ராஜீவ்காந்தி கொலையின் மர்மங்கள்

பாரதப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி   தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் போராளிகளால் படுகொலை செய்யப் பட்டார். தமிழக அரசியலில் அழுத்தமான ஒரு திருப்பத்தை உருவாக்கிய நிகழ்ச்சி அது. இருபதாண்டுகள் ஆனபின்னரும்கூட தமிழ் மக்கள் அச்செயலை மறக்கவோ, மன்னிக்கவோ இல்லை என்பதைச் சென்ற தேர்தலில் டீக்கடைகள், பேருந்துகளில் கேட்டுக் கொண்டே இருந்தேன். இலங்கையில் நடைபெற்ற தமிழர் படுகொலைகள் கூட தமிழர்களில் பெரும்பாலானவர்களின் மனதை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக திருப்ப முடியவில்லை.

அத்தகைய முக்கியத்துவம் கொண்ட ஒரு நிகழ்ச்சியைக் குறித்து தமிழில் எழுதப் பட்ட நூல்கள் எவை என்று பார்த்தால் ஏமாற்றம்தான். என் கவனத்துக்கு வந்தவை ஏதுமில்லை. அதிகமாக பேசப்பட்ட நூல் சிறப்புப் புலனாய்வுக்குழு தலைவரான கார்த்திகேயன் அவர்கள்  ஆங்கிலத்தில் எழுதியது. அந்நூலை நான் அப்போதே வாசித்திருக்கிறேன். கார்த்திகேயனின் நூல் தொழில்முறை இதழியலாளர் உதவியுடன் உருவாக்கப் பட்டது. ஏராளமான தகவல்களுடன், மேலைநாட்டில் இவ்வகை நூல்கள் எழுதப்படும் அமரிக்கையான நடையில் அமைந்தது

ஆனால் அந்நூல் பல இடங்களை மழுப்பிச் செல்கிறது, பல விஷயங்களை விட்டு விடுகிறது, பல இடங்களை துல்லியமாகச் சொல்லவில்லை என்ற எண்ணம் எவருக்கும் ஏற்படும். குறிப்பாக இந்தப் படுகொலையின் அரசியல் பின்னணி குறித்த ஆழ்ந்த மௌனம் அந்நூலில் உண்டு. ஆனால் அந்நூலை விட்டால் அந்த புலனாய்வைப் பற்றிய வேறு நூல்கள் இல்லை.

அக்குறையை நீக்குவது ராஜீவ்காந்தி கொலைவழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரியான திரு ரகோத்தமன் எழுதிய ‘ராஜீவ்காந்தி படுகொலை’ என்ற இந்நூல். சிறிய நூல் இது. ஒரே மூச்சில் வாசித்து விடத்தக்கது. கார்த்திகேயனின் நூலைப் போல அல்லாமல் விரிவான தகவல்களும், சித்தரிப்புகளும் இல்லாமல் நேரடியாக சுருக்கமாக எழுதப் பட்டிருக்கிறது. ஆனால் இந்த நேரடித் தன்மையே இந்நூலை கார்த்திகேயனின் நூலை விட முக்கியமானதாக ஆக்குகிறது என்று எனக்குப் படுகிறது.

ராஜீவ்காந்தி கொலை நடந்த அன்று காலை பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து இறங்குகிறார் ரகோத்தமன். அவரை அலுவலகத்திற்கு அழைத்து  ராஜீவ் காந்தி கொலையை துப்பறியும் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். இந்த விறுவிறுப்பான நூல் அங்கே ஆரம்பிக்கிறது.

லண்டனில் விடுதலைப் புலிகளின் செய்தி பொறுப்பாளராக இருந்த கிட்டு, ராஜீவ் காந்தியை நாங்கள் கொலை செய்யவில்லை என்று மறுத்ததுடன் ‘முடிந்தால் யார் கொலை செய்தார்கள் என்று கண்டு பிடிக்கட்டுமே’ என்றும் சொல்கிறார். அதில் ஏளனமும், அறைகூவலும் இருந்தது. அந்த தன்னம்பிக்கைக்குக் காரணம் ஒன்றே, புலிகளின் திட்டங்கள் எப்போதுமே மிக, மிகக் கச்சிதமானவை. ஆகவே துப்பறிவது அனேகமாக சாத்தியமே அல்ல என்று அவர்கள் நம்பினார்கள்.

ஆனால் துப்பறிவதற்கான பாதைகள் முக்கியமான ஒரு தற்செயலால் திறந்து கொண்டன. ராஜீவ் காந்திக்கு கொலையாளி தணு மாலை போடும்போது புலிகளுக்காக அதைப் படமெடுக்க அனுப்பப் பட்ட ஹரிபாபு ஆர்வத்தால் சற்று நெருக்கமாகச் சென்று விட்டார். ஆகவே அவர் குண்டு வெடிப்பில் சிக்கி மரணம் அடைந்தார். அவரது காமிராவில் பதிந்த புகைப்படங்கள் போலீஸ் வசம் சிக்கின.

அந்தப் படங்களில் இருந்து மேலும் துப்புத் துலக்க உதவியாக அமைந்தவை இருவரின் பதற்றங்கள். ஹரிபாபுவை அனுப்பிய புலி ஆதரவாளரான சுபா சுந்தரம் தன்னுடைய பதற்றம் காரணமாக பலரிடம் அந்தக் காமிராவைப் பற்றி விசாரித்து மாட்டிக் கொண்டார். அவரிடமிருந்தே சிவராஜன், தணு போன்ற பலரைப் பற்றிய தகவல்கள் கிடைத்தன.

இரண்டாவதாக ஹரிபாபுவின் தந்தை தன் நிரபராதித்துவத்தை மேலும் உறுதிப் படுத்த ஒரு காமிரா ஸ்டாண்டை கொண்டு வந்து காட்டினார். அவரது சிறிய குடிசையை போலீஸ் பலமுறை ஏற்கனவே சோதனை போட்டிருந்தது. ஆகவே அந்த ஸ்டாண்ட் அந்த வீட்டில் இருந்திருக்கவில்லை என எண்ணும் ரகோத்தமனும் குழுவினரும் மேலும் துருவி விசாரிக்கிறார்கள். அருகே இன்னொரு குடிசை அவர்களுக்கு இருப்பது தெரிய வருகிறது. அதில் ஹரிபாபுவின் டைரி சிக்குகிறது. அத்துடன் பலவகையான குறிப்புகள் கடிதங்கள்.

அங்கிருந்து சிவராஜன் பிடிபட்டு தற்கொலை  செய்து கொள்வது வரையிலான நிகழ்ச்சிகளை அபாரமான பரபரப்புடன் விளக்குகிறது இந்த முக்கியமான நூல். அவற்றில் பல நிகழ்ச்சிகள் அப்போது நாம் செய்தித்தாளில் வாசித்தவை. இந்நூல் அச்செய்திகளுக்குள் சென்று அவற்றை கோர்த்துக் காட்டி பின்னணியை விளக்குகிறது.

பல குறிப்பிடத்தக்க விஷயங்கள் இந்நூலை முக்கியமானதாக ஆக்குகின்றன. அவற்றில் முதன்மையானது சிறப்பு புலனாய்வுக்குழு தலைவர் கார்த்திகேயனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்தான். கார்த்திகேயன் இந்த கொலை வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய, ஐயப்பட வேண்டிய அரசியல்வாதிகளை முழுக்க விசாரிக்காமலேயே விட்டு விடுகிறார். அவர்களை இதில் சம்பந்தப் படுத்தவே அவர் விரும்பவில்லை.

உதாரணமாக, வைகோவுக்கு இக்கொலைத்திட்டம் முன்னரே தெரிந்திருந்திருக்கலாம் என ரகோத்தமன் கிட்டத்தட்ட வெளிப்படையாகவே சொல்கிறார். அவரது தம்பி ரவிச்சந்திரன் போன்ற ஒருவர் சிவராஜனை முன்னரே வந்து சந்தித்ததாக குற்றவாளி சாந்தன் சொல்கிறான். ஆனால் அதைப் பற்றி விசாரிக்க கார்த்திகேயன் ஒத்துக் கொள்ளவில்லை

அதே போல அதிகாரிகளின் தவறுகளை விசாரிக்கவும் கார்த்திகேயன் ஒத்துக் கொள்ளவில்லை. பல அதிகாரிகள் எந்த வகையான பொறுப்பும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். ராஜீவ் காந்திக்கு மாலை போடுபவர்களின் பெயர் அடையாளம் விலாசத்தை குறித்து வைக்க பணிக்கப் பட்ட அதிகாரி ஒரு கசங்கிய துண்டுத்தாளில் சில பெயர்களை மட்டுமே குறித்து வைத்திருக்கிறார்!

அதைவிட ஆச்சரியமானது ராஜீவ்காந்தி ஆந்திராவில் இருந்து எப்போது கிளம்புவார் ஏன் தாமதம் என்பதெல்லாம் இங்கே உள்ள போலீஸ¤க்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. காங்கிரஸ்காரர்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் சிவராசனிடம் இருந்து கிடைத்த ஒரு குறிப்பில் அவர் எல்லாவற்றையும் துல்லியமாக குறித்திருந்ததை ரகோத்தமன் காண்கிறார்.  அவர்கள் இன்னும் துல்லியமான உளவமைப்பை வைத்திருந்தார்கள்.

இந்நிலையே உச்சத்திலும். ராஜீவ் காந்தி கொலை நடந்ததும் நடந்த உள்துறை உச்ச ஆலோசனைக் கூட்டத்தில் உளவுத் துறை தலைவர் புலிகள் ஒருபோதும் இதைச் செய்திருக்க மாட்டார்கள் என்றார். ஏன் என்றால் புலி அமைப்புக்குள் தனக்கு ஓர் உச்ச உளவாளி இருக்கிறார் என்றும் அவரிடமிருந்து தகவல் கிடைத்தது என்றும் சொல்கிறார். அந்த உளவளி கிட்டுதான். அதாவது கிட்டு நம் உளவுத் துறையின் தலைவரை அவ்வாறு ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறார். அது பின்னர் தெளிவாகியது.

இருமுறை புலிகள் சுற்றி வளைக்கப்பட்ட போதும் கார்த்திகேயன் அதிரடிப்படை உள்ளே போக அனுமதியளிக்காமல் காலம் தாழ்த்தினார். அதன் மூலம் அவர்கள் சயனைட் அருந்தி சாகக் காரணமாக அமைந்தார் என்று சொல்கிறார் ரகோத்தமன். குறிப்பாக சிவராஜன் இருந்த வீட்டை வளைத்த போலீஸ் ஒரு இரவு முழுக்க பேசாமல் காத்திருக்க நேரிட்டது என்கிறார். உரிய தருணத்தில் உள்ளே சென்றிருந்தால் அவர்களை உயிருடன் பிடித்திருக்கலாம் என்று சொல்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டுகளைப் பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. இந்திய அரசுக்கும், புலனாய்வு அதிகாரிகளுக்கும் நடுவே உள்ள ஒருங்கிணைப்பாளராகவே கார்த்திகேயன் இருந்தார். இந்திய அரசு, அதன் சர்வதேச உறவுகள், உள்நாட்டு அரசியல் என எத்தனையோ விஷயங்களை கணக்கில் கொண்டே எதையும் செய்ய வேண்டியிருக்கிறது. அத்துடன் இந்திய அரசமைப்பு என்பது ஒத்திசைவில்லாத கொழகொழப்பான ஒரு யந்திரம் போன்றது. அதன் இயல்பே தாமதம்தான். ஆக என்ன நடந்திருக்கும் என எவரும் ஊகிக்கலாம்.

இந்த நூல் ராஜீவ் காந்தி கொலையை முகாந்திரமாகக் கொண்டு இரு விஷயங்களைச் சொல்கிறது. ஒன்று இந்திய நிர்வாக, காவல் அமைப்பு என்பது பொறுப்பேற்க மறுக்கக் கூடியவர்களால் ஆனது. எத்தனை மாபெரும் கவனப் பிழைக்கும் இங்கே அரசாங்கத்தில் உள்ள எவரும் தண்டிக்கப் படுவதில்லை. அவர்கள் அவர்களைப் போன்றவர்களால் தப்ப விடப் படுவார்கள். ஆகவே இந்த நிர்வாக அமைப்பு திறனற்றது, கவனமற்றது, தாமதமானது, பெரும்பாலும் முட்டாள்தனமானது.

ஆனால் தனிமனிதர்களாக நம் அதிகாரிகளில் பலரும் அர்ப்பணிப்புள்ளவர்கள், வியக்க வைக்கும் மதிக் கூர்மையும் தைரியமும் கொண்டவர்கள். இத்தனையையும் மீறி நம் அமைப்பு இன்னமும்  இயங்கிக் கொண்டிருக்க அதுவே காரணம்.

http://nhm.in/shop/978-81-8493-311-6.html

ராஜிவ் கொலை வழக்கு , K.ரகோத்தமன், கிழக்கு பிரசுரம்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா:கடிதம்
அடுத்த கட்டுரை'அங்காடித்தெரு' பொங்கலுக்கு…