விக்கிக்கு விளக்கு

நவீனத்தமிழின் முக்கியமான கவிஞராகிய விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டிருக்கிறது. அனேகமாக விக்கி பெறும் முதல் முக்கியமான விருது இது என்று நினைக்கிறேன். அதை அளித்த விளக்கு அமைப்பு தன்னை கௌரவப்படுத்திக்கொண்டிருக்கிறது. எதன் பின்னாலும் செல்லாத படைப்பாளிக்குப் பின்னால் செல்லும்போதே அமைப்புகள் கௌரவத்தைப் பெறுகின்றன. அமைப்புக்குள் ஒடுங்காத ஒரு மனிதரேனும் இருக்கும்போதே அமைப்புகள் அந்த மனநிலையை அடைகின்றன. இப்போதைக்கு அந்த தகுதி ‘விளக்கு’ தவிர வேறெந்த விருது அமைப்புக்கும் இல்லை.

விக்கிரமாதித்யன் எண்பதுகளில் தமிழிலக்கிய உலகுக்குள் வந்தார். அன்னம் பதிப்பகம் பாரதி நூற்றாண்டுவிழாவை ஒட்டி வெளியிட்ட ஆகாசம் நீலநிறம் என்ற தொகுதிதான் அவரது முதல் படைப்பு. ‘முப்பது வயதாகியும் வேலைதேடும் வேலையில் இருப்பவர்’ என அதில் விக்கிரமாதித்யன் அடையாளப்படுத்தப்பட்டிருந்தார். இன்றும் அதே நாடோடி அலைச்சலில் இருக்கும் விக்கிரமாதித்யன் எப்போதும் கவிதைக்கான கட்டற்ற மனநிலையில் இருப்பவர்.

கண்ணில் விழுந்த தூசியை ஒதுக்க வேட்டியை மெல்லிய திரியாகத் திரிப்பது போல மொழியை தனக்கான மெல்லிய நுண்ணிய உபகரணமாக ஆக்கிக்கொண்டிருப்பவனே கவிஞன். தன்னை வந்து மோதும் வாழ்க்கையை அந்த நுண்மொழியால் அவன் அளந்துகொண்டே இருக்கிறான். சிலசமயம் அது கவிதை. சிலசமயம் அது அவனது அபிப்பிராயம். சிலசமயம் அது அவனுடைய உளறல். இதுவே  எந்த உலகக் கவிஞனிலும் நாம் காண்பது. ஒருவகையில் அக்கவிஞன் என்பவன் அந்த மொழியமைப்பே.

விக்கிரமாதித்யன் அவருக்கென ஓர் மொழியமைப்பு கொண்டவர். அவர் மனதில் உள்ளது ஒரு குறிப்பிட்ட வகையான செய்யுள் என்றால்கூட  மிகையல்ல. சிறிய அடிகளால் ஆன சிறிய பத்திகளில் தன் அவதானிப்புகளை அடுக்கிச் சென்று ஓர் உச்சத்தில் அவற்றை ஒன்றாக்கி ஒரு தரிசனத்தை நோக்கி எழுபவை அவரது கவிதைகள். கையில் கிடைத்தவற்றையெல்லாம் அடுக்கி மேலேறி இனிப்பிருக்கும் பரணைத் தொட முயலும் குழந்தை போல. ஆகவே எந்தப் பெருங்கவிஞனையும்போல விக்கிக்கும் கவிதை என்பது வாய்த்தால் அமைவது மட்டுமே.

விக்கிரமாதித்யன் கவிதைகள்  ஒருவகையில் நவகவிதைகள் அல்ல. அவை பழைய கவிதைகளின் வசன வடிவங்கள் போலிருக்கின்றன. மறைபொருளின் நுண்மையால் அவை கவிதையாவதில்லை, நேர்வெளிப்பாட்டின் உக்கிரத்தால் அவை கவிதையாகின்றன. அழகால் அவை கவிதையாவதில்லை, நேர்மையால் கவிதையாகின்றன

*

தூத்துக்குடிப்பிள்ளை கடையில்

பொட்டலம் மடித்தவன் நீ

 

சித்தாளாய்

செங்கல் சுமந்தவன் நீ

 

கீற்றுக்கொட்டகைகளில்

வேர்க்கடலை விற்றவன் நீ

 

காயலான் கடையில்

காலம் கழித்தவன் நீ

 

வீடுவீடாய் போய்

அழுக்கெடுத்தவன் நீ

 

பத்துவயதில்

ஓடிவந்து

ஓடும் ரயிலில்

பெட்டிபெட்டியாய் தாவியவன்

 

எத்தனைபேர்

உன் காதை திருகியிருக்கிறார்கள்.

 

எத்தனைபேர்

கன்னத்தில் அறைந்திருக்கிறார்கள்

 

தென்னகரயில்வேக்கு இன்னமும்

தீராத கடனிருக்கு

 

மறக்கமுடியுமா மாநகராட்சிப்பள்ளியில்

மதிய உணவுக்கு தட்டேந்தி நின்றதை?

 

மாயக்கவிதை பண்ண

மற்ற ஆளைப்பாரு

 

நான்

தொந்தரவுபட்ட பிள்ளையாய் இருந்தவன்

 

இன்னமும்

தொந்தரவுபடும் மனுஷன்தான்.

 

என்று தன்னை  முன்வைக்கும் கவிஞன் விக்கிரமாதித்யன். முற்றிலும் லௌகீகத்தின் கவிஞன் என தன்னை பிரகடனம்செய்துகொண்டவன். தோற்கடிக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட, வெளியே நிறுத்தப்பட்ட, சில்லறை கொடுத்து துரத்தியடிக்கப்பட்ட மனிதர்களின் பிரதிநிதி. ஆனால் சட்டென்று ஓர் அபாரமான மன எழுச்சியை அடைந்து

நெஞ்சு படபடக்கிறது

நீர் வீழ்ச்சி என்று

அருவியை யாராவது சொல்லிவிட்டால்

என்று தூய அழகியல்வாதியாகவும் ஆக அவரால் முடியும். ஆகவேதான் எந்த பெருங்கவிஞனையும்போல அண்ணாச்சி விமரிசகனையும் வாசகனையும் தோற்கடித்தபடி சென்றுகொண்டே இருக்கிறார்.

விக்கியண்ணாச்சிக்கு வாசகனாக, விமரிசகனாக, இளவலாக என் வணக்கங்கள், வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைஇருகடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்,மண்,கடிதங்கள்