«

»


Print this Post

இருகடிதங்கள்


அன்புள்ள ஜெயமோகன், அபிராம்மண-முற்படுத்தப்பட்ட சாதிகள் மீதும் பிராம்மண சாதிகள் மீதும் இட ஒதுக்கீடு செயல்படுவதில் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. பிராம்மணர்கள் போல மிக மோசமாக வெறுப்புப்பிரச்சாரம் ஏவி விடப்பட்ட மற்றொரு சமுதாயம் உண்டா என்பது கேள்விக்குறி. தலித்துகள் மீது உள்ள வெறுப்பு அழிந்து கொண்டிருக்கிறது. பிராம்மணர்கள் மீதுள்ள வெறுப்பு மிகக் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.

உதாரணமாக இதில் நான் இணைத்துள்ள படங்களைப் பாருங்கள். காஞ்சா இலையாவின் நூல் அட்டைகள் இவை. இந்நூல் பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்கப்படுகிறது, இந்நூலின் அட்டையில் காணப்படும் சித்திரத்தில் இருப்பவன் உண்மையில் நாசி வெறுப்புப் பிரச்சாரங்களில் காட்டப்படும் ஒரு யூதன். அவனையே உருமாற்றி பிராம்மணனாக்கி காட்டுகின்றனர். பின்னட்டையில் மிகத்தெளிவாக சாதி வெறுப்பைத் தூண்டும் சித்திரங்கள். இவை ஒரு புகழ்பெற்ற சர்வதேச அளவில் தலித்தியல் சிந்தனையாளராக தூக்கிப்பிடிக்கப்படுபவரால் செய்யப்பட்டுளது. ஆனால் இலியா ஒரு தலித் அல்ல என்பது வேறு விஷயம்.

உண்மையை சொன்னால் முற்போக்காக சொந்த சாதியின் கொடுமைகளை எதிர்த்த குரல்கள் சொந்த சாதியை சுயபரிசோதனை செய்த குரல்கள் தமிழ்நாட்டில் வேறெந்த சாதியைக் காட்டிலும் பிராம்மணர்களிடையேதான் கூடுதலாக வந்தது என நினைக்கிறேன். ஆனால் தலித் குடிசைகளை எரிக்கும் ஆதிக்க சாதியினருக்கு பழி போட ஒரு நல்ல வாய்ப்பாக “பிராம்மணீயம்” “பார்ப்பனீயம்” ஆகியவை உள்ளன. இந்த வெறுப்பு பிரச்சாரத்தை பிற முற்படுத்தப்பட்ட சாதிகள் சுமக்க வேண்டியதில்லை. இதன் விளைவுகள் பல்வேறு விதமாக இருக்கின்றன. ஒன்று பிராம்மணர்களாக பிறந்தவர்கள் ஒன்று அதீத பிராம்மணிய எதிர்ப்பு என்கிற பெயரில் ஹிந்து ஞான மரபை ஈவெராவை விட தீவிரமாக எதிர்க்கிறார்கள். அல்லது ஒரு சிறுகுழுவாக தங்களுக்குள் மட்டுமே பேசுவோராக சுருங்கிவிடுகிறார்கள். இவற்றுக்கு அப்பால் தாங்கள் தன்னளவிலேயே பிறரை விட மரபணுரீதியாகவோ கர்மவினையாலோ உயர்ந்தவர்கள் என நினைக்கும் பிராம்மணர்கள் மிகக்குறைவானோரே.

தாங்கள் பிறப்பினாலேயே ஈகைக்குணமும் விருந்தோம்பலும் தமிழ் சைவ பண்பாடும் பிறரை விட அதிகமாகக் கொண்டவர்கள் என நம்பும் வெள்ளாளர்களையும் தாங்கள் பிறவியிலேயே வீரத்துடன் பிறந்தவர்கள் என நம்பும் தேவர்சாதியினரையும் விட அத்தகைய பிராம்மணர்கள் எண்ணிக்கையில் குறைவாகக் கூட இருக்கலாம் அல்லது சம அளவில் இருக்கலாம். என்ன சொல்ல வந்தேனென்றால் பிராம்மணர்கள் பிற முற்படுத்தப்பட்ட சாதியினரைப் போலல்லாமல் இந்த வெறுப்பு பிரச்சாரத்தை -எவராலும் தட்டிக்கேட்கப்படாத பெருமளவு நாசி யூத இனவெறுப்பை ஒத்த பிரச்சாரத்தை- சேர்ந்து சுமக்கின்றனர். மிகவும் சரியான பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு எனும் சமூகநீதி தீர்வை அமுலாக்க விடாமல் தடுக்கும் கருத்தாக்கம் அந்த பிராம்மண இன வெறுப்புதானே?

பணிவன்புடன்

அரவிந்தன் நீலகண்டன்

அன்புள்ள அரவிந்தன்,

நீங்கள் குறிப்பிடுவது உண்மை. நானே பல சமயங்களில் எழுதிய விஷயங்கள்தான். பிராமணர் மீதான வெறுப்பு என்பது இயல்பான ஒரு சமூக உருவாக்கம் அல்ல. கிட்டத்தட்ட இருநூறு வருடங்களாக திட்டமிட்டு மெல்லமெல்ல உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஒரு விஷயம். அதன் பின்னால் உள்ள நோக்கம் இந்து மதத்தின் மரபார்ந்த விஷயங்களை தாக்கி அழிப்பது மட்டுமே. இந்து மதத்தின் அனைத்து பழைமையான தீமைகளுக்கும் பிராமணர்களை பொறுப்பாக்குவது அதில் ஒரு முதல் படி. அதன்பின் தங்களை அதில் இருந்து விடுவித்துக்கொள்வது பிறருக்கு எளிதாகிறது. அந்த வெறுப்புப் பிரச்சரத்திற்கு எதிராக வரும்காலத்தில் வலுவான பதில் பிராமனர் அல்லாத சாதியினரிடமிருந்தே உருவாகி வரும் என நன் நினைக்கிறேன்  நான் அதில்  ஒருவன்.

ஆனால் இதற்கு தடையாக இருப்பது எந்தவிதமான முற்போக்கு அம்சத்தையும் உள்வாங்காமல் மனம் குறுகிப்போயிருக்கும் சில பிராமணர்களின் குரல்தான்
ஜெ

 

அன்புள்ள ஜெ,

உங்களை சந்தித்தலில் மிக்க மகிழ்ச்சி.  நிறைய பேச வேண்டும் என்று ஆவல். ஆனால் அதிகம் பேச அந்த சூழ்நிலையில் நாவெழவில்லை. என்றாவது பேசுவோம் !

’முன்சுவடுகள்’ நூலில் பெரியசாமி தூரன் அவர்களின் முயற்சிக்கள் மற்றும் சாதனைகள் பற்றி எழுதியதை படித்தேன். நெகிழ்ச்சியாக இருந்தது. உங்களுக்கு மிக்க நன்றி.  தூரன் அவர்களின் மூத்த புதல்வி எம் குடும்ப நண்பர். சென்னை அடையாரில் தான் இருக்கிறார். (ஒரு வகையில் எமக்கு உறவினர்). மருமகன் திரு.சின்னுசாமி அவர்கள், தூரனின் சாதனைகள் மற்றும் ஆக்கங்கள் பற்றி விரிவாக பேசுயிருக்கிறார். நான் சிறுவனாக இருந்த சமயத்தில், குழந்தைகள் கலைகளஞ்சியம் 10 நூல்களுன் கிடைத்தது. பருகி மகிழ்திருக்கிறேன். அவரை பற்றிய கட்டுரைக்கு மீண்டும் நன்றி.

சென்ற ஆண்டு அவரின் நூற்றாண்டு விழா சிறப்பாக கோவையில் நடந்தது. மலர்

வெளியிடப்பட்டது.

 

கோவை அ.அய்யாமுத்து : இவர் 1898இல் பிறந்த காந்தியவாதி. அவரை பற்றி இணையத்தில் நான் முன்பு எழுதியது : …கோவை அய்யாமுத்து தாம் எமது ஹீரோ. அவரது “எனது நினைவுகள்” நூலை பொக்கீசம் போல பாதுகாத்து வருகிறேன். வருடம் ஒரு முறை அதை படித்து பயன் பெறுகிறேன்.

அவரின் ‘நான் கண்ட பெரியார்” (1957) வீட்டு நூலகத்தில் இருந்தது. பிறகு தொலைந்து விட்டது. சென்னை தரமணி ரோஜா முத்தையா நூல்னிலைத்தில் அது உள்ளது. ஸ்கான் காபி ஒரு முறை கிடைத்தது. இது ஒரு முக்கிய ஆவணம்.

அவரின் “நாடு எங்கே செல்கிறது ? ” என்ற நூலும் முக்கியமானது. முன்னர் படித்திருக்கிறேன்.

1972இல் அவர் வெளியிட்ட “ராஜாஜி எனது தந்தை” என்ற நூலை பார்க்க பல வருடங்களாக‌ துடிக்கிறேன். விலை மதிக்க முடியாத நூல் அது.

எங்கும் கிடைக்கவில்லை. (சமீபத்தில் MIDSஇல் கிடைத்தது)

ராஜாஜி ஒரு மகத்தான தலைவர். பெரும் ஞானி. அவ‌ரின் தீவிர‌ ர‌சிக‌ன் யான்.

பொள்ளாச்சியிலும் கோவையிலும் க‌ல்வி ப‌யின்ற‌ கால‌ங்க‌ளில் (80க‌ளில்) இவ‌ர்க‌ளின் அருமையை உண‌ராம‌ல் போனேன். அருட்கசொல்வ‌ர் நிறுவிய‌ க‌ல்வி நிறுவ‌ன‌த்தில் தான் ப‌டிப்பு.

“என‌து நினைவுக‌ளில்” உலாவும் சிலரை நேரில் கண்டு பழகும் பாக்கியம் கிடைத்தது. திருச்சி பேராசிரியர் (காலம் சென்ற) எம்.எஸ்.நாடார் எமது குடும்ப நண்பர். இன்றுதான் திருமதி.சவுந்திரா கைலாசம் அவர்களை சந்தித்து திரு.அய்யாமுத்து பற்றிய அவரின் நினைவுகளை கேட்டறிந்தேன்.

திருப்பூரில் யாம் வாழ்ந்த காலத்தில் அவர் நிர்மாணித்த‌ காந்தி நகரை கண்டு மகிழ்ந்தேன். அவர் கட்டிய வீட்டையும் பார்த்தேன். (வீடு விற்ற‌ ப‌ட‌ல‌ம்). இன்று அந்த‌ வீடு இல்லை.

மிக‌ மிக‌ போற்றப்ப‌ட‌ வேண்டிய‌ மாம‌னித‌ர் அவ‌ர். வாழ்க‌ அவ‌ர் புக‌ழ்.///

http://sanimoolai.blogspot.com/2007/07/blog-post.html

காந்திய நெறியில் ஒரு தடம் – கோவை அய்யாமுத்து

— Regards / அன்புடன்   K.R.Athiyaman  / K.R.அதியமான்   Chennai – 96   http://nellikkani.blogspot.com http://athiyamaan.blogspot.com http://athiyaman.blogspot.com

 

அன்புள்ள அதியமான்

சந்தித்து விரிவாக பேசமுடியாததில் எனக்கும் வருத்தமே

கோவை அய்யாமுத்துவின் சுயசரிதை நான் வாசித்திருக்கிறேன். இருபதாண்டுகளாக அவ்வப்போது அதைப்பற்றி எழுதிவந்திருக்கிறேன். நேர்மையான, அதேசமயம் கொஞ்சம் அடவடியான, காந்தியவாதி என்பதே அவரைப்பற்றிய என் புரிதல். தமிழக சர்வோதய இயக்கத்தின் சிற்பி அவர்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/5956

10 comments

Skip to comment form

 1. shaan

  “ஆனால் இதற்கு தடையாக இருப்பது எந்தவிதமான முற்போக்கு அம்சத்தையும் உள்வாங்காமல் மனம் குறுகிப்போயிருக்கும் சில பிராமணர்களின் குரல்தான்”

  உண்மையைச் சொன்னீர்கள். உதாரணமாக வெங்கடராமன் ராமகிருஷ்ணன் பிராமணர் என்பதால் தான் நோபல் பரிசு வென்றார் என்று சிலர் நாஜிக்களைப் போல பேசுகிறார்கள். ‘பிராமண சாதி வெறுப்பு’ என்று கூறாமல் ‘பிராமண இன வெறுப்பு’ என்று அரவிந்தன் அவர்கள் கூறுவதே அவர்களை பிற தமிழர்களிடம் இருந்து பிரித்துவிடுகிறதே.

 2. bala

  ஜெ..

  வணக்கமுங்க. நான் அஞ்சாங்கிளாஸ் வரைக்கிம் தளவாப் பேட்டை உயர் ஆரம்பப் பள்ளியில படிச்சனுங்க. எங்கூர்ல பெரும்பாலும் கவுண்டருங்க. கொஞ்சம் செட்டியாருங்க.. நெறய தாழ்த்தப் பட்டவுங்க.. அப்பொறம் ஒரே ஒரு அய்யருங்க. நெம்ப நாளக்கி, ஜாதி ரெண்டு மூணு தாண்டி இல்லீன்னு நெனச்சிட்டிருந்தனுங்க. எங்கூட்டுல வேற உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்னு திருக்குறள எப்பிடியோ கண்டு புடிச்சு சொல்லிக் குடுத்தாங்க. அதாவது ஒலகத்துலேயே கவுண்டருங்கதான் ஒசந்த ஜாதி.. மத்தவிங்க அவிங்களுக்குப் பின்னாலாதான்னு. தளவாப் பேட்டையில இருந்த வரைக்கும் பிரச்சினையில்லீங்க. கட்ட வண்டி கரெக்டா ஓடிட்டிருந்துங்க..

  கோயமுத்தூர்ல அக்ரி காலேஜ் சேந்தன்னிக்கு கண்ணு முழி திருகிப் போச்சுங்க. அடேங்கப்பா எத்தன ஊரு.. எத்தன சாதீன்னு. அதிலிம் உங்க ஊரு பாஷை இருக்குது பாருங்க.. மொதக் கேக்கறப்ப நெம்ப கஷ்டமா இருந்துதுங்க.. என்னடேங்கறாரு ஒருத்தரு.. என்ன இருந்தாலும் நம்மூரு பேச்சு மாதிரி வராதுன்னு நெனச்சுக்கிட்டு பேசாம இருந்துட்டனுங்க..

  அப்பறம், கூட ஒரு அய்யிரு புள்ள படிச்சிதுங்க.. வாத்தியாருங்க என்ன கேள்வி கேட்டாலும் டக் டக்குன்னு மின்னல் மாதிரி பதில் சொல்லிடுங்க.. (இப்பிடி ஒரு புள்ளயக் கண்ணாலம் பண்ணிகிட்டா புள்ள குட்டியெல்லாம் கெவனமாப் பாத்துக்குமில்லோன்னு நெனச்சுக்குவனுங்க.. அது வேற கத – இன்னொரு நாளக்கிச் சொல்றனுங்க). நமக்கு நெம்ப நெல கொள்ளலீங்க. எப்படறா இந்த மாதிரி புள்ளீங்க படிக்கற இடத்துல நாம குப்ப கொட்டறதுன்னு பயந்துட்டனுங்க. கருக் கருக்னு இருக்குங்க. ராத்திரியில தூங்கப் போறதுக்கு முன்னால பயமா இருக்குங்க. அப்பறம் எப்பிடியோ தெப்பு தேறி வந்துட்டனுங்க.

  அக்ரி முடிச்சுட்டு, மேக்கால குஜராத்தில IRMA அப்புடீன்னு ஒரு MBA காலேஜ் சேர்ந்தனுங்க. (ஏண்டா ஈரோடு சிக்கிய நாயக்கர் காலேஜில சீட்டுக் கெடக்கிலியா?? வடக்கால போயிப் படிக்கற.. காசுக்குத் தெண்டமா அப்புடீன்னு நெறய பங்காளிங்க எளக்காரமாப் பேசுனாங்க. பங்காளின்னாலே வயித்தெரிச்சல் தானுங்க). அங்க போனா, அடேங்கப்பா, அப்பறம் எத்தன சாதி.. அங்க எல்லாரும் அவிங்க அவிங்க சாதிப் பேர பக்கத்துல போட்டுக்குவாங்க. நம்ம தெலுங்கரும், மலயாளத்தாரும் நம்முளும் தான் அதப் போட்டுக்கறதில்லீங்க.. மனசில வச்சிக்கிறதுங்க.. ஆனா, குஜராத்தில நம்மூரு மக்களுக்கு நெம்ப மரியாதீங்க. டாக்டர் குரியன் தானுங்க நம்ம காலேஜிக்கு சேர்மன். (அவுரு நெம்பப் பெரியவருங்க.).. அங்க குஜாரத்தில பட்டேலுங்க ரொம்ப ஜாஸ்திங்க.. வெவசாயமும் பாப்பாங்க.. தொழிலும் பாப்பாங்க.. நம்மூரு கவுண்டரையும் நாடாரையும் சேர்த்த மாதிரின்னு நெனச்சுக்குவங்க.. ஆனா கறி திங்கறதில்லிங்க.. (2002 ல கொஞ்சம் மனுஷக் கறி திங்க ஆரம்பிச்சிருக்காங்க..)

  அப்பறமா டெல்லியில ஒரு கம்பெனியில சேர்ந்தனுங்க.. வடக்க நெம்ப மோசமுங்க. எனக்கு பொருள் வாங்கற வேலைங்க.. சப்ளையருங்க வந்தானுங்கன்னா, பொசுக்குனு கால்ல உளுந்துருவானுங்க. ஏண்டான்னா, பிராமண், கால்ல உளுந்தா நல்லதுன்னு சொல்வானுங்க.. எனக்கு கொஞ்சம் கோவம் வந்துருச்சிங்க. இனிமேலு எவனாச்சியிம் கால்ல உளுந்தா அவுனுக்கு ஆர்டர் கெடயாதுன்னு கண்டிசணாச் சொல்லீட்டனுங்க. இருந்தாலும் நம்மளப் பாத்த ஒடனேயே “பாலாஜி பாலாஜி” ன்னு கையத் தூக்கிக் கும்புடுவானுங்க. என்ன பண்றதுன்னு உட்டுட்டனுங்க. அவுனுகளுக்கு, சௌத் இந்தியான்னாலே பிராமண், பட்டை, நாமம், தயிர் சாதந்தாங்க. நம்மாளுங்க மொதல்லியே நெறயாப் படிச்சி வந்திருக்கோனும்னு நெனச்சிக்கிறந்துங்க..

  ஆனா பாருங்க.. பீஹார், உத்தரப் பிரதேசத்துலயெல்லாம் இன்னம் தாழ்த்தப் பட்ட மக்கள் நெம்ப கீளே இருக்காங்க. இப்பத்தான் பிற்படுத்தபட்ட மக்களே மேல வர ஆரம்பிச்சிருக்காங்க.. டெல்லி யுனிவர்ஸிட்டீல மலை வாழ் மக்களுக்கான எடத்துக்கெல்லாம் ஒன்னு ரெண்டு அப்ளிகேசன் தான் வருங்க.. நம்மூர்ல இருந்து ஒரு 20 வருஷம் பின்னாடி இருக்குதுங்க.. பெங்கால் இன்னும் மோசம்னு நீங்க எளுதியிருந்தீங்க ( அவிங்களுக்கு கொள்கைப் பிடிப்பு நெம்ப ஜாஸ்தீங்க.. வக்காளி, செத்தாலும் முன்னேற்ரதில்லீன்னு)..

  இப்பிடியா, பல ஊரு தண்ணி குடிச்சதுக்கு மேல கொஞ்சம் அறிவு வந்திருக்குதுங்க.. அப்பறமேட்டி, கொஞ்சம் படிச்சது.. ஃப்ரண்டஸ் சகவாசம்னு இருந்ததில இப்ப கொஞ்சம் தேவலீங்க.. வள்ளுவர் விவசாயின்னு சொன்னது கவுண்டர மட்டுமில்லின்னு புரிஞ்சிருக்குதுங்க இப்போ.. அதே மாதிரி முட்டாளுங்க எல்லா ஜாதியிலிம் சம அளவு சதவீதத்துலதான் இருக்காங்கன்னும்.. இருந்தாலும் மனசுக்குள்ளார கொஞ்சம் கவுண்டரு பாசம் இருக்குதுங்கோ.. நான் இந்த பாஷையில எளுதறதே ஒன்னொட கவுண்டத்தனம் தான்னு என்ற ஊட்டுல சொல்றாங்க.. அப்பிடியில்ல.. நம்ம ஜெயமோஹன் கன்னியாகுமரி பாஷையில எளுதயில நம்மூரு பாஷை அடி பட்றக் கூடாதுல்லோன்னு சொன்னாக் கேக்கறதில்லீங்க.. ஆனா ஒரு பாயிண்டு நீங்க சொன்னது நெம்பக் கரெக்டுங்க.. மனசுக்குள்ளார கொஞ்சம் கவுண்டத்தனம் இருக்கறதப் பாத்திட்டு சிரிச்சுக்கறது நல்லதுங்க.. போன வாட்டி நீங்க வந்தப்போ, ஒரு கடைக்குப் போயி என்னமோ வாங்கீட்டு, சீட்ட மறந்துட்டம்.. அங்க இருந்த ஒரு ஆளு கவுண்டர்ல போயிக் கேளுங்க கவுண்டர்ல போயிக் கேளுங்க திருப்பி திருப்பி சொன்னப்போ, நீங்க தடால்னு, இவரே கவுண்டர்தாய்யான்னு சொன்னீங்க பாருங்க.. நெம்பத் தமாஸா இருந்துதுங்க. அப்பிடி இருந்துக்கறது நெம்ப நல்லதுங்க.. உங்க ஃப்ரெண்டு யுவன் சொன்ன மாதிரி.. அவுரு கைபர் போலன்..(எங்கூட்டிலையும் கைபர் போலந்தாங்க) நீங்க ஆரல் வாய் மொழி..

  பாலா

 3. arvind

  இந்தக் “கவுண்டர்” கல்ச்சர் ஆசாமிகளின் ரவுசு தாங்க முடியலையே சாமி..

  முதலில் இந்த “நெம்ப” என்ற வார்த்தையை பிரபலப்படுத்திய லதானந்தை மரத்தில் கட்டி வைத்து உதைக்க வேண்டும். பின்னர் “நெம்பவை” ஸ்பாம் ஃபில்டரில் போட்டு சூடு பண்ணி, நன்கு கொதிக்க வைத்து, “நெம்ப” வரும் பின்னூட்டத்தையெல்லாம் தடை செய்வது ஜெயமோகனான உங்களுக்கும், வாசகர்களான எங்களுக்கும், jeyamohanபுள்ளிin என்ற வலைதளமான வலைதளத்துக்கும் நெம்ப முக்கியமான விசயம்..

 4. KALIRAJ

  ///தலித்துகள் மீது உள்ள வெறுப்பு அழிந்து கொண்டிருக்கிறது. பிராம்மணர்கள் மீதுள்ள வெறுப்பு மிகக் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது//
  Excellent. Can you show me atleast one village in which there is “Irattai Kuvalai” for brahmins. Plz don’t compare both. I know in those villages forward communities are not forcing these. But if you go for root cause… Which makes an Dalit to feel inferiar for the past several years?. Which makes other communities to feel superiar than them?. I agree the rationalism against Brahmin also need to be cleared off. But don’t compare their status with Dalits directly. Just wanted to comment that…

  //மிகவும் சரியான பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு எனும் சமூகநீதி தீர்வை அமுலாக்க விடாமல் தடுக்கும் கருத்தாக்கம் அந்த பிராம்மண இன வெறுப்புதானே?///

  Wow! Superb… We’ll ask govt to just give economy based reservation alone (Not caste based) and ask those poor guys to pay lakh & lakh of ruppees as fee… :)

  Economy based reservation will not solve this problem friend. Giving free eduction only will solve economy problem not reservation.Might be during 50s both caste & economy got related. Present caste based reservation is not to create economical equivalense (That can’t be achieved until they give free education) – It is at present – is to give Social Equivalence. In each & Every organization – whether it is institute or industry – need to follow reservation because our society is (wantedly or ..unwantedly) based on caste. Even after death you can’t reach other caste’s funeral.. “Pinamum Saathi parkum”…
  If a person entering into an organization as employee/student, he should feal as if he is in society. Caste based reservation will do that…In this point every caste has rights to fight for their reservation — even forward communities.
  Once again.. it is not for economical equivalence. Economical equivalance is possible only after giving completly free education. Come along fight for free education…

  I know i’ve much deviated from the them of your post. But majorly I concentrate on above two things..since I feel that might get misintrpretation.

  I can talk about this much…But not now.

  By
  Kali

 5. ஜெயமோகன்

  அன்புள்ள கலிராஜ்

  எந்த ஆராய்ச்சிக்கும் நடுவே இந்த ஒரே சொற்றொடர்களினாலான உணர்ச்சிக்கொந்தளிப்பை முன்வைத்து பேச உங்களால் முடியும். இங்கே விவாதம் சாதிக்கொடுமை குறித்தது அல்ல

  ஒரு நாகரீக மனிதனைப்பொறுத்தவரை தலித்துக்கள் மீதான காழ்ப்போ விலக்குதலோ ஏற்கத்தக்கவை அல்ல என்ற நிலை இன்று உருவாகியிருக்கிறது. ஒரு சமூகத்தின் தார்மீகமான மையத்தில் உள்ளவர்கள் ஒன்றை ஏற்றுக்கொண்டால் காலப்போக்கில் மொத்த சமூகமும் அங்கே வந்துதான் ஆகவேண்டும். தலித் வெறுப்பு பிற்போக்கானது அசிங்கமானது ஆபத்தானது என்பதில் இன்று எவருக்கும் ஐயமில்லை. இன்னமும் நம் சமூகத்தின் பெரும்பகுதி அங்கே வந்துசேரவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் வந்துகொண்டிருக்கிறது. அதிகபட்சம் ஒரு தலைமுறை ஆகலாம். ஒருவன் படிக்கும்தோறும் சிந்திக்கும் தோறும் இந்த வகையான காழ்ப்பிலிருந்து மீள்வான். மீள்வதைக் காண்கிறோம்

  ஆனால் முற்போக்கான, பண்பட்ட, சமநிலையான, படித்த, நிதானமான, மனிதர்கள்கூட இங்கே பிராமண வெறுப்பை கக்கலாம் என்றாகியிருக்கிறது. பிராமண வெறுப்பைக் கக்கினால் உங்களை யாரும் பிற்போக்கானவர் என்றோ சாதிவெறிகொண்டவர் என்றோ சொல்லப்போவதில்லை. அது ஒரு வகையான முற்போக்காகவே இங்கே — தமிழகத்தில் மட்டும் – கருதபப்டுகிறது

  இந்த மாதிரி ஒரேவகையான கோஷங்களை சபைதோறும் போடாமல் கொஞ்சம் நிதானமாக யோசித்தால் நான் சொல்ல வருவதென்ன என்பது புரியக்கூடும்

 6. mani

  For an unreserved post, if a Brahmin and Non-Brahmin are contested, obviously a Brahmin candidate will be selected even though the Non-Brahmin candidate did well. This is because of their Brahminical network. Once this channel has broken by encouraging other communities to enter in to Government service then the caste based reservation can be removed. But the time is yet to come.

  More than 70% of the positions in central government services are occupied by Brahmins, 20% would be occupied by Non-Brahmin upper caste and the rest of the staffs are SC/ST. You can verify this ratio in your BSNL office. Since 1990, other backward classes are entered in to the scene (credit goes to V. P. Singh).

  So, we (they) have to wait for some time. It seems, while the Brahmins are get rid of the Indian government service, they will occupy American Government service and rule the world.

 7. KALIRAJ

  Dear Jeyamohan,
  Thanks for your reply. I do understand the main theme of this discussion. I do agree with the comments that “”பிராமண வெறுப்பைக் கக்கினால் உங்களை யாரும் பிற்போக்கானவர் என்றோ சாதிவெறிகொண்டவர் என்றோ சொல்லப்போவதில்லை. அது ஒரு வகையான முற்போக்காகவே இங்கே — தமிழகத்தில் மட்டும் – கருதபப்டுகிறது””.
  I’m sure that will also goes out slowly when each guy realizes that human beings are equal..and that happens thro’ education for sure.

  I majorly write previous post to comment on two things: THese two things were made me to write the previous post – i agree with the rest of the things in the post.

  1.தலித்துகள் மீது உள்ள வெறுப்பு அழிந்து கொண்டிருக்கிறது. I don’t agree atleast at present. These type of info will slowly leads once again to the previous state. We need to wait atleast one generation to comment like this as you said. In my personal life, i’m seeing lot & lot educated guys who just accepts Dalit’s growth because of Law not heartfully…
  2. Comments on reservation: When we talk about the feelings or “anti-brahmin feeling in people’s heart”, it is better to stick on that alone. Forward communities are not just Brahmins..it includes lot & lot of other communities also in Tamil nadu. I believe talking about reservation in this post is irrelevent to the topic & deviated from the main theme of this post.

  In total, everybody need to feel that human beings are equal. Dalits waited for more than 300+ years. Happy to know that Brahmins are started earlier..so, soon equivality will get reached. We can together claim for that…

  Thats all I’ve.

 8. Arunagiri

  “இதற்கு தடையாக இருப்பது எந்தவிதமான முற்போக்கு அம்சத்தையும் உள்வாங்காமல் மனம் குறுகிப்போயிருக்கும் சில பிராமணர்களின் குரல்தான்…”

  இப்படிப்பட்ட சில பிராமணர்கள் இருக்கிறார்கள்தான். அவர்கள் எப்போதுமே இருக்கவும் செய்வார்கள்தான். இப்படிப்பட்ட சில பிராமணர்களின் குரல்களைப் பிரதானப்படுத்தி வளரும் ஜாதிய மனத்தடைகள், நிரந்தரமாய்ப் பதிந்துவிடும் ஆபத்தை உள்ளடக்கியவை. அரவிந்தன் எழுதிய பழிபோடும் மனப்பான்மைக்கு நிரந்தர உரமாகுபவை. இது உங்களுக்குத் தெரிந்திருக்கும்தான். ”அந்த வெறுப்புப் பிரச்சாரத்திற்கு எதிராக வரும்காலத்தில் வலுவான பதில் பிராமணர் அல்லாத சாதியினரிடமிருந்தே உருவாகி வரும்” என்று நீங்கள் சொல்வது மிகச்சரி. அப்படி வரும் பதிலுக்குத்தான் இந்த வெறுப்புப்பிரசாரத்தை முறியடிக்க வல்ல தார்மீக வலுவும் அதிகம் இருக்கும். இதனால்தான் நான் முதற்சொன்ன எச்சரிக்கை வரிகளை எழுதினேன்.

  அருணகிரி.

 9. sangamithiran

  /* பிராமணர் மீதான வெறுப்பு என்பது இயல்பான ஒரு சமூக உருவாக்கம் அல்ல. கிட்டத்தட்ட இருநூறு வருடங்களாக திட்டமிட்டு மெல்லமெல்ல உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஒரு விஷயம். அதன் பின்னால் உள்ள நோக்கம் இந்து மதத்தின் மரபார்ந்த விஷயங்களை தாக்க்கி அழிப்பது மட்டுமே.௮*/

  யாரும் திட்டமிட்டு உருவாக்கவில்லை ஜே அவர்களே. பார்ப்பனீயம் என்ன சொல்லுகிறது என்பது புரியாமல் இருந்தவர்களுக்கு பார்பனியம் என்றல் என்ன என்று விளங்க வைத்தது தான் பெரியாரும் அவர் உருவாகிய திராவிடர் இயக்கமும். எதனையும் இட்டு கட்டி சொல்லவில்லை பார்பனியமும் அவர்கள் உருவாக்கிய வேதம் சாஸ்திரம் என்ன சொல்லியதோ அதனை பார்பனரள்ளதொருக்கு உணரவைத்தது…..மேலும் http://paraneetharan-myweb.blogspot.com/2009/12/blog-post_25.html

 10. raghunathan

  அன்பு ஜெ சார். ஜாதி வெறுப்பில் பிராமணரல்லாத உயர்ஜாதியினர் பற்றி. திரு இந்திரா பார்த்தசாரதியின் புதினம் (குருதிப்புனல்?) ஒரு வசனம் மங்கலான நினைவு _ “நாயக்கன் உதைத்தால் மட்டும் இனிக்குதோ ?” (பிராமணன் உதைக்கிறான் என்ற புலம்பலின் போது?). தீண்டாமய் போற்றலில் இந்த மற்ற உயர்சாதியினரின் பங்கு சிறிதும் குறைந்ததில்லை. சமீபத்தில் திருப்பூரில் செவிமடுத்தது (ஒரு திருப்பூர் கவுண்டரின் இடுகய்யும் உண்டல்லவா?)‍_ அருகில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர் (தலித் அல்ல, OBC ) சொன்னார். சிறு வயதில் குறுக்கு வழியில் கவுண்டர்களின் புஞ்சய்க்காடுகளைக்கடந்து செல்லும் போது செருப்புகளைக்கழட்டிக் கையில் வைத்துக்கொள்ள வேண்டுமாம். எதிர்த்துப்பேசினால் சாட்டையடியாம். சங்கதி போன நூற்றாண்டெல்லாம் இல்லை. இந்த நூற்றாண்டில், அதுவும் வெள்ளைக்காரனை எல்லாம் விரட்டிய பிறகு. ஆச்சரியம். இந்த மனப்பாங்கு பொதுவாக எல்லா so called உயர்சாதியிலும் உண்டு. இது எந்த விவாதத்தையும் தொடங்கவோ, நீட்டவோ அல்ல. வெறும் ஒரு தகவலாய் _ கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய தகவலாய்

Comments have been disabled.