வாடிக்கையாளர்கள்

 

avatar-1

எங்கள் நிறுவன வளாகத்துக்குள் என் அலுவலகத்துக்கு முன்னால்  மாடியில் பில் கட்டும் அலுவலகம். வாடிக்கையாளர் சேவை மையம். அதைத்தாண்டி ஒரு கட்டிடத்தின் மாடியில் முதல் திருப்பத்தில் என் அறை. வாடிக்கையாளர் சேவைமையம் போவதற்குக் கொட்டை எழுத்துப் பலகை உண்டு. இதுபோக பாதுகாவலர் வாய்மொழியாகவும் வழிகாட்டுவார். இருந்தும் தினம் நான்குபேர் படியேறி மூச்சிரைக்க என் அறைக்கு வெளியே வந்து பாதி முகம் காட்டுவார்கள். ஒரு தாத்தா அந்த போர்டுமேலே வெற்றிலைச் சுண்ணத்து மிச்சத்தை த் தீற்றியபின் நேரே என்னை நோக்கி வருவதை நானே கண்டேன்.

”வாங்க…என்ன வேணும்?” பார்த்ததுமே தெரிந்துவிடும். கையில் பணம், பில் பிரதி .”பில்லு பணம் கெட்டணும்” ”அந்தால போங்க.அந்தப் படியேறி அங்க போகணும்…”. ஆனால் வழக்கமாக ஒன்று செய்வேன் எழுந்து சன்னல் வழியாக சுட்டிக் காட்டுவேன்.அதுவே போதும் நாம் ‘பொலைட்’ ஆக இருக்கிறோம், வாடிக்கையாளருக்காக சிரமம் எடுத்துக் கொள்கிறோம் என்று தோன்றச்செய்துவிடும். பெரும்பாலும் ”எனக்க மண்டைக்காட்டம்மோ, இன்னும் படி கேறணுமா? பதினெட்டாம்படி போலல்லா இருக்கு….. செரி, பிள்ள இருக்கணும்…நான் போறன்…” என்று சென்றுவிடுவார்கள்.

பாட்டிதாத்தாக்கள் சும்மாதானே இருக்கிறார்கள் என்று கொடுத்தனுப்புவது வன்கொடுமை செய்வது – அவர்களை எதிர்கொள்பவரை. பெரும்பாலான பாட்டாமார்களுக்கும் தாத்தாக்களுக்கும் முக்கியப்பிரச்சினைகள் வேறுபல இருக்கின்றன. ”என்ன வேணும் பாட்டா?”என்ற கேள்விக்குப் பதிலாக ”ஓ, ஒண்ணும் சொல்லுகதுக்கில்ல. இந்நா கெடக்கேன், சாவ மாட்டாம…”என்ற பதில்தான் கிளம்பும். ”அதில்ல பாட்டா என்ன பிரச்சினை?” ”என்ன பிரச்சினை? பிள்ளே, வயசானா கட்டை சாயணும். இல்லேண்ணா எல்லாம் பிரச்சினைதான். வாதத்துக்க எடைச்சில் உண்டு கேட்டியளா…பின்ன எரை எடுக்காது. ஒருபிடி சோறு திண்ணா இந்நா இங்கிண கேறி நிக்கும்.  ராத்திரி உறக்கமும் இல்ல”

பொறுமையாக அடுத்த தளங்களுக்கு நகர்ந்தாக வேண்டும். முள்ளின்மேல் போட்ட சேலை போல. ”அது சத்தியமாக்கும் பாட்டா…ஆனா பாட்டா ஏன் இந்த ஆபீசுக்கு வந்தீக? ” ”ஏ?” ”இந்த ஆபீஸுக்கு ஏன் வந்தீக?” ”பய சென்னான்…தாணுபிள்ள” ”என்ன காரியமாக்கும்? ” ”அது ஒண்ணும் சொல்லாண்டாம். அவனுக்கு நல்லது கெட்டது வகைதிரிவில்ல. பத்து காசு கிட்டினா அதுக்கு சாராயம் மோந்திப்பிடுவான். பின்ன நாலுகாலிலேயாக்கும் நடப்பு. பெஞ்சாதி பிள்ளையளுக்க தலையெளுத்து…என்ன சொல்ல?நான் ஒண்ணும் கேக்கப்போறதில்ல.நமக்கோ வயசாச்சு…அப்பன்னு பாக்கமாட்டான். பிடிச்சொரு தள்ளு தள்ளினாக்கூட நமக்கு தெக்கோட்டுள்ள வளி தெளிஞ்சுப்போடும்..”

அமைதி. இலை முள்ளில் விழுந்தாலும் முள் இலையில் விழுந்தாலும் கிழிவது இலையே. அமைதி. பொறுமை பொன் போன்றது. ”அது உள்ள காரியமாக்குமே பாட்டா..செரி அதுக்கு இங்க என்ன வேல?” ”இங்கிணயா?” ”ஆமா” ”எனக்கா?” ”ஆமா” ”பயல்லா சொன்னான்?” ”என்ன சொன்னான்?” ”துண்டு கொண்டு குடுக்கியதுக்கு” ”என்ன துண்டு?” ”இந்தத் துண்டு”

காகிதத்தில் பில் எண்,பணம் தொகை எல்லாமாக சுருட்டி வியர்வை ஊறி ‘’மிச்சம் பைசாக்கு வெள்ளம் குடிக்க சொன்னான்.” பாட்டாவை இன்னொருவர் மேல் ஏவி விடுவதில்தான் என்ன இன்பம்! குதூகலமாக நானே எழுந்து கைபிடித்து .”பாட்டா வாருங்க…நான் எடம் காட்டுதேன். அங்கிண கொண்டுபோயி பணம் கெட்டுங்க…பாத்து…படி இருக்கு…” ”சின்னவன் நல்ல பயலாக்கும். இப்பம் கேரளத்தில கொத்த வேலைக்குப் போறான். அவன் இன்னும் பெண்ணு கெட்டேல்ல கேட்டுதா?”

பாட்டிகள் வேறுவகை .கதவருகே புடவை அசைவு மட்டும் தெரியும். ”வாங்க”என்றதுமே நாணத்தாலே கால்கள் பின்னப் பின்ன நடக்கும் நாடகமாக வந்து மூச்சுத் திணறி நாலைந்துமுறை சும்மா வாயசைந்து பின்பு ”எளையவன் தந்நு அயச்சதாணு” ”எந்து?” ”ரூபா” ”எந்தினு?” ”பில் அடைக்கான்” ”பில்லு இவிடெ அல்ல …ஆ கெட்டிடத்திலாணு” ”அப்போ அவிடெயும் காசு கொடுக்கணோ?” ”அவிடே மாத்ரம் காசு கொடுத்தால்மதி” ”அப்போ இவிடேயோ?” ”இவிடே கொடுக்கண்டா” உடனே ஒரு பெருமூச்சு. மெல்ல நடந்து திரும்பி ஐயமாக ”அப்போ இவிடே எத்ர ரூப கொடுக்கணும்?” ”இவிடே ரூபா வேண்டா” ”அப்போ ஈ ரூபா எந்துசெய்யும்? ”அவிடே அடைக்கணும்” ”இவிடே ?”

ஆனால் வேறுவகையான ஆட்கள் அடிக்கடி வருவதுண்டு. முன்தினம் ஒருவர் வந்தார். ”பில் கெட்டணும் ”என்றார் விரைப்பாக. முப்பதுவயதிருக்கும். கட்டைகுட்டையான உருவம். கெட்டி மீசை. சம்மர் கிராப். சின்னக் கண்கள். அனேகமாக ஏதோ டிரைவராக இருப்பார் என்று உள்ளுணர்வு சொல்லியது. நான் வழக்கம்போல முன் கட்டிடத்தைச் சுட்டிக்காட்டினேன்.

”அதிப்பம் அப்டி சொன்னா ஆச்சா? இங்கேண்ணுல்லா சொன்னாக?” என்றார். நான் புன்னகைசெய்து ”வழியில எழுதி வச்சிருக்குல்லா…முன்னால மாடியிலதான் போகச்சொல்லியிருப்பாங்க” என்றேன். கடுப்பாக ”எனக்க கிட்ட இங்க வாறதுக்காக்கும் சொன்னது” என்றார்.

நான் ”இது வேற எடம். பில்லுக்கும் எனக்கும் சம்பந்தமில்ல. இங்க ஊழியர்களுக்க சம்பளம் லீவு எல்லாம்தான் பாக்குதோம்” .”ஆளாளுக்கு ஒண்ணு சொன்னா வாறவன் என்ன செய்யியது? எனக்க கிட்ட இங்க மேல ஏறி வந்து அடைக்கவாக்கும் சொன்னது…” நான் ”சரி, தெரியாம சொல்லிப்போட்டார்…நீங்க அந்த மாடியிலே ஏறிபோயி…” . ”வேய், எனக்க கிட்ட இங்கிண வந்து அடைக்கல்லாவே சொன்னான்?”

பரிதாபமாக, ”இங்க பணம் வாங்க முடியாதே. பணத்தை அங்கதான் வாங்கி ரசீது குடுப்பாங்க. இது வேற ஆபீசுல்லா?” என்றேன் ”அது சொன்னா ஒக்குமா?  கேட்டில நிக்கப்பட்டவன்  இங்கெல்லா வந்து அடைக்கியதுக்கு சொன்னான்?” ”இங்க அடைக்க முடியாதே” ”என்னவே வெளையாடுதீரா? அங்க ஒருத்தன் இங்க வரச்சொல்லுவான். இங்க வந்தா அங்க போவச்சொல்லுதீரு…மாறிமாறிச் சவிட்டிக் களிக்குததுக்கு என்னவே பந்தாவே? இல்ல கேக்கேன்”

நான் எழுந்து கண்களை மங்கவைத்த கோபத்துடன் ”பின்ன?”என்றேன். ”எனக்க கிட்ட இங்கயாக்கும் வந்து பணம் கெட்டச் சொன்னது”

மெல்ல கோபத்தை அடக்கினேன். இம்மாதிரி சந்தர்ப்பங்களில் வேண்டுமென்றே உதட்டை விரித்து சிரிக்க முயல்வது ஒரு நல்ல பழக்கம். உடனே மனதிலும் சிரிப்பு வருவதைக் காணலாம். புன்னகைத்தபடி ”நீங்க சொல்லுதது நியாயம்தான்…வாங்க உக்காருங்க…”என்றேன். சந்தேகத்துடன் வந்து நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான். ”பாப்போம்..இருங்க” என்றேன்.

என்னுடைய வேலைகளை கவனிக்க ஆரம்பித்தேன். ஐந்து நிமிடம் கழித்து ”என்ன செய்யுதது?”என்றார். பேனாவை வைத்துவிட்டு ”அதைப்பத்தி நாம பேசுவோம்…”. ”என்ன பேசுகது?” என்றார் மேலும் ஐயமாக. ”இப்ப நாம என்ன செய்யுகது? ரெண்டுபேரும் இருந்து பேசி ஒரு முடிவுக்கு வருவோம்.” ”என்ன முடிவு?” ”இல்ல எல்லாத்துக்கும் ஒரு வழி இருக்குல்ல…முதலில நீங்க உம்ம சைடை சொல்லுங்க. என்ன செய்யலாம்?”

அவர் தடுமாறி ”பில்லடைக்கணும்” என்றார். ”சரி. எனக்கு என்ன பிரச்சினைண்ணா இங்க பில்லு வாங்குததுக்கு உண்டான ஏற்பாடு இல்ல. ரசீது புக்கு இல்ல..” ”அப்டி சொன்னா ஆச்சா? நான் வந்தப்ப அந்த கேட்டில நிக்குத தொப்பிக்காரன்…” ”செரிதான்.அதுக்குத்தான் என்ன செய்யுததுண்ணு சிந்திப்போம். நீங்க இங்க பணம் அடைக்கணும் இல்லியா?” ”ஆமா” ”அதுக்கு சர்க்கார் எதிராக்கும். நீரு அடைக்கணும். நான் வேங்கணும். நடுவிலே சர்க்கார் நிக்குது. என்ன செய்வோம்?”

அவர் என்னைக் குழப்பமாகப் பார்த்தார். ”சர்க்கார் இப்பிடி சொன்னா நாம எனன் செய்யுதது? வேணுமானா சர்க்காருக்கு ஒரு மனு குடுக்கலாம். இந்தமாதிரி இன்னாரு –பேரென்ன சொல்லீங்க?” ”எம்.இன்னாசிமுத்து” ”நம்பர்?” சொன்னார். ”செரி.நீங்க பணம் அடைக்கதுக்கு ஆசைப்படுதீங்க. உமக்கு அதுக்குண்டான சௌகரியம் செய்து குடுக்க வேண்டியது சர்க்கார் கடமை. அதுக்கு சர்க்காருக்கு உங்க உத்தேசம் தெரியணும். எழுத்து குத்தெல்லாம் உங்க பேரிலதானே?”

சற்றே கவலையுடன் ”ஆமா”என்றார். ”அப்பம் பிரச்சினை இல்ல. வெள்ளத்தாளிலே இன்னின்னமாதிரி இன்னின்ன காரணங்களினால நான் இந்த ஆளிட்ட பணம் அடைக்கணும்னு ஆசைப்படுதேன். அதுக்குண்டான சௌகரியம் செய்து தரணும்ணு தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன்னுட்டு எழுதிக்குடுங்க…தமிழிலே எழுதினா போரும்.” பேப்பர் எடுத்து வைத்து ”பேனா இந்தாங்க”

எழுதாமல் தயங்கியபடி ”எளுதிக்குடுத்தா?”என்றார். ”நாங்க நேரா இதை மேலே அனுப்புவோம். ஆபீசர் அதைக் கையெழுத்துப் போட்டு அவருக்கு மேலே அனுப்புவாரு. அவர் கையெழுத்துப் போட்டு அதுக்கு மேலே அனுப்புவாரு…அவரு கையெழுத்துப் போட்டு…” ”செரி…” பேனாவைத்து ஸ்தோத்திரம் எழுதி ”என்ன எளுதணும்?” ”பில்லு காப்பி இருக்கா?” ”இல்ல நம்பர் குறிச்சிட்டாக்கும் வந்தேன். ” ”அய்யோ. பில்லு காப்பி வேணுமே. அதிலதான் மத்த தகவல் எல்லாம் இருக்கும். ஒண்ணு பண்ணுங்க. ஓடிப்போயி எடுத்துட்டு வந்திருங்க” ”வீடு வள்ளம்குமாரவெலையில” ”அப்ப ஒரு ஆட்டோ எடுத்துகிட்டுப் போங்க” ”அதிப்பம்….” ”அவசரமில்லேண்ணா நாளைக்குக் கூட கொண்டுவந்து குடுத்தாப் போரும்…”

”செரி ” என்று ஆசுவாசமாக எழுந்தார். ”இருங்க…முழுக்க சொல்லல்லியே. நீங்க குடியிருக்கப்பட்ட எடத்துக்கு ஆதாரம் இருக்கா? ”என்னது?” ”ரேசன் கார்டு கரம் கெட்டின ரெசீது?” ”இருக்கு” ”அதில ஒரு செராக்ஸ் காப்பி எடுத்துட்டு அதை தாசில்தாரிட்டமில்லாட்டி விஏஓட்ட குடுத்து அட்டெஸ்ட் பண்ணி சைன் வேங்கிருங்க…பின்னால தேவைப்படும். நீங்க குடியிருக்க எடம் இன்னதுண்ணு தெளிவா இருக்கணும்ல?” ”செரி.நான் வாறேன்.பிளாக்காபீசுக்கு போகணும்…” ”ஒரு அரமணிக்கூர் இருந்தீங்கன்னா எங்க ஆபீசர் வருவாரு. எதுக்கும் அவரை நேரில பாத்து ஒரு வார்த்தை சொல்லுகது நல்லது” ”இல்ல பிள்ளை. எனக்குப் பல சோலி கெடக்கு…வரட்டா”

”செரி வாங்க. எல்லாத்தையும் நாளைக்குக் கொண்டுவந்து குடுங்க….இங்க கொண்டுவந்தா போரும்” அவர் ”செரி”என்று சொன்னார். தூய காற்றுதான் வாயிலிருந்து வந்தது. நான் எழுந்து விடை கொடுத்தேன். வந்தபோது வலுவான கால்களை அழுந்த ஊன்றி நிலமதிர வந்தவர் ஹைட்ரோசில் அறுவை சிகிழ்ச்சை முடிந்து போவதுபோல சென்றார்.

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Aug 26, 2010

முந்தைய கட்டுரைவிஷால் ராஜா பேட்டி
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 65