என்றும் மொழி ஆய்வு மூலமும் குறியியல் ஆய்வு மூலமும் வாதிடும் நூல்கள் இவை. தொன்மங்களையும் மொழிக்குறிகளையும் திரட்டி முன்வைப்பதில் இவை ஒரு தர்க்க நேர்த்தியைக் கொண்டுள்ளன, அதேசமயம் கூறுநடை ஆய்வுநூல்களுக்குரிய நேர்த்தியுடன் இல்லாமல் சாதாரணமாகப் பேசிச்செல்வதுபோல உள்ளது ஒரு குறையாகவே என் நோக்கில் படுகிறது.

என் நோக்கில் இம்மாதிரி ஆய்வுகள் சார்ந்து இறுதி முடிவு சொல்வது சமீபகாலங்களில் சாத்தியமே இல்லை. முன்னூகங்களை பல கோணங்களில் உருவாக்கி அவற்றை தர்க்கத்தரப்புகளாக ஆக்கி ஒரு விவாதக் களத்தை உருவாக்குதலே நம் முன் உள்ள ஒரே வழியாகும். ஆனால் இங்கே ஐரோப்பியரால் அவர்களுக்கு சாதகமான முறையில் , தேவைக்கேற்ப உருவாக்கப்பட்ட முன் ஊகங்கள் மட்டுமே புழங்கி வருகின்றன. அவை மீள மீளச் சொல்லப்படுவதன்மூலம் உண்மையாக ‘நிலைநாட்டப்பட்டும் ‘ உள்ளன. இந்நிலையில் சோதிப்பிரகாசம் அவர்கள் செய்வதுபோல பல கோணங்களில் தமிழ் பண்பாடு சார்ந்தும் பண்பாட்டு அரசியல் சார்ந்தும் முன் ஊகங்களை உருவாக்குவதும் ‘அங்கீகரிக்கப்பட்ட ‘ ஆய்வு முடிவுகளின் தர்க்கங்களை உடைக்கமுற்படுவதும் மிக முக்கியமான செயல்பாடேயாகும். அவ்வகையில் அநூல்கள் என் மதிப்புக்கு உரியன. மேலும் அவை திறக்கும் கற்பனைச்சாத்தியங்கள் புனைகதையாளனாக என்னை மிகவும் தூண்டுபவை.

அதேசமயம் இவ்வகை ஆய்வு விவாதங்களை கவனிப்பவன் ஆகவே என்னை நான் வைத்துக்கொள்ள இயலும், மதிப்பிடுபவனாக அல்ல. நான் ஆய்வாளன் அல்ல. ஆகவே இந்நூல்களைப்பற்றி இவை எனக்கு ஆர்வமூட்டுகின்றன என்று மட்டுமே சொல்ல இயலும். இதன் மறுதரப்பை உரிய ஆய்வாளர் சொல்லும்போது அதையும் கவனிக்க முடியும். அவ்வகையில் அந்நூல்களைப்பற்றி குறிப்பிடுவது எனக்கு மகிழ்ச்சிக்குரிய விஷயமேயாகும். பாவாணாரின் ஆய்வு நெறியின் முக்கியத்துவம் குறித்து சொல்லும்போது நான்

சோதிப்பிரகாசத்தையும் கருத்தில்கொண்டே சொல்கிறேன்.

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைஜோ டி குரூஸின் ‘ ஆழிசூழ் உலகு ‘ – கடலறிந்தவையெல்லாம்…
அடுத்த கட்டுரைதயானந்த சரஸ்வதி சொல்லும் கடமை என்ன ?