விஷ்ணுபுரம்,மண்,கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.  நலமா?

இன்று விஷ்ணுபுரத்தை படித்து முடித்தேன். பிரமிப்பு, குழப்பம்,ஏமாற்றம், விரக்தி என பல எண்ணங்கள் மனதில் அலை மோதுகின்றன. மனதில் தோன்றுவதை எல்லாம் எழுத வேண்டும் என்று கை பரபரத்தது. எனவே தான் நள்ளிரவில் அமர்ந்து இந்த கடிதத்தை எழுதி கொண்டிருக்கிறேன்..

வாசிப்பின் ஆரம்ப கட்டடத்தில் இருக்கும் எளிய வாசகன் நான். எனது ரசனை ஓரளவாவது மேம்பட்டு இருப்பது (அல்லது அப்படி நான் நம்பிக்கொண்டு இருப்பது) தங்கள் எழுத்துக்களை படித்த பின்பு தான்.  விஷ்ணுபுரம் போன்றதொரு நாவலை முழுமையாக உள் வாங்கிக்கொள்ள நான் இன்னும் வெகு தூரம் போக வேண்டும் என்று எனக்கு தெரியும். இப்போதைய வாசிப்பில் இந்த நாவலின் தளங்களில் பத்தில் ஒரு பங்கையாவது புரிந்து கொண்டு இருப்பேனா என்பது சந்தேகமே.  இருந்தும் என்னுடைய கருத்துக்களை உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றொரு அற்ப ஆசை.

நாவலின் முதல் பகுதியான ஸ்ரீ பாதம், ஒரு சமுதாயம் அதன் உச்சத்தில் இருந்த நாள்களை படம் பிடித்து காட்டுகிறது. வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஒளி வீசுவதாய் தோன்றும் இந்த வாழ்கையின் குறுக்கு வெட்டு தோற்றத்தை நுண்ணோக்கி வழியாக பார்க்கும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. இங்கு புனிதம் என்று ஏதுமில்லை. லட்சியவாதிகள் எவருமில்லை. இங்கு செயல் படுவதெல்லாம் மனிதனின் சுய நலமும், அற்பத்தனங்களும் அகங்காரங்களும் தான். இங்கு நடக்கும் சில நல்ல விஷயங்கள் கூட தற்செயலின் துணையோடு தான் நடக்கின்றன. அல்லது வேறு உள்நோக்கத்தோடு செய்யப்படும் காரியத்தின் எதிர்பாராத பக்க விளைவாக. ஆனால், அதிகாரத்தோடு சம்பந்தம் இல்லாத சில தனி  மனிதர்கலாவது வாழ்க்கையின் அர் த்தத்தை தேடிகொண்டே இருப்பது ஒரு ஆறுதல். இன்னொரு விஷயம், இங்கு வசதியாய் வாழ்பவகள் அதிகாரத்தின் அருகில் இருக்கும் அரசர்கள், தளபதிகள், குருமார்கள்;  பொருளீட்டும் திறன் கொண்ட வணிகர்கள், மற்றும் அழகான உடல் கொண்ட கணிகையர்கள். இன்றைய அரசியல் வாதிகளும், தொழில் அதிபர்களும், சினிமாக்காரர்களும் ஞாபத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை..    இரண்டாவது பகுதியான கௌஸ்தூபத்தில், பெரும் தத்துவ விவாதங்கள் நடக்கின்றன. இதில் பாதி கூட எனக்கு புரியவில்லை. ஆனால் பெரும் தத்துவங்களும் தர்க்கங்களும் எந்த உண்மையையும் நிரூபிப்பது இல்லை என்று புரிகிறது. இதனால் மனித மனம் திருப்தி அடைவதும் இல்லை.  மேலும்  சாமான்ய மக்களின் நன்மைக்காக லட்சிய கனவுடன் தொடங்கும் சந்திர கீர்த்தியின் ஆட்சியில் கடைசியில் குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் அஜிதர் இறக்கும் யதார்த்தம் நெஞ்சில் அறைகிறது. ஆனால், நாவலின் இந்த பகுதியில் தத்துவ விவாதங்கள் இவ்வளவு விரிவாக காட்ட படுவதன் தேவை எனக்கு புரிய வில்லை. நாவலின் கவித்துவத்தை இந்த பாகம் கொஞ்சம் குறைக்கிறதோ என்று கூட தொன்றுகிறது.   மூன்றாம் பகுதியான மணிமுடி தான் நாவலை பல தளங்களுக்கு உயர்த்துகிறது என்று எண்ணுகிறேன்.  கால வெள்ளத்தின் பெறு வீச்சில் மனிதன் கட்டும் கோட்டைகள் தகர்ந்து போகும் அவலம் உக்கிரமாய் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் இந்த இடர்பாடுகளுக்கு நடுவிலும் உயிர் வாழும் காவியங்களும் குல வரலாறுகளும் நம்பிக்கையை அளிக்கின்றன.   இந்த பகுதியின் முக்கிய நோக்கம்  முதல் பகுதியில் வாழ்ந்த மனிதர்களை தொன்மங்களாக காட்டுவது தான் என்றாலும், அதை இன்னும் சிறப்பான உத்திகள் மூலம் செய்திருக்கலாமா என்று தோன்றுகிறது. திரும்ப திரும்ப குடும்பத்தின் வயதான ஒருவர் தன் குலகதையை சொல்வதன் மூலமாகவே இதை செய்திருப்பது சிறு சலிப்பை ஏற்படுத்துவது உண்மை.   கடைசியாக இரண்டு விஷயங்கள்: 1) விஷ்ணுபுரத்தை பற்றிய நல்ல விமர்சனம் இணையத்தில் கிடைக்குமா என்று தேடி பார்த்தேன். ஒன்றும் கிடைக்கவில்லை.  காவல் கோட்டத்துக்கு நீங்கள் எழுதியிருந்தது போல் ஒரு நல்ல அறிமுகத்தை யாராவது எழுத மாட்டார்களா என்று மனம் ஏங்குகிறது..   2) இந்த நாவலை இந்துத்துவா நாவல் என்று சிலர் ஏன் கூறுகிறார்கள் என்றே புரியவில்லை.   சொல்லபோனால் வைதீகமும் சடங்களும் இந்த நாவலில் மிக ஆழமாக கிண்டல் செய்ய படுவதாக தான் எனக்கு தோன்றுகிறது.   மிக பெரும் வாசிப்பு அனுபவத்தை கொடுத்ததற்கு நெஞ்சார்ந்த நன்றி. அடுத்து கொற்றவையை தொங்கலாமா அல்லது விஷ்ணுபுறத்தையே இன்னொமொரு முறை படிக்கலாமா என்று யோசித்து கொண்டிருக்கிறேன்

தங்கள் நேரத்துக்கு நன்றி.

அன்புடன் ராஜேந்திரன்

 

அன்புள்ள ராஜேந்திரன்

பெரிய நவல்கள் முடிவில் ஒருவித ஆழாமான சோர்வையும் நிறைவையும் அளிக்கும். சோர்வு என்பது நம் வாழ்க்கை நோக்கு கலைக்கப்படுவதனாலும் வாழ்க்கையில் உள்ள தவிர்க்க முடியாத வெறுமையை உணர்வதனாலும் உருவாவது.

விஷ்ணுபுரத்தைப் பற்றி குறைவாகவே விமரிசனங்கள் எழுதப்பட்டுள்ளன. சில கடிதங்கள், கட்டுரைகளை என் இணையதளத்தில் தேடினால் படிக்கலாம்.

இந்துத்துவா நாவல் என்றெல்லாம் இலக்கிய வாசிப்பு கொண்ட எவரும் சொல்லவில்லை. நாவல் வாசிக்கும் வழக்கமே இல்லாத தப்பித்தவறி வாசித்தாலும் ஒன்றும்புரியாத இலக்கிய அரசியல்வாதிகளின் வம்பு அது. நாவல் வெளிவந்தபோது அது பெற்ற வரவேற்புதான் அந்த வம்பை உருவாக்கியது
ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம் இது. தினமும் நீங்கள் இன்று என்ன எழுதி இருக்கிறீர்கள் என்று பார்பதிலேயே எனது நாள் தொடங்குகிறது. நீங்கள் இணையத்தில் எழுதுவதை குறைப்பதாக சொன்ன போது சற்று வருத்தமாகவே இருந்தது. ஆனால் இது உங்கள் அசோகவனத்தை சீக்கிரம் வெளி கொண்டுவரும் என்று ஆறுதல் அடைகிறேன்.
உங்களின் “விஷ்ணுபுரம்” வாசித்தேன். அற்புதமான நூல். பிரமிப்பில் ஆழ்தேன். அதில் வரும் ஞான சபை விவாதங்களை உள்வாங்கிக்கொள்ள மறு வாசிபிற்கு உட்படுத்த வேண்டும். அதற்க்கு முன்னால் “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” வாசித்தல் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறன்.
http://www.jeyamohan.in/?page_id=359 ல் இந்த புத்தகம் தமிழினி  வெளிஈடு என்றும் http://www.jeyamohan.in/?p=5683 கிழக்கு பதிப்பக வெளிஈடு என்றும் கூறி இருகிறீர்கள். இந்த வருட புத்தக கண்காட்சியில் இதில் எந்த பதிப்பகத்தில் கிடைக்கும் என்று கூற முடியுமா. சிரமத்திற்கும் மன்னிக்கவும்
.
உங்களிடம் இன்னும் நிறைய பேச வேண்டும் என்று இருக்கிறது. மீண்டும் கடிதம் எழுதுகிறேன்.
அன்புடன்,
கார்த்தி
இந்துஞானமரபில் ஆறுதரிசனங்களின் முதல்பதிப்பு தமிழினி வெளியீடக வந்து விற்று போய்விட்டது. இரண்டாம் பதிப்பை இவ்வருடம் கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது
ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ..,

நலம் அறிய ஆவல் சார் . உங்களின் “மண்’ வாசித்தேன்.  ஏக்கப்பட்ட இமேஜ் களை உள்ளடக்கியபடி விரிகிறது இந்த  குறுநாவல். சிங்கன் மலை தொடர்பான நுட்மான விவரிப்புகள், வறட்சியில் அழியபோகும் கொம்பன் விளை ஊரினை கற்பனையாக முதலில் மனதுக்கு கொண்டு வர ‘பட்டு போன ஆல மரம் வரிவரியாக நிழல்கள் ” , இந்த ஊரின் தெரு நாயின் பசித்த உடல்
பற்றியான வர்ணிப்பு குறிப்பாக “மாவு படிந்து வெடித்த நாக்கு ” (இதெல்லாம் எப்படி சார் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கு) வறட்சியின் உக்கிரத்தை காட்ட கறுப்பி கிணற்றில் விழுந்து சாகும்போது படிமாகிறது .இதில் பிரதானமாக வரும் சிங்க மூப்பன் மற்றும் கொம்பனை விட என்னை பாதித்தது அப்பு பண்டாரம் மற்றும் அவரது இயல்பை காட்டும் அவரது நாட்டார் பாடல்கள்.மூத்த நாடாரின் பிள்ளைகள் சின்னையன் மற்றும் பாக்கியம் பற்றியயான விவரிப்பு இறுக்கமான மனநிலையை ஏற்படுத்து விடுகிறது ,சிங்க மூப்பனுகும் கொம்பனுக்கும் இடையேயான பகை , போர்  பிறகு சிங்கனின் இனம் குடியமர்வது ,அவர்களின் செழிப்பு  “ஒரு மூட்டை பட்டு புடவை விற்க ஒரு தெரு போதும் “, உயர்ந்த இனமாக அவர்கள் மதிக்கபடுவது போன்றவை மிக விவரணையாக வழக்கம் போல நுட்பமான ஆசிரியரின் ஸ்டைல் இல் நகர்கிறது .அப்பு பண்டாரம்,மூத்த நாடருக்கு இடையில் நடக்கும் உரையாடல்கள் ,அப்பு பண்டாரம் ,பாக்கியம் ஆகியோரின் சாவு பற்றிய வர்ணனைகள் உச்ச வேதனை விவரிப்பு.கடைசி ஆளான மூத்த நாடாரும் ஊரை காலி செய்து விட்டு போன பின்பான ஊரை வெறுமையான சூனியம் மேலும் அழுத்தமாக பிடி கொள்வது. மூப்பன் தாகத்திற்காக கிணற்றடியில் வண்டல் நீரை போணியில் குடிக்க சிரமம் கொள்ளும் காட்சி, “தஸ் ஸ்” என்ற ஒலியுடன் கொம்பன் வருவது,மூப்பன்  ‘சிரித்தபடி போணியை கொம்பனை நோக்கி நகர்த்துவது “..வீழ்ச்சியை இவ்வளவு நுட்மாக விவரிப்பதில் ரப்பரை நினைவு படுத்தி விடுகிறது. உங்களின் மிக முக்கியமாக ஆக்கங்களில் ஒன்றாக இதை நான் கருதுகிறேன். கிளாசிக்  என்ற சொல்லின் முழு  விளக்கம் எனக்கு தெரியாது ஆனால் இந்த குறுநாவலில்  அந்த தன்மை நிறைந்துள்ளதாக எனக்கு படுகிறது.பெரும் வீழ்ச்சியை நிறமாக கொண்டு ஒளிரும் ரத்தினம் இந்த  “மண்”

:”oomai senyaai” தொடர்பான முத்துலிங்கம் அவர்களான உரையாடலில் ” எனது படைப்பு திருத்தி எழுதபடுவது கிடையாது ஒரு தடவைதான் எழுதுவேன்” என்று . 17. வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த  குறுநாவலுக்கும் பொருந்துமா ?   ஏனோ எனக்கு உண்மையிலேயே நம்ப சிரமமாக உள்ளது அவ்வளவு நேர்த்தி இதில் வரும் ஒவ்வொரு சொல்லும்


Regards
dineshnallasivam

 

சமீபத்தில் உங்கள் “அறிவிப்பு ” பதிவை பார்த்தேன்.கலையை யோகமாக நினைக்கும் ஒரு தீவிரமான எழுத்தாளருக்கு நேரம் ரொம்ப முக்கியம் .ஆகவே இனி நான் உங்களுக்கு எழுதும் கடிதம் உங்கள் பதில் கடிதம் எதிர்பார்த்து அல்ல.. உங்கள் முழு நேரமும் இலக்கியத்திற்கு செயல்படவே  ஒரு  வாசகனாக  விரும்புகிறேன். உங்கள் நூல்களை வாசித்து  உங்களுக்கு தொடர்ந்து எழுதுவேன். ஏன் என்றால்  நான் கொண்டாடும் என்னுடைய மதிப்பான நண்பர் அல்லவா நீங்கள்


Regards
dineshnallasivam

 

அன்புள்ள தினேஷ்,

“வழக்கம்போல மண் ஒரே வாசிப்பில் எழுதப்பட்டதே. புரூஃப் கூட பார்க்கவில்லை. இப்போது சில பக்கங்களை பார்த்தால் ஏகப்பட்ட பிழைகள். திருத்தவேணும். கொஞ்சம் வயதானபிறகு ஒட்டுமொத்தமாக திருத்திக்கொள்ளலாம் என நினைக்கிறேன்
ஜெ

ஜெ,

உடுமலை இணையதளத்தில் உங்களுடைய எல்லா புத்தகங்களும் உள்ளன. இந்த இணைப்பை நீங்கள் வெளியிடலாம்

சிறில்

முந்தைய கட்டுரைவிக்கிக்கு விளக்கு
அடுத்த கட்டுரைபனிமனிதன் ஒரு கடிதம்